கரிசல் இலக்கியத்தில் கோணங்கியின் வரவு


தமிழ்மொழியின் புனைகதை வரலாறு எழுதப்படும் நிலையில் கரிசல் எழுத்தாளர்களின் இடம் குறிப்பிட்டுச் சொல்லப்பட வேண்டியதாக மாறிவிட்டது. குறிப்பாக ஆயிரத்துத் தொள்ளாயிரத்து அறுபதுகளுக்குப் பின் இவர்கள் ஓர் இயக்கமாகவே கரிசல் இலக்கியத்தை வளர்த்து வருகிறார்கள். கரிசல் எழுத்தாளர் என்று அறியப்படாத -ஆனால் குறிப்பிட்டுச் சொல்லும்படியான சிறுகதைகளை எழுதிவிட்டு மறைந்த கு.அழகிரிசாமியைத் தனது குருவாகக் கொண்டு கரிசல் காட்டில் முன்னத்தி ஏர் ஓட்டியவர் கி.ராஜநாராயணன். இருவரும் இடைசெவல் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் என்பது காரணமாக இருந்தது. ஐம்பதுகளின் கடைசியில் இடதுசாரிக் கட்சி சார்ந்த பத்திரிகைகளில் தனியாளாகச் சாலோட்டிய கி.ரா.வைத் தொடர்ந்து இன்று இருபத்தி ஐந்து பேருக்கு மேலாக ஏர்பூட்டியுள்ளனர்.

நான்கு நாவல்கள், ஐந்து குறுநாவல்கள் , பதினைந்து சிறுகதைத் தொகுதிகள், ஒரு வழக்குச் சொல்லகராதி, எனத் தங்கள் இலக்கிய வீச்சைப் பரப்பியுள்ள கரிசல் எழுத்தாளர்களன் எழுத்துக்களின் பெரும்பாலும் மழைமுகம் காணாத கரிசல் புஞ்சைகளே. இப்புஞ்சைக் காட்டு மக்களிடையே வழக்கில் இருக்கும் நாட்டார் கதைகளின் தொகுதிகள் மூன்றும் கரிசல் எழுத்தாளர்களால் வெளிக்கொணரப்பட்டுள்ளன.

இண்டஞ்செடிகளும் கொறண்டிமுள்ளும் மண்டிக்கிடந்த கரிசல் பூமியை வாஞ்சையோடு வெட்டிக் கொத்திப் புஞ்சைப் பயிர்களான வரகும் திணையும் பருத்தியும் பயிரிட்டு, மழைக்காக வானம் பார்த்து, வெடிப்போடிய கரிசலில் ஆடுமாடு மேய்த்து, குருவி வேட்டியாடி, காதலித்து கலியாணம் பண்ணி, சாமியாடி,செத்துப் போகும் கரிசல் காட்டுச் சமுசாரிகளின் சோகமும் கரிசல் எழுத்தாளர்களின் பேனாவில் வரிவடிவம் பெற்றுள்ளன. சோகத்தையும் சுகத்தையும் எல்லாக் கரிசல் எழுத்தாளர்களும் தயங்கியவர்கள் அல்ல. இச்சித்திரிப்பினூடேயே கரிசல் காட்டின் சாதீய- உடைமையாள முரண்பாடுகளும், ஏமாற்றுக்களும், சிதைவுகளும் , நவீனச் சுரண்டல் முறைகளும் சிலரிடையே வெளிப்படையாகவும் சிலரிடையே பூடகமாகவும் வெளிப்பட்டுள்ளன.

கரிசல் இலக்கியத்தின் மூலவரான கி.ரா. தம் தொடக்கக் காலக் கதைகளில் கரிசல் காட்டுச் சமுசாரியை உண்மையான தாத்பரியத்தோடு படைக்கத் தொடங்கி, பின்னர் அவர்களின் பழக்க வழக்கம், நம்பிக்கை, தனித்தன்மை எனப்பட்டியல் போடவும் ரசித்துச் சொல்லவும் தொடங்கினார். அந்நிலையில் பூமணியும் பா.செயப்பிரகாசமும் அவரது ஆரம்பகாலத் தன்மையைத் தொடர்ந்தனர். இவர்களின் கதைகள் கோபத்தோடும் ஆத்திரத்தோடும் அனுதாபத்தோடும் கரிசல் காட்டினைச் சித்திரித்தன. இவ்விருவருள்ளூம் பா.செயப்பிரகாசம் கற்பனைத்தனமிக்க வார்த்தைகளால் கதை சொல்ல, பூமணி தன்னுடைய பார்வையை விசாலமாக்கினார். கரிசல் பூமியை விரிந்த தளத்தில் தரிசித்த பூமணியின் ‘பிறகு’ வும் , ‘வெக்கை’யும் அந்நிலம் முரண்பாடுகள் நிறைந்ததாகக் காட்டின.

எழுபதுகளில் கரிசல் பூமியில் மென்னடை போட்டுக் கொண்டிருந்த கட்டைமாட்டு வண்டிகள் குறையத் தொடங்கின. மின்சாரத்தின் வரவும், பஞ்சாலைகளின் தோற்றமும் கரிசல் மக்களின் வாழ்க்கையில் புதிய அத்தியாயங்களைத் தோற்றுவித்ததோடு கரிசல் இலக்கியத்திலும் புதிய வழித்தடங்களைப் பதித்தன. புதிய தலைமுறைக் கரிசல் எழுத்தாளர்களாகப் பலர் வந்தனர், மேலாண்மை பொன்னுச்சாமி, தனுஷ்கோடி ராமசாமி, வீர.வேலுசாமி, அழகு கிருஷ்ணன், கௌரிசங்கர், தமிழ்ச் செல்வன், சுயம்புலிங்கம், கே.ராமசாமி, கோணங்கி எனப் பலர் எழுதத்தொடங்கினர்.

இவர்கள் அனைவரும் கரிசல் இலக்கியத்தின் முன்னோடியாக கிராவை மதிக்கிறவர்கள் என்றாலும் அவரை- அவரது கதைகளை அப்படியே நகல் எடுத்தவர்கள் அல்ல; கரிசல்காட்டின் சமகால நிகழ்வுகளை- மாற்றங்களைப் பார்க்கின்றவர்களாக- எழுதுபவர்களாக வந்துள்ளனர். இவர்களில் சிலர் நவீனத்தமிழ் இலக்கியம் கிளைவிட்டு வளர்கின்ற பலதுறைகளையும் அறிந்தவர்களாகவும் தொடர்புடையவர்களாகவும் உள்ளனர், நவீனச் சிந்தனைகளான மேற்கத்திய அறிவியக்கங்களைப் புரிந்து கொள்ள முயல்பவர்களாகவும் படைப்புகளில் வெளிப்படுத்த முனைபவர்களாகவும் உள்ளனர். கட்டுதிட்டான சிறுகதை, நாவல் பற்றி உணர்ந்து - வடிவவியலில் சிறப்பான செய்நேர்த்தியைத் தரவும் சிலர் முனைகின்றனர்.

கரிசல் காட்டுச் சமுசாரிகளின் வாழ்க்கை அவலங்களைப் பேசுவதில் தொடங்கிய கரிசல் இலக்கியத்தின் இன்றையப் பன்முகப் போக்குகளைப் புரிந்து கொள்ள ஒட்டு மொத்தமான கரிசல் இலக்கியத்தையும் ஆராய்ச்சிக்குட்படுத்துவது அவசியம். பிறிதொருகாலை தொடரப்படும் என விடுத்து, சமீபத்தில் வந்துள்ள ‘கோணங்கி’யின் மதினிமார்கள் கதை எனும் சிறுகதைத் தொகுதியின் கதைக்களன்களை மட்டும் ஆய்வுக்குட்படுத்துகிறது கட்டுரை. அதன்வழி அவரது படைப்புலகமும், படைப்புத்திறனும் வெளிக்கொணரப் படும்.

முப்பதாவது வயதை எட்டிப்பிடித்துள்ள ‘கோணங்கி’யின் முதல் கதைத் தொகுதி இந்த மதினிமார்களின் கதை. அவர் கணையாழியில் எழுதிய குறுநாவலையும், அன்னம் வெளியீடான ‘சுயவரம்’ தொகுப்பில் இடம்பெற்றுள்ள குறுநாவலையும் இதில் சேர்க்காமல் பதினொரு சிறுகதைகளை மட்டுமே தொகுத்து வெளியிடப்பட்டுள்ளது. பதினோரு கதைகளில் மூன்று கதைகள் கரிசல் காட்டுக்கு அந்நியமானவை. நண்பர்களிடையே ஏற்படும் பிரிவின் துயரத்தை எளிதாக வெளிப்படுத்தாமல் குழம்பியுள்ள ‘ மூன்றாவது தனிமை’ யும் பெரிய மரத்தடி ஒன்றில் வந்து அமரும் தாடிக்காரன் ஒருவனைக் கண்டு, ஊரிலுள்ளோர் ஒவ்வொருவரும் அவரவர் போக்கில் நினைத்துக் கொள்வதைச் சொல்லும் ‘ஆதி விருட்சம்’ கதையும், மனிதர்கள் இயந்திர கதி வாழ்க்கைக்கு ஆட்பட்டு அலுவலகங்களில் நகல் எடுப்பவர்களாக மாறிவிட்டதைச் சொல்லும் ‘ நகல்’ கதையும் கரிசல் பூமிக்குரிய களனைக் கொள்ளவில்லை.

இம்மூன்று கதைகளின் நோக்கமும் தெளிவாக வெளிப்படாமல், வாசகனின் மனத்தில் ஆழமான பாதிப்பை ஏற்படுத்தத் தவறி விட்டன. மீதமுள்ள எட்டு கதைகளின் கருப்பொருளும் தெளிவான நிலையில் வெளிப்பட, இம்மூன்றும் குழப்பப்பட்டதற்கு இவை கோணங்கி என்னும் கரிசல் காட்டுக்காரருக்கு அந்நியமான பிரச்சினைகள் என்பது காரணமாக இருக்கலாம்.

கரிசல் காட்டின் பிரச்சினை எனக் கொள்ளுவதற்கும், கரிசல் காட்டிற்குரிய பிரச்சினையன்று எனத் தள்ளுவதற்கும் இடமளிக்கும் இன்னொரு கதை ‘பாழ்’ என்பது. கரிசல் கிராமம் ஒன்றின் ஒதுங்கிய வீடான பண்டாரவீட்டுக் குமருப் பெண்ணின் - ஆண்டாளின் இளமைப் பிராயம் பாழாகின்ற வேதனையைச் சொல்கிறது அக்கதை. ஆண்டாளின் வீட்டருகில் உள்ள குடிநீர்க் கிணற்றில் புதுமணப்பெண்கள் வெற்றிலையைப் போட்டுவிட்டு தண்ணீர் எடுத்துச் செல்வதும், மணமான பெண்களுக்கு ஊரோடு முதல் தொடர்பு நீரோடு ஏற்படுவதும் ஆண்டாளுக்கு எப்போது வாய்க்கும் என்பதற்குப் பதிலே இல்லை. இந்த இளம்பிராயம் பாழாகிப் போவதை விவரிக்கும் கோணங்கி, ஆண்டாளோடு பன்னீர்ப் புஷ்பங்களையும் காட்டுக்குருவிகளையும் பேசச் செய்து, அவளை வானத்து நட்சத்திரமாகவும், தேரில் பவனி வரும் தாரகையாகவும் கற்பனையின் உச்சத்துக்குக் கொண்டு போகின்றார். அதனை வாசிக்கையில் ‘இவள் சாதாரண பண்டாரவீட்டு- கரிசல்காட்டுப் பெண்தானா என்ற சந்தேகம் எழுகிறது.

பழைமையான மரபுகளையும் சடங்குகளையும் விட்டுவிடாமலும், புதிய பணத்தேவைகளைச் சமாளிக்க வழியும் தெரியாமலும் போய்விட்ட இன்றைய சூழலில் இளம்பெண்களின் வாழ்க்கை பாழாவென்பது எல்லா இடங்களுக்கும் பொதுவானதே ; கரிசல் காட்டுக்கு மட்டும் உரியதன்று .மேலே சொன்ன நான்கு கதைகளின் மையமும் கரிசல் காட்டுக்குரியவை மட்டுமல்ல; பொதுவானவை.மனித மனங்களின் அவலத்தைச் சொல்பவை. ஆனால் மீதமுள்ள ஏழுகதைகளும் கரிசல்கதைகள்.
-------------------
1986

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ராகுல் காந்தி என்னும் நிகழ்த்துக்கலைஞர்

நவீனத்துவமும் பாரதியும்

தணிக்கைத்துறை அரசியல்