விளிம்பு
.jpg)
விளிம்பு
விளிம்பு
[இந்நாடகத்தை மேடையேற்றவிரும்புபவர்கள் தகவல் தெரிவித்து விட்டு மேடையேற்றிக் கொள்ளலாம் ]
இப்சனின் பொம்மை வீடு நாடகத்தின் உச்சநிலைக்காட்சியின் சாயல் கொண்ட விளிம்பு (THE EDGE ) ஓரங்க நாடகம் ஒன்றின் மாதிரி. தனியொரு நடிகையாக நடிப்புத்திறமையை வெளிப்படுத்தும் நோக்கம் கொண்ட மாணவிகளுக்காக எழுதப் பட்டது.புதுவைப் பல்கலைக்கழக நாடகத்துறை மாணவிகள் அவ்வப்போது மேடை ஏற்றிப் பார்த்திருக்கிறார்கள்.
இரவு நேரம்.
சாலைகளில் வாகனச் சத்தம் தொடர்ச்சியாக இல்லை. வீட்டின் ஜன்னல்கள் திறந்து
கிடக்கின்றன. வீட்டின் ஒருபுறம் உள்ள குளியலறை திறந்து கிடக்கிறது. அதை மூடிவிட்டு
வெளியே வந்த அவள், வாசலில் வந்து நிற்கிறாள். இரண்டு ஜன்னல்களின் வழியே உள்ளே
பார்த்துவிட்டு படியிறங்கத் தயாராகிறாள். ஆனால் திரும்பவும் சென்று ஜன்னல் கதவுகளை
மூடிவிட்டுப் படியிறங்கி வந்து …. ……. ……. ……..
என்னால் முடியும்.. நான் செய்வேன்
என்னால் முடியும்..
இனியும் என்னால் பொறுத்துக் கொள்ள முடியாது.
சுமந்தது போதும்.
இதுதான் முடிவு …….. …….
இந்த முறை திரும்பப் போவதில்லை..இனியும் பொறுத்துக் கொள்ள முடியாது.
அவன் சொன்னான்;
” நீ கிளம்பிப்போகலாம்;
திரும்பி வரவே கூடாது”
அவன் சொன்னான்; அப்படித்தான் அவன் சொன்னான்; இங்கிருந்து போவேன்; தூரமாகப்
போவேன்
…….. …….
வெகுதூரம்
போவேன்; இனித்திரும்பப் போவதில்லை அப்படிச் சொன்ன பிறகு.., அவன் வாயால்.. அவனது
வார்த்தைகளால் சொன்ன பிறகு.. பாவி என்னிடம் கத்தினான்…
’ உன்னால்
முடியுமா; நீ போவதற்கு எந்த இடம் இருக்கிறது?”
…….. …….
ரயில்வே
ஸ்டேஷனுக்குப் போவேன்….… ரயிலில் ஏறுவேன்
பல
மைல்களுக்கு அப்பால் அது என்னைச் சுமந்து செல்லும்..
பல மைல்கள்..
பற்பல மைல்கள்.. பல ஆயிரம் மைல்கள்..
வடக்கே
ஆந்திராவிற்கு .. ஒரிஸ்ஸாவிற்கு…
எனக்கு
ரயில்கள் ரொம்பப் பிடித்தமானவை.
என்னிடம் உள்ள
பணம் தீரும்வரை நான் பயணம் செய்வேன்..
(கையில் வைத்துள்ள பையை இறுகப்
பற்றித்தழுவிக் கொண்டு)
எல்லாப்
பணமும்.. அவன் வெறியனாக வேண்டும்.. ஆஹாஹா..
இது அவனுக்குத் தெரிந்ததும் அதிர்ச்சியடைந்து அலைய வேண்டும்.
…….. …….
இது தெரிந்திருக்கும்
…….. …….
அங்கே ரயில் பயணிகள் அமர நாற்காலி உண்டு. ரயிலில் இரண்டாம் வகுப்பில் –
ஜன்னல் ஓரம் – அதன் வழியே வயல்கள் – வாய்க்கால்கள் – ஆறுகள் – மலைகள் - வெள்ளைக்காரன் காலத்து ரயில் நிலையங்கள் என
கடந்து செல்வேன். ..ஜிகு .. புக்கு.. ..ஜிகு .. புக்கு.. ரெயில் கிளப்பும் ஒலியைக்
கேட்டபடி (மெதுவாக) ஜிகு.. ஜிகு..ஜிகு..
( தூரத்தில் ரயிலின் ‘கூ’ வென்ற
ஒலி.. அவள் அதை கூர்ந்து கவனித்துக் கேட்கிறாள்)
… இல்லை.. இல்லை.. நான் மும்பை
போவேன்.. ஆம்.. நான் மும்பை போவேன்..
…….. …….
என்
குழந்தைகள்.. என்னைப் பிரிந்து விடுவார்களா..? அவர்கள் எப்படிச் சாப்பிடுவார்கள்..
பள்ளிக்கூடம் போயாக வேண்டுமே.. அவர்களின் அப்பா சந்தோசமாக இருக்கலாம்; ஏனென்றால்
நான் அங்கு இல்லையே.. ஒருவேளை அவர் திரும்பவும் கல்யாணம் செய்து கொள்ளக்கூடும்
…….. …….
ஒரு தடவை.. இரண்டு வருஷங்களுக்கு முன்பு .. என்னிடம் இளமையும் கவர்ச்சியும்
தங்கியிருந்த நேரம்…. அவரது முகத்தைத் தாங்கிப் பிடித்து.. இப்படித்தான்
தாங்கியிருந்தேன். கொஞ்சம் வருத்தத்துடன். ஆனால் ஆன்ம சுத்தியுடன் நான் கேட்டேன்.
“ அன்பே.. நான் செத்துப் போனால் நீ திரும்பவும் செய்து கொள்வாயா..?”
அதற்கு என்ன சொன்னான் தெரியுமா? கொஞ்சம் யூகித்துச் சொல்லுங்கள்.. என்ன
சொல்லியிருப்பான். என்ன யூகம் பண்ண முடியவில்லையா?
நீங்கள் என்ன சொல்வீர்கள்? நீங்கள்.. நீங்க..
உங்கள் கணவர் என்ன சொல்வார்.. உங்கள் கணவர் .. உங்க..
அந்த முட்டாள்.. அருவருப்பான அந்த மனிதன்.. அன்று அவன் சொன்னானே.. அதனாலேயே
அவனைப் பிடிக்கவில்லை.. வக்கிரம் பிடித்த பாவி.. அவனைக் கொல்ல வேண்டும்.. ஆம் கொலை
செய்ய வேண்டும்.. அவன் சொன்னானே
“ நான் போய்விட வேண்டுமாம்; திரும்பி வரக்கூடாதாம்”
இப்படி அவன் சொன்னான். அவனுக்கு என் மீது வெறுப்பு. அவனோடு நான் இருக்கக்
கூடாது. அவனோடு… அவனோடு..
நான் முதலில் ஸ்டேஷனுக்குப் போக வேண்டும். பதினோரு மணியாகிறது.
இருக்கட்டும். சாலையில் வண்டி எதையும் காணோம். ஆட்டோ பிடித்துக் கொள்ளலாம். ஒரு
ஆட்டோ கூடக் காணோமே…. டாக்ஸி பிடித்தால் ஆச்சு.. தனியாக.. – இரவில்- டாக்ஸியில்
ஒரு பெண்.. ….. …… …..
டிரைவரே என்னைத் தாக்கினால்.. அவனைக் குதறி விட்டுக் கதவுகளைத் திறந்து
குதித்து விடுவேன்..
இருட்டு.. குளிர்ச்சியான இருட்டு.. குழந்தைகள் போர்த்திக் கொண்டு
படுத்திருப்பார்களா.. அவர்களுக்குத் தொண்டை கட்டியிருந்தது. யூனிபார்ம் போட்டுக்
கொள்ளவோ, ஷூ போட்டுக் கொள்ளவோ கூடத் தெரியாது. காலையில் சாப்பிட மாட்டார்கள்.
அவர்களுக்குக் காரம் பிடிக்காது. அவர்களுக்குக் காரம் பிடிக்காது என்பது கூட அங்கே
யாருக்கும் தெரியாது. தொண்டை கட்டியிருந்தது என்பதைக் கூட யாரும் உணரமாட்டார்கள்.
ஓ. கடவுளே..
…….. …….
எல்லாம் சரியாகவே இருக்கும்..
யாராவது அதைப் பற்றி யோசித்து ஏதாவது செய்வார்கள்.
இதுதான் புரியவில்லை.
ஏதாவது பிரச்சினைகளைப் பற்றியே ஒவ்வொருவரும் நினைத்துக் கொண்டிருப்பார்கள்
என்று நினைப்பது ஏன்.. நான் எதைப் பற்றியாவது நினைத்துக் கொள்கிறேன். எல்லோரும்
இப்படித்தான் நினைத்துக் கொள்வார்களா..?
(முணுமுணுப்பு)
பொய்க்கூந்தல்..
நீண்டு தொங்கும் கூந்தல்..சுருள் சுருளாக.. நெளிவுகள் நிறைந்து கூடுகள் போல..
பொய்க் கூந்தல்.. பொய்க் கூந்தல்..
(சிரித்தபடியே பையிலிருந்து
அந்தப் பொய்க்கூந்தலை வெளியே எடுத்து .. பைத்திய நிலைச் சிரிப்புடன்)
நான்
வாங்கினேன். – ஒரு தடவை- இந்தப் பர்ஸைப் பார்த்தேன். சிறிய பணப்பை –ரொம்பவும்
அழகாக இருந்தது. திறப்போடு கூடிய – ஓரங்களோடு – வெள்ளையான உலோக வேலைப்பாடுகள்
கொண்டதாய் –இதைப் போல – இதைப்போல – நான் அதை வாங்கினேன், அதில் பணம் இருந்தது.
சில
வருடங்களுக்கு முன் அது நடந்தது. அன்று தான் அந்தப் பொய்க் கூந்தலை வாங்கினேன்.
என் வீட்டின் முன் இருந்த கடையில் தான் வாங்கினேன். இந்த ஓரங்கள்.. இந்தக்
கூந்தல்.. திறப்போடு கூடிய பை.. கவர்ச்சியான வேலைப்பாடுகளோடு கூடிய .. உங்களுக்கு
ஒன்று தெரியுமா..?
…….. …….
என்னைத்
தெரிந்து கொள்வார்களா? நினைவில் கொண்டு வருவார்களா..?
(பொய்க்
கூந்தலை உள்ளே வைத்து விட்டு)
அவனுக்கு இது வேண்டும். அவன் ஒரு அழுக்கன். சுத்தம் என்றால் என்னவென்று
தெரியாது. நளினம் இதுதான் என்று கற்றுத் தர வேண்டும். நான் பள்ளிக்கூடத்தில்
சான்றிதழ் வாங்கியிருக்கிறேன்.
நீங்கள் வாங்கியிருக்கிறீர்களா? சான்றிதழ் வாங்க மேடையேறினால், எல்லோரும்
உங்களைப் பார்ப்பார்கள். அவர்களையெல்லாம் பெருமிதத்தோடு பார்த்துவிட்டு பள்ளி
முதல்வரையும் ஒருமுறை பார்த்துவிட்டு இரண்டு கைகளையும் நீட்டி சான்றிதழை வாங்கித்
திரும்பும்போது “பாப் வெட்டிய தலை; என் அம்மாவுக்கு நன்றி” – அதற்கு எவ்வளவு
சுத்தமாக இருக்க வேண்டும். நளினத்தோடு இருக்க வேண்டும். அவன் அப்படி இல்லை.
அவன்
சொல்வான்: “ முகம் பளிச்சென்று இருந்தால் போதும்; ஜட்டி அழுக்காயிருந்தால் என்ன
பிரச்சினை.”
நீங்கள் இதை எப்படி வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளுங்கள். ஆனால் உங்கள்
முகத்தைக் கவனத்தோடு வைத்துக் கொள்ளுங்கள். கவனமாக வைத்தாக வேண்டும். ஆம் கவனம்..
ரொம்பக் கவனம்..
…….. …….
உங்களுக்காக
உங்கள் முகத்தை நான் கவனிக்கிறேன் என்று சொன்னேன்
(முணுமுணுப்பு)
பேடி.. அந்தப்பேடி –
முட்டாள்—அறிவிலி –கிறுக்கன்..
…….. …….
அது ரொம்ப
அதிகம் –ரொம்ப ரொம்ப அதிகம் – ‘நீங்க தான் இந்த சிகரெட் சாம்பலையோ, துண்டுகளையோ
பொறுக்க வேண்டும்.” நான் உண்மையாகவே சொன்னேன். இனியும் நான் அங்கே நிற்க முடியாது.
…….. …….
நான்
போவதென்று ஆகிவிட்டது. நான் ரயிலைப் பிடிக்க வேண்டும். உன் முகத்தை நான் இனிப்
பார்க்கப் போவதில்லை என்று சொல்லி விட்டேன். என்னிடம் இந்த பொய்க்கூந்தல் உள்ளது.
என்னை கண்டுபிடிக்க முடியாது.
நான் செய்த
நல்ல விஷயங்களுக்காகப் பாராட்டியதே கிடையாது. வீட்டை எவ்வளவு சுத்தமாக
வைத்திருந்தேன். மடித்து வைத்த துண்டுகள்.
சுருக்கமில்லாத படுக்கை விரிப்புகள், பற்பசை சிதறல் இல்லாத கண்ணாடி ..
அடுக்கி வைக்கப்பட்ட சோப்புப் பெட்டிகள்.. ஆனால் என்னை மடக்குவதற்கு கணக்குகளும்
தோட்டமும் போதும். அவற்றையே பிடித்துக் கொள்வான். அவையெல்லாம் இனி எனக்கு இல்லை.
அந்தப்
பொருட்கள் இல்லாமல் போவதெப்படி..? எனக்கு தெரியவில்லை. தட்டுகள்.. கரண்டிகள்..
அடுக்குப் பாத்திர இணைப்புகள்..?
அந்தப்பை
தொலைந்து விட்டது. இப்பொழுது இல்லை. நீங்கள் எதையுமே தொலைத்தது இல்லையா..? அதற்காக
என்னை ஏன் மூட்டைப் பூச்சி போல் கடிக்க வேண்டும். அந்தப் பையிலிருந்த
பணத்தினால்தான் இந்தப் பொய்க் கூந்தலை வாங்கினேன். அப்பொழுது ரொம்பவும் பொருத்தமாக
இருந்தது. சில வருடங்களுக்கு முன்பு… ..
ரயிலில் இதைப்
பொறுத்திக் கொண்டால்… அவர்கள்.. என்னைப் பிடிக்க முடியாது. அவனை விட்டுப் போய்
விடுவேன். இந்த வீட்டை விட்டுப் போய்விடுவேன். அவர்களால் என்னை அடையாளம் காண
முடியாது. அதனால் அவர்கள் என்னிடம் வந்து,
“ சீமாட்டியே,
உங்கள் கைரேகைகளைப் பதிவு செய்ய வேண்டும்” என்று கேட்க மாட்டார்கள்.
“ நான்… நான்
எனது ரேகைகளை விட்டு விட்டு வந்து விட்டேன். திரும்பவும் போய் அழிக்க முடியாது.
(வெறியுடன் கூடிய நடுக்கம்)
கொடூரமான அந்த
ரத்தம்.. உறைந்த ரத்தம்.. தோட்டக்காரன்.. அப்புறம் கழுவி விடுவான்.. ஆம்..கழுவிக்
கொள்வான்.. நாளைக்கு அவனால் புல் வெட்ட முடியுமா?... முடியாது. நாளை மறுநாள்
வெட்டுவான்.. வெட்ட முடியாது. அவனால்..? ஏன்..?
விளிம்போடு இது இணையாது
இது இணையவே
இணையாது.
மாற்றம்..
வேலி.. ஓரம்.. யாரிதைச் சொன்னது. யாரிது.. விளிம்போடு இணையாது.
நான்
சொல்கிறேன்.
இது முடியாது.
நான் இதைச் சொல்கிறேன்.
இது முடியாது.
நான் இதைச் சொல்கிறேன்.
இது முடியாது.
இது முடியாது
இது முடியும்.
இது முடியும் நான் செய்வேன். நான் செய்வேன்
நான்
செய்கிறேன். நான் செய்கிறேன்
கருத்துகள்
தங்களின் விளிம்பு நாடகம் படித்தேன். அதனைப் படிக்கும் பொழுது லா.ச.ரா.வின் ஒரு சிறுகதை ஞாபகம் வருகிறது. தங்களின் நாடகத்திற்கும் அக்கதைக்கும் கரு மிக மிக வேறானது. ஆனால் கதைப் போக்கு எனக்கு அதனை ஞாபகமூட்டியது. அக்கதையின் முடிவு ஒரு சுலபமான புரிதலை ஏற்படுத்தும். ஆனால் தங்களின் இந்நாடகம் எனக்குத் தெளிவான புரிதலை ஏற்படுத்தவில்லை.
தாங்கள் எந்த நோக்கத்திற்காக இந்நாடகத்தை எழுதினீர்கள் என்பதையும், இந்நாடகத்தின் மையக்கருவையும் என்னால் மிக நன்றாகவும் மிகத்தெளிவாகவும் புரிந்து கொள்ள முடிகிறது என்றே நம்புகிறேன். புரிந்து கொள்ள முடிகிறது என்பதே உண்மையும் கூட.
விளிம்பு நாடகத்தின் துவக்கமும், போக்கும் நல்ல புரிதலை ஏற்படுத்துகின்றன. ஆனால் முடிவினை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. புரிந்து கொள்ள முடியாததினால் ஏற்றுக் கொள்ளவும் இயலவில்லை. ஒருவேளை விளிம்பு நாடகத்தை மேடையில் பார்த்தால் ஒரு தெளிவான புரிதலை ஏற்படுத்தலாம் என்று கருதுகிறேன். மேற்கண்ட எனது புரிதல் விசயத்தில் பிழை இருந்தால் தயைகூர்ந்து பொருத்தருள்க.
இப்படிக்கு
சண்முகவாசன் வே.