கொழும்பு சர்வதேசத் தமிழ் எழுத்தாளர்கள் மாநாட்டை நிராகரிக்கிறோம் : சர்வதேசத் தமிழ் எழுத்தாளர்கள் கலைஞர்கள் கூட்டறிக்கை வரலாறு நெடுகிலும் படைப்பாளிகள் , கலைஞர்கள் ஒடுக்குமுறைக்கு எதிராகவும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவாகவுமே சார்புநிலை எடுத்திருக்கிறார்கள். ரஷ்யப் புரட்சியைச் சாட்சியமாக இருந்து கண்டு சொல்ல , அமெரிக்க எழுத்தாளர் ஜோன் ரீட் மொஸ்கோ சென்றார். ஸ்பானிய உள்நாட்டு யுத்தத்தில் குடியரசுவாதிகளுக்கு ஆதரவாகச் சார்புநிலையெடுத்து , அவர்களுக்காகப் போராட ஸ்பெயினுக்கு விரைந்தனர் எர்னஸ்ட் ஹெமிங்வே , ஜோர்ஜ் ஓர்வெல் , கிறிஸ்ரோபர் கோட்வெல் போன்ற படைப்பாளிகள். வியட்நாம் மக்களுக்கு ஆதரவாக , அமெரிக்க ஒடுக்குமுறைக்கு எதிராகத் தெருவில் இறங்கிப் போராடினார்கள் தத்துவவாதிகளான பேர்ட்ரண்ட் ரஸ்ஸல் , ழீன் போல் ஸார்த்தர் போன்றோர்.