திலீப்குமாருக்கு விருது


இதழியலாளர், நாடகவியலாளர், அரசியல் விமரிசகர் மற்றும் செயல்பாட்டாளர் நண்பர் ஞாநியின் பெயரில் விருதொன்றை நிறுவியுள்ளது மாற்று நாடக இயக்கம்.. பரிக்‌ஷா ஞாநி நினைவு விருதினைப் பெற்ற முதல் ஆளுமை நாடக எழுத்தாளர் எஸ்.எம்.ஏ. ராம். அந்த விழா மேடையில் நானும் இருந்தேன். விருதினை வழங்கும் நிகழ்வாகத் திருப்பத்தூர் மாற்று நாடக இயக்கத்தின் வருடாந்திர நாடகவிழா தெரிவுசெய்யப்பட்டிருக்கிறது. இந்த ஆண்டுக்குரிய விருதாளராக சிறுகதையாசிரியர், மொழிபெயர்ப்பாளர் திலீப்குமார் தேர்வு செய்யப்பட்டுள்ளார். நான் அவரது இரண்டு கதைகளை நாடகமாக்கியவன் என்ற வகையில் அவருக்கு வாழ்த்துகள் சொல்கிறேன்.

குஜராத்தியைத் தாய்மொழியாகக் கொண்ட திலீப்குமார் தற்காலத் தமிழ் இலக்கியத்திற்குச் செய்த பங்களிப்புகள் குறிப்பிடத்தக்கன . கணையாழியில் அவரது சிறுகதைகளை வாசித்திருந்த நான் அவரைக் க்ரியா அலுவலகத்தில் தான் முதன் முதலில் சந்தித்தேன். அதற்குப் பிறகு அவர் வீட்டிற்கும் சென்று பேசிக் கொண்டிருந்திருக்கிறேன். மூங்கில் குருத்து, கடவு என்ற இரண்டு தொகுதிகளில் இருக்கும் கதைகளின் எண்ணிக்கை குறைவுதான். விளக்கு விருதுக்குழுவின் தேர்வுக்குழுவில் இருந்தபோது அவருக்கு விருது வழங்கப்பட வேண்டுமென வாதாடியது. விருதும் கிடைத்தது.அவருக்குப் பாஷாபாரதி விருதும் கிடைத்துள்ளது.

ஓராண்டுக்கு முன்னால் இக்சா மையத்தில் நடந்த கூட்டமொன்றில் கடைசி வரிசையில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தோம். கதைகள் எழுதுவதைக் குறைத்துக்கொண்ட பின் மொழிபெயர்ப்புத் திட்டங்களில் கவனம் செலுத்துவதைச் சொன்னார். தமிழின் முக்கியமான சிறுகதைகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வெளியிட்டுள்ளதைக் குறிப்பிட்டுப் பேசினார். A Place to Live: Contemporary Tamil Short Fiction எனத் தலைப்பிட்டு வெளியிட்ட இத்தொகுதியைப் போலவே மௌனியோடு கொஞ்ச தூரம் என்ற திறனாய்வு நூலும் முக்கியமானது.

சுந்தரராமசாமியின் பல்லக்குத் தூக்கிகள் சிறுகதையை 1988 இல் நாடகமாக்கிப் பல இடங்களில் மேடையேற்றியபின் எனது முதல் நூலான ’நாடகங்கள் விவாதங்களி’ல் (1992) சு.ரா.வின் அனுமதியுடன் அச்சிட்டிருந்தேன். தனது கதையை நாடகமாக்கியதில் மகிழ்ச்சியடைந்த சு.ரா. சிங்கப்பூரில் இருக்கும் தனது நண்பர் இளங்கோவனிடம் எனது புத்தகத்தைத் தந்து பல்லக்குத்தூக்கிகளை அங்கு மேடையேற்றும் முயற்சியைச் செய்யலாம் என்று நினைத்தார். புதுவைக்கு ஒரு திருமணத்திற்கு வந்தபோது உங்கள் நூலின் 25 பிரதிகளைக் க்ரியாவில் தந்துவிடுங்கள்; சிங்கப்பூருக்குப் போகும்போது தேவையான பிரதிகளை வாங்கிக் கொள்கிறேன் என்று அவர் சொன்னதின் பேரில் க்ரியாவிற்குச் சென்றபோது அங்கு பணியாற்றிய திலீப்குமாரைப் பார்த்தேன். க்ரியா ராமகிருஷ்ணன் சில நிமிடங்கள் பேசிவிட்டுத் திலீப்குமாரிடம் கைகாட்டினார். அவரோடு நீண்ட நேரம் பேசிக்கொண்டிருந்தோம்.
பல்லக்குத்தூக்கிகளைத் தொடர்ந்து நான் வாசித்திருந்த சிறுகதைகள், நாவல்கள் பலவற்றை நாடகப்பிரதிகளாக்கும் நோக்கத்தில் வாசித்ததுண்டு.
அப்படி வாசித்ததின் தொடர்ச்சியாகவே புதுமைப்பித்தனின் சிற்பியின் நரகம் நாடகம் பிரதியாகியது. நாடகமாக்கும் கோணத்தில் என்னைத் திரும்ப வாசிக்கத் தூண்டுபவர்களாகத் திலீப்குமாரும் ஜெயகாந்தனும் பிரபஞ்சனும் கோணங்கியும் இமையமும் கறுப்பு சுமதியும் இருக்கிறார்கள்.நவீன நாடகப்பிரதிக்குரிய பணமதிப்பும் மேடையேற்றமும் இருந்திருந்தால் இவர்கள் நாடக எழுத்தாளர்களாக மாறியிருப்பார்கள். இயக்குநர்கள் அவர்களை அணுகி விவாதித்து நாடகப்பிரதிகளை உருவாக்கியிருக்கலாம். தமிழில் நாடகங்களை இயக்குபவர்களுக்கும் எழுத்தாளர்களுக்கும் எப்போதும் இணக்கம் இல்லாமல் விலகியே இருக்கிறார்கள். தேவையில்லாமல் நாடகப்பிரதி உருவாகும் என்று சொல்ல முடியாதுதானெ.

பிரபஞ்சனின் மரி என்னும் ஆட்டுக் குட்டி நாடகத்திற்கான கூறுகள் கொண்ட சிறுகதை. நாடகமாக்கிக் கொண்டிருக்கும்போது நண்பர் பார்த்திபராஜாவும் நாடகமாக்கி மேடையேற்றுவதாக ஒரு செய்தியைப் படித்துக் கைவிட்டுவிட்டேன். கோணங்கியின் மாயாண்டிக் கொத்தனின் ரசமட்டம் நாடகப்பிரதியாக இருக்கிறது. இமையத்தின் பெத்தவன் தொடங்கிப் பல கதைகளைத் தொடர்ச்சியாக நாடகமாக்கிய புதுச்சேரி நாடகப்பள்ளி ஆசிரியர் இரா.ராஜு அதன் புனைவு ரகசியத்தை வெளிக்கொண்டுவராமல் தட்டையாக மேடையேற்றி என்னைத் தடுத்துவிட்டார்.


ஜெயகாந்தனின் ஆடும் நாற்காலிகள் ஆடுகின்றன என்னும் குறுநாவலை நாடகமாக்கி அனுமதி கேட்டபோது ஜெயகாந்தன் காலதாமதம் செய்தார். அவரது பதிப்பக முதலாளியான மதுரை மீனாட்சிபுத்தகநிலையம் செல்லப்பன் வழியாகத்தான் கேட்டார். அப்போது அவரது கதைகள் சினிமாவுக்காகவும் தொலைக்காட்சித் தொடர்களுக்காகவும் வியாபாரம் பேசப்பட்டுக் கொண்டிருந்த நேரம். நாடகமாக்கும்போது பணம் தரப்படும் என்ற உத்தரவாதம் எதனையும் தரமுடியாத நிலையில் இருந்ததால் அந்தத் தாமதம் நிகழத்தான் செய்யும். நாடகமாக மட்டும் மேடையேற்றிக் கொள்ளச் சொல்லுங்கள் என்று ஜெயகாந்தன் சொன்னதாகச் செல்லப்பன் 
சொன்னார். அந்தத் தாமதம் உண்டாக்கிய அலுப்பின் நாடகப்பிரதி அப்படியே பேனா மைப்பிரதியாகவே இப்போதும் இருக்கிறது. இருபது ஆண்டுகளுக்கு முந்திய கதை இது.

திலீப்பின் இரண்டு கதைகளை நாடகப் பிரதியாக்கியிருக்கிறேன். அவரது கதைகள் நாடகத்திற்குத் தேவையான அடிப்படைக்கூறான முரணை வெளிப்படையாகக் காட்டுவன அல்ல. முரண்பட்ட கதாபாத்திரங்களின் புறநிலை முரணை வெளிப்படுத்தாமல் அகமுரணை முன்வைக்கும் கதைகள். அதன் காரணமாக ஒவ்வொரு சிறுகதையும் ஒவ்வொரு வகையான நாடகப்பிரதியாக ஆகக்கூடியன. முதல் கதை ஐந்து ரூபாயும் அழுக்குச் சட்டைக்காரரும். எழுத்தாளர் ஜி.நாகராஜனின் மரணத்திற்கு முந்திய சென்னைப் பயணத்தின் ஒரு நாள் நிகழ்வைச் சொல்லும் கதையில் அந்த இளைஞரும் பெரியவரும் நடத்தும் உரையாடல்கள் நாடக உரையாடலின் சக்திவாய்ந்த உரையாடல்கள். கலை, தத்துவம், அரசியல், வாழ்க்கை எனப் பிரித்துப் பேசும் இவற்றைப் பிரித்துப் பேச முடியாது என்பதை உணர்த்தும் உரையாடல்கள் அவை: அதனை நாடகமாக்கியபோது நான் எழுதிய குறிப்பு இது: 
”எழுத்துக்கும் வாழ்க்கைக்கும் இடையேயுள்ள இடைவெளியைக் குறைக்க முயன்றதன் மூலம் தமிழ் எழுத்தாளர்களில் தனக்கான இடத்தை உருவாக்கியவர். நான் மாணவனாக இருந்த காலத்தில் மதுரைத் தெருக்களிலும் சில நண்பர்களோடும் அவரைச் சந்தித்திருக்கிறேன். ஆனால் அப்போது அவரது எந்த எழுத்தையும் வாசித்ததில்லை. அவரது எழுத்துக்களைப் படித்து முடித்தபோது அவரது வாழ்க்கையைப் பார்க்க அவர் இல்லை. அவரது அலைவு வாழ்க்கைப் பின்னர் வந்த எழுத்தாளர்களுக்கு அதிர்ச்சியாகவும் ஆச்சரியமாகவும் தொடர்ந்து கொண்டிருந்த ஒன்று.அதனைச் சில எழுத்தாளர்கள் தங்கள் கதைகளில் புனைவுகளாக்கிப் பதிந்தும் வைத்துள்ளனர். அவையெல்லாமே நியாயமான பதிவுகளாகவே படுகின்றன என்றாலும், திலீப்குமாரின் இந்தக் கதை கச்சிதமான ஓரங்க நாடகமாக எனக்குத் தோன்றியது. கதையை நாடகமாக ஆக்கியபோது கதைசொல்லியை திலீப்குமாராகவே வாசித்தேன். அதனால் அவரது பெயரையே பாத்திரத்தின் பெயராக ஆக்கியிருக்கிறென். கதையின் தலைப்பு: ஐந்து ரூபாயும் அழுக்குச் சட்டைக்காரரும்.(மூங்கில் குருத்து, க்ரியா,1985). இனிக் கதையை நாடகமாக வாசிக்கலாம்.”
நாடகமாக்கப்பெற்ற இன்னொரு சிறுகதை: நிகழ மறுத்த அற்புதம். நாடகமாக்கியபோது நான் தந்த தலைப்பு: ஜேம்ஜும் திருமதி ஜேம்ஸும். ஒரு பாத்திரம் மட்டுமே பேசிக்கொண்டிருக்க - ஜேம்ஸ் மட்டுமே பேசிக் கொண்டிருக்க திருமதி ஜேம்ஸ் எதுவும் பேசாமல் நகரும் நிகழ்வுகளால் ஆனது அந்தக் கதை. திருமதி ஜேம்ஸ் ஒன்றும் சொல்லவில்லை என்ற வாக்கியம் திரும்பத் திரும்ப எழுதப்பெற்ற அச்சிறுகதை நவீன நாடகத்திற்கான கட்டமைப்போடு இருக்கும் கதை.

கதையை நாடகமாக்கியபின் நண்பர் ஞாநியிடம் சொன்னேன். அவர் அதைக் குறும்படமாக்கும் முயற்சியில் இருப்பதாகச் சொன்னார். ஆக்கவும் செய்தார். அதற்கு அவர் வைத்த தலைப்பு: திருமதி ஜேம்ஸ் என்ன செய்யவேண்டும்? நாடக நடிப்பையும் திரைப்பட நடிப்பையும் வேறுபடுத்திப் பார்க்காமல் கலையியல் தாகத்துடன் செயல்படும் கலைஞர் ரோகினி திருமதி ஜேம்ஸ் பாத்திரத்தில் நடித்திருந்தார். ஞாநியின் ஒற்றை ரீல் இயக்கத்தின் முதல் தயாரிப்பாக வந்தது அந்தப் படம். ஞாநியுடன் நல்ல விவாதங்களை நிகழ்த்திய நண்பர் திலீப்குமாருக்கு அவரது பெயரில் உள்ள விருது அளிக்கப்படுவது பொருத்தமானது. திலீப்குமாருக்காகவாவது திருப்பத்தூர் செல்லவேண்டும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ராகுல் காந்தி என்னும் நிகழ்த்துக்கலைஞர்

நவீனத்துவமும் பாரதியும்

தணிக்கைத்துறை அரசியல்