இந்தியத் தாயே! மக்களின் இன்ப துன்பங்களைக் கணிக்கின்ற நீயே எல்லாருடைய மனத்திலும் ஆட்சி செய்கிறாய். நின் திருப்பெயர் பஞ்சாபையும், சிந்துவையும், கூர்ச்சரத்தையும் மராட்டியத்தையும், திராவிடத்தையும், ஒரிசாவையும். வங்காளத்தையும், உள்ளக் கிளர்ச்சி அடையச் செய்கிறது. நின் திருப்பெயர் விந்திய, இமய மலைத்தொடர்களில் எதிரொலிக்கிறது; யமுனை, கங்கை ஆறுகளின் இன்னொலியில் ஒன்றுகிறது; இந்தியக் கடலலைகளால் வணங்கப்படுகிறது. அவை நின்னருளை வேண்டுகின்றன; நின் புகழைப் பரவுகின்றன. இந்தியாவின் இன்ப துன்பங்களைக் கணிக்கின்ற தாயே. உனக்கு வெற்றி! வெற்றி! வெற்றி! கவி ரவீந்திரநாத் தாகூர் எழுதிய ஜனகனமன என்ற கவிதையின் அதிகாரப்பூர்வ தமிழாக்கம் இது. 1911 இல் கல்கத்தாவில் நடந்த இந்தியதேசியக் காங்கிரஸின் மாநாட்டில் இந்தப்பாடல் பாடப்பெற்றது. பாடியவர் சரளாதேவி சௌதுராணி; தாகூரின் உறவினர் அவர். 1950 இல் இந்திய அரசியலமைப்புச் சட்டம் உருவாக்கப்பெற்றபோது அப்போதைய ஜனாதிபதி ராஜேந்திர பிரசாத்தால், இந்தக் கவிதை தேசத்தின் கீதமாக அறிவிக்கப்பெற்றது.