இடுகைகள்

ஜனவரி, 2018 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

முகம் மாறிய அரசியல் கவிதைகள் :ஜெயதேவனின் முச்சூலம்

பொதுநல அமைப்பாகப் பாவனை செய்த அரசு அமைப்பைக் கைவிட்ட இந்தியாவைக் கவிதைகள்- தமிழ்க் கவிதைகள் முன்வைக்கத்தவறியுள்ளன. தாராளமயம், உலகமயம், தனியார் மயம் உருவாக்கிவைத்திருக்கும் நுண் அமைப்புகளிலிருந்து பேரமைப்புகள் வரை ஒற்றைத் தன்மையுடன் இயங்குவன அல்ல. முதலாளித்துவத்தைத் தாண்டிய பொருளியல் கட்டமைப்பைக் கொண்டிருந்தாலும், பண்பாட்டு நடவடிக்கைகளுக்காக நுண் அலகுகளையும் குடும்பம், சாதி, கோயில், சடங்குகள் போன்றவற்றை அப்படியே நிலவுடைமைக்காலச் சட்டகங்களுடன் பேண நினைக்கிறது.

கமல்ஹாசன்: அடையாளங்களுடன் தமிழ் சினிமா

படம்
தேவா்மகனும் மகாநதியும் விருமாண்டியும் கமல்ஹாசன் – பல்வேறு விதமான கதாபாத்திரங்களை ஏற்று நடிக்கும் திறமை கொண்ட நடிகா். நல்ல சினிமா மீது பற்றும், தமிழ் சினிமாவின் சரியான வளா்ச்சியில் அக்கறையும் கொண்டவா். சினிமாவுக்கு வெறும் வியாபார நோக்கம் மட்டுமே இருக்க முடியாது; சமூகப் பொறுப்பும் உண்டு என நம்புகிறவா்.

அருவி : விமரிசன நடப்பியலின் வகைமாதிரி

படம்
தனது முதல் படத்தைக் கவனிக்கத்தக்க படமாக இயக்குவதில் தீவிரம் கவனம் செலுத்துவதில் வெற்றியடைந்த இயக்குநர்களின் வரிசையில் இணைந்திருக்கிறார் அருவி படத்தின் இயக்குநர் அருண் புருசோத்தமன். அருவி படம் பார்த்துமுடித்தவுடன் நினைவுக்கு வந்த படம் கதை திரைக்கதை வசனம் இயக்கம். அதுவரை தான் இயக்கிய படங்களுக்குத் தனது பெயரை ரா. பார்த்திபன் என எழுதிக்காட்டி வந்தவர், ராதாகிருஷ்ணன் பார்த்திபனின் கதை திரைக்கதை வசனம் இயக்கம் என நீண்ட பெயரை வைத்திருந்தார். அவர் எப்போதும் புதுமைவிரும்பி என்றாலும், அந்தப் படத்தில் காட்டிய புதுமை, காரணமற்ற புதுமைகளாக இல்லாமல், படத்தின் தேவைக்கேற்ற புதுமையாக இருந்தது.பிரெக்டின் காவியபாணிக் கதைகூற்றுமுறையைத் (Epic Narration) தேடிப் பயன்படுத்தியிருந்த பார்த்திபன், படம் முழுவதும் அதன் அடிப்படைத் தன்மையான விலக்கிவைத்தலும்(Alienation) ஒன்றிணைத்தலும் (Involvement) என்பதைக் கச்சிதமாகக் கையாண்டு படத்தைப் பார்வையாளர்களின் முடிவுக்கு விட்டுவைத்தார். இத்தன்மை காரணமாகப் படத்தின் மையக் கதையோடு தொடர்ந்து பார்வையாளர்கள் விசாரணை நிலையிலேயே ஒன்றிணைந்து விலகினார்கள். 

சீர்மலி நகரங்களில் படகுப் பயணங்கள்

படம்
சீர்மலி நகரங்கள் (Smart cities) ஆக்குவதற்கான பட்டியலை இந்திய அரசாங்கம் ஓராண்டுக்கு முன்பே அறிவிக்கத்தொடங்கியது. தமிழ்நாட்டில் முதலில் நான்கு என்றார்கள். நான்கு ஆறு என்றானது. இப்போது சென்னை, மதுரை, சேலம், கோயம்புத்தூர், திருச்சி, திருநெல்வேலி, தூத்துக்குடி, திருப்பூர், வேலூர், திண்டுக்கல், ஈரோடு, கடலூர் எனப் பன்னிரண்டு நகரங்கள் பட்டியலில் இருக்கின்றன. இவற்றில் பெரும்பாலான நகரங்கள் மாநகராட்சி என்ற தகுதியைப்பெற்றவை. திண்டுக்கல், கடலூர், போல ஒன்றிரண்டுதான் மாநகராட்சித் தகுதியை அடையாத நகராட்சிகள்.

கைவிடப்பட வேண்டிய கலைக்கோட்பாடு: கொடிவீரன்

படம்
அண்மையில் வந்த கொடிவீரன் என்ற சினிமாவை இயற்பண்புவாத சினிமாவாக வகைப்படுத்தி விமரிசனம் செய்யலாம். இந்தப் படம் மட்டுமல்ல; இயக்குநர் முத்தையாவின் இயக்கத்தில் கார்த்தி நடித்த கொம்பனும் சசிகுமார் நடித்த குட்டிப்புலியும் கூட இயற்பண்புவாத(Naturalism)க் கலைக்கோட்பாட்டோடு பொருந்தும் சினிமாக்கள்தான். ஒரு குறிப்பிட்ட வட்டாரத்தை வெளிப்படையாக அறிவித்துக்கொண்ட வெளியாகக் கொண்டு நிகழ்ச்சிகளைக் காட்சிகளாக உருவாக்கும் இயற்பண்புவாதப் படங்கள் நுட்பமான தரவுகளை அடுக்கிக்காட்டும் இயல்புடையன. திருவிழா, விளையாட்டு, போட்டிகள், கண்மாயழிப்பு போன்ற பொதுவெளி நிகழ்ச்சிகளையும் குடும்பச்சடங்கு நிகழ்வுகளான குழந்தை பிறப்பு, காதுகுத்து, கல்யாணம், தொடங்கிச் சாவுவீடு வரை உள்ளவற்றில் சிலவற்றைத் தேர்ந்தெடுத்து அடுக்குவதின் மூலம் பண்பாட்டு ஆவணமாகத் தோற்றத்தை உண்டாக்கும் தன்மையை இத்தகைய படங்களில் காணலாம்.