சி. அண்ணாமலையின் வெங்காயம் : மதத்தால் மறையாத மாமதயானை

நாடகக்காரரும் நாடகம் பற்றிய பதிவுகளைப் பதினைந்து ஆண்டுகளுக்கும் மேலாகத் தொடர்ந்து செய்து வருபவருமான சி.அண்ணாமலை எழுதி காவ்யா வெளியிட்டுள்ள நாடகம் வெங்காயம்.வெங்காயம் -பெரியார் பற்றிய நாடகம் என்ற குறிப்புடன் வந்துள்ள இந்த நாடகப்பிரதியைப் பற்றிப் பேசத் தொடங்கும் போது மிகுந்த எச்சரிக்கையோடு பேச வேண்டியுள்ளது. ஏனென்றால் தமிழ் நாட்டில் நவீன நாடகத்தளத்தில் செயல்படுகிறவர்களாகக் கருதிக் கொள்ளும் பலரும் நாடகத்தைப் பற்றிய விமரிசனங்களையும், நாடகப் பிரதிகளைப் பற்றிய விமரிசனங்களையும், விமரிசனங்களாகக் கருதி விவாதிப்பதில்லை என்பது எனது சொந்த அனுபவம்.
விதிவிலக்குகள் உண்டு என்றாலும் பெரும்பாலானவர்கள் அவர்களது நாடகங்களைப் பற்றிய எழுத்துக்களுக்குப் பின்னால் பேச்சை நிறுத்திக் கொண்டு எதிரிகளாக மாறிப் போனார்கள் என்பதுதான் உண்மை. எல்லாவற்றையும் நபர் சார்ந்த ஒன்றாகக் குறுக்கிக் காட்டுதல் தமிழ் அறிவுலகின் செயல்பாடாக ஆகி வருகிறது. விமரிசனங்களும் அதிலிருந்து தப்பித்துக் கொள்ளவில்லை.

தனது படைப்பின் மீது அல்லது தான் நம்பும் கருத்தியல் மீது வைக்கப்படும் விமரிசனங்களைக் கூடத் தனது தனிநபர் ஆளுமை மீது வைக்கப்படும் விமரிசனமாக மாற்றிக் காட்டுவதில் இரண்டு வித லாபங்கள் உண்டு. முதல் லாபம் அவர்களின் படைப்பின் மேல் வைக்கப்பட்ட விமரிசனங் களுக்குப் பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை என்று தப்பித்துக் கொள்ளலாம். இரண்டாவது லாபம் நபர் சார்ந்த விமரிசனமாக ஆக்கும் நிலையில் தான் அவர்களின் ஆதரவாளர்களும் அல்லது தொண்டர்களும் நபர் களுக்காக யுத்தங்களை நடத்துவது சுலபமாக இருக்கிறது.இப்படியான குறுக்குத் தனச் சிந்தனை யெல்லாம் ஈ.வெ.ராமசாமிக்கு இல்லை என்பது தான் ஓரே ஆறுதல். அனைவரும் கருத்துக்களின் அடிப்படையில் விவாதிக்க வேண்டும் என்று விரும்பிய பெரியார் " திராவிட சமுதாயத்தைத் திருத்தி உலகில் உள்ள மற்ற சமுதாயத்தினரைப் போல் மானமும் அறிவும் உள்ள சமுதாயமாக ஆக்கும் தொண்டை மேற்போட்டுக் கொண்டு அதே பணியாய் இருந்தவன் " என்று தன்னைப் பற்றிச் சொன்னவர்; நம்பியவர். ஆனால் அவரது பின்னோடிகள் தான் இப்படி குறுக்குத் தனமாகச் சிந்திக்கிறார்கள்; மாற்றிக் கொண்டிருக் கிறார்கள். இந்தப் போக்கை சுவையான முரண் என்று மட்டும் தான் சொல்ல முடியும்.

பெரியாரைப் பற்றிய நாடகத்தை எழுதுவது என்ற முடிவுக்குப் பின்னால், அவரை என்னவாகப் பார்வையாளனுக்குத் தருவது என்ற கேள்வியின் தொடர்ச்சியாகப் பெரியாரியம் என்று அறியப்பட்ட கருத்தியல் இன்று என்னவாக ஆகிக் கொண்டிருக்கிறது என்பதைப் பார்வையாளர்களுக்குச் சொல்ல முயல்கிறது. அப்படிச் சொல்லும் நோக்கத்தின் ஊடாக பெரியாரியம் என்ற கருத்தியலை உருவாக்கிய ஈ.வெ.ராமசாமியின் ஆளுமையின் உன்னதத்தையும் விதந்து பாராட்டுகிறது. அந்த வகையில் அண்ணாமலைக்கு முதன்மையானது பெரியாரியம் தான்; பெரியார் என்ற மாமனிதர் அல்ல. நேரடி எடுத்துரைப்பு முறையைத் தவிர்த்துவிட்டு பாத்திரங்களுக்கு இடையே நடக்கும் விவாதத்தையே எடுத்துரைப்பு முறையாக்கிக் கொண்டிருக்கிறார். இந்த நாடகத்தில் வரும் ஈ.வெ.ராமசாமி எல்லா விதக் கேள்விகளுக்கும் பதில்களைச் சொல்லிவிடும் பெரியார் தான் என்றாலும் தன் கருத்துக்களும், சிந்தனைகளும் பெரும் நெருக்கடிகளுக்குள் இருக்கின்றன என்பதை உணர்ந்த பெரியாராக வெளிப்பட்டிருக்கிறார். இப்படி வெளிப்பட வைத்ததில் அண்ணாமலையின் மொழிநடையும் அவர் பின்பற்றிய எடுத்துரைப்பு முறையும் பங்காற்றியிருக்கின்றன.

எதிரிகளையும் மதித்து அவர்களோடு வாதம் செய்வதில் விருப்பம் உடையவர் பெரியார் என்ற அடையாளத்தைப் பெரியாரின் முக்கியமான அடையாளமாகக் கருதிய அண்ணாமலை அதையே நாடகத்தின் எடுத்துரைப்பு உத்தியாக்கிக் கொண்டிருக்கிறார். பெரியாரை-பெரியாரின் கருத்துக்களை- எதிர்க்கத் தயாராகும் மதவாத சக்திகளை மேடையில் நிரப்பி, அவர்களின் உரையாடல்களின் வழியாகவே நாடக நிகழ்வை நகர்த்தும் இந்நாடகம், ஒரு நாடகப் பிரதிக்குத் தேவையான அடிப்படைகள் சிலவற்றைத் தவறவிட்டுள்ளது. அறிமுகம், உச்சம், முடிவு என்ற மிகச் சிறிய அடிப்படைக் கட்டுமானத்தைக் கூடக் கொண்டிருக்கவில்லை.

பெரியார் அல்லது பெரியாரியம் தமிழ் நாட்டின் சிந்தனைப் போக்காக இருக்கிறது. அதனை எதிர்ப்பவர்களாக மதம் மற்றும் சாதிவேறுபாடுகளில் நம்பிக்கை கொண்ட மனிதர்கள் அல்லது இயக்கப் பிரதிநிதிகள் இருக்கிறார்கள் என்பதாக அடையாளப்படுத்திக் கொண்டு தொடங்கும் நாடகம் மேலே வளர்ச்சி அடையாமல் அங்கேயே நிற்கிறது. ஆனால் நாடகம் முடியும் நிலையில் மேடையில் பரவும் காவிக்கொடிகளும் சாதிக்கொடிகளும் பெரியாரின் உருவத்தையும், பேச்சையும் மறைக்கின்றன எனக் காட்டுவதின் மூலம் நிகழ்கால நிலைமையை ஓரளவு சுட்டிக் காட்ட முயன்றுள்ளார் நாடக ஆசிரியர். சுட்டிக் காட்டினாலே போதும்; நாடக ஆசிரியரின் பணி அதோடு முடிந்து போகிறது. அதற்குப் பின் பெரியாரியம் அல்லது பெரியார் காணாமல் போகும் சூழல் தமிழ் நாட்டில் உருவாகி வரும் நிலைமையை நாடக இயக்குநர் தன் போக்கில் காட்டிக் கொள்ளலாம்.அதற்கு இப்பிரதி இடமளித்துள்ளது எனப் பாராட்டிச் சொல்ல வாய்ப்புண்டு. அப்படியொரு பின்புலம் இந்நாடகப் பிரதி உருவாக்கத்தில் உண்டு என்பதையும் மறந்து விடவில்லை. அதே நேரத்தில் ஒரு நாடக இயக்குநரை மட்டுமே மனதில் கொண்டு எழுதப்படும் நாடகங்கள் பிரதியாக வாசிக்கப்படும் நிலையில் வாசகனுக்கு எந்த அனுபவத்தையும் தருவதில்லை என்ற உண்மையையும் மறந்து விடக் கூடாது. இந்தக் கூற்று வ. ஆறுமுகம் போன்ற நாடக இயக்குநர்கள் தங்கள் மேடையேற்றத்திற்காகத் தயாரித்த கருஞ்சுழி, ஊசி போன்ற மேடையேற்றப் பிரதிகளுக்கும் பொருந்தும்.

சங்கீத நாடக அகாடமியின் இளம் இயக்குநர்கள் திட்டத்தில் பங்கேற்ற பல நாடகப் பிரதிகள் இத்தகையன தான். ஒற்றை இயக்குநரின் மேடையேற்றத்திற்கெனத் தயாரிக்கப்பட்ட பிரதிகள் வேறொரு இயக்குநருக்கு மேடை யேற்றும் வாய்ப்பைத் தர மறுக்கின்றன என்பது கூட உண்மைதான். சி.அண்ணாமலையின் இப்பிரதிக்கு அப்படியானதொரு நோக்கம் இல்லை என்ற நிலையில் சில விசயங்களில் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம்.

பெரியார் அல்லது பெரியாரியம் இன்று பின்னுக்குத் தள்ளப்பட்டுக் காவிக் கொடிகளும் சாதிக் கொடிகளும் மேடைப் பரப்பில் அல்லது தமிழர்களின் வாழ்வுப் பரப்பில் பரவிக் கொண்டிருக்கின்றன என்ற உண்மையை உணர்ந்த நிலையில், அதற்கான காரணங்களைத் தேடத் தொடங்கியிருக்கலாம். தேடுதலின் ஒரு கண்ணியாக அவரது மரபான எதிரிகளை மட்டுமே - பிராமணியத்தை அடிப்படையாகக் கொண்ட இந்துத்துவ சக்திகளை -மட்டுமே அடையாளப்படுத்தியுள்ளது.

இப்படி அடையாளப்படுத்துவது தமிழ்நாட்டில் நிலவும் பொதுப் போக்கு. பெரியார் என்னும் மதயானையை மதம் மட்டுமே மறைத்தது என்றில்லை. இளைப்பாறுதல் தரும் என்று அவர் நம்பிய சொந்த இயக்கம் என்னும் மரங்களும் கூடத்தான் மறைத்தன. எனவே பெரியார் பற்றிய ஒரு நாடகம் அல்லது படைப்பு இந்துத்துவ சக்திகளைக் கவனப்படுத்துவதோடு நின்று விடுவதில் முழுமையடையாது என்றே தோன்றுகிறது.அதைவிடவும் முக்கியமாகக் குவிக்க வேண்டிய கவனம் இந்துத்துவ சக்திகளுக்கு எதிராக இருப்பதாகக் காட்டிக் கொண்டே இந்துத்துவத்தைப் பின்பற்றும் சக்திகள் பற்றியதாகவும் இருக்கவேண்டும் என்று கூறத்தோன்றுகிறது.

அந்தப் பின்னணியில் சி.அண்ணாமலையின் நாடகம், பெரியாரின் சிந்தனைகளோடு உடன்படுவதாகக் நம்பிக் கொண்டே ஜனநாயகத்தை மதிக்காமல், சாதியத்தை உள்வாங்கிக் கொண்டு பாசிச சக்திகளாக வலம் வரும் இயக்கங்களையும் தனிமனித மனங்களையும் வெங்காயக் குறியீடாக நிறுத்தியிருக்கலாம். இப்படிச் சொல்வது குறை சொல்வதல்ல; ஆசை தான். அப்படியானதொரு நாடகப்பிரதியாக ஆகியிருக்கும் வாய்ப்பு அண்ணாமலை உருவாக்கிக் கொண்டுள்ள எடுத்துரைப்பு முறையிலும் கட்டமைப்பு வடிவிலும் இருக்கிறது என்று தான் தோன்றுகிறது. திரும்ப எழுத நேர்ந்தால் இதை யோசித்துப் பார்க்கலாம். -சி.அண்ணாமலை, வெங்காயம் [பெரியார் பற்றிய நாடகம்]
-------------------------------------------------
காவ்யா, சென்னை, 2005
theem tharikide, feb,2006

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பெரியார்- எப்போதும் பேசுபொருள்

பெரியார்மண்ணும் பிராமணியத்தின் இயக்கமும்.

நாத்திகம் என்னும் ஆன்மீகம்