முகம் மாறிய அரசியல் கவிதைகள் :ஜெயதேவனின் முச்சூலம்

பொதுநல அமைப்பாகப் பாவனை செய்த அரசு அமைப்பைக் கைவிட்ட இந்தியாவைக் கவிதைகள்- தமிழ்க் கவிதைகள் முன்வைக்கத்தவறியுள்ளன. தாராளமயம், உலகமயம், தனியார் மயம் உருவாக்கிவைத்திருக்கும் நுண் அமைப்புகளிலிருந்து பேரமைப்புகள் வரை ஒற்றைத் தன்மையுடன் இயங்குவன அல்ல. முதலாளித்துவத்தைத் தாண்டிய பொருளியல் கட்டமைப்பைக் கொண்டிருந்தாலும், பண்பாட்டு நடவடிக்கைகளுக்காக நுண் அலகுகளையும் குடும்பம், சாதி, கோயில், சடங்குகள் போன்றவற்றை அப்படியே நிலவுடைமைக்காலச் சட்டகங்களுடன் பேண நினைக்கிறது.

தேசத்தின் வளம் அனைத்தும் ஒருசிலரின் கட்டுக்குள் இருப்பதைப் பாவனைகள் ஏதுமின்றிச் சரியென வாதிடும் கூட்டத்தை உருவாக்கியிருக்கிறது. வறுமையில் இருப்பதாக நம்புகிறவர்களுக்கும் கொண்டாட்டத்தின் திறவுகோலைக் காட்டி அழைக்கிறது. பெயரிடப்படாத அல்லது பெயரைத் தெரிந்துகொள்ள ஆசைப்படாமலேயே மந்தைகளாகத் திரண்டு மரணக்குழிக்குள் இறங்கிச் செத்துப்போகத் தயாராக இருக்கிறார்கள் மனிதர்கள். மரணத்தைப் பரிசாகக் குற்றவுணர்வின்றிப் பரிந்துரைக்கும் நடைமுறைகள் ஆன்மீகச் செயல்பாடுகளாக அறியப்படுகின்றன. 

இப்படியிப்படிப் பலவிதமாய் மாறிப்போன நம்காலத்து நெருக்கடிகளையும் விளைச்சலையும் உள்வாங்கிப் பேசும் கவிதைகள் இருபதாம் நூற்றாண்டின் பின்பாதியில் எழுதப்பெற்ற அரசியல் கவிதைகள் போல -வானம்பாடிகளின் நெம்புகோல்கவிதைகள் போல இருக்கமுடியாது. இருக்கக்கூடாது. அதனை உணர்ந்த அரசியல் கவிதைகளின் தொகுப்பொன்றாகக் கவி ஜெயதேவனின் முச்சூலம் தொகுப்பைச் சொல்வேன். 

நம் காலத்தின் பெருநிகழ்வுகளையும் அவற்றைப் பின்னின்று இயக்கும் நபர்களையும் அமைப்புகளையும் உள்நுழைந்து விளக்கிக் காட்டும் கவிதைகளைப் பெருமளவில் கொண்டுள்ள ஜெயதேவனின் முச்சூலம் தொகுப்பிலுள்ள கவிதைகள், விளக்குவதை விரிவாகவும், விமரிசனத்தைக் கறார்த்தன்மையில்லாமல் நெகிழ்ச்சியாகவும் முன்வைத்துள்ளன. கறார்த்தன்மை வெளிப்படும்போது தீர்வுசொல்லும் அபாயத்தை நெருங்கிவிடும் வாய்ப்பிருக்கிறது என்பதை உணர்ந்து அதைத் தவிர்த்திருக்கிறார் கவி. 

இக்கவிதைகள் வெளிப்படுத்தும் தொனி வாசிப்பவர்களைக் கையறுநிலைக்கொண்டுபோய்ச் சிந்திக்கத் தூண்டுகிறது. கையறுநிலை என்பதே நம்காலத்துப் பெருந்திரளின் இயங்கியல் போக்கு. கையறுநிலையிலிருப்பவர்களுக்குக் கைகொடுக்கும் வேலை கவியின் வேலையில்லை. பெருந்திரளை வழிநடத்த நினைக்கும் சமூக அரசியல் இயக்கங்களின் வேலை. அதனை நோக்கிப் பேசிவிட்டு ஒதுங்கிக்கொள்ளும் கவிதைகளை நிரப்பி வைத்துள்ள இத்தொகுப்பை வாசித்துப் பரிந்துரை செய்கிறேன். வாசித்துப் பாருங்கள். 
[முழுக்கவிதைகள் அல்ல; 
கவிதைகளின் வரிகள் மட்டுமே இவை] 
உங்கள் கடவுளைத் திருடிக் கொண்டவர்கள்
உங்கள் காதலிகளை அபகரித்தவர்கள்
உங்கள் தாத்தாவின் கைத்தடியை
நுகத்தடி ஆக்கியவர்கள்
எதிரில்.. எதிரில்
ஆயினும் நீங்கள் ஒரு நண்பரை பெற்றாக வேண்டும்
மற்ற தொண்ணூற்று ஒன்பது பேரை வீழ்த்தவாவது
அதில் ஒரு கம்யூனிஸ்ட் இருக்கலாம்
பைபிள் வழி நிற்பவர் நிற்கலாம்
காஸ்ரோ, நீட்சே
இன்னும் ஒரு கடலோடி, அன்றி மலையேறி
ஒரு கவிஞன்
யாராவது ஒருவர் கைப்பற்றி
நீங்கள் கரையேற வேண்டும்
மற்றவர் கருத்து துப்பாக்கிகளிடமிருந்து
தப்பி ஓட....
==================== நண்பரைக் கண்டுபிடித்தல்/ 14 
தூக்கணாங்குருவியின்
கூட்டைப் போல
செப்பம் செய்யப்பட்ட என் பாடல்கள்
காணவில்லை சிலகாலம்
” ஒட்டகம் மேய்ப்பவர் 
வாயில் ஒட்டியிருந்தன 
பேரீச்சம் பழம்போல் என்றனர்” சில யாத்ரிகர்கள்
“பரதவர் வீட்டுப் பெண்களின் 
கறுப்பு முலைகளின் மீது
பாசிமணிகளுடன் கோர்க்கப்பட்டிருந்தன
உம் பாடல்கள்” என்றனர் படகோட்டிகள்
--- உங்களுக்கான பாடல்/ 21
வெறும் பஞ்சு பொம்மைகளை ஏற்குமா புயலின் குட்டிகள்
மீண்டும் அக்கினி குஞ்சுகளை தாங்குமா
சிதிலமாகிவிட்ட அந்தக் குருவிக்கூடு
=============================== முச்சூலம்/ 40 
பச்சை மனிதன் நெற்களஞ்சியம் தின்கிறான்
தேனின் திரட்சியான ராட்டைகளில்
மூக்கை நுழைக்கிறான்
ஆடுகளின் மாமிசத்துண்டுகளில்
தன் வயிற்றை ஊற வைக்கிறான்
ஒயின் நிறைந்த கண்ணாடிக் கிண்ணங்களில்
தன் மனைவிகளை ஊறவைத்துக்குடிக்கிறான்
அவனுக்குப் பாற்கடல் மீன்கூட கிடைக்கிறது
அவன் சிரிப்பைத் தின்று சிரிப்பை வெளிவிடுகிறான்.
=============== வண்ணங்களை உண்பவன்/57 
யாரோ காறித்துப்புகிறார்கள் என்னோடிருக்கும் 
என் மனைவியையும் சேர்த்து..
அவர்களுக்குத் தெரியும் மதுவுக்குப் பின்னால் 
ஓர் அரசாங்கம் இருப்பது- 
எனக்குப் பின்னால் இருப்பதோ
ஓடு வேய்ந்த ஒரு பழைய வீடும்
இன்னும் காலாவதியாகாமல் இருக்கும்
ரேசப் கார்டு மட்டுமே..
================ அதுக்குப் பின்னால் ஓர் அரசாங்கம்/72 
ஏராளமான ரயில்கள் இவர்கள்
ஊருக்குப் போகின்றன
இவர்களோ தண்டவாளங்களை முதுகில் சுமந்துகொண்டு
ரயில் பிடிக்க ஓடுகின்றனர்.
அடிவேரை வெட்டிவிட்டு நுனிமரத்தை
பார்த்துக்கொண்டே இருக்கின்றனர்
தளிக்கும் என்றும்
காய்க்கும் என்றும்
இவரிடத்தில் யார் உரைப்பது
‘பட்டாசுகள் ஒரேமுறைதா
வெடிக்கும் என்பதை’
========== தலைகீழ் மனிதர்கள்74 






கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ராகுல் காந்தி என்னும் நிகழ்த்துக்கலைஞர்

நவீனத்துவமும் பாரதியும்

தணிக்கைத்துறை அரசியல்