ஜூலை 02, 2012

நாட்டுப்புற இயலைச் சுற்றிதேசப்பற்று, தேசிய ஒருமைப்பாடு, வலிமையான பாரதம் எனத் தனக்குப் பிடித்தமான கருத்தியலின் நோக்கிலிருந்து ஆய்வுகளின் பின்னணி நோக்கங்களைக் கேள்விக்குள்ளாக்கும் ஜெயமோகனோடு ஒன்றுபட்டும் முரண்பட்டும் நிற்கும் இந்தக் கட்டுரை ஆறு வருடங்களுக்கு முன்பு எழுதப்பட்டது. தீம்தரிகிட இதழில் வந்த கட்டுரையைச் சூழலின் தேவை கருதிப் பதிவேற்றம் செய்கிறேன்.

1980 -2000 களில் தமிழகப் பல்கலைக்கழகங்களில் பதிவு செய்யப்பட்ட முனைவர் பட்ட (Ph.D) இளம் முனைவர் பட்ட (M.Phil.) ஆய்வுத் தலைப்புகளைத் தொகுத்து ஒரு புள்ளி விவரங்கள் எடுத்தால் அவற்றில் பாதி நாட்டுப் புறவியல் ஆய்வாக இருக்கும். மேலை நாடுகளில் குறிப்பாக அமெரிக்காவில் மானிடவியல் மற்றும் சமூகவியல் துறைகளின் பகுதியாகக் கருதப்படும் நாட்டுப் புறவியல் இந்தியாவில் அதிலும் குறிப்பாகத் தமிழகத்தில் இலக்கியத்துறையின் பகுதியாக மாறியதற்கான காரணங்களைத் தேடினால் ஆச்சரியம் ஊட்டும் ஓர் உண்மை புலப்படும். நாட்டுப்புறவியல் பல்கலைக்கழகங்களுக்குள் ஆய்வுப் பொருளாக வந்ததில் அரசியலற்ற அல்லது அமெரிக்க ஆதரவுப் பேராசிரியர்களுக்கு எவ்வளவு பங்கு உண்டோ, அதே அளவு பங்கு இடதுசாரி சிந்தனை கொண்ட அறிஞர்களுக்கும் பேராசிரியர்களுக்கும் உண்டு. இன்றும் கூட வலதுசாரிகளும் இடதுசாரிகளும் ஒன்றாகச் சந்திக்கும் புள்ளியாகவும், விவாதித்து ஆராதிக்கும் சொல்லாடலாகவும் நாட்டுப்புறவியல் சிந்தனை களும் இலக்கியங்களும் இருக்கின்றன.

அமெரிக்காவில் மொழியியல் ஆய்வுக்காகச் சென்ற பேராசிரியர்கள் (திருவனந்தபுரத்திலிருந்து சென்றவர் பேரா.வ.அய். சுப்பிரமணியன், மதுரையிலிருந்து சென்றவர் பேரா. முத்துச்சண்முகன்) மொழியியலோடு நாட்டுப் புறவியலையும் தனியொரு துறையாக அறிமுகம் செய்த கதை.நோக்கமும் முடிந்து போன ஒன்று. அவர்களால் ஆரம்பிக்கப்பட்ட மொழியியல் துறைகள் வலுவான ஆதரவின்றி இருக்குமிடம் தெரியாமல் உள்ளன. உண்மையில் இன்று பேசப்படும் அனைத்து நவீன அறிவுத்துறை விவாதங்களுக்கும் – அமைப்பியல், பின் அமைப்பியல், குறியியல், தகவல் தொடர்பியல், எடுத்துரைப்பியல், உளவியல், பெண்ணியம் என அனைத்துக்கும் பின்புலமாக இருந்தது மொழியியல் தான்.

மொழியியல் இங்கு காத்திரமாக வளர்த்தெடுக்கப்பட்டிருக்க வேண்டிய துறை. ஆனால் வளர்த்தெடுக்கப்படவில்லை. அப்படி வளர்த் தெடுக்கப் படாததிலும் அரசியல் இருக்கத்தான் செய்கிறது.நிதானமான மொழியியல் ஆய்வுகள் ஒரு மொழியை இன்னொரு மொழியின் எதிரியாகப் பார்க்கும் பார்வைக்கு இடமளிக்காது. அத்துடன் ஒரு மொழியின் பண்பாட்டுப் பாத்திரத்திற்கு மட்டும் முக்கியத்துவம் அளிப்பதோடு, விதந்து கூறப்படும் வாதங்களுக்கு மொழியியல் ஆய்வுகளில் அதிக முக்கியத்துவம் தருவதில்லை. ஆனால் தமிழ் நாட்டில் தொடர்ந்து அத்தகைய கருத்துகள் மட்டுமே மைய நீரோட்டக் கருத்துகளாக இருந்து கொண்டிருக்கின்றன.
இதற்கு மாறாக நாட்டுப்புறவியல் ஆய்வுகளோ ஆலமரம் போல் தழைத்து விழுதுகள் விட்டுப் பரவி நிற்கின்றன. அவ்வளர்ச்சிக்கு இரண்டு காரணங்கள் இருக்கின்றன. முதல் காரணம், பொதுவாக எல்லாத்துறைகளிலும் காணப்படும் சாதாரண மனநிலை.எளிமையையும் சிக்கலில்லாததையும் தேர்வு செய்வது. பட்டங்கள் பெறுவது ஒன்றையே நோக்கமாகக் கொண்ட பெரும்பாலான ஆய்வாளர்கள் நாட்டுப் புறவியலைத் தேர்வு செய்வதற்கு இதுவே காரணம். அடிப்படை நூல்கள் எதையும் வாசிக்காமல், கள ஆய்வுகள் மூலம் சில அடிப்படைகளைப் பின்பற்றித் தொகுத்துக் கொடுத்தாலே போதும்; ஆய்வு நிறைவடைந்து விடும் என்ற நிலையில் அத்துறையைத் தேர்வு செய்கிறார்கள். இரண்டாவது காரணம் நாட்டுப்புறவியலுக்குப் பல்கலைக்கழகப் பேராசிரியர்களின் ஆதரவுடன் இடதுசாரிகளின் ஆதரவும் இருந்தது என்பது. இப்போது இதைத்தான் விவாதிக்க வேண்டியுள்ளது. பொதுவாக அமெரிக்க ஆதரவுடன் வரும் எதையும் எதிர்ப்பு மனோபாவத்துடன் கவனித்து ஒதுங்கும் இடதுசாரிகள் நாட்டுப்புறவியல் விசயத்தில் அதற்கு நேர்மாறான நிலைப்பாடு எடுத்துள்ளனர். இதற்குக் காரணம் இடதுசாரிகளின் தத்துவப்பேராசிரியராக இருந்த நா.வானமாமலை. பல்கலைக்கழகங்களுக்குள் நாட்டுப் புறவியல் நுழைவதற்கு முன்பே தமிழக இலக்கியவாதிகளிடம் குறிப்பாக இடதுசாரி எழுத்தாளர்களிடம் அதற்கு ஒரு கவனத்தை ஏற்படுத்தி வைத்தவர் அவர். அவருக்கான கருத்தோட்டம் கிடைத்தது ஆரம்பகாலச் சோசலிசச் சோவியத்து அறிஞர்களிடமிருந்து. அவர்கள் அப்படி நம்பினார்கள்.

பல்வேறு தேசிய இனமக்கள் வாழும் ஒரு நாட்டில் அவர்களின் மன உணர்வுகளை அறிந்து கொள்ள அந்தந்த மொழிகளில் எழுதப்பட்ட இலக்கியங்கள் ஓரளவுதான் பயன்படும். கட்டுப்படுத்தப்பட்ட அரசியல் நிலைப்பாட்டுக்குள் வாழும் இலக்கியவாதிகள் வெகுமக்களின் மன உணர்வைப் பதிவு செய்து விட மாட்டார்கள். எனவே மக்களின் எண்ணவோட்டத்தை அறிந்து கொள்ள எழுத்திலக்கியங்களை நம்புவதைவிட அந்தந்த மாநிலங்களில் வாழும் வெகுமக்களின் இலக்கியங்களான வாய்மொழி இலக்கியங்களை நம்பலாம். அவை தனிமனிதப் பதிவாக இல்லாமல், வெகுமக்களின் கூட்டு மன உணர்வைப் பதிவு செய்து கூடுதல் குறைவின்றி வெளிப்படுத்தும்.

இந்த நம்பிக்கை புரட்சிக்குப் பிந்திய சோவியத் இலக்கியவாதிகளுக்கும் அரசியல்வாதிகளுக்கும் இருந்தது. அந்த அடிப்படையில் வாய்மொழி இலக்கியங்களை மக்கள் இலக்கியங்கள் என்று முத்திரையிட்டனர். தமிழ்நாட்டில் நாட்டுப்புற இலக்கியங்களைத் தொகுப்பதிலும் ஆய்வு செய்வதிலும் முன்னோடியாக இருந்த பேரா. நா.வானமாமலை அந்த அடிப்படையில் தான் தமிழக நாட்டுப்புறப் பாடல்களைத் தொகுப் பாக்கினார். அத்தொகுப்புக்கு அவர் எழுதிய முன்னுரையில் (1964) கூட, “ இத்தொகுப்பில் தமிழ் நாட்டு உழைக்கும் மக்களின் வாழ்க்கையின் பல கோணங்களையும், அவர்களது சிந்தனைகளையும் உணர்ச்சிகளையும் பிரதிபலிக்கும் பாடல்கள் கிடைத்த மட்டில் சேர்க்கப்பட்டுள்ளன” என்று எழுதி அவற்றின் முக்கிய குணமாக மக்களின் வாழ்க்கையை, உணர்வு களைப் பிரதிபலிக்கும் என்றுதான் குறிப்பிட்டுள்ளார். அவை முற்போக்கு இலக்கியங்கள் என்றோ, புரட்சிக்கான கருவி என்றோ, சமூக மாற்றத்திற்கான கருத்தியல் கருவூலம் என்றோ அவர் எங்கும் குறிப்பிடவில்லை. சிறுகதையாசிரியர் கி. ராஜநாராயணன் கூட தமிழ்நாட்டு நாடோடிக் கதைகள் என்றொரு தொகுப்பை முதன் முதலில் நியூசெஞ்சுரி புத்தக நிலையத்தின் வெளியீடாகக் கொண்டு வந்தது சோவியத் யூனியன் தந்த உந்துதலினால் தான். நவீன நாடகக்காரர்கள் நாட்டுப்புறக் கலைகளைத் தேடிய பின்னணியில் இருந்ததும் கூட அவ்வடிவங்கள் மக்களிடம் எளிமையாகச் சேரும் வடிவங்கள் என்று கருதியதால் தான். அவற்றின் சாரத்தை எடுத்துக் கொண்டு புதிய உள்ளடக்கங்களைத் தரமுடியும் என நினைத்தார்கள். ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை என்பது தனிக்கதை.

இன்று நாட்டுப்புறவியல் ஆய்வுகள் பற்றி நிலவும் நம்பிக்கையோ வேறுவிதமாக இருக்கிறது. நாட்டுப்புறவியல் சார்ந்த ஒரு தலைப்பைத் தேர்வு செய்த உடனே அந்த ஆய்வாளன் மட்டுமே மக்களைப்பற்றி ஆய்வு செய்வதாகவும், அந்த ஆய்வு முடிவு வரும்போது சமூக மாற்றத்திற்கான படை இரண்டு அடிகள் முன்னோக்கி நகர்ந்திருக்கும் என்று நம்புகிறான் நாட்டுப்புற இலக்கிய ஆய்வுகள் அனைத்துமே முற்போக்கான ஆய்வுகள் என்று கல்வித்துறை ஆய்வாளர்களும், கல்வித்துறைக்கு வெளியேயும், உள்ளேயும் இருந்து கொண்டு சமூக அக்கறையுடன் ஆய்வு செய்வதாக நம்பும் பேராசிரியர்களும், எழுத்தாளர்களும் அப்படி நம்புவதற்கு என்ன முகாந்திரம் இருக்கிறது என்று தெரியவில்லை. இன்னும் சொல்லப் போனால் நாட்டுப்புற இலக்கியங்களையும், நம்பிக்கைகளையும், தெய்வங்களையும் சடங்குகளையும் பற்றிய ஆய்வுகளால் பலன் அடைந்த சக்திகளில் மரபுப் பற்றாளர்களும் இருப்பைத் தக்க வைக்க நினைப்பவர்களுமே அதிகம். தொகுக்கப்பட்டும் வகுக்கப்பட்டும் கூறு போடப்பட்டும் தரப்பட்ட ஆய்வு முடிவுகளை எடுத்துக் கொண்டு, இவையெல்லாம் நமது பண்பாட்டின் அடையாளங்கள்; இவற்றை மாற்றுவது எளிதல்ல; மாற்றத்தேவையுமில்லை என்று அத்தகைய சக்திகள் வாதம் செய்யத் தான் பயன் பட்டுள்ளன.

ஒரு புறம் நாட்டுப்புற நம்பிக்கைகளையும் இலக்கியங்களையும் ஆய்வு செய்து அதன் முற்போக்குப் பாத்திரங்களை முன்வைக்கிறவர்கள் எழுத்துக்களில் விவாதித்துக் கொண்டிருக்க, மறுபுறம் நாட்டுப்புறத் தெய்வங்களின் வழிபாடு களும், சடங்குகளும் வைதீக மதத்தின் சடங்குகளாகவும், வழிபாடுகளாகவும் மாறிக் கொண்டிருக்கிற நடப்புச் சூழலும் நிகழ்ந்து கொண்டே தான் உள்ளன. காலனிய காலத்தின் முன்னும் பின்னும் இந்தியாவின் சமூக மாற்றம் எப்படிப் பட்டதாக இருந்தது என்று ஆய்வு செய்த பேராசிரியர் எம்.என்.சீனிவாஸ் சுட்டிக்காட்டிய மேல்நிலை யாக்கம் [Sanskritization] இந்திய சமூகத்தின் கண்கூடான வெளிப்பாடு. ஆனால் நமது தமிழக அறிவாளிகள் மட்டும் நாட்டுப் புறத் தெய்வங்களை வைதீகக் கடவுளர்களின் பரம எதிரிகளாகச் சித்திரிக்க முயல்கின்றனர்.

அதிநவீன சிறுபத்திரிகை எழுத்தாளர்கள் நாட்டுப்புறத் தெய்வங்களைத் தேடிப் போவதற்கான காரணம் அவை நாம் விரும்பிய அளவுக்குச் சாராயம் குடிப்பதற்கு அனுமதிக்கும் தெய்வங்கள் என்பது மட்டுமல்ல. மேற்கத்திய ஏகாதி பத்தியத்திற்கு எதிராகத் தங்களின் மூதாதையர்களைத் தேடும் அடையாளத்தின் வெளிப்பாடு என்பதற்காகத் தான் என்பது அவர்கள் தரும் தத்துவ விளக்கம். அந்த அடிப்படையில் தான் மேற்கத்திய நவீனக் கண்டு பிடிப்புகளான கணிணி வரைகலையால் உருவாக்கப்பட்ட அட்டை ஓவியங்களைத் தாங்கிய தங்களின் கவிதைப் புத்தகங்களை நாட்டுப் புறத் தெய்வங்களின் காலடியில் படையலாக வைத்து வெளியீட்டு விழாக்கள் நடத்துகின்றனர். சிறுபத்திரிகை அடையாளத்தைச் சிறிதும் தொலைத்துவிடாமல், அதிநவீனத் தாளில் அச்சிட்டு வெளிவரும் இதழ்கள் வெளியிடப்படும் இடங்களாக இருப்பதும் நாட்டுப் புறத்தெய்வங்களின் பலிபீடங்கள் என்பது முரண்நகை என்று நீங்கள் சொல்லலாம். கொஞ்சம் கவனம். உங்களுக்கு கிடைக்கப்போவது உலகமய ஆதரவாளன் என்ற பட்டம். பரவாயில்லை என்றால் நீங்கள் சொல்லலாம்; சப்தமாகக் கூடச் சிரிக்கலாம்.

ஆனால் ஒன்றை மட்டும் நினைவில் கொள்ள வேண்டும். இடதுசாரி இலக்கியவாதிகளும் மூதாதையர்களின் தொல்கதை முறையைத் தேடும் இலக்கியவாதிகளும் இதை விவாதித்தால் நல்லது. இன்று தமிழ் இலக்கியம் கற்கும் மாணவர்களிடம் ஒரு கவிதையை, அல்லது புனைகதையை, அல்லது நாடகத்தை ரசிக்கும்படியான நுட்பங் களைக் கற்றுத் தருவது கூடச் சிக்கலாக இருக்கிறது. நாட்டுப்புறவியல் என்னும் துறையே சமூக மாற்றக் கருவி எனக் கருதியதின் பின்விளைவுகளாக எல்லாவற்றிலும் சமூக நோக்கம் எனத் தொடங்கி எதையும் கற்றுக் கொள்ளாமல் தொலைந்து கொண்டிருக்கிறது இலக்கியக் கல்வி. இப்படி ஆக்கியதில் முக்கியப் பங்கு நாட்டுப் புறவியல் துறைக்கும் உண்டு என்று தான் சொல்வேன். அது இலக்கியக் கல்வியின் துணைப்பாடமாகத் தான் முதலில் கருதப்பட்டது. ஆனால் துணைப்பாடமாக இருந்த நாட்டுப்புறவியல் தனது எளிமை மற்றும் போலியான சமூகப் பாத்திரம் மூலம் இலக்கியக் கல்வியின் இடத்தைத் துடைத்தெறிந்து விட்டது என்பது வருத்தத்துடன் சொல்ல வேண்டிய ஒன்று.

தீம்தரிகிட,2006