தனித்தனியாகவே அதனதன் அளவில் முழுமையான நான்கு குறும்படங்களின் தொகுப்பு. நான்கும் விவாதிக்கப்பட வேண்டிய கருத்துக்கள் என்ற அளவில் – விவாதத்திற்கான வெப்பப்புள்ளிகள் – HOTSPOT – எனத் தலைப்பொன்றோடு வந்துள்ளது. நான்கு பகுதிகளுக்கும் தனித்தனியே பெயர்களும் சூட்டப்பட்டுள்ளன. முதல் பகுதிக்கான தலைப்பு- ஹேப்பி மேரீட் லைப். அடுத்து வருவன முறையே -கோல்டன் ரூல்ஸ், தக்காளி சட்னி, ஃபேம் கேம். இந்த நான்கு சொற்றொடர்களுமே ஒற்றைப் பொருண்மையில் உச்சரிக்கப்படாமல், வெவ்வேறு சூழலில் வெவ்வேறு பொருள் தரும் விதமாகப் பயன்பாட்டில் இருக்கும் சொற்கள். அதிலும் குறிப்பாக ஈராயிரத்துக்குப் பிந்திப் பிறந்தவர்கள் இச்சொற்களைப் பயன்படுத்தும்போது சில நேரங்களில் தீவிரத் தன்மையோடும் பல நேரங்களில் நகைச்சுவைத் தன்மையோடும் உலா வரும் சொற்கள். அந்தச்சொற்களைத் தலைப்பாக்கி நிகழ்காலத்தில் விவாதிக்கப்பட வேண்டிய கருத்தை விவாதப்படுத்தியுள்ள து ஹாட் ஸ்பாட். அந்த வகையில் இந்தப் படம் கவனிக்க வேண்டிய படம். விவாதப்புள்ளிகளாக முன்வைக்கப்பட்ட நான்கும் மாறிவரும் குடும்ப அமைப்போடு தொடர்புடையன. முதல் மூன்றும் கணவன் - மனைவி உறவுகளையும், நான்க...