சேலத்தில் நான்கு நாட்கள்
.jpg)
தேசியத் தகுதித்தேர்வுக்குத் தயார்படுத்தல் பல்கலைக்கழக மானியக்குழு நடத்தும் இந்தத்தேர்வோடு அதன் ஆரம்பத்திலிருந்து தொடர்பில் இருப்பவன். அதன் தொடக்கம் 1984. நான் 1983 இல் முனைவர் பட்டத்திற்காகப் பதிவு செய்து உதவித்தொகை எதுவும் இல்லாத ஆய்வாளராக இருந்தேன். அதனால் அதன் அறிமுக ஆண்டிலேயே தேர்வாகிவிட வேண்டிய கட்டாயமும் நெருக்கடியும் இருந்தது. விண்ணப்பித்து, தயாரிப்பில் இறங்கினேன். தமிழுக்கெனத் தேர்வான 10 பேரில் ஒருவன் நான். அதற்கெனக் கிடைத்த சான்றிதழ் பின்னர் எனது பணிக்கான நேர்காணலில் கவனம் பெற்ற ஒன்றாக இருந்தது. அப்போது கிடைத்த உதவித்தொகை மாதம் 1000/- ரூபாய். 1985 இல் அது பெரிய தொகை. கல்லூரி ஆசிரியர்களின் அடிப்படைச் சம்பளம் ரூ.1400/- தான். இப்போது தேர்வெழுதும் பலரும் தமிழுக்கான பாடத்திட்டம் அளவில் பெரியது எனவும் விரிவானது எனவும் சொல்கின்றனர். நாங்கள் எழுதிய பாடத்திட்டம் ஏறத்தாழ 30 ஆண்டுகள் மாறாமல் இருந்தது. அதனை மாற்றும்பொருட்டு உருவாக்கப்பட்ட வல்லுநர் குழுவில் நானிருந்தேன். இந்தியாவின் பல்வேறு பல்கலைக்கழ்கங்களின் பாடத்திட்டக்குழுவில் நேரடியாகவும் ஆலோசனை நிலையிலும்...