காக்கா முட்டையும் தமிழ்த்திரளும்.



வெகுஜன சினிமா விரும்பிகளைத் தன்னிலை மறக்கச் செய்து,  தரமான சினிமாவின் பக்கம் நெருங்கிவரச் செய்துள்ளது காக்கா முட்டை. கலை, வணிகம், விருதுகள். விமரிசகர்களின் பாராட்டு என எல்லாவகையிலும் தமிழ்ச் சினிமாவின் நீண்ட நெடிய வரலாற்றில் முக்கியத்துவம் பெற்ற படம் இதுவரை இதுபோல் இல்லை என எழுதப்படப்போகிறது. இயக்கமும் கலைநோக்கமும் தனித்துவமாக வெளிப்பட்டதை ஏற்றுக் கொண்ட தமிழகப் பார்வையாளர்களின் ஏற்புநிலை ஆச்சரியமூட்டுவதாக இருக்கிறது.
தமிழகப் பெருநகரங்களிலும் சிறுநகரங்களிலும் காட்டப்பட்ட முதல் நாள் தொடங்கிப் பார்வையாளத்திரளால் பெரும் ஆரவாரத்தோடு பார்க்கப்படும் படமாக ஆகிவிட்டது. வசூலுக்கு உத்தரவாதம் அளிக்கும் நாயக நடிக - நடிகையர்கள் இல்லை; ஆட்டம்பாட்டம் இல்லை; காமெடிக்காட்சிகள் இல்லை என்றாலும் பார்க்கப்பட்டிருக்கிறது. இவை இருந்தால்தான் பார்ப்பார்கள் என்ற நம்பிக்கையும் கூற்றும் பொய்யாக்கப்பட்டிருக்கிறது. இது எப்படி?

பார்வையாளர்களின் ரசனைக்கும் நியாயமான எதிர்பார்ப்புகளுக்கும் குறைவைக்காத கதையம்சம், திரைக்கதை, காட்சி அமைப்புகள் வைக்கக் கூடிய இயக்குநர் என்ற அறிமுகமும் இல்லை. இயக்குநரின் முதல் படம்.  என்ற போதிலும் படம் நிதானமாக ரசிக்கப்படுகிறது. அண்மைக்காலத்தில் இப்படியொரு வரவேற்பைப் பெற்ற தரமான தமிழ் சினிமா வேறொன்றுமில்லை. பாலாஜி சக்திவேலின் காதல், சிம்புத்தேவனின் இம்சை அரசன் 23 ஆம் புலிகேசி போன்ற படங்கள் அதன் இயக்குநர்களுக்கு முதல் படங்கள் தான். அவையெல்லாம் வந்து நிதானமாகப் பார்வையாளத் திரளை இழுத்துக்கொண்டவை; பாராட்டப்பட்டவை. காக்கா முட்டை நேரடியாக விருதுபெற்ற படம். விருதுபெற்ற படம் என்ற காரணத்தாலேயே ஒதுக்கப்படும் வாய்ப்புகளே இங்கு அதிகம். ஒதுக்கப்படும் என்ற பயத்தோடு  9 மாதங்கள் காத்திருந்த படம். தங்கள் தயாரிப்பின் மீது கொண்ட நம்பிக்கையின் பேரில் திரைக்குக்கொண்டு வந்த நம்பிக்கையைப் பொய்யாக்காமல் வெற்றி பெற்றிருக்கிறது காக்காமுட்டை. வெற்றிபெறச் செய்திருக்கிறார்கள் தமிழின் திரளான பார்வையாளர்கள்.  

ஒருவாரகால இடைவெளியில் மெல்லமெல்லப் பார்வையாளர்களைத் திரட்டிக் கொண்ட பருத்திவீரன், சுப்பிரமணியபுரம், ஆடுகளம், வெண்ணிலா கபடிக்குழு போன்ற படங்களிலிருந்து முற்றிலும் மாறுபட்ட காக்கா முட்டையைத் தமிழ்ப் பார்வையாளர்கள் பார்க்கிறார்கள்; ரசிக்கிறார்கள்; கொண்டாடுகிறார்கள் என்பது தமிழ்ச் சினிமாவுக்கு சிறப்பான எதிர்காலமிருக்கிறது என்பதற்கான அடையாளமாக மட்டும் நான் நினைக்கவில்லை. தமிழ்ச் சமூகம் அறிவார்ந்த ரசனைக்குள் நுழையக் காத்திருக்கும் தருணத்திற்காகக் காத்திருந்ததன் வெளிப்பாடாக நான் நினைக்கிறேன். வெகுமக்கள் ரசனை என்பது வரையறுக்கப்பெற்ற ஒன்று என்பதாகச் சொல்லப்பட்ட சூத்திரங்கள் அனைத்தும் பொய்யானது என நிரூபித்த புதிய திசைகாட்டலாக அமைந்துவிட்ட காக்காமுட்டை, கலைத்துவம் கூடிய சினிமாவின் உதாரணம். 



ருசியின் செய்நேர்த்தி

எல்லாக் கலைவடிவங்களும் தன்னை நிலைநிறுத்திக் கொள்வது அவற்றின் செய்நேர்த்தியின் வழியாகவே என்பது பொதுவான கணிப்பு. செய்நேர்த்திக்குள் இருப்பது மனிதவாழ்க்கையின் ஆதாரமான கேள்வியாகவோ, தேடலாகவோ, விவாதமாகவோ இருந்துவிட்டால், அந்தக் கலைவடிவம் அதன் இலக்கை- வாசகர்களை -பார்வையாளர்களைத் தன்பக்கம் சேர்த்துக்கொள்ளும். செய்நேர்த்தி சரியாக வெளிப்பட்டாலும் உள்ளிருப்பது மனித வாழ்வின் அடிப்படை ஆதாரம் சார்ந்ததாக இருக்கவேண்டும். பசியும் பசியின் நிமித்தமுமான காரணங்கள் அடிப்படைச் சொல்லாடல்களுள் முதன்மையானது. அப்படிச் சொல்பவர்கள் அதனை உயிர்ப்பசி, உடல்பசி, உதரப்பசி எனப் பிரித்தும் பேசியிருக்கிறார்கள். பசியைப் பற்றிப் பேசும்போது அதன் மறுதலையாக ருசியையும் நினைத்துக் கொள்கிறது மனித மனம். எல்லாப் பசிகளும் உடனடித்தேவை சார்ந்திருக்க ருசியோ அதிலிருந்து விலகி நிற்கிறது. நிறுத்தி நிதானமாக மென்று, தின்று, சுவைத்துப் பார்க்க நினைப்பது ருசி. அதன் வழியாக ஆழமான தர்க்கங்களை உண்டாக்கக் கூடியது.  

வயிற்றுப்பசிக்குச் சோறு கிடைப்பதில் சிக்கல் இல்லாத சிறுவர்களுக்கு ருசித்துப் பார்க்கும் ஒன்றாக இருந்தது அரசமரத்தில் கூடுகட்டிய காக்கைகளின் முட்டைகள். உயரத்திலிருந்தாலும் ஏறியெடுத்துவிட முடியும் அவர்களால். ஆனால் மரம்வெட்டப்படுவதில் விரட்டப்பட்ட காக்கைகளோடு ருசித்துப் பார்த்த அதன் முட்டைகளும் இல்லாமல் ஆகின்றன. அதே இடத்தைப் பிடித்துக்கொண்ட பீட்சா கண்ணுக்குத் தெரியும் இடத்தில் இருந்தபோதிலும் எட்ட முடியாத ஒன்றாக இருக்கிறது. இந்தச் சொல்லாடலே படத்தின் மையம். காக்கா முட்டையை ருசித்துப் பார்க்கும் இருசிறுவர்களின் அடுத்த கட்ட ருசியை நகரவாழ்வு - உலகமயம் - என்னும் விரிந்த தளத்தில் - உதரப்பசிக்கான உணவின் மீதான சொல்லாடலாக மாற்றியுள்ளார் படத்தின் இயக்குநர். சமகால முரண்பாட்டோடும், அதனை அடைவதற்கான முயற்சியின் தர்க்கத்தோடும் விவாதித்ததின் வழி மணிகண்டனின் காக்காமுட்டை கலையின் சாத்தியங்களை எட்டியிருக்கிறது. 

செயற்கையே திரைக்கதை

கலையின் கச்சாப்பொருட்கள் ஆளுமை களாக இருக்கலாம்; கருத்தாகவும் இருக்கலாம்; கருத்தியல்களாகவும்கூட இருக்கலாம். இம்மூன்றில் ஏதொன்றையும் அப்படியே சினிமாவாக ஆக்கிவிட முடியாது. எல்லாக் கலைகளுக்குத் தேவை கதை. ஆனால் சினிமாவுக்குத் தேவை திரைக்கதை. கதைகள் உருவாகின்றன என நினைப்பது ஒருவித மனநிலை. கதைகள் உருவாக்கப்படுகின்றன என நினைப்பது அதன் எதிர்நிலை. ஆளுமையையோ, அறக்கருத்தையோ சொல்ல விரும்பும் கலைஞர்கள் முன்னுதாரணமான மனிதர்களை உருவாக்குகிறார்கள்.  “ஒரு ஊரில் ஒரு.. என்றோ, ஒரு குடும்பத்தில் ஒரு மனிதன் என்றோ..” அவர்களால் செய்யப்படும் கதை இயற்கைபோலத் தோன்றுவதும் இயல்பானது.  முன்னுதாரண மனிதர்களைப் பிரதியெடுக்கும் அந்தக் கதைகளுக்கு ஏற்கெனவே அறிமுகமான நடிகர்கள் தேவைப்படுவார்கள் என்பதும் இயல்பானது. 

மணிகண்டனின் காக்கா முட்டை கருத்தியல் வழி உருவாக்கப்பட்ட கதை. இது ஒரு ஊரில் வாழ்ந்த ஒரு மனிதனின் கதையல்ல. இந்தத் தேசத்தின் பெருநகரங்களில் உருவாக்கப்படும் புது ருசிகளைப் பற்றிய கதை. பண்டிகைக்காலத்தில் பாட்டி சுட்ட இடத்தில் தோசையை ருசித்தவர்களுக்குப் புதிய ருசியான பீட்சாவை ருசித்துப் பார்க்கத் தூண்டும் அரசியலின் கதை. பசியாற்றியபின் ருசித்துப்பார்க்கக் கிடைத்த காக்கா முட்டையின் இடத்தில் வந்த பீட்சாவை விரும்பும் இந்த தேசத்தின் விளிம்புநிலைச் சிறுவர்களின் ஆசையை- அந்த ஆசையை நிறைவேற்றுவதற்குத் தரவேண்டிய விலையை - விலையைத் தரத் தயாராக இருந்தாலும் உண்டாகக்கூடிய தடைகளைப் பேசுகிறது இந்தப்படம். உலகெங்கும் நடக்கும் நுகர்வியம் என்னும் திசைதிருப்பலைக் கருத்தியல் ரீதியாக விவாதிக்கிறது காக்கா முட்டை. 

ஒரு கருத்தியலை விவாதிக்கும் கலை செயற்கையாகத் தோன்றுவது ஆச்சரியமல்ல. கருத்தியலை விவாதத்துக்கொண்டுவந்த பெர்ட்டோல்ட் ப்ரெக்ட், சாமுவேல் பெக்கட், அண்டனின் அர்த்தோ, காப்கா, பிக்காஸோ, வான்கோ என  நவீனத்துவக்கலைஞர்கள் ஒவ்வொருவரும் சந்தித்த வசைச்சொல்தான் அது.  நுகர்வியம் என்னும் திசைதிருப்பல் எல்லாத் தளத்திலும் நுகர்வுப் பண்பாடாகப் பரவிக்கொண்டிருக்கிறது என்று குற்றஞ் சாட்டுகிறது காக்காமுட்டை.  பீட்சாவை ருசித்துப் பார்க்க முடியாத அந்தச் சிறுவர்களின் ஏக்கத்தின் இடத்தில் தொடுதிரை அலைபேசிகளை வாங்க முடியாத யுவதிகளை,  வழுக்குத்திரைத் தொலைக்காட்சிப்பெட்டிகளை வாங்கிச் சுவரில் மாட்ட முடியாத குடும்பத்தலைமையை, விரைந்து நழுவும் வாகனங்களை வாங்கி ஓட்டிப்பார்க்கும் கனவு நிறைவேறாத மனிதனை  என அவரவர் பொருளாதாரத் தளத்திற்கேற்ப நிரப்பிக்கொள்ளலாம். இப்படி நிரப்பிக்கொள்ளும்போதுதான்,  தமிழ்ப்பேசும் காக்காமுட்டை உலகப்படமாக நகரும் விதமும் புரியும்.  


கருத்தியலைப் படமாக்குவது என்பதில் மணிகண்டன் தெளிவாக இருந்துள்ளார். பசியைத் தீர்ப்பதற்கு உழைக்க முடிந்த ஒரு நகரத்துச் சேரிக்குடும்பத்துச் சிறுவர்களின்  ‘ருசியின் திசைமாற்றம்’ என்னும் கருத்தியல் தான் அவரது படத்தின் மையம். அதிலிருந்து அவர் விலக வில்லை. விலகிவிடக்கூடாது என்பதனால் தான் சிறுவர்களின் தந்தை ஏன் சிறைக்குச் சென்றார் என்ற முன்கதைக்குள் நுழைந்து இரக்க உணர்வையோ, குற்றவுணர்வையோ உண்டாக்க நினைக்கவிலை. 

மணிகண்டனின் தனித்துவம்

தமிழில் கருத்தியலைப் படமாக்கிய இயக்குநர்கள் பெரும்பாலும் பார்வை யாளத் திரளைச் சென்று சேர்ந்ததில்லை. அதனால் வணிகவெற்றியும் தொடர்ச்சியான திரைப்பட இயக்கமும் சாத்தியமில்லாமல் போயிருக்கிறது.  கருத்தியலைப் படமாக்கும் இயக்குநருக்குப் பெரும்பாலும் நடிகபிம்பங்கள் தேவைப்படாது.  (அக்கிரஹாரத்தில் கழுதை என்னும் கருத்தியலை எடுத்த ஜான் ஆப்ரஹாம் நினைவில் வருகிறார்) இயக்குநரின் எண்ணங்களையும் சொற்களையும் அதன் உணர்வுத்தளத்தில் கடத்தும் நடிகர்களே தேவைப்படுவார்கள். இதிலும் தெளிவாக இருந்துள்ள இயக்குநர் தனது பாத்திரங்களுக்கான நடிகர்களைத் தேர்வுசெய்து நிறுத்தி வெளியேற்றியுள்ளார். நிறுத்துவதும் வெளியேற்றுவதும் தான்  இயக்குநரின்  சிறப்பு. பிரபலமான நடிகர்களை அப்படி வெளியேற்றிவிட முடியாது. 

கருத்தியலைப் பேசும் இந்தப்படத்தின் பாத்திரங்கள் ஏற்ற இறக்கங்களும் சூழலுக்குத் தக்கபடி வளைந்து நெளிந்து வாழும் பாத்திரங்கள் அல்ல. பீட்சா கடை முதலாளியின் வகுப்புத்தோழன் பாத்திரத்தின் பரிமாணம் ஒன்றே ஒன்றுதான். தன்னால் எல்லாம் நடக்கிறது என நம்பிக் கொண்டும் நம்பாமலும் இருக்கும் ஓட்டைவாய்த்தனம் அதன் இயல்பு. அதன்வழி உருவாக்கப்படுவது மெலிதான நகைச்சுவை உணர்வு, இப்படி ஒவ்வொரு பாத்திரமும் ஒற்றைப்பரிமாணத்தால் தான் உருவாக்கப்பட்டிருக்கின்றனர்.    அதனால் அவற்றைத் தட்டையான பாத்திரவார்ப்புகள் என்றே சொல்லலாம்.  தொடக்கம் முதல் முடிவு வரை ஒரே உணர்வை வெளிப்படுத்தும் தட்டையான பாத்திரங்கள் அவற்றின் தர்க்க உணர்வைத் தொடர்ந்து வெளிப்படுத்துவதில் முழுமை அடையும் தன்மையுடையன. அவைதான் இத்தகைய படத்திற்குத்தேவை. அதனைச் சரியாகப் புரிந்துகொண்டு தங்களின் ஒவ்வொருவரும் கச்சிதமாகச் செய்துள்ளனர். பிரபல நடிகர் சிம்பு உள்பட. 


படம் வெளியான மூன்றாவது நாள் திருநெல்வேலியில் பார்த்த நான், மூன்று நாட்கள் கழித்துச் சென்னையிலும் ஒருமுறை பார்த்தேன்.  இருநகரத்துப் பார்வையாளர்களும் படத்தோடு இயைந்தும் விலகியும் பார்த்துக் கொண்டாடியதைக் கவனிக்க முடிந்தது. இயைவதும் விலகுவதும் (sympathy and Empathy) கலைத்துவம் கூடிவந்த படைப்புகளில் மட்டுமே சாத்தியமாகும் ஒன்று.

 “இயைவதும் விலகுவதும்” நடனக்கலையைப் பற்றிப்பேசும் பரத முனிவர் சொல்லும்  ‘சஹிருதயா’ என்னும் கருத்தாக்கத்தின் இன்னொரு வடிவம் தான் என்றாலும், நவீனத்துவக் கலை விமரிசகர்கள் பெருந்திரள் கலைகளின் கலைகளின் கருத்தாக்கமாக வளர்த்தெடுத்துள்ளனர். அக்கருத்தாக்கம் காக்கா முட்டை படத்தில்  குறிப்பிட்ட இடைவெளியில் கச்சிதமாக உருவாக்கப்பட்டு திரளின் ரசனையை உயர்த்தியுள்ளது.  

சினிமாவின் முன்னோடிக் கலைவடிவம் நாடகம் மட்டுமல்ல; நாவலும் கூடத்தான். இம்மூன்றுக்கும் முன்னோடி காவ்யங்களும் இதிகாசங்களும்.  இவையனத்துமே நிகழ்வுகள் அல்லது காட்சிகளால் ஆனவை. அதேநேரத்தில் ஒவ்வொன்றும் தனித்துவமான சொல்முறையைக் கொண்டவை. சினிமாவின் சொல்முறை நிகழ்வுகளை அடுக்குவதில் இருக்கிறது.  அடுக்கப்படும் நிகழ்வுகள் முழுமையும் ஒன்றைச் செய்யும் நோக்கத்தோடு இருக்க வேண்டும் என நினைப்பது ஒருவிதக் கலைக்கோட்பாடு. ஆனால் நவீனத்துவக் கலைக்கோட்பாடு முழுமையும் பார்வையாளனைத் தன்வசப்படுத்தும் நோக்கத்தில் இருப்பதில்லை. படுக்கையில் மூத்திரம் பெய்வதைக் காட்டுவதோடு முடித்திருந்தால் உண்டாக்கும் உணர்வும், இந்தப் படத்தில் அந்தச் சிறுவன் செய்வதுபோலப் பாத்திரத்திற்குள் போட்டு வைப்பதுபோல் காட்டுவதால் உண்டாக்கும் உணர்வும் ஒன்றல்ல. முதல் நிகழ்வு ஒன்றச்செய்யும் நோக்கம்கொண்டது என்றால், இரண்டாவது படத்திலிருந்து விலகிவிடச் செய்யும் நோக்கம் கொண்டது. கரியைப் பொறுக்கி விற்கும் சிறுவர்களின் பொறுப்புணர்வைக் காட்டுவதற்கு ஒருநோக்கம் இருக்கிறதென்றால், சாக்கடைமூடையைக் கொண்டுவந்து விற்கும் இருவரின் பொறுப்பற்ற சேரி இளைஞர்களின் நடவடிக்கைகளைக் காட்டுவதற்கு இன்னொரு நோக்கம் இருக்கிறது. பெருங்குரலெடுத்துப் பாடவேண்டிய சோகநிகழ்விலும் (பாட்டியின் மரணம்), பெரும் ஓசையெழுப்பியிருக்கக்கூடிய இடத்திலும் (சிறுவன் கன்னத்தில் அறையப்படும் அடிக்கப்படும் நிகழ்வு) மௌனத்தால் நிரப்பப்பட்டிருக்கிறது. இதுவும் கூடப் பார்வையாளர்களைப் படத்திலிருந்துக் கொஞ்சநேரம் விலகச்செய்யும் உத்தியே.    இப்படிப் படம் முழுக்க ஒன்றிணையச் செய்யும் நிகழ்வுகளையும் விலகச்செய்யும் நிகழ்வுகளையும் தொடர்ந்து அடுக்கிக் காட்டியுள்ள மணிகண்டன்  இயக்குநர் உத்திகளைப் பார்வையாளர்கள் ஏற்றுச் சிரித்துவிட்டு ஒன்றுவதை ஒவ்வொரு திரையரங்கிலும் பார்க்க முடிந்தது.




திரையரங்குகளுக்கு வருமுன்பே தரமான சினிமா என நம்பப்பட்ட பல படங்களைத் தமிழ்நாட்டின் அனைத்துப் பரப்பும் ரசித்துக் கொண்டாடியதில்லை. நான் சினிமா பார்க்கத் தொடங்கிய பின்னர் திரளான பார்வையாளர்களால் கண்டுகொள்ளப்படாமல் ஒதுக்கப்பெற்ற -விருதுபெற்ற படங்களின் பட்டியல் ஒன்று உண்டு.  ஜெயகாந்தனின் உன்னைப்போல் ஒருவன், யாருக்காக அழுதான், ருத்ரையாவின் அவள் அப்படித்தான், இந்திரா பார்த்த சாரதியின் கதைகளான  மறுபக்கம் (இயக்கம்:சேதுமாதவன்) கண்சிவந்தால் மண்சிவக்கும்  (இயக்கம்: ஸ்ரீதர்ராஜன்), ஜெயபாரதியின் குடிசை, ஹரிஹரனின் ஏழாவது மனிதன் போன்றன அந்தப்பட்டியலில் உடனடியாக நினைவில் வருவன.  வணிகரீதியாக வெற்றிபெற்ற படங்களைத் தந்த மகேந்திரனின் உதிரிப் பூக்கள், மெட்டிஒலி, நண்டு போன்ற படங்களும், பாலுமகேந்திராவின் சந்தியாராகம், வீடு போன்றனவும் திரளான பார்வையாளர்களைச் சென்றடைந்த சினிமாக்கள் எனச் சொல்ல முடியாதவைகளே. மணிகண்டனின் காக்கா முட்டை இந்த வரலாற்றை மாற்றி எழுதியிருக்கிறது. மாற்றி எழுதியிருப்பது தற்செயலான நிகழ்வாக நான் நினைக்கவில்லை. ஆழமான கலைப்பார்வையோடு இயக்குநர் ஒருவரின் செய்நேர்த்தியும் சமூகப்பொறுப்பும் இணைந்ததின் விளைவு எனக் கருதுகிறேன். அதுவே இந்த படத்தை இந்திய அளவிலும் உலக அளவிலும் விருதுகளையும் பாராட்டுகளையும் பெற்றுத்தரும் படமாகவும் திரளான பார்வையாளர்களைத் தன்னிடம் ஈர்த்துக் கொண்ட படமாகவும் ஆக்கியிருக்கிறது. 

தரமான சினிமாவுக்குத் தேவை ரசிக்கக் கூடிய பார்வையாளர்கள். அதனையும் சேர்த்தே உருவாக்கியுள்ள மணிகண்டன் முதன்மையான பாராட்டுக்குரியவர். அவர் உருவாக்கிய எழுத்துப்பிரதியைக் காட்சிப்பிரதியாகவும் நகர்வுப் பிரதியாகவும் ஆக்குவதற்குத் துணைநின்ற தயாரிப்பாளர்கள் தனுஷும் வெற்றிமாறனும் அதேயளவுக்குப் பாராட்டுக்குரியவர்கள். இயக்குநரின் பாத்திரவார்ப்புகளையும் உரையாடலையும் உள்வாங்கி வெளிப்படுத்திய நடிகர்கள் ஒவ்வொருவரும் அவர்களின் ஈடுபாட்டுக்காகவும் வெளிப்படுத்திய உணர்வுகளுக்காகவும் கொண்டாடப்பட வேண்டியவர்கள். ஒருவிதத்தில் இந்தக் கட்டுரை பாராட்டுக் கட்டுரையே.   பாராட்டப் பலகாரணங்கள் படத்தின் உள்ளேயும் வெளியேயும் இருக்கின்றன.

==============================================

நன்றி: அம்ருதா. ஜுலை, 2015

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நவீனத்துவமும் பாரதியும்

நாயக்கர் காலம். இயல் . 6 சாதிகளும் சமூக அசைவியக்கங்கமும்

ப்ளு ஸ்டார் : கிரிக்கெட்டும் அரசியலும்