நம்பிக்கைகள் சிதையத் தொடங்கும் கணங்கள்


[6 ஆண்டுகளுக்கு முன் -2009- உயிர்மைக்கு எழுதிய கடிதம்/ கட்டுரை அதன் ஆசிரியரால் பிரசுரம் செய்யப்பட வில்லை. தாமதமாக அனுப்பப்பட்டது காரணம் . அதில் பேசப்பட்ட விசயங்கள் இன்றும் நினைக்கப்படக் கூடியனவாக உள்ளன.]

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கொள்கைகளின் மீதும் செயல்பாடுகள் மீதும் உண்மையான நம்பிக்கை கொண்ட தமிழ்ச் செல்வனின் எதிர்வினையோடு முழுமையான உடன்பாடு இல்லையென்றாலும் எனது நம்பிக்கையை அவர் சிதைக்கவில்லை. மார்க்சிஸ்ட் கட்சியின் சிவப்புச் சாயங்கலந்த வார்த்தைகள் தான் இந்தியாவைச் சமதர்ம பூமியாக மாற்றும் என்பது அவரது நம்பிக்கை. இந்த நம்பிக்கையையும் கூட விட்டு விடலாம் என்று புத்ததேவும் அவரது முன்னோடி ஜோதிபாசுவும் சொல்லி விட்டார்கள். இலட்சியமும் நடப்பு நிலையும் சந்தித்துக் கொள்வது சாத்தியமில்லை என்கிறபோது யதார்த்தத்தை ஒத்துக் கொள்வதற்குப் புத்திசாலிகள் தயங்குவதில்லை. புத்ததேவும் ஜோதிபாசும் புத்திசாலிகள்.

தமிழ்ச்செல்வனால் அதிதீவிர வலதுசாரிகளுடன் கூட்டணி சார்ந்துள்ளதாகக் குற்றம் சாட்டப்படும் அதிதீவிர இடதுசாரிகள் (இதுவும் வசைச்சொல் தான்) இந்தியாவைச் சமதர்ம பூமியாக மாற்றிக் காட்ட வைத்திருக்கும் நம்பிக்கையோ வேறு . இந்திய தேசம் வேளாண்மையை மையமாகக் கொண்ட நாடு; விவசாயிகளைக முன்னணிப் படையாகக் கொண்டு தான் புரட்சியை நடத்த முடியும்; சமதர்மப் பூங்காவாக மாற்ற முடியும் என்பது அவர்கள் நம்பிக்கை. அதனால் கிராமம் கிராமமாக ரத்த வண்ணம் பூசும் யுத்த தந்திரத்தைக் கைக் கொண்டிருக்கிறார்கள். இரண்டும் நம்பிக்கைகளா? கனவுகளா? சாத்தியமானவைகளா? தெரியவில்லை.

நந்திகிராம் பிரச்சினையைத் தொடங்கியவர்கள் மாவோயிஸ்ட்கள் தான். மார்க்சிஸ்ட் அரசாங்கத்தின் இரட்டை நிலையை அம்பலப் படுத்துவதை நோக்கமாகக் கொண்ட மாவோயிஸ்ட்டுகள் அதைச் செய்யாமல் இருந்தால் தான் ஆச்சரியம். மாவோயிஸ்டுகள் தொடங்கிய போராட்டத்தை மம்தா தனது போராட்டமாக ஆக்கிக் கொள்ளப்பார்த்தார். ஊடகங்கள் ஆக்கிக் காட்டிவிட்டன. குறிப்பாக ஆங்கிலச் செய்தி அலைவரிசைகள் அதிகப் பங்காற்றின. அகிம்சையில் நம்பிக்கை கொண்டவர்களாகக் காட்டிக் கொள்ளும் காங்கிரஸ், பா.ஜ.க., மம்தா போன்ற வலதுசாரிகள் வன்முறையான வழிமுறைகளைப் பின்பற்றும் போராட்டங்களை நடத்தும் மாவோயிஸ்டுகளுடன் கூட்டு சேர்ந்திருப்பது இடது முன்னணி அரசாங்கத்தை அகற்றும் நோக்கமாக இருக்கலாம். அதனாலேயே அந்தப் போராட்டத்தின் தொடக்கத்தைத் தவறெனச் சொல்ல முடியுமா?

தமிழ்ச் செல்வனின் எதிர்வினையைத் தாங்கி வந்த 2008, ஜனவரி உயிர்மை நம்பிக்கை சார்ந்து இரண்டு நிலைபாடுகளை என்னிடம் ஏற்படுத்தி விட்டது. அதைப் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்பதால் இக்கடிதத்தை எழுதுகிறேன்.
படைப்பாளிகளின் ஆளுமை, அடையாளம் சார்ந்து நான் வைத்திருக்கும் நம்பிக்கையைத் தான் இங்கே குறிப்பிடுகிறேன். படைப்பாளி உண்மையின் பக்கம் நின்று பேச வேண்டும் என்ற உறுதியுடன் எதிர்வினை ஆற்றியுள்ள தமிழ்ச் செல்வன், எனது நம்பிக்கையை உறுதிப் படுத்தியுள்ளார். ஆனால் ஜெயமோகன், எஸ்.ராமகிருஷ்ணன், சாருநிவேதிதா என்ற மூன்று படைப்பாளிகளின் ஆளுமைகளையும் பாலாஜி சக்திவேல் என்ற திரைப்பட இயக்குநர் சிதைத்துப் போட்டு விட்டார். தமிழ் சினிமா தொடர்ந்து தமிழ் வாழ்வின் நம்பிக்கைகளைச் சிதைத்துக் கொண்டே இருக்கிறது வேறு வேறு வழிகளில். திறமான படைப்பாளிகளின் ஆளுமைகளையும் சிதைக்கும் அதன் சக்தி அச்சமூட்டுவதாக இருக்கிறது.

‘அரசியல் காரணங்களுக்காகத் தடை செய்யும் அளவுக்குத் தீவிரமான அரசியல் சமூகவிமர்சனத்தைக் கொண்டிருக்கிறது கல்லூரி ’( தமிழிலும் ஓர் அரசியல் சினிமா/ அம்ருதா) என்கிறார் சாருநிவேதிதா. இந்த அதிரடி வாக்கியத்தைப் போல இல்லை எஸ்.ராமகிருஷ்ணன் பாராட்டு. அவருக்கு கைவந்த நாசுக்கானமொழியில், ‘கலையின் செயல்பாட்டில் முதன்மையானது மனித விழிப்புணர்வை உருவாக்குவது. அதைத் தன்னுடைய திரைப்படத்தின் வழியாக உண்மையாகப் பதிவு செய்திருக்கிறார் பாலாஜி சக்திவேல் . அதற்காக அவருக்கு ஹாட்ஸ் ஆப் ’ என்கிறார். அவரது பாராட்டையும் தாண்டியது ஜெயமோகனின் கருத்து. ‘பாலாஜி சக்திவேலின் கல்லூரி கேளிக்கையை மட்டுமே அடிப்படை இலக்காகக் கொண்ட தமிழ்த் திரையுலகில் வெளிப்பட்டிருக்கும் ஆழமான அறச்சீற்றத்தின் பதிவு. ஆகவே தான் இந்த எளிமையான , அடக்கமான, படம் எனக்கு ஒரு காவியமாகவே தெரிகிறது’.

கல்லூரி படத்தைப் பற்றிய ஜெயமோகனின் கனவுகள் சிதையும் காலம், எஸ்.ராமகிருஷ்ணனின் கற்றுத்தரும் அழகியல் என்ற இரண்டு கட்டுரைகளையும் ஒரே இதழில் வெளியிட்டுள்ளது உயிர்மை. பலவிதத்திலும் பொருட் படுத்தத் தக்க காதல் படத்தை எடுத்த பாலாஜி சக்திவேலின் இரண்டாவது படமான கல்லூரி இவ்வளவு பொருட்படுத்தப் படவேண்டிய சினிமாவா நண்பர்களே! படம் பார்த்தவர்கள் யோசித்துப் பாருங்கள். பார்க்காதவர்கள் யோசிக்க விரும்பினால் பார்த்து விட்டு யோசியுங்கள்.

தாங்கள் செயல்படும் சினிமாத்துறைக்குள் நிகழும் எல்லாவற்றையும் பாராட்டுவதை மட்டுமே செய்பவர்கள் நமது சினிமாக்காரர்கள். ஏதாவது குறை அல்லது கண்டனம் தெரிவிக்க வேண்டிய நிர்ப்பந்தம் வந்தால் கூட, கையைக் கட்டிக் கொண்டு எந்த உணர்வையும் வெளிப்படுத்தாமல் தோள்பட்டையைக் குலுக்கிவிட்டுப் போய் விடுவது தமிழ்ச் சினிமாவிற்குள் செயல்படும் பல படைப்பாளிகளின் பொதுக்குணம். [இந்தப் பொதுக் குணத்திற்குள் அடங்க மறுக்கும் தங்கர் பச்சான், நாசர் போன்ற விதிவிலக்குகளும் உண்டு]. அந்தக் குணத்தை முழுமையாக உள்வாங்கிய சினிமாக்காரராக எஸ்.ராமகிருஷ்ணன் ஆகியிருக்கிறார். பத்துப் பன்னிரண்டு சினிமாக்களுக்கு வசனம் எழுதி முழுமையான சினிமாக்காரராக ஆனபின்பும் அப்படி ஆகாமல் இருந்தால் தான் ஆச்சரியம். சாரு நிவேதிதா தனது சினிமா விமரிசனக் கட்டுரைகளின் வழியாக இயக்குநர்களின் சந்திப்பிற்கான பாலத்தை அமைக்கிறார் என்ற சந்தேகம் தோன்றுகிறது. குரு, மொழி, பருத்தி வீரன், கற்றது தமிழ் எனச் சமீபத்திய படங்கள் பற்றிய அவரது விமரிசனக் குறிப்புக்களைத் தொடர்ந்து வாசித்து முடித்து விட்டு கல்லூரி படத்தை அவர் பாராட்டியுள்ளதையும் வாசித்தால் இந்தச் சந்தேகம் உறுதியானது எனத் தோன்றலாம். அவரது தொடர் முயற்சியின் காரணமாகத் தமிழ்ச் சினிமாக்கள் பற்றிய அவரது விமரிசனங்கள் பல நேரங்களில் பொருட்படுத்தத் தக்கதாக இருப்பதில்லை. ஆனால் ஜெயமோகனின் வேகமான திசைமாற்றத்தைப் பொருட்படுத்திப் பேச வேண்டிய அவசியம் இருக்கிறது .

மதிப்பிற்குரிய படைப்பாளிகளே! சினிமாவின் நுட்பங்கள் சார்ந்த குறைபாடுகளையெல்லாம் விட்டு விடுவோம். ஒரு படைப்பின் அடிப்படை இயல்புகள் இருக்க வேண்டுமா? வேண்டாமா? ஒரு தலைராகம், காதல் தேசம் போன்ற பல படங்களில் விவாதிக்கப்பட்ட கல்லூரிக் காலத்து ஆண்- பெண் பழக்கம், நட்பா? காதலா? என்ற பட்டிமன்றத் தலைப்பைப் பட்டிமன்ற பாணியிலேயே நகர்த்திக் கொண்டு போகும் ஒரு சாதாரண சினிமா கல்லூரி.பட்டிமன்றத்தின் மாற்று வடிவமான அரட்டை அரங்கத்தின் வழியாகவே படத்தின் விவாதத்தை நகர்த்தும் இயக்குநர், உச்சநிலைக் காட்சியை (க்ளைமாக்ஸ் ) வைப்பதிலும் கூட அதே உத்தியைத் தான் கைக் கொண்டிருக்கிறார். எடுத்துக் கொண்ட விவாதத்திலும் எந்த முடிவையும் சொல்ல முடியாமல் திசை திருப்பியிருக்கிறார்.அண்மையில் நடந்த ஓர் அரசியல் நிகழ்வை நினைவுபடுத்தி நிகழ்கால அரசியல் பண்பாட்டை விமரிசனம் செய்யும் படம் என்பதற்கான எந்தத் தடயத்தையும் படத்தின் எண்பது சதவீதக் காட்சிகள் வரை தரவில்லை. தர்மபுரியில் நடந்த அரசியல் வன்முறையை நினைவுபடுத்துவதாக படைப்பாளிகள் சொல்லும் அந்தக் காட்சியில் இறந்து போகும் மூன்று பெண்களில் ஒருத்தி காதல் உணர்வைத் தூண்டிய நாயகி ஷோபனா, இன்னொருத்தி நட்புதான் எனத் தொடர்ந்து வாதாடும் கயல்விழி. மூன்றாவது பெண்ணோ நட்பு , காதல் இரண்டையும் அதன் அர்த்தத்தில் புரிந்து கொள்ளாதவள் .பாலாஜி சக்திவேல் கல்லூரிக் காலத்து உறவு நட்பு- காதல் என்ற விவாதத்திற்குள் மட்டுமே நிற்க விரும்பியதால் அந்த மூன்று பெண்களை மட்டும் வன்முறைக்குப் பலியாக்கியிருக்கிறார்.

அதைத் தாண்டி வேறொரு விவாதத்திற்குள் செல்வதற்கான பரப்பும் படத்திற்குள் இருக்கிறது. செழியனின் ஒளிப்பதிவின் மூலம் விரியும் கல்குவாரிகளும், செம்மண் பாதையும் நாயகியின் ஸ்கூட்டர் பயணமும் , அதன் தொடர்ச்சியாக மையக் கதாபாத்திரமான ஷோபனாவின் நினைவுகளும் அசலான இந்திய முரண்பாட்டைத் தொடுகின்றன.கல்லூரிக் கல்வி, இந்திய மேட்டுக்குடியினருக்கு சொர்க்கவாசலின் திறவுகோலாகவும், விளிம்பு நிலையினருக்கு கடக்க முடியாத தடைகளாகவும் இருக்கிறது எனப் பேசும் வாய்ப்பை வழங்கும் அந்த விவாத இழையைத் தொடராமல் போன காரணங்கள் எவையெனத் தெரியவில்லை. அந்த விவாதத்தைப் படத்தின் தொடக்கம் முதலே நகர்த்திக் கொண்டு வந்திருந்தால் படத்தின் உச்சநிலைக் காட்சியோடு பொருத்திப் பார்க்கக் கூடுதல் காரணங்கள் கிடைத்திருக்கலாம். இதையெல்லாம் செய்யாத இயக்குநரை விமரிசனம் செய்யாமல் பாராட்டுவது படைப்பாளிகள் மேல் வைத்திருக்கும் நம்பிக்கைகளைச் சிதைத்து விடும். பாலாஜி சக்திவேலின் கல்லூரி படத்தை விடவும் படைப்பாளிகளின் - ஜெயமோகன், எஸ்.ராமகிருஷ்ணன், சாருநிவேதிதா - போன்ற படைப்பாளிகளின் ஆளுமையும் அடையாளங்களும் சிதைந்து விடக்கூடாது .அது நடந்தால் இலக்கியத்திற்கு பெரும் இழப்பல்லவா?

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ராகுல் காந்தி என்னும் நிகழ்த்துக்கலைஞர்

நவீனத்துவமும் பாரதியும்

தணிக்கைத்துறை அரசியல்