ஒரு தோல்வியும் ஒரு விலகலும்


இந்த இரண்டு இடங்களுக்கும் விருப்பம் இருந்தது. ஒரு துறை சார்ந்து தொடர்ந்து வேலைகள் செய்து அனுபவங்களையும் சாதனைகளையும் செய்துவிட்டு அந்த விருப்பங்களை அடைய நினைப்பதில் தவறும் இல்லை. தமிழ்மொழி, இலக்கியம் சார்ந்து ஆய்வுகளுக்கு வழிகாட்டல், நூல்கள் வெளியீடு, பல்வேறு அமைப்புகளின் உள்கட்டமைப்புகளில் பங்கேற்றல், அயல்நாட்டுப் பல்கலைக்கழகப்பணி எனத் தகுதிகள் இருந்த நிலையில் தான் செம்மொழி நிறுவனத்தை வழிகாட்டிட முடியும் எனத் தோன்றியது. முயற்சிகள் நிறைவேறவில்லை. ஒதுங்கிக் கொண்டேன்.

30 ஆண்டுகள் கல்விப்புலத்தில் -குறிப்பாக உயர்கல்விப்புலத்தில் பணியாற்றிய பின் அதன் உச்சநிலைப்பதவியான துணைவேந்தர் பதவியில் அமரவேண்டும் என நினைப்பது விருப்பம்தான்; ஆசையல்ல. ஆசைப்பட்டால் அதை அடைந்தே தீரவேண்டும் என்ற எண்ணம் உருவாகும். அதற்காகச் செய்ய வேண்டிய பணிகளைத் தாண்டி, முறையற்ற வழிகளிலும் முயற்சிகளைச் செய்யத் தோன்றும். அப்படிச் செய்தால் ஆசை நிறைவேறும் என்ற நிலை இருந்தபோதும் அதைச் செய்யவில்லை. அதனால் தான் இந்தத் தோல்விக்கதையையும் விலகல் நிலையையும் சொல்ல முடிகிறது.

2021 - தோல்வியின் கதை

ஜனவரி 01, 2022

டிசம்பர் 6 ஆம் தேதி பிற்பகல் 4.35 -க்கு அழைத்த தொலைபேசி 11-12-2021 பிற்பகல் 3 மணிக்கு சென்னை ராஜ்பவனில் ஆளுநரைச் சந்திக்க வேண்டும். தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பதவிக்கான கலந்துரையாடல் இது எனச் சொல்லிவிட்டு வைத்துவிட்டது. அழைத்தவர் ஆளுநரின் தனிச் செயலக அதிகாரி என்று சொன்னார். கூடுதல் தகவல்களைக் கேட்க நினைத்துத் தொடர்ந்த நிலையில் அழைப்பை வைத்துவிட்டார். அதே எண்ணிற்கு ‘இதனை உறுதிசெய்து இணையக் கடிதமாவது அனுப்புவீர்களா? என்று குறுந்தகவல் அனுப்பினேன். பதில் எதுவும் வரவில்லை. விமானத்தில் செல்வதென முடிவுசெய்து ஏற்பாடுகளைச் செய்தேன். கிண்டியிலிருக்கும் ராஜ்பவனுக்குச் செல்லத் தோதாகத் திருவான்மியூரில் தங்கிக்கொள்ள அறையும் பதிவுசெய்து 10 ஆம் தேதியே சென்னைக்குப் போய்விட்டேன்.

2021 டிசம்பர் 11 ஆம் தேதி பிற்பகல் 2.40 -க்கு ராஜ்பவனின் இரண்டாவது வாசலுக்குச் சென்ற போது நான் மட்டுமே இருந்தேன். ஐந்து நிமிடங்கள் கழித்து புதுடெல்லி ஜவஹர்லால் பல்கலைக்கழகத் தமிழ்த்துறைத் தலைவர் தாமோதரன் என்ற அறவேந்தன் வந்தார். அடுத்து சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக மொழியியல் துறையைச் சேர்ந்த திருவள்ளுவன் வந்தார். மூவரின் வாகனங்களும் ஒன்றன் பின் ஒன்றாக உள்ளே அனுப்பப்பட்டன. முதலில் திருவள்ளுவன், அடுத்து தாமோதரன், கடைசியாக நான். ஆனால் ஆளுநர் சந்திப்பில் முறை மாறியது. முதலில் என்னைச் சந்தித்தார். நான் ஒரு வாசல் வழியாக வெளியேறியபோது இன்னொரு வாசல் வழியாகத் தாமோதரன் நுழைந்தார். ஆளுநர் சந்திப்பு முடித்தவர்கள் செல்லலாம் எனச் சொல்லப்பட்டது. நானும் தாமோதரனும் ராஜ்பவனை விட்டு வெளியே வந்து விட்டோம். திருவள்ளுவனின் கார் வரும் என எதிர்பார்த்தபோது தாமதமானது. சரி தங்குமிடத்திற்குப் போகலாம் என்று கிளம்பிப் போய்விட்டேன்.

தங்கியிருந்த இடத்திலிருந்து பத்துநிமிட தூரத்தில் உயிர்மை அலுவலகம் இருப்பதாக கூகுள் வரைபடம் காட்டியது. அங்கு போய் மனுஷ்யபுத்திரனிடம் பேசிக் கொண்டிருந்து விட்டுத் திரும்பி வந்து முகநூலைத் திறந்தபோது அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மொழியியல் துறையின் முதன்மையர் திருவள்ளுவன் துணைவேந்தராக நியமனம் செய்யப்பட்டுள்ளார் என்ற தகவல் பதிவுசெய்யப்பட்டிருந்தது. பெரிய ஏமாற்றம் தான். ஏற்கெனவே துணைவேந்தராக இருந்த முனைவர் பாலசுப்பிரமணியம் மொழியியல் துறையைச் சேர்ந்தவர். இப்போது நியமிக்கப்பட்டிருப்பவரும் மொழியியல் துறையைச் சேர்ந்தவர் என்பதுதான் எனது ஏமாற்றத்திற்கு முதல் காரணம்.

தமிழ்ப் பல்கலைக்கழகத் துணைவேந்தராக ஆக வேண்டும் என்ற விருப்பம் இருந்தது என்பதைச் சொல்வதில் தயக்கம் எதுவும் இல்லை. ஆனால் ஆக முடியும் என்ற நம்பிக்கை 2018 இல் நடந்த நேர்காணலுக்குப் பின் தகர்ந்தது. அந்த முறையும் விண்ணப்பித்த 100 -க்கும் அதிகமானோரிலிருந்து குறுக்கப்பட்ட 10 பேர் கொண்ட குறும்பட்டியலில் எனது பெயரும் இருந்தது. நேர்காணல் செய்யப்பட்டேன். ஆளுநரைச் சந்திக்கும் மூவரில் ஒருவராக நீங்கள் இருப்பீர்கள் என்று தெரிவுக்குழுவில் இருந்த ஒருவர் முன்பே சொல்லியிருந்தார். அப்படிச் சொன்னவர் மதிப்பிற்குரிய பேராசிரியர். ஆனால் அந்த வாய்ப்பு கிடைக்கவில்லை. அந்த முறை ஆளுநரைச் சந்திக்கத் தெரிவு செய்யப்பட்ட மூவருமே மொழியியல் துறையைச் சேர்ந்தவர்களாக இருந்தது தமிழ் இலக்கியத்துறைப் பேராசிரியரான எனக்கு வருத்தமாக இருந்தது.

தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் முதல் துணைவேந்தராக இருந்த பேரா.வ.அய். சுப்பிரமணியம் அறியப்பட்ட மொழியியல் பேராசிரியர். அவரைப் போலவே மொழியியல் துறையைச் சேர்ந்தவர்களால் தமிழ்ப் பல்கலைக்கழகம் அறிவியல் பார்வையுடன் ஆய்வுகளை முன்னெடுக்கும் என்ற நம்பிக்கொண்டு தெரிவுசெய்த மொழியியல் பேராசிரியர்கள் சாதனைகள் எதனையும் செய்து விடவில்லை. பேராசிரியர் அகத்தியலிங்கம் காலத்தில் சில முன்னோக்கிய நகர்வுகள் இருந்தன. அவருக்குப் பின்னால் துணைவேந்தர்களாக வந்த மொழியியல் துறைப் பேராசிரியர்கள் புதிய பார்வைகளை முன்னெடுக்கவில்லை. தமிழ் இலக்கியம் படித்தவர்களுக்குப் பல்கலைக்கழக நிர்வாகம் தெரியாது என்று நினைக்கிறார்களோ என்ற நினைப்பினால் ஏற்பட்ட வருத்தம். அந்த வருத்தத்தை நீட்டித்துக் கொள்ளவில்லை. பேராசிரியப் பணியை முடித்து இரண்டு ஆண்டுகளாக ஓய்வூதியமும் வாங்கியாகி விட்டது.

இப்போதைய ஒன்றிய அரசு, துணைவேந்தர்களின் பதவிக்காலம் 70 வயது வரை இருக்கலாம் என மாற்றியது. அந்த மாற்றம் திரும்பவும் விண்ணப்பிக்கலாம் என்ற நினைப்பைத் தூண்டினாலும் அரசியல் நெளிவுசுழிவுகளுக்குள் நுழைந்து வெற்றிபெற முடியும் என்ற நம்பிக்கையை உண்டாக்கவில்லை. ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளது; நல்லாட்சி தரவேண்டும் எனத் திராவிட முன்னேற்றக் கழகமும் அதன் தலைவரும் முதல்வருமான திரு மு.க.ஸ்டாலின் நினைக்கிறார்; எனவே விண்ணப்பம் செய்யுங்கள் என்று நண்பர்கள் சொல்லச்சொல்ல விண்ணப்பிக்கும் ஆசை கூடிவிட்ட து. உரிய நேரத்தில் விண்ணப்பித்தேன். விண்ணப்பித்தவர்களைக் குறும்பட்டியலாக்கிய பின் தெரிவுக் குழுவைச் சந்திக்க ஆறுபேர் அழைக்கப்பட்டோம். அழைக்கப்பட்டவர்களில் ஒருவரே மொழியியல் துறையைச் சேர்ந்தவர். மற்றவர்கள் ஐவரும் தமிழ்ப் பேராசிரியர்கள். ஐந்து பேரில் மூன்றுபேர் ஓய்வுபெற்ற பல்கலைக்கழகப் பேராசிரியர்கள்.

ஆறுபேரில் பல்கலைக்கழக மானியக்குழுவின் விதிகளின் படியும் தரப்புள்ளிகள் உருவாக்க முறைகளின் படியும் முதலிடத்தில் இருக்கும் வாய்ப்பு எனக்கு இருக்கிறது என்பதாகப் பலரும் சொன்னார்கள். சொன்னவர்களில் சிலர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்கள். அத்தோடு தமிழ்ப் பல்கலைக்கழகம் அதன் தோற்ற நோக்கங்களிலிருந்து விலகிவிட்டது; அதன் கல்வித்திட்டங்களில் மாற்றம் செய்ய வேண்டும்; அதற்கு இப்போது தெரிவு செய்யப்பட்டுள்ள மூன்று பேரில் நீங்கள் துணைவேந்தராக வந்தால் நடக்கும் என்று நம்பிக்கை தெரிவித்தார்கள். எனக்கும் அப்படியான திட்டங்கள் இருந்தன. உலகத்தமிழ் இலக்கியப் பார்வையோடு தமிழ்ப் பல்கலைக்கழத்தைத் திசைமாற்றம் செய்ய வேண்டும் என்று நினைத்தேன்.

31 ஆண்டுக்காலப் பணி அனுபவம், பள்ளி, கல்லூரிகள், உள்நாட்டு- வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களின் கல்வித்திட்டங்களை உருவாக்கிய திட்டமிடல்கள், மாநில, ஒன்றிய அரசின் தமிழ் சார்ந்த குழுக்களில் இருந்து விவாதித்துப் பெற்ற பங்களிப்புகள், ஈராண்டு அயல்நாட்டுப் பல்கலைக்கழகப் பணி என எல்லாம் சேர்ந்து துணைவேந்தராகும் வாய்ப்பை ஏற்படுத்தித் தரும் என்று நம்பினேன். என்னுடைய நம்பிக்கையும் என்னை ஊக்குவித்தவர்களின் நம்பிக்கையும் பொய்த்துப்போனது.

எனது மாணவப்பருவம் தொடங்கி இடதுசாரிப்பார்வை கொண்டவனாக இருந்தது என்னைத் தெரிவுசெய்வதில் தடையாக இருந்திருக்கலாம் என்று தோன்றுகிறது. ஆளுநரோடு சந்திப்பு நடப்பதற்கு முந்திய ஒருவார காலத் தொலைபேசி அழைப்புகள் ஒன்றைத் திரும்பத்திரும்பச் சொல்லிக்கொண்டே இருந்தன. மாநில ஆளுங்கட்சியைவிடவும், ஒன்றிய ஆளுங்கட்சியினரே தீர்மானிக்கும் இடத்தில் இருக்கிறார்கள். அதன் தலைவர்களில் ஒருவரைச் சந்தித்து முயற்சி செய்யுங்கள் என்று அறிவுரை சொன்னார்கள்.

சொன்னவர்கள் எனது நலம் விரும்பிகள் தான். சந்திக்கும் வழிமுறைகளை யெல்லாம் கூடச் சொன்னார்கள்; எப்படி முயற்சிசெய்ய வேண்டும் என்ற ஆலோசனைகளும் தரப்பட்டன. அந்த ஆலோசனைகளை என்னால் ஏற்கமுடியாது என்பதைச் சொல்லத்தயங்கவில்லை. கருத்தியல் ரீதியாக ஒத்துப்போக முடியாதவர்களைப் பதவிக்காக பார்ப்பதும், அவர்களின் வழிகாட்டுதலை ஏற்பதும் என்னால் இயலாது என்று சொல்வதைத் தவிர வேறு வழியில்லை. தங்கள் துறைசார்ந்த புலங்களில் கோட்பாட்டுப் பார்வையற்றவர்களுக்குத் துணைவேந்தர் பதவிகள் தரப்படுவதின் மூலம் புறநிலையில் திணிக்கப்படும் கருத்தியல் செயல்பாடுகள் செயல்பாட்டுக்குரியனவாக மாறும் வாய்ப்புகள் உண்டு. எதிர்காலத்தில் கல்விப்புலங்களில் அதுதான் நடக்கப்போகிறது.

2021 இல் போட்டியின் கடைசிவரை சென்ற எனக்குத் தமிழ்ப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பதவி விலகிப்போனதை ஏமாற்றத்தின் கதை என்று சொல்வதைவிடத் தோல்வியின் கதை என்று வர்ணிக்கவே நினைக்கிறேன். அந்தத்தோல்வியை 2022 இல் வேறொன்றின் வெற்றியால் ஈடுசெய்ய வேண்டும். எழுத்து என்வசம் இருக்கும் ஒரு கருவி; பயணங்கள் இன்னொரு வடிகால். பெருந்தொற்றுக்காலத்தைத் தாண்டிவிட்டால் உள்ளூர்ப் பயணங்களும் உலகப்பயணங்களும் வாய்க்கும் என்ற நம்பிக்கை உண்டு.

2015 - விலகல் மனநிலை.

பிப்ரவரி 11, 2015

தமிழ் மொழியைச் செம்மொழியாக்கிடும் முயற்சிக்குப் பத்தாண்டுகள் நிறைவடைந்து விட்டது. செம்மொழித் தமிழுக்கான நிறுவனம் தொடங்கப்பட்டும் 8 ஆண்டுகள் முடிந்துவிட்டன. எட்டாண்டுகளாகவே அதற்கெனத் தனியாக நியமிக்கப்பட வேண்டிய தலைமை நிர்வாகி - இயக்குநர் - பதவி நிரப்பப்படாமலேயே இருக்கிறது. இந்தப் பதவிக்கு நான் ஏற்கெனவே இரண்டுமுறை விண்ணப்பம் செய்தேன். இரண்டு முறையும் எனது பெயர் பரிசீலனை செய்யப்பட்டதா என்பதை நானறியேன். அப்படிப் பரிசீலனை செய்யப்படாமல் போவதற்கு விதிப்படியும் நடைமுறைகளின் படியும் சிலபல காரணங்கள் இருந்திருக்கலாம். அதனால் நேர்காணலுக்கு அழைக்கப்படவில்லை.

2004 இல் இந்திய நாடாளுமன்றத்தில் கோரிக்கை ஏற்கப்பட்டது. 2006இல் கர்நாடக மாநிலத்தின் மைசூரின் மானச கங்கோத்ரியில் இயங்கும் இந்திய மொழிகளுக்கான மைய நிறுவனத்தில் செம்மொழித் தமிழுக்கான உயராய்வு மையம் நிறுவப்பட்டது. அந்நிறுவனம் இந்திய மொழிகள் ஒவ்வொன்றின் கடந்த காலத்தையும், நிகழ்கால இருப்பையும் ஆய்வு செய்யும் நிறுவனம். அத்தோடு அம்மொழிகளில் ஒன்றைக் கற்றுக் கொள்ள விரும்பும் மற்றவர்களுக்குக் கற்பிக்கும் உலகம் தழுவிய மொழியியல் கோட்பாடுகள் மற்றும் வழிமுறைகளில் கற்பிக்கும் வேலைகளையும் செய்யக்கூடிய நிறுவனமும்கூட. மொழி வரலாறு, மொழியின் கட்டமைப்பு, மொழித் தொடர்பின் இயல்புகள் என மொழிசார்ந்த புலமையில் ஆழம்கொண்ட வல்லுநர்கள் அந்நிறுவனத்தில் இருப்பார்கள்; அவர்களுக்கு இலக்கியப்புலமை என்பது முக்கியமல்ல. அப்படியான இந்தியமொழிகளுக்கான மைய நிறுவனத்தில் பணியாற்றியவர்களே, செம்மொழித் தமிழ் ஆய்வுகளையும், ஆய்வு தொடர்பான நிகழ்வுகளையும் தொடக்கத்தில் ஒருங்கிணைத்தனர். தொடக்கநிலையில் அப்படித்தான் செய்ய முடியும். மைசூரிலிருந்து 2008 இல் செம்மொழித் தமிழாய்வு நிறுவனம் என்ற பெயர் மாற்றத்தோடு சென்னைக்கு வந்தது. வரும்போது அதற்கெனத் தேர்வுசெய்யப்பட வேண்டிய இயக்குநரைத் தேர்வு செய்திருக்கலாம். ஆனால், மைசூரிலிருந்து பேரா க. ராமசாமி அவர்கள் இயக்குநர் பொறுப்போடு சென்னைக்கும் வந்தார்.

வந்தவர் ஓய்வு வயது நெருங்கும்வரை பொறுப்பதிகாரியாகத் தொடர்ந்தார். பின்னர் ஓய்வு காரணமாக அவரைத் தனியதிகாரியாக்கிக் கொண்டு இந்திய அரசின் ரயில்வே அமைச்சக அதிகாரி திரு மோகன் அவர்கள் இயக்குநர் பொறுப்பில் நியமனம் செய்யப்பட்டார். அப்போது சென்னைக் கடற்கரையில் பொதுப்பணித்துறைக் கட்டடத்தில் செயல்பட்ட நிறுவனம், பெரும்பாக்கத்தில் தனக்கேயான இடத்தை அடையாளப்படுத்தி அதற்கான கட்டடங்களைக் கட்டும் பணியைத் தொடங்கியது. தொடங்கி 5 ஆண்டுகள் ஆகியும் வளாகச் சுற்றுச் சுவர்கூட முடியவில்லை.

திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி முடிந்தபின் அ இ அதிமுக ஆட்சி வந்தபோது அண்ணா பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் பதவியிலும், பதிவாளர் பொறுப்பிலும் இருந்த முனைவர் பூமா அவர்கள் இயக்குநர் பொறுப்பில் இருந்து வருகிறார். மைய அரசின் நேரடி நிதியுதவியில் செயல்படும் நிறுவனமாக இருந்தபோதும் மாநில அரசின் கவனமும் அதில் இருந்ததால் இரண்டு முறையும் நிர்வாகத்தின் தலைமையதிகாரியாக இருக்க வேண்டிய இயக்குநர் பதவி நிரப்பப்படாமலேயே நின்றுபோனது. இப்போது மூன்றாவது மூன்றாவது தடவையும் விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டுள்ளன. இதுதான் எனக்குக் கடைசி வாய்ப்பு. எனக்கும் 56 வயது ஆகப்போகிறது. இனியொரு வாய்ப்பு வந்தால் விண்ணப்பிக்க முடியாது.

விண்ணப்பங்கள் கோரித் தரப்பட்டுள்ள விளம்பரத்தில் கேட்கப்பட்டுள்ள அடிப்படைத் தகுதிகள் எல்லாம் இருக்கின்றன. கூடுதல் தகுதிகளும் இருக்கின்றன. இப்போது பணியில் இருக்கும் தமிழ்ப் பேராசிரியர்களில் அதிக அனுபவங்கள் கொண்ட பேராசிரியராக இருக்கிறேன். இந்திய அரசால் போலந்து நாட்டு வார்சா பல்கலைக்கழகத்துக்கு தமிழ் இருக்கைப் பேராசிரியராக அனுப்பப்பட்டு இரண்டு ஆண்டுகள் பணியாற்றியதோடு, கிழக்கு ஐரோப்பிய நாடுகளின் இந்தியவியல் துறையின் பேராசிரியர்களைச் சந்தித்துவிட்டு வந்திருக்கிறேன். செவ்வியல் இலக்கியங்களையெல்லாம் திரும்பவும் படித்துக் கட்டுரைகள் எழுதிப் புத்தகங்கள் வெளியிட்டுக் கூடுதல் தகுதிகளை உருவாக்கிக் கொண்டிருக்கிறேன். செம்மொழி நிறுவனத்தின் ஆதரவில் ஒரு கருத்தரங்கு, ஒரு பயிரலரங்கினை நடத்தியிருக்கிறேன் அதன் உதவியில் நடைபெற்ற 40 கருத்தரங்கு/பயிலரங்குகளில் துறை வல்லுநராகப் பங்கேற்றிருக்கிறேன். செவ்வியல் கவிதைகள் தொடங்கி நாடகங்கள், புனைகதைகள், இலக்கியத்திறனாய்வு, அரங்கியல், ஊடகங்களும் வெகுமக்கள் பண்பாடும், திரைப்படங்கள் எனப் பலவற்றையும் குறித்து எழுதிக்கொண்டு வருகிறேன்; பேசிக்கொண்டிருக்கிறேன். மொழிசார்ந்த, இலக்கியம்சார்ந்த அமைப்புகளின் -குழுக்களில் இடம்பெற்ற அனுபவங்களும் இருக்கின்றன. இப்போது பல்கலைக் கழகங்களில் பணியாற்றுக் கொண்டிருக்கும் பேராசிரியர்களுள் அ.ராமசாமி தமிழ் இலக்கியம் சார்ந்த உயர்நிர்வாகப் பதவிகளுக்குப் பொருத்தமானவர் என நண்பர்களும் எதிரிகளும்கூட நினைக்கிறார்கள். எனக்கும்கூட அந்த நம்பிக்கை உருவாகித் தான் இருக்கிறது. என்றாலும் நான் செம்மொழி நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பான இயக்குநர் பதவிக்குப் விண்ணப்பிக்கவில்லை.

இப்படி நினைப்பதற்கான காரணங்களாகத் தேர்வுக்குழு, உயர்நிலைப் பொறுப்புகளுக்குத் தேர்ந்தெடுக்கும் முறை, அதற்குள் செயல்படும் விருப்பு வெறுப்புகள், தேர்வுக்குழுவை நெருக்கடி செய்யும் அரசியல் தொடர்புகள், பணம், சாதீய நெருக்கடிகள் எல்லாம் எப்போதும் இருக்கின்றன; இப்போதும் இருக்கவே செய்கின்றன. இவைகளையெல்லாம் தாண்டி இப்போது கூடுதல் காரணங்களும் உருவாகியிருக்கின்றன எனத் தோன்றுகிறது. இக்காரணங்கள் எனக்கான காரணங்கள் மட்டுமல்ல. இந்தியாவில் தன்னுடைய துறைசார்ந்த அறிவோடு, அதன் வளர்ச்சியை உலகப்பரப்பில் கொண்டு சேர்க்க வேண்டும் ; நவீனத்துவப் பார்வையோடு அடையாளங்களை உருவாக்கிட வேண்டும் என நினைப்பவர்கள் அனைவருக்கும் அவர்கள் மனதில் உருவாகும் காரணங்கள்- அச்சங்கொள்ளும் காரணங்கள் - என்று சொல்ல விரும்புகிறேன்.

2014 தேர்தலில் மைய அரசில் ஏற்பட்டுள்ள மாற்றம் அதன் முதன்மைக் காரணமாக இருக்கிறது. அந்த மாற்றத்தில் தேவைக்கதிகமான எண்ணிக்கையில் நாடாளுமன்ற உறுப்பினர்களோடு பாரதீய ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்ததை முக்கிய காரணமாக இருக்கிறது. ஆட்சி மாற்றம் எப்போதும் கொள்கை மாற்றங்களை உருவாக்கும் என்பதை உணராதவல்லன் நான். ஆனால் கொள்கை மாற்றம் இந்த அளவுக்கு வெளிப்படையாகவும், உருவாக்கப்பட்ட நிறுவனங்கள், கருத்தியல்கள், நம்பிக்கைகள் வாழ்க்கை முறை என அனைத்தையும் தலைகீழாக மாற்றிக் கவிழ்த்துப் போடும் என நினைக்கவில்லை. அத்தோடு இந்த அரசு முன்வைக்கும் கொள்கை மாற்றம் இரட்டைத் தன்மையோடு இருக்கிறது என்பதைச் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். இந்த இரட்டை நிலையால் இந்தத் தேசத்துக்கு - தேசத்து மனிதர்களுக்கு நல்லன விளையும் என்ற நம்பிக்கை ஏற்படும் என்பதற்குப் பதிலாக அல்லன பல விளையும் என்று தோன்றுவதால் சொல்லாமல் தவிர்ப்பது குற்றவுணர்வை உண்டாக்கும் என்பதால் சொல்லிவிடத் துடிக்கிறேன்.

ஓரடி முன்னால் ஐந்தடி பின்னால்

மக்களின் வாழ்வியலின் அடிப்படைத்தேவைகளுக்கான பொருளாதார உற்பத்தி, அதற்கான சாதனங்கள், உற்பத்தியைப் பங்கிடுதல், அதற்கான அடிக்கட்டுமான அமைப்புகளை உருவாக்குதல், நிதித்தேவையைப் பெருதல், மறுசுழற்சிக்குட்படுத்தல் போன்ற பொருளாதாரக் கொள்கையில் மாற்றங்கள் எதையும் இந்த அரசு புதிதாகச் செய்யவில்லை. ஏற்கெனவே இருந்த காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி அரசு பின்பற்றிய, அரசு நிர்வாகத்தை மையப்படுத்தாத - உள்ளூர் மற்றும் உலகளாவிய தனியார் முதலாளியத்தின் கையில் பொறுப்பை ஒப்படைக்கும் பொருளியல் கோட்பாடுகளையே சரியானது என நம்புகிறது; பின்பற்றுகிறது. ஜனநாயகத்தைப் பின்பற்றும் பல நாடுகளும் இடதுசாரி அரசுகள் எனக் கருதப்பெற்ற அரசுகளும்கூட பொதுத்துறை நிறுவனங்களின் செயல்பாடுகளில் வளர்ச்சிக்கு வாய்ப்பில்லை எனக்கருதி தனியாரின் பங்கேற்போடு கூடிய பொருளியல் கொள்கைகளுக்கு நகர்ந்து கொண்டிருக்கின்றன. இந்திய அரசியலில் மன்மோகன்சிங்கின் வருகையோடு நாமும் நுழைந்துவிட்டோம். நுழைந்து கால் நூற்றாண்டு ஆகப்போகிறது. அதை மாற்றிவிடச் சிந்திக்கும் எந்த யோசனையும் இதுவரை இந்த அரசும் கொள்கை வகுப்பாளர்களும் முன் வைக்கவில்லை.


உண்மையில் எல்லா நிலைகளிலும் இந்தியத் தனத்தை முன்மொழியும் கொள்கைகளைப் பின்பற்றுவார்கள் என எதிர்பார்த்த பாரதீய ஜனதா கட்சியும், அதற்கான கொள்கையுருவாக்கத்தைச் செய்யும் சித்தாந்திகளும் பொருளியல் நடவடிக்கைகளில் இந்தியத்தனத்தைத் தேடாமல் மேற்கத்தியத்தனத்திற்கு வரவேற்பு அளிக்கின்றனர். காங்கிரஸ் கட்சியை மையமாகக் கொண்ட ஆட்சி செய்ததைவிடத் தீவிரமாகப் பின்பற்றுகின்றனர். பொருளியல் நடைமுறையிலும் இந்தியத் தனத்திற்குள் நுழைய விரும்பினால், அவர்கள் விரும்பாத - காந்தியைக் கற்க வேண்டும். அவர் முன் வைத்த பொருளியல் நடமுறைகளுக்குள் - தர்மகர்த்தா முறைக்குள் நுழைய வேண்டும். பெருந்தொழில்களுக்கு - பெருநகரங்களுக்கு - பேரங்காடிகளுக்கு மாற்றாக சிறுகுறு தொழில்களுக்கு- சிற்றூர் வாழ்க்கைக்கு, சிறுவணிகம், சிறுவிவசாயத்திற்கு மாற வேண்டும். காந்தியைக் கொன்றவர்களைக் கொண்டாடும் கூட்டம் அவரது கொள்கைகளைக் கொண்டாடும்; பின்பற்றும் என நிச்சயம் எதிர்பார்க்க முடியாது.
குறிப்பிட்ட காலகட்டத்தின் பொருளியல் நடவடிக்கைகளில் மேற்கத்திய நடைமுறைகளை நோக்கிப் பெரும்பாய்ச்சல் நடத்தும் ஒரு அரசு நிர்வாகம், சமூகம், குடும்பம் மற்றும் சமூக விழுமியங்களில் அதற்கு எதிரான நடைமுறைகளை - தனிமனித அடையாளங்களுக்கு முதன்மை அளித்து அவர்களுக்கு உரிமையை வழங்கிக் கடமையை வலியுறுத்துவதற்கு மாற்றாக - நவீன வாழ்க்கைக்கு மாற்றாகப் பாரம்பரிய அடையாளம், பாரம்பரிய அமைப்பு, பாரம்பரியப் பண்பாடு, பாரம்பரியக் கல்விமுறை எனப் பின்னோக்கித் திரும்ப முயல்வது நடைமுறை சாத்தியமா? எனக் கேட்டுக் கொள்வதோடு, இப்படித் திரும்புவதற்கான தேவை என்ன? என்றும் கேட்டுக்கொள்ள வேண்டும். அதற்கான பதிலைப் பிறிதொரு கட்டுரையில் விவாதிக்கலாம். இப்போது திரும்பவும் செம்மொழி நிறுவனத்திற்கு வரலாம்.

செம்மொழி இயக்குநர் பதவிக்கு விண்ணப்பிக்காமல் ஒதுங்கி நிற்கும் எனது சொந்தக் கதைக்கு வருகிறேன். செம்மொழி நிறுவனம் மைய அரசின் மனிதவளத்துறை அமைச்சகத்தின் கலை-பண்பாட்டுப் பிரிவின் கீழ் நிதியுதவி பெற்று அதன் கட்டுப்பாட்டில் இயங்கும் ஒரு நிறுவனம். இந்திய அளவிலான இந்தியத் தொழில் நுட்பக் கல்விநிறுவனம், இந்தியப் பொருளியல் நிறுவனம், இந்திய அறிவியல் கழகம், இந்திய மொழிகள் நிறுவனம் போலப் போதுமான நிதித்தேவையை அரசிடமிருந்து பெற்று இயங்கிக் கொண்டிருக்கும் பொருள்வரவற்ற செலவு நிறுவனங்கள். அவையே உயர்நிலையிலான இந்தியக் கொள்கைகளை வகுப்பதில் முக்கியப்பங்காற்றுபவை. இவைகள் அனைத்தும் இதுவரை முழுமையான தன்னாட்சி நிறுவனங்களாக அவைகளுக்கு நடைமுறைகளை அதன் தன்னாட்சி அமைப்புகளின் வழி உருவாக்கிக் கொண்டு இயங்கிவருகின்றன. அவற்றின் நடைமுறைகளில் பெரும்பாலானவை -உலகு தழுவிய மேற்கத்தியக் கல்வி நிறுவனங்களின் ஆய்வு முறையியல்களோடும், கருத்தியல்களோடும், கருத்தியல் நம்பிக்கைகளோடும் இயைபு கொண்டவை. வரலாறு, தத்துவம், பண்பாடு, இலக்கியம், மொழி என்பனவற்றை அறிவியல் பார்வையோடு விவாதிக்கும் முறைமைகள் அவை.

இனி, இந்தியாவில் அதே வழியில் - அப்படியே- செயல்பட முடியுமா? என்ற சந்தேகம் உண்டாகி இருக்கிறது. அப்படிச் செயல்பட முடியாது என்பதைக் குறிப்பால் உணர்த்தும் வெளிப்பாடுகள் தோன்ற ஆரம்பித்துவிட்டன. அரசின், அமைச்சகத்தின் தலையீடுகளும், வழிகாட்டும் முறைகளும் தீவிரமாக இருக்கும் என்றே காட்டுகின்றன அந்தக் குறிப்புகள். அதிகம் பேசாத - ஆனால் கொண்ட கொள்கையில் உறுதிகொண்ட அமைச்சரின் கீழ் இயங்கும் மனிதவளத்துறை இந்த அரசு முன்னிறுத்தப் போகும் இந்தியத்தனம் நிரம்பிய வாழ்க்கை முறைக்கு அடுத்த தலைமுறையைத் திரும்பிவிடும் நோக்கத்தைக் கொண்டதாக இருக்கிறது. அதற்காக இந்தியாவின் சாதிமுறையைக்கூடக் கொண்டாடத் தயங்காது என்றே தோன்றுகிறது. மொழியின் - கலைகளின் தோற்றத்தை இறைவனோடு இணைத்துப் பேசும் புராணிகக் கதைகளைப் பாடங்களாகவும், படிப்புக்குரிய தரவுகளாகவும் வலியுறுத்துவதிலிருந்து பின்வாங்காது என்பதும் புலப்படுகிறது. எல்லாவற்றையும் புராணிக - வேத மரபோடு இணைத்துப் பேசும் போக்கைக் கைவிடாது என்பது உறுதியாகத் தெரிகிறது. இந்த நிலையில் தான் நான் என்னை நினைத்துப் பார்க்கிறேன்; எனது இயலாமையை - பொருத்தமின்மையை உணர்கிறேன்.

மொழி, கலை, இலக்கியம், பண்பாடு, விமரிசனம், மனிதன், விடுதலை என அடிப்படையான புள்ளிகளை நான் கற்றுக் கொண்ட நூல்களும், முறைகளும் வேறானவை. ஐரோப்பிய அறிவொளிக்காலத்தின் விளைவான நவீனத்துவத்தின் மீதான நம்பிக்கையோடும், அதனை இந்தியாவிற்குள் அனுமதித்து இந்திய சமூகத்தை அறிவு நிரம்பிய சமூகமாக மாற்ற நினைத்த பண்டித ஜவஹர்லால் நேருவின் அணுகுமுறையால் உருவாக்கப்பெற்ற கல்விக் கொள்கைகளால் உருவானவன்; உருவாக்கப்பெற்றவன். அத்தோடு தமிழின் இலக்கிய வரலாறும், மொழிவரலாறும், இலக்கிய வகைமைவரலாறும் இந்தியத்தனம் என்னும் பொதுமைக்குள் அடங்காது என நம்புபவன். தமிழுக்கான தனி அடையாளங்களும் அமைப்பும் இருக்கின்றன என உணர்ந்தவன். சமஸ்கிருத மொழிக்குடும்பமும், திராவிட மொழிக்குடும்பமும் என இருவேறு மொழிக்குடும்பங்கள் இந்தியாவில் வளமான அமைப்புகளோடு வளர்ந்தவை என்ற பார்வையில் உடன்பாடு கொண்டவன். மொழி பற்றியும் இலக்கியம் பற்றியும் எனது இந்த நம்பிக்கைகளும் கொள்கைகளும் இந்த அரசின் வழிகாட்டுதல்களுக்கு மாறானதாகவே இருக்கும் என்பதை எனது உள்ளுணர்வு உணர்ந்துவிட்டது.

ஒருவேளை நடைமுறையில் இருக்கும் எல்லாத் தடைகளையும் தாண்டி செம்மொழி நிறுவனம் போன்ற உயராய்வு நிறுவனத்தின் தலைமைப் பொறுப்புக்குத் தேர்வு செய்யப்பெற்றாலும் எனது பதவிக்காலம் முழுவதும் அங்கு பணியாற்றும் வாய்ப்பு கிடைக்கும் எனச் சொல்ல முடியாது. இதுவரை நான் படித்து உருவாக்கிக் கொண்ட மொழி மற்றும் இலக்கியக் கொள்கைகளைக் கைவிட்டுவிட்டு அரசின் வழிகாட்டுதலைச் சிரமேற்கொண்டு வேலைசெய்யும் ஓர் அதிகாரியாகப் பதவி வகிக்க முடியும் என்று நம்பிருந்தால் விண்ணப்பித்திருக்கலாம்; நேர்காணலுக்கும் அழைக்கப் பட்டிருக்கலாம். ஒருவேளை தேர்வும் செய்யப்படலாம். ஆனால் தொடர்ந்து அங்கு வேலை செய்ய முடியாமல் தவிப்பு ஏற்பட்டிருக்கும். அந்தத் தவிப்பு வேண்டாமென்ற முடிவோடு, இந்தக் கடைசி வாய்ப்பை அறிந்தே தவிர்த்துவிட்டேன். இந்தப் புரிதலை அளித்த நவீனத்துவ மனநிலைக்கு நன்றி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அயல் பல்கலைக்கழகங்களில் தமிழ் இருக்கைகள்

மொழிபெயர்ப்பும் புதுச்சந்தையும்

இலக்கியவியலும் தொல்காப்பியப் பொருள் கூறலும்