போரிலக்கிய வாசிப்புகள் மீதான திறமான பார்வை.


ஈழத்துப் போரிலக்கியமும் உலக தமிழிலக்கிய வரைபடமும்

சு.அழகேஸ்வரன்

ஈழப் போர் குறித்த நாவல்கள், சிறுகதைகள் மற்றும் கவிதைகள் பற்றி 2015 ஆம் ஆண்டு முதல் 2023 வரை எழுதப்பட்ட திறனாய்வுக் கட்டுரைகள் தொகுக்கப்பட்டு “போரிலக்கிய வாசிப்புகள்: விவரிப்புகள்- விவாதங்கள்- உணர்வுகள்" என்ற தலைப்பில் நூலாக வெளியிடப்பட்டுள்ளது. குறிப்பாக முள்ளிவாய்க்கால் பேரழிவிற்குப் பின்னர் இலங்கையில் வாழ்ந்து கொண்டிருக்கும் படைப்பாளிகள் மற்றும் புலம்பெயர்ந்தோர் எழுதிய படைப்புகள் திறனாய்வுக்கு எடுத்து கொள்ளப்பட்டுள்ளது. கவிதைகளை பொருத்தமட்டில், போர் குறித்து எழுதிய கவிஞர்களின் தனித்தன்மைகளையும் அவை, எவ்வாறு தமிழ் செவ்விலக்கியங்கள் மற்றும் நவீன கவிதைகளின் தொடர்ச்சியாகவும், மாறுபட்டு உள்ளது என்பது ஒப்பு நோக்கப்பட்டுள்ளது. அதே வேளையில் இந்தப் படைப்புகள் குறித்து தொடர் வாசிப்புகள், விவாதங்கள் மற்றும் ஆய்வுகளை மேற்கொள்வதற்கான கருப்பொருளும் வழங்கப்பட்டுள்ளது. சில படைப்புகளை செழுமைப்படுத்தும் நோக்கில் விமர்சிக்கப்பட்டுள்ளது. மேலும் ஈழப் போரிலக்கியம் உலக தமிழிலக்கிய வரைபடம் ஒன்றை உருவாக்க வேண்டியதின் தேவையை உணர்த்துவதாக கூறி அதை உருவாக்குவதற்கான ஆலோசனைகளும் முன்வைக்கப்பட்டுள்ளது.

நாவல்கள்:

2009 முள்ளிவாய்க்கால் பேரழிவிற்குப் பின்னர் வெளியான பன்னிரண்டு நாவல்கள் "பண்பாட்டு நிலவியல்" அணுகுமுறையில் திறனாய்வு செய்யப்பட்டுள்ளது. இவை போரில் பங்கேற்று நேரடி அனுபவம் பெற்றவர்களால் எழுதப்பட்டுள்ளவைகளான தமிழ்க் கவியின் ‘ஊழிக் காலம்', சாத்திரியின் ‘ஆயுத எழுத்து' குணா கவியழகனின் ‘நஞ்சுண்டு' ‘காடு' ‘விடமேரிய கனவு', ‘அப்பால் ஒரு நிலம்'. இரண்டாவது, போர்க்காலத்தையும் போர் நினைவுகளையும் அண்மையிலிருந்து பார்த்து அல்லது பங்கேற்று விலகிவந்து தொடரும் நினைவுகளாக முன்வைப்பவை சயந்தனின் ஆறா வடு, ஆதிரை, தேவகந்தனின் ‘கனவுச் சிறை', மூன்றாவது, முழுமையாக படர்க்கை நிலையில் சொல்லும் விலகல் தன்மை கொண்ட குழந்தையின் அகரணம், ஷர்மிளா ஸெய்யத்தின் உம்மத், ஷோபா சக்தியின் BOX கதை புத்தகம் ஆகியவை.

ஆனால் போரில் வெவ்வேறு நிலைகளில் தொடர்புடைய இந்த படைப்பாளிகள் முன்வைக்கும் விசயம் ஒன்றாகவே உள்ளது. அவைகள் லட்சக்கணக்கான மக்களை காவு காண்பதோடு, அதற்கிணையான எண்ணிக்கையில் சொந்த நிலத்திலிருந்து அகதிகளாக வெளியேறிய மனிதர்கள் இந்த பூமி பரப்பில் பல இடங்களிலும் அலைந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களை தாங்க வேண்டியதும், தக்க வாழ்க்கையை வழங்க வேண்டியதும் மனித குணம் கொண்ட உலகம் மனிதர்களின் கடமை என்று அப்படைப்புகள் சொல்கின்றன. அதே வேளையில் இவர்களில் யாருடையவை வெறும் போர்க்கள அனுபவங்களாக நின்று போய்விடுகிறது? யாருடையவை இலக்கியவியலைப் புரிந்து கொண்டு படைக்கப்பட்டுள்ளவை? யாருடைய நாவல் சர்வதேச சமூகத்தின் மனசாட்சியை தட்டிப் பார்த்து ஈழத்தின் யுத்தகாலத்தையும், நியாயப்பாடுகளையும் சொல்லக்கூடியவையாக இருக்கின்றன? என்பது தனியே ஆய்வு செய்யப்பட வேண்டும் என்று குறிப்பிட்டு ஆய்வுக்கான கருதுகோள் ஒன்றையும் வழங்குகிறது.

சிறுகதைகள்:

ஈழவாணி தொகுத்த ‘காப்பு' என்ற தொகை நூலில் யோகேஸ்வரி சிவப்பிரகாசம் தொடங்கி ஜெயசுதா பாசியன் வரையிலான தமிழ் பெண் படைப்பாளிகள் மற்றும் ஐந்து சிங்கள பெண் எழுத்தாளர்களில் படைப்புகள் உள்பட 41 கதைகள் தொகுக்கப்பட்டுள்ளன. அவை, ஒடுக்குதல் நிகழும் வெளியாக பெண் உடல்கள் இருக்கின்றன என்று பொதுவாக பேசினாலும், போர் நிகழ்வுகள் போருக்குப் பின்னர் உருவாக்கப்பட்ட புனர்வாழ்வு முகாம்களின் வாழ்க்கை, புலம்பெயர் வாழ்வின் இன்பதுன்பங்கள் பற்றிப் பேசுகின்றன. அதே வேளையில் தமிழ்ப் பெண்கள் குடும்ப எல்லைக்குள் முடங்கிப் போனவர்கள் அல்ல, போரில் நேரடியாக ஈடுபட்டு வீரமரணம் அடைந்தவர்கள் என்பதை வரலாற்றுச் சான்றுகளுடன் பதிவு செய்யப்பட்டுள்ளது. சிறுகதையின் எளிய வடிவங்கள், நுட்பமான கதைத் திறனுடன் ஒற்றை நிகழ்வுக்குள்ளேயே ஒரு உச்ச நிலையைக் காட்டி முடித்துவிடும் கதைகளைக் கொண்ட இத் தொகுப்பிற்கு உலகத் தமிழிலக்கிய வரைபடத்தில் ஒரு முக்கிய இடம் கொடுக்கப்பட்டுள்ளது.

37 சிறுத்தைகளைக் கொண்ட தாமரைச் செல்வியின் ‘வன்னியாட்சி', சொந்த நிலப்பரப்பிற்குள் இடம் பெயர்ந்தவர்களின் வாழ்க்கை பதிவுகளாக உள்ளது. ஈழவாணியால் எழுதப்பட்டுள்ள 10 சிறுகதைகளைக் கொண்ட ‘யாழ் தேவி' என்ற தொகுப்பு ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டவர்களின் மன நிலையைப் பற்றியது. கறுப்பு சுமதியின் ‘அண்ணி', சார்மிளா வினோதினியின் ‘போர்க்காலச் சுமைகள்' ஆகியவை போருக்கு பின்னரான புலம்பெயர்வில் கைவிடப்பட்டவர்களைப் பற்றியது. தமிழினி ஜெயக்குமாரின் ‘வைகறைக் கனவு', போரின் அர்த்தமற்ற நீட்சியின் மீது போராளிகளுக்கு சலிப்பும் தப்பித்தலற்ற குழியில் மீள முடியாத சூழலுக்குள் மாட்டிக் கொண்டு விட்டோம் என்ற புரிதல் இருந்ததை கோடிட்டுக் காட்டுகிறது.

போருக்குப் பின்னராக நடைபெற்ற விசாரணை குறித்தும், முள்ளிவாய்க்கால் கொடூரம் குறித்தும் பேசும் ராகவனின் உதிரகணம், மரணநவை ஆகிய இரண்டு சிறு கதைகளின் படைப்பாக்கம் குறித்த விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. மரணநவை, செய்தியாக மட்டுமே உலகம் அறிந்திருந்த ஈழத்தில் நடைபெற்ற போரின் துயரத்தை ஒரு பாத்திரத்தின் வலியாக அல்லாமல் கூட்டத்தின் வலியாக சொல்லப்பட்டுள்ளது. ஆனால் அதன் நிகழ்வெளியும், காலத்தையும் குறிப்பாகக் கூட சொல்லவில்லை. அப்படி சொல்லியிருந்தால் அந்த கதையின் நிகழ்தகவு கூடுதலாக இருந்திருக்கும். மேலும் கதை மொழிபெயர்க்கப்படும்போது உலகின் எந்த மூலையில் இருக்கும் வாசகரும் அதன் ஆழத்தை புரிந்து கொள்ளவும் வாய்ப்பு ஏற்பட்டிருக்கும். உதிர கணம் கதையோ, மூன்று பத்திகளில் ஓரங்க நாடகத்தின் மூன்று காட்சிகள் போல் அமைக்கப்பட்டுள்ளதால் வாசிப்பவர்களை பெரும் களைப்பிற்குள் தள்ளும் விதமாக உள்ளது. அந்த கதை கூடுதல் பத்தியில் எழுதப்பட்டிருக்க வேண்டும். ஆர்.சி.கந்தராஜாவின் "நரசிம்மம்" தமிழ் நிலப் பகுதியில் போருக்கான தயாரிப்புப் மனநிலை நீர்த்துப் போகவில்லை என சுட்டிக் கட்டுகிறது. இது நடப்பையும், காலத்தையும் புரிந்து கொண்ட முன்வைப்புதானா? என்ற கேள்வியை எழுப்பி ஆய்வுக்கான மற்றுமொரு கருப்பொருளும் வழங்கப்பட்டுள்ளது.

நோயலின் ‘அலைந்து திரியும் ஆவிகள்' மரணத்திற்குப் பிந்தைய காரியங்களைச் செய்யாததால் ஆவிகள் அலைந்து திரிவதாகவும், அவற்றில் கெட்ட ஆவிகள் சமூகத்திற்கு கேடு உண்டாக்கும் என்ற சாமியாரின் கூற்றை கேட்டு, தனது மாண்டு போன உறவினர்களுக்கு காரியங்களைச் செய்துவிட்டு வெளிநாடு திரும்பும் நிகழ்வைக் குறித்தது‌. பொதுவாக போராட்டங்களை எதிர்நிலையிலிருந்து பார்த்து படைப்புகளை எழுதும் நோயலின் இந்தக் கதையின் படைப்பாக்க முறை விமர்சனத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளது. கடந்த காலத்தின் மீதான விமர்சனத்திற்கு உகந்த புனைவு சொல் முறை படர்க்கை கூற்று நிலையாகும். தன்மைக் கூற்று சொல் முறையில் எழுதப்பட்டால் அவை கவனம் பெறாமல் போகும். எனவே தன்மைக் கூற்றைத் தவிர்த்து புதிய புதிய வடிவத்தோடும், சொல் முறையோடும் எழுதினால் அவரது கதைகள் ஈழப் போர் பற்றிய புனைகதைகளில் வரிசையில் இடம் பெற்றிருக்கும் என்று விளக்கப்பட்டுள்ளது.

‘போர்க்கால நினைவுகளும் புலம்பெயர் எதிர்வுகளும்’ என்ற கட்டுரையில் ஆறு சிறுகதைகள் திறனாய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது. அவற்றில் சந்திரா இரவீந்தரின் ‘இசையரசி' போர்கால நினைவுகளை குற்ற உணர்வில்லாமல் பகிர்ந்து கொள்ளும் முன்னாள் போராளிகளின் சந்திப்பு குறித்தது. மாலினியின் ‘ராகுல்' புலம்பெயர்ந்த நாட்டின் சட்ட நெருக்கடிக்குள் தங்களது குடும்ப வாழ்க்கையைத் தொடர முடியாதென்பதை சொல்வதாக உள்ளது. ‘தலைமையைக் கொன்றவன்' என்ற மற்றுமொரு சிறுகதை போர்க்கால பொய்யுரைகளால், பகுமான சொற்களால் வாழ்க்கையைத் தொலைத்த ஒரு அப்பாவின் துயரம் குறித்தது, ஷமீலா யூசுப் அலியின் ‘கிணறு' விடுதலைப்புலிகளின் இசுலாமிய விரோதப் பார்வையால் தமிழர்கள் மீது இசுலாமியர் ஒருவருக்கு உண்டான கோபம், அதனால் ஒரு தமிழ்ப் பெண்ணுடன் ஏற்பட்ட மோதல், அம் மோதேலே காதலாக மாறியது குறித்தது, சர்மிளா வினோதினியின் ‘வெண்ணிலா' ஆனையிறவு, தென் மராட்சி போர்க்களத்தில் தனது அம்மாவை பார்த்துவிடும் ஆசையில் பயணம் செய்து அவர் இருக்கும் தெருவுக்குள் நுழைந்து விட்ட நிலையில், வெடித்த குண்டுகளால் அவளை பிணமாக மட்டுமே பார்க்க முடிந்த சோகத்தைப் பேசுகிறது.

இறுதியாக, போர் நினைவுகள் குறித்த இந்த புனைவுகள் விமர்சன நடப்பில் மற்றும் விவரண நடப்பியல் உத்தியில் எழுதப்பட்டுள்ளதாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. விமர்சன நடப்பில் தன்மையில் எழுதுகிறவர்கள் பெரும்பாலும், புலம்பெயர்ந்த எழுத்தாளர்களாக இருப்பதாகவும், அவர்களது விமர்சனம் விடுதலைப்புலிகளின் செயல்பாடுகள் மீது உள்ளதென்றும், விவரண நடப்பியல் கதைகளை எழுதுபவர்கள் விடுதலைப்புலிகளின் ஆதரவாளர்களாக உள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. எனவே இரு வகைப்பட்ட புனைவுகளில் நோக்கங்கள் பற்றி கேள்விகள் எழுகின்றன. அதற்கு இரு தரப்பாரின் படைப்புகளை தொகுத்து வாசிக்க வேண்டும் என்று கூறி தொடர் வாசிப்பை வலியுறுத்துகிறது.

கவிதைகள்:

முதலில் சேரனின் கவிதைகள் திறனாய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது. இவை நிகழ்வு, அதன் விளைவு, அதனால் ஏற்பட்ட பலன் என்ற தர்க்கத்தின்படி முதல் வாசிப்பிலேயே வாசகர்களிடம் தனது நோக்கம் மற்றும் உணர்வு நிலையை ஒருசேர கடத்திவிடும் இயல்பையும், தனித்தன்மையும் கொண்டது. மூன்று தெருக்கள் என்ற கவிதையை முன்வைத்து இது விளக்கப்படுகிறது. பாலைப்பட்டினத்தின் ஒதுக்குப்புறத்தில் இனப்படுகொலையின் ஒரு துளி தெரிந்து விழுந்தது நிகழ்வு. மூன்று தெருக்கள் உண்டானது விளைவு, அதனால் மூன்று கோடி முகங்கள் உண்டானது பலன். இந்தக் கவிதைகள் தமிழ்க் கவிதையின் தொடக்கமான வீரயுகப் பாடல்களில் விவரிக்கப்படும் போர்கள காட்சிகளை ஒத்தவையாக உள்ளன. மேலும் நிகழ்வு, அதன் விளைவுகளை மட்டுமே எழுதிய/எழுதும் வானம்பாடி கவிஞர்கள் மற்றும் ஆத்மாநாம், பழமலய், காலப்பிரியா, மனுஷ்ய புத்திரன், சல்மா, கனிமொழி ஆகியோர் சமூக நிகழ்வு சார்ந்து எழுதும் கவிதைகளிலிருந்து வேறுபட்டதாகவும் உள்ளது.

அதேபோல் கருணாகரன், தில்லை,ரூபன் சிவராஜா, சுகன்யா ஞான ஒளி ஆகியோரின் தனித்தன்மைகளையும் அவை சங்கக் கவிதைகள் மற்றும் நவீனக் கவிதைகளின் தொடர்ச்சியாகவும், விலகியும் உள்ளது விளக்கப்பட்டுள்ளது. குறிப்பாக கையறுநிலைப் பாடல்களை எழுதும் போது தமிழ் செவ்வியக் கவிதைகள் தனி நபர்கள் இன்மையின் இழப்புகளை பேசுவதாகவும், ஆனால் ஈழக் கவிதைகள் தனி நபர்களின் துயரத்தை தாண்டி சமூகத்தில், இனத்தில் பெரும் துயரத்தை பேசுவதாகவும் உள்ளது. கருணாகரனின் ‘உலகில் முதல் ரகசியம்' என்ற தொகுப்பில் மத்யேயூ என்ற பாத்திரம் ஒன்றுக்கு மேற்பட்ட கவிதைகளில் தலைப்பாக உள்ளது. அது ஒருவராக இல்லாமல் பல்வேறு ஆளுமைகள் பற்றிய நினைவுகளாக உள்ளது. எனவே இந்த கற்பனை பாத்திரம் முன்வைத்து விவாதிக்கும் நினைவுகள் தனியாக பேசப்பட வேண்டும். ‘எழுதி கடந்த தூரம்' என்ற ரூபன் சிவராஜாவின் கவிதையில், நாடு திரும்ப வேண்டும் என்ற எண்ணம் உண்டாக்கும் குற்ற உணர்வு மனச் சிக்கலை உருவாக்குவதாகவும் அதை எழுதிக்கடப்பவையாக இவரது கவிதைகள் உள்ளன. இந்த மனச்சிக்கலை கடக்க பயன்படுபவை சொற்களே. எனவே சொற்களின் சாத்தியம் குறித்து ரூபன் சிவராஜா உருவாக்கியுள்ள குறியீடுகளும், நினைவுகளும் நிதானமாக வாசிக்க வேண்டும்.

நகர்வுகள்:

அனோஜன் பாலக்கிருஷ்ணனின் ‘சாய்வு' இளங்கோவின் ‘உறைந்த நதி' தெய்வீகனின் ‘உமையாள்' ஆகியவைகள் காமம் அல்லது காதல் பற்றி பேசுபவை. இந்தக் கதைகளை ஈழப் போரிலக்கியத்தின் நகர்வுகளாக காட்டப்பட்டுள்ளது.ஆனால் இவை புலம் பெயர்ந்த எழுத்துக்களின் அடையாளமாகக் கவனிக்க தக்க நகர்வுகள் தானா? என்பது விவாதிக்க படவேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

உலக தமிழிலக்கிய வரைபடம்:

இந்த ஆய்வுகளின் இறுதியாக, ஆங்கிலம், பிரெஞ்சு, ஸ்பானிஷ் மற்றும் ரஷ்ய ஆகிய மொழிகளில் உலக இலக்கிய வரைபடங்கள் உருவாகியுள்ளது போல் உலக தமிழிலக்கிய வரைபடம் ஒன்றை உருவாக்க வேண்டும். அதில் இந்தியா, இலங்கை, பல்வேறு நாடுகளின் வாழும் ஈழத் தமிழர்களின் படைப்புகள் மலேசியா, சிங்கப்பூருக்கு இடம் பெயர்ந்தவர்களின் படைப்புகள் மொரீஷியஸ், அரபு நாடுகள், ஆப்ரிக்க நாடுகளில் வாழும் தமிழர்களின் வாய்மொழி இலக்கியம் தொகுக்கப்பட வேண்டும். அதில் ஐரோப்பா, கனடாவில் இயங்கும் தமிழ் இருக்கைகளும் இணைந்தால் தான் இந்தப் பணியை முழுமையாக நிறைவேற்ற முடியும். இந்த முயற்சிகள் தமிழ் மொழியின் வளமான எதிர்காலத்திற்கு கையளிக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

இந்த திறனாய்வுக் கட்டுரைகளை வாசிக்கும் போது இவற்றை எழுதிய பேராசிரியர் அ.ராமசாமியைப் பற்றி குறிப்புகள் முக்கியத்துவமுடையது. இவர் ஈழப் பரப்பில் தொடர்ச்சியாக பயணங்களை செய்து வருபவர். புலம் பெயர்ந்தவர்கள் வாழ்கின்ற நாடுகளுக்கு பயணித்து மக்களின் வாழ்க்கையை கவனித்து வருபவர். திறனாய்வுகளை எந்த சாய்வும் இல்லாமல் சுயாதீனமாக மேற்கொள்பவர். அச்சமூகத்தின் வெளியான படைப்புகள் மட்டுமின்றி இணைய இதழ்கள், முகநூல் பக்கங்களில் வெளியாகும் படைப்புகளையும் இடைவிடாமல் வாசித்து அவற்றையும் திறனாய்விற்கு அடிப்படைகளாகக் கொள்கிறார். மேலும் ஆய்வு நூல்களை எழுதும் போது கண்டடைந்த முடிவுகளை மட்டும் சொல்லாமல், புதிய ஆய்வுகளுக்காக திறப்புகளை சொல்லிக்கொண்டு போவது சிறந்த ஆய்வுக்கான இலக்கணமாகக் கொள்ளப்படும். அந்த வகையிலும் இந்த நூல் முக்கியத்துவமுடையது.

இறுதியாக, ஈழப் போரிலக்கியத்தின் 25 ஆண்டுகால வரைபடத்தை முன்வைக்கும் இந்நூல் புதிய ஆய்வுகளையும், மறு வாசிப்பையும் கோருவதுடன், உலக தமிழிலக்கிய வரைபடத்தை கட்டியெழுப்பும் பணியில் ஈடுபட வாசகர்களைத் தூண்டுகிறது.

வெளியீடு: எழுத்து பிரசுரம்

எண்: 55(7) ஆர்.பிளாக். 6வது அவென்யூ,

அண்ணா நகர், சென்னை - 600 040

பக்கம் - 376 விலை.ரூ.460/-






---------------------------------------------------------------------------------------------------
தொடர்புக்கு:

சு.அழகேஸ்வரன், ஹெச் 242, பகுதி 2,அண்ணாநகர்.திருச்சி-26


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அயல் பல்கலைக்கழகங்களில் தமிழ் இருக்கைகள்

மொழிபெயர்ப்பும் புதுச்சந்தையும்

இலக்கியவியலும் தொல்காப்பியப் பொருள் கூறலும்