அரசியல் குடும்பங்களின் இருண்ட காலம்



சுதந்திர இந்தியாவில் ஐந்தாண்டுக்கொரு முறை தேர்தல் என்பது நடைமுறைக்கு வந்தது தொடங்கித் தமிழ் நாட்டில் ஆட்சி அதிகாரத்தில் இருந்த காங்கிரஸ் 1967 இல் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான கூட்டணியிடம் தோல்வியைச் சந்தித்தது. கூட்டணி வெற்றி பெற்றது என்றாலும் திராவிட முன்னேற்றக் கழகம் தனியாகவே ஆட்சியை அமைத்தது என்பது வரலாறு. அந்த வரலாறு தொடர்ந்து கொண்டிருக்கிறது. அப்போதிருந்து எல்லாத் தேர்தல்களிலும் ஏதாவது ஒரு கூட்டணி தான் வெற்றி பெறுகிறது. ஆனால் ஆட்சி அமைப்பது அக்கூட்டணிக்குத் தலைமை தங்கும் கட்சி மட்டும் தான். கூட்டணியில் தனியொரு கட்சிக்குப் போதிய எண்ணிக்கையில் வெற்றி வாய்ப்புக் கிடைத்து விடும் நிலையில் தனியே ஆட்சி அமைப்பதைக் கூட்டணிக் கட்சிகளால் தட்டிக் கேட்க முடியாது; தடுத்து விடவும் முடியாது. இந்த நிலையையும் தாண்டி 2006 இல் ஆட்சி அமைக்கத் தேவையான 118 சட்டமன்ற உறுப்பினர்கள் என்ற எண்ணிக்கையைத் தனியொரு கட்சியாகத் திமுக பெற்றிராத போதிலும், அதன் தலைவர் மு.கருணாநிதி ஐந்து ஆண்டுகாலம் வெற்றிகரமாக ஆட்சியை நடத்தி முடித்து விட்டார். தற்போதைய முதல்வர் ஜெ.ஜெயலலிதாவின் வார்த்தைகளில் சொல்வதாக இருந்தால்’ மைனாரிட்டி திமுக அரசு’ ஐந்தாண்டுக் காலத்தை வெற்றிகரமாக முடித்து விட்டது. மைனாரிட்டிக் கட்சியாக இருந்த திமுகவை வீழ்த்தி அஇஅதிமுக முழு மெஜாரிட்டியுடன் ஆட்சிக் கட்டிலில் ஏறி இருக்கிறது.

நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் மட்டுமல்ல. இதற்கு முந்திய மூன்று தேர்தல்களிலும் ஆளுங்கட்சி தோற்கடிக்கப் படுகிறது; எதிர்க்கட்சி அதிகாரத்திற்குக் வந்து விடுகிறது. கடந்த இருபது ஆண்டுகளாக இதுதான் நிலைமை. ஐந்தாண்டுக்கொருமுறை ஆட்சி மாற்றம் தவிர்க்க முடியாத ஒன்று என நினைக்கும் அளவிற்குத் தேர்தல் முடிவுகள் அமைந்து கொண்டிருக்கின்றன. 1991-இல் அஇஅதிமுக; 1996 இல் திமுக. திரும்பவும் 2001 இல் அஇஅதிமுக; 2006 இல் திமுக. இப்போது 2011 இல் மீண்டும் அஇஅதிமுக. மீண்டும் 2016 இல் திமுக விற்கு ஆட்சி அதிகாரம் கிடைக்கும் என்பதாகப் பலரும் கூறுகிறார்கள்; நம்புகிறார்கள். நம்பிக்கை மட்டுமே வாழ்க்கை என நினைப்பது தனிமனித வாழ்க்கைக்குக் கூடப் பொருத்தமானது அல்ல என்றாகிற போது அரசியல் களத்தில் இத்தகைய நம்பிக்கைகளின் இருப்பு எப்படிச் சாத்தியம் என்று தெரியவில்லை. 

ஊடக விமரிசனங்கள்:

2011 பொதுத்தேர்தலின் முடிவுகள் வந்தபின், அஇஅதிமுகவும் அதன் கூட்டணிக் கட்சிகளும் அமோகமான வெற்றியை அடைந்த பின்னும் அந்த வெற்றிகளைப் பற்றிய அலசல்களை விடவும் திமுகவின் தோல்வி குறித்த அலசல்களே அதிகம் நடந்தன; நடக்கின்றன. வெற்றிக்கான காரணங்களைச் சொல்வதைவிடவும் தோல்விக்கான காரணங்களை அலசுவது இந்தத் தேர்தலுக்குப் பின் நடப்பது என நினைக்க வேண்டியதில்லை. 1996 முதல் இதுதான் நடக்கிறது. ஜெ.ஜெயலலிதாவின் முதல் தோல்விக்கு வளர்ப்பு மகன் திருமணமும் வளர்ப்பு மகனைத் தந்த குடும்பத்தினரின் ஆதிக்கமும் காரணங்களாகச் சொல்லப்பட்டன; இரண்டாவது தோல்விக்கு ஊழலும் மனிதாபிமானமற்ற கெடுபிடிகளும் காரணங்களாகச் சொல்லப்பட்டன. 1996 இலும் 2006 இலும் அஇஅதிமுகவை மக்கள் தான் தோற்கடித்தார்கள். எதிர்க் கட்சியான திமுக அதன் பலனை அனுபவித்தது என்பதே ஊடக அலசல்களின் முடிவாக இருந்தன. இப்போது இந்தத் தேர்தலில் திமுகவை மக்கள்தான் தோற்கடித்துள்ளார்கள்; எதிர்க்கட்சியான அஇஅதிமுக பலனை அனுபவிக்கப் போகிறது என்பதே ஊடக அலசல்களின் முடிவுகளாக இருக்கின்றன. தோல்விக்கான காரணங்களை ஊடக விமரிசனங்கள் வரிசைப் படுத்தும்போது, 
· முதல் இடத்தில் இருப்பது குடும்ப அரசியல் அல்லது அரசின் செயல்பாடுகளில் குடும்பத்தின் ஆதிக்கம்.

· இரண்டாவது இடத்தில் இருப்பது குடும்ப உறுப்பினர்களின் ஊழல்.

· மூன்றாவது இடத்தில் இருப்பது குடும்பப் பகையும் சதியும். 

எனப் பட்டியலிடப்படுகின்றன. இன்னும் நான்கு ஐந்து எனப் பட்டியலை நீட்டிக்கும் போதும் குடும்பம் என்னும் முன்னொட்டைச் சேர்த்துக் கொண்டால் பிழையாக ஆகப் போவதில்லை. திமுகவின் ஆட்சி இழப்புக்கும், எதிர்க்கட்சி என்ற தகுதியைக் கூடத் தக்க வைக்க முடியாமல் போன வீழ்ச்சிக்கும் காரணம் திமுகவின் தலைவரும் முன்னாள் முதல்வருமான திரு.மு.கருணாநிதியின் குடும்ப அமைப்பும் அதற்குள் செயல்பட்ட பல்வேறு அதிகார மையங்களுமே காரணங்கள் என விமரிசனங்கள் சொல்கின்றன. தொடர்ந்து அவரது குடும்பத்திற்குள் இருந்ததாக நம்பப்பட்ட அதிகார மையங்களின் செயல்பாட்டை ரகசியச் செய்திகளாகத் தருவதின் வழியாகத் தங்கள் விற்பனையைப் பெருக்கிய புலனாய்வு இதழ்கள் தான் இந்த விமரிசனங்களை முன் வைத்தன. 

இப்போதைய முதல்வர் ஜெ.ஜெயலலிதாவின் முந்தைய தோல்விகளுக்கும் ஒரு குடும்பமே காரணம் எனச் சொல்லப்பட்டது ஜெயலலிதாவின் தோழி சசிகலாவின் குடும்பமும் அவர்களின் மறைமுக அரசியல் செயல்பாடுகளும், சொத்துக் குவிப்பு முயற்சிகளும், பணப் பரிவர்த்தனைகளும் ஜெயலலிதாவின் ஆட்சி அதிகாரத்தை வீழ்ச்சி அடையச் செய்ததாக முன்னர் விமரிசனங்கள் வைக்கப்பட்டன. இனிவரும் காலங்களிலும் அந்தக் குடும்பத்தின் நடவடிக்கைகள் நமது அச்சு ஊடகங்களில் -,குறிப்பாகப் புலனாய்வு இதழ்களில் இரகசியச் செய்திகளாக ஆக்கப்படும் என்பதில் சந்தேகமில்லை. ஆம் அரசியல் குடும்பங்களைப் பற்றிய கிசுகிசுக்களை விவாதிப்பதையே அரசியல் விவாதங்களாக ஆக்கிக் கொண்டிருக்கிறது தமிழின் புலனாய்வு இதழியல். இந்தப் பத்திரிகைகள் தமிழ்நாட்டு அரசியலில் ஏற்பட்ட மாற்றங்களின் பின்னணியில்- கடந்த இருபது ஆண்டுகளாக இந்த இரண்டு குடும்பங்களின் செயல்பாடுகளும் பேராசைகளும் தான் காரணங்களாக இருந்தன எனச் சொல்லி வருகின்றன. இந்தத் தேர்தலுக்குப் பின் இன்னொரு குடும்பத்தை அந்தக் கூட்டத்தில் சேர்த்துக் கொள்ளும். எதிர்க்கட்சித் தலைவர் விஜயகாந்தின் குடும்பம் அரசியல் குடும்பமாக மாறினால் தானே அடுத்து ஆட்சியதிகாரம் கைவரப் பெற்ற குடும்பமாக ஆக முடியும்.


விமரிசனத்திற்குள்ளாகியிருக்கும் “அரசியல் குடும்பங்கள் ” என்ற கலைச் சொல்லின் வரையறையை இந்த அளவில் சுருக்கிக் கொள்வது ஊடகங்களின் தேவை கருதிச் செய்வது என நினைக்கிறேன். ஒரு மாநிலத்தின் ஒன்றிரண்டு குடும்பங்களை அரசியல் குடும்பங்களாக முன்னிறுத்திக் காட்டும் ஊடகங்கள் தமிழகமெங்கும் அமீபாக்களாகப் பரவிக் கொண்டிருக்கும் ஓராயிரத்திற்கும் மேற்பட்ட அரசியல் குடும்பங்களின் செயல்பாடுகளை மக்களின் கவனத்திலிருந்து தப்பிக்க விடும் வேலையைச் செய்கின்றன. தமிழ்நாட்டில் மட்டுமல்லாது இந்தியாவெங்கும் அரசியல் குடும்பங்களை உண்டாக்கும் அமைப்பாக ஜனநாயகத்தின் தேர்தல்முறை உருமாறிக் கொண்டிருக்கிறது. அவற்றின் ஏற்ற இறக்கங்களை இந்த நேரத்தில் நாம் கூடுதல் கவனம் செலுத்தி விளங்கிக்கொள்ள வேண்டியிருக்கிறது. அது எதிர்காலத்தில் உண்டாகப் போகும் அரசியல் குடும்பங்களை உடனடியாக அடையாளப் படுத்தவும், அவற்றின் செயல்பாடுகளைத் தொடக்கத்திலேயே தடுக்கவும் உதவலாம். அல்லது ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை தண்டனை தருவதுதான் ஜனநாயகத்தின் செயல்தளம் என்றால் ஜனநாயகத்தின் போதாமையைப் புரிந்து கொண்டு அதனை விடவும் கூடுதல் திறன் கொண்ட அமைப்பைத் தேர்வு செய்யும் முயற்சியை மேற்கொள்ளவாவது அது பயன்படலாம். 

அரசியல் குடும்பங்கள் : 

தனிமனிதர்கள் ஒவ்வொருவருக்கும் சம உரிமை என்ற ஜனநாயகத்தின் உன்னதச் சொல்லாடல் இந்தியாவில் அனைத்துச் சமூகத்தினருக்கும் அரசியல் அதிகாரத்தில் பங்கு என்பதாக வடிவம் கொண்டு விட்டது. தனிமனிதர் களுக்கான உரிமை என்பதிலிருந்து சமூகக் குழுக்களுக்கு அதிகாரத்தில் பங்கு என ஆகி விட்ட நிலையில் வாக்கு வங்கி அரசியலும் உடன் விளைவாகத் தோன்றியது. தனிமனிதர்கள், தனிமனிதர்களாகவே தங்களுடைய தன்னிலையை அடையாளப்படுத்திக் கொள்வதை விட்டு விட்டு ஏதாவது ஒரு சமூகக் குழுவின் அடையாளத்திற்குள் நுழைந்து கொள்ள வேண்டிய நெருக்கடியை வாக்கு வங்கி அரசியல் உருவாக்கிக் கொண்டே இருக்கிறது. இது ஒருவிதமான நெருக்கடி. அந்த நெருக்கடி புதிய அடையாளங்களோடு கூடிய ஜனநாயக சமூகத்தின் குழு அடையாளமாக இருந்தால் வேறுவிதமான விளைவுகள் ஏற்படும் வாய்ப்புகள் உண்டு. அவ்வாறு நடக்காமல் இந்திய சாதிய சமூகம் ஏற்கெனவே அவர்களுக்குத் தந்திருக்கும் அடையாளமே பாதுகாப்பானது என நம்பும் நிலையை உருவாக்கி சாதிய மனிதனாகவே தொடர வைக்கிறது. அவ்வாறு தொடரும் போது தனது சாதியிலும் சிலபல அரசியல் குடும்பங்கள் இருக்க வேண்டும் என நினைக்க வைக்கிறது. தங்கள் சாதிக்கான அதிகாரத்தைப் பங்கிட்டு வாங்கி விடும் விதமாக எல்லா அரசியல் கட்சிகளிலும் தங்கள் சாதி அரசியல் குடும்பங்கள் நல்லது என நம்புகிறது. சொந்தசாதி அரசியல் குடும்பங்களுக்குள் நடக்கும் போட்டி வெளிப்படையாகத் தெரிவதும் சமரசங்கள் கண்ணுக்குப் புலப்படாமல் ரகசியமாக்கப்படுவதும் கூட நிகழ்கால அரசியலின் சுவாரசியமான சதிகள் தான். நிகழ்கால அரசியல் குடும்பங்கள் புத்தம் புதிதாகத் தோன்றியவை என்பதைவிடவும் அவற்றிற்கு ஒரு வரலாற்றுத் தன்மையும் இருக்கிறது. முதலில் அதை விளங்கிக் கொண்டால் நிகழ்கால இயக்கம் இன்னும் தெளிவாகப் புரியலாம். எனவே வரலாற்றுக்குள் நுழையலாம். 


வட்டார தேசியம்:
பிரிட்டிஷ் கிழக்கிந்தியக் கம்பெனி இந்தியாவிற்கு வருகை தந்த போது இந்தியா என்று ஒரு நாடு இருந்ததில்லை. சில நூறு தேசங்கள் இங்கு இருந்தன. அந்தத் தேசங்களை ஆண்டவர்கள் பொதுவாகத் தங்களை ராஜாக்கள் என அழைத்துக் கொண்டார்கள். அவர்களின் ஆளுகைக்கு உட்பட்ட பகுதிகளை நிர்வாகம் செய்யப் பிரதிநிதிகளை நியமிப்பதுண்டு. அரசரின் ஆட்சிக்கு உட்பட்ட மண்டலத்தின் அதிகாரப் பொறுப்புடையவர் என்ற அர்த்தத்தில் மண்டலாதிபதிகள், பாளையக்காரர்கள் என அவர்கள் அழைக்கப் பட்டனர். தங்களைத் தாங்களே திரிபுவனச் சக்கர வர்த்திகள் என்று அழைத்துக் கொண்ட சில நூறு தேசத்து மன்னர்களையும் பிரிட்டானியக் கிழக்கிந்தியக் கம்பெனி தங்கள் வசம் கொண்டுவர படை வலிமையையும் மூளையையும் ஒருசேரப் பயன்படுத்தியது. அவர்களுக்குள்ளேயே ஒருவரோடு ஒருவரை மோதச் செய்து ஆட்சி அதிகாரத்தைப் பிடித்த கிழக்கிந்தியக் கம்பெனி, அந்த அதிகாரத்தை விக்டோரியா மகாராணியின் கைக்கு மாற்றிக் கொடுத்தது என்பது நாம் படித்த வரலாற்றுப் புத்தகங்களில் இருந்த செய்திகள். 

விக்டோரியா மகாராணியின் அதிகாரத்தின் கீழ் வந்த இந்தியாவை ஆள்வதற்கு பிரிட்டானியர்கள் உருவாக்கிய அமைப்புக்கு ஜமீன்தாரி முறை என்று பெயர். மக்களிடமிருந்த வசூலிக்கும் வரியிலிருந்து இவ்வளவு தொகையைத் தங்கள் பங்காக அனுப்ப வேண்டும் என்ற ஏற்பாட்டுடன் ஜமீன்தார்களின் ஆளுகைக்கு உட்பட்ட பிரதேசத்தில் வரிவசூல் செய்யும் உரிமையை அந்தந்தப் பகுதியில் இருந்த வட்டாரத் தலைவர்களுக்கு வழங்கியது ஆங்கில அரசாங்கம். அதன் மூலம் தங்களின் பகுதிக்குத் தாங்களே அரசர்கள் என்ற எண்ணம் அந்த வட்டாரத் தலைவர்களான ஜமீன்தார்களுக்குத் தொடரும்படி செய்தது. ஒவ்வொரு வட்டாரத்தை ஆண்ட தலைவர்களும் தாங்கள் ஒரு தேசத்தை ஆள்பவர்களாகக் கருதிக் கொண்டதால், ஒட்டு மொத்த இந்திய மக்களைப் பிரிட்டானியர்கள் சுரண்டியதைக் காணத் தவறினார்கள். இந்திய விவசாயிகளின் உற்பத்தி, இங்கிலாந்தின் தொழிற்சாலைகளுக்கான கச்சாப் பொருள்களாக மாறிய பொருளாதாரப் பரிவர்த்தனையைப் பற்றிய விவாதங்களே எழுப்பப்படவில்லை. பின்னர் இந்த விழிப்புணர்வு உண்டாவதற்குக் காரணமாக இருந்தது ஆங்கிலக் கல்வியும், அவர்கள் உண்டாக்கிய நிர்வாக முறைகளும் என்பது சுவாரசியமான முரண். அது தனியாக விவாதிக்க வேண்டியது.

நிகழ்காலக் கூட்டணி அரசுகளின் நிர்வாகம் திரும்பவும் பழைய வட்டார தேசிய உணர்வை உண்டாக்கிக் கொண்டிருக்கிறது.ஒவ்வொரு மாநிலத்தை – வட்டாரத்தை- ஆளும் மாநில அரசும் மாநிலக் கட்சியும் அந்த மாநிலத்தைத் தனி தேசமாகக் கருதிக் கொள்கின்றன. எனவே அதன் எல்லைக்குள் இன்னொரு தேசத்து மக்களுக்கு இடமில்லை என்று கருதத் தொடங்கி விடுகின்றன. ஒரு கட்சி ஆளுங்கட்சியாக இருக்கும்போது இப்படி நினைப்பதைத் தற்காலிகமாகத் தள்ளி வைத்தாலும், எதிர்க்கட்சியாக ஆனவுடன் அப்படித்தான் நினைக்கின்றன. நதிநீர் தாவாக்கள், ரயில்வே கோட்டங்கள், மைய அரசில் இடம் பெற்றுள்ள தங்கள் கட்சி அமைச்சரைக் கொண்டு தங்கள் மாநிலங்களில் தொழிற்சாலைகளை அமைத்தல் எனப் பலவற்றை இங்கே நினைத்துக் கொண்டால் இது புரியலாம். ஒவ்வொரு வட்டாரக் கட்சியும் அந்தந்த வட்டாரத்தைத் தங்களின் சுயாதீனத்திற்கு உட்பட்ட பிரதேசமாகக் கருதுகின்றன. இந்த ஆபத்து அதன் அடுத்த கட்டத்தை நோக்கி நகர்ந்து விட்டதைக் கடந்த இருபது ஆண்டுகளின் பெரும்போக்கு எனச் சொல்லலாம். . 

மையப்படுத்தப்பட்ட அதிகார அமைப்பில் சில மாநில மக்களின் நலன்களும், மாநில அரசுகளின் உரிமைகளும் கண்டு கொள்ளப்படவில்லை; அதிகாரம் பரவலாக்கப் பட வேண்டும்; மேலிருந்து கீழ் நோக்கி அப்பரவல் நகரவேண்டும் என்றெல்லாம் பேசப்பட்டதுண்டு. ஒற்றைக் கட்சியின் ஆட்சி மைய அரசில் இருந்த போது இத்தகைய குரல்கள் தொடர்ந்து எழுப்பப்பட்டன. தேசிய இனங்களின் உரிமைகள், நலன்கள் என்ற சொல்லாடல்களின் வழியாக விவாதிக்கப்பட்ட அவையெல்லாம் இன்று அர்த்தமிழந்து வருகின்றனவோ என்ற ஐயம் தோன்றத் தொடங்கியுள்ளது. ஐயம் தோன்றுவதற்குக் காரணம் மைய அரசாங்கம் பல கட்சிகளின் கூட்டாக மாறிவிட்ட சூழல் தான் என்று சொன்னால் அதிகாரப் பரவலை ஆதரிக்கும் ஜனநாயக ஆதரவாளர்கள் கோபம் கொள்ளக் கூடும். அந்தக் கோபம் நியாயமான கோபமா? ஜனநாயகத்தின் பலவீனத்தை மூடி மறைக்கும் போலியான வாதமா? விவாதிக்க வேண்டிய கட்டத்தில் இருக்கிறோம். 

அதிகாரப் பரவலாக்கம் என்பது இந்திய ஜனநாயகத்தில் எந்தத் தளத்தில் நடக்க வேண்டுமோ அந்தத் தளத்தில் நடக்காமல் வேறு ரூபத்தில் நடந்து கொண்டி ருக்கிறது என்பது உடனடியாகப் புரிந்து கொள்ள வேண்டிய ஒன்று. அரசு நிர்வாகம், அதன் அமைப்புகள், கட்டுப்பாடுகள் , அவற்றிற்கிடையே இருக்க வேண்டிய புரிதல்கள், விட்டுக் கொடுத்தல்கள் என்பனவாக இருக்க வேண்டிய அதிகாரப் பரவலாக்கம் இங்கு தொடங்கவே இல்லை. மாறாக, அரசாங்கத்தை உருவாக்கும் அரசியல் கட்சிகளின் கூட்டு நடவடிக்கைகளால், பலவீனமான அரசுகள் உருவாகி வருகின்றன. மைய அரசாங்கம் மட்டுமே இத்தகைய கூட்டணி அரசியலால் பலவீனமாகத் தோற்றமளிக்கிறது என்று எண்ணி விட வேண்டாம். மாநில அரசுகளே கூட அந்த நிலையில் தான் உள்ளன. உள்ளே இருந்து ஆதரிக்கும் கட்சிகள், வெளியே இருந்து ஆதரவு தரும் கட்சிகள் போன்றவற்றின் நெருக்கடிகளால் அரசு இயந்திரம் தொடர்ந்து தற்காலிக முடிவுகளை எடுக்கிறது. மைய அரசின் தலைமைப் பொறுப்பில் இருக்கும் பிரதமரானாலும் சரி, மாநில அரசுகளின் முதல்வர்களானாலும் சரி இத்தகைய நெருக்கடிகளில் தான் சிக்கித் தவிக்கின்றனர். இந்தியாவின் பல மாநிலங்களில் இது தான் நிலைமை.


இன்று ஒவ்வொரு மாநிலக் கட்சிக்குள்ளும் கூட இந்த வட்டார தேசியம் என்னும் உணர்வு மேலோங்கி வருகிறது. நிர்வாக வசதிக்காக மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டதை அப்படியே ஏற்றுக் கொள்வதைத் தவிர்த்து விட்டு அந்தந்தப் பகுதிகளில் செல்வாக்கோடு இருக்கும் சாதிகளின் தலைவர்களை அந்த வட்டாரத்தின் தலைவர்களாக ஏற்றுக் கொள்வதற்காக மாவட்டங்களே மேலும் சிறிய வட்டாரங்களாகப் பிரிக்கப்படுகின்றன. அதன் மூலம் மேலும் சில சமூகக் குழுக்களுக்கு அங்கீகாரம் தருவதாக நம்புகின்றன. அதன் மூலம் தங்களின் மைய அதிகாரத்தைக் காத்துக் கொள்ளத் தொடங்கியுள்ளன அரசியல் கட்சிகள். அந்தப் பகுதியில் நடக்கும் அரசுத்துறை நியமனங்கள், பணிகள், நிர்வாக நடைமுறைகளை அந்தத் தலைவர்களின் ஒப்புதலுடன் மட்டுமே செய்ய முடியும் என்ற நிலை தோன்றியுள்ளது. அதிலும் ஆட்சி அதிகாரத்திற்கு வரும் மாநிலக் கட்சி குறிப்பிட்ட வட்டாரத்தின் உயர் பதவிகளை வட்டாரத்தலைவரின் ஒப்புதலோடு தான் செய்கிறது என்பது கண்கூடு. 

பொதுத்துறை நிறுவனங்களின் மேலாளர்கள், கூட்டுறவு அமைப்புக்களின் நிர்வாகிகள், பல்கலைக்கழகத் துணைவேந்தர்கள், மாவட்ட, வட்ட ஆட்சித்தலைவர்கள், காவல் துறை அதிகாரிகள் போன்ற அரசு நிர்வாகப் பதவிகளை கட்சிகளின் வட்டாரத் தலைவர்களின் ஒப்புதலோடு செய்வதை அதிகாரப் பரவலாக்கம் எனச் சொல்லுவது ஆபத்தானது. இந்நிலையை அதிகாரப் பரவலாக்கம் என்ற சொல்லால் குறிப்பதை விட அதிகாரத்தைப் பங்கு போடுதல் என்ற வார்த்தையால் குறிப்பதே சரியாக இருக்கும். பரவலாக்கம் புரிந்துணர்வின் வெளிப்பாடு. பங்கு போடுதல் கண்டு கொள்ளாமையின் நிலைப்பாடு. கடந்த ஆட்சியில் மாநில அரசும் அதற்குப் பொறுப்பான திராவிட முன்னேற்றக் கழகமும் கண்டுகொள்ளாமையின் உச்ச வடிவத்தில் செயல்பட்டதை நுட்பமாகக் கவனிப்பவர்கள் அறிந்திருக்கக் கூடும். கட்சியின் ஒவ்வொரு வட்டாரத்தலைவர்களும் அரசின் நலத்திட்டச் செயல்பாட்டின் போதும், வளர்ச்சிப் பணிகளின் போதும் பெற்றுக் கொண்ட தரகை அல்லது பங்கை மைய அமைப்பு கண்டிப்பதற்குப் பதிலாக வரவேற்கவே செய்தது. கட்சியின் அனைத்து மட்டத்தைச் சேர்ந்தவர்களையும் அரசு நிர்வாகத்தின் செயல்பாட்டாளர்களாக மாற்றி - உள்ளாட்சி நிர்வாகத்தின் உறுப்பினர்களாக மாற்றியதன் மூலம் ஒவ்வொரு ஊரிலும் அரசியல் குடும்பங்கள் உருவாக வழி வகுத்தது. இவ்வாறு நிகழ்வது ஜனநாயகத்தில் அதிகாரப் பரவலாக்கம் என்பதாகச் சொல்லப்பட்டாலும் நடந்தது அதிகாரப் பங்கீடு மட்டுமே. ஏனென்றால் ஏற்பட்டவை எதிர்மறை விளைவுகள் மட்டுமே. 

இந்தியா முழுவதும் பரவி வரும் வட்டார தேசிய மனநிலை சமூக நீதியையும் பகுத்தறிவுக் கருத்துக்களையும் அரசியல் கருத்துருவாகக் கொண்ட தமிழ்நாட்டில் புதிய பரிமாணங்களை அடைந்து வருகிறது. தனது குடும்பத்திற்குள்ளேயே நான்கைந்து அதிகார மையங்களைக் கொண்டிருந்த தி.மு.க.வின் தலைவர் திரு.மு. கருணாநிதி தனது அரசியல் தன்னிலையைக் கைவிட்டுக் குடும்பத்தலைவர் என்ற தன்னிலைக்குள் ஐக்கியமான போது ஒவ்வொருவருக்கும் பணரீதியான வசதிகளை உருவாக்கித் தரவேண்டும் என நினைத்த தந்தையாக மட்டும் செயல்படாமல் அரசியல் அதிகாரத்தைத் தரும் கட்சியையும் பாகப் பிரிவினை செய்வது போலச் செயல்பட்ட நிலையில் விளைவுகளும் பல தளங்களில் ஏற்பட்டன. ஒரு மகனுக்கு வட தமிழ்நாடு; இன்னொரு மகனுக்கு தென் தமிழ்நாடு என்னும் முடிவுகளை எடுத்துக் கட்சியின் வட்டாரத்தலைவர்களை ஏற்றுக் கொள்ளச் செய்தது மட்டுமல்லாமல். அவற்றுக்குள்ளும் ஊடுருவல் நடத்தும் சகோதர யுத்தங்களின் ரகசியமே கட்சியின் செயல்பாடாக ஆக்கப்பட்டது. 

கட்சித் தலைமையின் குடும்பத்தை அதிகாரப் பீடமாக அங்கீகரித்த வட்டாரத்தலைவர்களான கட்சிக்காரர்கள் மையக் குடும்பத்தின் அதிகாரப் போட்டிக்குள் தங்களை அடையாளப் படுத்திக் கொள்ளத் திணறிய அதே நேரத்தில் தங்கள் வட்டாரத்தில் தங்கள் குடும்பம் அரசியல் குடும்பமாக வளர்ச்சி பெறுவதில் கவனம் செலுத்தவும் தவறவில்லை. அரசியல் வளர்ச்சித் திட்டங்களை நடைமுறைப் படுத்துவதற்குப் பினாமிகளை உருவாக்கிக் கொண்டார்கள்; நலத்திட்டங்களின் போது பயனாளர்களிடம் தரகுத் தொகையைப் பெற்றுத் தர ஏற்பாடுகளைச் செய்து கொண்டார்கள். அரசுப் பணிகளை உருவாக்கி நியமனம் செய்ய ஏற்பாடு செய்து லஞ்சம் வாங்கிக் கொண்டு அரசியல் அதிகாரம் நிரம்பியவர்களாக வலம் வந்தார்கள். பொதுத்துறையின் தேவைக்கேற்பப் பணி நியமனங்கள் செய்யப் படாமல் அரசியல் குடும்பங்களின் வருமானப் பெருக்கத்திற்காகவே பணியாளர் நியமனங்கள் நடந்தன. எல்லாவற்றிலும் மையக் குடும்பத்தில் இருக்கும் அதிகார மையங்களுக்குப் பங்கு போகிறது என்ற கருத்தோட்டத்தையும் உருவாக்கினார்கள். அதில் உண்மையும் இருக்கலாம். இந்த இணை அரசியல் செயல்பாடு ஒருவிதத்தில் பாளையக்கார முறையிலும் ஜமீன் தாரி முறையிலும் இருந்த தன்மை தொடர்கிறது என்பதைச் சுட்டிக் காட்ட வேண்டியுள்ளது. மைய அமைப்பு வட்டாரங்களைத் தங்கள் நேரடிப் பொறுப்பிலிருந்து கைகழுவி விடும் தன்மையைக் கட்சிக்குள் தொடங்கிய கட்சி நிர்வாகம், அரசு நிர்வாகத்தை கட்சியின் நிர்வாகத்திற்கு ஒத்துப் போகும்படியான ஏற்பாடுகளையும் மறைமுகமாகச் செய்தது என்பதும் யதார்த்தம். 


வட்டார தேசியம் என்னும் கருத்தியல் பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் இருந்தது போலவே இப்போதும் இருக்கிறது என்று தோன்றினாலும் ஜனநாயக இந்தியாவில் அதற்கு வேறு ஒரு முகம் உண்டு. ஒவ்வொரு மாநிலத்திற்குள்ளும் இயங்கும் பல்வேறு வட்டாரத்தலைவர்கள் தங்களையே ராஜாவாக- முழு அதிகாரம் கொண்ட தலைவர்களாக நினைத்துக் கொள்வதில்லை. அதற்கான காரணம் நேரடியாக, படைகளை உருவாக்கிக் கொள்ளவோ, வரிவசூல் நடத்தித் தங்களின் நிதி ஆதாரங்களைப் பெருக்கிக் கொள்ளவோ அவர்களுக்கு வழிவகை இல்லை. அந்த அதிகாரம் அரசு அமைப்புகளிடம் தான் இருக்கிறது. ஆனால் அரசு பெருக்கித் தரும் நிதி ஆதாரங்களைச் செலவு செய்யும் முறையில் இவர்கள் நுழைய இடம் இருக்கிறது. மாவட்ட, வட்ட, பஞ்சாயத்து நிர்வாகத்தை நடத்தும் அரசு அதிகாரிகள் மக்கள் பிரதிநிதிகளின் பரிந்துரைக்கு மதிப்பளிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள். அதன் வழியாக மக்கள் பிரதிநிதிகளே நிர்வாகத்தில் முக்கியமானவர்களாகக் காட்டிக் கொள்ள முடியும். எனவே அரசின் நிதியைப் பயன்படுத்தி செய்த வளர்ச்சித் திட்டங்களையும் சமூக நலத்திட்டங்களையும் தங்கள் சாதனைகளாகக் காட்டிக் கொள்ள முடிகிறது. 

அவர்களின் சாதனைகள் பல நேரங்களில் வேதனைகளாக மாறி விடுகின்றன. எல்லோருக்கும் பலனளிக்கும் திட்டங்களைப் பரிந்துரை செய்வதற்குப் பதிலாகத் தங்களுக்கு வருவாய் உண்டாக்கும் விதமான திட்டங்களையே பரிந்துரை செய்கிறார்கள். அதனால் அவர்கள் மீது- வட்டாரத்தலைவர்கள் மீது அதிருப்தியும் எதிர்மறைக் கருத்தும் உருவாகிறது, ஆனால் இவையெல்லாம் நேரடியாக அவர்களைப் பாதிக்காதவாறு மைய அமைப்பிற்கு மடை மாற்றும் வாய்ப்பு உண்டு. ஓர் ஊராட்சிமன்றத்தலைவரின் செயல்பாட்டிற்கும் நகராட்சிக் கவுன்சிலரின் செயல்பாடின்மைக்கும் பொறுப்பு அப்போது ஆட்சியிலிருக்கும் அரசே காரணமாக ஆக்கப்படுகிறது. மக்கள் நலத்திட்டங்கள் பலவற்றைச் செய்த போதிலும் மக்கள் தம்மை நிராகரித்து விட்டதாக திமுக அரசும் அதன் தலைவரும் கருதும் வேதனையின் பின்னணியில் இருப்பது இத்தகைய நிர்வாகப் பிரச்சினைகள் தான்.


திமுக அரசின் அதிகார மையங்களாகக் கருதப்பட்ட திரு.மு.கருணாநிதியின் குடும்பம் மகாப் பெரும் பணக்காரக் குடும்பமாக ஆனது போல் ஒவ்வொரு வட்டாரத்திலும் உருவான அரசியல் குடும்பங்களின் பணப்பெருக்கம், அதிகார முறைகேடு, சொத்துக் குவிப்பு போன்றன வாக்காளர்களின் கண் முன்னால் தெரியும் உண்மை. அதனால் ஏற்பட்ட அதிருப்தியும் கோபமும் அவர்களைத் தண்டிக்கும் நோக்கத்தோடு மாற்றி அளிக்கும் வாக்காக – எதிர்வாக்காக மாறியது. எதிர்மறை வாக்குகள் உள்ளூர் மற்றும் வட்டார அரசியல் குடும்பங்களுக்கு ஏற்படுத்தும் பாதிப்பை விட மைய அமைப்பான கட்சிக்கும் அதன் தலைமைக்குமே அதிகப் பாதிப்பை ஏற்படுத்தும். 


அத்துடன் தமிழ்நாட்டில் திமுகவும் அ இஅதிமுகவும் வயதான கட்சிகளாக ஆகிக் கொண்டிருக்கின்றன. அக்கட்சிகளின் பொறுப்புகளில் புதிய குடும்பங்களும் புதிதாக அரசியல் ஆசையுடன் நுழைய விரும்பும் இளைய தலைமுறைக்கும் நுழைவதற்கான வாசல்கள் தொடர்ந்து அடைக்கப்படுகின்றன. ஏற்கெனவே அரசியல் குடும்பங்களாக ஆகி விட்டவர்களின் வாரிசுகள் மட்டுமே அங்கு நுழைந்து அதிகாரத்தின் கண்ணிகளைக் கைப்பற்ற முடிகிறது. கட்சி அமைப்புகளின் திறவுகோல்கள் தமக்குக் கிடைக்காது என முடிவு செய்யும் அடுத்த தலைமுறை புதிதாக ஆரம்பிக்கும் கட்சிகளை நாட வேண்டியுள்ளது. தமிழ்நாட்டில் அவ்வாறு கட்சிகளைத் துவக்குபவர்களாக இருப்பவர்கள் விஜயகாந்த், சரத்குமார், கார்த்திக் ( விஜய்) போன்ற திரைப்படப் பிம்பங்களாகவும் தங்கள் சாதிகளுக்கு அரசதிகாரத்தில் உரிய பங்களிப்புக் கிடைக்கவில்லை என்பதைச் சொல்லிக் கூட்டம் சேர்க்கும் சாதிய அமைப்பின் பிரபலங்களாகவும் இருக்கிறார்கள். அவர்கள் முன் வைக்கும் கொள்கைகள், திட்டங்கள், நோக்கங்கள் பற்றியெல்லாம் கவலைப்படாமல் அரசியல் அதிகாரத்தைப் பெற்றுவிடும் ஆசையில் அடுத்தத் தலைமுறை அவர்களின் பின்னால் போகிறார்கள்.


தி.மு.க. தலைமைக்கு இந்தத் தேர்தலில் ஏற்பட்ட பாதிப்பு இனிவரும் தேர்தலில் இப்போதைய ஆளுங்கட்சிக்கும் ஏற்படப் போகும் ஒன்று தான். அதைத் தடுக்க நினைக்கும் ஒரு தலைமை அல்லது கட்சி ஒவ்வொரு வட்டாரத்திலும் உருவாகும் அரசியல் குடும்பங்களைக் கண்காணிக்கும் அமைப்பை உருவாக்க வேண்டும்; கட்டுப்படுத்த வேண்டும். அதற்கு முதலில் தங்கள் கட்சி அமைப்புகளை ஜனநாயக முறைப்படி நடக்கும் அமைப்புகளாக மாற்றிக் கட்டி அமைக்க வேண்டும். ஏற்கெனவே இருக்கும் அரசியல் குடும்பங்களின் ஆதிக்கம் தொடரும் வாய்ப்பை மறுத்துப் புதிய வாசல்களைத் திறக்க வேண்டும். இது மாநிலக் கட்சிகளின் நிலை என்று நினைத்தால் குடும்ப அரசியலின் ஆதி அடையாளமான காங்கிரஸ் தான் முதல் இழப்பை அடையும் கட்சியாக இருக்கும் என்பதைத் தனியாகச் சொல்ல வேண்டியதில்லை.


இவையெல்லாம் நடக்கவில்ல்லையென்றால் ஒவ்வொரு ஐந்தாண்டுக்குப் பின்னும் வாக்குச் சீட்டு வழியான தண்டனை மட்டுமே கிடைக்கும் எனச் சொல்ல முடியாது. உலகின் பல பாகங்களில் அரசியல் குடும்பங்கள் பலவற்றிற்கு ஏற்பட்ட நிலை இந்தியாவிலும் ஏற்படாது என உறுதியாக எப்படி நம்ப முடியும்.
==================================================== 
நன்றி : உயிர்மை, ஜூன் ,2011

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கிஷ்கிந்தா காண்டம்- குற்றவியலும் உளவியலும்

உடல் மறுப்பு என்னும் பெரும்போக்கு

விடுப்புக்கொள்கை (VACATION POLICY ) மறுபரிசீலனைகள்