சீர்மலி நகரங்களில் படகுப் பயணங்கள்


சீர்மலி நகரங்கள் (Smart cities) ஆக்குவதற்கான பட்டியலை இந்திய அரசாங்கம் ஓராண்டுக்கு முன்பே அறிவிக்கத்தொடங்கியது. தமிழ்நாட்டில் முதலில் நான்கு என்றார்கள். நான்கு ஆறு என்றானது. இப்போது சென்னை, மதுரை, சேலம், கோயம்புத்தூர், திருச்சி, திருநெல்வேலி, தூத்துக்குடி, திருப்பூர், வேலூர், திண்டுக்கல், ஈரோடு, கடலூர் எனப் பன்னிரண்டு நகரங்கள் பட்டியலில் இருக்கின்றன. இவற்றில் பெரும்பாலான நகரங்கள் மாநகராட்சி என்ற தகுதியைப்பெற்றவை. திண்டுக்கல், கடலூர், போல ஒன்றிரண்டுதான் மாநகராட்சித் தகுதியை அடையாத நகராட்சிகள்.

பரப்பிலும் மக்கள்தொகையிலும் வளர்ச்சி அடையும் ஒரு நகரத்தை மாநகராட்சி ஆக்குவது அடிப்படையில் நிர்வாகப்பிரச்சினை. ஆனால் சீர்மலி நகரங்கள் எனப் பட்டியலிட்டுக் காட்டுவது வெறும் நிர்வாகப்பிரச்சினை அல்ல. வளரும் நாடுகள்- வளர்ச்சி அடைந்த நாடுகளென அடையாளப்படுத்துவதில் இருக்கும் வேறுபாடுகள் இதிலும் உள்ளன. ஒரு நகரத்தைச் சீர்மலி நகரம் என அடையாளப்படுத்துவதன் மூலம் அந்நகருக்குப் பலரையும் அழைக்கும் நோக்கம் பின்னணியில் இருக்கிறது.

அழைப்பு என்றால் சாதாரண அழைப்பு என்று கருதிவிடக்கூடாது. “பணத்தோடு வாருங்கள்; வேண்டியதைப் பெற்றுக்கொள்ளுங்கள்” எனச் சொல்லி அழைக்கும் இந்த அழைப்பு, செலவு செய்வதற்கான அழைப்பு. அந்த அழைப்பு மட்டுமல்லாமல் ‘பணத்தோடு வாருங்கள்; முதலீடு செய்யுங்கள்; பெரும் லாபத்தைப் பெற்றுக்கொள்ளுங்கள்’ என்ற வியாபார அழைப்பும் சீர்மலிநகரங்களை உருவாக்குவதின் பின்னணியில் இருக்கின்றன. 

நான் பயணம் செய்த நாடுகள் பலவற்றின் சீர்மலிநகரங்களைப் பார்த்திருக்கிறேன். உலகத்தின் பார்வையில் அந்த நகரங்களை முன்வைக்கும் விளம்பரங்கள் ஆகச் சிறந்த கொண்டாட்டங்களும் களியாட்டங்களும் கொண்ட நகரங்கள் எனச் சொல்லி அழைப்பதையே நோக்கமாகக் கொண்டிருக்கின்றன. நகரத்தின் உணவகங்களும் தங்குமிடங்களும் தனிமனிதர்களுக்குத் தரும் அந்தரங்கமான கேளிக்கைகள் மட்டுமல்லாமல், நகர நிர்வாகங்களும் அரசுகளும் வெளிப்படையாக உருவாக்கித் தரும் காட்சிச்சாலைகளிலும் பயணச் சூழலும்கூட கொண்டாட்ட மனநிலையை உருவாக்கவே விரும்புகின்றன. அதுவே சீர்மலி நகரங்களின் முதன்மையான நோக்கம். பாரம்பரியமான இந்திய நகரங்கள் அப்படிப்பட்டவை அல்ல. கோயில்களை- ஆன்மீகத்தை- மையப்படுத்தியவை இந்தியச் சுற்றுலா மையங்கள்.

இந்த வேறுபாட்டைப் பயணம் பற்றிய நமது கருத்தோட்டங்களிலும் காணலாம். பயணச்சூழலை உருவாக்குவதில் முதன்மையான இடத்தைப் பிடிப்பது போக்குவரத்து. போக்குவரத்து வசதி. அதை ஓரிடத்திற்குச் சென்றுசேரவேண்டிய கட்டாயசேவை என்பதாகப் பார்க்கும் மனம் இந்திய மனம். ஆனால் மேற்கத்திய மனம் அப்படியானதல்ல. விதம்விதமான பயண அனுபவங்களைத்தரும் ஒன்றாக மாற்றிக்காட்டுவார்கள். குறிப்பிட்ட ஓரிடத்திற்குத் தரைவழியாகவே ஒரேவகை வாகனத்தில் போய்ச்சேரமுடியும் என்றாலும் அதனை அனுமதிக்காமல் பேருந்து, நிதானமான வேகத்தில் ஓடும் தொடர்வண்டி, அதிவிரைவு வாகனமான பாதாள ரயில் அல்லது நகரத்திற்கு மேலே பறக்கும் ரயில் எனப் பிரித்துத் தருவதின் மூலம் சுற்றுலாவாசிகளின் அனுபவங்களுக்குக் கூடுதல் பரிமாணங்களை உண்டாக்குவார்கள். அந்த நோக்கத்தில் நீர்வழிப்போக்குவரத்தையும் வான்வழிச் சுற்றுகளையும் இணைக்கும் சீர்மலி நகரங்கள் கூடுதல் சுற்றுலாவாசிகளை இழுக்கின்றன என்ற புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. சொகுசான போக்குவரத்து வாகனங்களும் தரவேண்டும் என்பதற்காகப் பயணிகளைத் நிலவழி, நீர்வழி, வான்வழிப் பயணங்களுக்கு ஏற்பாடு செய்கிறார்கள். எத்தனைவகைப் போக்குவரத்துமுறைகளைப் பயன்படுத்தினாலும் பயணம் செய்வதற்கானக் கட்டணங்களை ஒரே இடத்தில் செலுத்திவிட்டுத் தங்களுக்கு வழங்கப்படும் நேரங்களில் குறிப்பிட்ட இடத்திற்குச் சென்று வரிசையில் காத்திருந்து பயணம் செய்யும் ஒழுங்கை நான் பயணம் செய்த நாடுகள் ஒவ்வொன்றிலும் பார்த்திருக்கிறேன். இந்தியச் சுற்றுலா நகரங்கள் எதிலும் இந்த ஒழுங்கைக் காணமுடியாது.

பயணிகளிடம் ஒழுங்கை உண்டாக்கவேண்டும் என்ற எண்ணமே இந்தியச் சுற்றுலாத் துறைக்கு இருப்பதுபோல் தெரியவில்லை என்பதோடு பலவிதமான வாகனப் போக்குவரத்தையும் ஒன்றாக இணைத்து, போகவும் வரவும் பயணிகளுக்கு உதவ வேண்டும் என்ற எண்ணமே இல்லை. இங்கே போக்குவரத்து என்பது குறிப்பிட்ட இடத்திற்குப் பயணிகளைக் கொண்டுபோய்ச் சேர்க்கும் வாகனவசதி என்றே நினைக்கப்படுகிறது. சீர்மலி நகரத்தைக் கட்டமைக்க நினைப்பவர்கள் முதலில் இந்த எண்ணத்தை மாற்றிக்கொள்ளவேண்டும். தனது எல்லையாக மூன்று புறங்களிலும் நீண்ட கடற்கரையையும் உள்நாட்டில் வற்றாத ஆறுகளையும் கொண்ட இந்தியா, நீர்வழிப்போக்குவரத்தைப் பற்றி யோசித்ததாகவே தெரியவில்லை. கேரள மாநிலம் மட்டுமே விதிவிலக்கு. இயற்கையாகவே கடல்நீர் புகுந்து வெளியேறும் கேரளக் கடற்கரையின் பயன்பாட்டையும் அங்கு சுற்றுலாப் பயணிகளின் வருகையையும் நினைத்துப் பார்த்தால் நீர்வழிப்பயணங்களும் நீருக்குள் தங்கியிருப்பதில் இருக்கும் ஆர்வமும் சுற்றுலாப் பயணிகளுக்கு உண்டாக்கும் கொண்டாட்ட மனநிலை புரியவரலாம்.


தமிழகத்தின் பெருநகரங்கள் பலவற்றிற்கும் போயிருக்கிறேன்.துறைசார்ந்த பணிகளுக்காகப் போனாலும் முன்னோ பின்னோ ஓரிருநாள் தங்கி அந்த நகரங்களைப் பார்த்து விடுவதில் விருப்பம் கொண்டவன் நான். பட்டியலிடப்பட்ட சுற்றுலாத் தலங்களுக்கும் பயணம் செய்திருக்கிறேன். ஒன்றில்கூட நீர்வழிப்போக்குவரத்தின் அனுபவம் கிடைத்ததில்லை. கொடைக்கானலிலும் ஊட்டியிலும் இருக்கும் படகுப் பயணங்கள், நீர்வழிப்பயணங்கள் தரும் எந்த அனுபவத்தையும் தந்ததில்லை. படகோட்டிக்குப் போட்டுத்தரப்படும் பாதையில் ஒரு சுற்றுச்சுற்றிவிட்டு வந்து இறக்கிவிடும் கடமையைத்தான் செய்வார்கள். அண்மையில் நீர்வழிப் பயணம் செய்தாகவேண்டிய குமரிமுனைக்குப் போயிருந்தேன். முன்பே போயிருந்தாலும் நிதானமாக நின்று சுற்றிப்பார்க்கும் மனநிலையோடு இந்தமுறை வாய்த்தது. முதல் நாள் சூரியனின் மறைவு. கடலோரக்கடைகள், மணல்வெளி என அலைந்து திரிந்துவிட்டுக் காலையில் சூரியனின் வருகைக்காகக் கடலோரம் காத்திருப்பு என அமைந்தது அந்தப் பயணம்.

கன்யாகுமரியில் கட்டாயம் பார்க்கவேண்டிய இடங்களாகப் பட்டியலிடப்பட்டுள்ள விவேகானந்தர் நினைவுப் பாறையையும் திருவள்ளுவர் சிலையையும் கடற்கரையிலிருந்து பார்த்தாலே அழகும் பிருமாண்டமும் வசப்படக்கூடும் என்றாலும் அத்தீவுப்பாறைகளுக்கே சென்று பார்த்துவிடுவதில் கூடுதல் அனுபவம் கிடைக்கவே செய்கிறது. ஏறியவுடன் இறக்கிவிடும் படகுப் பயணத்திற்காகக் காத்திருத்தலின் நேரம் பலமடங்கு அதிகம். தமிழக அரசின் சுற்றுலாத்துறைக்குச் சொந்தமான பெரும்படகுகள் பயணிகளை ஏற்றிச் செல்லும் வேகமும் திரும்பிவரும் வேகமும் மணிக்கணக்கில் சொல்லமுடியாதவை. விவேகானந்தர் பாறைக்குப் போக 15 நிமிடம். அங்கிருந்து திருவள்ளுவர் சிலைக்குப் போக 10 நிமிடங்கள்கூட ஆகவில்லை.

சூரியனின் வருகையின்போதும் மறைவின்போதும் மூன்றுவண்ணங்களில் புரண்டுதவழும் மூன்று கடல்களுக்குள்ளும் பயணம் செய்து பார்க்கும் கடல் பயண அனுபவத்தை - பெரும்படகுப் பயணத்தை - அதிலிருந்தபடியே உண்ணவும் குடிக்கவும் ஆடிப்பாடவுமான வாய்ப்பை ஏன் உருவாக்கித் தரக்கூடாது என்ற எண்ணம் தோன்றியது. விரைந்து சென்று பயணிகளை இறக்கிவிடுவதிலும் ஏற்றிக்கொண்டு கரை சேர்ப்பதிலுமே குறியாய் இருக்கவேண்டிய தேவை என்ன? இவ்வளவு வசதியான படகுத்துறையையும் படகுகளையும் வைத்துக்கொண்டு கடலுக்குள் சென்று திரும்பும் பயண அனுபவத்தைப் பயணிகளுக்கு ஏன் வழங்கக்கூடாது? இதற்கு முதலில் பயணம் என்றால் தீர்த்த யாத்திரைகள் அல்லது புனிதப்பயணங்கள் மட்டுமே என்று இந்திய மூளைக்குள் பதிந்து கிடக்கும் மனப்பதிவை அழித்தாக வேண்டும்; புதிய மனநிலையை அதற்குள் எழுதியாகவேண்டும். 

கன்யாகுமரியில் மட்டுமே கடல் பயண அனுபவத்தை - நீர்வழிப் பயணத்தை- தரமுடியும் என்றில்லை. இப்போது பட்டியலிடப்பட்டுள்ள கடலூர், சென்னை, தூத்துக்குடி போன்ற கடற்கரை நகரங்களில் கடல் நீரை உள்ளே கொண்டுவந்து நகரங்களின் சில வீதிகளுக்கு இணையான பாதையாக மாற்றிக் கட்டினால் போதும்.தரைப்போக்குவரத்துக்கிணையாகப் படகுபோக்குவரத்தும் நடத்தமுடியும். புதுச்சேரி அரசு, அந்த முயற்சியைத் தொடங்கியிருப்பதை அண்மையில் பார்த்தேன். முடிந்தால் வெற்றிகரமான சுற்றுலா நகரமாகப் புதுச்சேரி மாறிவிடும்.

கடற்கரை இல்லையென்றாலும் நான் வசிக்கும் திருநெல்வேலி ஆண்டு முழுவதும் படகுப்போக்குவரத்து அளிக்கும் வசதிகொண்ட நகரம். ஓடிக்கொண்டே இருக்கும் தாமிரபரணியின் கொடையை விவசாயத்திற்கும் குடிநீருக்கும் மட்டுமே பயன்படுத்தும் நிலையிலிருந்து மாறி கோக் போன்ற குளிர்பானங்களுக்கு வழங்கிப் பணம் பண்ண நினைக்கும் உள்ளாட்சி நிர்வாகம், சுற்றுலாவுக்கு அந்நதியைப் பயன்படுத்தமுடியும் என்று நினைத்துப் பார்ப்பதே இல்லை. குறிப்பிட்ட இடைவெளியில் கட்டப்படும் தடுப்பணைகள் மூலமாகத் தேக்கிவைக்கப்படும் நீரில் ஆண்டுமுழுவது படகுப் போக்குவரத்து நடத்தமுடியும். தேக்கிவைத்த நீரை நகருக்குள் சாலைகளுக்கு இணையாக வெட்டப்படும் கால்வாய்களின் வழியாகப் படகுப்போக்குவரத்தை நடத்தமுடியும். 


ஐரோப்பியப் பெருநகரங்கள் பலவற்றை அவற்றைத் தொட்டுச் செல்லும் நதிகள் பிரித்துக்காட்டுகின்றன. போலந்தின் குறுக்காக ஓடும் விஸ்துலா ஆறு, கிழக்கு ஐரோப்பிய நாடுகள் சிலவற்றின் வழியாகச் செல்லும் டான் நதி எல்லாம் ஓராண்டின் கால்வாசிக் காலத்தில் உறைபனியாய் மாறிவிடக்கூடியவை. அந்த நிலையிலும் அவை பயணிகளுக்கான படகுப்போக்குவரத்து அனுபவங்களைத் தரவே செய்கின்றன. டென்மார்க்கின் கோபன்ஹேகன் நகரம் டான் நதியை இணைப்போக்குவரத்து வழித்தடமாகப் பயன்படுத்துகிறது. பேருந்துகள் செல்லும் நகரச்சாலைகள் ஒவ்வொன்றின் பக்கத்திலும் டான் நதியின் நீரைத்திருப்பிவிட்டு வழித்தடம் உருவாக்கியிருக்கிறார்கள். பெரும்படகுப் படகுகளும் சிறுபடகுகளும் செல்வதற்கான பிரிவுகளும் உண்டு. அதன் அருகிலேயே ட்ராம் வண்டிகள் ஓடும் தண்டவாளங்களும் இருக்கின்றன. ஒருவர் விரும்பினால் ஒவ்வொன்றிலும் மாறிமாறிப் பயணம் செய்யலாம். டான்நதியைப்போல - விஸ்துலாவைப்போலவே நெல்லைக்குப் பரணி இருக்கிறது. திருநெல்வேலியாகவும் பாளையங்கோட்டையாகவும் பிரித்துக்காட்டும் தாமிரபரணியைப் படகோடும் நதியாக நினைத்துப் பார்த்துக் கற்பனை மட்டுமே செய்துகொண்டிருக்கிறேன். கொஞ்சம் மனசு வைத்தால் வைகையை நிறுத்தி வைத்து மதுரையிலும், காவிரியைத்தடுத்தி நிறுத்தித் திருச்சியிலும் தஞ்சையிலும் படகுகள் ஓட்ட முடியும். சென்னையில் ஓடிய ஆறுகளைத் திருத்திக் கட்டுவதின் மூலம் அவைகளைப் போக்குவரத்துக்குரிய நீர்வழிப் பாதையாக மாற்றமுடியும்.


சீர்மலி நகரங்களை உருவாக்கும் திட்டத்தில் பன்னாட்டுக்குழுமங்களின் வியாபார வாய்ப்புக்கான சேவைக்கூடங்கள் உருவாக்கும் திட்டங்கள் இடம்பெறும் என்பதை மறைக்கமுடியாது. பத்து ஆண்டுகளுக்கு முன்னால் சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் உருவாக்கப்படும் அறிவிப்புகள் வந்தன. அவை பன்னாட்டுக்குழுமங்களின் உற்பத்திக்கேந்திரங்களாக அமையும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் அறிவிக்கப்பட்ட சிறப்புப்பொருளாதார மண்டலங்கள் எல்லாம் தொடங்கப்படவில்லை. சென்னையைச் சுற்றியே பெரும்பாலான மண்டலங்கள் நின்றுபோயின. மதுரைக்கும் திருநெல்வேலிக்கும் வர இருந்த குழுமங்களில் பாதிகூட வந்துசேரவில்லை. உற்பத்தியும் வளர்ச்சியும் நினைத்தபடி இல்லை. அதனால் அந்தப் பகுதி மக்களுக்குக் கிடைக்கும் எனச் சொல்லப்பட்ட வேலைவாய்ப்புகளும் கிடைக்கவிலை. அதே நிலை சீர்மலி நகரங்கள் திட்டத்திற்கும் ஏற்பட்டுவிடக்கூடாது. அதற்கு முதலில் நகரத்தின் அடிப்படைத் தேவைகளை வாழ்நிலை வசதிகளோடு இணைத்து உருவாக்கவேண்டும். பட்டியலிடப்பட்டுள்ள நகரங்கள் ஒவ்வொன்றும், தன்னை எப்படிச் சீர்மலி நகரமாக அடையாளப் படுத்திக்கொள்ளப் போகின்றன என்பதைப் பார்ப்பதற்குக் கொஞ்சம் காத்திருக்கத்தான் வேண்டும். ஆனால், கூடுதல் காலங்கள் காத்திருக்கவேண்டுமென்றால், அத்திட்டம் வரும் முன்பே இன்னொரு திட்டத்தை அறிவித்து முந்தியதை மறக்கடிக்கும் வேலையாக மாறிவிடும் வாய்ப்புகள் உருவாகிவிடும் ஆபத்துகளும் உண்டு.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நவீனத்துவமும் பாரதியும்

நாயக்கர் காலம். இயல் . 6 சாதிகளும் சமூக அசைவியக்கங்கமும்

ப்ளு ஸ்டார் : கிரிக்கெட்டும் அரசியலும்