தி.சு.நடராசனின் திறனாய்வுப் பார்வைகள் :தமிழ் அழகியல், தமிழகத்தில் வைதீக சமயம்


தமிழ் அழகியல்: மரபும் கோட்பாடும் 

பேரா. தி.சு. நடராசனின் எழுத்துகளின் மீது ஒட்டுமொத்தப் பார்வையைக் கவனப்படுத்தும் நோக்கத்தோடு திட்டமிடப்பட்ட இக்கருத்தரங்கில் அவரது தமிழ் அழகியல்: மரபும் கோட்பாடும் என்ற நூலின் நோக்கத்தையும் அந்நோக்கத்தை வாசிப்பவர்களிடம் கொண்டு சேர்ப்பதற்குப் பின்பற்றியுள்ள எழுத்து முறைமையையும் தமிழ்ச் சிந்தனை மற்றும் ஆய்வுப்பரப்பில் இந்நூலின் இடம் எத்தகையது என்பதையும் முன்வைக்கிறது இந்தக் கட்டுரை.

இலக்கியம் கண்டதற்கு இலக்கணம் என்றொரு சொற்றொடர் நீண்ட காலம் பயன்பாட்டில் இருக்கிறது. இலக்கணம் என்ற சொல்லோடு அழகியல், கலையியல், இலக்கியவியல் போன்ற கலைச்சொற்களையும் சேர்த்துக்கொள்ளலாம். நீண்ட இலக்கியமரபு கொண்ட தமிழ் மொழிக்கு அதன் தொடக்க நிலையிலேயே எழுதப் பெற்ற இலக்கணம் – தொல்காப்பியம் என்னும் இலக்கண நூல் வெற்று இலக்கண நூல் அல்ல; அது ஒரு இலக்கியவியல் கோட்பாட்டை – நவீனத்திறனாய்வு சொல்லாடல்களாகப் பயன்படுத்தும் அழகியல் கோட்பாட்டைப் போன்றது என்பதை விவரிக்கிறது இந்த நூல். 
 

அழகியலென்னும் கலையியல் 

பொதுவாகக் கலையியலின் பொதுக்கூறுகளைப் பேசும் அடிப்படை நூல்கள் மனித உடலின் ஐம்புலன்களுமே – கண், காது, மூக்கு, நாக்கு, தோல் முதலான – ஐம்புலன்களுமே கலையுணர் கருவிகள் எனக் கொண்டு காட்சிக்கலை, கேட்புக்கலை, நுகர்நிலைக்கலைகள், ருசியுணர் கலைகள், மெய்யுணர் கலைகள் வகைப்படுத்திப் பேசுவதுண்டு. இவ்வைந்தில் எது முந்தியது என்பதில் கலையியல் வாதிகளுக்கிடையே கருத்து வேறுபாடுகள் உண்டு. மனித உடலின் பகுதிகளான இவ்வைந்து உறுப்புகளுக்குமே கலையுணர்வு முதன்மையே பணி எனச் சொல்லமுடியாது. சுற்றியிருக்கும் உலகத்தை மனிதன் அறிந்துகொள்ள உதவும் கருவிகளாக அவை இருக்கின்றன. அவற்றிற்குப் பொருட்களின் கணங்களை வடிவங்களையும் அறிதல்பார்த்தல், கேட்டல், மூச்சுவிடுதல், உண்ணுதல், உள்ளுறுப்புகளைப் பாதுகாத்தல் என்பதான வேலைகள் இருக்கின்றன. அதனைத் தாண்டி அதன் நுட்பமான செயல்பாடாக இருப்பது நுண்ணுணர்வுகளை உள்வாங்குதல். ஒவ்வொரு உறுப்புகளுக்கும் இருக்கும் அடிப்படை வினையோடு, நுட்பமான வினைகள் – சிறப்புத் தகுதிகள் என்பன அவ்வுறுப்பின் வேறுபட்ட வினைகளின் தொகுதியில் இருக்கிறது. அவ்வினைகளே கலையியலின் வெளிப்பாடுகளாக மாறுகின்றன. 
கண்கள் பார்க்கின்றன என்பது பொதுநிலை வினை. பார்வைக்குறையில்லாத எல்லா மனித உயிரியும் மேற்கொள்ளும் வினை. ஆனால் வண்ணங்களையும் வடிவங்களையும் கோடுகளையும் அலைவுகளையும் நெளிவுகளையும் வேறுபடுத்திப் பார்த்தல் என்னும் வினை கலை சார்ந்தது. அதனைச் செய்யும் கண்கள் காண்பியக் கலைகளின் ரசனைசார்ந்த கண்களாக மாறிக்கொள்கின்றன. அக்கண்களே காண்பியக் கலைகளான ஓவியத்தையும் சிற்பத்தையும் ரசிக்கின்றன. அரங்கக் கலையில் அசையும் நடியின் நகர்வுகளையும் அசையாப்பொருட்களின் இருப்பையும் உணர்ந்து பொருள்படுத்தி விரிக்கின்றன. செவிகள் ஒலியைக் கேட்டல் என்ற பொதுவினையைத் தாண்டி ஒலியின் இன்மையையும் -மௌனத்தையும் – உச்சத்தையும் இடைப்பட்ட அளவு மாற்றங்களையும் உள்வாங்கி விரிக்கின்றன. ஐம்புலன்களில் கண்களும் செவியும் கலைகளின் ஆதாரக்கருவிகள். அவ்விரண்டும் இணைந்தே எல்லாவகையான கலைகளையும் ரசிப்பதற்கான வேறுபாடுகளை அறிந்து விளக்குகின்றன. காண்பியக்கலைகளும், செவிநுகர் கலைகளும் இணைந்தே வெகுமக்கள் கலைகளான அரங்கக் கலைகளாகவும் ஊடகக் கலைகளாகவும் மாறியிருக்கின்றன. இவ்விரண்டையும் தாண்டி நாக்கின் வழியே உணரப்படும் ருசியின் வேறுபாடுகளும், நாசியின் வழியே நுகரப்படும் மணத்தின் வேறுபாடுகளும், மெய்யின் வழியே உணரப்படும் வன்மை, மென்மை வேறுபாடுகளும் பெருங்கலைகளின் பகுதிகளாக மாறாமல் தொழில் சார் வேறுபாடுகளாக மாறியிருக்கின்றன. 
இலக்கணவியலும் இலக்கியவியலும் 
தமிழுக்கென ஓர் அழகியல் அல்லது கலையியல் கோட்பாடு இருக்கிறது என்பதை விளக்கி முன்வைக்கும் தி.சு.நடராசனின் தமிழின் அழகியல், கலையியலை - எழுத்துக்கலை சார்ந்த ஒன்றாக மட்டும் என்பதாக எல்லை வகுத்துக்கொண்டு நகர்ந்துள்ளது. அதே நேரத்தில் எழுத்துக் கலையை மொழிசார் கலையாக விரித்துப் பேசும் இந்நூல், மொழியின் வழியே காட்சிப்படுத்துதலும் ஒசைப்படுத்துதலும் விவரிப்புச் செய்தலும் நிகழ்வதின் வழியாக ஐம்புலன்களின் பயன்பாட்டையும் இலக்கியக்கலை கோரி நிற்கிறது என்பதை ஏற்றுப் பேசியுள்ளது. இந்த வேறுபட்ட பேச்சே, ஐரோப்பியர்களின் தொன்மைக் கலையியலை உருவாக்கிய கிரேக்க நூலான அரிஸ்டாடிலின் கவிதையியலிலிருந்து வேறுபட்டது என்பதையும் அடையாளப் படுத்தியுள்ளது. 

ஒன்றுக்கும் மேற்பட்ட மனிதர்களின் இடையே நடக்கும் பேச்சின் வழியே உருவாகும் முரண்பாட்டின் மூலம் பாத்திர வார்ப்பை உருவாக்கி, அவற்றின் வழியே மனிதர்களின் இருப்பு நிலையைப் பேச வாய்ப்பளிக்கும் இலக்கிய வடிவம் நாடகம். அதன் ஆதாரமான வெளிப்பாட்டு வடிவம் உரையாடல். தனது முன்னோடியான சாக்ரடீஸ் போன்றவர்களின் முச்சந்தி விவாதங்களைக் கவனித்திருந்த அரிஸ்டாடில் உரையாடலை முக்கியமான வெளிப்பாட்டு வடிவமாகக் கருதியதில் ஆச்சரியம் எதுவுமில்லை. அந்த அனுபவங்கள் சார்ந்தே உரையாடல் வடிவத்தின் நுட்பங்களைப் பற்றி அதிகம் விளக்கியுள்ளார். ஆனால் தொல்காப்பியர் தனிமனித உணர்வுகளையும், சிந்தனைகளையும் வெளிப்படுத்த அதிக வாய்ப்பான கவிதை வடிவத்தின் நுட்பங்களை விரிவாகப் பேச நினைத்துள்ளார். அதற்காகக் கூற்று (Narrative) என்னும் வெளிப்பாட்டு வடிவத்தைப் பற்றி விரிவாகப் பேசுகிறார். கவிதைக்குள்ளும் ஓர் உரையாடல் கூறு இருக்கிறது என்றாலும் பருண்மையான வெளிப்பாடு அதில் கிடையாது. 

கூற்று என்னும் கலைச்சொல் மொழியின் அடிப்படைக் கூறு. மொழிதல் என்னும் மனிதனின் அடிப்படையான தொழிலைச் சுட்டும் சொல். அந்த வகையில் அக்கலைச்சொல் மொழியியலின் பாற்பட்டது. உரையாடலுக்கும் முந்திய வடிவமும்கூட. அதனைக் கவிதைக்கான கலைச்சொல்லாகத் தனது பனுவலில் மாற்றிக் கட்டமைத்திருக்கிறார் தொல்காப்பியர். மொழியின் இயல்புகளைப் பேசும் இலக்கணமாக மட்டும் தொல்காப்பியத்தை எழுத நினைத்திருந்தால். அவர் எழுத்ததிகாரத்தையும் சொல்லதிகாரத்தையும் மட்டுமே எழுதியிருப்பார். அதற்கும் மேலாக, மொழியை நுட்பமாகப் பயன்படுத்துவது எப்படி? அதன் உச்ச கட்டப் பயன்பாடாக இலக்கியம் செய்வது- செய்யுள் செய்வது எப்படி? என்பதை விளக்க விரும்பிய காரணத்தால் தான் அவ்விரு அதிகாரங்களைத் தொடர்ந்து மூன்றாவது அதிகாரமான பொருளதிகாரத்தை எழுதினார் தொல்காப்பியர். இதனைச் சரியாகக் கணித்துக் கொண்டு தொல்காப்பியரின் இலக்கியவியலையே, தமிழ் அழகியல் என்ற நூலாகத் தந்துள்ளார் பேரா.தி.சு.நடராசன். 

இந்நூலை எழுதுவதற்கு அவர் பின்பற்றியுள்ள முறைமையும் விவாதங்களும் கவனிக்கத்தக்கதாக உள்ளது. இயல்களையும் கோட்பாடுகளையும் விளக்கும் நூல்வகைகளைத் தமிழில் எழுத விரும்புகிறவர்கள் பின்பற்றத் தக்கதாக இருக்கிறது என்பதைச் சொல்லவிரும்புகிறேன். அத்தோடு இந்நூல் நூல் எழுதும் மரபிலிருந்து விலகியதாகவும் இருக்கிறது என்பதைச் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். தமிழ் அழகியல்: மரபும் கோட்பாடும் எனத் தலைப்பிட்டு எழுதப்பெற்றுள்ள இந்நூலில்,
1. அழகு: வரையறையும் சொல்வளமும் 
2. அழகியலும் புலனுகர்வும் 
3. கலைகளின் ஒருங்கியைபுக் கோட்பாடு 
4. கவிதை: மொழிசார்கலை 
5. சங்க இலக்கியமும் தொல்காப்பியமும்: சில முன்வரைவுகள் 
6. உயிர்மவியல் கொள்கை 
7. பொருளின் பொருள் 
8. அகம், புறம் பாகுபாடு: சில தனித்தன்மைகள் 
9. கூற்றுநிலை எனும் அமைப்புமுறை 
11. வருணிப்பும் இயற்கையும்: உத்தியாகவும் செய்தியாகவும் 
12. உவம வழக்கு 
13. உள்ளுறை, இறைச்சி 
14. அடியும் பாட்டும் 
15. ஓசைப் பின்னல் 
16. நடையியலும் வடிவமைப்பும் 
17. கதைசொல்லி 
எனப் பதினேழு இயல்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவ்வியல் பகுப்பில் 
1. தரவுகளைப் பரப்புதல் 
2. வரையறைப்படுத்துதல் 
3. வரைவுக்குட்படுத்துதல் 
4. தனித்துவங்களைச் சுட்டுதல் 
5. விவரித்து விளக்குதல் 
என்பதான ஐவகை முறைமைகள் இடம்பெற்றுள்ளன.முதல் இயல் அடிப்படைத் தரவுகளைக் கலைச்சொற்களாகப் பரப்பி வைக்கிறது. அடுத்த தாக உள்ள மூன்று இயல்கள் (2-4) விவாதப் பொருள்களை வரையறைப்படுத்தித் தொகுத்துக்கொள்ளுதல் செய்துள்ளன. அதனை அடுத்துள்ள இரண்டு இயல்கள்(5-6) விவாதத்திற்கான தரவுகளை வரைவுக்குட்படுத்திக் காட்டியுள்ளன. பின்னர் நான்கு இயல்கள்(7 -10)தனித்துவங்களை அடையாளப்படுத்திக் காட்டுகின்றன். . கடைசியாக உள்ள ஏழு இயல்கள்(11-17) சிறப்புக் கூறுகளை வரிசைப்படுத்தி விவரிக்கின்றன. 
இப்படியான உள்கட்டமைப்பைக் கொண்டிருக்கிற இந்நூலின் ஒவ்வொரு இயலும் அதனதற்குத் தேவையான உள்பிரிவுகளையும் கொண்டிருக்கின்றன. அவ்வுட்பிரிவுகள் பலவற்றில் வரையறை- விளக்கம் என்ற நிலையும், வரையறை விளக்கத்திற்கான எடுத்துக்காட்டுகளின் விவரிப்பு என்ற நிலையும் காணப்படுகிறது. இக்கட்டமைப்பு ஒருவிதத்தில் குத்துநிலை அல்லது வரிசைநிலை விவரிப்புக்குப் பதிலாகக் கிடைநிலைப் பரப்பலை அதிகம் கொண்டுள்ளது எனச் சொல்லலாம். வரிசைநிலை அல்லது குத்துநிலை அமைப்பு உடனடியான தர்க்கக் காரணங்களை வேண்டுவன. ஆனால் கிடைநிலைப் பரப்பல் உடனடித் தர்க்கவிவாதங்களைச் செய்யாமல் வாய்ப்புக் கிடைக்கும் நேரத்தில் நினைவூட்டிப் பொருந்தி நிற்றலைச் செய்யும் தன்மைகொண்டது. 
அழகியல் என்பது ஐம்புலன்களின் உணர்வுத் தொகுதி என்பதைத் தமிழர்கள் உணர்ந்திருந்தார்கள் என்பதை நிறுவும் பொருட்டு ஒவ்வொரு புலனாலும் உணரப்படும் விதமாகத் தமிழ்ச் செவ்வியல் இலக்கியங்களிலும் தொல்காப்பிய இலக்கணத்திலும் கிடைக்கும் சொற்களைத் தொகுத்து விளக்கம் தருகிறது முதல் இயல். மொத்தம் 23 சொற்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. வரையறையும் சொல்வளமும் எனத் தலைப்பிட்டுத் தொகுத்துத் தந்துள்ள சொற்களை மட்டும் இங்கே வரிசைப்படுத்தித் தருகிறேன். வரையறைகளையும் விளக்கங்களையும் நூலை வாசித்துத் தெரிந்துகொள்ளுங்கள்: 

திரு, அம், அணி, எழில், ஏர், முருகு, நோக்கு, கவின், ஐ, காமர், தகை, மதன், மைந்து, மா, பொற்பு,பொலிவு, வனப்பு, சீர்,வடிவு, கோலம்,வண்ணம்,நலன்,அழகு -23 சொற்கள் 

சொல்தொகுப்புகளின் மீதான வரையறைக்குப் பின் அழகு என்பது புலனுகர்வு சார்ந்தது என்பதும், அவற்றின் ஒருங்கிணைப்பின் வழியே உருவாக்கப்படும் கலைகளின் இயல்புகளும் பேசப்பட்டுள்ளன. அதன் தொடர்ச்சியாக இலக்கியம் என்பது மொழிசார் கலை என்பது விளக்கப்படுகிறது. 
இதுவரையிலான நூலாக்கம் அல்லது ஆய்வேடு உருவாக்கத்திற்கான எழுத்து முறைகளிலிருந்து இந்நூல் பெரும் மாற்றம் ஒன்றைச் செய்துள்ளது என்பதை முன்பே குறிப்பிட்டேன். ஒவ்வொரு இயலிலும் ஒரு கருதுகோளை முன்வைத்து விவாதித்துவிட்டு முடிவைச் சொல்வது அல்லது தொகுத்துச் சொல்வது என்பது பின்பற்றப்படும் மரபான கட்டுரை உத்தி. இந்நூலில் இவ்வுத்தியைப் பின்பற்றப்படவில்லை. முடிவை அல்லது தொகுப்புரையை இயலின் முதலிலேயே தருகிறார். அத்தொகுப்புரையே அந்த இயலாக – கட்டுரையாக விவரிக்கப்படுகிறது. ஒவ்வொரு இயலின் ஆரம்பத்திலும் இடம்பெற்றுள்ள தொகுப்புரைகள் வரிசைப்படுத்தித் தரப்பட்டுள்ளன. அவையே பேராசிரியரின் கோட்பாட்டுக் கண்டுபிடிப்புகள் என்ற வகையில் முக்கியமான மேற்கோள்களாக அமையவேண்டியன என்பதைச் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். 

1.அழகு: வரையறையும் சொல்வளமும் 
அழகு என்பது ஒரு பண்பு;ஓர் ஆற்றல்; மூலப்பொருள்களின் புலப்பாட்டுத்திறனைக் காட்டுகின்ற ஒரு நுண்ணுணர்வு அது. கண்டாரால் விரும்பப்படும் தன்மையுடன் கூடிய சார்பியல் நிலையில் அறியப்படுவது. கிரேக்கம், சமசுகிருதம் உள்ளிட்ட மொழிகளிலும், தமிழிலும் இலக்கியக் கலையின் பண்புகளை முதன்மையாக க்கொண்டே அழகியல் பற்றிய கொள்கை அமைந்துள்ளது. கலைக்கும் இலக்கியத்துக்கும் உள்ள பொதுமைகளையும் சிறப்பு நிலைகளையும் கணக்கிலெடுத்துக் கொண்டு, இலக்கியத்தில் கலைசார்ந்த கூறுகளைத் தமிழ் அழகியல் விளக்கமாகப் பேசுகிறது. தமிழ் மரபில் அழகியல், பரவலாகவும் ஆழமாகவும் வேறூன்றியுள்ளது. அழகு பற்றிய பல கலைச்சொற்கள் தமிழில் வழங்குகின்றன. ---1/1 
2.அழகியலும் புலனுகர்வும் 
அழகு, ஈர்ப்பு எனும் விசைத்திறன் கொண்டது. அழகுப்பொருள் ஒரு முனை என்றால், அதனுடைய செய்தி போய்ச்சேருகிற இடம், இன்னொரு முனையாகும். எனவே அழகியல் புலனுகர்வுப் பண்புடன் இணைந்து கிடக்கிறது. ‘சொல்லப்படு பொருளை உய்த்து வேறு கண்டாங்கு’ அறியச் செய்தலே அழகியலின் புலனுகர்வாகும். இவ்வடிப்படையில் காணுகிறபோது உணர்வு நிலையில் தோன்றும் கருத்துக்கள், புனைவு செய்யப்படுகிற முறையில், பொருட்பிழம்புகளாகத் தோன்றுதலும் சாத்தியப்படுகிறது. இத்தகைய புலனுணர்வு இயங்குதிறனையும் நிறைவையும் தருகின்றது. ----2/13 
3. கலைகளின் ஒருங்கியைபுக் கோட்பாடு 
கலைகள் பலவகைப்பட்டவை; எனினும் அவை தமக்குள் நெருக்கமுற உறவுகள் கொண்டவை. முக்கியமாக, ஆடல் பாடல் இசை முதலியவை கூட்டுக்கலைகளாகத் தோன்றி வளர்ந்தவை. அன்றியும் நாட்டார் வாய்மொழி மரபும் கற்றார் வழி மரபும் ஒருங்கிணைப்பு கொண்டு இயங்குகின்றன. சங்கப்பாடல்கள் கூறும் செய்திகளிலும் அவற்றின் வடிவமைப்பிலும் இந்தப் பண்பினைக் காணுகிறேன். பாணர்- புலவர் என்ற பண்பாட்டு மரபு கலைகளின் ஒருங்கியைபுக் கோட்பாட்டை அறிவதற்கு உதவுகிறது. பின்னர், சிலம்பிலும் இத்தகைய நெறி, விளக்கமாகவும் ஆழமாகவும் வெளிப் படுகின்றது. உரைகாரர்கள், இதனை ‘முத்தமிழ்’ என்பதாகப் பேசுகின்றனர். 3/20 
4.கவிதை: மொழிசார்கலை 
கவிதையென்பது அழகும் படைப்பாற்றலும் நுகர்திறனும் கொண்ட ஓர் ஊடகம் என்று கொள்வோமானால் அதன் தேவைக்கும் மரபுக்கும் வகைமைக்கும் ஏற்ப அது வெவ்வேறு மூலாதாரப் பொருட்களைக் கொண்டிருக்கிறது என்பதை அறிய வேண்டும். கவிதை அல்லது இலக்கியம் பிறகலைகளிலிருந்து வேறுபட்ட து என்று கருதுவோமானால், அதனுடைய ஆதாரம் மொழியேயாகும். தொல்காப்பியம் மொழியின் அமைப்பையும் ஆற்றலையும் விளக்குகின்றபோது, அதனுடைய ஒரு பகுதியாக அது கவிதையை விளக்கிப் போகிறது. இது, அவ்விலக்கணத்தின் தொடக்கத்திலிருந்தே செய்யப்படுகிறது. மொழியின் அழகியல் பண்புகல், கவிதைக்கு உரியனவாக அமைதலைத் தமிழ்மரபு பேசுகின்றது. 
5. சங்க இலக்கியமும் தொல்காப்பியமும்: சில முன்வரைவுகள் 
சங்க இலக்கியமும் தொல்காப்பியமும் ஓரளவு ‘சமகாலத்திய’ பனுவல்கள். இரண்டற்கும் வேறுபட்ட இலக்குகள் உண்டெனினும், இரண்டும் பரஸ்பரம் சார்பும் தொடர்பும் கொண்டவை. சங்கப்பாடல்களைத் தொகுப்புகளாக வகுப்பதற்குத் தொல்காப்பியம் பார்வைத் தளமாக அமைந்திருக்கிறது. கவிதையை, ‘மொழிசார் கலை’ என்று பேசுகிற தொல்காப்பியம், கவிதையியலைக் கோட்பாட்டளவில் நின்று பேசுகிறது. தமிழ் அழகியலைக் கட்டமைப்பதற்குச் சங்க இலக்கியத்திற்கும் தொல்காப்பியத்திற்கும் உள்ள உறவுகளைக் காண்பது பூர்வாங்கமான தேவை..5/52 
6. உயிர்மவியல் கொள்கை 
தொல்காப்பியத்தின் கவிதையியல், உயிர்ம்மவியல் கோட்பாட்டை மையமாக க்கொண்ட து. கவிதையில் கட்டமைத்து கிடக்கும் மாத்திரை, எழுத்து, அசை, சீர் முதலிய பல்வேறு உறுப்புகளும் இயங்காற்றலோடு தம்மோடு இணைந்து கிடக்கின்றன. ஒன்றிலிருந்து ஒன்று இசைவு பெற்று ஒரு முழுமையை நோக்கி வளர்கின்ற இந்தக் கட்டமைவு, அதனுடைய இயங்குதிறன் காரணமாக உயிராற்றலைப் பெற்றிருக்கின்றது. உயிரியல் எனும் அறிவியலில் காணப்படுவது போன்ற தோற்றத்தை இது பெற்றிருக்கின்றது. தமிழில் காணப்பெறும் இந்த உயிர்ம்மவியல் கோட்பாடு, கிரேக்கம், சமசுகிருதம் முதலிய மொழிகளில் காணப்படும் கோட்பாடுகளிலிருந்து வேறுபட்டது; தனித்தன்மையுடன் கூடியது…. 6/63 
7. பொருளின் பொருள் 
படைப்பாக்கத்தில் பொருளும் வடிவமும் வேறுபாடின்றி இணைந்தும் தம்முள்தாம் சார்ந்தும் இருப்பவை. இவ்வாறு அமைகிற பாடற்பொருள், மெய்ம்மையோடு கூடியது. மெய்ம்மை, உலகியல் வழக்காறுகளைத் தளமாகக் கொண்டது. ஆனால், இவ்வுலகியல் வழக்கு, படைப்பில் அப்படியே பிரதிபலிப்பது அல்ல. புறவய உண்மைகள் அகவயப்படுத்தப்படுகின்றன; கலைவய உண்மைகளாக மாற்றாக்கம் பெறுகின்றன. இந்த நிலைப்பாடு, புலனெறி வழக்கம் என்பதோடு ஒப்ப அறியப்படுகிறது. இது உலகியல் வழக்கோடும், சுவையும் கற்பனையின் பங்கும் கொண்ட நாடகவழக்கோடும் இணைந்து வருவதாகும். இதிலுள்ள சேதிகள், காலம், இடம் மற்றும் பிற சூழல்களோடு ஒத்திசைவு கொண்டனவாகவும் தம்முள் பொருத்தப்பாடு கொண்டனவாகவும் இருக்க வேண்டும். --- 7/75 
8. அகம், புறம் பாகுபாடு: சில தனித்தன்மைகள் 
அகம், புறம் எனும் பகுப்பு மனித மனத்தின் உணர்வுத் தளத்தையும் அதனை முன்கொண்டு செல்லும் நிகழ்வுகளையும் கொண்டு அமைந்தது. சங்க இலக்கியத்தின் அடிப்படையானதொரு பகுப்புமுறை இது. இவை இரண்டுமே எதிர்வுகள் – முரண்நிலைகள் அல்ல. ‘ஒன்று’, அதிலிருந்து வித்தியாசப்பட்ட ‘இன்னொன்று’ என்ற அடையாளம் காணப்படுபவை. உள்ளடக்கம் அன்றியும், உருவாக்கலும் அல்லது அமைப்பு முறையிலும் இவை இரண்டும் சில பிரத்தியேகத் தன்மைகளைப் பெற்றுள்ளன. கூற்றுமுறை, புலனெறி வழக்கம், சுட்டியொருவர் பெயர்கொளப் பெறாமை, முதல், கரு, உரி, கதைமாந்தர் படைப்பு முதலியன அவை. …. 8/91 
9. கூற்றுநிலை எனும் அமைப்புமுறை 
அகப்பாடல்கள், பெயர்கொளப்பெறாத கதை மாந்தர்களின் கூற்றுவடிவத்தில் அமைந்தவை. இந்தக் கூற்றுநிலைகள், சூழல்கள், கூற்றுநிகழ்த்துபவர்கள், கேட்பவர்கள் என்ற முறையில் வரையறுக்கப்பட்டுள்ளன. பேசுபவர் அல்லது கிளக்குநரின் அறிதிறன்கள், உவமங்கள் உள்ளிட்டவற்றின் வரையறைகள் முதலியவை கூற்று நிலைகளின் பண்புகளாகப் பாடல்களின் வடிவமைப்போடு சேர்ந்து அமைகின்றன. கூற்றுநிலை என்பது, அமைப்பு முறை. அது அகப்பாடல்களின் பிரதானமான வடிவமைப்பு முறை, புறப்பாடல்களிலிருந்து அகப்பாடல்களை வேறுபடுத்தும் சாதனம். ……9/103 
10. மூன்று தளங்கள் 
அழகியல் கூறுகளும் அவற்றின் வழி அறியலாகும் உணர்வுகளும், காண்போர் கேட்போர் நுகர்வோர் ஆகியோரின் தேவைகளையும் புறநிலையிலுள்ள தூலப் பொருள்களின் பண்புகளையும், அவற்றின் பரஸ்பர உறவுகளையும் சார்ந்தவை. இவை மூன்று தளங்களின் மேல் புலப்படுகின்றன. அவை. 1.இயற்கை, 2. மனிதத்தோற்றம் மற்றும் உடல். 3. செய்பொருள் அல்லது கலை. சங்கப்பாடல்களில் இவற்றின் செய்கைகள் கலைகளாக எங்கும் நிரவிக்கிடக்கின்றன. மேலும், இம்மூன்றும் ஒன்றோடொன்று ஒப்ப நோக்குகிற விதத்தில் இணைவுகளாக அறியப்படக்கூடியன. ..10/117 
11. வருணிப்பும் இயற்கையும்: உத்தியாகவும் செய்தியாகவும் 
இயற்கையை வருணிப்பது சங்கப்பாடல்களின் அமைப்பில் பெரும்பரப்பினை எடுத்துக்கொண்டுள்ளது. வருணிப்பை ஒரு தொடரியல் என்று எடுத்துக்கொண்டால், நோக்கப்பொருளாக உள்ள சொல் அல்லது சொற்றொடர் இறுதியில் பயனிலை வடிவத்தில் இடம் பெறுகிறது. அதனை அடை கொடுத்து வருணிப்பது எழுவாய் நிலையில் தொடக்கத்தில் உள்ளது. இது வருணிப்பின் அமைப்பு முறை. அதுபோல், வருணிப்பு நிகழ்கின்ற சூழல்களும் தளங்களும் இனங்காணும்படியாக உள்ளன. இயற்கை வருணிப்பின் மூலமாகத் திணைசார் வாழ்முறையும், மனித உணர்வுகளும், சூழலியலும் படைப்பாளியின் கற்பனையாற்றலும் புலப்பட்டுத்தெரிகின்றன … 11/130 
12. உவம வழக்கு 
உவமம் எனும் தவலருங்கூத்திக்குக் கவிதைமொழியில் சிறப்பிடம் உண்டு. போல முதலிய உருபுகள் தோன்றும் உவமங்களும் அவ்வாறல்லாமல், தொகைநிலைகளாக அமைவனவும் உண்டு. சங்க இலக்கியத்தில் உவமங்கள் இல்லாத பாடல்கள் மிகக் குறைவு. இவ்வுமங்களில் அதிகம் இடம்பெறுவது இயற்கையே. இவற்றுள்ளும், ஓர் இயற்கைப்பொருளை இன்னோர் இயற்கைப் பொருளோடு ஒப்பிடுவது, இயற்கையைப் பெண்ணுடலுக்கு உவமமாகக் கொள்வது என்ற இரண்டு போக்குகளும் சங்கப் பாடல்களில் பெருவழக்காக உள்ளன. உவம ம், வெறுமனே அணிநயம் அல்ல; கவிதைமொழியோடு சேர்ந்த ஒரு பகுதி. அது அறிவுப்புலனோடும் உணர்வோடும் ஒரே நேரத்தில் தொடர்பு கொண்டிருக்கிறது……… 12/155 
13. உள்ளுறை, இறைச்சி 
பொருளின் அழகு, அது புலப்படுகின்ற பண்பின் அழகில் தெரிகின்றது. உள்ளுறை, இறைச்சி என்பன மொழியின் அமைப்பில், பொருள் உறைந்து கிடக்கிற திறனைக் குறிப்பிடுகின்றன. தலைவி தலைவன் ஆகியோரின் நுண்மையான தனிப்பட்ட உணர்வுகள், அவர்கள் சார்ந்த பண்பு நலன்கள் முதலியவற்றைப் புலப்படுத்துகிற அழகியல் உத்திகளாக அமைகின்ற உள்ளுறையும் இறைச்சியும் அகப்பாடல்களின் தனிச்சிறப்பியலான இயல்புகளாகும். இலக்கியத்தின் வாசிப்புத்தளத்தை விரிவுபடுத்தவும் பன்முகப்படுத்தவும் துணை செய்கின்றனவும் இவை. … 13/163 
14. அடியும் பாட்டும் 
ஒரு பாடல் சிறப்பும் அழகும் கொண்டு அமையவேண்டுமானால், ஒவ்வோர் அடியும் வலிமையும் பொலிவும் தன்னிறைவும் கொண்டனவாக அமைய வேண்டும். தொல்காப்பியம் இதனை வலியுறுத்துகிறது. சங்கப்பாடல்களில் இந்தப் பண்பு பெரிதும் காணப்படுகிறது. மேலும், தொடர்ந்துவரும் அடிகளில் கருத்தமைவு நிரவி வருவதும் பரவலாக க் காணப்படுகிறது. சங்கப்பாடல்களில் இறுதியடி, மிகவும் முக்கியத்துவமும் முத்தாய்ப்பும் உடையதாக விளங்குகிறது. எட்டுத்தொகையுள் உள்ளவை, சிரிய தனிநிலைப்பாடல்கள் எனின், பத்துப்பாட்டில் உள்ளவை, ‘பெரிய பாட்டுக்கள்’ ஆயின், உவமங்களும், அடைகளும், எச்சங்களும் கொண்டு பின்னப்பட்ட அடிகளின் பெருக்கம், கதை சொல்லுதற்காக அல்ல. வருணிப்பின் பெருக்கத்திற்கே பயன்படுகிறது. 
15. ஓசைப் பின்னல் 
பொருளினுடைய ஒலிகளினால் ஆனவை, சொற்கள். கவிதையின் படைப்பிற்கும் அழகிற்கும் சொற்களும் சொற்களின் சேர்க்கைகளும் அடித்தளமாக உள்ளன. எழுத்திலும் சொல்லிலும் தொடரிலும் பரவிக்கிடக்கின்ற ஓசை, கவிதையின் உயிர்ப்போடும், உணர்வோடும் பொருளின் நோக்கத்தோடும் பொருந்திக் கிடக்கிறது. கவிதையில், ‘குருதி ஓட்டமாக’ அமைந்திருக்கின்ற ஓசை, அதன் கட்டமைப்பில் இசையையும் இயங்குநிலையையும் தருகின்றது. உயிரோட்டமாக அமைந்துள்ள ஓசையின் பின்னல், இசையின் ஆற்றலோடு கவிதையைச் சுவைக்கவும் அதனோடு ஒன்றவும் உதவுகின்றது. தூக்கு, தொடை, பா, வண்ணம் ஆகிய உறுப்புகள், ஓசையின் அழகைக் கவிதையின் அழகாய்க் காட்டுகின்றன. 
16.நடையியலும் வடிவமைப்பும் 
பாடற்பொருளும் அதன் உணர்வு நிலைகளும் சரியான முறையிலும் வலுவான முறையிலும் சென்றடைய வேண்டும். பேச்சு வழக்கு உள்ளிட்ட மொழி வழக்குகளிலிருந்து கவிதைமொழி வழக்கு, வித்தியாசப்பட்டும் சிறப்பியல் பண்புகள் கொண்டும் அமைவதை நடையியல் விளக்குகிறது. தொல்காப்பியத்தில் இக்கருத்துநிலை விளக்கமாகவும் தெளிவாகவும் உள்ளது. இதனடிப்படையில், சங்கப்பாடல்களில் ஒலிக்கோலம், சொற்புலம், தொடரியல் சிறப்புக்கூறுகள், வினையெச்சம், ‘ஏ’காரம், உள்ளிட்ட இடைநிலைகள் மிகவும் கவனிக்கும்படியாக உள்ளன. நடையியல், அழகியலின் மிக முக்கியமான பண்பாகவும் பகுதியாகவும் உள்ளது. – 16/201 
17.கதைசொல்லி 
ஒவ்வொரு பண்பாட்டிலும், கதை சொல்லுதல் என்பது அதனதன் மரபுக்கும் சூழலுக்கும் ஏற்பக் காணப்படுகிறது. சங்க இலக்கியத்தில் கதையெடுத்துரைப்பது சிறுபான்மை வழக்குதான். ஆயினும் தனிநிலைப்பாடல் என்ற எல்லைக்குள் ‘கதைசொல்லி’ இயங்குகிறார். அதனை மூன்று வகைமைகளில் காண முடிகிறது. ஒரே பாடலின் எல்லைக்குள் நிகழ்ச்சிகளையும் எதிர்நிலைகளையும் தொடர்ச்சிகளையும் உணர்வுகளாக்கிச் சொல்லுதல் ஒருவகை. இதில் குறியீட்டுத் தன்மைகளும் உண்டு. அடுத்து, வெவ்வேறு பாடல்களில் துணுக்குகள் போன்ற நிகழ்ச்சிகளைத் தொகுத்துக் காணுகிறபோது, வெளிப்படுகிற கதைசொல்லி, மூன்றாவது – ஒரு நிகழ்ச்சியை – தொன்மத்தை மறுவாசிப்புகளுக்கு இடம் தருவதற்கான புனைவுகளுடன் அமிழ்ந்து கதை எடுத்துரைப்புச் செய்தல்…17/224 
இலக்கண விளக்கப் பொருத்தமும் இலக்கியக்கோட்பாட்டு விளக்கம் 
தமிழ் அழகியல் என்னும் இந்நூலின் விவாதங்கள் தமிழின் முதல் இலக்கணப் பனுவலாக அறியப்படும் தொல்காப்பியத்தை முதன்மைத் தரவாகக் கொண்டு விவாதங்களை முன்வைக்கிறது. அம்முதன்மைத்தரவின் வரையறைகளை நிறுவுவதற்காகச் செவ்வியல் கவிதைகளை எடுத்துக்காட்டுகளாகப் பாவித்து விளக்கங்களைச் செய்கிறது. அதனால் இந்நூலும் இன்னொரு தொல்காப்பியப் பொருளதிகார விளக்கவுரை என்ற எண்ணத்தைத் தகர்க்கும் விதமாக இந்நூலில் இடம்பெற்றுள்ள பின்வரும் இயல்கள் அமைந்துள்ளன. 
1. அழகியலும் புலனுகர்வும் 
2. கலைகளின் ஒருங்கியைபுக் கோட்பாடு 
3. கவிதை: மொழிசார்கலை 
4. பொருளின் பொருள் 
5 கூற்றுநிலை எனும் அமைப்புமுறை 
5. மூன்று தளங்கள் 
6. உள்ளுறை, இறைச்சி 
7. கதைசொல்லி 
இவ்வேழு இயல்களிலும் இடம்பெற்றுள்ள விவாதங்களும் விளக்கங்களும் தமிழின் பழந்தமிழ்க் கவிதைகளான – செவ்வியல் கவிதைகளைத் தாண்டி மொத்தத் தமிழ்க்கவிதை மரபையும் வாசிக்கவும் பொருள் கூறவும் உதவும் கவிதைக்கோட்பாட்டை முன்வைக்கின்றன. மரபுக்கவிதைக்குப் பின் தோன்றிய புது மற்றும் நவீனக் கவிதைகளை வாசிப்பதற்கும் விமரிசிப்பதற்கும் தேவையான அடிப்படைகளை இவ்வேழு இயல்களும் தருகின்றன. குறிப்பாகப் பொருளின் பொருள், மூன்றுதளங்கள், கதைசொல்லி போன்ற இயல்களின் விவரிப்புகள் கவிதை என்ற இலக்கியவகையைத் தாண்டி, கலைவகைகள் ஒவ்வொன்றையும் விவாதிக்க விரும்பும் ஒரு திறனாய்வாளருக்கான திறப்புகளைக் கொண்டவை. 
பொருளின் அமைவு அல்லது வெளிப்பாடு என்பது எவ்வாறு செயல்படுகிறது என்ற கேள்விக்கு மொழியியலின் பொருண்மையியலை(Semantics) முன்வைத்து, 
1. சொல் இணைவு வரைவு ( Paradigmatic) 
2. தொடரியல் இணைவு வரைவு (Syntagmatic) என்ற இரண்டு மொழிநிலைகளில் வெளிப்படுவதையும், அதுவே 
3. சொற்றொடர் நிலை (Phrase -Structure) 
4. ஒட்டுமொத்த நிலை (Total Structure of Text) 
என்ற இரண்டையும் சேர்த்துக்கொண்ட நிலை என்பதை விரிவான எடுத்துக்காட்டுகளுடன் விளக்கும் பகுதி முக்கியமான திறனாய்வு அடிப்படைகளை விளக்கும் பகுதி. 
இதனைப் போலவே அழகியலின் பொதுக்கூறுகளை விளக்கும் மூன்று தளங்கள் என்னும் இயலையும் சுட்டிக்காட்ட வேண்டும். தொல்காப்பியம் கூறும் முதல்,கரு, உரி என்ற மூன்று பொருட்களை நவீனச் சொல்லாடல்களை முன்வைத்து மூன்று தளங்களாக விவரிக்கிறார். 
இயற்கை (Nature) 
மனிதன் (Human kind) 
செய்பொருள் மற்றும் கலை(Art and Artefact) 
இந்தப் பகுதியின் விவரிப்புகளும் நவீனத்திறனாய்வுகான அடிப்படைகள் பலவற்றை விளக்குகின்றன. மூன்றாவது முக்கியமான இயலாகக் கருதவேண்டிய இயல் கடைசியில் அமைந்துள்ள கதைசொல்லி.கதைமை ஆக்கக் கூறுகளான வெளி, காலம், பாத்திரங்கள் போன்றனவற்றைத் தரும் சில பாத்திரங்களை – பூதப்பாண்டியன் பெருங்கோப்பெண்டு, பாரி,பாரிமகளிர், ஆட்டணத்தி- ஆதிமந்தி. வெள்ளி வீதி, பிசிராந்தையார்-கோப்பெருஞ் சோழன், ஒருமுலை இழந்த திருமாவுண்ணி அடையாளப்படுத்தி, இவர்களின் கதைகளைச் சொல்வது முதன்மையான நோக்கம் இல்லை என்றபோதிலும் நவீனச் சிறுகதையின் உணர்வுநிலை உச்சத்தைத் தொடும் நிலையோடு பொருந்தி நிற்கும் விதமாகக் கதைகள் விரிக்கப்பட்டுள்ளதை இவ்வியல் விளக்கியுள்ளது. தேவைப்பட்ட இடத்தில் சில கதைகளின் பெயர்களைச் சுட்டிக் கோடிகாட்டவும் செய்துள்ளது. அத்தோடு தமிழ் மரபில் கதை விவரிப்புப் புராண, இதிகாச வடிவங்களில் கதை சொல்வதிலிருந்து விலகிநிற்றலையும் சுட்டிக்காட்டியுள்ளது. 
தமிழ் அழகியல் என்னும் இந்நூல் முதுகலைத் தமிழ் கற்க நுழையும் மாணாக்கர்களுக்கும் நவீன இலக்கியங்களை ஆய்வுசெய்வதற்கான முயற்சியில் இறங்கும் ஆய்வாளர்களுக்கும் அடிப்படை நூலாக இருக்கத் தக்க நூலைத் தனது நீண்ட காலத்திறனாய்வுப் பயிற்சியின் மூலம் உருவாக்கியிருக்கிறார் பேரா. தி.சு. நடராசன். அவரது பல நூல்களில் இடம் பெறும் கலைச்சொல் பட்டியலும், அவற்றின் சிறு விளக்கங்களும் இந்த நூலில் இடம்பெறவில்லை என்பது சொல்லவேண்டிய குறையாக இருக்கிறது. இன்னொரு பதிப்பு வரும்போது அப்பட்டியலும் பயன்பாட்டுப் பக்க எண்களும் சிறுவிளக்கங்களிலும் இடம்பெறச் செய்தல் வேண்டும். 

பண்பாட்டு வரலாற்றுக்கொரு புது வரவு 

ஒவ்வொரு சமூகத்தின் இருப்பையும் இயக்கத்தையும் அச்சமூகத்தில் நிலவும் கருத்தியல்களே தீர்மானிக்கின்றன. கருத்தியல்கள் உருவாகக் காரணமாக இருப்பவை அச்சமூகத்தில் நிலவும் பகை முரண்களின் வெளிப்பாடுகள். பகை முரண்களைத் தீர்மானிப்பவை அக்காலகட்டத்தின் பொருளாதார அடித்தளம் என்பது மார்க்சியம் சொல்லும் ஒரு சூத்திரம்.

நிகழ்காலத் தமிழ் வாழ்வில் நாம் உணரும் முரண்பாடுகள் பலவிதமானவை. சில முரண்கள் தற்காலிகத் தன்மை கொண்டவை; சில முரண்கள் நிரந்தரத் தன்மை கொண்டவை. விரிந்த எல்லைப் பரப்பு தேவைப் படாததாகவும் உடனடி வெளிப்பாடுகள் கொண்டதாகவும் இருக்கும் தற்காலிக முரண் பாடுகள்,பொருளாதார அடித்தளத்தோடு நெருக்கம் கொண்டனவாக இருக் கின்றன.ஆனால் நிரந்தரமான முரண்பாடுகள் எல்லா நேரத்திலும் பொருளா தார அடித்தளத்தோடு நேரடித் தொடர் புடையனவாகக் காட்டிக் கொள்வ தில்லை.அதற்கு மாறாகப் பண்பாட்டியல் அடையாளங்களோடு உறவு கொண்டனவாகக் காட்டிக் கொள்கின்றன. 

சிந்திப்பவர்களாகக் கருதிக் கொள்ளும் தமிழ்நாட்டுத் தமிழர்களின் கருத்தியல் அடியோட் டத்தில் தீர்மானகரமான ஒரு முரணாகப் பார்ப்பணர் x பார்ப்பணர் அல்லாதோர் என்ற முரணிலை இருந்து கொண்டே இருக்கிறது. பார்ப்பணர் x பார்ப்பணர்அல்லாதார் முரண்பாடு போலவே தமிழர்-வட இந்தியர்(வடமொழி); தமிழ்- பிறமொழி(யினர்) போன்ற முரண்பாடுகள் எல்லாம் இன்று தமிழகத்தில் தூக்கலாக இருக்கின்றன. பார்ப்பணர் அல்லாதோர் இயக்கம் தோற்றுவிக்கப் பட்ட இருபதாம் நூற்றாண்டின் தொடக்க காலத்திற்குப் பின்பு தான் தமிழ் நாட்டுத் தமிழ் மனம் இப்படியான முரணிலைகளின் அடிப்படையில் சிந்திக்கிறதா? இன்று இடதுசாரி இயக்கங்கள் திரும்பவும் பார்ப்பணர் x பார்ப்பணர் அல்லாதார் என்ற முரணிலயைத் தொட்டு விவாதிக்கும் புள்ளியை நெருங்கிக் கொண்டிருப்பதன் காரணங்கள் எவை? சாதிக் கட்டு மானத்தைத் தகர்ப்பது என வெளிப்படையான நோக்கத்தோடு தொடங்கும் தலித் இயக்கங்கள் கடைசியில் பார்ப்பணர் x பார்ப்பணர் அல்லாதார் என்ற முரண்பாட்டிற்குள் வந்து நுழையும் நிலை ஏன் ஏற்படுகிறது? இந்த முரணிலையைத் தவிர்த்து விட்டு ஒரு தமிழ் மனம் சிந்திப்பது இயலாது என்ற நிலை உருவாக்கப்பட்டது எப்படி? இப்படிப் பல வினாக்களுக்கு விடை தேட நினைக்கும் போது செய்ய வேண்டிய ஆய்வாக வைதீக சமயம் பற்றிய ஆய்வு முன்னிற்கிறது. 

வைதீக சமயம் வெளியில் இருந்து வந்த பார்ப்பணர்களின் சமயம் என்ற நம்பிக்கையின் அடிப்படையில் உருவாக்கப்பட்டு விவாதிக்கப்படும் இத்தகைய முரண்பாடுகள் பண்பாடு சார்ந்து தங்கள் அடையாளத்தைத் தேடும் நோக்கம் கொண்டவை என்ற போதும் தூய்மை வாதம் என்னும் அடிப்படைவாதத்தோடு நெருங்கிய தொடர்பு கொண்டவை என்பதையும் மறந்து விடக் கூடாது. பூமி புத்திரர்கள் அல்லது மண்ணின் மைந்தர்கள் என்னும் கருத்தியல் சார்ந்து இயங்குபவர்கள்,தங்கள் அடையாளங்கள் எவை எனத் தேடும் போது அவர் களை அறியாமல் மற்றமை மீது வெறுப்பை உண்டாக்கிக் கொண்டே போவதும் தவிர்க்க முடியாமல் நிகழ்ந்து கொண்டே இருக்கும். இந்தக் காரணம் பற்றியே இடதுசாரி விமரிசகர்கள் இம்முரணிலையைத் தவிர்த்து விட்டுப் பொருளாதார முரண்பாடுகளின் அடிப்படையில் மட்டுமே சிந்திக்கும் படி தூண்டினார்கள். ஆனால் இந்திய சமூகத்திற்குச் சாதி வேறுபாடுகள் என்ற கருத்தியலையும், அதன் அடிப்படையிலான ஒடுக்குமுறை வடிவத்தையும் கொண்டு வந்து சேர்த்தது பார்ப்பணீய நலனை மையப்படுத்திய வைதீக சமயம் என்பது பாரதூரமான உண்மையாக இருக்கும் நிலையில் வைதீக சமயத்தின் தோற்றம், அவற்றின் பரவல், அதிகாரத்தைக் கைப்பற்ற அது பின்பற்றிய கருவிகள் போன்றவற்றைக் கண்டறிந்து சொல்ல வேண்டிய கட்டாயம் அறிஞர்கள் முன்னே இருக்கும் முக்கிய கடப்பாடு. அந்தக் கடமையை மேற்கொள்ளும் போது முன்னரே குறிப்பிட்டபடி நிகழ்காலச் சமூகத்தில் மோதல்களைத் தூண்டிவிடும் ஆபத்திருக்கிறது என்ற எச்சரிக்கை உணர்வுடனும் செய்ய வேண்டும்.
அத்தகைய எச்சரிக்கை உணர்வுடன் ஆய்வு செய்திட மார்க்சிய இயங்கியல் என்னும் முறையியல் தொடர்ந்து தமிழ்ச் சிந்தனையாளர்களுக்கு ஒரு கைவிளக்காக இருந்து வந்துள்ளது.அந்த விளக்கின் வெளிச்சத்திலேயே திறனாய்வாளர் தி.சு.நடராசன் வரலாறும் வக்கணைகளும் என்றொரு துணைத்தலைப்புடன் தமிழகத்தில் வைதீக சமயம் என்றொரு நூலை எழுதியுள்ளார்.
பார்ப்பணர் x பார்ப்பணர் அல்லாதார் என்ற நிகழ்கால முரணை அதே சொல்லாடலில் தேடாமல் வைதீக சமயத்தின் தோற்றம், தமிழகத்தில் அதன் வளர்ச்சி, இடத்திற்கும் நேரத்திற்கும் தக்கவாறு வைதீக சமயம் தன்னைத் தகவமைத்துக் கொண்ட பாங்கு, தகவல்களின் நிரல் வரிசையான வரலாற் றையும் கருத்தியல் உருவாக்கத்தின் முக்கியக் கருவியான இலக்கியத் தையும் வைதீக சமயம் பயன்படுத்திக் கொண்ட விதம் என்பதை ஒரு நேர்கோட்டு வரலாறாகச் சொல்லாமல் முன்னும் பின்னுமாகப் போய் விவரிக்கும் கதையாடல் பாணியில் சொல்கிறது இந்நூல்.
1. தொடரும் சமயப் பேச்சு
2. தமிழ்ச் சூழலும் பார்ப்பணர் வருகையும்
3. வைதீக வருணப்பகுப்பு: தமிழ்ச் சூழலோடு
4. அந்தணர் நூலும் மன்னவன் கோலும்
5. மறுவாசிப்பில் சிலம்பு: சமயநிகழ்வுகளை முன்னிட்டு
6. வேள்விக்குடிகளும் வேதவாக்கும்
7. பக்தி இயக்கம்
8. வைதீக சமயம்: பயணங்கள் பாதைகள்
9. வேதமும் கடவுளரும் தமிழ் அடையாளமும்
என அமைக்கப்பட்ட ஒன்பது இயல்களும் வைதீக சமயத்தின் வரலாற்றைச் சொல்வதை முதன்மை நோக்கமாகக் கொண்டவை என்றாலும், அதனூடாகத் தமிழ் இலக்கிய வரலாற்றின் முக்கியப் பனுவல்களைச் சமுதாயவியல் அணுகுமுறை மற்றும் கட்டவிழ்ப்பு முறையியலைப் பயன்படுத்தித் திறனாய்வு செய்வதையும் துணைமை நோக்கமாகக் கொண்டுள்ளன.
முதல் நான்கு இயல்கள் சங்க இலக்கியப் பனுவல்களை ஆதாரமாகக் கொண்டு வைதீக சமயத்தின் தமிழக வருகையை உறுதி செய்ய ஐந்தாவது இயல் தமிழின் தனிப்பெரும் காப்பியமான சிலப்பதிகாரத்தை மறுவாசிப்பு செய்வதன் மூலம் புதிய முரண்பாடுகள் அதன் காலத்தில் எப்படி இருந்தன என்பதைக் காட்டுகிறது. இளங்கோவடிகளின் கண்ணகி உருவாக்கம் தமிழ் அடையாள உருவாக்கம் என்பதைச் சொல்லும் அக்கட்டுரை, சிலம்பில் காணப்படும் மறையோர் என்ற சொல் பிரயோகத்தையும், மாடல மறையவன் என்ற துணைக் கதாபாத்திர வார்ப்பையும் மட்டும் விளக்கிக் காட்டுவதன் மூலம் சாதித்துக் காட்டுகிறது. இதன் மூலம், தமிழ் திறனாய்வுப் போக்கிற்கு அக்கட்டுரை ஒரு புதுவகைத் திறனாய்வு முறையை அறிமுகம் செய்துள்ளது. அதனை அடுத்து அமைந்துள்ள இயல் வரலாற்றுச் சான்றுகளை மறுவாசிப்புச் செய்ய வேண்டியதின் அவசியத்தை வலியுறுத்தித் தமிழக வரலாற்றின் திருப்பு முனை ஆதாரமான வேள்விக்குடிச் செப்பேடுகளை மறு வாசிப்பு செய்வதன் மூலம் அச்செப்பேடுகள் ஏறத்தாழ ஆறு நூற்றாண்டுகளை உறையச் செய்த புனைவு வரிகள் எனக் காட்டுகிறார். இவ்விரு கட்டுரைகளும் இந்நூலின் ஆகச் சிறந்த கட்டுரைகள் எனலாம். பண்டைய தமிழ் இலக்கியப் பயிற்சி உள்ளவர்கள் இக்கட்டுரையைப் படிக்கும் போது ஒரு புனைகதையை வாசிக்கும் அனுபவத்தைப் பெறுவார்கள்.
பின்னர் வரும் கட்டுரைகள் பக்தி இலக்கியங்களைத் தரவுகளாகக் கொண்டு சைவx வைணவ அடையாளங்களைத் தக்கவைப்பதற்குள் வைதீக சமயம் தன்னை வளர்த்துக் கொண்ட பின்னணி சொல்லப்படுகிறது. அப்படிச் சொல்லும் போது பக்தி இயக்கமே வைதீக சமயத்தைத் தமிழ்ச் சமயமாக ஆக்கியது என்பதை அழுத்தமாகச் சுட்டிக் காட்டுகிறார் தி.சு.நடராசன். இதன் தொடர்ச்சியாகச் சிற்றிலக்கியங்களை ஆதாரங்களாகக் கொண்டு இன்னொரு கட்டுரை எழுதிச் சேர்க்கப் பட்டிருக்க வேண்டும். பக்தி இயக்கம் தன்னைத் தமிழ் அடையாளத்தோடு வளர்த்துக் கொண்டதன் தொடர்ச்சி அறுபட்டதை அவ்விலக்கியங்கள் தங்கள் வடிவத்திலும் உள்ளடக்கத்திலும் கொண்டிருப்பதை அதன் மூலம் எடுத்துக் காட்டியிருக்க முடியும். அத்தோடு வைதீக சமயம் தமிழல்லாத பிறமொழியாளர்களின் ஆட்சியில் இறுக்கமான சமூகக் கோட்பாடுகளைத் தனக்குள் வாங்கிக் கொண்ட காலகட்டம் அது என்பதையும் அக்கட்டுரை மூலம் சுட்டிக் காட்டலாம். இதனைச் செய்தவர்கள் தெலுங்கைத் தாய்மொழியாகக் கொண்ட புலவர்கள் அல்ல; தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட சைவப் புலவர்கள் என்ற உண்மையை விளக்கிக் காட்டி அதன் காரணங்களையும் நூலாசிரியர் பேசியிருக்க முடியும்.
நிகழ்காலத் தமிழ்ச் சிந்தனைத் தளத்திலும் அரசியல் தளத்திலும் செயல்படும் பலரும் இந்நூலில் உள்ள ஒவ்வொரு கட்டுரையையும் ஒவ்வொரு விதமாக விவாதப் படுத்தக் கூடும். அதற்கான வாய்ப்புகளை உருவாக்கித் தந்துள்ளன இக்கட்டுரைகள். இலக்கியங்களிலிருந்து தேவையான சான்றாதாரங்களைத் தொகுத்துக் கொண்டு கல்வித்துறை முறையியலைச் சரியாகப் பின்பற்றிச் செல்லும் இந்நூல் கல்வியியல் ஆய்வாளர்கள் முன்மாதிரியாகக் கொள்ளத்தக்க ஒரு நூல் என்பதைக் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும்.
இப்படிச் சொல்லும் அதே வேளையில் தமிழகப் பண்பாட்டு வரலாற்றைத் தமிழ் இலக்கியங்களை ஆதாரமாகவும் மார்க்சீய இயங்கியல் ஆய்வு முறையை ஆய்வுக்கருவியாகவும் கொண்டு ஆய்வுகள் செய்துள்ள க.கைலாசபதி, கா.சிவத்தம்பி, நா.வானமாமலை, க.சுப்பிரமணியன், கோ.கேசவன் போன்றவர்களிடமிருந்து தி.சு.நடராசன் வேறுபடும் விதம் ஒன்றைச் சுட்டிக் காட்டவும் வேண்டியுள்ளது. அவர்கள் தங்கள் நூலை வாசிப்பவர்களைப் பலராகக் கணித்து படர்க்கைநிலைக் கூற்றில் எழுதிட, தி.சு.நடராசன் தன்னுடைய கட்டுரைகளை ஒரேயொரு வாசகனோடு உரையாடும் முன்னிலைக் கூற்றாக அமைத்துள்ளார் என்பதைச் சுட்டிக் காட்ட வேண்டி யுள்ளது. இம்முன்னிலைக் கூற்று வாசகனை வேறுபக்கம் திசைமாறி விடாமல் கைப்பிடித்து அழைத்துச் செல்லும் நோக்கம் கொண்டது. தான் காட்டும் இடங்களை யெல்லாம் பார்த்தே ஆக வேண்டும் என்று வலியுறுத்துவது. விவாதங்களை உள்வாங்கி தாங்களே கருத்துக்களை உருவாக்கிக் கொள்ள வேண்டிய சிந்தனை சார்ந்த - வரலாற்றுக்குள் நுழையும் இவ்வகை நூலுக்கு அத்தகைய வலியுறுத்தல் எவ்வளவு தூரம் ஏற்புடையது என்பதும் யோசிக்க வேண்டிய ஒன்று.
தமிழகத்தில் வைதீக சமயம்வரலாறும் வக்கணைகளும்
தி.சு.நடராசன்
முதல் பதிப்பு: டிசம்பர்,2008
நியூசெஞ்சுரி ஹவுஸ் (பி)லிட், சென்னை-600098, விலை : ரூ.110/-

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ராகுல் காந்தி என்னும் நிகழ்த்துக்கலைஞர்

நவீனத்துவமும் பாரதியும்

தணிக்கைத்துறை அரசியல்