நாத்திகம் என்னும் ஆன்மீகம்
ஆன்மீகஅரசியல் என்பது இலக்கணப்படி உம்மைத்தொகை. ஆன்மீகமும் அரசியலும் என விரியும். ஆன்மீகத்தின் இருப்பிடம் கோயில். அதன் மூலம் இறை. இறையை ஆணாக நினைக்கும்போது அன் விகுதியோடு இறைவன் என்கிறோம்; பெண்ணாக நினைக்கையில் இறைவி எனக் கொள்கிறோம். இந்தப் பெயரிடலில், இறை என்பது மனிதர்களின் சாயலில் இருக்கிறது என்ற கருத்தும் உள்ளடங்கி இருக்கிறது. இறை என்ற அந்த மூலத்தைத் தேடிச் செல்ல வேண்டியவர்கள் தனிமனிதர்கள். அமைதியும் ஓர்மைப்பட்ட மனமுமாகச் செய்யும் பயணமே ஆன்மீகப் பயணம். தனிமனித ஆன்மீகப் பயணத்தைக் குறித்த சொல்லாடல்களாக இருப்பவை இறையியல்களாகவும், அதன் விளக்கவுரைகள் இறையியல் தத்துவங்களாகவும் விரிந்துள்ளன. தனிமனிதர்கள் ஒவ்வொருவரும் இந்தப் பயணத்தைச் செய்யமுடியாதவர்களாக இருக்கிறார்கள் என்ற நினைப்பின் தொடர்ச்சியாகச் சில தனிமனிதர்கள் இறையியலைக் கூட்டு நடவடிக்கைகளாக மாற்றியிருக்கிறார்கள்.
மாற்றியவர்களில் சிலர் தங்களைத் தீர்க்கதரிசிகளாகவும் புனிதர்களாகவும் வழிகாட்டிகளாகவும் மாற்றிக்கொண்டு புதிய வாழ்க்கை முறையை அறிமுகம் செய்திருக்கிறார்கள். அதனைப் பின்பற்றும் வினைகள் நம்பிக்கைகளாகவும் சடங்குகளாகவும் வழிபாடுகளாகவும் மாறியிருக்கின்றன. அப்படியான கூட்டுநினைவிலிகளின் பருண்மையான வெளிப்பாடாக இருப்பவை விழாக்கள். பழைய விழாக்களைப் போலவே இப்போதும் புதிய விழாக்கள் உருவாக்கப்படுகின்றன.
ஆன்மீகம் என்பதற்குச் சொல்லப்பட்ட இந்த விளக்கத்தின் அடிப்படையில் நாத்திகமும் ஓர் ஆன்மீக வழிமுறைதான். அதற்கும் சில நம்பிக்கைகள் இருக்கின்றன; சடங்கு முறைகள் இருக்கின்றன; மனமாற்றங்கள் இருக்கின்றன. மனம் எதனைக் குற்றம் எனச் சொல்கிறதோ, அதற்கான தண்டனையை மனமே - மனதின் சாட்சியே வழங்கும். அதனை ஏற்றுத் தனது நடைமுறைகளை ஒரு தன்னிலை மாற்றிக்கொள்ளும். ஆத்திகர்கள் அப்படி மாற்றிக்கொள்வதற்காக -பாவமன்னிப்பைக் கோரிப்பெறுவதற்காக உருவாக்கிய இடங்கள் கோயில்களாக - ஆலயங்களாக இருக்கின்றன. நாத்திகம் அப்படியோர் இடத்தை - கோயிலை நாடிச் செல்வதில்லை. தவறுகளை ஒத்துக்கொண்டு செய்யும் பரிகாரச் சடங்குகளைச் செய்வதில்லை. அப்படிச் செய்வதற்கு ஒரு முகவரை - பூசாரிகளை - குருமார்களைச் சாட்சி வைத்துக்கொண்டு செய்து காட்சிப்படுத்திக் கொள்வதில்லை. அந்த வகையில் நாத்திகம் பிறரைத் தொல்லைக்குள்ளாக்காத ஆன்மீகம். அது நவீனத்துவ வாழ்வின் ஆன்மீகம்.
பின்னோக்கிப் பார்த்தால், நாத்திகவாதம் என்பது இந்தச் சடங்குகளையும், அதனைச் செய்யும் முகவர்களையும் அதனை அனுமதித்து அமைப்பாக நிற்கும் மதத்தையும் ஏற்க மறுப்பதாக இருப்பதை உணரலாம்.
அரசு என்பது அமைப்பு, அதன் உட்கூறுகளும் இயக்கமும் தனியொரு மனிதருக்காகத் திட்டமிடப்படுபவையல்ல. மக்கள் திரளை மையப்படுத்திப் பேசப்படும் சொல்லாடல். தெருவிளக்குப் போடுவதை மேற்கொள்ளும் ஓர் அரசமைப்பு அந்தத் தெருவில் குடியிருக்கும் மனிதர்களுக்காக மட்டும் என நினைத்து அதை அங்கே நிறுத்துவதில்லை. அந்த வழியாகப் போகும் ஒவ்வொருவருக்கும் அதன் பயன்பாடு கவனத்தில் கொள்ளப்படுகின்றது. வேறுவேறு நோக்கமும் வினைகளும் கொண்ட இரண்டையும் இணைத்து ஒற்றைச் சொல்லாடலாக மாற்றும் போக்கும் நடவடிக்கைகளும் தேவையா? என்பது நம்முன்னுள்ள கேள்வி.
நிலவுடைமைகாலத்து மன்னர்களின் ஒரு பெயர் கோ. அவர்களின் இருப்பிடமும் கோயில் தான். மன்னர்கள் தங்களை இறைவனின் இன்னொருவடிவமாக முன்னிறுத்தியதால் நாட்டின் இறைவன் அரசன், மன்னன் என ஆன்மீகத்தின் மூலமான இறையின் இடத்தைத் தனதாக்கினார்கள். ஆன்மீகமும் அரசியலாக இருந்தது. மன்னர்களின் ஆட்சி முடிந்து, மக்களாட்சி அரசியல் என்ற கண்டுபிடிப்புக்குப் பின் அவ்விணைப்புப் பொருள் இழந்ததாக மாறிவிட்டது.
ஆன்மீகப் பயணம் தனி; அரசியல் பயணம் தனி என்பதை உறுதிசெய்து கொண்ட வாழ்க்கை முறையை வழங்கியது நவீனத்துவம். ஒவ்வொன்றுக்கும் இறைவனின் ஒப்புதலைப் பெற்றுத் தொடங்கிய நடவடிக்கைகள் இப்போது இல்லை. தனிமனிதர்கள் தொடங்கும் பெரும் செயல்களில் முடிவெடுக்க முடியாத நிலையில் மட்டுமே ஆன்மீக மூலத்தை நாடுகிறார்கள். மற்ற நேரங்களில் அரசு அமைப்புகள் எழுதிவைத்திருக்கிற சட்டங்களையே அமைப்பின் விதிகளையே பின்பற்றுகிறார்கள். இந்த மாற்றத்தை - மரபான வாழ்க்கையிலிருந்து நவீனத்துவத்திற்குள் நுழைந்த மாற்றத்தை விளங்கிக் கொள்ளாதவர்களே ஆன்மீக அரசியல் பற்றிப் பேசுகிறார்கள். அல்லது விளங்கிக்கொண்டே மக்கள் திரளைத் தவறாக வழிநடத்த நினைக்கிறார்கள்.
ஆன்மீகத்தையும் அரசியலையும் இணைத்துக் கொண்டு செய்யும் பரப்புரைகளின் முதன்மை நோக்கம் ஆன்மீகமாக இல்லாமல் அரசியலாக இருக்கிறது என்றால், அந்த அரசியல் மனிதர்களைப் பின்னுக்கிழுக்கும் நோக்கம் கொண்ட தவறான அரசியல் என்பதை உணரவேண்டும்.
ஆன்மீகத்தையும் அரசியலையும் இணைத்துச் செய்யப்படும் அரசியல் தவறானது என்பதுதான் மக்களாட்சி அரசியல்.
ஆன்மீகத்தையும் அரசியலையும் இணைத்துச் செய்யப்படும் அரசியல் தவறானது என்பதுதான் மக்களாட்சி அரசியல்.
அரசியல் என்பது மக்களைத் திரளாகப் பார்த்து அவர்களின் வாழ்வியல் சிக்கலில் மாற்றங்களை ஏற்படுத்தி, ஈடேற்றுவதற்காகச் செய்யும் திட்டங்களும் செயல்பாடுகளும். ஆனால் ஆன்மீகம் தனிமனிதர்களை - அவர்களது மனச்சிக்கலிலிருந்து விடுவித்து ஈடேற்றம் செய்வதற்கான வினைகள் சார்ந்தது. அது நம்பிக்கைகள், சடங்குகள், வழிபாடுகள், மனமாற்றங்கள் சார்ந்தது. இரண்டையும் கலப்பது நவீன அரசியல் ஆகாது. அப்படிக் கலக்கும் அரசியலைத் தவறானது எனச் சுட்டிக்காட்டுவதே நவீன அரசியல்.
பின் குறிப்பு
இந்துத்துவம் சமயநடவடிக்கைகளை ஆன்மீகமாக முன்வைத்து ஆன்மீக அரசியல் செய்வதுபோல, அதனை மறுப்பவர்கள் வள்ளலார், வைகுண்டசாமி, நாராயணகுரு போன்றவர்களின் ஆன்மீகத்தைக் கைக்கொண்டு அரசியலுடன் இணைத்து மாற்று ஆன்மீக அரசியல் செய்யலாமே? ஏன் நாத்திகத்தை முன்மொழிந்து அரசியல் செய்யவேண்டும்? என்றொரு கேள்வியை இணையவழிக் கருத்தரங்கில் கேட்டார். அவருக்குச் சொன்ன பதிலின் விரிவுரையே இது.
கருத்துகள்