திரள்மக்களைச் சந்தித்த இருபெரும் கலைஞர்கள்
பெருந்தடங்கள் பதித்த கலைஞர்
பேரா. கே. ஏ. குணசேகரனை எனது நீண்ட நாள் நண்பர் என்று சொல்வதைவிட இருவரும் ஒருசாலை மாணாக்கர்கள் எனவும் ஒரே கல்வி நிலையத்தின் ஆசிரியர்கள் எனவும் சொல்வதே சரியாக இருக்கும். 15 ஆண்டுக்காலம் மாணவர்களாகவும் ஆசிரியப்பணியிலும் ஒன்றாகப் பயணித்தவர்கள் நாங்கள் நானெல்லாம் ஒருவேலையைத் தொடங்க வேண்டுமென்றால் பத்துத் தடவையாவது யோசிப்பேன். ஒன்றுக்கு இரண்டாகத் திட்டங்களைப் போடுவேன். ஆரம்பித்துவிட்டுப் பின்வாங்குவேன். ஏற்றுக் கொண்டு முடித்துவிடலாம் எனக் கிளம்பிப் பயணத்தைத் தொடங்கித் தயக்கத்துடன் பாதியில் திரும்பிய பயண அனுபவங்களெல்லாம் உண்டு.இப்படியே போனால் சொதப்பிவிடுவோமே என்று மனம் சொல்லும்போதே முன்வைக்கக் கால்கள் தயங்கிவிடும். ஓரடி முன்னால் போய்விட்டுப் பின்னால் ஈரடி வைப்பதே வாடிக்கையாகிவிடும்.
என்னுடைய இயல்பு இது என்றால், இதற்கு நேரெதிரானவர் நண்பர் கே.ஏ.ஜி. இந்தமாதிரியான கெட்ட பழக்கங்களெல்லாம் அவரிடம் எட்டிப் பார்த்ததே இல்லை. இதை நான் அவரருகில் இருந்து பதினைந்து ஆண்டுகள் பார்த்திருக்கிறேன். பக்கத்திலிருந்த காலத்தில் மட்டுமல்லாமல், தூரமாகப் போன பின்பும் அதனைப் பார்த்து ரசித்திருக்கிறேன். ரசித்து ரசித்துச் சொன்ன அவரது வாழ்க்கையின் முடிவை - மரணச் செய்தியை எனக்குச் சொன்ன அந்த உள்ளுணர்வுத் தூண்டல் நம்பிக்கையின்மையின் மீது சம்மட்டியாய்த் தாக்கியது என்றுதான் சொல்லவேண்டும்.ஆம். நமது உள்ளுணர்வுத் தூண்டல்கள் எப்போதும் சோகங்களை முன்னறிவிப்புச் செய்கின்றன. காவியங்களில் கூடச் சோகத்தை முன்னறிவிப்புச் செய்த காட்சிகளே கவித்துவம் நிரப்பியனவாகக் காட்டப்பட்டுள்ளன. கோவலன் படுகொலைப்பட்டு இறக்கப் போகிறான் என்பதைச் சொல்வன போலப் பூக்களில் கண்ணீர்த் துளிகளைச் சிந்தின என்றும், கோட்டை வாயிலில் அசைந்த கொடிகள் ‘வாரல்’ என்று வழிமறித்தன என்றும் பெருங்கவி இளங்கோ எழுதுகிறான். இத்தகைய முன்னுணர்வுகள் கவிகளின் கற்பனையல்ல என்பதை நானே எனது அனுபவத்தில் உணர்ந்திருக்கிறேன். நண்பர் பேராசிரியர் கே.ஏ.ஜியின் மரணச்செய்தியும் அப்படிப்பட்ட ஒரு அனுபவமாக ஆகிவிட்டது.
பொங்கலையொட்டி இசையமைப்பாளர் இளையராஜா வழங்கிய நேர்காணல் மீது பலவிதமான எதிர்வினைகளைச் சமூக ஊடகங்களில் இயங்குவோர் தெரிவித்துக் கொண்டிருந்தனர். அப்போது ஒருவர் இளையராஜாவுக்கும் பேரா. குணசேகரனுக்குமிடையே நடந்த முரண் ஒன்றையும் குறிப்பிட்டு இளையராஜா “மக்கள் கலைஞரான கே.ஏ.குணசேகரன் மீது வழக்குப் போடுவதாக மிரட்டினார் ” என்றொரு பதிவை எழுதினார் தனது முகநூலில். அப்போது “இளையராஜா மிரட்ட மட்டும் செய்யவில்லை. அவரது சார்பில் வழக்குத் தொடுக்கப்பட்டது; கே ஏ ஜி. வழக்கைச் சந்தித்தார் என்பதை நானறிவேன்” என்று குறிப்பிட்டு அவரது பெயரைத் தட்டச்சு செய்தேன். அவரது பெயரைத் தட்டச்சுச் செய்து வரலாறு தவறாகி விடக்கூடாது என்ற நினைத்த அந்த நேரத்தில் அவரது வாழ்க்கைப் பயணம் முடிவுக்கு வந்திருந்தது. நான் அந்தப் பெயரை எழுதிய நேரத்தில் அவரது வாழ்வின் இறுதி முடிவு செய்யப்பட்டிருக்கிறது. கணினித் திரையை மூடுவதற்குள் நண்பர் கே. ஏ. குணசேகரன் மறைந்துவிட்டார் என்ற தகவல் தொலைபேசி வழியாக வந்து சேர்ந்தது. அதிர்ச்சியில் நடுங்கிப் போய்விட்டேன்.
அன்று சென்னையில் நடக்கும் ‘வாழ்க்கைக்கான இலக்கியம்’ என்னும் கலை இலக்கிய விழாவில் தலித் அரங்கியல் பற்றிய தனது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள வேண்டியவர். ஒவ்வோராண்டும் ஆங்கில இந்துப் பத்திரிகைப் பொங்கலையொட்டி ஏற்பாடு செய்யும் பெருவிழா அது. இந்திய அளவிலான ஆளுமைகள் மட்டுமல்லாமல் சர்வதேச அளவிலான இலக்கிய ஆளுமைகளும் பங்கேற்று உரையாடும் அந்த விழாவில் பங்கேற்காமலேயே தனது வாழ்க்கைப் பயணத்தை முடித்துக்கொண்டார் என்பது வருத்தமான ஒன்று. பல ஆயிரக்கணக்கான மனிதர்கள் நிரம்பிய மைதானங்களையும் சில ஆயிரம் பேர்கள் நிரம்பிய அரங்குகளையும் தனது வெண்லக் குரலாலும், குரலை இசைக்கக் காரணமான பாடல் வரிகளில் வழியும் உண்மையாலும் கட்டிப்போட்டுவிடும் பாடகர் அவர். நாட்டார் நாடகங்கள், ஆடல்கள், வாழ்வியல் மதிப்பீடுகள், மாற்றங்களின் பதிவுகள் என ஒவ்வொன்றையும் தனது பாடல் ஆதாரத்தின் மூலம் ஏற்கச்செய்த ஆற்றல் கொண்ட அவரின் நட்பு மூன்று பத்தாண்டுகளைத் தாண்டியது.
மதுரைக் காமராசர் பல்கலைக்கழகத்தில் நான் முதுகலைத் தமிழ் படித்துக் கொண்டிருந்தபோது முனைவர் பட்ட ஆய்வுக்காகப் பல்கலைக் கழகத்திற்கு வந்தார் கே.ஏ.ஜி., புதுக்கவிதையில் அதிகம் ஈடுபாடுகொண்ட பேராசிரியர் சி.கனகசபாபதியின் மேசைக்கு முன்புதான் அவர் அதிகம் அமர்ந்திருப்பார். மதுரை, தியாகராசர் கல்லூரியில் படித்தவரைப் பல்கலைக்கழகத்தில் சேரும்படி ஏற்பாடு செய்தவர் கவி மீரா; கவி மீராவிடம் சிவகங்கை மன்னர் கல்லூரியில் படித்தவர். அவர் வழியாகவே இடதுசாரி மேடைகளில் பாடும் வாய்ப்புகளைப் பெற்றவர். அவர் பல்கலைக்கழகத்திற்கு வரும் முன்பே அவரது குரலோடு சேர்த்து மதுரையின் தெருவொன்றின் முனையில் பாடகராக நான் பார்த்திருக்கிறேன்.
நாட்டுப்புறப் பாடல்களில் முனைவர் பட்டம் செய்யவந்தவருக்கு வழிகாட்டியாக இருந்தவர் முனைவர் நவநீதகிருஷ்ணன். பின்னாளில் தமிழகம் முழுவதும் நாட்டுப்புறப் பாடகப் புகழோடு விளங்கிய திருமதி விசயலட்சுமி நவநீத கிருஷ்ணனின் கணவர். அந்தத் தம்பதியருக்கு முன்பே தமிழகம் அறிந்த பாடகர் கே ஏ ஜி. ஆனால் அவரது பாடல்களெல்லாம் சமூக மாற்றத்தையும் சமூக விமரிசனத்தையும் ஒடுக்கப்பட்ட மக்களின் துயரத்தையும் முன்வைத்தவை. அதனால் கோயில் கொடைகள், கொண்டாட்டங்கள் போன்றவற்றில் இடம்பெறாமல் மக்கள் இயக்கங்களின் மேடைகளில் மட்டுமே இசைக்கும் வாய்ப்பைப் பெற்றவை. ஆனால் அவரது நெறியாளரும் அவரது துணைவியாரும் நேரெதிராகக் கோயில்கொடைகள், சமயவிழாக்கள், அரசாங்க நிகழ்வுகள் எனப் பாடல்களை மேடையேற்றினர். இதனாலேயே முரண்பாடுகளும் ஏற்பட்டன.
கே.ஏ. குணசேகரன், ஆய்வாளர் விடுதியில்; நான் மாணவர் விடுதியில். என்றாலும் அங்கு போய்ப் பேசிக்கொண்டிருப்போம். எப்போதும் அவரது விடுதி அறையில் கட்சிக்காரர்கள், நாட்டுப்புறக்கலைஞர்கள், பாடகர்கள் என ஒன்றிரண்டுபேர் விருந்தினர்களாக இருப்பார்கள். அவரது விடுதிக்கட்டணம் மற்றவர்களின் கட்டணத்தைப் போல இரண்டு மடங்குக்கும் மேல் அதிகமாக வரும். வருபவர்களையெல்லாம் விருந்தினர் பட்டியலில் இணைத்துச் சாப்பிடச்சொல்லி அனுப்புவார். பாடகராகவும் ஆய்வு உதவித்தொகையாகவும் கிடைத்த பணத்தைச் செலவழிப்பதில் தயக்கமே காட்ட மாட்டார். வெளியில் போய்வரும்போதெல்லாம் தொங்கும் பையில் புத்தகங்களோடு வருவார். அவற்றில் பல அவருக்குக் கொடுக்கப்பட்ட புத்தகங்களாகவே இருக்கும். ஆய்வாளராக இருந்த காலத்தில் அவ்வளவு புகழோடு இருந்த ஒருவரைப் பல்கலைக்கழகம் பார்த்திருக்காது
பல ஊர்களுக்கும் பாடப்போகும் அவரது குழுவினரோடு வெறும் கேட்பவனாகவே பயணம் செய்திருக்கிறேன். போகும்போது மார்க்சியம், கலையின் சமூகப்பாத்திரம், விழிப்புணர்வூட்டுவதில் கலைஞர்களின் பங்களிப்பு எனப் பேசிக்கொண்டே போவோம். ஒருமுறை அவர் உடன் வரமுடியாத நிலையில் சத்தியமங்கலத்திற்குக் குழுவினரோடு போய்வரும்படி சொல்லிவிட்டுப் போய்விட்டார். இரவு கச்சேரி தொடங்கி இரண்டு மணிநேரம் ஆகிவிட்டது. வருவாரா வரமாட்டாரா? என்று எனக்குக் கலக்கம். நான் பொறுப்பேற்றுப் போனதால் அமைப்பாளர்கள் என்னிடம் தான் கடிந்து கொண்டே இருந்தனர். ஆனால் வந்துவிட்டார். மதுரையிலிருந்து தஞ்சாவூர் போய்விட்டுப் பேருந்து, லாரி, இருசக்கர வாகனம் என ஒவ்வொன்றாய்த் தாவித்தாவிப் பயணம்செய்து வந்துவிட்டார். அதன்பிறகு இரண்டு மணி நேரம் பாட்டுக்கச்சேரியை நடத்தினார்.
அவரது திருமணத்திற்காகச் சிவகங்கை போய்க் கலந்துகொண்ட நாள் மறக்கமுடியாத நாள். மணமகனாகவும் பாடகராகவும் மாறிமாறித் தோன்றினார் மேடையில். மரபான திருமணச்சடங்குகள் எதுவுமில்லாமல், மேடைநிகழ்வாகவே அந்தத்திருமணம் நடந்தது. அவரது துணைவியாரும் மதுரைப்பல்கலைக்கழக மாணவிதான். பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் இரண்டுபேரும் ஒரேநாளில் நாடகத்துறைக்கு நேர்காணலுக்குப் போனோம். அவர் வந்தது இணைப்பேராசிரியர் பதவிக்கு. நான் போனது விரிவுரையாளர் பதவிக்கு. இருவரின் தேர்வும் எதிர்பாராத திருப்பத்தால் நிகழ்ந்தது. அதற்குமுன்பு அங்கு பணியாற்றிக் கொண்டிருந்த திரு ராஜு, திரு ஆறுமுகம் ஆகிய இருவரையும் மனதில் வைத்து நடத்தப்பெற்ற நேர்காணலில் நாங்கள் இருவரும் தேர்வு செய்யப்பட்டோம். அடிப்படைத்தகுதியோடு நாடகப் பங்கேற்புகளே எங்களைத் தேர்வுசெய்யவைத்தது. அவர் இணைப்பேராசிரியராகவும் நாள் விரிவுரையாளராகவும் ஒரேநாளில் பணியில் சேர்ந்தோம்.
பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தின் சங்கரதாஸ் சுவாமிகள் நிகழ்கலைப் பள்ளியில் பணியாற்றிய காலத்தில் நாடகம் பற்றிப் பெரிதும் கருத்து வேறுபாடுகள் இருந்ததில்லை. நாடகத்துறை நிர்வாகம் பற்றிய முரண்பாடுகள் இருவருக்கும் உண்டு. சண்டை போடுவேன். சிரித்துக்கொண்டே எதிர்கொள்வார். எட்டாண்டுகள் அங்கு பணியாற்றிவிட்டு நான் வெளியேறியபோது வாழ்த்தி அனுப்பியவர்களில் அவரும் ஒருவர். அதன் பிறகும் பலதடவை துறையின் செயல்பாடுகளில் பங்கெடுக்க அழைத்தவர் அவர் தான். நாடகத்துறையிலிருந்து சென்னையில் இயங்கும் உலகத்தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தின் இயக்குநராக இருந்தபோதும் என்னை அழைப்பார்; பேசுவோம். கருத்தரங்குகளைத் திட்டமிடும்போது கலந்துரையாடுவார். எப்போதும் உள்வாங்கும் குணத்தை வெளிப்படுத்துவார். மற்றவர்கள் பொறுப்புக்கு வரும்போது நிராகரிப்பார்கள்; அவரிடம் மட்டுமே எல்லாத் தரப்பையும் உள்வாங்கும் தன்மை இருந்தது. அதைக் கற்றுக் கொள்ளும் வாய்ப்பைத் தந்ததற்கு நான் நன்றி சொல்லியிருக்கிறேன்.
அவரது குரலே அவரது சொத்து. இடதுசாரி இயக்கங்களுக்காக அவரது குரல் மேடைதோறும் முழங்கியிருக்கிறது. தலித் இயக்கங்களின் ஆரம்ப வளர்ச்சியில் அவரது குரலாற்றிய பங்களிப்பு முக்கியமானது. நாட்டார்கலைகள் அனைத்தையும் பற்றி அனுபவ பூர்வமாக உரையாற்றக்கூடிய ஆளுமை. ஐரோப்பிய நாடுகளுக்கும் அமெரிக்காவும் சென்று கச்சேரிகள் செய்துள்ளார்; கட்டுரைகள் வாசித்துள்ளார். ஊடகம் இதழில் கத்தாரோடு நிகர்நிலைப்படுத்தி எழுதப்பற்ற கட்டுரையால் மனம் மகிழ்ந்தார். சமூக நிகழ்வுகளை நினைவுபடுத்தும் நாடக ஆக்கங்களை எழுதியவர். வட்டார வரலாறு, நாட்டார் நம்பிக்கைகள், கதைகள் எப்போதும் அவரது கவனத்தில் இருந்துகொண்டே இருந்தன. நாடக எழுத்திலிருந்து தன் வரலாற்றுக்குள்ளும் தனது பங்களிப்பைச் செய்தவர். வடு அவரது தன்வரலாற்றுப் புதினம். அவரது எழுத்து மற்றும் இயக்கத்தால் பலி ஆடுகள் முக்கியமான நாடகமாக உருவானது.
தலித் அரங்கியலுக்கு அது ஒரு மைல்கல். அந்தப் பிரதியில் பணியாற்றப் பலரை அனுமதித்ததின் வழியாகப் பல தளங்கள் கொண்ட பிரதியாகவும் புதுவகை உத்திகளைப் பயிற்சி செய்யும் வாய்ப்புடைய பிரதியாகவும் மாற்றினார். தமிழ் நவீன நாடக முயற்சிகளுக்கு அடித்தளமிட்ட காந்திகிராம நாடகப் பயிலரங்கில் கிடைத்த தகவலின் அடிப்படையில் முதன்முதலில் நூலொன்றை எழுதியவர் அவர் தான். கிடைத்த தகவலைப் பலருக்கும் பகிர்ந்துகொள்ளவேண்டுமென்று தயங்காமல் கட்டுரைகளையும் நூல்களையும் எழுதியுள்ளார். நாட்டுப்புறப் பாடல்களை மண்ணின் பாடல்கள் எனப் பேச வைத்தவர் அவர். நாட்டார் புறவியல் என்பது கிராமம் சார்ந்த ஒன்று எனக் கருதப்பட்ட சூழலில் நகர்சார் நாட்டுப்புறக்கதைகளையும் கதைப்பாடல்களையும் தொகுத்து நகர்சார் நாட்டுப்புறம் என்ற சொல்லாட்சியைப் பயன்பாட்டிற்குள் வரவைத்தார். அதற்குள் தலித்துகளின் குரலைத் தனித்துக் காட்டும் பிரிவினைச் சேரிப்புறவியல் என அழைக்கவேண்டுமெனக் காரணங்களோடு முன் மொழிந்தவரும் அவர்தான். இதையெல்லாம் சொல்லும்போது ஆய்வாளர்களும் அறிஞர்களும் ஏற்பார்களா? நிராகரிப்பார்களா? என்றெல்லாம் தயங்கியதே இல்லை. அதேபோல் கடந்த ஐந்தாண்டுகளில் செவ்வியல் இலக்கியங்களுக்கு உரையெழுதும் முயற்சிகளிலும் தயங்காது இறங்கினார். பதிற்றுப்பத்திற்கும் பட்டினப்பாலைக்கும் உரைகளை வெளியிட்டார். எல்லாம் நமது அறிவின் எல்லைக்குட்பட்டதே என நினைக்கும் அவரது மனம் எனக்கெல்லாம் வருவதே இல்லை.
அண்மையில் புதுச்சேரி போனபோது நேரில் பார்க்கவில்லை. சென்னையில் மருத்துவமனையில் இருந்தார். லண்டனிலிருந்து அவரது மாணவரும் நண்பருமான பால.சுகுமார் வந்து பார்த்துவிட்டுப் பயமா இருக்கு ராமசாமி! என்று தொலைபேசியில் சொல்லிவிட்டு நடுங்கினார். அந்த நடுக்கம் எனக்கும் தொற்றிக் கொண்டது. நண்பரே இப்போது நான் நடுங்கியபடி இருக்கிறேன். பாண்டிச்சேரியே தூரம் தூரமாக விலகிக் கொண்டிருக்கிறது.நீங்கள் இல்லாத நாடகத்துறை வளாகத்தின் வெறுமையைத் தாங்கும் மனம் இன்னும் வரவில்லை.
கத்தார் : கனவுகளைக் காட்சியாக்கிய கலைஞன்.
நீண்ட காலம் பெருந்திரளான மக்களைச் சந்திக்கும் வாய்ப்பைத் தவற விட்டிருந்த கத்தார் பத்திரிகையாளர்களைச் சந்தித்த இரண்டாவது நாள் ஐதராபாத் நிஜாம் கல்லூரி மைதானத்தில் நடந்த ஜனநாட்ய மண்டலியின் 19 -வது ஆண்டு விழாக் கலை நிகழ்ச்சியின் போது திரும்பவும் மக்கள் முன்னாள் மேடையேறினார். ஜனநாட்ய மண்டலியின் வழக்கமான உடையில், சிவப்புக் கோடுகள் குறுக்கே ஓடும் கறுப்புப் போர்வையை இடுப்பிலும் மார்பின் குறுக்காகவும் கட்டிக் கொண்டு, இடது கையில் ஓசை எழுப்பும் சிறு கொட்டுமேள வாக்கியம், வலது கையில் ஆயுதம் என ஒப்பனைகளைத் தாங்கி அவர் மேடையேறிப் பாடும் காட்சியைக் காண ஆந்திரத்தின் பல பாகங்களிலிருந்தும் 20,000 பேருக்கு மேல் அந்த மைதானத்தில் குழுமியிருந்ததாக வாரப் பத்தி¢ரிகைகள் செய்திகள் வெளியிட் டிருந்தன. கத்தாரின் மேடை நிகழ்வுப் புகைப்படங்களையும் மக்கள் யுத்தக்குழுவின் அடுத்த கட்ட நடவடிக்கைகளையும் வெளியிட்ட ஆங்கில வாராந்தரி களின் செய்திக் கட்டுரைகள் நக்சலைட்டுகளின் அரசியல் நடவடிக்கைகளை விரிவாகப் பேசியிருந்தன.
தொண்ணூறுகளின் தொடக்கம் அது. ஆந்திரத்தில் சென்னாரெட்டி முதல் மந்திரியாக இருந்த போது மாநில அரசின் பெயருக்குக் குந்தகம் விழைவுக்கும் செய்திகளுக்குக் காரணமாக இருந்த நக்சலைட்டு களுடன் பேச்சு வார்த்தை நடத்தத் தயார் என அறிவித்தார். தெலுங்கானா உள்பட்ட வடக்கு ஆந்திர மாவட்டங்களில் செல்வாக்குப் பெற்றிருந்த மக்கள் யுத்தக் குழு உள்பட்ட அனைத்து மார்க்சீய லெனினிய அமைப்புக்களின் மீதும் இருந்த தடை ஆணையை நீக்கி உத்தரவிட்டதோடு பேச்சு வார்த்தைக்கான திட்டங்களையும் முன் வைத்தார்.
மாநில அரசின் தாராளவாத நடவடிக்கைகளைத் தொடர்ந்து தலைமறைவாக இருந்த நக்சலைட் தலைவர்கள் பலரும் தங்களைப் பத்திரிகையாளர்களின் முன்னால் வெளிப்படுத்திக் கொண்டு அரசின் நடவடிக்கைகளுக்குச் செவி சாய்க்கத் தொடங்கியிருந்தனர். மக்கள் இசைக் கலைஞர் எனவும் புரட்சியின் பாடகன் எனவும் ஆந்திரத்திலும் அண்டை மாநில இடதுசாரிப் புரட்சிகர சக்திகளிடமும் அறிமுகம் பெற்றிருந்த கத்தாரும் 1990, பிப்ரவரி 18 அன்று பத்திரிகையாளர்களைச் சந்தித்துத் தனது தலை மறைவு வாழ்க்கையை முடிவுக் கொண்டு வந்தார். தலைமறைவு வாழ்க் கையின் போது தான் பெற்ற அனுபவங்களை விட அவரது பேச்சில், ஆந்திர மாநிலத்தின் கிராமப் புறங்களில் நிலவும் வறுமை மற்றும் நிலக்கிழார்களின் ஆதிக்க மனப்போக்கு பற்றித் தான் அதிகம் தகவல் இருந்தன. அதற்கு முன்பும் பின்பும் எனப் பதினைந்து தடவைகளுக்கும் மேலாக தலைமறைவு வாழ்க்கைக்குள் தன்னை ஈடுபடுத்திக் கொண்டவர் கத்தார். ஆந்திரக் காடுகளும் கிராமங்களும் மட்டும் அல்லாமல், மகாராட்டிரம், மத்தியப் பிரதேசம் , ஒரிசா என அண்டை மாநிலக் கிராமத்து மக்களோடு காடுகளில் வாழ நேர்ந்த அனுபவங்களும் உண்டு.
அந்தத் தடவை தான் நீண்ட காலம் தலைமறைவாக இருந்த காலம் எனச் சொல்லலாம்.1986 ஆம் ஆண்டு பிரகாசம் மாவட்டம் கரம்சேர் கிராமத்தில் பண்ணையார்களின் அடியாட்கள் தலித் மக்களைத் தாக்கிக் கொலை செய்த நிகழ்வுக்கு எதிராக மக்களைத் திரட்டினார் கத்தார். போராட்டத்தைப் பின்னின்று இயக்கிய மக்கள் யுத்தக் குழுவின் நடவடிக்கைகளுக்கு உதவும் விதமாகச் செயல் பட்டதாகக் காரணம் காட்டி அவரது வீட்டைச் சோதனையிட்டது காவல் துறை. மக்கள் யுத்தக் குழுவும் தடை செய்யப்பட்டது. காவல் துறையினரிடமிருந்து தப்பிப்பதற் காகத் தலைமறைவான கத்தார் ஏறத்தாழ நான்கரை ஆண்டுகள் வெளியே வராமல் இருந்தார்.
கத்தாரின் மேடை நிகழ்வை ஒரு முறை நேரில் பார்த்த யாரையும் திரும்பவும் ஒரு முறை பார்க்கும்படியும் கேட்கும்படியும் தூண்டும் மேடை நிகழ்வு அது. மக்கள் பிரச்சினைகளைப் பேசும் உள்ளடக்கத்தோடு பாடப்படும் பாடல்களில் பொதுவாக இழையோடும் சோகத்துக்கும், ஆர்ப்பாட்டமான தீர்வுகளுக்கும் மாறான வடிவம் கொண்டவை அவரது பாடல்கள். ஆயிரத்து தொள்ளாயிரத்து எண்பதுகளின் தொடக்க ஆண்டுகளில் அவரது குழு தமிழ் நாட்டின் முக்கிய நகரங்களில் நடத்திய நிகழ்வுகளை நேரில் பார்த்து அனுபவத்த சில ஆயிரம் பேர்களில் பல நூறு பேர்களுக்காகவாவது அந்த நினைவுகள் இருக்கும் என்றே நினைக்கிறேன். துள்ளிக் குதித்து மேடையில் நுழையும் பாடகர்களின் ஆர்ப்பரிப்பான நுழைவும், அதற் கேற்ற இசைக்கோலமும் சேர்ந்து பார்வையாளர்களை உடனடியாகத் தன் வசப்படுத்தும் தன்மை கொண்டனவாக இருக்கும். மெலிதான தாள ஒலிக்கேற்ப அசைக்கப்படும் தடிமனான கம்பளியுடன் கூடிய உடல்களின் அசைவுகளும், உடம்போடு கூடிய இசைக்கருவிகளின் இயைபும் சேர்ந்து மேடை நிகழ்வைக் களை கட்ட வைத்துத் தன் வசப்படுத்தும் அனுபவம் அது.
மக்களின் பிரச்சினைகளை மையப்படுத்திய அந்தப் பாடல்கள் ஒருவிதத்தில் கேள்வி பதில் பாணியைக் கொண்டவை. இருப்பின் துயரத்தை முன் வைத்துவிட்டு அதற்கான காரணங் களையும், காரண கர்த்தாக் களையும் அடையாளப்படுத்தித் திரும்பவும் பார்வையாளர்களை நோக்கிக் கேள்விகளை எழுப்பும் தன்மை கொண்டவை. இரண்டாவதாக எழுப்பும் கேள்விகள் இந்தக் காரணகர்த்தாக்களுக்கு என்ன தண்டனை தருவது என்பதாக அமைய, அதற்குப் பதில் தரும் விதமாக குழுவின் இன்னொரு பகுதி கோபமான குரலில் தண்டனையைச் சொல்லும் வடிவம் எல்லாப் பாடல்களின் அடிப்படை வடிவமாக இருந்தன. இந்த வடிவத்திற்கான இசைப் பின்னணியை ஆந்திரத்தின் பிரபலமான கிராமீயக் கலை களிலிருந்து பெற்றுத்தான் உருவாக் கினார் கத்தார். ஒக்க கதா, வீதி பாகவதம் போன்ற நடனம், பாடல், வசனம் கலந்த வடிவங் களையும், கிராமப்புறத்தெய்வமமான எல்லம்மாவின் கதையைச் சொல்லும் கதைப் பாடல் வடிவத்தையும் தனதாக்கிக் கொண்டிருந்தார்.கலை விரும்பிகள் கழகமாக இருந்து 1972-ல் ஜனநாட்ய மண்டலியாக மாறிய அமைப்பில் சேருவதற்கு முன்பு கத்தார் ஆரம்பித்த அமைப்பின் பெயர் புர்ரகதா. அந்தப் பெயர் ஒரு நாட்டார் கலைவடிவத்தின் பெயர். ஒற்றை இசைக் கருவி யுடன் கதை சொல்லும் பாணியில் பாடிச் செல்லும் நாடோடிப் பாடகர்களின் வடிவம் அது.
விட்டல்ராவ் கத்தார் ஆன கதை ;
புர்ரகதா வடிவத்தை மக்கள் விழிப்புணர்வுக் கருத்துக்களைப் பரப்பும் நோக்கத்திற்குப் பயன் படுத்தி வந்த கும்மடி விட்டல் ராவ் (பெற்றோர் வைத்த பெயர்) மார்க்சீய லெனிய இயக்கங் களின் பக்கம் வந்தது திடீரென்று நடந்த ஒன்றல்ல; மெல்ல மெல்ல நடந்த ஒன்றுதான். ஆந்திர மாநிலம் மேடக் மாவட்டத்தில் துக்கரான் கிராமத்தின் சேஷையா-லட்சுமம்மாவின் மகனாக 1949-இல் பிறந்த விட்டல்ராவின் இளமைக்கால வாழ்க்கை சொல்லிக் கொள்ளும்படியானதல்ல. அன்றாடம் செய்யும் பல்வேறுவிதமான வேலைகளில் கிடைக்கும் கூலியில் வாழ்ந்த தலித் குடும்பம் அவருடையது.என்றாலும் அவரது பெற்றோர் அவரது பள்ளிப் படிப்பையும் முடித்து கல்லூரிக்கும் அனுப்பி வைத்தனர். ஜூனியர் கல்லூரியில் புகுமுக வகுப்பிற்குப் பின் உஸ்மானிய பல்கலைக்கழகத்தின் பொறியியல் பட்ட வகுப்பில் சேர்ந்தவருக்குத் தொடர்ந்து செலவு செய்து படிக்க முடியாத நிலை தோன்றிய போது படிப்பைப் பாதியில் நிறுத்திவிட்டு அன்றாட வாழ்க்கையை ஓட்டுவதற்காக வேலை செய்யத் தொடங்கினார். பல்வேறு வேலைகளைச் செய்தார். அத்துடன் பாடும் திறமை தன்னிடம் உள்ளது என்பதைக் கருத்தில் கொண்டு இசைக்குழு ஒன்றை அமைத்தார். அந்த அமைப்பின் பெயர் தான் புர்ரகதா என்பது.
புர்ரகதா அமைப்பின் வழியாக விழிப்புணர்வுக் கருத்துக்களைச் சொல்லும் பாணியைக் கற்றுக் கொண்ட அவர் 1969-ல் தனித்தெலுங்கானா மாநிலக் கோரிக்கைக்கான போராட்டங்களில் பங்கேற்றார். பின்னர் அதன் பெயரை மகாத்மா காந்தி என மாற்றிக் கொண்டு அரசின் களவிளம்பரத் துறையினருக்காகக் குடும்பக் கட்டுப்பாடு மற்றும் சமூக மேம்பாடு பற்றிய நிகழ்ச்சிகளையும் நடத்தி வந்தார். அப்படியான நிகழ்ச்சியொன்றைக் கண்ட திரைப்பட இயக்குநர் பி.நரசிங்க ராவ் [இந்தியாவில் சமூகப் பிரச்சினை களை அதன் பொறுத்தப் பாட்டுடன் பேசிய மாபூமி, ரங்குலகலா, தாசி, கண் போன்ற திரைப்படங்களை இயக்கிய இயக்குநர்] அந்நிகழ்ச்சி யால் கவரப்பட்டு விட்டல்ராவை அணுகிப் பாராட்டுக்களைத் தெரிவித்ததோடு தங்கள் அமைப்பான கலை விரும்பிகள் கழகம் நடத்தும் பகத்சிங் ஆண்டுவிழாவிற்கு நிகழ்ச்சி நடத்த வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.
நிகழ்ச்சி நடத்திய விட்டல்ராவ் அதன்பின்பு அந்தக் கழகம் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமைகளிலும் நடத்தும் கூட்டத்தில் கலந்து கொள்ளத் தொடங்கினார். அவரிடம் நீங்களும் ஏதாவது எழுதி இந்த ஞாயிற்றுக்கிழமைக் கூட்டத்தில் வாசிக்கலாம் என நரசிங்கராவ் கேட்டுக் கொண்டதை ஏற்று ஒரு பாடலை எழுதிக் கொண்டு வந்து பாடிக் காட்டினார்.’’ ரிக்சாவை நிறுத்து- ரிக்சாக்காரனே’’ என்று தொடங்கும் அந்த முதல் பாடலே அவரை ஒரு மக்கள் பாடகனாகவும் சமூகப் போராளியாகவும் மாற்றிய திருப்பத்தைச் செய்தது .
ரிக்சாவை நிறுத்து- ரிக்சாக்காரனே!இதோ நான் வந்து கொண்டிருக்கிறேன்.விடிஞ்சது தொடங்கி ராத்திரி வரை ரிக்சா ஓட்டுறாய்என்றாலும் உனது வயிறு நெறயலைஎவ்வளவு வியர்வை; எத்தனை ரத்தம்என்றாலும் உனக்குக் கிடைக்கும் வருமானம் என்ன?
என்று கேட்பதாக அமைந்த அந்தப் பாடல் 1971-ல் எழுதி வாசிக்கப்பட்டு மேடையேற்றப்பட்ட போது பார்வையாளர்களால் பெரிதும் கவனிக்கப்பட்டது. குறிப்பாக ரிக்சாக்காரர்கள் மத்தியில் அவரைப் பிரபலமான மனிதராக மாற்றியது.
பிற்காலங்களில் அந்தப் பாடலை அவர் பாடி முடித்தவுடன் ரிக்சாக்காரர்கள் தங்கள் வசம் இருந்த பணத்தை மேடை மீது வீசி எறிந்து தங்கள் அன்பையும் நன்றியையும் வெளிப்படுத்திய காட்சிகள் பல இடங்களில் நடந்ததுண்டு. தொடர்ந்து கலை விரும்பிகள் கழகத்தின் கூட்டங் களில் தான் எழுதிய பாடல்களைப் பாடிய விட்டல்ராவ், அவற்றைத் தொகுத்து ஒரு பாடல் தொகுப்பாக வெளியிட்ட போது அந்தத் தொகுப்பிற்கு வைத்த பெயர் ‘’கத்தார் ‘’ என்பது. ஆங்கிலேயர்களின் காலனியாதிக்கக் காலத்தில் பஞ்சாப் மாநிலத்தில் இருந்த புரட்சிகரக் கட்சியின் பெயர் கதர் . அது தெலுங்கு உச்சரிப்பில் கத்தார் என மாறியது. அந்தப் பெயரில் பாடல் தொகுப்பை வெளியிட்ட பின்பு விட்டல் ராவ் நிகழ்ச்சி நடத்தச் சென்ற இடங்களில் எல்லாம், கத்தார் கூட்டம் வருகிறது என மக்கள் சொல்லத் தொடங்கினர். அதன் காரணமாக விட்டல் ராவும் கத்தார் என்ற பெயராலேயே அறியப்பட்டார். அவர் கலைவிரும்பிகள் கழகத்துடன் தொடர்பு கொள்ளக் காரணமான இயக்குநர் நரசிங்கராவிற்கு மார்க்சீய லெனினியக் கட்சியினருடன் தொடர்பு இருப்பதை அறிந்து இவரும் தன்னை அத்தோடு இணைத்துக் கொண்டார். அதே நேரத்தில் தனது குடும்ப வாழ்க்கையை நடத்த வேலை தேடும் முயற்சியில் ஈடுபட்டுக் கனரா வங்கியின் குமாஸ்தாவாகத் தேர்வு பெற்று ஒன்பது ஆண்டுகள் பணியாற்றவும் செய்தார். 1984 ஆம் ஆண்டு அந்த வேலையை விட்டு விலகிய பின் முழுமை யாகத் தன்னை ஜனநாட்ய மண்டலியின் கலைஞனாக ஆக்கிக் கொண்டு ஆந்திர மாநிலம் மட்டும் அல்லாது அண்டை மாநிலங்களில் நடக்கும் இயக்க மேடைகளிலும் பாடி வந்தார்.
பாடகர் மட்டும் அல்ல - தலைவன்; சிந்தனையாளன்
நாலரை ஆண்டுத் தலைமறைவு வாழ்க்கைக்குப் பின்பு வெளிப்பட்ட கத்தார் மனித உரிமைகள் சார்ந்த அமைப்புக்களுடன் சேர்ந்து வேலைகள் செய்து வருகிறார். இந்த தேசத்தில் நக்சலைட் இயக்கத் தினரின் நடவடிக்கைகள் பயங்கரவாதம் சார்ந்தவை என அரசுகள் கருதினால், அவற்றை ஒழிக்க வேண்டிய வழிமுறைகளை பற்றிச் சிந்தித்துத்தான் ஆக வேண்டும். அந்தச் சிந்தனை பயங்கர வாதத்திற்கெதிராக அரச பயங்கரவாதத்தை ஏவி, போலி என்கவுண்டர்கள் நடத்தி போராடுபவர்களை அழித்தொழிக்கும் செயலாக இருக்க முடியாது என்று பேச்சிலும் கலை நிகழ்ச்சிகளிலும் தெரிவித்து வருபவர் கத்தார். நக்சலைட்டுகள் முன் வைக்கும் கோரிக்கைகள் மிகக் கவனமாகப் பரிசீலிக்க வேண்டிய பொருளாதாரப் பிரச்சினைகள் என்பதை ஒத்துக் கொள்வதோடு, அவற்றைத் தீர்த்து வைப்பதற்கான வழிமுறைகளைத் தீவிரமாக எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கைகளையும் முன் வைக்க அவர் தவறுவதில்லை. சாதி, மதம், மொழி, வட்டாரம் எனப் பிரிவினைகள் பேசுவதற்கு வாய்ப்புள்ள புள்ளிகளைத் தவிர்த்து விட்டு உழைக்கும் மக்களின் விடுதலையைச் சாத்தியமாக்கிப் பொதுவுடைமை அரசாங்கத்தை அமைக்கும் நோக்கத்தில் பின் வாங்காத கொள்கையாளராகத் திகழ்ந்து வரும் கலைஞர். அதை நோக்கிய பிரசாரத்தைத் தொடர்ந்து செய்து வரும் கத்தார் அதிலிருந்து ஒரு போதும் பின்வாங்கியவர் அல்ல.
அவரது வழிமுறைகளும் நிகழ்ச்சிகளும் துப்பாக்கி முனையில் அதிகாரத்தைக் கைப்பற்றும் நக்சலைட்டு களின் சித்தாந்தை ஆதரித்துப் பேசிகின்றன; அதனால் அவரைக் கைது செய்ய விரும்பினால் உடனே கைது செய்து விடுவோம் என ஒவ்வொரு அரசாங்கமும் சொன்னாலும், அவரைக் கைது செய்வதை அரசுகள் செய்ததில்லை. ஆனால் ஒருமுறை அவரைத் தீர்த்துக் கட்டும் நோக்கத்துடன் கொலை வெறித் தாக்குதல் நடத்தப்பட்டது.அவரது உடம்பில் மூன்று துப்பாக்கிக் குண்டுகள் பாய்ந்தன. என்றாலும் அவரது மரணம் நிகழவில்லை.மூன்று குண்டுகளில் இரண்டு நீக்கப் பட்டுவிட்டன; மூன்றாவது குண்டைத் தொட்டால் உயிருக்கு ஆபத்து நேரலாம் என மருத்துவர்கள் சொன்னதால் அப்படியே இருக்கட்டும் என விட்டு விட்டனர். அதற்குப் பிறகு தான் அவரது பெயரைப் ‘படிப்பைப் பாதியில் நிறுத்திய பொறியாளர்’ என்று எழுதி வந்த காவல்துறைக் குறிப்பேடுகள் ‘மக்களைக் கவர்ந்திழுக்கும் தலைவன்; மாவீரன்’ என மாற்றி எழுதிக் கொண்டன என்பர்.
அமைதிக் குழுவும் பேச்சு வார்த்தைகளும்
தொண்ணூறுகளில் சென்னாரெட்டி அறிவித்தது போலவே அவ்வப்போது ஆந்திரத்தை ஆளும் அரசுகள் நக்சலைட்டுகளுடன் பேச்சு வார்த்தை நடத்த முன் வருவதும், நிபந்தனைகள் வைப்பதும் நடந்து கொண்டு தான் இருக்கின்றன. 2001 -ல் முதல் மந்திரியாக இருந்த தெலுங்கு தேசத்தின் சந்திரபாபு நாயுடு அமைதிக் குழுக்களை ஏற்படுத்தலாம் எனவும், பேச்சு வார்த்தை நடத்தலாம் என அறிவித்த போது நக்சலைட்டுகளின் சார்பில் பேச்சு வார்த்தையில் ஈடுபட அனுப்பப்பட்ட இருவரில் கத்தாரும் ஒருவராக இருந்தார். இன்னொருவர் புரட்சிகரக் கவிதைகளின் ஆசிரியரான கவி வரவரராவ். அந்தப் பேச்சு வார்த்தையில் மட்டும் அல்ல 2004 -ல் காங்கிரஸ் அரசாங்கம் திரும்பவும் பேச்சு வார்த்தைக்கு அழைத்த போதும் நக்சலைட்டுகளின் பிரதிநிதியாகக் கலந்து கொண்டமூவர் குழுவில் கத்தாரும் இருந்தார். மூன்றாவதாகச் சேர்க்கப்பட்டவர் நாவலாசிரியர் கல்யாண்ராவ்.
அவரது செயல்பாடுகளைப் பற்றிக் கூற வந்த கல்வியாளரும் சிந்தனையாளருமான பேராசிரியர் காஞ்சா அய்லயா இப்படிச் சொல்லியிருக்கிறார்;
ஆந்திரப் பிரதேச உழைக்கும் மக்களுக்கும் தெலுங்கு மொழியின் இலக்கியப் பிரதிக்கும் தொடர்பை ஏற்படுத்திய முதல் அறிவுஜீவி கத்தார். அந்தத் தொடர்பின் நீட்சி தான் கல்வியாளர்களைத் திரள் மக்களிடம் கொண்டு போய்ச் சேர்க்கும் வேலையையும் செய்தது என்பது மறுக்க முடியாத உண்மை.
.jpg)

கருத்துகள்