அழகிய பெரியவன்: கதைவெளிப்பயணம்
நீ நிகழ்ந்த போது என்ற கவிதைத் தொகுப்பைத் தனது இலக்கிய அறிமுகத்தைச் செய்த அழகிய பெரியவனின் இயற்பெயர் அரவிந்தன். அவரது முதல் சிறுகதைத் தொகுப்பான தீட்டு தமிழினிப் பதிப்பாக வெளி வந்த 2000- க்குப்பின் கவனிக்கப் பட வேண்டிய சிறுகதையாளராக ஆனதோடு தனது முதல் நாவலான தகப்பன் கொடி வழியாக முக்கியமான படைப்பாளிகளுள் ஒருவராக அறியப்படுகிறார். அவரது கதைகளைக் குறித்து சரியாக ஐந்தாண்டு இடைவெளியில் கட்டுரைகள் எழுதியுள்ளேன். இங்கே அவற்றை வரிசைப்படுத்தித் தருகிறேன்.
இலக்கிய நோக்கம் ஒன்றை உருவாக்கிக் கொண்டு எழுத த் தொடங்கிவிடும் எழுத்தாளர்கள் தொடர்ந்து அதே நோக்கத்தோடும் வெளிப்பாட்டு முறையோடும், கதைவெளிகளோடும் பயணிப்பதில்லை. அழகிய பெரியவனின் கதைகளை வாசித்த இம்மூன்று குறிப்புகளையும் வாசிக்கிறவர்கள் அதனை உணரலாம். ஒவ்வொன்றும் சரியாக ஐந்தாண்டு இடைவெளியில் -2010, 2015,2020- எழுதப்பட்ட குறிப்புகள்
முதல் பயணம் :அழகிய பெரியவனின் தரைக்காடு
பயணங்கள் எப்போதும் இனிமையானவை; அதிலும் முதல் பயணங்கள் நினைத்து நினைத்து ரசிக்கக் கூடியவை. பதின் வயதுக் காலத்தில் நாட்குறிப்புகள் எழுதும் பழக்கம் என்னிடம் இருந்தது. அந்தக் குறிப்புகளில் நான் சென்ற பயணங்கள் பற்றிய குறிப்புகளை விட தவற விட்ட பயணங்களைப் பற்றிய குறிப்புகளையே அதிகம் எழுதி வைத்திருந்தேன் என்பது இப்போது நினைவுக்கு வருகிறது.
இன்றும் மனதில் தங்கியிருக்கும் தவறவிட்ட பயணம் ராமேஸ்வரம் செல்லாமல் தவற விட்ட பயணம் தான். நான் ராமாயணம், பாரதம் போன்ற பேரிலக்கியங்களைப் பள்ளிப் பருவத்திலேயே படிக்கக் காரணமாக இருந்த தாத்தா ஒருவரின் அஸ்திக் கலயத்துடன் உற்றார் உறவினர்கள் கிளம்பிய அந்தப் பயணத்தில் என்னைச் சேர்க்காமல் ஏமாற்றி விட்டுப் போன அந்தப் பயணம் இன்னும் அப்படியே தங்கி இருக்கிறது. தவறவிட்ட அந்தப் பயணம் இன்னும் நிறைவேறவே இல்லை.
எனது பயணங்கள் எல்லாம் பெரும் பயணங்கள் அல்ல. மிகச் சிறிய பயணங்கள். அதிகாலையில் தொடங்கி நள்ளிரவில் முடியும் சின்னஞ்சிறு பயணங்களே எனக்கு அதிகம் வாய்த்திருக்கின்றன. அப்படியான பயணங்களுக்கு நான் ஒவ்வொரு நாளும் தயாராகவே இருப்பேன். நாட்கள் கணக்கில் திட்டமிட்டு வாரக்கணக்கில் தங்கும் பயணங்கள் எப்போதும் அலுப்பூட்டுபவை. அதற்காக நாம் சுமக்க வேண்டிய சுமைகள் தான் பயம் ஊட்டுபவை. கையை வீசிக் கொண்டு எங்கும் சுற்றித் திரிய முடியும் என்றால் எத்தனை நாட்கள் வேண்டுமானாலும் எங்கும் தங்கலாம். ஆனால் அணிய வேண்டிய ஆடைகளுக்காகச் சுமைகளைச் சுமக்க வேண்டும் என நினைக்கும் போது பெரும் பயணங்களை விட்டு விடவே விரும்புகிறேன். சொந்தக் கதையை இந்த இடத்தில் நிறுத்திக் கொள்வோம். அழகிய பெரியவனின் கதைக்கு வரலாம்
********************
தரைக்காடு என்ற தலைப்பில் எழுதிய கதையை அவரது தீட்டு தொகுப்பிலிருந்து வாசிப்பவர் நான் வாசித்திருப்பது போல வாசிக்காமல் போகலாம். தரைக்காடு என்ற தலைப்பிட்டுக் கொண்டுள்ள அந்தக் கதை சமவெளிப் பிரதேசத்தில் வாழுகிற மக்களைப் பற்றி எதுவும் பேசாமல் முழுக்க மலப்பிரதேச மக்கள் பற்றிய சித்திரங்களையே தருகிறது.
மலையகம், காடுகள், குளிர்ச்சி, இயற்கை வளம், மழைவளம், இயற்கை சார் வாழ்க்கை என்னும் இனிப்புத் தடவிய வார்த்தைகளால் அவர்களின் வாழ்க்கை விவரிக்கப்படுகிறது; விளக்கப் படுகிறது. ஆனால் அவர்களின் நினைவுக்குள் தரைக்காடு எப்போதும் செல்ல வேண்டிய கனவாகவே இருக்கிறது என்பதும் மறுக்க முடியாது. கிடைத்ததில் இருந்து கிடைக்காததை நோக்கிய பயணம் தானே வாழ்க்கையில் இலக்குகள்.
விளிம்புகளில் வாழ நேர்ந்ததை நேசித்து வாழ வேண்டும் என்று நவீன மனம் அவர்களுக்குப் போதனைகள் செய்தாலும், அதை நோக்கிச் செல்வதில் பிடிவாதம் எதுவும் காட்டுவதில்லை. சின்னச் சின்னப் பயணமாக- சுற்றுலாவாக அங்கே போய்விட்டுத் திரும்பவும் தங்கள் காங்கிரீட் வனங்களுக்குள் வந்து தங்கி விடுவதையே நகர மனம் நாடுகிறது. ஆனால் வாழிடம் சார்ந்தும் பொருளாதார நிலையிலும் ஓரங்களில் வாழ நேர்ந்து மலையகக் கிராமத்தினருக்குத் தரைக்காடுகள் எல்லாம் நிரம்பிய ஒன்றாக இருக்கின்றன. அதை நோக்கித் தங்கள் வாழ்க்கையை நகர்த்திக் கொள்ளவே விரும்புகின்றனர்.
அழகிய பெரியவன் கதை அந்தப் பிரச்சினைகளுக்குள் எல்லாம் செல்லவில்லை. அதற்கு மாறாக மலைக் கிராமம் ஒன்றில் வாழும் பெண்ணொருத்தியின் கர்ப்பப் பைக்குள்ளிருந்து தனக்கான மூச்சுக் காற்றைத் தனது நாசிகள் வழியாகவே தானே உறிஞ்சிக் கொள்ளும் முதல் வேலையைச் செய்வதற்காகச் செய்யும் பிறப்பு என்னும் முதல் பயணத்திற்கு முன் செய்த களைப்பு மிக்க பயணத்தை எழுதிக் காட்டுகிறது.
******************
இரவின் பிடிவாதத்தை மாட்டு வண்டியின் சக்கரங்கள் பொடிப்பொடியாய் உதிர்த்துக் கொண்டிருந்தன. வண்டி சரளைக் கற்கள் தேலிய செம்மண் பாதையில், மேடு பள்ளங்களில் ஏறி இறங்கும் போதெல்லாம் அம்மிணி கத்தினாள். அத்தையும், அம்மாவும் அவளைத் தேற்றினார்கள். காளாம்பட்டாவின் கைகள் மெல்ல அதிர்ந்தபடியே இருந்தன. விரித்திருந்த அவள் விரல்களில் மந்திரம் மையம் கொண்டு செய்வினைக்குக் காத்திருப்பது போலிருந்தது. மூவரின் கண்களும் அம்மிணியின் மீது நிலை கொண்டிருந்தன.
மாட்டு வண்டியின் மூங்கில் கட்டுக்குள் அம்மிணி நீண்டு படுத்திருந்தாள். வயிறு பெருத்திருந்தது. கால்களை உதைத்துக் கொண்டாள். காளம்பட்டா வலிமையாக அக்கால்களை அழுத்திப் பிடித்தார்.
“ பொறுத்துக்க தாயீ. பொறுத்துக்க” என வலியின் உச்சத்துடன் தொடங்கிப் பயணப்பட்டுக் கடைசியில்,
“அம்மிணிக்கு நீர்காஜை எடுத்திருந்தது. உடம்பு பச்சைப் புண் போல வலித்தது. ஏழு அகினி தந்தாலும் குடித்துவிடும் ஆங்காரம் வந்திருந்தது அவளுக்கு.
பிள்ளை பெற்றபின் தனிக்குடிலில் படுத்திருந்த போது, தாகம் தாங்காமல் ரத்தப் போக்குடைய தன் சிறுநீரை பிடித்துக் குடித்து விட்ட தன் பாட்டியின் நினைவு எழும்பி கலக்கமடைய வைத்தது அம்மிணியை. மிகுந்த தாகத்தோடு இருட்டுப் பொருக்குகள் உதிர்ந்து கொண்டிருந்த காலையூடே வண்டித்தட்டிக்குள் படுத்தபடி காத்துக் கொண்டிருந்தாள் அம்மிணி”.
என்று சுகமுடிவு நிகழ்வுடன் முடியும் கதை இடையில் செய்யும் பயணம் சாதாரணப் பயணத்தின் விவரிப்புகள் அல்ல. இரவு முழுவதும் அந்த பயணத்தில் அவர்கள் செய்த தூரம், சொந்தக் கார் வைத்திருப்பவர்களுக்கு அரை மணி நேரத்திற்குள் சென்று சேரக் கூடிய தூரம் தான். ஆனால் அவர்கள் கடந்து வருவது வெறும் தூரம் மட்டுமல்ல; விதிக்கப்பட்ட வாழ்க்கை வெளி என்பதைச் சொல்வதில் முதன்மைக் கவனம் செலுத்துகிறார் அழகிய பெரியவன். கதையின் வழியாக அழகிய பெரியவன் விவரித்துக் காட்டும் பயணக் காட்சிகளை இனிக் காணலாம்.
**********************
காளம்பட்டா நேற்றே சொல்லியிருந்தாள். அம்மிணியின் வயிற்றைத் தொட்டுப் பார்த்துவிட்டு, நாடி பிடித்தாள் அவள். காளம்பட்டாவின் முகச் சுருக்கங்களில் அர்த்தங்கள் கிளை விரிந்து படர்ந்து கொண்டிருந்தன. ‘ நாளக்கி, நாளன்னிக்கி பெத்துடுவா’
சாமன் லாந்தருடன் சுற்றிமுற்றிப் பார்த்தான். இரவு வண்டுகள் பெருங்கூச்சலிட்டன. மலையிலிருந்து இரவு வடிந்து இறங்கியது. மலையடிவாரத்தில் சிதறியிருந்த குடிசைகள் உறக்கத்தில் முடங்கிக் கிடந்தன. வடக்காய் ஊர் எல்லையில் தொடங்கும் பெரும் காட்டினுள்ளிருந்து காற்று குளிர்ந்து வீசியது. இரவின் வாசனையைத் தாங்கிய அது அங்கே சுழன்றது. இன்னும் பவுர்ணமிக்கு மூன்று நாட்கள் இருந்தன. நிலவைச் சுற்றி பெரும் ஒலி வட்டம் விழுந்திருந்தது. அக்னி மூலையில் சுக்கைகளின் மங்கிய பிரகாசத்தை சாமன் பார்த்தான். தனக்குள் எதையோ சொல்லிக் கொண்ட சாமன், வண்டியின் முன்னாக ஓடத் தொடங்கினான். குபேந்திரன் அவன் பிறகாகவே ஓடினான்.
“மச்சான் பந்தம் எடுத்துக்கினியா? எண்ணெ புட்டி எடுத்தாந்த இல்லே?” “ம் மாமாசி வண்டிக்கால்ல மாட்டிக்கிறேன்”
“குறுப்பா பாரு, சூரி கத்தி எடுத்துக்கிற?” “ ம்.. மாமாசியோவ்”
***********************
தெற்குப் பக்கமாய்ப் படுத்திருந்த மண் சாலையில் வண்டி உருண்டது. சக்கரங்களின் கீழே மண் நொறுங்கும் சப்தம் கூக்குரலெனக் கேட்டது. மாடுகளின் குளம்புகள் மண்ணைச் சீண்டி, புழுதி துரத்தின.
“மச்சான் பந்தத்தெ கொளுத்து” என்றபடி ஓடி வண்டியின் வலப்பக்கமாக சக்கரத்தைப் பார்த்தான். சின்னப் பள்ளந்தான். பள்ளத்தின் விளிம்பில் இருந்த வெள்ளைக்கல் மீது முட்டிக் கொண்டிருந்தது சக்கரம். சற்றைக்கெல்லாம் அந்தப் பிரதேசம் வெளிச்சமானது. சரசரவென்று எண்ணெய் வாசத்துடன் எழுந்த தீயில் இருட்டு ஜொலித்தது. அங்கு தூரத்தில் காட்டுக்குள்ளிருந்து ஊளையிடல்கள் சன்னமாகக் கேட்டன. நரிக்கூட்டங்களாய் இருக்கும் அவை. அவ்விடத்தில் பரவியிருந்த பழவாசனை, கரடிகள் குறித்த பீதியைக் கிளப்பியது.
****************************
சடாரென அவர்கள் தலைக்கு மேலே பறந்துபோன ஆள்காட்டிக் குருவியின் அங்கலாய்ப்பைக் கண்டதும் அதிர்ந்தான் சாமன். பெரும் மரக்கூட்டங்கள் எழும்பி சூழ்ந்திருந்தன அங்கே. பாதை சரிவாக ஓடியது. மூப்பர் பள்ளம் என்றால் பகலிலேயே பயமாய் இருக்கும். மரங்களிடையே நுழைந்து வெளியேறிய காற்று ஆங்காரமாய் சிரித்துக் கிலியூட்டியது அவர்களுக்கு.
தெளிவான உறுமலை அவனால் கேட்க முடிந்தது. அந்தச் சத்தம் கிழக்குப் பார்த்து வந்தபடி இருந்தது. “ மச்சான் தீவட்டி தீவட்டி” என்பதற்குள் குபேந்திரன் கொளுத்தி விட்டிருந்தான். “மாசிலான் முடுக்குடா முடுக்குடா” என்றதும் பாயத்துவங்கி விட்டது வண்டி. சாமன் வண்டியை முன் விட்டு ஓடி வழி ஓரப் பாறையொன்றின் மீதேறினான். கிழக்காய்த் திரும்பி வினோதமாய்க் கத்தினான் அவன். குரல்வளையுள் சுழன்று எழுந்த ஒலி ஒரு மிருகத்தின் கூக்குரலாய் வெளிப்பட்டுப் பரவியது. சாமனும், குபேந்திரனும் வண்டியைப் பார்த்து ஓட்டம் பிடித்தார்கள்.
*****************************
“காணாறு மச்சான்?” “ ஆமாம் மாமாசி”
நீரில் இறங்கிய வண்டிச் சக்கரங்கள் கரகரவென மணலை அரைத்தன. மாடுகள் தவ்வித் தவ்வி நடப்பது போலத் திமிறின. மாசிலான் மாடுகளுடன் பேசுவது போல என்னவோ சொல்லிக் கொண்டிருந்தான். வெகு தூரத்தில் மலைகள் அசைவது போல் சாமன் கண்களுக்குத் தெரிந்தது. பிளிறல்களும் கேட்டது அப்போது. சாமன் சொல்வதற்குள் வேகம் கூட்டியிருந்தது வண்டி. வண்டியுடன் போய்க் கொண்டே வழியில் லத்திக் குவியல்களைத் தேடினான் சாமன். நாலா பக்கமும் திரும்பித் திரும்பி மோப்பம் பிடித்தான் குபேந்திரன். மழைக்காலத்துக்குப் பின் எந்தப் பகுதியிலிருந்தோ வந்து விடும் யானைக்கூட்டங்கள். இந்த முறை அதிக நாள் தங்கி விட்டதாய் பேசிக் கொண்டார்கள் சனங்கள்.
*******************
வானம் இலேசாக வெளிறிக் கொண்டிருந்தது. காட்டுக் கோழிகளின் கூவல்கள் கேட்டதும் சாமனுக்குத் தெம்பு வந்தது. விடிந்து விடும். இன்னும் கொஞ்ச தூரம், காட்டு எல்லை முடிந்ததும் முதல் ஊர் வந்து விடும். தார்ச்சாலையில் போனால் டவுன் மருத்துவமனை வந்து விடும். அவனுள் எண்ணங்கள் அலைமோதிக் கொண்டிருந்தன.
“ எத்தினி காலம் மாமாசி இப்படியே நாம ஓடறது? இந்தப் பக்கமா ஒரு ரோடு போட்டுத் தரமாட்டான்களா?” “ அடப்போ மச்சான் வெகாளத்த கெளப்பாத. கம்முனு வா. நம்ம எளுத்த அப்படி”
***********************
சாமன் மேட்டின் இடது பக்கம் இருந்த பெரும் பாறையருகே ஓடினான். சூலம் நட்டு, கல்லுக்கு குங்குமம் பூசியிருந்தார்கள் அங்கே. அது தங்கலான் செத்த இடம். அவன் குடும்பத்து பெரிய தலை. அவன் பேர் சொன்னால் காட்டுக்குள்ளே பதுங்கியிருக்கும் மிருகங்கள் நடுங்கும். கரடியொன்றை ஆட்டுக்கு தழை கழிக்கும் துரட்டுக் கத்தியால் ரெண்டாய்க் கிழித்தானாம். டவுனுக்குப் போய்த் திரும்பியவன் பள்ளத்தில் சரிந்து செத்துப் போனான். பேய் இழுத்துப் போட்டதாகச் சொல்லிக் கொண்டிருந்தார்கள் வெகுகாலமாய்.
“எம்மா இத்தெ அது நெத்தியில வெய்யி” மண்ணை அம்மாவின் கையில் தந்தான் சாமன்.
வண்டி ஊரை நெருங்கிக் கொண்டிருந்த போது பெருத்த கதறல் சத்தமொன்று அம்மிணியிடம் எழுந்து அடங்கியது. மலைமீது மோதி எதிரொலித்தது அவளின் கதறல் காடும், மலையும் அதனால் நிரம்பிக் கதறின. இளம் சிசுவின் குரல் ஒன்று வண்டியுள்ளிருந்து எழுந்தது. மாடுகள் ஒரு கணத்தில் சிலையாய் நின்று விட்டிருந்தன. சாமனுக்கு மனசு உடைப்பெடுத்துக் கொண்டது. பொங்கி வந்த கண்ணீரைப் புறங்கையால் துடைத்தான்.
“ மச்சான் பொறந்துடிச்சி” சாமன் சந்தோசமாய் சிரித்தபடி அழுதான். “ எப்பா சாமங்களே, இந்தா இதுல ஓடிப்போயி எங்கியாவது ரவத் தண்ணீ வாங்கினு ஓடியாங்க”
“ மச்சான் ஆண்டமாருங்க ஊரு வந்துட்டுக்கீது” குபேந்திரனும் சாமனும் ஊரைப் பார்த்து ஓடினார்கள். ஊருக்குள் நுழைந்ததும் எதிர்ப்பட்ட வீட்டுக் கதவுகளைத் தட்டத் தொடங்கினார்கள் அவர்கள்.
இந்தக் கதையைப் படிக்கும் ஒரு நகரவாசி- அங்கு நமது அரசுகள் ஏற்படுத்தி வைத்திருக்கும் வழுக்கும் சாலைகள் உலகத்தை வெண் திரைகளில் கொண்டு வந்து நிறுத்திடும் கல்விக்கூடங்கள், நின்று விட்ட மூச்சுக் காற்றைத் திரும்பவும் கொண்டு வந்துவிடும் மருத்துவ மனைகள், கற்பனையில் மட்டுமே நினைத்துக் கொண்டிருக்கும் பொன்னுலகத்தைக் கட்டியெழுப்புத் தரும் களியாட்டக்கூடங்கள் என அனைத்து வசதிகளையும் அனுபவிக்கும் நகரவாசி இந்தக் கதையை வாசிக்கும் போது பெரும் குற்றவுணர்வுக்குள் தள்ளப்பட வேண்டும் என்பது தான் அழகிய பெரியவன் நோக்கமாக இருக்கும் என நினைக்கிறேன். அதற்கேற்ற மொழியையும் அதனைப் பயன்படுத்தும் நுட்பமும் அவருக்குக் கைவரப்பெற்றிருக்கிறது. அதற்கென அவர் எழுதிய வரிகள் இரண்டே இரண்டு தான். திரும்பவும் அந்த வரிகள்:
“ எத்தினி காலம் மாமாசி இப்படியே நாம ஓடறது? இந்தப் பக்கமா ஒரு ரோடு போட்டுத் தரமாட்டான்களா?” “ அடப்போ மச்சான் வெகாளத்த கெளப்பாத. கம்முனு வா. நம்ம எளுத்த அப்படி”
*************************
நம்பிக்கையிழப்பின் வெளிப்பாடு:
நாம் மாறிக்கொண்டிருக்கிறோம்; நமது சூழல் மாறிக்கொண்டிருக்கிறது; நம்மை இந்த உலகம் ஏற்றுக் கொள்ளத் தொடங்கிவிட்டது எனத் தனிமனிதன் நினைக்கும்போது பிறப்பது நம்பிக்கை. இதற்கு நேரெதிராகத் தோன்றுவது நம்பிக்கையின்மை அல்லது அவநம்பிக்கை. அதன் காரணிகளாக இருப்பவை நிராகரிப்புகள்; ஒதுக்கிவைத்தல்.
நீண்ட நெடுங்காலமாக விலக்குவதையும் விலகுவதையும் கருத்தியலாக ஏற்றுக் கொண்டு நகர்ந்து வந்துள்ள கெட்டிதட்டிய இறுக்கமான சமூக அமைப்பு இந்திய சமூக அமைப்பு. அதற்கு இன்னொரு பெயர் சாதியம். பிறப்பை அடிப்படையாகக் கொண்டு வகைமைகளை உருவாக்கி வேறுபாடுகளை நிலைநிறுத்தும் சாதியத்தின் மீது கடும் நெருக்கடியை உருவாக்கியது இந்திய அரசியல் சட்டம். வெளித்தள்ளும் (Exclusive) சமூகக் கோட்பாட்டிற்கு மாறாக உள்வாங்கும் (Inclusive) சமூகக் கோட்பாட்டை அடிப்படையாகக் கொண்டு அனைத்துத் தளங்களிலும் இந்த நாட்டின் அனைத்துப்பிரிவினரும் உள்வாங்கப்பட வேண்டும் என்ற நினைப்பின் வெளிப்பாடே இட ஒதுக்கீடு. அதன் தொடர்ச்சியான தீண்டாமை ஒழிப்பு; அடிமை வேலை அழிப்பு என்பனவெல்லாம். ஆங்கிலேயர்கள் தங்கள் நிர்வாகத்திற்கு உதவுவதற்கான பணியாளர்களை உருவாக்கும்பொருட்டு இங்கு அறிமுகம் செய்த கல்விமுறை மீது சுதந்திரத்துக்குப்பின்னான அறிவுஜீவிகளும் கல்வியாளர்களும் கடும்விமர்சனத்தை வைத்தபோதும், அதன் வடிவத்தில் அனைவருக்கும் கல்வி என்ற நேர்மறை அம்சம் இருந்தது. அதனை அடைவதற்கு வகை செய்யும் வாய்ப்புகளும் இருக்கிறது.
68 ஆண்டுக்கால இந்திய ஜனநாயகமும் அரசியலும் இந்த நோக்கங்களில் முன்னேற்றம் இருப்பதாக நம்பிக்கை அளித்தன. கல்விமுறையில் பொதுக் கல்வி, வல்லுநர் உருவாக்கக் கல்வி எனப்பல்வேறு மாற்றங்கள் கொண்டு வரப்பட்டன. அந்த மாற்றங்கள் எல்லாம் ஒடுக்கப்பட்ட குழுவினருக்கு வாய்ப்பளிக்கும் நிலைபாட்டைக் கேள்விக்குள்ளாக்கவில்லை. அதனாலேயே ஒடுக்கப்பட்ட மக்களுக்காகக் குரல்கொடுப்பவர்கள் அதன் மீது கடுமையான விமர்சனங்களை எழுப்பியதில்லை. வாக்குவங்கி அரசியலுக்காக என்றாலும், அரசுகள் சமூகநலத்திட்டங்களை மேற்கொள்ளும் நிலையிலிருந்து பின்வாங்கவில்லை. ஆனால் கடந்த ஓராண்டாக நடக்கும் ஆட்சியும், அரசியலும் அந்த நம்பிக்கையைச் சிதறடிக்கும் நோக்கம் கொண்டன என்ற நினைப்பு பலருக்கும் உண்டாகியுள்ளது. அப்படி நினைப்பவர்கள் வெளிப்படையாகக் கட்டுரைகள் எழுதுகிறார்கள்; கவிதைவடிவில் நேரடியாகக் கேள்வி கேட்கிறார்கள்; தெருவில் இறங்கிப்போராட்டங்கள் நடத்துகிறார்கள். ஆனால் புனைகதையைத் தனது வடிவமாகக் கொண்டுள்ள ஓர் எழுத்தாளர் என்ன செய்யலாம்? இந்தக் கேள்விக்கான விடை ஒன்றைச் சொல்லும் விதமாக அண்மையில் வந்துள்ள புதுவிசை இதழில் (எண். 43/ மே, 2015) கதையொன்றை எழுதியுள்ளார் அழகிய பெரியவன். கதையின் தலைப்பு: மிஞ்சின கதை. அந்தக் கதையில் இடம்பெற்றுள்ள ஒரு பத்தியை இங்கே தருகிறேன். வாசித்துப்பாருங்கள்:
தேஸத்தில் இந்த ஸமயம் நிலவும் வர்ணாஸ்ரம விதிகளின்படி இவ்வாறு அவன் கஷ்டத்தோடு காரியமாற்றித்தானாக வேண்டும். தற்ஸமயம் அமலிலுள்ள நாட்டின் சட்டமான மனுஸ்மிருதியும் சொல்வது அதைத்தான். அவனுக்கு ஏதாவது ஸலுகைகள் வேண்டுமென்றால் அவன் மண்டலத்தின் ராஷ்டிரிய ஸேவக்குகள் மூலமாக யாசிக்கவேண்டும். அவர்கள் அம்மண்டலத்தின் ராஜாங்க காரியஸ்தரான ஸாதுவிடம் அவ்விண்ணப்பத்தைக் கொண்டுபோவார்கள்.
அழகிய பெரியவனின் மிஞ்சின கதையின் பகுதிகளில் ஐந்தில் நான்கு பங்கு இந்த நடையில் தான் இருக்கிறது. சமஸ்கிருத மொழிச்சொற்களோடு தேவநாகரி எழுத்துகளால் நிரப்பப்பட்ட பகுதிகள். எழுதிய கதையொன்று அரசின் தடைக்கும் தண்டனைக்கும் உரியது எனப் பயந்து தீக்கிரையாக்கப் பட்ட பின் தனித்தனியாகக் கிடந்த தாள்களில் மிஞ்சிய பகுதிகளைக் கொண்டு ஒரு கதையை உருவாக்குகிறான் ஒரு இளைஞன். அந்தக் கதைசார்ந்து அவனுக்கு எழும் சந்தேகங்களைத் தன் தந்தையிடம் கேட்டுத் தெளிவு பெறவும் முயல்கிறான் என்பதாகக் கதை அமைக்கப்பட்டுள்ளது. இந்த மொழி நடை தமிழில் ஒரு நூற்றாண்டுக்கு முன்பு இருந்த மணிப்பிரவாள நடையைச் சிலருக்கு நினைவூட்டலாம். மணிப்பிரவாள நடையை ஏறத்தாழ மறந்துபோன இந்த நடை ஒரு அந்நியமொழியின் நடையாகக் கூடத் தோன்றலாம்.
பொதுவாகக் கதைகள் கடந்தகாலத்தின் பதிவுகளாகவும் நினைவுகளின் அசைபோடுதலாகவும் இருக்கும். ஆனால் இந்தக் கதை எதிர்காலவியலின் அடிப்படையைக் கொண்டு முக்கால் நூற்றாண்டைத் தாண்டிய நிகழ்வாக அமைக்கப்பட்டிருக்கிறது. அப்படியான கதைகள் அறிவியல் புனைகதைகள் என அழைக்கப்படும். அறிவியல் எதிர்காலத்தில் பல ஆச்சரியங்களையும் எதிர்பாராத விளைவுகளையும் உண்டாக்கிவிடும் என்ற நம்பிக்கையில் புனைகதையாளர்கள் அறிவியல் புனைகதைகளை எதிர்காலத்தில் நடப்பனவாக எழுதுவதுண்டு. ஆனால் அழகிய பெரியவன் இந்தக் கதையை அறிவியல் புனைகதையாக எழுதவில்லை. சமூக நடப்புக்கதையாக எழுதியுள்ளார். எதிர்காலத்தில் இதுதான் நடப்பாக இருக்கப்போகிறது என்று எந்தவித ஆச்சரியமும் படாமல் எழுதிச் சென்றுள்ளார்
பின்பற்றப்பட்ட மனுதர்மக் கோட்பாடு காணாமல் போய் மக்களாட்சிக் கோட்பாடுகள் மலர்ந்துவிடும் என்ற நம்பிக்கையைத் தந்தது அம்பேத்கர் உருவாக்கிய அரசியல் சட்டம். ஆனால் அரசுகளின் செயல்பாடுகள் நம்பிக்கையை உருவாக்குவதற்குப் பதிலாகக் கொஞ்சம் கொஞ்சமாகச் சிதைத்தே வந்திருக்கின்றன. இதைக் கோபமாகச் சொல்ல விரும்பியது மட்டுமல்ல அழகிய பெரியவனின் நோக்கம் என்பது புரிகிறது. இந்த 68 ஆண்டுகளைத் தாண்டியதைப்போல இன்னுமொரு 68 ஆண்டுகளைத் தாண்டி விட்டால் திரும்பவும் மனுதர்மமே ஆட்சிக்குரிய சட்டம் என்பது முழுமையாகிவிடும் என்று நினைக்கிறார் அவர். நடக்கும் நிகழ்வுகளும் கருத்தியல்களும் அதைநோக்கியே இருக்கின்றன என்பதை உணர்த்தக் கதையை முன்னோக்கு உத்தியில் எழுதியுள்ளார்.
முன்னோக்கு உத்தியில் எழுதப்பட்ட இந்தக் கதை வாசிப்பவர்களை கவனம் குவிக்கச் செய்யும்பொருட்டுப் பின்னர் வரப்போகும் காலத்தில் இந்திய மனிதர்களும் அவர்களது இயல்புகளும் நம்பிக்கைகளும் வாழ்க்கைமுறையும் எப்படி மாறப்போகிறது என்பதை எழுதுவதோடு நிறுத்திக்கொள்ளவில்லை. நீங்கள் மட்டும் மாறப்போவதில்லை; நீங்கள் மட்டும் கடந்த காலத்திற்குள் பயணம் செய்யப்போவதில்லை; நீங்கள் பயன்படுத்திக் கொண்டிருக்கும் மொழியின் அழகும், அடிப்படைகளும், சொற்களும் காணாமல் போகும் வாய்ப்பு தெள்ளத்தெளிவாக இருக்கிறது என்பதைச் சொல்லவும் விரும்பியுள்ளார். அதன் பொருட்டுக் கதையின் மொழிநடையைக் கவனமாக மாற்றித்தந்துள்ளார்.
ஒரு கதையின் நோக்கத்தைக் கதாபாத்திரங்களும் அவை எதிர்கொள்ளும் சிக்கல்களும் மட்டுமே வெளிப்படுத்தக் கூடும் என்று நினைக்க வேண்டியதில்லை. அதன் மொழிநடையேகூடப் பெருந்துணை புரியக்கூடும். அதற்கொரு உதாரணக்கதையாக இந்தக் கதை எழுதப்பட்டுள்ளது. நிகழ்கால அரசியல் விமரிசனத்தை இப்படியும் சொல்லமுடியும் எனக்காட்டியுள்ளார் அழகியபெரியவன்.
********************
புதிய சொல்முறைக்குள் நகர்வு:
தலித் புனைவுகள் தொடக்க காலத்தில் தன்மை அல்லது முன்னிலைக் கூற்றுமுறைகளையே அதிகம் பின்பற்றின. இந்திய சமூகம் தொடர்ச்சியாகச் சாதியின் பேரால் வேற்றுமைகளைப் பேசுவதோடு, ஆதிக்க சாதிக் குழுவினரின் ஒடுக்கு முறைகளை இயல்பானதாகக் காட்ட முயல்கின்றது என்ற குற்றச்சாட்டை முன்வைக்க இவ்விரு சொல்முறைகளே ஏற்றவை என நம்பின. ‘நான் பாதிக்கப்பட்டேன்’ எனச் சொல்லத் தன்மைக் கூற்றும் “என்னைச் சுற்றியுள்ளவர்களுக்கு இவையெல்லாம் நேர்ந்து கொண்டிருக்கின்றன” எனச் சொல்வதற்கு முன்னிலைக்கூற்றுமுறையும் ஏற்ற வடிவம் என்பதை மறுக்கமுடியாது. ஒதுக்குதலும் ஒதுங்குதலுமான நேரடி/மறைமுக வினையின் காரணமாகக் கடைப்பிடிக்கப்பட்ட தீண்டாமையின் அழுத்தங்களை இம்முறைகளின் மூலம் அழுத்தமாகவும் கோபத்துடனும் குற்றம் சாட்டும் தொனியிலும் பேச இவ்விரண்டு சொல்முறைகளின் பொருத்தப்பாடுகள் பற்றித் திரும்பவும் சொல்ல வேண்டியதில்லை. இம்முறைகளின் மூலம் கதைசொல்லியின் சொந்த அனுபவங்களையும் அல்லது உடனுறை மனிதர்களின் - கதைசொல்லியின் பார்வையில் இருக்கும் மனிதர்களின் வலிசார்ந்த அனுபவங்களையும் சொல்வதே தலித் இலக்கிய அழகியலாகக் கருதப்பட்ட நிலை இப்போது மாறியிருக்கிறது. உலகம் முழுவதும் இனம், நிறம், மதம், மொழி சார்ந்த அனைத்துவகை வேறுபாடுகளின் இயங்குநிலைகளையும் அவை எழுப்பும் எல்லாவகைத் துயரங்களையும் அனைத்துவகை உணர்வுகளையும் விவாதிக்க படர்க்கைக் கூற்றுக் கதைசொல்முறை ஏற்ற வடிவம் என்பது திரும்பத்திரும்ப உறுதியாகியிருக்கிறது. கண்ணுக்குப் புலப்படாத – கடவுள் தன்மையில் கதை சொல்லியை நிறுத்திக் கொள்ளும் படர்க்கைக் கூற்றுமுறை வாசிப்பவர்களின் மனவோட்டத்திற்கு அதிக வாய்ப்புண்டாக்கும் வடிவமாகவும் இருக்கிறது. இந்தப் புரிதலின் நகர்வாக அண்மைக்காலத் தலித் புனைவுகளின் சொல்முறைகள் தன்மை மற்றும் முன்னிலைக் கூற்றுமுறைகளைத் தவிர்த்து விட்டுப் படர்க்கைக் கூற்றுமுறைக்கு நகர்ந்துள்ளன எனக்கொள்ளலாம்.
இப்போது திரும்பவும் வரத்தொடங்கியுள்ள தலித் இதழில் பெருந்தொற்று - ரவிக்குமார், சட்டகத்துக்குள் பறந்திடும் பறவை -அழகிய பெரியவன், மாற்றுதல் - ப்ரதீபா ஜெயச்சந்திரன் ஆகிய கதைகள் இடம் பெற்றுள்ளன. இம்மூன்று சிறுகதைகளையும் ஒரே மூச்சில் வாசித்துவிட முடிந்தது. அழகிய பெரியவனின் சட்டகத்துக்குள் பறக்கும் பறவை என்ற கதை படர்க்கைக்கூற்றில் அமைந்துள்ளதோடு, கதையின் வெளியை இந்தியப் பரப்பிற்கு வெளியே அமைத்துக் கொண்டிருக்கிறது. எப்போதும் வேற்றுமைகளையும் மேல் -கீழ் அடுக்குகளையும் பாராட்டிக்கொண்டே இருக்கும் சனாதனத்தின் பிடியில் இருந்து விட்ட இந்திய/ இந்து மனங்கள் தேசங்கடந்து வாழ நேரும் நிலையிலும் தன்னை விடுவித்துக்கொள்வதில்லை; அதன் புறச்சூழலுக்குத் தகவமைக்க முடியாமல் தவிக்கின்றன என்பதை நுட்பமாக முன்வைத்துள்ளார்.
இந்தியாவிலிருந்து உயராய்வுக்காகச் சென்ற கல்விப்புல நட்புகள் சகாதேவன்-ப்ரவீனா அங்கேயே குடும்பத்தை உருவாக்குகிறார்கள். கல்லூரிக்காலம் தொடங்கி உயர் ஆய்வு வரை தொடர்ந்த நட்பும் புரிதலும் அவர்களைக் கணவன் -மனைவியாக மாற்றி ருஷ்யாவிலேயே தங்கச் செய்திருக்கிறது. நட்பு, காதலாக மாறிக் கணவன் மனைவியாக மாறும் இயங்குநிலை ஒருவிதத்தில் மேற்கத்திய வாழ்க்கையின் நகர்வு. இந்திய வெளியாக இருந்தால் அவர்களின் திருமணத்திற்கு எதிராகச் சாதி, மதம், உறவுகள் போன்ற குறுக்கீடுகள் பெருமளவு இருந்திருக்கலாம். இந்தியாவிற்கு வெளியே என்பதால் எந்தவிதக் குறுக்கீடுகளும் இல்லாமல் அவர்களது குடும்ப வாழ்க்கையை உருவாக்கிக் கொள்ள முடிகிறது. எளிதாக உருவாக்கிக் கொண்ட அந்தக் குடும்ப வாழ்க்கையை மேற்கத்திய மனத்தோடு வாழ முடியவில்லை என்பதே கதையின் விவாதம். தனது மனைவியாகிவிட்ட பெண்உடல் மீது ஆண் எடுத்துக்கொள்ளும் ஆதிக்கம், அடிப்பது என்ற உடல்சார் வன்முறையாக இருக்கிறது. இதன் பின்னணியில், ‘அந்த உடல் எனக்கு மட்டுமே சொந்தமானது என்ற உடமைப்பார்வையும், இன்னொரு ஆடவனோடு தனித்திருக்கும்போது உடல்ரீதியான ஆசையைத் தீர்த்துக் கொள்ளவே வாய்ப்பிருக்கிறது என நம்பும் மனம் கொள்ளும் ஐயமும் என்பதை விவாதப்பொருளாக்கும் கதை சொல்லி, அவ்விருவரும் கணவன் மனைவியாக மாறிக்கொண்டாலும் வெவ்வேறு மன அமைப்பும் அழகியல் ஈடுபாடுகளும் கொண்டவர்கள் என்பதைத் தங்களின் குடியிருப்பில் இடம்பெறுவதற்கான படங்களை (வண்ணத்துப் பூச்சி) தேர்வுசெய்வதை வைத்து முன்னுணர்த்திக் காட்டிவிடுகிறார். இந்திய சாதிப்பெருமை சார்ந்த மனம் ஒவ்வொருவருக்குள்ளும் ஓடிக்கொண்டே இருக்கிறது என்பதோடு ஒவ்வொரு ஆணின் இருப்பும், பெண்களை இரண்டாம் நிலைப்பட்ட உயிரியாகப் பார்க்கும் பார்வையிலும் தங்கியிருப்பதாகக் காட்டுகிறது கதை. இரண்டாம் நிலையில் வாழ நேர்ந்ததை உணர்ந்த நிலையிலும் அதிலிருந்து விலகிவிட இந்தியப் பெண் தன்னிலையும் தயாரில்லை என்பதையும் அழகிய பெரியவன் முன்வைக்கிறார். கதையின் தலைப்பான சட்டகத்துக்குள் பறந்திடும் பறவை என்பதே குறிப்பாக அதை உணர்த்திவிடுகிறது.
குளிரில் நடுங்கியபடிக் கம்பளிக்குள் முடங்கிக் கிடக்கும் சகாதேவனைப் பார்த்துக் கொண்டிருக்கும்போது, பனிக்கூரில் இறந்தவர்களுக்கான இடம் ஒன்று நினைவிடமாக மாறியிருப்பது அவளுக்கு நினைவுக்கு வருகிறது. அப்போது அவளது மனம் “ மேற்கத்தியர் வரலாற்றின் வடுக்களை நினைவுகளாக்கிவிடுகிறார்கள். கிழக்கத்தியர்களோ வரலாற்றின் வடுக்களைப் பெருமிதங்களாகப் பாவித்து உயிர்ப்பிக்கிறார்கள் என நினைத்துக்கொண்ட தாக ஒரு குறிப்பைத் தருகிறார். இந்தக் குறிப்போடு பொருந்துவதாக, இந்தியா வந்து வழக்குரைஞர்களையெல்லாம் சந்தித்து விட்டுத் திரும்பும்போது, சகாதேவனிடமிருந்து வந்த ஒரு குறுஞ்செய்தியே அவளைச் சமாதானப்படுத்திக் கொள்ளப்போதுமானதாக இருக்கிறது. ஆனால் அவனது குரூரமான மனத்தை ஒவ்வொரு நிலையிலும் நினைவூட்டிப் பலிவாங்கும் மனமும் அவளுக்குள் இருக்கிறது என்பதை, கணவனால் காயப்படுத்தப்பட்ட தோள்பட்டை வடுவை, ‘ஒரு வண்ணத்துப்பூச்சியின் உடலாக அந்த வடுவை மாற்றிவிடுங்கள்’ எனச்சொல்வதில் இருக்கிறது. அந்த வண்ணத்துப்பூச்சி பறத்தலின் அடையாளம் மட்டுமல்ல; கொட்டும் குளவியாகவும் உருமாறும் வாய்ப்புக்கொண்ட து எனக் கதையை முடிக்கிறார் அழகிய பெரியவன். நிகழ்வெளியையும் நடப்புகளையும் பரப்பிக் கொண்டே வரும் அழகியபெரியவன் எந்த இடத்திலும் கதைசொல்லியாகத் தன்னைக் காட்டிக்கொள்ளாமல் மொழியின் அடுக்குகளைக் கச்சிதமாகப் பயன்படுத்திய கதையாக இந்தக் கதையைத் தந்துள்ளார்.
கருத்துகள்