தந்தையும் மகனும் தாமரைத்திருக்கள்

ஒன்றிய அரசு வழங்கும் துறைசார் சிறப்பு விருதுகளின் பொதுப்பெயராக இருப்பது பத்மவிருதுகள். பத்மம் என்றால் தாமரை. அவ்விருதுகளில் மூன்று நிலைகள் உண்டு. பத்ம விருதுகளில் மிக உயர்ந்தது பத்மவிபூஷன். அடுத்தது பத்மபூஷன், கடைசிநிலை பத்மஶ்ரீ.
தாமரைத் திரு. கண்ணப்ப சம்பந்தன்

நேற்று(25,ஜனவரி, 2025) அறிவிக்கப்பட்ட பத்ம விருதுகளில் தெரிந்த முகங்கள் சில உண்டு. பத்மஶ்ரீ விருதுபெற்றுள்ள புரிசை கண்ணப்ப சம்பந்தன் ஒருவிதத்தில் எனக்கு ஆசிரியர் என்றே சொல்வேன். மதுரை நிஜநாடக இயக்கத்தில் செயல்பட்டபோது அதன் முதன்மையான நாடகமான துர்க்கிர அவலம் நாடகத்தில் இடம்பெற்ற காட்சி ஒன்றில் துச்சாதன் துகிலுரிதல் காட்சியின் சாயலில் ஒரு பெருங்காட்சி உண்டு. சோபாக்ளீஸின் ஆண்டிகனியின் தழுவல் அந்த நாடகம். ஆண்டிகனையைத் துன்புறுத்தும் காட்சி திரௌபதி வஸ்திராபஹரணத்தின் சாயல் கொண்டது. அதில் நடித்த எனக்குக் கூத்தின் அடவுகளைக் கற்றுத்தந்தவர் கண்ணப்ப சம்பந்தனே. அதற்குப் பின் நிஜநாடக இயக்கம் மதுரை திருநகரில் நடத்திய ஒருவாரக் கூத்துப்பட்டறையில் பயிற்றுநராக இருந்தார்.
 பின்னர் புதுச்சேரி நாடகப்பள்ளி மாணவர்களுக்காக நடத்தப்பெற்ற தெருக்கூத்துப் பயிற்சிப்பட்டறைகள் எல்லாவற்றிலும் அவரே முதன்மையான பயிற்றுநர். அவரது தந்தை கண்ணப்பத் தந்தை பாடல் பயிற்சியை வழங்குவார். சம்பந்தனும் மற்றவர்களும் அடவுகளுக்கான பயிற்சிகளை வழங்குவார்கள். அப்படியொரு பட்டறையில் ராமாயணத்தின் அனுமன் தூது பட்டறைத் தயாரிப்பாக உருவாக்கப்பட்டது. அதில் ராவணன் பாத்திரமேற்று நடிக்கத்தூண்டி அதற்கான உற்சாகத்தையும் அடவுகளையும் கற்றுத்தந்த ஆசான் கண்ணப்ப சம்பந்தன். அந்த வகையில் எனக்குள் கூத்தின் அடவுகளையும் இசைக்கோலங்களையும் செலுத்தியவர் அவர். அவரது தந்தையைப் போலவே சம்பந்தனும் இப்போது பத்மஶ்ரீ விருதுபெற்றுள்ளார். தமிழ்நாட்டின் மரபுக் கூத்துக்கலையாக அறியப்படும் தெருக்கூத்துக்குப் புரிசை வழங்கிய கொடைக்கு ஒரே குடும்பத்தில் இரண்டு பத்மஶ்ரீ விருதுகள். மகிழ்ச்சியாக இருக்கிறது.  

******
பத்மவிபூஷன் பெற்றவர்களில் ஒருவரும் தமிழ்நாட்டுக்காரர்கள் இல்லை. ஆனால் மலையாள எழுத்தாளர் எம்.டி.வாசுதேவன் நாயர் இருக்கிறார். அண்மையில் மறைந்த எம்.டி.வாசுதேவன் நாயரின் நாவல்களையும் சிறுகதைகளையும் வாசித்திருக்கிறேன். அவரது திரைக்கதை வசனத்தில் உருவான சினிமாக்களைப் பார்த்திருக்கிறேன். அதேபோல நான் எப்போதும் கேட்கும் வயலின் கலைஞர் எல். சுப்பிரமணியனுக்கும் பத்மவிபூஷன் வழங்கப்பட்டுள்ளது.

பத்மபூஷன் விருதுப்பட்டியலில் தமிழ்நாட்டைச் சேர்ந்த மூவரின் பெயர் உள்ளது. ஷோபனாவும் அஜித்குமாரும் திரைப்படத்துறையைச் சேர்ந்தவர்கள். தமிழிலும் மலையாளத்திலும் ஷோபனா நடித்த படங்களைப் பார்த்திருக்கிறேன். நடிகையாக ஷோபனாவின் சிறப்பான வெளிப்பாடுகள் பல படங்களில் உண்டு. அவரளவுக்கு அஜித்குமாரின் நடிப்பு எனக்குப் பிடித்தமானதாக இருந்ததில்லை. தொடக்கநிலையில் இயக்குநர்களின் நடிகராக இருந்தவர். பின்னர் தனக்கான இயக்குநர்களை உருவாக்கி நடித்துக் கொண்டிருக்கிறார். தமிழ் நிலப்பரப்பின் சமகாலத்தோடும் வாழ்க்கையோடும் தொடர்பற்ற தன்மை கொண்ட பாத்திரங்களைக் கொண்ட படங்களை உருவாக்கச்சொல்லித் தானுண்டு; தான் நடிக்கும் சினிமா உண்டு என இயங்கிவருபவர். ஒருவிதத்தில் அது வரவேற்கத்தக்க ஒன்று.

தொழில்துறை சார்ந்தவராக நல்லி குப்புசாமி விருது பெற்றுள்ளார். அவரைத் தொழில் மற்றும் வணிகத் துறை சார்ந்தவர் என விருதுக்குழு குறிப்பிட்டிருந்தாலும், அவருக்குக் கலை இலக்கியத்திற்கான புரவலர் முகமும் உண்டு. கலை, இலக்கியத் துறை சார்ந்த இதழ்கள் பலவற்றுக்கு விளம்பரம் தருவதோடு நூல்கள் வெளியிடவும் உதவி செய்பவர் என்பதை அறிவேன்.

 திருக்குறளுக்காக- திருக்குறளை உலகம் முழுவதும் பரப்புவதற்காக அவர் செய்யும் செலவுகள் குறிப்பிடத்தக்கவை. மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் நிர்வாகக்கட்டிடத்தின் முன் அமைக்கப்பட்டுள்ள திருவள்ளுவர் சிலை அவரது நன்கொடை. அப்போது எமது பல்கலைக்கழகத்தில் திருக்குறள் அறக்கட்டளையொன்றையும் நிறுவினார். அதனை ஒருங்கிணைக்கும் பொறுப்பு எனக்கு அளிக்கப்பட்டது அதனையொட்டி அவரோடு பழக்கமும் தொடர்பும் ஏற்பட்டது. சென்னைக்கு வரும்போது வந்து பார்க்கும்படி சொன்னார். இது போன்ற சந்திப்புகளில் விருப்பம் இல்லாத மனநிலை காரணமாக இதுவரை அவரைச் சந்திக்கவில்லை.
 
பத்மஶ்ரீ விருதுப்பட்டியலில் அதிகமும் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் இருக்கிறார்கள். அவர்களில் நேரடிப்பழக்கம் உடையவர்கள் நான்குபேர்.தவில் கலைஞர் தட்சணாமூர்த்தி பேரா.கே.ஏ. குணசேகரனின் தன்னானே குழுவுடன் தொடர்பில் இருந்தார். அவரது பாடல்களில் இவரது கருவி பின்னணி இசையை வழங்கியுள்ளது. அதேபோல் பறை ஆட்டக்கலைஞர் வேலு ஆசானும் அறிந்த ஒருவர். அவர் பயிற்சியளித்துக் கற்றுக் கொண்ட பறையாட்டக் கலைஞர் பலர் தமிழ் நாட்டில் இருக்கிறார்கள். மூன்றாமவர் சீனி.விசுவநாதன். பாரதியியலுக்காகப் பெரும்பணியைச் செய்தவர். தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகம் பதிப்பித்த பாரதி கவிதைகளின் செம்பதிப்பு முக்கியமான ஒன்று. அவருக்கும் வாழ்த்து


தாமரைத்திரு கண்ணப்பத்தம்பிரான்



இந்த இரண்டு படத்திலும் என்னோடு இருப்பவர் தமிழ் அரங்கியல் வரலாற்றில் எப்போதும் நினைக்கப்படும் மனிதர். கறுப்புவெள்ளைப் படங்களின் காலம்.
நடுநாயகமாக இருப்பவர் கோமல் சுவாமிநாதன். சுபமங்களாவின் ஆசிரியர் என்ற அடையாளம் உருவாவதற்கு முன், அவரது அடையாளம் தமிழின் முக்கியமான முற்போக்கு நாடகக்காரர். தண்ணீர் தண்ணீர் என்னும் விருதுவாங்கிய சினிமாவின் மூலக்கதை மற்றும் வசனத்தை எழுதியவர்.




அவரது இடதுபுறம் இருப்பவர் மு.சண்முகம் பிள்ளையெனக் கல்விப்புலத்திலும், நவீன இலக்கியவாதிகளிடம் முத்துச் சண்முகன் எனவும் அறியப்பட்ட பேராசிரியர். மதுரைப் பல்கலைக்கழகத்தின் ஆய்வுப்போக்கை மாற்றி, பலபோக்குத் துறையாக மாற்றியவர். சங்கப்பாடல்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்க அமெரிக்கர்களுக்கு உதவியவர். மொழியியல் கற்ற அவர் நாடகம், இதழியல், நாட்டார் வழக்காற்றியல், நவீனத் தமிழ் இலக்கியம் எனப் பல புலங்களில் இன்று நடக்கும் ஆய்வுகளுக்கு வழிவகுத்து முதல் ஆய்வுகளை உருவாக்கியவர். வழிகாட்டி. வலது பக்கம் இருப்பவர்கள் அப்போது கேரளத்தின் நவீன நாடக இயக்கத்தை முன்னெடுத்த பேரா.ஜி.சங்கரப்பிள்ளையும், சே.ராமானுஜனும். கேரளாவின் மாற்று நாடக முயற்சிகளையும் சினிமாக்களையும் உருவாக்கிய கலைஞர்களின் குருக்கள். கள்ளிக்கோட்டை நாடகப்பள்ளியின் ஆசிரியர்களாக இருந்தார்கள். கடைசியில் இருப்பவர் திரு. செல்வராஜ். 1980 களில் மதுரையில் நடந்த கலை, இலக்கிய நிகழ்வுகளுக்குப் புரவலர்களை அடையாளங்காட்டி உதவிய அதிகாரி.


இரண்டாவது படத்தில் இருப்பவர் புரிசை கண்ணப்பத் தம்பிரான். தெருக்கூத்து பற்றிக் கேட்பவர்களுக்கெல்லாம் செய்திகளை அள்ளித் தந்த வள்ளல். தெருக்கூத்தைக் கற்றுக் கொள்ள வேண்டும் என விரும்பியவர்களுக்கெல்லாம் அதனைக் கற்றுத் தந்த பயிற்சியாளர்.

துர்க்கிர அவலம் என்னும் முதன்மையான மேடையேற்றம் தந்த தூண்டுதலின் விளைவாக மதுரை நிஜநாடக இயக்கம் தமிழ்நாட்டில் நாடக விழாக்களை நடத்தும் பண்பாட்டை ஆரம்பித்து வைத்தது(1987) அந்த நிகழ்வின் தொடக்கவிழாவில் இந்த ஆளுமைகளை வரவேற்றுப் பேசுவதற்காக ஒலியை வாங்கிப் பெருக்கி அனுப்பும் கருவியின் முன்னால் நிற்கிறேன்.பெரியவர் கண்ணப்பத் தம்பிரானை வரவேற்றுக் குத்துவிளக்கேற்றி விழாவைத் தொடங்கி வைக்கும்படி கேட்டுக்கொள்ள, அவரும் மேடையேறினார். அவரைச் சிறப்புச் செய்யும் விதமாக அரங்கியல் ஆளுமைகள் அனைவரும் எழுந்து நின்றனர். படியேறி வந்த அவரைக் கைப்பிடித்து அழைத்து வந்து விளக்கேற்ற உதவினேன். 1980 களில், இருபதுகளின் மத்தியில் இருக்கும் இளைஞர்களின் சமூக அக்கறையின் அடையாளமென கதர் ஜிப்பாவும் அடர்த்தியான தாடியும் சிரிப்பைத் தொலைத்துக் கோபம் கசியும் கண்களும் இருந்த காலம். இப்போது அந்த ஜிப்பாக்களும் இல்லை; கோபமும் இல்லை. ஆனால் அந்த நினைவுகள் இருக்கின்றன.

தனது தமிழகத்தில் தோல்பாவை நிழற்கூத்து என்னும் ஆய்வுத் தலைப்பின் காரணமாக மதுரைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் புலத்தில் விரிவுரையாளர் ஆனவர் மு.ராமசுவாமி. அவர் ஆரம்பித்த நிஜநாடக இயக்கத்தில் நான் உறுப்பினரான நடிகராக வலம் வரவேண்டும் என்பதற்காக அல்ல. தமிழ் நாட்டில் புதிய அலையாக வரும் கலை இலக்கியப் போக்குகளை அறியும் ஆர்வத்தின் வெளிப்பாடாக. அந்த ஆர்வம் தொடரும்போது நடிகராகவும் ஆகத்தான் வேண்டும். நவீன நடிகனின் உடம்புக்குள் மரபுக்கலைஞர்களின் அசைவும் இசை யேற்பும் நுழையும்போது உடல்மொழியில் பெரும் மாற்றம் ஏற்படும் என்பதற்காகவே மு.ராமசுவாமி வடமாவட்டங்களில் சிறப்பாக இயங்கிய தெருக்கூத்துக்கலையை அங்கேயே இருந்து கற்றுக் கொண்டதாக விவரித்துச் சொல்வார். அதேபோல் தேவராட்டம், சிலம்பு, களரி போன்ற உடலியக்கச் செயல்பாடுகளையும் கற்றுக் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துவார். அதற்காக மதுரை நிஜநாடக இயக்கம் மதுரை திருநகரில் ஒரு பள்ளி வளாகத்தில் பத்துநாள் பயிலரங்கம் ஒன்றை ஏற்பாடு செய்தது. அதன் பயிற்சியாளராக வந்து தொடங்கி வைத்தபோதுதான் கண்ணப்பத் தம்பிரானைப் பார்த்தேன். அவர் ஆரம்பித்து வைத்த பயிற்சிகளை அவரது மகன் சம்பந்தனே தொடர்ந்து தந்தார்.

மதுரை நிஜநாடக இயக்க நாடக விழாவைத் தொடர்ந்து கூத்துப் பட்டறையின் நாடகவிழாவொன்றை கண்ணப்பத்தம்பிரானின் ஊரான புரிசையிலேயே நடத்தியது. அந்த விழாவில் நிஜநாடக இயக்கத்தின் சாபம் விமோசனம் நாடகத்தை மேடையேற்றுவதற்காகப் போன நினைவிருக்கிறது. அதுதான் புரிசைக்கான முதல் பயணம். பின்னர் 1989 ஜூலையில் புதுவைப் பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராகச் சேர்ந்த பின்பு புரிசை தூரமாகத் தோன்றவில்லை. பல தடவை சென்றிருக்கிறேன். மாணவர்களோடும் தனியாகவும். அதேபோல் நிகழ்கலைப்பள்ளி மாணவர்களுக்குக் கூத்தைக் கற்றுத்தரும் நோக்கத்தோடு பயிலரங்குகளையும் ஏற்பாடு செய்தோம். கூத்துப் பயிலரங்குகள் மட்டுமல்ல. இசைநாடகம், கணியான் கூத்து, தேவராட்டம், சிலம்பாட்டம் என பலவும் பயிற்றுவிக்கப்பட்ட து.

புதுவை நாடகப்பள்ளியின் முதல் கூத்துப் பயிலரங்கில் அதுவரை செய்யாத புதுமை ஒன்றைச் செய்யத்துணிந்தார் தம்பிரான். பெண்களே இடம்பெறாத கூத்துப் பயிற்சியில் பெண்களுக்குப் பயிற்சி அளித்தார். மாணவிகள் ஒவ்வொருவருக்கும் பாத்திரங்களை வழங்கினார். திரௌபதி வஸ்திராபரணம் என்னும் கூத்தைத் தயாரிப்பது என்பது முடிவானபின் மையப்பாத்திரமான திரௌபதியாக யார் நடிப்பது என்று விவாதம். முழு நாடகத்திலும் அப்பாத்திரம் வரவேண்டும். அதில் இப்போதிருக்கும் மாணவிகளால் சோர்வில்லாமல் இயங்க முடியுமா என்ற ஐயமிருந்தது. உடல் வலுவில் போதிய நம்பிக்கையில்லாத நகரத்துப் பெண்களே மாணவிகளாக இருந்தனர். ஆனால் அப்போது நிகழ்கலைப்பள்ளியில் ஆய்வு மாணவியாக இருந்த எம்.எஸ். காந்திமேரி அந்தப் பாத்திரத்தை ஏற்று நடிக்கத்தயாரென்றார். ஏற்றார்; நடித்தார்; நடிக்க வைத்தது கண்ணப்பத் தம்பிரான் என்ற ஆளுமையே.

வெளியிலிருந்து வந்து தரும் மரபரங்கியல் பயிற்சிப் பயிலரங்கில் ஆசிரியர் நிலையிலிருந்து விலகி நானும் பயிற்சி பெற்றுக் கொள்வேன். அப்படித்தான் ஒரு தெருக்கூத்துப் பயிலரங்கில் தயாரிக்கத் தொடங்கிய அனுமன் தூது கூத்தில் ராவணன் பாத்திரத்தை ஏற்று நடித்தேன்.

தம்பிரானின் பயிற்சி முறை என்பது தாளத்தில் தொடங்கி உடல் அசைவுகளைக் கோர்க்கும் முறை. கூத்துப்பாடல்களில் பின்பாட்டுக்கார ர்களாக அனைவரையும் இணைத்துவிடுவார். தமிழ் மொழி தெரிந்தவர் – தெரியாதவர் என அனைவரும் அவரது பாட்டோடு இணைய வேண்டும். முதலில் அவர் பாட அவரைத் தொடரும் குழுவினரின் குரலுடன் இணைய வேண்டும். அந்த இணைவில் குரலின் ஏற்ற இறக்கங்களும் தாளங்களும் இணையும். கூட்டத்தில் இணைந்த குரலைத் தனித்தனியாகச் சோதிப்பார். பின்னர் தாளத்திற்குக் கால்களைப் பழக்குவார். நேர்நடை தொடங்கி, குறுக்குநடை, பின்னோக்கிய நடை, வட்டக்கிறுக்கி என நடை பழக்கித் தாளத்துடன் இணையச் செய்வார். இணையும் உடலுக்குள் இசையின் தாள லயத்தையும் சொற்களையும் சேர்த்துக்கட்டி அந்த உடலை இன்னொரு உடலாக மாற்றிவிடுவார். அந்தப் பயிற்சியைத் தொடர்ச்சியாகச் செய்யும் ஓருடல் அரங்கியல் வேலைகளுக்கு பக்குவப்பட்ட உடலாக மாறிவிடும்.

கண்ணப்பத் தம்பிரான் குறித்து ஒரு படம்

படித்தால் மட்டும் போதாது முகமூடிகளையும்படியுங்கள்

சென்னை குளிரூட்டப்பட்ட அரங்கில் 24-8-98 அன்று ஒரு தொலைக்காட்சி படம் காணும் வாய்ப்புக் கிடைத்தது. தெருக்கூத்து கலைஞர் கண்ணப்பத் தம்பிரான் பற்றிய படமாக சொல்லப்பட்ட அதனை இயக்கியவர் திரு.பென்னேஸ்வரன். டெல்லியில் நாடகங்களை நடத்தி வருபவர். படம் ஒரு மணி நேரம் ஓடியது. முடிந்தபின்பு இயக்குனரிடம் கேள்வி கேட்க விரும்புபவர்கள் எது வேண்டுமானாலும் கேட்கலாம் என்று சொல்லப்பட்டது.

கூத்துப்பட்டறையின் தயாரிப்புகளுக்கு கண்ணப்பத் தம்பிரான் அளித்துள்ள பங்களிப்புகளை நடிகன் உருவாக்கம் -நாடகப் பிரதி உருவாக்கம்- உடை ஒப்பனை உருவாக்கம் எனப் பலதளங்களில் கூத்துப்பட்டறை தெருக்கூத்தில் இருந்து பெற்றுக் கொண்டுள்ளது. ந. முத்துசாமியின் ஆகிருதியான உடம்பும் குரலும் கேமராவில் சொல்லிக்கொண்டே இருந்தது படம் அந்த தளத்தில் இருந்து தம்பிரான் என்னும் கலைஞனின் வெளிக்குள் நுழையாமல் காட்டியது .இந்தப் பின்னணியில் படம் கண்ணத்தம்பிரானை பற்றிய படம் தானா? என்று நான் கேள்வி எழுப்பினேன் இந்த கேள்விக்குப் பென்னேஸ்வரன் தந்த பதில் எனக்கு ஆச்சரியமாக இல்லை. கூத்துப்பட்டறையோடு தம்பிரான் உறவு மிக முக்கியமானது. அதைப் பற்றி மேலே பேசுவது இங்கு வேண்டாம் என்றார். இதில் நான் வருத்தப்படக்கூடாது தான். ஆனால் வருத்தமாக இருந்தது

கண்ணபிரானை இப்படியான ஒரு கோணத்தில் படம் எடுக்கப் பெண்ணேஸ்வரனுக்குஉரிமை உண்டுதான். பட த்தைப்பற்றி- படம் எடுத்த அவரைப்பற்றி கேட்கலாம் என்று சொல்லிவிட்டு இங்கு பேச வேண்டாம் என்பது, அவரது உரிமை சார்ந்த விஷயம் மட்டும் தானா? என்று யோசித்தேன். அப்போது ஒரு புது தொழில்நுட்பம் கைவரப்பெற்றவர்கள்- கையாளும் வசதி உடையவர்கள்- நிகழ்வுகளை எப்படி மாற்றிக் கட்டமைக்க முடிகிறது என்பது எனக்குப் புலப்பட்டது

தெருக்கூத்து கண்ணப்பத் தம்பிரான் தமிழ் நவீன அறிவுலகத்துக்குள்ளும் கலைவெளிக்குள்ளும் வந்த வரலாற்றை- பிரக்ஞை ,விழிகள் வீராச்சாமி, கிருஷ்ணய்யர்,ந.முத்துசாமி, மு.ராமசுவாமி, பல்கலைக்கழகங்களின் தமிழ் மற்றும் நாடகத் துறைகள்- எல்லாம் படத்தில் காட்டப்பட வேண்டும்; காட்டப்படாததைக் குறையாகச் சொல்லவில்லை. தம்பிரானின் குரலும் உடலும் நவீன தமிழ் நாடக நடிகர்களின் உடம்புக்குள் புகுந்துவிட்ட மாயத்தை சொல்லியிருக்கவேண்டும். அவற்றை தாங்கிய நடிகர்கள் கூத்துப்பட்டறையில் மட்டுமல்ல; மதுரை நிஜ நாடக இயக்கத்தில்- தஞ்சை தமிழ் பல்கலைக் கழகத்தில்- புதுவை தலைக்கோல் குழுவில் இருக்கிறார்கள். பாண்டிச்சேரி நிகழ்வுகலைப் பள்ளியின் மாணவர்களாக இந்தியாவெங்கும் போயிருக்கிறார்கள். சில நடிகர்கள் பிற நாடுகளிலும் கூட உண்டு. அவர் பயிற்றுவித்த பயிலரங்குகள் தமிழக நகரங்கள் பலவற்றில் நடந்துள்ளன. அவரிடம் பயின்றவர்களாகப் பெருமை கொண்டவர்கள் பலர் உண்டு

இதையெல்லாம் கவனத்தில் கொள்ள வேண்டியது இல்லை என்று பெண்ணேஸ்வரன் சொல்லலாம். கூத்துப்பட்டறையோடு தம்பிரான் கொண்டிருந்த உறவு மட்டுமே அர்த்தம் உடையது. அதுதான் பதிவு செய்யப்பட வேண்டிய வரலாற்று நிகழ்வு என்று வாதிடலாம். இதுவும் அவரது உரிமை சார்ந்தது. கண்ணப்பத் தம்பிரான் என்பவர் ஆற்றல்மிகு கலை போதம். அதனை விளக்கில் அடைத்து தாங்கள் விரும்பும் போது மட்டும் வரவழைத்து பயன்படுத்திக் கொள்ளும் காரியத்தைச் சித்து வேலைக்காரன் மட்டுமே செய்வான். இந்த படம் அப்படிப்பட்ட சித்து வேலைக்காரரின் வேலை என்று சொல்லமுடியுமா? நீங்களும் வாய்ப்பு கிடைத்தால் பார்த்துவிட்டு சொல்லுங்களேன்.



கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஆசிரியரும் மாணவர்களும்

• இந்திரா பார்த்தசாரதியோடு ஒரு நேர்காணல்

நாயக்கர் கால இலக்கியங்கள் சமுதாய வரலாற்றுச் சான்றுகளாகக் கொள்வதற்கான முன் தேவைகள்