குறுங்கதைகளின் செவ்வியல் வெளிப்பாடுகள்


இலக்கியத்தின் வடிவம்- வகை மாற்றங்களில் இரண்டு தன்மைகளைக் காணமுடிகின்றது. ஒன்றை இயற்கையான வளர்ச்சிநிலை எனவும், இன்னொன்றைத் தேவைக்கேற்ற மாற்றம் எனவும் சொல்லலாம். முதல்வகை வளர்ச்சி விதையிலிருந்து கிளைபரப்பி, காய்த்துக் கனியாகிப் பலன் தரும் வடிவம். ஆனால் தேவைக்கேற்ப நடக்கும் மாற்றம் ஒருவிதத்தில் அறிவியல் கண்டுபிடிப்பின் விளைவான போன்சாய் தாவரங்களைப் போன்றவை. அழகியலும் குறியீடும் கொண்டு வாசகர்களின் ஈர்ப்பைப் பூர்த்தி செய்வன. அந்த வகையில் இப்போது எழுதப்படும் குறுங்கதைகள் சமகால வாசகர்களின் தேவைக்கான இலக்கிய வடிவம்.

பசித்திருக்கும் பேய்கள் என்ற தலைப்பில் தொகுக்கப்பட்டுள்ள கே.பாலமுருகன் தொகுத்தளிக்கும் இக்குறுங்கதைகள் அந்த வடிவத்தின் செவ்வியல் தன்மைகள் கொண்ட கதைகள். இந்தத் தொகுப்பில் இடம்பெற்றுள்ள கதைகளில் பெரும்பாலானவை மரணத்திற்கு நெருக்கமான சூழலைக் காட்சிப்படுத்துகின்றன. அப்பாவின் மரணதிற்குக் காரணமாகும் அக்காவின் கூந்தல் ஒரு படிமமாக மாறி அந்தக் கதையோடு முடிந்துபோனாலும், சாவின் படிமங்கள் வெவ்வேறு காட்சிகளில் படர்ந்து நிற்கின்றன. மறுபடியும் தப்பிவந்த அம்மா சொல்லும் காட்சிகளும், மன்னிப்பற்ற மன்னிப்பில் விரிக்கப்படும் தூக்கும் எனச் சாவின் கீறல்கள் தொடர்கின்றன. அந்தத் தொடர்ச்சியைச் சாத்தான் என்னும் குறியீடாகவும், பகடியின் சித்திரமாகவும் இயேசுவின் ஆட்டுக்குட்டியாகவும் வாசிக்கமுடிகிறது.

வயதாகி, நோய்வயப்பட்டு, உடல் நலிவுற்றுப் போதும் வாழ்ந்தது என்ற நிலைக்குப் போனபின்பு வந்தடையும் சாவுகள் பற்றிப் பெரிய கேள்விகளோ, விசாரணைகளோ எழுவதில்லை. மாறாக ஒருவரின் திடீர் மரணங்களும், மரணத்தை நெருங்கத் தயங்கும் அச்சங்களும், திடீரென்று காணாமல் போவதும் தன்னைச் சிதைத்துக்கொள்ளும் காரணமின்மையும் இலக்கியத்தின் விசாரணைக்குரிய உள்ளடக்கங்களாக இருக்கின்றன; உரிப்பொருட்களாக எழுதப்படுகின்றன. இவற்றைக் குறிப்பான காலத்திலும் வெளியிலும் வைத்துப் பேசும் சிறுகதைகளும் நாவல்களும் தர்க்கநியாயங்களை வாசகர்களிடம் எழுப்புகின்றன. ஆனால் குறுங்கதைகள் அத்தர்க்க நியாயங்களைக் கைவிட்டுவிட்டு நேரடியாக உள்ளடக்கச் சொல்லாடல்களையே முதன்மைப்படுத்தும் நோக்கத்தைக் கொண்டிருக்கின்றன.

உரிப்பொருள், கருப்பொருள், முதல் பொருள் ஆகிய மூன்றும் கவிதையில் இடம்பெற வேண்டிய மூன்று அடிப்படைக்கூறுகள் எனத் தொல்காப்பியம் வரையறை செய்துள்ளது. அந்த மூன்றில் காலமும் வெளியுமான முதல்பொருளும், வெளியில் காணப்படும் கருப்பொருள் என்னும் பின்னணிக்கூறுகளும் இல்லாமல்கூடக் கவிதை எழுதப்படலாம். ஆனால் உரிப்பொருள் இல்லாமல் கவிதை இல்லை என்பது அதன் முடிபு. தொல்காப்பியம் கூறும் உரிப்பொருளே நிகழ்காலத்திறனாய்வு சொல்லும் உள்ளடக்கம். உலக மொழிகளின் செவ்வியல் இலக்கியங்கள் அவற்றின் உரிப்பொருள்களாலும் அதன்வழி உருவாகும் உணர்வலைகளாலுமே செவ்வியல் இலக்கியங்களாக அறியப்படுகின்றன. நீண்டகாலமாகக் குறுங்கதை வடிவத்தில் சோதனைகளைச் செய்துவரும் கே.பாலமுருகன் தனது குறுங்கதைகளில் உருவாக்கித் தரும் உணர்வலைத் திரட்சியால் அக்கதைகளைச் செவ்வியல் நிலைக்கு நெருக்கமாக்கி இருக்கிறார். எனது இந்தக் கூற்றை உங்கள் வாசிப்பின் மூலம் உறுதிப்படுத்திக்கொள்ளக் கேட்டுக் கொள்கிறேன்.

******

குறுங்கதை, நமது காலத்தின் தேவையான இலக்கியவடிவம். கலை, இலக்கியம், வாசிப்பு, கொண்டாட்டம் என எல்லாவற்றிலும் அவசரமும், குறுகியகால ஈடுபாடும் மட்டுமே சாத்தியம் என மாறியிருக்கும் நமது காலத்திற்குப் பெரும் காலப்பரப்பையும், வெளிகளையும் எண்ணிக்கையில் கூடுதலான பாத்திரங்களையும் கொண்ட நாவல் இலக்கியம் பொருத்தமற்றது என நினைக்கும் மனநிலை தோன்றியிருக்கிறது. இன்றைய வாசகர்களுக்கு – குறிப்பாக இணைய இதழ்களிலும் சமூக ஊடகங்களிலும் வாசிப்பவர்களுக்குச் சில நூறு பக்கங்களைக் கொண்ட நாவல் இலக்கியம் அந்நியமானது.

நமது காலத்தின் தேவையான குறுங்கதை வடிவத்தின் வருகை கடந்த ஐந்தாண்டுகளில் அதிகமாகிக் கொண்டிருக்கிறது. தமிழ்நாட்டு எழுத்தாளர்களில் சுரேஷ்குமார் இந்திரஜித் தொடர்ந்து குறுங்கதைகளை எழுதிக்கொண்டிருக்கிறார். எஸ்.ராமகிருஷ்ணன், போகன் சங்கர், பெருந்தேவி ஆகியோரும் குறுங்கதைகளை எழுதிவருகின்றனர்.

கொங்கு மண்டல வட்டார வழக்கிற்கு முக்கியத்துவம் அளிக்கும் வா.மு.கோமுவின் நடுகல் இதழ் அச்சில் வந்தபோதும் இணைய இதழாக மாறிய பின்னும் குறுங்கதை எழுத்தாளர்களுக்கு வாய்ப்பளித்து வருகிறது. அவ்விதழ் வழியாக நுண்கதை எழுத்தாளராக அறியப்பட்டவர் சுஜித் லெனின். அவரது பித்தனாரும் பூங்குன்றன் விளாதிமீரும் என்ற தொகுப்பு சில ஆண்டுகளுக்கு முன்பு வந்தது. அவரோடு அண்மையில் மலேசியாவைச் சேர்ந்த தயாஜியும் நடுகல்லில் குறுங்கதைகள் எழுதிவருகிறார்.

சுஜித் லெனினின் குறுங்கதைத் தொகுப்புக்கு முன்பே இலங்கையின் அகமது பைசலின் ‘வானத்தை நுகர்ந்து பார்ப்பவன்’ என்ற தொகுப்பும் கவனிக்கத் தொகுப்பாக வந்துள்ளது. இவர்கள் இருவரின் குறுங்கதைகளுக்கு முன்பே பாலமுருகனின் குறுங்கதைகள் வாசிக்கக் கிடைத்தன என்றாலும் இப்போதுதான் தனித்தொகுப்பாக வருகிறது என நினைக்கிறேன். மலேசியத் தமிழ்ப் பின்னணியில் மட்டுமல்லாது நீண்டகாலமாகக் குறுங்கதைகளை எழுதிவரும் கே.பாலமுருகன் அவ்வடிவத்தைச் செழுமைப்படுத்தியுள்ளவர்களில் ஒருவர் என்பதை இந்தத்தொகுதியின் கதைகள் உறுதி செய்கின்றன.

10-12.24

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அயல் பல்கலைக்கழகங்களில் தமிழ் இருக்கைகள்

மொழிபெயர்ப்பும் புதுச்சந்தையும்

இலக்கியவியலும் தொல்காப்பியப் பொருள் கூறலும்