திருக்குறளில் கடமைகளும் உரிமைகளும்

தனக்கான அடிப்படைத் தேவைகளான உணவு, உடை, உறையுள் ஆகியனவற்றைத் தேடுவதன் முகாந்திரமாகச் சமூக நிறுவனங்களை உருவாக்கிக் கொண்டது மனித சமூகம். அப்படி உருவாக்கிக் கொண்ட நிறுவனங்களுக்குள் மனிதர்கள் வாழ வேண்டும் என்று வலியுறுத்திக் கூறும் பனுவல்களை -அற நூல்களாக உருவாக்கித் தனது கருத்துக் கருவூலகமாகக் கொண்டன ஒவ்வொரு மொழிவழிச் சமுதாயமும். இப்படியான அறநூல்கள் ஒவ்வொரு மொழியின் இலக்கிய வரலாற்றிலும் தொடக்க காலத்தில் முக்கியமான இடத்தைப் பிடித்துக் கொண்டு கருத்துருவாக்கிகளாக விளங்கியுள்ளன. தமிழ்மொழியைத்தங்கள் வெளிப்பாட்டுக் கருவியாகக் கொண்ட தமிழ்ச் சமூகத்தின் கருத்துப் பெட்டகமாக இருப்பது திருக்குறள்.
தமிழ் அறிவுத் தேடலின் முழுமையான ஆவணம் , திருக்குறள் என இனியும் ஆய்வு செய்து சொல்ல வேண்டியதில்லை. புத்த மதப் பின்னணியுடன் தனது பார்வையை உருவாக்கிக் கொண்ட அயோத்திதாஸ பண்டிதர் தொடங்கி, நாமக்கல் கவிஞர் வெ.ராமலிங்கம் பிள்ளை, சாமி சிதம்பரன், பேராசிரியர்கள் எஸ். வையாபுரிப் பிள்ளை, க.த.திருநாவுக்கரசு, தெ. பொ. மீனாட்சி சுந்தரன், போன்ற முன்னோடி ஆய்வாளர்களின் கவனத்துக்குரிய பனுவலாக இருந்த திருக்குறள்  ஜி.யு. போப், மு.வரதராசன், குன்றக்குடி அடிகளார்மு.கருணாநிதி, சுஜாதா, சாலமன் பாப்பையா போன்ற பரப்புரையாளர்களின் ஆயுதமாகவும் இருந்துள்ளது.

வரலாற்றில் மட்டுமல்லாது நிகழ்காலத்தில் சிந்திப்பதாக நம்பும் தமிழர்கள் ஒவ்வொருவரும் தங்களது சிந்தனைக்கான கருத்தாக்கத்தினை நேர்மறை யாகவோ, எதிர்மறையாகவோ திருக்குறளிலிருந்து எடுத்துக் கொள்ளவே செய்கின்றனர். தமிழ் மனங்களின் வெளிப்பாடுகளைத் தீர்மானிக்கும் பனுவல்களில் முதன்மையானது திருக்குறள் என்பது அறிந்தும் அறியாமலும் நடக்கும் நிகழ்வுகளில் ஒன்று. பிறப்பு முதல் இறப்பு வரைத் தமிழ் மனம் சந்திக்கும் சிக்கல்களுக்கான தீர்வுக் கீறல்களைக் குறள் தன்னகத்தே கொண்டதாக இருக்கிறது. அச்சிக்கல்களும் தீர்வுகளும் தமிழ் மனம் சந்திப்பன என்று சொல்வதைத் தாண்டி உலக மனிதர்கள் அல்லது மனித குலம் சந்திப்பன என்று சொல்வதும் கூடப் பொருத்தமானவை தான் என்பதை உலகம் ஏற்றுக் கொண்டுள்ளது. மொழிபெயர்ப்பின் வழியாக உலக மனிதர்களைச் சென்று சேர்ந்துள்ள திருக்குறள் உலகப் பொதுமறை எனக் கூறப்படுவதின் பின்னணியில் கிணற்றுத் தவளைகளின் கூச்சல் எதுவும் இல்லை.

மனித வாழ்க்கையைக் குறித்து அடிப்படையான கேள்விகளையும் விடைகளையும் வைத்திருக்கும் திருக்குறள், முன் வைத்துள்ள தீர்வுகளின் கீறல்கள் எக்காலத்திற்கும் பொருத்தம் உடையனவாஎன்று கேட்டால், அதைத் தீர்மானித்துக் கொள்ள வேண்டிய பொறுப்பு என்னுடையதல்ல; உன்னுடையதே என்று பதில் சொல்லும் இயல்பு கொண்ட அறிஞன் வள்ளுவன்.
எப்பொருள் யார்யார் வாய்க்கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு
என்று எழுதியவன் அவன். நான் சொல்கிறேன் என்பதற்காக நீங்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பதில்லை. சொல்லப்பட்டது மெய்ப்பொருள் தானா என்று உரசிப் பாருங்கள்; அம்மெய்ப்பொருள் உங்களின் தேவைக்கு- நிகழ்காலத்திற்கு- பொருந்தக் கூடியவையா என்பதையும் சோதித்துப் பாருங்கள்; தேவையில்லை என்றால் தூக்கித் தூரப் போடுங்கள்  என்று பொருள் தரக்கூடிய வரிகளை எழுதிய வள்ளுவனின் குறளில் கடமைகளும் உரிமைகளும் எவ்வாறு பேசப்பட்டுள்ளன என்பதைச் சுட்டிக் காட்டுவதே இக்கட்டுரையின் நோக்கம்.

 நிகழ்கால வரையறைகள்

கடமைகளும் உரிமைகளும் பொதுவாகத் தனிமனிதர்களை நோக்கிக் கூறப்பட்டன போலத் தோன்றினாலும் இரண்டில் ஒன்று தனிமனிதனுக்கு அதிக அழுத்தம் தரக்கூடியது என்பதையும், இன்னொன்று நிறுவனங்களுக்கு முக்கியத்துவம் அளிப்பது என்பதையும் பிரித்துக் காட்ட முடியும். ஒன்றைப் பற்றிப் பேசும் போது இன்னொன்றும் தானே வந்து நிற்கும் இரட்டைகளைத் தமிழ் இலக்கணம் உம்மைத் தொடர் எனக்கூறும். கடமைகள் உரிமைகள் என்ற இரண்டு சொற்களும் பிரியாது நிற்கும் இரட்டைகளாக இன்றுள்ளன. இன்று மட்டும் அல்ல, எப்போதும் அப்படியே இருந்துள்ளன. ஆனால் இவ்விரண்டு சொற்களுமே எல்லாக் காலத்திலும் ஒரே அளவு பயன்பாட்டில் இருந்தவையா என்றால் நிச்சயமாக இல்லை என்றே சொல்லலாம்.

கடமைகள் நிறைவேற்றப்படுவன; உரிமைகள் அனுபவிக்கப்படுவன. கடமைகளை நிறைவேற்றும் இடத்தில் தனிமனிதர்கள் தங்களுடைய தன்னிலை அடையாளத்தோடு இருப்பதில்லை. அதற்கு மாறாக அவர்களின் அடையாளம் அவர்கள் இருக்கும் சமூக நிறுவனத்தின் பொறுப்பு காரணமாகக் கிடைக்கும் அடையாளமாகவே இருக்கும். ஓர் ஆணோ அல்லது பெண்ணோ குடும்ப அமைப்பில் ஆணாகவும் பெண்ணாகவும் செய்ய வேண்டிய கடமைகள் என்று எவையும் வலியுறுத்தப் படுவதில்லை. அதற்கு மாறாகக் கணவன் அல்லது மனைவி என்ற தன்னிலைகளாக மாறி அவர்கள் செய்ய வேண்டியனவே கடமைகளாக ஆகின்றன. ஆனால் உரிமைகள் ஆற்ற வேண்டியனவை அல்ல. பெற வேண்டியன அல்லது எடுத்துக் கொள்ள வேண்டியன. இந்த விளக்கத்திற்குப் பிறகு உரிமைகள் மனிதர்களின் தனிமனிதத்தன்னிலைக்கு முக்கியத்துவம் தருவன என்பதும், கடமைகள் என்பது சமூக நிறுவனத் தன்னிலைக்கும் தொடர்புடையன என்பது விளங்கும். கடமைகள் ஆற்ற வேண்டிய போது மனிதர்கள் சமூக மனிதர்களாக இருக்கிறார்கள். உரிமைகளை அனுபவிக்கிற போது தனிமனிதர்களாக இருக்கிறார்கள்.  இதன் காரணமாக உரிமைகள் அவர்களுக்கு நெருக்கமானதாக- சொந்தமானதாக இருக்கின்றன. கடமைகள் கூட்டுப் பொறுப்பு காரணமாக விலகி நிற்பனவாக- விலக்கி வைக்கின்றனவாக இருக்கின்றன. திருக்குறளை எழுதிய வள்ளுவன் இந்தக் கருத்தியல் வேறுபாட்டை நன்கு உணர்ந்தவனாக வெளிப்பட்டுள்ளான் என்பது குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய ஒன்று. இதனைக் காட்ட அவன் என்னென்ன கடமைகளையும் உரிமைகளையும் பற்றிப் பேசினான் என்று விளக்குவதை விட எவ்விதமாகக் கடமைகளை வலியுறுத்தினான் எனப் பேசுவதும், என்னென்ன நேரத்தில் உரிமைகள் பயன்படும் என்று சொல்கிறான் எனப் பேசுவதுமே முக்கியமானது.

திருக்குறள் ஒவ்வொரு அதிகாரத்திலும் பத்துப் பத்துக் குறட்பாக்கள் என்ற எண்ணிக்கையில் தொடங்கி அறத்துப் பால், பொருட்பால், இன்பத்துப் பால் என மூன்று பெரும்பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு அதற்குள் இயல்களும் பிரிக்கப்பட்டுள்ளதாக நாம் திருக்குறளைப் படித்திருக்கிறோம். இப்பிரிவுகளில் அதிகாரம் மற்றும் பால் பிரிப்புகள் பற்றி உரையாசிரியர்களிடையே கருத்து வேறுபாடுகள் இல்லை. ஆனால் இயல் பகுப்பிலும், அவ்வியல்களில் இடம்பெறும் அதிகாரங்களின் எண்ணிக்கையிலும் உரையாசிரியர் களிடையே கருத்து வேறுபாடுகள் உள்ளன.
கடமைகள்
கடமைகள் பற்றிப் பேசுவதற்கு அடிப்படையாக ஒரு சமூகம் தேவை என்பதை உணர்ந்த வள்ளுவர் அதன் இயல்புகள் எப்படிப் பட்டதாக இருக்க வேண்டும் என்பதை முக்கியமாகக் கருதிப்  பேசுகிறார். சமூகம் என்பதின் வெளிப்பாடாக இருப்பது அரசு என்னும் பெரு நிறுவனம் என்பது நீண்ட கால நிலைமை. அரசன் எவ்வழி மக்கள் எவ்வழி என்ற பழங்கூற்று தொடங்கி வைத்த கருத்தியல் நிலை மக்களாட்சி நடைபெறுவதாக நம்பும் இக்காலத்திற்கும் பொருந்தக் கூடியதாக இருக்கிறது.  அரசின் இயல்புகள் பற்றிப் பேசும் விதமாகவே சமூகத்தில் நிறுவனங்களின் கடமைகளையும், நிறுவனங்களில் பங்கேற்கும் தனிமனிதர்களின் கடமைகளையும் வலியுறுத்துகின்றார் வள்ளுவர்.

அறம், பொருள், இன்பம் என்ற மூன்று பால்களில் விரிவான இயலாக அமைந்துள்ள பொருட்பாலில் அரசியல், அமைச்சியல், அரணியல், கூழியல், படையியல், நட்பியல் என ஆறு இயல்களில் அரசு என்ற நிறுவனத்தின் தன்மைகள் பேசப்பட்டுள்ளன. அப்படிப் பேசும் போது, வள்ளுவரின் திருக்குறள் இந்திய அளவில் அறியப்பட்டுள்ள அரசியல் நூலான சாணக்கியரின் அர்த்த சாஸ்திரத்தோடு ஒத்த கருத்துக்கள் முன் வைப்பதோடு முக்கியமான ஒரு வேறுபாட்டையும் கொண்டுள்ளது என்பதை இங்கே சுட்டிக் காட்ட வேண்டும். இவ்வேறுபாடு பற்றி விரிவாகப் பேசியுள்ள அறிஞர் தெ.பொ.மீனாட்சி சுந்தரனின் கூற்றை அப்படியே மேற்கோளாகக் காட்டுவது பொருத்தமானது. எதையும் தேசியக் கண்ணோட்டத்தோடு ஆய்வு செய்து கருத்துச் சொல்லியுள்ள தெ.பொ.மீ., “அர்த்தசாஸ்திரம் போன்ற வடநூல்கள் ஏழ் உறுப்புக்கள் கொண்டதாக நாட்டைச் சித்திரிக்கின்றன என்கிறார். தொடர்ச்சியாக அவ்வுறுப்புகளைப் பற்றிப் பின்வருமாறு வரிசைப்படுத்துகிறார்.

1.  மக்கள் சேர்ந்து வாழும் நாடு அல்லது அரசன் ஆள்கின்ற நாடு
2.  அந்நாட்டினர் எல்லாம் தனக்கு அடங்கி வாழுமாறு ஆண்டு, அதன் ஒற்றுமைக்கு அறிகுறியாகும் அரசன்
3.  அரசியலை நடத்துவதற்கும், பகைவரிடத்திலிருந்து தன் நாட்டைக் காப்பதற்கும் நாட்டை உயர்த்துவதற்கும் வேண்டுவனவற்றைச் சூழ்ந்து எண்ணி அரசனுக்கு எடுத்துக் கூறி அவனிட்ட ஆணைகளை நிறைவேற்றித் துரைத்தனம் நடத்திவரும் அமைச்சர்கள்,
4.  இத்தனையும் செய்வதற்கு வேண்டும் பொருள் வேண்டும் பொருள் வருவாய்
5.   காவலனுக்கு இடையூறு வராதபடி வெளியே காக்கவும், அரசன் கட்டளையைத் தடையின்றி நாட்டினுள்ளே நிறைவேற்றவும் அரசியலின் அடிப்படையான படை
6.  அந்தப் படையினைக் கொண்டு நாட்டை எளிதில் காக்கக்கூடிய கோட்டை முதலிய அரண்
7.  நாட்டின் தன்னுரிமையை விளக்கிப் பிறநாட்டு அரசருடன் ஒத்துழைத்துப் பகைவரை வெல்வதற்கு உதவும் பிறநாட்டு அரசுகளின் நட்பு- இந்த ஏழ் உறுப்புகள் அடங்கிய முதல் பொருளாகவே அரசியலினை மிகப் பழைய அரசியல் அறிஞர்கள் ஆராய்ந்து வந்தனர் என்பது தெளிவாகிறது.

திருவள்ளுவர் இங்கு நுழைத்த புதுமை யாது? “ ஆறும் உடையான் அரசருள் ஏறுஎன்கிறார் வள்ளுவர். (தெ.பொ.மீ. ப. 139)  படைகுடி கூழமைச்சு நட்புஅரண்ஆறும் உடையான் அரசருள் ஏறு  (381) என்பது அவரது குறள். அரசனை ஏழ் உறுப்புக்களில் ஒன்றாக வைத்துப் பார்க்காமல் அவற்றிலிருந்து விலக்கி வைத்துப் பார்க்கிறார். அதன் காரணமாக இவ்வுறுப்புகளின் கடமைகளைப் பேசுவதோடு, அவை ஒவ்வொன்றின் கடமைகளையும் நிறைவேற்றுகின்றனவா எனக் கண்காணிக்கும் அதிகாரம் அரசனுக்குரியதாக இருக்கிறது எனக் காட்டுகின்றார் வள்ளுவர். 1.  அமைச்சு, 2.  சொல்வன்மை,3.  வினைத்தூய்மை, 4.  வினைத்திட்பம்,5.  வினைசெயல்வகை,6.  தூது,7.  மன்னரைச் சேர்ந்தொழுகல், 8.  குறிப்பு அறிதல், 9.  அவை அறிதல், 10.  அவை அஞ்சாமை போன்ற அதிகாரங்களில் அரசின் வெளிப்படையான கண்காணிப்புகளை- கடமைகளைப் பற்றிப் பேசுகிறது திருக்குறள். இவையல்லாமல் 1.  இறைமாட்சி, 2.  கல்வி, 3.  கல்லாமை, 4.  கேள்வி, 5.  அறிவு உடைமை, 6.  குற்றம் கடிதல், 7.  பெரியாரைத் துணைக்கோடல், 8.  சிற்றினம் சேராமை, 9.  தெரிந்து செயல்வகை, 10.  வலி அறிதல், 11.       காலம் அறிதல், 12.       இடன் அறிதல், 13.   தெரிந்து தெளிதல், 14.       தெரிந்து வினையாடல், 15.       சுற்றம் தழாஅல், 16. பொச்சா வாமை, 17.       செங்கோன்மை, 18.  கொடுங்கோன்மை, 19.        வெருவந்த செய்யாமை, 20.       கண்ணோட்டம், 21. ஒற்றாடல், 22.  ஊக்கம் உடைமை, 23. மடியின்மை, 24.       ஆள்வினை உடைமை, 25.  இடுக்கண் அழியாமை முதலான அதிகாரங் களில் இடம் பெற்றுள்ள குறள்களும் அரசன் அல்லது அரசு உறுப்புக்களில் பங்கேற்கும் உறுப்பினர்களின் கடமைகளை அல்லது கண்காணிப்பின் இயல்புகளையே பேசுகின்றன.

நிகழ்காலத்தில் ஜனநாயக அரசுகளைத் தங்களின் ஆய்வுப் பொருளாக எடுத்துக் கொண்ட மிகைல் பூக்கோ போன்ற பின் அமைப்பியல் வாத அறிஞர்கள் அரசுகளின் பேரதிகாரங்களைப் பற்றி அதிகம் பேசுவதில்லை; அதற்கு மாறாக அதன் நுண் அதிகாரம் பற்றியே விரிவாகப் பேசுகின்றனர். அரசுகள் நுண்ணதிகாரத்தைச் செலுத்துவதற்குப் பயன்படுத்தும் முக்கியமான கருவி கண்காணிப்பு என்பதாகும். கண்காணிப்பு என்பது சில நேரங்களில் கருவியாகவும் , பல நேரங்களில் கருத்தியலாகவும் இருக்கிறது. சட்டம், ஒழுங்கை நிலை நாட்டும் நோக்கம் கொண்ட காவல் துறை, நீதிமன்றம், சிறைச்சாலை போன்ற அரசு நிறுவனங்களைக் கண்டு அஞ்சும் கூட்டத்தின் முன்னால் கண்காணிப்பு என்பது வெளிப்படையான கருவியாக இருக்கிறது. ஆனால் கல்வி நிறுவனங்கள், மருத்துவ நிலையங்கள், நல் நோக்குக் கூடங்கள் போன்றவற்றின் வழியாக அரசு கருத்தியல் கண்காணிப்பை நிகழ்த்துகிறது என்பது அவர்களின் வாதம்.   திருக்குறள் இவ்வளவு நுட்பமாக- கருவி மற்றும் கருத்தியல் என்ற வேறுபாடுகளுடன் பேசவில்லை என்றாலும் அவற்றின் தேவைகளை உணர்ந்த ஒரு அரசியல் நூலாக விளங்குகிறது என்பதை மறுக்க முடியாது.

காட்சிக்(கு) எளியன் கடுஞ்சொல்லன் அல்லனேல்
மீக்கூறும் மன்னன் நிலம். 386
இன்சொலால் ஈத்தளிக்க வல்லார்க்குத் தன்சொலால்
தான்கண் டனைத்திவ் உலகு. 387

என்பன இறைமாட்சியில் இடம்பெறும் குறள்கள். தொடர்ந்து,
மேற்பிறந்தா ராயினும் கல்லாதார் கீழ்ப்பிறந்தும்
கற்றார் அனைத்திலர் பாடு. 409
அறிவற்றங் காக்கும் கருவி செறுவார்க்கும்
உள்ளழிக்க லாகா அரண். 421
வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர்
வைத்தாறு போலக் கெடும். 435
சூழ்வார்கண் ணாக ஒழுகலான் மன்னவன்
சூழ்வாரைச் சூழ்ந்து கொளல். 445
வினைவலியும் தன்வலியும் மாற்றான் வலியும்
துணைவலியும் தூக்கிச் செயல். 471
என முறையே கல்வி, அறிவுடைமை, குற்றம் கடிதல், பெரியாரைத் துணைக் கோடல் முதலான அதிகாரங்களில் இடம் பெற்றுள்ள குறள்களையும் இந்த நோக்கிலேயே அர்த்தப்படுத்த முடியும்.அரசுக்கான கடமைகளைச் சொல்லும் இவ்வதிகாரங்களில் இடம் பெற்றுள்ள குறள்களில் சில தனிமனிதர்களின் கடமைகளை வலியுறுத்தும் நோக்கம் கொண்டன என்பதும் விளங்கிக் கொள்ள வேண்டிய ஒன்று தான். அதை மறுக்கவும் முடியாது இத்தகைய நுட்பமான வேறுபாடுகளைத் தனியாக ஆய்வு செய்து விளக்க வேண்டும். பொதுநிலைப்பட்ட இக்கட்டுரையில் அதற்கு இடமில்லை.

உரிமைகள்:
திருக்குறள் கடமைகளைப் பற்றிப் பேசும் போது நிறுவனம் சார்ந்த கடமைகளை அதிகம் வலியுறுத்திப் பேசுகிறது என்பதற்கு நேரெதிராக உரிமைகளைப் பற்றிப் பேசுகிற போது தனிமனிதர்களை மையப் படுத்தியே பேசுகிறது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். ஒழிபியல் எனக் குறிக்கப்பட்ட இயலைப் போக்கியார் என்ற உரையாசிரியர்  குடியியல் எனக் குறிப்பிட்ட பின்னர் அப்பெயர் பலராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டதன் பின்னணியில் அவ்வியல் தனிமனிதர்களின் இயல்புகள், கடமைகள், உரிமைகள் பற்றியன என்ற உண்மை உள்ளது என்பதை விளங்கிக் கொள்ள வேண்டும். குடியியல் என்பது இன்று வழக்கில் உள்ள குடிமைச் சமூகம் - சிவில் சமூகம்- என்பதோடு நெருங்கிய தொடர்புடையது. அவ்வியலில் இடம் பெற்றுள்ள 1.  குடிமை ,  2.  மானம், 3.  பெருமை, 4.  சான்றான்மை, 5.  பண்புடைமை, 6.  நன்றியில் செல்வம், 7.  நாண் உடைமை, 8. குடி செயல் வகை,9.  உழவு,10. நல்குரவு,11. இரவு,12.  இரவச்சம்,13.  கயமை போன்ற அதிகாரங்களில் இடம் பெற்றுள்ள குறள்கள் தனிமனிதர்களை நோக்கி, அவர்களின் கடமைகளை வலியுறுத்துவனவாக உள்ளன. இக்கடமைகளைச் செய்யும் போது அவர்களுக்கு அதன் பிரதிபலனாக உரிமைகள் கிடைக்கும் என்பது திருவள்ளுவரின் கருத்தாகும். குடிமை என்னும் இயலில் இடம் பெற்றுள்ள இந்நான்கு குறள்களையும் வாசித்தால் இந்தக் கூற்று புரியவரலாம்
இற்பிறந்தார் கண் அல்லது இல்லை இயல்பாகச்
செப்பமும் நாணும் ஒருங்கு -951
 ஒழுக்கமும் வாய்மையும் காணுமிம் மூன்றும்
இழுக்கார் குடிப் பிறந்தார்- 952
நகை ஈகை இன்சொல் இகழாமை நான்கும்
வகைஎன்ப வாய்மைக் குடிக்கு. 953
அடுக்கிய கோடி பெறினும் குடிப்பிறந்தார்
குன்றுவ செய்தல் இலர் 954
 தொடர்ச்சியாக நாணுடைமையில் இடம் பெற்றுள்ள
பிறர்பழியும் தம்பழியும் நாணுவார் நாணுக்கு
உறைபதி என்னும் உலகு -1015
நாண் அகத் தில்லார் இயக்கம் மரப்பாவை
நாணால் உயிர்மருட்டி யற்று -1020
 என்ற குறள்களையும், மானம் என்ற இயலில் இடம் பெற்றுள்ள
இன்றி யமையாச் சிறப்பின ஆயினும்
குன்ற வருப விடல்-961
சீரினும் சீரல்ல செய்யாரே சீரொடு
பேராண்மை வேண்டு பவர்-962
மயிர்நீப்பின் வாழாக் கவரிமான் அன்னார்
உயிர்நீப்பர் மானம் வரின்-969
முதலான குறள்களையும் அதே கோணத்தில் வாசித்துப் பார்க்கலாம்.
கடமைகளும் உரிமைகளும் :புலப்படுத்தப்படும் முறை:
கடமைகள் உரிமைகள் மட்டும் அல்லாமல் திருவள்ளுவரின் திருக்குறள் தனித்துவமான புலப்பாட்டு நெறி ஒன்றைக் கொண்டுள்ளது. கிரேக்க நகர அரசுகளின் சிந்தனையாளர்களான  சாக்ரடீஸ், அரிஸ்டாடில் போன்ற சிந்தனையாளர்களிடம் வெளிப்படும் புலப்பாட்டு உத்தி அது. வினாக்களை எழுப்பி விடைகள் தரும் இவ்வுத்தி எளிய மக்களுக்கும் சென்று சேரும் தன்மை கொண்டது. இவ்வுத்திகளை ஆய்வு செய்த ஆய்வாளர் ஒருவர் (முனைவர் முத்துவேல், வள்ளுவர் தொடுக்கும் வினாக்கள் )திருவள்ளுவரின் திருக்குறளில் எட்டு வகையான வினாக்கள் உள்ளன. அவ்வினாவகை உரையாடல் வழியே தான் தனது கருத்துக்களைப் புலப்படுத்துகிறார் எனக் காட்டுகின்றார், அவை வருமாறு:
1.     தொடக்கமும் முடிவும் வினாக்கள்
2.     விடைதரும் வினாக்கள்
3.     விடைபொதி வினாக்கள்
4.     விவாதம் எழுப்பும் வினாக்கள்
5.     உட்கிடை வினாக்கள்
6.     உணர்ச்சியூட்டும் வினாக்கள்
7.     வலியுறுத்த வந்த வினாக்கள்
8.     விடைகாணா வினாக்கள்
இவ்வெட்டு வகை வினாக்களுக்குமான எடுத்துக் காட்டுகளாகப் பின்வரும் குறள்களைச் சுட்டலாம்.
1] வாலறிவனின் நல்ல தாள்களை வணங்காமல் இருப்பவர்களுக்குக் கல்வியினால் என்ன பயன் கிடைத்துவிடும் ? என்று கேள்வியை எழுப்பி விட்டு ஒன்/றும் கிடைக்காது என்ற பதிலை மறைமுகச் சுட்டாமல் செல்கிறார் பின்வரும் குறளில்,
கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅர் எனின். 2
இதே தன்மையைப் பின்வரும் குறளிலும் காணலாம்.
அறிவினான் ஆகுவ துண்டோ பிறிதின்நோய்
தந்நோய்போல் போற்றாக் கடை. 315
இக்குறள்கள் தொடக்கமும் முடிவும் வினாக்களோடு கூடியனவாக உள்ளன.
2] இத்தன்மையிலிருந்து மாறுபட்டு, தொடக்கத்தில் வினாவை எழுப்பிக் கொண்டு தொடர்ந்து விடையைச் சொல்லும் உத்தியையும் வள்ளுவர் பல இடங்களில் பயன்படுத்தியுள்ளார். பின்வரும்
வாய்மை எனப்படுவ(து) யாதெனின் யாதொன்றும்
தீமை இலாத சொலல். 291
சால்பிற்குக் கட்டளை யாதெனில் தோல்வி
துலையல்லார் கண்ணும் கொளல். 986
என்ற குறள்களில் அவ்வுத்தி இடம் பெற்றுள்ளதை காணலாம்.
3] வினாவையும் விடையையும் ஒருசேரக் கொண்டதாக- பிரித்துப் பேச முடியாத தன்மையுடன் அமையும் விடைபொதி வினா உத்தியை வள்ளுவர் பயன்படுத்தியுள்ள குறள்களாகப் பின்வரும் குறள்களைக் காட்டலாம்.
உறின்நட்டு அறின்ஒரூஉம் ஒப்பிலார் கேண்மை
பெறினும் இழப்பினும் என். 812
யாதானும் நாடாமால் ஊராமால் என்னொருவன்
சாந்துணையும் கல்லாத வாறு. 397
4.]விவாதத்தை முன்வைக்கும் வினாக்கள் கொண்ட உத்தியைக் கொண்டதாகப் பல்வேறு குறள்கள் அமைந்துள்ளன. யாராக இருந்தாலும் தங்களுடைய நாவை அடக்க வேண்டிய இடத்தில் அடக்கியே தீர வேண்டும்; இல்லையென்றால் தீராத சோகம் வந்து சேர்வதைத் தடுக்க முடியாது என்பதைச் சொல்லும்,
யாகாவா ராயினும் நாகாக்க காவாக்கால்
சோகாப்பர் சொல்இழுக்குப் பட்டு. 127
என்ற குரளில் அந்த உத்தி திறம்படக் கையாளப்பட்டுள்ளது. இன்னொரு குறள்:
மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறஞ்சூழும் சூழ்ந்தவன் கேடு. 204
5] எது ஆறக்கூடிய புண் என்ற கேள்வியைக் கேட்டு, தீயினால் சுட்ட புண், நாவினால் சுட்ட புண் என்ற இரண்டு புண்களை வரிசைப் படுத்திக் காட்டும் வள்ளுவர், நாவினால் சுட்ட புண் ஆறாது; தீயினால் சுட்ட புண் ஆறும் என விடையைத் தரும் உட்கிடை உத்தியைப் பின்வரும் குறளில் பயன்படுத்தியுள்ளார்.
தீயினாற் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே
நாவினாற் சுட்ட வடு. 129
அதனையொத்த இன்னொரு குறளாகவே
எண்ணிய எண்ணியாங்(கு) எய்துப எண்ணியார்
திண்ணிய ராகப் பெறின். 666
என்பதையும் வாசிக்கலாம்.
6] உணர்ச்சியூட்டும் வினாவாயினும் சரி, பேச்சாயினும் சரி, ஒருவித வேகத்தன்மை கொண்டதாகவே இருக்கும். பின்வரும் குறள்களில் உணர்ச்சியூட்டும் வினாக்கள் அமைந்திருப்பதை வாசிப்பவர் ஒவ்வொருவரும் உணரலாம்.
இன்மையின் இன்னாத(து) யாதெனின் இன்மையின்
இன்மையே இன்னா தது. 1041
செயற்கரிய யாவுள நட்பின் அதுபோல்
வினைக்கரிய யாவுள காப்பு. 781
7]வன்மையாக வலியுறுத்தும் வினாக்களை எழுப்பிப் பதிலையும் பேசும் உத்தியாகப் பின்வரும் குறள்களில் காணப்படும் உத்தியைக் கூறலாம்.
இல்லதென் இல்லவள் மாண்பானால் உள்ளதென்
இல்லவள் மாணாக் கடை. 53
பெண்ணிற் பெருந்தக்க யாவுள கற்பென்னும்
திண்மை உண்டாகப் பெறின். 54
8]  உலகப் பொதுமையான சில கருத்துக்களோ வினாக்களோ விடைகள் அற்றவையாக உலவிக் கொண்டிருக்கின்றன. அத்தகைய வினாக்கள் பெரும்பாலும் பிறப்போடும், மரணத்தோடும் தொடர்பு கொண்டனவாக அமையும். அல்லது இறைவனின் தோற்றம் அல்லது உலகத்தோற்றம் பற்றியனவாக விளங்கும். இதனையும் வள்ளூவர் தனது குறட்பாக்களில் உத்தியாக- விடைகாணா வினா உத்தியாக அமைத்துப் பாடியுள்ளார். பின்வரும் குறள்களை அதற்குச் சான்றாகக் கூறலாம்.
நெருநல் உளனொருவன் இன்றில்லை என்னும்
பெருமை உடைத்(து)இவ் உலகு. 336
இன்றும் வருவது கொல்லோ நெருநலும்
கொன்றது போலும் நிரப்பு. 1048
இத்தகைய புலப்பாட்டு நெறியும் முறையியலும் விரிவான ஆய்வுக்குரியன.

முடிவுரை:
திருவள்ளுவரின் திருக்குறள் எளிய வினாவிடை வடிவத்தைப் பயன்படுத்தித் தனது புலப்பாட்டு நெறியாகக் கொண்டு தனது கருத்தியல் நிலையை வெளிப்படுத்துகிறது. அரசினை மையமாகக் கொண்ட சமூக அமைப்புக்களின் கடமைகளை விரிவாகப் பேசும் குறள், தனிமனிதனின் உரிமைகளையும் கடமைகளாகவே பேசுவதன் மூலம் தம் கால அரசியல் நூலாக விளங்கியது மட்டுமல்லாமல் தொடர்ச்சியாக அந்த இடத்தைத் தக்க வைத்துக் கொண்டுள்ளது. 

துணை நூல்பட்டியல்
1.    திருக்குறள்: வள்ளுவர் கண்ட தத்துவம்
தெ.பொ.மீ. களஞ்சியம் (3)(முதல் பதிப்பு, 2005) , ( தொ.ஆ) முனைவர் சு.சண்முக சுந்தரம், பல்லடம் மாணிக்கம், காமாட்சி சண்முகம், காவ்யா, சென்னை-24
2.    வாழும் வள்ளுவம்,டாக்டர் வா.செ. குழந்தைசாமி,(ஏழாம் பதிப்பு>2000) பாரதி பதிப்பகம், சென்னை-17
3.    வள்ளுவர் தொடுக்கும் வினாக்கள்,முனைவர் முத்துவேல், ( முதல் பதிப்பு, 2003)  பொன்மலர்
பதிப்பகம், சென்னை-15
4.    வள்ளுவர் வாக்கு, திருவள்ளுவர் கழகம், ( முதல் பதிப்பு, 1955)
========================= கோவை கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரி, செம்மொழி நிறுவனத்துடன் இணைந்து நடத்திய பதினெண்கீழ்க் கணக்கு நூல்கள் கருத்தரங்கில் வாசித்த கட்டுரை

கருத்துகள்

குட்டி மணி இவ்வாறு கூறியுள்ளார்…
AYAA,
ARUMAIYAANA KATTURAI. INRALAWIL ULLA AMAICHARHAL AMAICHIYAL PATRI ARIWAARO?
KadalPura இவ்வாறு கூறியுள்ளார்…
நன்றி அய்யா..
என் சிந்தனையை சிறிது செதுக்க வழி செய்தீர்!
உங்கள் தமிழ் பணி தொடர என் வாழ்த்துக்கள்.
சுப்பு

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நவீனத்துவமும் பாரதியும்

நாயக்கர் காலம். இயல் . 6 சாதிகளும் சமூக அசைவியக்கங்கமும்

ப்ளு ஸ்டார் : கிரிக்கெட்டும் அரசியலும்