வலது கையும் இடது காதும்

தன்னெழுச்சியான போராட்டங்கள் எவை? மறைமுகத்தூண்டுதல் காரணமாக உண்டாகும் போராட்டங்கள் எவை என்றெல்லாம் இப்போது கண்டுபிடிப்பது அவ்வளவு சுலபமாக இல்லை. இதைப் போலவே நிர்வாகங்களை உண்மையிலேயே எதிர்க்கும் வழக்குகள் எவை? நிர்வாகமே தூண்டி விட்டுப் போடச் செய்யும் வழக்குகள் எவை?
என்பதையும் சரியாகக் கணிக்க முடியாமல் பொதுமக்கள் தவிப்பதைப் பார்க்கலாம். அரசுத்துறை நிர்வாகங்களும், பொதுத்துறை நிர்வாகங்களும் போலிப்போராட்டங்களையும் பொய்யான பொதுநல வழக்குகளையும் திட்ட மிட்டு நடத்துகின்றன என்று பல நேரங்களில் தோன்றுவதுண்டு.
தனியார் நடத்தும் பள்ளிகளின் கல்விக் கட்டணத்தைச் சீரமைக்க வேண்டும் என்ற கோரிக்கைகளின் அடிப்படையில் உண்டான போராட்டங்கள் தன்னெழுச்சியான போராட்டங்கள் அல்ல என்றே நான் நினைத்தேன். அப்படி நினைக்கக் காரணங்களாக இருப்பவை ஒட்டுமொத்தத் தமிழ்ச் சமூகமும்  கல்வியின் மீது காட்டும் அக்கறையும், கற்றவனின் எதிர்காலம் குறித்த அதீதமான கனவுகளும் தான் என நினைக்கிறேன். 
திருநெல்வேலியின் பிரபலமான மெட்ரிக் பள்ளிகளின் வாசலில் இந்த விஜயதசமியன்று காத்திருந்த பெற்றோர்களின் உரையாடல்களையும், அவர்களின்  முகங்களில் வெளிப்படும் உணர்வுகளையும் காணும் பாக்கியம் கிடைத்ததன் தொடர்ச்சியாகவே அத்தகைய எண்ணம் தோன்றியது.. பள்ளிகளின் வாசல்களிலும், அதன் வராந்தாக்களிலும் காத்திருந்த அந்த முகங்களில் வெளிப்படும் உணர்வுகளை நிகழ்காலத்தின் வெளிப்பாடு என்று நிச்சயம் சொல்லக் கூடாது. நீண்ட கால ஆசையின் மோகமும், நிறைவேறப் போகும் கனவின் ஏக்கமும் ஒருசேர வெளிப்பட்ட மனநிலைகள் அவை.
இத்தகைய முகங்களைப் பார்க்க வேண்டும்என்றால் நீங்கள் அடுத்த விஜயதசமி வரை காத்திருந்து போய்ப் பாருங்கள். நான் சொல்வதை நிச்சயம் நம்பவே செய்வீர்கள். இரண்டு வயதைத் தாண்டிய சின்னஞ்சிறு குழந்தைகளைச் சிங்காரம் செய்து தூக்கிக் கொண்டு வந்து நிற்கும் அவர்களின் ஒரே நோக்கம் என்ன கொடுத்தாவது தாங்கள் நினைக்கும் பள்ளியில் இடம் பிடித்து விட வேண்டும் என்பதாகத்தான் இருக்கிறது. அடுத்த விசயதசமியின் போது மூன்று வயதைத் தாண்டி விடும் என்பதற்காகவே இரண்டரை வயதுப் பிள்ளைகளைச் சிங்காரித்துக் கொண்டதோடு தாங்களும் நாகரிகமான உடையிலும், மிடுக்குடனும் வந்து காத்திருந்தார்கள். அப்படி வந்தால் தான் அந்தப் பள்ளி நிர்வாகம் தங்களைக் கவனிக்கும் என்பதும் கூட உண்மை தான்.
பள்ளிக்கூடம் சொல்லும் கல்விக்கட்டணத்தைச் செலுத்தத் தயாராக வருவதோடு, அந்தப் பள்ளியின் பொறுப்பாளர்களிடம் தருவதற்கு ஒரு பரிந்துரைக் கடிதத்தையும் கையில் வைத்திருந் தார்கள். காத்திருக்கும் ஒவ்வொருவரிடமும் அத்தகைய கடிதம் ஒன்று இருந்தது ஆச்சரியமாக இருந்தது. கல்விக் கட்டணம் செலுத்தும் பெற்றோர்களிடம் பரிந்துரைக் கடிதத்தை எதிர்பார்க்கும் பள்ளி நிர்வாகங்களின் பின்னணி நோக்கம் விநோதமானவை.
மெட்ரிக் பள்ளிகளில் மாணாக்கர் சேர்க்கைக்கான நேர்காணலில் மாணாக்கரைப் பார்ப்பது மூன்றாம் பட்சம் தான். முதல் நேர்காணல் பெற்றோர்களுக்குத்தான். தனியார் நிறுவனத்தில் உயர் பதவியில் இருக்கும் ஒருவர் தனது மகளுக்கான நேர்காணலை முடித்து விட்டு வெளியில் வந்து தன்னை ஆசுவாசப் படுத்திக்கொண்டு இப்படிச் சொன்னார்:தான் வேலைக்குத் தேர்ந்தெடுக்கப் பட்ட போது சந்தித்த நேர்காணல் கூட இவ்வளவு கடினமாக இருந்ததில்லை என்று. தன்னுடைய வேலைக்கான நேர்காணலில் மூன்றுகேள்விகளுக்குத் தான் பதில் சொல்ல வேண்டியிருந்ததாம். ஆனால் மகளின் எல்கேஜி படிப்பிற்காக இருபது கேள்விகளுக்குப் பதில் சொன்னாராம். வேலைக்கான நேர்காணலில் கேட்கப் பட்ட நான்கு கேள்விகளில் மூன்று கேள்விகளுக்குப் பதில் சொன்ன அவரைப் பாராட்டி உடனே வேலை கொடுத்தனராம். யார் தலைமையில் இந்தியா உலகக் கோப்பையைக்கைப்பற்றியது?” என்ற கேள்விக்குக் கபில்தேவ் என்று உடனே சொன்ன பதிலுக்காக நேர்காணல் செய்தவர்கள் அவரைப் பாராட்டிப் பேசினார்கள் என்று பழைய நினைவுகளுக்குள் சென்றார்.  அப்படிப் பட்ட ஒரு கேள்வி கூட இங்கே கேட்கப் படவில்லை என்று வருத்தத்தையும் தெரிவித்தார்.
தன் மகளைப் பள்ளிக்கூடத்தில் சேர்க்க வந்த தன்னிடம் நேர்காணல் செய்யும் நோக்கம் என்ன? என்ற அடிப்படையான கேள்வியைக் கூடக் கேட்டுக் கொள்ளாமல் தனது நிலைமையின் பரிதாபத்தை வெளிப் படுத்தும் இவரைப் போன்ற பெற்றோர்களுக்குக் கல்வி மீது இருக்கும் குருட்டு நம்பிக்கை தான்  மெட்ரிக் பள்ளிகளின் பலம் என்று சொன்னால் அவர் சும்மா விட மாட்டார். நிச்சயம் சண்டைக்கு வருவார் என எனக்குத் தெரியும். பெற்றோர்களின் பொருளாதார, சமூக, உளவியல் பின்னணிகளை அறியும் நோக்கம் கொண்ட ஆழமான நேர்காணல்களைப் பள்ளி நிர்வாகங்கள் நடத்துகின்றன என்று சொன்னாலும் இத்தகையோர் புரிந்து கொள்ளப் போவதில்லை.
அவரிடமும் ஒரு சிபாரிசுக் கடிதம் இருந்தது. ஏற்கெனவே இந்தப் பள்ளியில் தனது மகனைப் படிக்க வைத்துப் பொறியியல் கல்லூரிக்கு அனுப்பியிருக்கும் ஒருவர் தந்த பரிந்துரைக் கடிதம் அது. இப்படிப் பட்ட பரிந்துரைகளுக்கு எந்தவித மதிப்பும் இல்லையென்றாலும், அத்தகைய கடிதங்களை வாங்கி வரும்படி மறைமுகமாகப் பள்ளி நிர்வாகங்கள் வலியுறுத்துகின்றன. பரிந்துரைக் கடிதங்கள் ஒருவகையில் பள்ளி நிர்வாகங்களுக்குச் சில ஆலோசனைகளையும் வழிகாட்டுதல்களையும் செய்கின்றன. அக்கடிதத்தைக் கொண்டு வருபவரின் பொருளாதாரப் பின்புலம், கல்வி மீது அவருக்கு இருக்கும் விருப்பம் போன்றவற்றைச் சுட்டிக் காட்டுகின்றன. அப்படிப் பட்ட பரிந்துரைக்  கடிதத்தோடு வருபவர்கள் பிள்ளைகளைப் பள்ளியில் சேர்த்த பின்பு  பிரச்சினைகளை எழுப்பாமல் இருப்பார்கள் என்ற உத்தரவாதத்தைக் கூடச் சில கடிதங்கள் சுட்டிக் காட்டுகின்றன. அப்படி ஏதாவது பிரச்சினை செய்தால், பரிந்துரை செய்தவரிடம் முறையிடுவோம் என நிர்வாகிகள் மிரட்டவும் அக்கடிதங்கள் கருவியாகப் பயன்படும் என்பதைத் தனியாகச் சொல்ல வேண்டியதில்லை.
பணம் மட்டுமே எங்கள் குறிக்கோள் அல்ல; தரமான கல்வியும், குழந்தைகளின் நலனில் அக்கறையும் தான் எங்களுக்கு முக்கியம் என்று காட்ட விரும்பும் பள்ளி நிர்வாகம் கடைப்பிடிக்கும் உத்திகள் அனைத்துமே பணம் சார்ந்தவை என்பதைப் பெற்றோர்கள் உணர்வதில்லை. பள்ளிக்கூடமே வாகனங்கள் ஏற்பாடு செய்தல், இடைவேளையில் உணவு வழங்குதல், ஓய்வு வேளைகளில் படுத்துக் கொள்ள வசதி உருவாக்குதல், வகுப்பறைக் கல்வியோடு மூன்று வயது முதலே ஓவியம், இசை, கணிணி எனப் பிறதுறை அறிவையும், திறனையும் தருதல் என ஒவ்வொன்றுக்கும் தனித்தனியாகப் பணம் பெறும் பள்ளிகளே இன்று சிறந்த பள்ளிகளாகக் கணிக்கப்படுகின்றன.
இப்படிக் கணிப்பதற்கான காரணங்கள் என்னவாக இருக்கக் கூடும்? இவை எதனையும் தாங்கள் படிக்கும் போது இந்தப் பெற்றோர்கள் பெற்றவர்கள் இல்லை. அவையெல்லாம் கிடைத்திருந்தால் இப்போது இருக்கும் வாழ்க்கையை விடச் சிறப்பான வாழ்க்கையை தாங்கள் உருவாக்கிக் கொண்டிருக்க முடியும்  என அவர்கள் நம்புகிறார்கள். இத்தகைய நினைப்புகளும் நம்பிக்கையும் நடுத்தர வர்க்கத்தின் எல்லாத் தரப்பு மனிதர்களிடத்திலும் இருக்கிறது என்றான பின் கிராமப் புறத்து அப்பாவிகளிடம் பரவாமல் என்ன செய்யும்? கிராமத்து மனிதர்கள், நகரத்தின் அனைத்துத் தரப்பினரும் வாழ்க்கையைப் பலவிதமாக அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள் என்று நினைக்கும் நிலையில் கிராமத்து மனிதர்களின் நம்பிக்கையைத் தவறெனச் சொல்ல முடியாது.
நான் பார்த்த பள்ளிகளின் வாசலில் கூடப் பள்ளிக்கூடம் போவதற்குத் தயாரான மனப் பக்குவம் கொண்ட குழந்தைகள் ஒருவர் கூட நிற்கவில்லை. ஐந்து ஆண்டுகள் முடிந்தபின்பு தான் குழந்தைகளைப் பள்ளிக்கூடம் அனுப்ப வேண்டும் என்ற செய்தியை விழிப்புணர்வுப் பிரச்சாரமாக எடுத்துக் கொண்டு ஒரு தன்னார்வ நிறுவனத்தின் தொண்டர்கள் நமது நடுத்தர வர்க்கப் பெற்றோர்களின் முன்னால் போய் நின்றார்கள். அவர்களோடு சேர்ந்துதான் நானும் சென்றிருந்தேன். அவர்களுக்குக் கிடைத்தவைகள் வெறும் ஏச்சுக்களும் வசைகளும் என்று மட்டும் சொல்லி விட முடியாது.
அந்த நிகழ்வுகளை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கும் போது எனது பள்ளிக்கூட நுழைவு நினைவுக்கு வந்தது. நான் சரியாக ஐந்து வயதில் பள்ளிக்குப் போனவன் இல்லை. ஆறு வருஷத்தையும் தாண்டி என்னுடைய அண்ணனின் இடுப்புப் பெல்ட்டால் அடிகள் வாங்கிக் கொண்டு பள்ளிக் கூடம் போகத்தொடங்கியவன். அப்பொழுதெல்லாம் பள்ளிக் கூடங்களில் சேர்ப்பதற்கு இருக்க வேண்டிய தகுதி ஒன்றே ஒன்று தான். பள்ளியில் சேர வரும் சிறுவனோ, சிறுமியோ தனது வலது கையால் இடது காதைப் பிடித்துக் காட்ட வேண்டும். அப்படிப் பிடித்துக் காட்டி விட்டால், பள்ளியின் தலைமை ஆசிரியரே அவருக்கு ஐந்து வயது எனக் கணக்கிட்டு ஒரு பிறந்த தேதியை எழுதிப் பள்ளியில் சேர்த்துக் கொள்வார். அவர்களது பள்ளி வாழ்க்கை தொடங்கி விடும். நான் பள்ளிக்கூடம் போகத்தொடங்கிய போது ஆறு வயதைத் தாண்டியவன் என்றாலும், அப்போதுதான் ஐந்து வயது முடிந்தவன் எனக் கணக்கிட்டு பிப்ரவரி மாதத்தில் ஒரு நாளை எனது பிறந்த நாளாக எழுதினார் பஞ்சாயத்து யூனியன் பள்ளியின் தலைமையாசிரியர்.
வீட்டுக்குப் போனவுடன் அம்மாவிடம் என்னுடைய பிறந்ததேதியைக் கேட்ட போது தேதியெல்லாம் ஞாபகத்தில இல்லை; காத்திக மாச அடப்புல, பெரிய காத்திகைக்கு முன்னால பெறந்தேன் என்றார். கார்த்திகை மாதம் என்றால் விஜயதசமிக்குப் பக்கத்தில் தான். விஜ் ஆனால் தலைமையாசிரியர் மாசி மாதத்தில் பிறந்தவனாக ஆக்கி விட்டதில் அவருக்கு வருத்தம் தான். ஒரு மாதம் கழித்துத் தலைமையாசிரியரிடம் வந்து அம்மாவின் அண்ணன் - எனது தாய்மாமா- வந்து கேட்ட பள்ளிக்கூடம் சேர்க்கும் போது ஐந்து வருடம் ஆகி இருக்கணும்; அதுதான் கணக்கு என்று சமாதானம் சொல்லி அனுப்பி வைத்தார். அவர் போன பின்பு எனது வலது கையால் திரும்பவும் ஒரு முறை இடது காதைப் பிடித்துப் பார்த்தேன். முழுக் காதையும் வலது உள்ளங்கை மறைத்தது.
அப்படிப் பட்ட பள்ளிக் கூடத்தில் படித்து மேடேறியவர்கள் தங்களது பள்ளிப் பருவ வாழ்க்கையினை  நினைக்கிறார்கள். தாங்கள் விரும்பவில்லை என்றாலும் இன்னும் கூடுதலான கட்டுப்பாடுகளோடு கல்வி கிடைக்காமல் போனது துரதிர்ஷ்டம் என ஏங்குகின்றனர். அந்தக்  கட்டுப்பாடுகளை தங்கள் பிள்ளைகளுக்குத் தந்துவிடத் துடிக்கிறார்கள். ஆனால் அந்தத் துடிப்பு அவர்களது சுதந்திரமான கற்றல் முறையில் தலையை நுழைக்கும் காரியம் என்பதை அறியாமலேயே காரியங்கள் ஆற்றுகிறார்கள் என்பது தான் வேடிக்கை. இதற்காக வலது கை செய்வதை இடது கண் அறியாமல் செய்து கொண்டே இருக்கிறார்கள்.  தங்களின் வருமானத்தின் பெரும்பகுதியைப் பிள்ளைகளின் படிப்பிற்காகவும், திறமைகளை வளர்ப்பதற்காகவும் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். அப்படியான மனநிலைக்குத் தங்களை ஒப்புக் கொடுத்து விட்ட தமிழ்ச் சமூகம் மெட்ரிக் பள்ளிகளின் கட்டணங்களைச் சீரமைக்கும் போராட்டத்தைத் தன்னெழுச்சியாக நடத்துகிறது என்பதை என்னால் இன்னும் கூட நம்ப முடியவில்லை தான். ஆனால் பல நேரங்களில் தூண்டியவர்களின் உண்மையான நோக்கத்தைத் தாண்டிப் பொய்ப் போராட்டங்களும், கலவரங்களும் பொதுமக்களின் கைகளுக்குத் தாவி விடுவதும் உண்டு.
தூண்டுதல் காரணமாகவோ, தன்னெழுச்சியாகவோ, தொடங்கிய போராட்டம் வலுத்ததன் காரணமாக அரசு நியமித்த ஒரு நபர் விசாரணை ஆணையத்தின் விளைவாக ஏற்பட்ட அதிர்வலைகள் இன்னும் தொடர்ந்துகொண்டிருக்கின்றன. தமிழக அரசின்  கல்வித்துறைக்குக் கட்டுப்படாதவர்கள் போலத் தோற்ற மளித்த மெட்ரிக் பள்ளிகளின் முதலாளிகளை வளைத்துப் பிடிக்கக் கிடைத்த ஆயுதமாக இந்தக் கோரிக்கைகளைக் கணித்தது அரசு. அதன்தொடர்ச்சியாக அரசின் நிர்வாக எந்திரம் மக்கள் கோரிக்கையைப் பரிசீலனைசெய்யவும், கட்டணங்களைச் சீரமைக்கவும் என ஒரு நபர் விசாரணை ஆணையம் ஒன்றை அமைத்தது என்பதை நாம் அறிவோம். அந்த ஆணையத்தின் தலைவராகப் பொறுப்பேற்ற நீதிபதி கோவிந்தராசன் தனது பொறுப்புகளை ஓரளவு நிறைவேற்றி விட்டு விலகிக் கொண்டார்; அவரது இடத்தில் இப்போது நீதிபதி ரவிராஜபாண்டியன் பொறுப்பேற்றுள்ளார் என்பதும் நாம் அறிந்ததுதான். நீதிபதி கோவிந்தராசனின் விலகலுக்குக் காரணங்கள் பல சொல்லப்படுகின்றன. ஆணையம் சுதந்திரமாகச் செயல்பட முடியாத சூழல் காரணமாகப் பதவி விலகினார்என்றும், அரசின் ஒத்துழைப்பின்மை காரணமாக விலகிக் கொண்டார் என்றும்ஊடகங்கள் பல யூகங்களைச் செய்திகளாக வெளியிட்டன. அவ்வூகங்களில்  உண்மைகள் இருக்கலாம்; அல்லது இல்லாமலும் இருக்கலாம்.. ஒரு தனிமனிதராக நீதிபதி கோவிந்தராசனுக்கு அரசும், அமைப்புகளும் ஏற்படுத்திய தடைகளும்சிக்கல்களும் மட்டுமே  பதவி விலகி விடும்படி தூண்டியிருக்கும் என்றநினைப்பதும், அக்காரணங்கள் மட்டுமே ஏற்கத்தக்க காரணங்கள் என நம்புவதும் ஆரோக்கியமான மனநிலையா? எல்லாவற்றையும் சந்தேகித்துப் பழகிப் போன மனம் வேறு மாதிரி யோசிப்பதில்லை. நமது ஊடகங்கள் அப்படி யோசிக்க விடுவதில்லை.
பொதுவாக நமது ஊடகங்களும் அதில் பணியாற்றுவோரும் எல்லா மனிதர்களையும்பொதுமனிதர் களாகவே பார்க்கும் மனநிலைக்குப் பழக்கம் செய்து கொள்கின்றனர் எனத் தோன்றுகிறது. அதனாலேயே அவர்களின் மனம் எப்போதும் நிர்வாகத்தைக்கண்காணிக்கும் கண்கொத்திப் பாம்பாக இருக்கப் பார்க்கிறது. அப்படிச்செயல்படுவது சமூகப் பொறுப்புள்ள ஊடகத்துறைக்கும் அதன் பணியாளர்களுக்கும் அவசியமானது என்பதில் எனக்குக் கருத்து வேறுபாடும் இல்லை. ஆனால் ஒருதனிமனிதன் வேறுசில காரணங்களுக்காகவும் உடல்நிலை ஒத்துழைக்கவில்லை என்றுசொல்லி விட்டுப் பொறுப்பைத் தட்டி கழிக்கலாம். அல்லது உண்மையிலேயேஉடல்நிலை ஒத்துழைக்காமல் தடுத்திருக்கவும் வாய்ப்புண்டு அவரது உடல்நிலை ஒத்துழைக்கவில்லை என்று சொன்னது அவரது தனிமனிதப்பிரச்சினை.
வலது கையும் இடது காதும் சந்தித்துக் கொள்ள, பள்ளி வாழ்க்கையைத் தொடங்கிய தலைமுறை வலது கையாலும் இடது கையாலும் பணத்தை அள்ளிக் கொடுத்துப் பள்ளிக் கல்வியை ஆராதித்துக் கொண்டிருக்கிறது. காலமாற்றம் கண் முன்னே விரைவாக ஓடிக்கொண்டிருக்கிறது.

கருத்துகள்

குட்டி மணி இவ்வாறு கூறியுள்ளார்…
KALVI ENUM WANIKAM SEVAI AAVATHU EPOTHU?
hariharan இவ்வாறு கூறியுள்ளார்…
இன்றைய மக்களின் மோகத்தை அழகாக சொன்னீர்கள்.. எனது உறவினர் வீட்டில் தாயும் தந்தையும் ‘கையெழுத்து’ போடும் அள்வுக்கு கல்வி கற்றிருக்கிறார்கள். ஆனால் இன்று அவர்களின் புதல்விகள் மெல்நிலைப் பள்ளித்தேர்வுகளில் நல்ல மதிப்பெண் பெறுகிறார்கள் ஆனாலும் அவர்கள் எல்லொரிடத்தும் தங்கள் குழந்தைகளின் கல்வியைப் பற்றி பெரும்பாலும் குறைகூறுகிறார்கள். என்னிடம் எப்போதாவ்து பேசினாலும் கல்வியைப் ப்ற்றி பேசாமல் இருப்பது கிடையாது. ஒரு விதத்தில் பெற்றோர்கள் குழந்தைகளின் கல்வி விவகாரத்தில் அக்கறை (அதீத்)கொள்வது fashion ஆகிவிட்டது.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பெரியார்- எப்போதும் பேசுபொருள்

பெரியார்மண்ணும் பிராமணியத்தின் இயக்கமும்.

நாத்திகம் என்னும் ஆன்மீகம்