கரிசல் இலக்கியத்தில் கோணங்கியின் வரவு
தமிழ்மொழியின் புனைகதை வரலாறு எழுதப்படும் நிலையில் கரிசல் எழுத்தாளர்களின் இடம் குறிப்பிட்டுச் சொல்லப்பட வேண்டியதாக மாறிவிட்டது. குறிப்பாக ஆயிரத்துத் தொள்ளாயிரத்து அறுபதுகளுக்குப் பின் இவர்கள் ஓர் இயக்கமாகவே கரிசல் இலக்கியத்தை வளர்த்து வருகிறார்கள். கரிசல் எழுத்தாளர் என்று அறியப்படாத -ஆனால் குறிப்பிட்டுச் சொல்லும்படியான சிறுகதைகளை எழுதிவிட்டு மறைந்த கு.அழகிரிசாமியைத் தனது குருவாகக் கொண்டு கரிசல் காட்டில் முன்னத்தி ஏர் ஓட்டியவர் கி.ராஜநாராயணன். இருவரும் இடைசெவல் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் என்பது காரணமாக இருந்தது. ஐம்பதுகளின் கடைசியில் இடதுசாரிக் கட்சி சார்ந்த பத்திரிகைகளில் தனியாளாகச் சாலோட்டிய கி.ரா.வைத் தொடர்ந்து இன்று இருபத்தி ஐந்து பேருக்கு மேலாக ஏர்பூட்டியுள்ளனர். நான்கு நாவல்கள், ஐந்து குறுநாவல்கள் , பதினைந்து சிறுகதைத் தொகுதிகள், ஒரு வழக்குச் சொல்லகராதி, எனத் தங்கள் இலக்கிய வீச்சைப் பரப்பியுள்ள கரிசல் எழுத்தாளர்களன் எழுத்துக்களின் பெரும்பாலும் மழைமுகம் காணாத கரிசல் புஞ்சைகளே. இப்புஞ்சைக் காட்டு மக்களிடையே வழக்கில் இருக்கும் நாட்டார் கதைகளின் தொகுதிகள் மூன்றும் கரிசல் எழுத்தாளர்களால்...