• இந்திரா பார்த்தசாரதியோடு ஒரு நேர்காணல்:

இப்போதும் ஓர் இளைஞனின் துடிப்புடன் எழுதுக் கொண்டிருக்கும் இ.பா ., சமகாலத்தமிழ் இலக்கிய வகைகள் எல்லாவற்றிலும் தன்னுடைய அடையாளத்தைப் பதிக்கும் வகையில் படைப்புகளைத் தந்தவர். மரபான தமிழ் இலக்கியக் கல்வியைக் கற்றிருந்தாலும், இந்திய இலக்கியம் என்னும் எல்லைக்குள் வைத்து அதனைப் புரிந்து கொள்வதும், விளக்குவதும் அவசியம் என்னும் கருத்தோட்டம் அவரது தனி அடையாளம். அதன் வழியாகவே தமிழ் இலக்கியம் உலக இலக்கியப் பரப்பில் தனக்கான இடத்தை அடைய முடியும் என்பதைத் தொடர்ந்து வலியுறுத்தி வருபவர்.
இந்திய சமூகத்தின் அடிப்படைச் சிக்கலான சாதிய முரணும் அதற்குள் செயல்படும் வன்முறையான கருத்தியலும் இ.பா.வின் படைப்புகளில் விமரிசினத்துக்குள்ளாக்கப் படும் முக்கிய மையம். இந்திய அரசின் உயர்ந்த இலக்கிய அமைப்பான சாகித்திய அகாடெமியின் விருது அவருக்குக் கிடைக்கக் காரணமான குருதிப்புனல் நாவலும், பிர்லா பௌண்டேஷன் வழங்கும் சரஸ்வதி சம்மான் விருது கிடைக்கக் காரணமான இராமானுஜர் நாடகமும் சாதிய முரணை மையப் படுத்திய படைப்புகள் என்பதை இங்கே நினைவில் கொள்ளலாம்.

நவீனத்தமிழ் நாடகப் பிரதிகளை எழுதியதோடு, புதுச்சேரிப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாடகப் பள்ளியைத் தொடங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி நிறைவேற்றிக் காட்டிய இ.பா.வின் அரங்கியல் பணிகளுக்காக இந்திய அரசின் இன்னொரு கலை அமைப்பான சங்கீத நாடக அகாடெமியும் தனது விருதைத் தந்து பாராட்டியுள்ளது. தமிழ்ப் படைப்பாளிகளில் சாகித்திய மற்றும் சங்கீத நாடக அகாடெமி விருதுகளைப் பெற்ற ஒரே எழுத்தாளர் இந்திரா பார்த்தசாரதி மட்டுமே. நண்பர்களோடும் உறவினர்களோடும் தனது எண்பதாவது பிறந்த நாளைக் கொண்டாடிய இந்திரா பார்த்தசாரதிக்கு மணற்கேணி, உயிர்மை பதிப்பகத்துடன் இணைந்து ஒரு மாலைப் பொழுதில் விழா ஒன்றை ஏற்பாடு செய்தது. அதற்குப் பின் அவரிடம் எடுக்கப்பட்ட நேர்காணல் இது
========================================================================

சொந்த ஊரான கும்பகோணத்திலிருந்து படிப்பு காரணமாகவும் வேலை காரணமாகவும் இந்தியாவின் சில நகரங்களிலும், அயல் தேசத்து நகரங்களிலும் வாழ்ந்திருக்கிறீர்கள். அந்தப் பின்னணியில் எல்லாம் எழுதவும் செய்திருக்கிறீர்கள். வாழ நேர்ந்த நகரங்களில் எந்த அம்சங்கள் உங்களை எழுதும் படி நிர்ப்பந்தம் செய்தன என்பதை விளக்க முடியுமா?

நான் சென்னையில் பிறந்தேன் என்றாலும், படிக்கத் தொடங்கியதும், வளர்ந்ததும் கும்பகோணத்தில். சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் முதுகலைப் பட்டம். பணி நிமித்தம் இருந்த ஊர்கள், திருச்சி, தில்லி, வார்ஸா(போலந்து), புதுச்சேரி. இந்நகரங்களில் என் உள்ளுணர்வுகளுடன் நெருங்கி உறவாடிய நகரங்கள், கும்பகோணம், தில்லி. ஆகவேதான், என் பெரும்பன்மையான கதைகள் தில்லியிலும், அடுத்த நிலையில், தஞ்சாவூர் மாவட்டத்திலும் நிகழ்கின்றன.
குடந்தையில் அக்கிரகாரத்தில் வளர்ந்த எனக்கு, தில்லியில் நான் கண்ட மத்தியதர வர்க்கத் தமிழர்களின் இரட்டை முகங்களும், போலி ஆசார மதிப்பீடுகளும் புதிய அநுபவமாகப் படவில்லை. சொல்லப் போனால், உலகமெங்கும் பரவியிருக்கும் தமிழர்கள், எச்சாதியனராக இருந்தாலும் சரி, எங்குச் சென்றாலும், தங்கள் ‘கலாசாரப் பொதிகளைச்’ (cultural cargo) சுமந்து செல்ல மறப்பதில்லை. வாஷிங்டனில்( அமெரிக்கா) ஏற்கனவே ஒரு பெரிய ஹிந்து கோயில் இருந்த போதிலும், முருகன் கோயில் உருவாவதற்குக் காரணங்கள் யாவை என்று ஆராயும்போது இது புலப்படும்.
வார்ஸாவில் நான் ஐந்தாண்டுகள் இருந்தேன். மார்க்ஸியத்தில் ஈடுபாடு கொண்ட எனக்குக் கம்யூனிஸ நாடாகிய போலந்தில் பல அரசியல் கோட்பாட்டு அதிர்ச்சிகள் ஏற்பட்டன.நான் 1981ல் வார்ஸா சென்றேன். ’86 வரை ஐந்தாண்டுகள் இருந்தேன். ஐந்தாண்டுகளும் ராணுவ ஆட்சி. காரணம், தொழிலாளர் சர்வாதிகாரம்( Dictatorship of the proletariat) என்று மார்கஸ் கனவு கண்ட கம்யூனிஸ்ட் ஆட்சியில், தொழிலாளர்களே அரசாங்கத்துக்கு எதிராகப் புரட்சி செய்தார்கள். ஹங்கேரியிலும்(1956), செக்கஸ்லோவோகியா (1968) விலும் கம்யூனிஸ்ட் ஆட்சிக்கு எதிராக ஏற்பட்ட கிளர்ச்சிகளுக்குக் காரணமானவர்கள் அறிவு ஜீவிகள். ஆனால், போலந்தில் கம்யூனிஸத்துக்கு எதிர்க்குரல் எழுப்பியவர்கள், பெரும்பாலும் தொழிலாளர்கள். இந்த முரண்பாடு என்னைச் சிந்திக்கத் தூண்டியது. போலந்தில் நான் கண்ட இன்னொரு முரண்பாடு, கார்ல் மார்க்ஸும், ஏசுநாதரும் கைக் குலுக்கிக் கொண்டு நின்றதுதான். மாபெரும் கம்யூனிஸ்ட் காரியாலயம் கட்டிய ஆட்சிதான், செயின்ட் பீட்டர் கத்தீட்ரலையும் கட்டியிருந்தது!
இதுவே என்னை, “ஏசுவின் தோழர்கள்’ எழுதத் தூண்டியது.

இந்த வரிசையில் புதுச்சேரி நகரமும் அந்தக் காலகட்டமும் தங்கள் எழுத்தில் பதிவாகாமல் போனதின் காரணங்கள் என்ன?

நான் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் படித்த போது (!949-’51) புதுச்சேரிக்குச் சென்றிருக்கிறேன். அப்பொழுது நான் கண்ட புதுச்சேரி வேறு விதமாக பிரஞ்சு அடையாளங்களுடன் இருந்ததுபோல என் நினைவு. இப்பொழுதுள்ள புதுச்சேரி, தென்னார்க்காட்டின் விரிவாக்கம். இது என் மனத்தில் பெரிய பாதிப்பு எதையும் ஏற்படுத்த வில்லை. எது சிறந்தது என்கிற மாதிரி நான் எந்த மதிப்பீட்டையும் முன் வைக்கவில்லை என்பதையும் கூற விரும்புகிறேன்.

நீங்கள் புதுச்சேரியில் இருந்த காலகட்டத்தில் தமிழ் அறிவுலகத்தில் –இலக்கியம் சார்ந்த அறிவுலகத்தில் வெளிப்பட்ட கருத்துக்கள் வளர்நிலையில் தொடர்வதாக நினைக்கிறீர்களா? அடையாளம் சுட்டி விளக்க முடியுமா? தொடரவில்லை என்று நினைத்தால் காரணங்களாக நீங்கள் நினைப்பவை என்ன?

தமிழ் இலக்கிய அறிவுலகம் தேக்கமுறவில்லை என்பதுதான் என் கணிப்பு. ‘வளர்ச்சி’ என்பதைக் காட்டிலும் ‘மாற்றம்’ என்று சொல்வதுதான் எனக்குப் பொருத்தமாகப் படுகிறது.மாற்றம் என்பது இயற்கையின் நியதி.. அது தொடர்ந்து கொண்டிருப்பதாகத்தான் நான் நினக்கின்றேன். 1988ல், தில்லி யிலிருந்து புதுச்சேரி (கலாசார ரீதியாகத் தமிழகந்தான்0 பல ஆச்சர் யங்ககள் காத்திருந்தன காலம் காலமாகச் சமூக ஒடுப்புக்கு ஆளாகி, ஸ்தாபனத்துக்கு (Establishment) எதிராகக் கலகக் குரல்கள் எழுப்பிய இளைஞர்கள் அனைவரும், அறிவு பூர்வமாகவும், விசாலப் பார்வையுடனும் பிரச்னைகளை அணுகி, திராவிடப் பாரம்பரியம் போல் மொழி சர்க்கஸ் வித்தைகளில் தங்களை இழந்துவிடாமல், ஆழமான சிந்தனையை விவாத அரங்கில் முன் வைத்ததுதான். ‘நிறப் பிரிகை’ போன்ற அப்பொழுது வந்து கொண்டிருந்த சிறு பத்திரிகைகள் இதற்கு எடுத்துக் காட்டாக இருந்தன.
இந்த ‘மாற்றம்’ என்பது, காலத்துக் கேற்றவாறு வடிவம் கொள்ளும். தேங்கிவிடாது. நாமும் ஒரு குறிப்பிட்ட காலத்து சிந்தனை மரபோடு தேங்கிவிட்டபோதுதான், புதிதாக ஏற்பட்டு வரும் மாற்றங்களை நம்மால் அடையாளம் காண முடியாமல் போய்விடுகிறது. அதனால்தான் ஓர் அறிவு ஜீவி தன்னைத் தொடர்ந்து புதுப்பித்துக் கொண்டே இருக்க வேண்டும்.

ஒரு வாசகராகவும் எழுத்தாளராகவும் கடந்து வந்துள்ள நீண்ட பயணத்தில் தமிழ் இலக்கிய உலகம் வீச்சுடன் செயல்பட்ட காலகட்டம் என எதனைக்கருதுகிறீர்கள்? ஏன்?
என்னைப் பொருத்த வரையில்,இன்றும் முழு வீச்சுடன் செயல்பட்டு வருவ தாகத்தான் நினைக்கின்றேன். ஒரு காலத்தில் சிறு பத்திரிகைகள் மட்டுந் தான் இதற்கு அளவு கோலாக இருந்தது. இப்பொழுது, கணினியில் வரும் இணைய மடல்களையும், பத்திரிகைகளையும் வைத்துப் பார்க்க வேண்டும்.

அரை நூற்றாண்டுக்கால இலக்கிய வாழ்க்கையில் நீங்கள் தீவிரமாக இயங்கிய கால கட்டமாகக் கருதுவது எந்தக் காலகட்டத்தை? அதற்கான அகக் காரணிகள் எவை? புறக்காரணிகள் எவை?

நான் எழுதத் தொடங்கிய காலத்தில் கையால்தான் எழுதியாக வேண்டியிருந்தது.கம்பன் எழுத்தாணி கொண்டு சுவடிகளில் எழுத வேண்டி யிருந்த நிர்ப்பந்தம். கம்பனுக்குக் கணினி வசதி இருந்திருந்தால பாரதமும் பாடியிருப்பான்என்றுதான்நினைக்கின்றேன்.நான்எட்டாண்டுகளாகக் கணினியில் எழுதி வருகிறேன்.கூடி வரும்வயது என்னை அதிகம் பாதிக்கவில்லை என்றுதான் எனக்குப் படுகிறது. போன நூற்றாண்டு ஐம்பதுகளிலேயே கணினி வசதி இருந்திருந்தால் நான் இன்னும் அதிகம் எழுதியிருக்கலாமென்று தோன்றுகிறது

எதிர்காலத் தமிழ் இலக்கியம் உங்களை எவ்வாறு நினைத்துக் கொள்ள வேண்டும் எனக் கருதுகிறீர்கள்? சிறுகதை ஆசிரியராகவா? நாவலாசி ரியராகவா?  நாடகாசிரியராகவா? கட்டுரைகள் எழுதியவராகவா?
 படைப்பாளியாக.

தொடக்க நிலையில் மேற்கத்திய இருத்தலியவாதத்தின் சாராம்சங்களை நாடகமாக ஆக்கிய நீங்கள், பின்னர் இந்திய/ தமிழ் அடையாளங்கள் கொண்ட அரங்கியல் மரபுக்கேற்ற பிரதிகளைகொங்கைத்தீ, ராமானுஜர், இறுதியாட்டம் போன்ற பிரதிகளை உருவாக்கினீர்கள். அந்தப் பிரதிகளை உருவாக்கிய போது நீங்கள் திசைமாறுவதாக உணர்ந்தீர்களா?

இருத்தியல்வாதம்’ போன்ற பெயர்ப் பட்டயங்களை நான் விரும்புவ தில்லை. ‘படைப்பாளி படைக்கிறான்: விமர்சனப் பாதிரி பெயர் சூட்டுகிறான்” என்றார் ஜி.கே.செஸ்டர்டன். ‘இருத்தியல் வாதத்தில்’ கூறப்படும் பிரச்னைகள் என்றுமே இருந்து வருகின்றன. ‘உறவினர்களை எதிர்த்துப் போராடுவதா சரியா தப்பா?’ என்பது விஜயனின் ‘இருத்தியல் வாதப் பிரச்னை. ‘இருப்பதா இறப்பதா?’ என்பது ஹாம்லெட்டின் ‘இருத்தியல்வாத’ப் பிரச்னை. ஆனால் வியாசரோ அல்லது ஷேக்ஸ்பியரோ ஹஸ்ரல், கீர்க்க கார்ட், சாத்ரே ஆகியவர்களைப் படித்திருக்க வாய்ப்பில்லை. பிரச்னையைப் பிரச்னையாகவே சொன்னார்கள்.
தொன்மம் , வரலாறு பற்றிய என் நாடகங்கள் ,சமகாலப் பார்வை என்ற அடிப்படையில், இயல்பான தொடர்ச்சியாகத்தான் நான் கருதுகிறேன். திசை மாறியிருப்பதாக எனக்குத் தோன்றவில்லை.

இந்த நாடகங்களை மேடையேற்றிய போது பார்வையாளர்கள் எப்படி உள்வாங்கினார்கள்? குறிப்பாக இந்தியாவின் அடிப்படைப் பிரச்சினையான சாதியவாதத்தின் மீது விமரிசனங்களை வெளிப்படுத்திய நந்தன் கதை, ராமானுஜர் போன்றன எவ்வாறு எதிர்கொள்ளப்பட்டன?

அறிவு சார்ந்த கலைப் படைப்புக்கள் தமிழ் நாட்டில் பரந்த அளவில் போய் மக்களைச் சேர்வதில்லை. நாடகங்களைப் பார்க்க வருகின்றவர்களும் நாடக ஆசிரியரின் கருத்துக் களொடு உடன்படுகின்றவர்கள்தாம். ‘நந்தன் கதை’ ஹிந்தியில் போடப்பட்ட போது, லக்னௌவில் எதிர்ப்பு இருந்ததாக பி. வி. கரந்த் சொன்னார். தமிழ் நாட்டில் சமூகச் சீர்திருத்த இயக்கங்கள் வெகு காலமாகவே செயல் பட்டு வர்வதும் இதற்குக் காரணமாக இருக்கலாம்.
“ராமாநுஜர்’ எழுத்துப் பிரதிக்கு ஸ்ரீரங்கத்தில் வைணவ வைதிக பிராமணர்களிடையே பலத்த எதிர்ப்பு இருந்தது. இந்நாடகத்துக்கு ‘சரஸ்வதி சம்மான்’ கொடுக்கக் கூடாது என்று பிர்லா ஃ பௌண்டேஷனுக்குக் கடிதம் அனுப்பினார்கள்.

தமிழர்கள் – திராவிட இயக்கம் சார்ந்த தமிழர்கள் கொண்டாடும் சிலப்பதிகாரத்திலிருந்து உருவாக்கப்பட்ட கொங்கைத்தீ எவ்வாறு எதிர்கொள்ளப்பட்டது?

‘திராவிட இயக்க்ம் சார்ந்த தமிழர்கள் கொண்டாடும் சிலப்பதிகாரம்’ என்று நீங்கள் சொல்வது எனக்கு உடன்பாடில்லை. ‘சிலப்பதிகாரத்தை’ முதன் முதலில் பதிப்பித்த டாக்டர் உ.வே.சா திராவிட இயக்கம் சார்ந்தவர் அல்லர். சிலப்பதிகாரத்தை ‘பைத்தியக்காரக் கற்பனைகளும் மூட நம்பிக்கைகளும் ந்றைந்த அபத்தக் களஞ்சியம்’ என்று சித்திரித்த பெரியார் திராவிட இயக்கம் சார்ந்தவர்.தமிழ் இலக்கிய ஆர்வலர்கள் அனைவருக்கும் சொந்தமானது சிலப்பதிகாரம். ‘கொங்கைத் தீ ‘இரண்டு தடவைகள்தாம் மேடை ஏறியிருக்கிறது , கடந்த இருபத்தொன்று ஆண்டுகளில். தமிழ் நாடக உலகச் சூழ்நிலையைப் பற்றி வேண்டுமானால் பேசலாம்.

உங்களுக்குப் பிடித்த படைப்பாளி சேக்ஸ்பியர் எனப் பல தடவை சொல்லியிருக்கிறீர்கள். அவரின் கிங் லியரையும் டெம்பஸ்ட்டையும் தழுவித் தமிழில் எழுதினீர்கள். இவ்விரு நாடகங்களையும் விட உங்களுக்குப் பிடித்த நாடகம் மேக்பத் என்பதும் நீங்கள் சொன்னதுதான். எப்போது அதனைத் தமிழில் தரப்போகிறீர்கள்.
சேக்ஸ்பியரையோ ஐரோப்பிய இலக்கியப் படைப்பு ஒன்றையோ தமிழில் தழுவி எழுதும் போது எந்த அம்சத்தை முக்கியமாகக் கருதுகிறீர்கள்?

தமிழர்களுக்கு அதன் கதைக் கருவோ, கதா பாத்திரங்களோ அந்நியப்பட்டுப் போகக் கூடாது. ஷேக்ஸ்பியரை அறியாத தமிழ்ப் பார்வையாளர்களால் கூட, ‘இறுதி ஆட்ட’த்துடன் தங்களை அடையாளம் காண முடிந்தது காரணம்,கதைக் கரு,அது தமிழில் சொல்லப்பட்ட விதம். ‘மனோகரா” (சம்பந்தம் முதலியார்) ‘ஹாம்லெட்’ கதையானாலும் தமிழ்க் கதையாகி விட்டது. காரணம், மனைவி சோரம் போகவில்லை. கணவனுக்குத்தான் இன்னொரு மனைவி! தமிழர்களுடைய magnificent obsession ஆகிய பெண்ணின் கற்பு காப்பாற்றுப்பட்டு விட்டது. அதுவே அந்நாடகத்தின் வெற்றிக்குக் காரணம். சம்பந்தம் முதலியார் ஹாம்லெட் டைத் தழுவி, ‘அமலாதித்தன்’ என்ற ஒரு நாடகம் எழுதினார். அது வெற்றிப் பெறவில்லை.

தமிழக அரசியல் தளத்திலும் அறிவுத்தளத்திலும் இன்னும் வலுவாக இருந்து கொண்டிருக்கும் பிராமணர்- பிராமணர் அல்லாத முரண்பாட்டின் தேவை அல்லது தேவையின்மையை எப்படி மதிப்பிடுகிறீர்கள்?

பிராமணியம் என்பது அதிகார மையத்தின் குறியீடு. ஒரு காலத்தில் பிறப்பினால் பிராமணன் யார் என்று நிர்ணயம் ஆகிப் பலனடைந்து, சமூக ஏணியின் உச்சியில் இருப்பவர்கள், பிறப்பினால் இத்தகுதியைப் பெறாதவர்கள் அதிகாரப் பலன்களைத் தங்களுடன் பகிர்ந்து கொள்வதை விரும்பவில்லை.. அந்தக் காலத்திலிருந்தே இந்தப் போட்டி, அறிவுத் தளத்தில் இருந்து வந்திருக்கிறது. பிராமணராகிய வசிஷ்டர் க்ஷத்திரியராகிய தம்மை ‘பிரும்ம ரிஷி’ (பிராமணர்) என்று சொல்ல வேண்டுமென்று விஸ்வாமித்திரர் விரும்பி வெற்றியும் பெறுகிறார். ஆனால், அவரே, இன்னொரு க்ஷத்திரியராகிய அர்ச்சந்திரனுக்குச் சொல்லொணா வேதனையைத் தருகிறார்.

அதிகார ஏணியில் மேற் படியில் இருப்பவர்கள், கீழ்ப் படியில் இருப்பவர்களை எட்டி உதைக்க விழைவது, விலங்கினப் பாரம்பரியத்தினால் மனிதன் பெற்ற சீதனம். அரசியல், அறிவுத் தளங்களில் காணும் முரண்பாடுகளை என்னால் இப்படித்தான் புரிந்து கொள்ள முடிகிறது. அதிகார மையத்தை நோக்கிச் செல்லும் எலிப்பந்தய ஓட்டங்களில் ஈடுபடுவர்கள்க்கிடையே நிகழும் முரண்பாடுகள். இப்பொழுது, இக்காலக் கட்டத்தில், சாதாரண மக்களிடையே இம்முரண்பாடுகள் அதிகமாகக் காணப்படுவதில்லை. ‘அரசியல் அதிகாரந்தான் எல்லா சமூக மதிப்பீடுகளையும் நிர்ணயம் செய்கிறது’ ( ‘Political power is the arbiter of all social and moral values ‘) என்றார் போலிஷ் நாடக விமர்சன அறிஞர் யான் காட்., ஷேக்ஸ்பியரின் வரலாற்று நாடகங்களைப் பற்றி எழுதும்போது. .

மேற்கத்திய சிந்தனை மரபு சார்ந்த புது வீச்சு தமிழ்ச் சிந்தனைக்குள் நுழையும் போதெல்லாம் இத்தகைய போக்கு தமிழில் ஏற்கெனவே இருக்கிறது என்று சொல்லி உதாரணங்கள் காட்டுவதைப் பார்க்க முடிகிறது. நீங்களே கூடப் பல நேரங்களில் அப்படிச் செய்திருக்கிறீர்கள். அப்படிச் செய்வதை எப்படி நியாயப் படுத்துகிறீர்கள்? எல்லாவகையான புதிய சிந்தனைகளின் மூலங்களும், கலகக் குரல்களும் இந்திய வரலாற்றில் ஏற்கெனவே இருக்கிறது எனச் சொல்வதை, எவ்வகையிலும் வெளிக்காற்றும் வெளிச் சிந்தனைகளும் இந்தியாவிற்குள் வந்து விடக்கூடாது என நினைப்பவர்களின் இன்னொரு வகையான தடுப்பு முயற்சி எனச் சொன்னால் எப்படி நீங்கள் மறுப்பீர்கள்?

புதிய சிந்தனைகள் வராதபடி, நம் அறிவுச் சாளரங்களை அடைத்துக் கொள்ள வேண்டுமென்று நான் எப்பொழுதுமே சொன்னதில்லை. ‘கட்டுடைத்தல்’ என்பதை விளக்க எடுத்துக்காட்டு வேண்டுமென்றால், நம் அரும் பெரும் இலக்கியங்களுக்கும் இலக்கணங்களுக்கும் உரை கண்டவர்களுடைய எழுத்தைப் பார்த்தால் தெரியும் என்று நான் சொல்வதுண்டு. குறிப்பாக, வைணவப் பிரபந்தங்களுக்கு எழுதப்பட்டிருக்கும் வியாக்கினங்களைப் படிக்கும்போது, ‘the death of the author’ என்பதைத் தெளிவாகப் புரிந்து கொள்ள முடியும். சிவவாக்கியரைக் காட்டிலும் வைதிகத்தை எதிர்த்து இன்னும உரத்த குரல் யார் எழுப்பியிருக்க முடியும்? தமிழ் இலக்கியத்தைக் கால வாரியாகப் (சங்க காலம், சங்கம் மருவிய காலம் போன்று) ஒவ்வொரு காலக் கட்டத்திலும், கலகக் குரல் இருந்துதான் வந்திருக்கின்றது. ‘ யாதும் ஊரே, யாவரும் கேளிர்’ என்பது, மற்றையச் சங்கப் பாடல்களைப் பார்க்கும்போது தனித்து ஒலித்த குரல். வைதிகத்துடன் சமரசம் செய்து கொண்டதென்றாலும், சமணமும், பௌத்தமும் புறக்கணித்த இசைக் கலைக்கு உயிர் கொடுத்தது என்றவகையில், பக்தி இயக்கமும் அது தோன்றிய காலத்தில் எதிர்ப்புக் குரல்தான்.’ பக்தி ‘ என்ற சொல், ‘பஜ்’ என்ற வேரின் அடியாகப் பிறந்தது. ‘பஜ்’ என்றால் ‘ ஒன்று கூடி’ (பஜனை)என்ற பொருள். சாதி வேறுபாடின்றிச், சமூகமாக ஒன்று கூடி, வழிபடுதல் என்று அர்த்தம். தனிமனித சொர்கத்தை (individual Salvation- அகம் பிருமாஸ்மி”) எதிர்த்து சமுதாய சொர்க்கத்தை நாடியதே, வைதிக உபநிஷத மார்க்கத்தை முரணியக் கலகக் குரல். ராமாநுஜருக்கும் திருகோஷ்டியூர் நம்பிக்கும் இது பற்றியே கருத்து மோதல்கள் ஏற்பட்டன. உயர்கல்வி சமூகத்தின் பொதுச் சொத்து என்று வாதாடியவர் ராமாநுஜர்.

இந்தியாவின் பிரச்னயே நாம்சமூகமாக வாழக் கற்றுக் கொள்ளவில்லை என்பதுதான். Ronald Shegal என்ற தென்னாப்பிரிக்க மார்க்ஸிய ச் சிந்தனையாளர் ,’The crisis in India’ என்ற நூலில் இதைத்தான் சொல்லுகிறார். இந்நூலை இந்திரா காந்தி பிரதமராக இருந்த போது தடை செய்தார்.
செம்மொழியாகத் தமிழ் அறிவிக்கப்பட்டுள்ளதின் பின்னணியில் அரசும் கல்வித்துறையும் எழுத்தாளர்களும் எந்தெந்தத் தளங்களில் இணைந்து செயல்படும் வாய்ப்புகள் இருப்பதாகக் கருதுகிறீர்கள்?
தமிழ் என்றுமே செவ்வியல் மொழியாக ( செம்மொழி என்ற சொல்லாட்சி சரியன்று.அது ‘செந்தமிழ்’ அதாவது ‘ Standard Tamil’என்று பொருள்படும். தொல்காப்பியத்திலும் நன்னூலிலும் இப்பொருளில் தான் வருகிறது. ‘கொடுந்தமிழ்’ என்றால், ‘பேச்சுவழக்கு’. ‘Classical Tamil’ என்பதைக் குறிக்க வேண்டுமென்றால் ‘செவ்வியல் மொழி என்றுதான் சொல்ல வேண்டும்.

கலை, இலக்கிய விஷயங்களில் அரசு சம்பந்தப்படக் கூடாது என்பதே என் ஆணித்தரமான அபிப்பிராயம். அறிஞர்கள், படைப்பாளிகள் அனைவரும் தமக்குள் கூடி விவாதிக்க வேண்டுமென்பதுதான் என் கருத்து. அதற்கு முன் அறிஞர்கள் யார், படைப்பாளிகள் யார் என்று அடையாளப் படுத்திக் காண்பதும் அவசியம்.





கருத்துகள்

எம்.ஏ.சுசீலா இவ்வாறு கூறியுள்ளார்…
தெளிவான கேள்விகள்தான் தீர்க்கமான பதிலை வரவழைக்க வல்லவை.அவ்வகையில் சிறப்பான நேர்காணல் இது.
இன்று காலை இந்த நேர்காணலைக் குறிப்பிட்டுக் கலைஞர் தொலைக்காட்சியில் வீரபாண்டியன் ஏதோ சொன்னார்.உள்ளிருந்து வருவதற்குள் என்ன சொன்னார் என்பதைத் தவற விட்டு விட்டேன்.
நீங்கள் அறிய வந்தால்சொல்லுங்கள்.
Simulation இவ்வாறு கூறியுள்ளார்…
சுப.வீரபாண்டியனின் நிகழ்ச்சியினை நானும் பாதியிலிருந்துதான் பார்த்தேன். அவர் குறிப்பிட்டு சொன்னது இந்திரா பார்த்தசாரதியின் 'திராவிட மொழி சர்க்கஸ்" என்ற வார்த்தை குறித்து.

கி.வா.ஜ போன்றவர்கள் மொழியில் சிலேடை செய்தால் பாராட்ட முடிகின்றது. ஆனால் அண்ணா, கருணாநிதி போன்றவர்கள் செய்தால் "மொழி சர்க்கஸ்" என்று ஏன் சொல்லத் தோன்றுகின்றது என்றார்.

- சிமுலேஷன்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ராகுல் காந்தி என்னும் நிகழ்த்துக்கலைஞர்

நவீனத்துவமும் பாரதியும்

தணிக்கைத்துறை அரசியல்