நல்ல திரைப்படங்களைத் தெரிவு செய்யும் பாதைகள்: பகுப்பாய்வை நோக்கிய ஒரு ரசிகனின் பயணம்
.jpg)
என் நினைவில் இருக்கும் ஆகப் பழைய படத்துக்கு வயது அரை நூற்றாண்டு ஆகப் போகிறது. கலையரசி (இயக்கம்: A.காசிலிங்கம்) திரைக்கு வந்த 1963 ஆம் ஆண்டிலேயே படத்தைப் பார்த்திருக்க வாய்ப்பில்லை. மதுரையில் இருந்து 35 மைல் தொலைவில் இருக்கும் எழுமலை டூரிங் டாக்கீஸுக்கு ஒரு படம் வந்து சேர குறைந்தது இரண்டு அல்லது மூன்று ஆண்டுகள் ஆகும். எனது ஊரிலிருந்து இரண்டு மைல் தொலைவிலிருந்த தாய்க்கிராமம் எழுமலையில், எம்.ஜி.ஆர்- பானுமதி நடித்த கலையரசியை இரண்டாம் ஆட்டமாகப் பார்த்துவிட்டு நள்ளிரவுக்குப் பின்னால் வீடு வந்து சேர்ந்த நினைவு இன்னும் பசுமையாக இருக்கிறது. அப்போது எனக்கு ஆறு அல்லது ஏழு வயதிருக்கும்.