நந்தனார் தெருக்களின் மனிதர்கள்
.jpg)
தொடர்ச்சியாகச் சந்தித்துக்கொண்டே இருக்கும் நண்பர்கள் என்றால் முதல் சந்திப்பும் அச்சந்திப்பில் பேசிக்கொண்ட உரையாடல்களும் நினைவில் இல்லாமல் போக வாய்ப்புண்டு. அதே வேளையில் முதல் சந்திப்பின் உரையாடல்களே நெருங்கிய நட்புக்காரணமாக இருந்தது என்றால் முதல் சந்திப்பின் பதிவுகளும் சொற்களும் மனதிலிருந்து அழிந்துவிடுவதில்லை. மனிதர்களைக் குறித்த நினைவுகளுக்கும் ஞாபகங்களுக்கும் சொல்லப்பட்ட இந்தக் குறிப்பு வாசித்த எழுத்துகளுக்கும் பொருந்தக் கூடியனவாகப் பல நேரங்களில் இருக்கிறது. விழி பா. இதயவேந்தனின் கதைகளில் முதன்முதலில் வாசித்த கதை ‘நந்தனார் தெரு’ அவரை நினைத்துக் கொள்ளும்போது அந்தக் கதையே எப்போதும் நினைவுக்கும் வரும். முதல் தொகுப்புக்கு அந்தக் கதையைத் தான் தலைப்பாக வைத்திருந்தார். அவரது மறைவுக்குப்பின் கருப்புப் பிரதிகள் வெளியிட்டுள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட 20 கதைகளுக்கும் “நந்தனார் தெரு, மற்றும் சில கதைகள்” என்றே தலைப்பிட்டுள்ளது