சில்லறை வர்த்தகத்தில் பன்னாட்டுக் குழுமங்கள்: ஒரு நேரடி அனுபவம்
சில்லறை வர்த்தகத்தில் பன்னாட்டுக் குழுமங்களுக்கு அனுமதி என்ற கொள்கை முடிவை மத்திய அரசு எடுத்து விட்டது. ஊடகங்களிலும் மேடைப் பேச்சிலும் எதிராக இருப்பது போலப் பாவனை பண்ணும் ஆளுங் கட்சியின் கூட்டணிக் கட்சிகளும், ஆளுங்கூட்டணியை எதிர்ப்பதாகப் பாவனை செய்யும் எதிர்க்கட்சியும், அதன் கூட்டணிகளும் வெளியில் மட்டுமல்ல; பாராளுமன்றத்திலும் எதிர்த்துப் பேசத்தான் போகிறார்கள்.
அதற்காக இந்தக் கொள்கை முடிவு திரும்பப் பெறப்படும் என்று யாரும் நம்ப வேண்டியதில்லை. மைய அரசின் முடிவுகளுக்கு மாற்றாகச் செயல்பட வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கும் ஜெ.ஜெயலலிதாவின் மாநில அரசு உடனடியாக இந்தக் கொள்கை முடிவை ஏற்றுக் கொள்ளாமல் கொஞ்சம் தள்ளிப் போடலாம். உலகமயப் பொருளாதாரத்திற்கு ஆதரவா? எதிர்ப்பா? என்பதில் தீர்மானகரமான முடிவு எதையும் காண்பித்துக் கொள்ளாமல் அவ்வப்போது மனதில் தோன்றும் நிலைபாடுகளுக்கேற்பச் செயல்படும் அவரின் ஆலோசகர்களில் பலர் இந்தக் கொள்கை முடிவின் ஆதரவாளர்கள் என்பதால் நீண்ட காலம் தள்ளிப்போடும் வாய்ப்புகளும் இல்லை.
காலனியத்திற்குப் பிந்திய இந்திய அரசுகள், ஆற்றில் ஒரு கால் சேற்றில் ஒரு கால் என்பது போலத் தான் கொள்கை முடிவுகளை எடுக்கின்றன. தனியார் மயம் கொஞ்சம்; பொதுத்துறையில் கொஞ்சம்; அரசுத்துறையாகக் கொஞ்சம் என அல்லாடுகின்றன. போலந்து அப்படியெல்லாம் தயக்கம் காட்டவில்லை. சோவியத் ருஷ்யாவின் நினைவுகள் கனவிலும் வரக் கூடாது என முடிவு செய்து விட்டுப் பக்கத்தில் இருந்த ஜெர்மனி, பிரான்ஸ், இங்கிலாந்து போன்ற ஐரோப்பிய நாடுகளை மாதிரியாக எடுத்துக் கொண்டு தொடக்கத்திலேயே முக்கிய முடிவுகளை எடுத்து விட்டது. .கசப்பான சோசலிசக் கட்டமைப்பை முற்ற முழுதாகக் கைவிட்டு விட்டு முதலாளியப் பொருளாதாரக் கட்டமைப்புக்குள் நுழைந்த நாடு என்பதால் தயக்கமின்றி எல்லா நிலைகளிலும் தனியார் மயத்தையும் தாராளமயத்தையும் உலகமயத்தையும் ஏற்றுக் கொண்டு விட்டது. ஐரோப்பியப் பெருமுதலாளிகளின் வருகைக்கு அனுமதி அளித்துள்ள போலந்து இன்னும் அமெரிக்காவின் வால்மார்ட்டை அனுமதிக்கவில்லை. பெரும்பாலான ஐரோப்பிய நாடுகளில் வால்மார்ட்டின் பேரங்காடிகள் இல்லை என்பதையும் இந்தியர்கள் கவனிக்க வேண்டும். ஆமை புகுந்த வீடும் அமீனா புகுந்த வீடும் விளங்காது என்னும் சொலவடையை உணர்ந்த இந்தியக் கிராமத்துக்காரகள் போல அமெரிக்கா புகுந்த நாடும் விளங்காது என்பதை உலக நாடுகள் பல உணர்ந்துள்ளன; நமது மத்திய அரசாங்கத்திற்கு மட்டும் அது புரியவில்லை.
மைய மாநில அரசுகளில் அதிகாரத்தைக் கைப்பற்றிய கட்சிகள், கட்சி அரசியலின் லாபத்திற்காக பொதுத்துறை மற்றும் அரசுத் துறைகளின் நிர்வாகத்தைச் சீர்குலைத்து விட்டுத் திசைதடுமாறிக் கொண்டிருந்த போதுதான் உலக அளவில் சோசலிசக் கட்டமைப்பு நாடுகளும் மறு சீரமைப்பு என்ற பெயரில் முதலாளித்துவப் பொருளாதாரத்தை நோக்கி நகரத் தொடங்கின. இந்தியாவின் பிரதமராக வந்து சேர்ந்த பி.வி. நரசிம்மராவுக்கு நிதி அமைச்சராக அனுப்பப்பட்ட டாக்டர் மன்மோகன் சிங்கின் வழிகாட்டுதலில் பொருளாதாரச் சீர்திருத்தங்கள் என்ற பெயரில் தாராளமயத்துக்குள் இந்தியாவும் நுழைந்தது. அரசின் கட்டுப்பாட்டில் இருந்த பொதுத்துறை நிறுவனங்களைத் தனியார் வசம் ஒப்படைக்கும் கொள்கை முடிவுகளை நரசிம்மராவ் அரசாங்கமும், அவருக்குப் பின்னால் வந்த வாஜ்பாய் அரசாங்கமும் தவணை முறையில் எடுத்தன
####### #########
வார்சாவில் ஒரு நுகர்வோனாக என்னுடைய அன்றாடத் தேவைக்கான பொருட்களைப் பல விதமான கடைகளில் வாங்கிக் கொண்டிருக்கிறேன். கேரிபோர், டெஸ்கோ, அவுசான், ரியால், மார்க்போல், மோக்போல், லிடல், சாம்சூப்பர், பித்ரங்கோ போன்ற பன்னாட்டுக் கம்பெனிகளில் மட்டும் அல்லாமல் பக்கத்திலேயே இருக்கும் நம்மூர் உழவர் சந்தைப் போன்ற சந்தையிலும் தினசரித் தேவைக்கான பொருட்களை வாங்கிக் கொள்கிறேன். அதற்குப் பக்கத்திலேயே வாகனங்களையே விற்பனை யகமாக மாற்றி வார இறுதி நாட்களில் வந்து விடும் ’நகரும் அங்காடி’களிலும் கூடச் சாமான்கள் வாங்கிக் கொள்ளலாம். நான் மட்டுமல்ல; இங்குள்ள எல்லாரும் இவ்வகைக்கடைகள் எல்லாவற்றையும் பயன்படுத்திக் கொண்டுதான் இருக்கிறார்கள். பன்னாட்டுப் பேரங்காடிகள் நுழைந்து 20 ஆண்டுகளுக்குப் பின்னும் போலந்தில்- அதன் தலைநகர் வார்சாவிலும் வார்சாவைப் போன்ற பெருநகரங்களான க்ராக்கோ, போஸ்னான், கிடான்ஸ் போன்றவற்றிலும் எல்லா தரப்புக் கடைகளும் இருக்கின்றன; அவை காணாமல் போய்விடவில்லை என்பது ஆறுதலான செய்தி. அதற்குக் காரணம் போலந்து அரசு கடைப்பிடித்து வரும் கட்டுப்பாடுகளும் விதி மீறல்களை அனுமதிக்காக நிர்வாக நடைமுறைகளும் என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். ஒவ்வொரு வகை அங்காடிகளும் 10 அல்லது 15 நிமிடப் பயணத்தில் அடைந்து விடக்கூடிய தூரத்தில் இருக்கின்றன. ஆனால் பெரும்பேரங்காடிகளை உள்ளடக்கிய ”மால்கள்” அருகருகே அமைக்கப்படவில்லை. வாகனங்களில் போனாலே அரைமணி நேரம் ஆகும் விதமாகப் பத்துக் கிலோமீட்டர் தூரத்துக்கும் அதிகமான இடைவெளியில் தான் அமைக்கப்பட்டுள்ளன.
இந்தக் கடைவிரிப்பின் மூலம் லாபம் அடையப்போகிறவர்கள் யார்? யார்? என்பதை முதலில் விளங்கிக் கொள்ளலாம். இக்கொள்கை முடிவினால் அதிக லாபம் அடையப் போவது முதலீடு செய்யப் போகும் பன்னாட்டுக் குழுமங்கள் மட்டுமே என்பது போன்ற வாதங்கள் தூக்கலாக இருக்கின்றன. ஆனால் அது மட்டுமே உண்மை அல்ல. இந்த வாதத்தில் உண்மை இல்லாமல் இல்லை. முதலீடு செய்வதே லாபத்திற்காகத் தானே. பில்லியன் கணக்கில் முதலீடு செய்யும் பன்னாட்டுக் குழுமங்கள் லாபம் அடையாமல் சேவை செய்ய வேண்டும் என்று நினைக்க முடியாது. அதைப் பற்றிப் பேசாமல் அரசும், காங்கிரஸ்காரர்களும் இந்தியப் பொருளாதாரத்திற்கு, இந்திய விவசாயத்திற்கு, இந்திய நுகர்வோருக்கு, இந்தியத் தொழிலாளர் களுக்கு ஏற்படும் நன்மைகளை மட்டுமே பேசுகிறார்கள். இது திசை திருப்பும் வேலை. .
அடிக்கடி கடைக்கு வர விரும்பாத நடுத்தரவர்க்கத்தினர் நீண்ட நாள் கெடாமல் இருப்பதையே விரும்புவார்கள் என்பதைச் சொல்லி விளக்க வேண்டியதில்லை. கைவிரல்களால் எண்ணித் தரப்படாத கரன்சிகளை கணிணி வழியாகவே பரிமாறிக் கொள்ளும் வாய்ப்பு இருக்கும்போது விலை உயர்வுகளைப் பொருட்படுத்தும் மனநிலையெல்லாம் அவர்களுக்கு வராது. தங்களின் சொகுசு வாழ்க்கைக்காக என்ன விலையையும் கொடுக்கத் தயாராக இருக்கிறார்கள். அந்த விலையைக் கொடுப்பவர்களாக அரசுகளும் தனியார் நிறுவனங்களும் அவர்களை ஆக்கி வைத்திருக் கின்றன. உயரும் விலைவாசிகளுக்கேற்ப படிகளும் ஊக்கத் தொகைகளும் தரப்படுவதன் மூலம் அவர்கள் முழுமையாக நுகர்வோராக ஆகி விட்டனர். எழுதி வைக்கப்படும் விலை, வசூலிக்கப்படும் வரிகள் உட்பட அனைத்தும் வெளிப்படையாகத் தெரியும் வகையில் ரசீதுடன் கூடிய வியாபாரத்தை இந்தப் பன்னாட்டுச் சில்லறை வணிகக் குழுமங்கள் நடத்திக் காட்டும். ஆகவே நடுத்தர வர்க்கம் இந்தக் கொள்கை முடிவால் தாங்கள் எதையும் இழக்கவில்லை என்றே நம்புவார்கள். மகிழ்ச்சி கொள்வார்கள். எதையும் இழக்காமலேயே பலன் அடைவதாக அவர்கள் நம்பப் போவதால் இந்தக் கொள்கை, நடுத்தர வர்க்கத்தினர் வரவேற்கவும் ஆதரிக்கவும் செய்வார்கள்; வந்தபின் விட்டுவிடவும் மாட்டார்கள்.
அடுத்ததாக உடனடியாகப் பலன் அடையப்போவது அரசாங்கம். மாதச் சம்பளக்காரர்களிடம் கறாராக வருமான வரியை வசூலிக்கும் கட்டமைப்பை உருவாக்கியுள்ளது போலச் சில்லறை வணிகர்களிடம் கறாரான வரியை வசூலிக்கும் கட்டமைப்பு வசதியை உருவாக்கத் தவறி விட்டன நமது அரசுகள். எல்லாவற்றையும் கணக்கு மூலம் நிர்வாகம் செய்யும் பன்னாட்டுக் குழுமங்களிடம் பெரிய அளவு சிரமங்கள் இல்லாமல் வரியை வசூலித்து விடும் வாய்ப்புகள் உள்ளது. அந்த வரி இதுவரை கிடைத்த வரி வருவாயை விடப் பல மடங்கு கூடுதலாக இருக்கும் என்பதிலும் சந்தேகம் கொள்ள வேண்டியதில்லை. இந்த வரிவாயைக் கூட்டாமல் குறைப்பதற்கு அரசை நடத்தும் கட்சிகளும் அதன் பொறுப்பாளர்களும் பெறும் உள் ஒதுக்கீடுகள் அரசாங்கத்திற்கு வராமல் போகும் வாய்ப்புகள் இல்லாமல் இல்லை.
புதுவகை அங்காடிகளின் வியாபாரத்தின் மூலம் இந்திய வேளாண்மையும் சிறு மற்றும் குறு ஆலைத்தொழில்களும் பெரிய லாபம் அடையும் என்பதையும் மறுக்க முடியாது. லாபம் அடையும் என்பதைவிட அவற்றின் கட்டமைப்பில் பெரும் மாற்றங்களைச் சந்திக்க நேரிடும் என்று சொல்வதுதான் சரியாக இருக்கும். இந்த மாற்றங்களால் இந்தியர்கள் மட்டுமே பலன் அடைவார்கள் என்பதற்கு எந்த உறுதியும் கிடையாது. இப்போதுள்ள இந்திய விவசாயிகள் தங்களின் உற்பத்திப் பொருட்களுக்கான விலையை அவர்களே நிர்ணயம் செய்யும் வாய்ப்பில்லாமல் இருக்கிறார்கள். அதற்கு முக்கியமான காரணம் உற்பத்திக்குத் தேவையான பொருட்களை வாங்கவும், உற்பத்திப் பொருட்களைப் பாதுகாத்து தேவையை –நெருக்கடியை உண்டாக்கி விலையேற்றத்தை உருவாக்கிக் கொள்ளும் சாதகமான அம்சங்கள் அவர்களிடம் இல்லை. அதனைச் சாத்தியமாக்க அரசின் உதவியையும், வணிகர்களின் தயவையுமே நாடிக் கொண்டிருக்கின்றனர். இதன் காரணமாகவே தங்களின் பிரதிநிதிகளாகக் கருதும் அரசியல்வாதிகளின் மூலம் மானிய விலை உரம், கொள்முதல் விலை நிர்ணயம் ஆகியவற்றைக் கோருகின்றனர். அல்லது வந்த விலைக்கு உற்பத்தியான உடனேயே வியாபாரிகளின் விற்று விட்டுக் கையும் காலும் தான் மிச்சம் எனத் துண்டைத் தோளில் போட்டுக் கொண்டு போகிறார்கள். அல்லது தோல் துண்டுகளையே சுருக்குக் கயிறாக மாட்டிக் கொள்கிறார்கள்.
இந்த நிலையில் பெரும் மாற்றத்தை இந்தக் கொள்கை முடிவு கொண்டு வரும் என்பதைச் சொல்லும் அதே நேரத்தில் அந்த மாற்றம் சரியான திசையில் இருக்காது என்பதையும் உறுதியாகச் சொல்ல முடியும்..இந்திய வேளாண்மை பெருந்தொழில்களைப் போல நவீன மயப்படும் வாய்ப்புகள் அதிகம். சிறு மற்றும் குறு விவசாயிகள் அப்போது போட்டியிட முடியாமல் பெரும் பண்ணைகளுக்குத் தங்கள் நிலங்களைக் குத்தகைக்குக் கொடுத்து விட்டு அங்கே வேலை செய்யும் கூலிகளாக மாறும் வாய்ப்புகள் ஏற்படும். தங்கள் குடும்பத்தில் கார்ப்பரேட் முறையில் வேளாண்மையை வளர்த்தெடுக்கும் திறமைசாலிகளை வைத்திருக்கும் வேளாண் குடும்பங்கள் தொடர்ந்து உணவுப் பொருட்களை உற்பத்தி செய்து பன்னாட்டுக் குழுமங்களின் தேவையை நிரப்பக்கூடும். அல்லது இந்திய வேளாண்மைக்குள்ளும் பண்ணைத் தொழில் என்ற போர்வையில் வெளிநாட்டுக் குழுமங்கள் நுழையக் கூடும். சிறு மற்றும் குறு விவசாயம் அழிக்கப்பட்டு பண்ணை வேளாண்மை பெருகுவதை வளர்ச்சி என நமது அரசுகளும் அதன் திட்டமிடல் வல்லுநர்களும் கூறுவார்கள்.
இங்கே அவர்களின் லாபம் ஈட்டும் வியாபாரமும் தொடர்ந்து கொண்டே இருக்கும். அப்போது இந்தியாவில் இந்தியர்களின் சில்லறை வியாபாரம் மட்டுமே காணாமல் போயிருக்கும் என நினைக்க வேண்டாம். மரபான விவசாயத்தைச் செய்து கொண்டிருக்கும் கிராமங்களும், கைத் தொழில் பட்டறைகளும், சட்டை பாவாடைகள் தைத்துத் தரும் தையல்காரர்கள், சலவைத் தொழிலாளர்கள், முடிவெட்டுபவர்கள், வாகனங்களைப் பழுது பார்த்துத் துடைத்துக் கழுவித் தரும் சேவைப் பணியாளர்கள் என அனைத்துப் பிரிவினரும் ஓரங்கட்டப்பட்டு விளிம்புக்குத் தள்ளப் படுவார்கள். அவர்களுக்கான வெளியாகப் பெருநகரங்கள் இருக்காது. அடுக்குமாடிக் குடியிருப்புகளைக் கட்டுவதற்காகச் சேரிகளும் அதன் மனிதர்களும் ஓரங்களுக்குத் தள்ளப்படுவது போல ரோட்டோரத்துப் புரோட்டாக்கடைகளும், மாமி மெஸ்களும், நாயர் தேநீர்க்கடைகளும் கூடத் தேடிக் கண்டடைய வேண்டியனவாக மாறிப் போகும். பழவண்டிகளும் பூக்காரிகளும் பஞ்சு மிட்டாய் தாத்தாக்களும் இல்லாத பெருநகரங்களில் வாழ்வதை வளர்ச்சியல்ல என்று சொல்பவர்கள் பழம் பஞ்சாங்கமாகக் கருதப்படுவதைக் கூடச் சகித்துக் கொள்ளலாம். தேச விரோதிகள் என்று முத்திரை குத்தும் ஆபத்து இருப்பதால் தப்பித்தல் சாத்தியமில்லை.
இப்படி ஆகிவிடுவதைத் தவர்க்கும் வாய்ப்புகள் இல்லாமல் இல்லை. கட்டுப்பாடுள்ள வியாபார நலன்கள் என்ற அளவில் தான் ஐரோப்பிய நாடுகள் தனியார் மயத்தை அனுமதித்துள்ளன. நான் குடியிருக்கும் அடுக்குமாடிக் குடியிருப்புக்குப் பக்கத்தில் 200 மீட்டர் தூரத்தில் ஒற்றைத் தளத்தில் அமைந்த அங்காடி வளாகம் ஒன்றிருக்கிறது. அந்த வளாகத்தில் உள்ள கடைகள் எல்லாம் ஒற்றைப் பொருள் விற்பனைக்கடைகள். நாய் உணவுகள் மட்டும் ஒரு கடையில் விற்கப்படுகிறது என்றால் இன்னொன்றில் மனிதர்களுக்கான ரொட்டிகள். மற்றொரு கடையில் இறைச்சிகள். ஒன்றில் ஆண்களுக்கான உள்ளாடைகள்; இன்னொன்றில் பெண்களுக்கான உள்ளாடைகள். பூட்டும் சாவியும் ஒரு கடையில் கிடைக்கிறது; அதுக்குப் பக்கத்திலேயே பல்புகள் கிடைக்கிறது. ஒரு கடையில் வீட்டுக்கான உள் அலங்காரப் பொருட்கள் விற்பனையாகிறது; அதுக்குப் பக்கத்தில் பூந்தொட்டிகளும் விற்கப்படுகிறது. ஆண்களுக்கும் பெண்களுக்கும் முடிதிருத்தம் செய்யும் கடையின் எதிரில் குளியல் பொருட்களும், கழிவறைப் பொருட்களும். ஒரு ஓரத்தில் மதுபானங்கள் அருந்தும் வளாகமும் இன்னொரு ஓரத்தில் கையில் ஏந்திச் சாப்பிடும் கடைகளும் இருக்கின்றன. இத்தகைய அங்காடி வளாகங்கள் ஒவ்வொரு அடுக்குமாடிக் குடியிருப்பு வளாகங்களின் பக்கத்திலும் இருக்கின்றன. இவையெவையும் பன்னாட்டுக் குழுமங்களின் வளாகங்கள் அல்ல. உள்ளூர்க்காரர்களின் கடைகள். அங்கும் வியாபாரம் நடக்கவே செய்கின்றன.
இதையெல்லாம் தாண்டி நமது அரசுகள் நமது மக்களுக்கான – விவசாயிகள், வியாபாரிகள், (உடல் மற்றும் மூளை சார்ந்த), தொழிலாளர்கள் ஆகியோர்களின் குடும்பத்தினருக்கான நலன்களைப் பேணும் அரசாங்கமாக இருக்க வேண்டும். அதை மறந்து விட்டுக் கொள்கைகளுக்காகவும் கோட்பாடுகளுக்காகவுமான தேசநலனைக் காவு கொடுப்பனவாக இருக்கக் கூடாது.
==============================================================================
நன்றி: உயிர்மை,நவம்பர் 2012
கருத்துகள்