பெண்ணெழுத்து: கனலியில் மூன்று பெண்கள்


எழுதும் ஒரு பெண், பெண்களின் சொல்லாடலைத் தவிர்த்துவிட்டு ஆணை எழுத முடியும். ஆண் உயிரியும் பெண்ணை எழுத முடியும். இந்த நிலைப்பாட்டைச் சிலவகைப் பெண்ணியலாளர்கள் ஒத்துக்கொள்வதில்லை; மறுதலிக்கிறார்கள். அப்படியான பால்மாறாட்டத்தில் சிறப்பான பெண் வெளிப்பாடுகள் இருப்பதில்லை என்பது அவர்களின் வாதங்கள் .அந்த வாதங்களில் ஓரளவு உண்மை இருந்தபோதிலும் முழுமையும் ஏற்கத்தக்கன அல்ல. எல்லா வகையான எழுத்தும் அனுபவங்களின் வெளிப்பாடாக மட்டுமே என்ற நம்பிக்கையின் அடிப்படை இதற்குள் இருக்கிறது.  இந்த நம்பிக்கை, நடப்பியல் சாராத எழுத்துகளுக்கும் பொருந்தாமல் போய்விடும். பாதிக்கப்பட்ட மனிதர்களின் துயரத்தை - ஏக்கத்தின் வலியை எழுதி, அவர்களுக்குக் கிடைக்கும் ஆறுதலைக் காட்டும் எழுத்துகள் தீவிரமான தாக்கம் செலுத்தக்கூடியனதான். மனிதர்களின் மனதிற்குள் அலைவுகளை உருவாக்கித் திசைமாற்றம் செய்யும். இது ஒருவகையில் மனிதநேய எழுத்துக் கோட்பாட்டின் வெளிப்பாடுகள். அண்மை விமரிசனங்கள் மனித நேய எழுத்துகளின் காலம் முடிந்துவிட்டதாகச் சொல்கின்றன. ஆனாலும் இப்போதும் அவையே அதிகம் வந்து கொண்டிருக்கின்றன.
2019 ஆகஸ்டு முதல் மாத இதழாகப் பதிவேற்றம் செய்யப்படும் கனலி- இணைய வெளியில் கிடைக்கும் தமிழ் இதழ். அதன் நோக்கங்கள் - இருப்பும் எதிர்பார்ப்பும் சொல்லப்பட்டிருக்கின்றன. அதன் ஆசிரியர்(குழு), பதிப்பிடம் பற்றிய தகவல்களைப் பார்க்கமுடியவில்லை. பெண்கள் எழுதும் கதைகளைத் தேடிப்படித்துக் கொண்டிருக்கும் நான் அண்மைய இதழில் மூன்று சிறுகதைகளை ஒரே மூச்சில் வாசித்தேன்
1.டி.வி.ஆபீஸு -நாச்சியாள் சுகந்தி
2.பகற்கனவு - பிரமிளா பிரதீபன்
3. ரஜ்ம் - பாத்திமா மாஜிதா

மூன்றுபேரின் எழுத்துகளோடு ஏற்கெனவே சிறிதளவு அறிமுகம் இருக்கிறது. பிரமிளா பிரதீபன், மாஜிதா பாத்திமா ஆகியோரின் சிறுகதைகளை வாசித்திருக்கிறேன். கோபம் கொண்ட சமூக விமர்சனக் குறிப்புகள் எழுதுபவராகவும் கவிதை எழுதுபவராகவும் நாச்சியாள் சுகந்தியைப் பற்றிய அறிமுகம் உண்டு. இதுவரையிலான அறிமுகங்கள் இம்மூவரையும் பெண்ணிலை சார்ந்த அக்கறைகள் கொண்டவர்களாகக் காட்டியுள்ளன. கனலியில் வாசித்த இந்தக் கதைகளும் அதனை உறுதிசெய்கின்றன.
எழுதுபவர்களின் எழுத்தடையாளங்களை - வட்டார, வர்க்க, ஆன்மீக, உளவியல், தலித், பெண் போன்ற அடையாளங்களை - உருவாக்குவதில் எழுத்துகளில் இடம்பெறும் பல்வேறு கூறுகள் வினையாற்றக்கூடும். அவ்வாறு வினையாற்றக்கூடிய கூறுகளுள் முதன்மையாக இருப்பது பாத்திரத்தேர்வுகள் தான். வாசித்து முடிக்கும் ஒருவரைக் கதைசார்ந்து சிந்திக்கத் தூண்டுவன அக்கதையின் மையப் பாத்திரங்கள் தான். இம்மூன்று கதைகளும் பெண்களை மையப்பாத்திரங்களாக்கிக் கதையைப் பெண்கதைகளாக - பெண்ணெழுத்தாக வாசிக்கும்படி தூண்டுகின்றன

************
மூன்று பெண் எழுத்தாளர்களின் மூன்று பிரதிகளின் சொல்முறையும் நிகழ்காலத்தை எழுதும் சொல்முறையாகவே இருக்கின்றன. பாத்திரக் கூற்றின் வழியாகச் சொல்லப்படும் மாஜிதாவின் கதை ரஜ்ம். பிரமிளாவின் கதையும், நாச்சியாள் சுகந்தியின் கதையும் படர்க்கைக்கூற்றில் - ஆசிரியர் கூற்றில் அமைந்துள்ளன.

ரஜ்ம் கதையின் கதைசொல்லியாகிய அந்தப் பெண்,. மரணத்தில் இருக்கும் தன் கடந்தகால வாழ்வின் சில ஆண்டுகளைக் காட்சிகளாக விரித்துக் காட்டியிருக்கிறாள். தங்கள் பொறுப்பைத் தட்டிக் கழித்துவிட்டுப் பெண்களின் மீது அனைத்து விதமான பெருஞ்சுமைகளை ஏற்றிவைக்கும் இசுலாமியக் குடும்ப ஆண்களைத் தனது கதைகளில் எழுதிக்காட்டும் மாஜிதா இந்தக் கதையிலும் பொறுப்பற்ற அப்பாவையும் மகளின் துயரத்தையும் எழுதியுள்ளார். இளம்பெண்ணின் உடல் தரக்கூடிய சுகத்தை அனுபவிக்கும் ஆண்களின் உலகமே அவளுக்குக் கசையடியையும் - இப்போது துப்பாக்கு ரவைகளையும் தண்டனையாகத் தருகிறது எனக் காட்டும் கதை ரஜ்ம்.

வறுமை பெண்கள் மீது ஏற்றிவைக்கும் சுமை பொருளியல் பாரம் போலத் தோன்றினாலும் குடும்ப மானம், கற்பு போன்றனவற்றைக் காக்க வேண்டிய பொறுப்பு பெண்களுக்கானதாக மட்டும் இருக்கிறது . வயதுக்குவரும் நிலையில் இருக்கும் பெண்ணை விட்டுவிட்டு வேற்று நாடொன்றில் வேலைக்குச் செல்லும் அம்மா, வயதுக்கு வந்துவிட்ட நிலையில் குடும்பச் செலவுக்காக ஒரு மௌல்வியின் வீட்டிற்கு வேலைக்கு அனுப்பப்படும் மகள் என்ற இரண்டுபேரின் உடல் மீதும் செலுத்தும் வன்முறை - உடல் மற்றும் சொல் சார்ந்த வன்முறைகளைக் கசையடியால் உண்டாகும் வலியின் ரணத்தைப் போல எழுதியுள்ளார். வலியின் ரணத்தை எழுதும் மாஜிதாவின் பனுவல் முதன்மையாகத் தோலுரிப்பது அந்தப் பொறுப்பற்ற அப்பாவைத்தான். மனைவி அனுப்பப்போகும் பணத்தை முன்னிட்டு சௌதிக்கு அனுப்பியபின், ‘அவளுக்கு அங்கெ ஒருத்தன் கிடைச்சிருப்பான்’ எனச் சொல்லுவதும், “இப்றாஹீம் மெளலவி உனக்கிட்ட வரும் வரையிலும் என்ன செய்து கொண்டிருந்தாய்? அவர் உன்னைத் தொடும் பொழுது ஏன் நீ சத்தம் போடாமல் இருந்தாய்”, என கன்னத்தில் அறைவதுமான அவரது செயல்களும், நீதவான் தொடங்கிக் காவல் துறை வரையிலும் ஆண்களின் உலகமாக இருப்பதை எழுதிப் பாதிக்கப்பட்ட பெண்களின் துயரத்தை மட்டுமே காட்டியிருக்கிறார். மரணத்தில் தொடங்கி, படிப்புக்காலம், அம்மாவைப் பிரிந்த நிகழ்வு, வயதுக்கு வந்த காலம், மௌல்வி வீட்டில் இருந்த அச்சம் துரத்திய கணங்கள் எனப் பல அடுக்குகளில் பயணம் செய்யும் கதையாக எழுதியிருக்கும் பாத்திமா மாஜிதாவின் கதைகள் வாசிப்பவர்களைத் தன்வசப்படுத்திவிடும் மொழிநடையைக் கொண்டவை. ஆனால் கதைத் தொடக்கத்தில் தடைபோடும் மொழி தவிர்க்கப்பட்டிருக்க வேண்டும்.
*******************
நாச்சியாள் சுகந்தியின் கதை - டிவி ஆபீஸில் கடைநிலை ஊழியராக வேலைக்குச் சேரப்போகும் மங்களத்தின் முந்தினநாள் பயணத்தின் மன அலைவுகளை எழுதிக்காட்டியுள்ளது. தொடங்கி முடித்துவிடவேண்டும்; முடிவில் அந்தத் திருப்பத்தைக் காட்டிவிட வேண்டும் என்று வேகம் பிடித்துச் செல்லும் கதையில் விலகிவிலகிச் செல்வன தமிழ்ச் சினிமாப் பாடல்களின் வரிகள் தரும் அர்த்தங்களும் இசையும் .
கழிப்பறை உள்பட அலுவலகப் பகுதிகளைச் சுத்தம் செய்யும் வேலைக்குச் சேரப்போகும் மங்களத்தின் கல்யாண வாழ்க்கையும் காதல் வாழ்க்கையும் தந்த அழுத்தத்தைவிட வேலைக்குச் சேரப்போகும் இடத்தில், அவளது ஊர்க்காரி ஒருத்தி இருக்கிறாள் என்ற நினைப்பு உண்டாக்கும் பதற்றம் எழுப்பும் சிக்கலை விரிவாக எழுதியிருக்கிறார். இந்தியச் சமூகத்தின் தனிநபரின் தன்னிலை உருவாக்கத்தில் மற்றவரின் இருப்பே முதன்மையானது. மற்றவரின் சாதி,மதம், பொருளியல் நிலை, வாழ்க்கைமுறை போன்றன தரும் அழுத்தமே நமது குற்றவுணர்வுக்குக் காரணங்களாக இருக்கின்றன. திருப்பத்தூர் வாழ்க்கை - குடும்ப வாழ்க்கை தந்த அழுத்தத்திலிருந்து கிடைக்கப்போகும் விடுதலை உணர்வை, அங்கே இருக்கப்போகும் அவளது ஊர்க்காரியின் இருப்பு பெரும் கேள்வியாக மாறி முன்னிற்கிறது. ஆனால் அந்தப் பெண் - அம்பிகா இவளை ஊர்க்காரியாகவோ, பக்கத்துத் தெருக்காரியாகவோ பார்க்காமல், ஒரு நகரவாசியாக மாறித் தன்னளவில் செயல்படும் தொழில்முறை உறவைப் பேணும் நிலையில் மங்களத்தின் எல்லாக்கட்டுகளும் காணாமல் போய்விடுவதைக் கதைமுடிவில் தருகிறார். கடைநிலை ஊழியராகப் பணியில் சேரப்போகும் மங்களத்தின் இரவுப்பயணத்தையும் அடுத்த நாள் அவளுக்குக் கிடைத்த ஆசுவாசத்தையும் எழுதும் ஆசிரியரின் விருப்பங்கள் சார்ந்த திரைப்படப் பாடல்கள் சார்ந்த குறிப்புகளும் இடையீடுகளும் இந்தக் கதையின் ஓர்மையைக் கெடுத்துக் கொண்டே இருக்கின்றன.
ஒற்றை அடுக்கு மட்டுமே கொண்ட இந்தக் கதையில் மங்களமென்னும் பெண்ணைத் தேர்வுசெய்து எழுதும் நாச்சியாள் சுகந்திக்கு ’சாமான்யன்’ என்ற ஆண்பால் சொல்லுக்குப் பெண்பால் சொல்லொன்றைத் தேடிப்போடவேண்டும் என்று தோன்றாமல் போய்விட்டது ஆச்சரியமாக இருக்கிறது. அதேபோல் பெயிண்டர் என்ற சொல்லுக்குப் பதிலாக வண்ணம்பூசும் வேலை என்ற சொல்லைப் பயன்படுத்தி யிருக்கலாம். தமிழ்ச் சொல்லை அந்த இடத்தில் பயன்படுத்தினால் சரியாக இருக்காது என்று நினைத்திருந்தால், பெயிண்டிங் வேலை என்றுதான் பயன்படுத்திருக்க வேண்டும். பெயிண்டர் என்பது வேலை அல்ல; வேலை செய்பவரைக் குறிக்கும் சொல்.

************
பிரமிளாவின் பகல் கனவு ஈரடுக்குக்கதை. இன்பியலும் துன்பியலும் கலந்த கலவை. முதல் அடுக்கில் பரிமளா நிறைவேற்றிக்கொள்ளும் அந்த ஆசை விரும்பக்கூடாத ஆசை. அவளது உடலின் வெளிப்புறம் விரும்பினால் உள்ளகம் ஏற்காத ஒன்று. ஒதுங்கித் தனிப்பாதையில் சென்று அந்த சுனையில் குளிக்கும்போது உடலும் மனமும் அடையும் மகிழ்ச்சியும் திளைப்பும் தற்காலிகமானது. தொடர்ந்து துயரத்தைக் கொண்டுவரக்கூடியது

குளிர்மையின் நீட்சி பெரும் இருமலாக -மூச்சிரைப்பாக மாறிப் பெருந்துயரமாக மாறிவிடும் என்பதை அறிவாள். என்றாலும் அவள் மனம் விரும்புகிறது; நிறைவேற்றிக்கொள்கிறது.

தற்காலிகமான உடல் திளைப்பும் மகிழ்ச்சியும் தொடர்நிகழ்வாக மாறுமா என்பது பற்றியெல்லாம் அவளுக்கு நினைப்பில்லை. அவளது மூச்சிரைப்பும் இருமலும் இல்லாமல் போய்விட வேண்டும் என்பதல்ல அவளது ஆசை. அவளது ஆசை அந்த நோயை எதிர்த்து நிற்கும் தனது மனதிற்கு ஆறுதலும், தலைசாய்த்துக்கொள்ள ஒரு தோளும் வேண்டும் என்பதுதான். ஆறுதலாக இருக்கும் அந்த மனிதன் தன் கணவனாக இருந்துவிட்டால் அது போதும். அதுதான் அவளது ஆசை; விருப்பம்; கனவு. ஆனால் அந்தக் கனவு நிறைவேறும் கனவாக இல்லை; பகல்கனவாக இருக்கிறது என்பதுதான் வெளிப்படும் ஆதங்கம்.

நாச்சியாளின் கதையைப் போலவே, நிகழும் வெளியாகப் பேருந்துப் பயணமே பிரமிளாவின் கதை நிகழும் வெளியாக இருக்கிறது. அப்பயணத்தின் போதும் பயணிகளின் பாடல்களும் ஆட்டபாட்டங்களும் இருக்கின்றன. அந்தப் பெண்ணின் மனதிற்குள் ஆரம்பத்தில் இடையீடு செய்த அந்தக் குறுக்கீடுகள் ஆழமான நினைவுக்குள் நுழைந்தபின் அவளை எதுவும் செய்யவில்லை. அந்த விவரிப்புகளும் அதற்கான மொழியோட்டமும் விலகலற்றவைகளாக இருக்கின்றன.

*******************
மூன்று கதைகளையும் ஒரே மூச்சில் வாசித்தாலும் ஒன்றையொன்றோடு ஒப்பிடும் தேவையை உருவாக்கவில்லை. பாதிக்கப்படும் பெண்களின் சூழலையும் மனவோட்டங்களையும் நுட்பமாக எழுதியுள்ள இக்கதைகள் தமிழ்ப் பெண்ணெழுத்துப் பரப்பில் வாசிக்கப்பட வேண்டிய கதைகள் என்பதைச் சொல்லவிரும்புகிறேன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ராகுல் காந்தி என்னும் நிகழ்த்துக்கலைஞர்

நவீனத்துவமும் பாரதியும்

தணிக்கைத்துறை அரசியல்