அவ்வப்போது மனுஷ்யபுத்திரன்
ஒரு மொழியில் இயங்கும்/ இயங்கிய பெருங்கவிகளின் கவிதைகளைத் தொகுத்து வகைப்பாட்டிற்குள் வைத்துப் பேசுவது எந்தத் திறனாய்வாளருக்கும் எளிதானதல்ல. திறனாய்வாளர்களைத் திணறடிக்கும் மரபுத்தொடர்ச்சியின் தொடக்கம் தமிழ்க் கவிதைப்பரப்பில் ஔவையும் கபிலரும். செவ்வியல் கவிதைக்குப் பின்னர் அற இலக்கிய காலத்தில் திருக்குறளை எழுதிய திருவள்ளுவரைக் காட்ட முடியும். ராமாயணம் எழுதிய கம்பரின் பிறகவிதைப் பனுவல்களையும் ஒருங்கிணைத்துப் பார்க்கும்போது அந்த வரிசையை அவர் நீட்டித்தார்.
பக்திக்கவிதைகளில் அப்படியொரு பெரும் ஆளுமையைக்காட்டுவது எளிதல்ல. ஓரளவு ஆண்டாளின் பாவைப்பாடல்களையும் நாச்சியார் திருமொழியையும் ஒரு சிறிய விலகல் என்று சுட்டலாம். சிற்றிலக்கியப்பரப்பில் அப்படியொரு பெருங்கவியைச் சுட்டிக்காட்டமுடியாது.
இந்த மரபுத்தொடர்ச்சியில் பெரும்பாய்ச்சல் கவி.பாரதி. அவருக்குப் பின் அந்த இடத்தில் நிற்பவராகக் கவி.மனுஷ்யபுத்திரனையே சொல்லமுடியும். புனைகதைகளில் இப்படியான சுட்டிக்காட்டலுக்குப் பலர் இருக்கிறார்கள். ஈழத்தமிழ்க் கவிதைப்பரப்பில் சேரன், ஜெயபாலன், வில்வரத்தினம், கருணாகரன் போன்றோர் அப்படியான பெருங்கவிகளாக அறியப்பட வாய்ப்புண்டு.
தமிழகக் கவிதைப்பரப்பில் அகலமும் ஆழமும் சோதனைகளும் ஒரேபோலான தொனியுமெனப் பாரதியின் நீட்சியை மனுஷ்யபுத்திரனே கொண்டிருக்கிறார். அவரின் மொத்தத் தொகுதிகளையும் எடுத்து ஆய்வு செய்யும் ஒருவர் இயல்பகுப்பிற்கே திணறிப்போவார். அவரது கவிதைகள் சிலவற்றை அவ்வப்போது பேசியிருக்கிறேன். சில குறிப்புகளைப் பார்க்கலாம்:
அன்றாடத்தை முன்வைத்தலின் வகைமாதிரி
கவி.மனுஷ்யபுத்திரன் எழுதும் முகநூல் கவிதைகளை அன்றாடங்களின் வெளிப்பாடு எனச் சொல்லி விடலாம். ஆனால் வழக்கமாக -அதிகமும் எழுதும் நான் -நீ வகைக் கவிதையிலிருந்து வேறுபட்டது இந்தக் கவிதை.
நியூஜிலாந்தை வென்றெடுத்துக் கொண்டாட்டமாக்கிய ஷமியை முன்வைத்து எழுதப்பெற்ற இந்தக் கவிதையைப் போலப் பல அரசியல் கவிதைகளை முன்பும் எழுதியிருக்கிறார் என்றாலும் இதற்குள் இருப்பது இந்தியப் பெரும்பான்மையைக் குற்றவுணர்வுக்குள் தள்ளும் ஆக்ரோஷம். இந்தக் கவிதை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட வேண்டிய கவிதை.
எப்போதும் அவர் எழுதும் தன்னிரக்கக் கவிதைகளை வாசித்துக் கடந்து விடுவேன். ஏனென்றால், தனிநபர் சார்ந்த ஏக்கங்களையும் தன்னை முன்வைத்துக் கொண்டாடத் தூண்டும் தனிமனித இரக்க வெளிப்பாடுகளையும், ஆண் -பெண் உறவு சார்ந்து கிடைக்காத ஒன்றை- கிடைத்துவிடும் வாய்ப்பு இருப்பதாக நம்பித் தேடித்தவிப்பதையும் அதிகம் வாசிக்கத் தருகிறார். அத்தகைய கவிதைகள் இளம்பிராயத்து மனதோடு அலைபவர்களுக்கு ஒரு மருந்தாக - சூயிங்கமாக - குளிர்பானமாகப் பயன்படும். அதனால் அந்தக் கவிதை எனக்கானதல்ல என்று புரிந்துகொண்டதால் கடப்பது எளிதாக இருக்கிறது.
அந்தத்தன்மைக்கு மாறாக அவர் எளிதும் அரசியல் கவிதைகளை அப்படிக் கடப்பது இயலாது. குவிமையத்தைத் திரட்டி வாசகரோடு பேசும் எளிமையான சொற்களால் ஆன அந்தக் கவிதைகள் நிகழ்கால அரசியலைக் கேள்விக்குட்படுத்துபவை. பொதுவாக, அரசியல் கவிதைகள் மீது வைக்கப்படும் குற்றச்சாட்டுகளில் முதன்மையானது அவை அன்றாடங்களை எழுதுகின்றன என்பது. அதனால் அந்த எழுத்தைச் செய்திக்குறிப்பு என்று வகைப்படுத்தலாமே தவிர, கவிதையாக வகைப்படுத்தக் கூடாது என்றும் வாதிடப்படுவதுண்டு. இந்த வாதமும் குற்றச்சாட்டும் விமரிசன மனநிலைக்கு எதிரானவை. இருப்பைக் கேள்விக்குட்படுத்தாது மரபைத் தொடரவேண்டும் என நினைப்பதின் விருப்பங்கள். இந்த எண்ணங்கள் அரசியலுக்கு அப்பாற்பட்டவை இலக்கியங்கள் என்ற பழைய கருத்தியலின் தொடர்ச்சி. இந்திய- இந்துப் பெரும்பான்மையக் குற்றவுணர்வுக்குள் தள்ளும் இந்தக் கவிதை அந்த விமரிசன மரபையும் கடுமையாகக் கேள்விக்குட்படுத்துகிறது; கேலி செய்கிறது.
*******
முகமது ஷமி
அரை இறுதியில்
ஏழு விக்கெட்டுகள் எடுக்கிறான்
ஒரு கேட்சை தவறவிட்டதற்காக
அவன் ஏழு விக்கெட்டுகள்
எடுத்தாக வேண்டும்
தன்னை நிரூபித்தாகவேண்டும்
இல்லாவிட்டால் தண்டனைகள் உண்டு
வரலாற்றுப் பழிகள் உண்டு
வெளியேறுவதற்கான
திறந்த வாயில்கள் உண்டு
வேறு சிலருக்கு அப்படியில்லை
தவறுகளின் சலுகைகள்
அவர்களுக்கு உண்டு
திறமையின்மைகளின் கருணை
அவர்களுக்கு உண்டு
தினம் தினம்
தன்னை நிரூபிக்க வேண்டியிருப்பவர்கள்
அனைவருமே களைப்பாக உணர்கிறார்கள்
தினமும் தங்கள்
அன்பை நிரூபிக்க வேண்டியவர்கள்
காதலை நிரூபிக்க வேண்டியவர்கள்
பொறுப்பை நிரூபிக்க வேண்டியவர்கள்
விசுவாசத்தை நிரூபிக்கவேண்டியவர்கள்
ஆரோக்கியத்தை நிரூபிக்க வேண்டியவர்கள்
தகுதியை நிரூபிக்க வேண்டியவர்கள்
தேசபக்தியை நிரூபிக்கவேண்டியவர்கள்
கற்பை நிரூபிக்க வேண்டியவர்கள்
திறமையை நிரூபிக்க வேண்டியவர்கள்
எல்லோருமே களைப்பாக உணர்கிறார்கள்
அவர்கள் தினம் தினம்
தேர்வுகள் எழுதவேண்டும்
தினம் தினம்
நூறு மதிப்பெண்கள் பெறவேண்டும்
99 மதிப்பெண்கள் கூட
அதிருப்தியுடன்தான் ஏற்கப்படுகின்றன
தினம் தினம்
தன்னை நிரூபிக்கவேண்டிய ஒருவர்
தன்னால்தான் இந்த மழையில்
முழுமையாக நனைய முடியும் என நிரூபிக்க
மழையோடு மழையாக நடந்து செல்கிறார்
நேற்று இரண்டு முறை
நிரூபித்துவிட்டு
இன்று எதையும் நிரூபிக்காமல்
இருக்கட்டுமா என்று கேட்டால்
அதைக் கணக்கில்
வரவு வைத்துக்கொள்ள மாட்டார்கள்
நான் என் பிரியத்தை
தினம் தினம் நிரூபிக்க
இன்று வேறொரு பரிசுகள் விற்கும்
கடைமுன் நின்றுகொண்டிருக்கிறேன்
16.11.2023
நீண்டகாலமாகவே தேர்தல் அரசியலில் வாக்காளர்களை நேரடியாகச் சந்திக்கும் தொண்டர்களின்- முன்களப்பணியாளர்களின் - செயல்பாடுகளே வெற்றி -தோல்வியைத் தீர்மானிக்கும் வாக்குகளைப் பெற்றுத்தரும் நகர்வுகளாக இருக்கின்றன. அதே நேரத்தில் நிகழ்காலத் தேர்தல் நடைமுறைகளில் பல மாற்றங்களும் நடந்து கொண்டிருக்கின்றன. பலவற்றை ரகசியமாகச் செய்துவந்த அரசியல் கட்சிகள் இப்போது வெளிப்படைத்தன்மையைக் கடைப்பிடிக்கின்றன. ரகசியம் பேணுவதும் உரிய நேரத்தில் ரகசியத்தை வெளிப்படச் செய்வதும் நவீனத்துவ நோக்கின் அடையாளம். ஆனால் பின் நவீனத்துவச் சூழல் ரகசியங்களைத் துறக்கத் தூண்டும் விளைவுகளைக் கொண்டது. அந்த விளைவுகளை உள்வாங்கியே எல்லாவற்றையும் அரசியல் தலைமை தீர்மானிக்கிறது என்ற கருத்துநிலையைக் கைவிட்டுவிட்டுக் கூட்டுத் தலைமையும் கூட்டு அறிவுமே எல்லாவற்றையும் தீர்மானிக்கின்றன என்பதை வெளிப்படையாகச் சொல்லத் தொடங்கியிருக்கின்றன. சொந்தக் கட்சியின் அறிவுத்தொகுதியைத் தாண்டித் தேர்தல் வெற்றிக்காக நவீனக் கல்வி அறிவும் திறன்களும் கொண்ட முகவாண்மைகளைப் பயன்படுத்துவதைக் கூடத் தேர்தல் உத்திகளில் ஒன்றாகக் காட்டுவதை வாக்களிக்கும் வெகுமக்கள் விரும்புவார்கள் என அரசியல் கட்சிகள் நம்புகின்றன. இந்தியத்தேர்தலில் இதனை வெற்றிகரமாகப் பயன்படுத்திய கட்சி ஆட்சியில் இருக்கிறது.
உலக அளவில் இரண்டு உலகப்போர்களைப் பற்றிய பதிவுகள் நடப்பியல் இலக்கியங்களாகவும் அபத்தங்களின் வெளிப்பாடுகளாகவும் அச்சத்தின் மிகையுணர்வுகளாகவும், வன்முறையின் குரூரங்களாகவும் எழுதப்பட்டது போல கரோனா காலத்துப் பதிவுகள் இப்போது எழுதப்படுகின்றன. தாதுவருசத்துப் பஞ்சம் பற்றிய கதைத்தொன்மங்களைப் போல சில காலம் கழித்துக் கரோனா காலத்துக் கதைகளும் தொன்மங்களும் அடுத்த தலைமுறைக்கு வாசிக்கக் கிடைக்கக்கூடும். நம் காலத்து இலக்கிய வடிவங்களான நாடகங்கள், கதைகள், கவிதைகள் என்பன அதனதன் இயல்புக்கேற்ப கரோனாவைப் பேசுபொருளாக – பாடுபொருளாக- உரிப்பொருளாக ஆக்கித் தரக்கூடும்.
கரோனாவும் கரோனாவின் நிமித்தங்களும்
2020, மார்ச் தொடங்கி உலகத்தின் உரிப்பொருளாக மாறியிருக்கிறது கரோனா. போர்களைப் போலவே- பஞ்சங்களைப் போலவே- பேரலைச் சுழற்சிகளைப் போலவே இந்தப் பெருநோயும் மனிதர்களை அச்சத்தில் ஆழ்த்து அடங்கியிருக்க வைத்திருக்கிறது. அச்சத்தின் விளைவுகளால் உண்டாவதைத் துன்பியலாகப் பேசுகிறது உலக இலக்கியவியலான அரிஸ்டாடிலின் கவிதையியல். தமிழின் கவிதையியல் துயரங்களைக் கொண்டுவந்து சேர்க்கும் உரிப்பொருளைப் பிரிவும் பிரிவின் நிமித்தங்களும் என்கிறது. பிரிவு மட்டுமல்லாமல், இருத்தல், இரங்கல் போன்ற அக உரிப்பொருள்களும் கூடத் துன்பியலின் சாயல்கள்தான்.
கோவிட் 19 அல்லது கரோனா என்னும் சொல்லின் நேரடிப் பொருண்மை நோய்மை. நோய்மை எதுவாயினும் மருந்துகளால் தீர்த்துவிட முடியும் என இறுமாப்பு கொண்டிருந்த நவீன மருத்துவம் கையறுநிலையில் கைகளைப் பிசைந்து கொண்டிருக்கிறது. மருத்துவ அறிவின் போதாமையால் அரசு நிர்வாகம் தனித்திரு; அடங்கியிரு எனப் போதிக்கிறது மருத்துவ உலகமும். தனித்திருப்புகளையும் தாண்டித் தினசரி மரணங்களைப் புள்ளிவிவரங்களாக வாசிக்க நேர்ந்த உலக அரசுகளும் அதிகாரத்துவ அமைப்புகளும் அதில் இயங்கும் பொதுமனிதர்களும், நோய்கண்ட தனிமனிதர்களும் வாழ்க்கையின் நிலையாமை (காஞ்சி)யையும் அதன் நிமித்தங்களையும் கண்கூடாகக் கண்டு திணறிக்கொண்டிருக்கின்றனர். இந்த நிலையைத் தமிழின் நிகழ்காலப் பெருங்கவி மனுஷ்யபுத்திரனும் [நிலவெளி /செப்டம்பர், 2020 / 27-31], புனைகதைகளில் தனக்கென ஒரு சொல்முறையைக் கொண்டிருக்கும் வா.மு.கோமுவும் [யாவரும்.காம், செப்டம்பர் 6 கவிதைகள்] கவிதைகளாக எழுதிக்காட்டியுள்ளனர்.
மனுஷ்யபுத்திரனும் வா.மு.கோமுவும் எழுதியிருக்கும் உரிப்பொருள் ( Content) அல்லது கவிதைப் பொருண்மைகள் கரோனோ என்ற ஒன்றுதான். ஆனால் வெளிப்பட்டுள்ள விதமும் உண்டாக்கும் உணர்வுகளும் எதிரெதிராக இருக்கின்றன. கரோனா நோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் தங்கியிருந்து திரும்பிய மனுஷ்யபுத்திரன் கரோனாவை தன்னுணர்வின் வெளிப்பாடாக - அகக்கவிதைக்கான உரிப்பொருளோடும், அகப்புறமான கையறுநிலையின் நிமித்தங்களாகவும் மாற்றித்தந்துள்ளார். அந்த அனுபவம் நேரடி அனுபவமாகாத நிலையில் வா.மு.கோமு. புறக்கவிதையின் உணர்வுகளாக வெளிப்படுத்தியுள்ளார். நீண்ட அடுக்குகளையும் , கதையின் ஒரு நிகழ்வை விவரித்துக்க்காட்டிவிட்டு கவிதை எழுப்ப நினைத்த விவாதத்தை அல்லது கட த்த நினைத்த உணர்வுகளை முன்வைக்கும் தன்மை கொண்ட கவிதைகளை அதிகம் எழுதும் மனுஷ்யபுத்திரனின் நீண்ட கவிதையை வாசித்துப் பார்க்கலாம். அக்கவிதையின் தலைப்பு: சிதைவு
எனது நண்பரான மருத்துவர்
நேற்றிரவு லேசான
மனச்சிதைவுக்கு ஆட்பட்டார்
கொரோனா வார்டில்
நீண்ட பணியிலிருந்த அவர்
பணி முடிந்து அறைக்கு சென்று
தன் கவச ஆடையை கழற்ற முடியாமல்
ஒரு மணிநேரம் போராடிய பிறகு
“இந்தச் சனியன் என் தோலோடு
ஒட்டி கொண்டது” என்று கத்தினார்
பிறகு அவருக்கு
தூக்க மாத்திரைகள் அளித்து
தூங்க வைத்தனர்.
ஹோம் கோரண்டன்
வீட்டில் தனிமைப்படுத்தப்பட்ட
கொரோனா நோயாளி
தன் வீடென
தன் வீட்டில் எதையும் உணர்வதில்லை
கையுறை அணிந்த கைகளால்
தயங்கித் தயங்கி தொடுகிறான்
கதவுகளையும் குழாய் திருகுகளையும்
தனித்த கொடியில் காயும்
தன் உடுப்புகளில்
சொட்டும் ஈரத்தை
உற்றுப் பார்க்கிறான்
தனது அறையின் இருக்கையைத் தவிர
எந்த இருக்கையிலும்
அவன் மறந்தும் அமர்வதில்லை
யாருமில்லாத போது
வீட்டின் வரவேற்பறையின்
எதையும் தொட்டுவிடாமல் நடந்து
முகக்கவசத்தை சற்றே இறக்கிவிட்டு
ஆழமாக மூச்சு விடுகிறான்
நாளெல்லாம் ஒரு வார்த்தை
பேசாமலிருந்து வலிக்கும் தாடைகளைத்
திறந்து மூடுகிறான்.
கருணையுடன் எப்போதாவது
யாராவது பேச்சுக்கொடுக்கிறார்கள்
அவனுக்குச் சொல்ல
எந்த மறுமொழியும் இல்லை
தொலைபேசி உரையாடலில் எதுவும்
அரை நிமிடத்திற்கு மேல் நீடிப்பதில்லை
தன் அவலமான நிர்வாணத்தை
பிறர் காண்பது
அவனுக்கு மிகவும் கூச்சமாக இருந்தது
பிரத்யேக இடங்களில்
அவனது பிரத்யேக சாப்பாட்டுத் தட்டுகளும்
கரண்டிகளும் அமைதியாகத் தூங்குகின்றன
பிறிதொரு அறையில் கேட்கும்
சிரிப்பொலிகளை
உற்றுக் கேட்கிறான்.
குழந்தைகளின் முகங்களை
நினைத்துக் கொள்கிறான்
தன்னை எதிர்கொள்ள நேர்பவர்கள்
தன்னிடமிருந்து அவசரமாக
விலகுவதன் பதட்டத்தை
அவனால் புரிந்து கொள்ள முடிகிறது
அவர்களுக்காக
உண்மையில் அவன் வருந்தவே செய்கிறான்
தனது கழிவறையை
கிருமிநாசினிகளால்
திரும்பத் திரும்ப
கழுவிக் கொண்டேயிருக்கிறான்
பல நாட்கள்
மாற்றப்படாத தன் படுக்கை விரிப்பின்
சிதறிய உணவுத் துணுக்குகளைத் தட்டுகிறான்
விளக்கணைத்ததும்
அமைதியின் இருள் கவிகிறது
வாழ்க்கையில்
எப்போதோ இட்டகடைசி முத்தங்கள்
மனதை கனக்கச் செய்கின்றன
தலை வலிக்க தொடங்குகிறது
நெற்றிப் பொட்டை யாராவது
சற்று அழுத்துவிட்டால் நன்றாக இருக்குமென
ஒரு கணம் நினைக்கிறான்
கழிவிரக்கத்துடன்அந்த எண்ணத்தை
விலக்குகிறான்
கொரானோ நோயாளி
தன் வீட்டில் வேண்டாத விருந்தாளியாய்
தன்னை உணர்கிறான்
தான் ஒரு அபாயகரமான விலங்காக மாறிவிட்டது
அவனை மனமுடையச் செய்கிறது
மறுபடி தான் மனிதனாவதற்கு
இன்னும் எத்தனை நாட்கள்
என எண்ணியபடி
உறங்கிப் போகிறான்
இதெல்லாம் முடிந்த பிறகு
எல்லோரிடமும்
மன்னிப்பு கேட்டுக் கொள்ள வேண்டுமென
கண்கள் பனிக்க
பாதித் தூக்கத்தில் நினைத்துக் கொள்கிறான்
மேலும் தன் வீட்டைவிட்டு
சீக்கிரமே
நீண்ட தொலைவு சென்றுவிட வேண்டுமெனவும்
கோவிட்19 உண்டாக்கியுள்ள இயலாமையும் பிரிவுணர்வுகளும் கொப்பளிக்கும் இந்தக் கவிதை நோயாளியின் இருப்பை மருத்துவருக்கும் மருத்துவரின் மனநிலையை நோய்மையின் மனநிலையாகவும் மாற்றிமாற்றிக் கடத்திக்கொண்டே இருக்கிறது. இதே போலவே அவரது மீதியுள்ள கவிதைகளும் இயலாமையையும் கையறுநிலையையும் விவரித்துவிட்டுத் தவிக்கும் ஒரு நோய்மைத்தன்னிலையை வாசிப்பவரின் முன்னால் கொண்டு வந்து நிறுத்துகின்றன. கொரோனா வார்டில் மருத்துவர்கள் என்ற கவிதையில் விவரிப்புக்குப் பின் எழும் இழந்து நிற்கும் நம்பிக்கையின்மையின் தொடர்ச்சியாகத் துளிர்க்கும் ஓர் ஆறுதலை - நம்பிக்கையை
“ இங்கு யாருக்கும் யாருமே இல்லை
உதவிக்கு தயங்காமல் கூப்பிடுங்கள்
தாமதமானாலும் நிச்சயம் வருவேன்”
என் வாழ்நாள் முழுக்க
நான் நம்புவதும் காத்திருப்பதும்
இந்த இரண்டு வாக்கியங்களினூடேதான்.
என்று முத்தாய்ப்பாக வைக்கிறது. இந்தக் கொள்ளை நோய்க்காலம் ஒருவிதப் பொய்யான நம்பிக்கைகளை மட்டுமே விட்டுச் செல்கிறது என்பதைச் சொல்லி எச்சரிக்க நினைக்கும் மனுஷ்யபுத்திரனின் கவிதை வரிகளில் ஆகக்கூடிய எரிச்சலும் ஆயாசமும் வெளிப்படுவதைப் பின்வரும் வரிகளில் வாசிக்கலாம்:
ஒரு பிரமாண்டமான
ஓவியக் கண்காட்சி முன் நின்று
கொரோனா இன்றோடு ஒழிந்தது என
உலகத்திற்கு அறிவிக்கலாம். (கொள்ளைநோய்க்கால ஓவியங்கள்)
நான் மற்றவரிடம் எதிர்பார்ப்பது
ஒரு புன்னகையை
வேண்டுமானால்
பாதி புன்னகையாக
அதை குறைத்துக் கொள்கிறேன் (புதிய இயல்புக்காலம்)
ஆட்டோகாரன்
காலையில் முதல் சவாரிக்கு
ஆட்டோவை கிளப்புவது போல
சற்று பிரயத்தனப்பட வேண்டியிருக்கிறது (மறுபடி துவங்குதல் )
வீட்டில்
ஒரு அறையிலிருந்து
இன்னொரு அறைக்குப்போக
இ-பாஸ் இல்லையேயென
தூக்கக் கலக்கத்தில் குழம்பி
திடுக்கிட்டு விழித்துக் கொண்டேன் ( இ- பாஸ்)
பொய்மையான நம்பிக்கையின் சாயல்களை ஒவ்வொரு நிகழ்விலும் ஒவ்வொரு மனிதரிட த்திலும் உருவாக்கியிருக்கும் இந்தக் காலத்தின் மீது ஆக வெறுப்புடன் கூடிய கேள்வியாக இந்த ஏழு கவிதைகளில் முதல் கவிதை எழுதப்பெற்றிருக்கிறதை வாசிக்கலாம்:
யாருக்கும் சொல்ல எதுவும் இல்லை
ஒன்று சாவைப்பற்றிப் பேசுகிறார்கள்
அல்லது எப்படி சாகாமல் இருப்பது
என்பதைப்பற்றி பேசுகிறார்கள்
வாழ்வைப்பற்றி
ஒரு சொல் கேட்டு
எவ்வளவு காலமாகிவிட்டது (வாழ்வைப் பற்றிய சொல்)
தன்னிலையின் துயரமாகவும் நகர்வின்மையின் தவிப்பாகவும் இயங்காத உலகத்தின் சக்கரங்களாகவும் சுற்றி நிகழ்வனவற்றை விவரித்துக் காட்டும் மனுஷ்யபுத்திரனின் கவிதைகளுக்கு மாறாக வா.மு.கோமுவின் கவிதை வரிகள் வாசிப்பவர்களைச் சூழலைக் கவனிக்கும்படி கோருகின்றன. நிகழ்வைக் கட்டமைக்கும் நபர்களையும் அமைவுகளையும் எள்ளலுடன் விசாரிக்கின்றன. செய்வது அபத்தம் என்ற போதிலும் மனிதர்கள் நம்பிக்கையை வெளிப்படுத்துவதைத் தவிர வேறு வழியில்லாமல் செய்துகொண்டிருக்கிறார்கள் என்கின்றன. அத்தோடு இதுவரையிலும் நம்பிக்கையூட்டிய கடவுள்களும் அதிகாரமும் எச்சரிக்கைகளும் அர்த்தமற்றனவாக மாறிவிட்டன என்பதையும் அந்தக் கவிதைகளில் நாம் வாசிக்கலாம்.
தொடர்ச்சியாக வா.மு. கோமுவின் கதைகளை வாசித்தவர்களுக்கு அதன் பொது அமைப்பு ஒன்று பிடிபட்டிருக்க க்கூடும். விட்டேத்தியான விவரிப்பும் அடுக்குகளுமாக நகர்ந்து கதையின் முடிவில் வாழ்க்கையின் விடை தெரியாத – தெரிந்தாலும் சொல்லமுடியாத ஒன்றைக் காட்டிவிட்டு முடிந்துபோய்விடும். அதே தன்மையை இந்தக் கவிதைகளிலும் கூடக் காணமுடிகிறது. முதலில் ஒரு நீண்ட கவிதை. தலைப்பு:
உலகத்தின் அழகெல்லாம் ஒருங்கே பெற்றவள்
அந்தப் பெண்ணை சாலையில்
நான் பார்த்த போது மனதினுள்
எதுவோ அப்போது பூத்துவிட்டது!
இத்தனைக்கும் அந்தப்பெண்ணை
பின்புறமாகத்தான் நான் பார்த்தேன்.
உலகத்தின் அழகெல்லாம் ஒருசேர
அமையப்பெற்றவளாக இருக்கலாம்!
இருப்பது ஒரு வாழ்க்கை!
அதை இப்போது மகிழ்ச்சிப்படுத்த
அந்தப் பெண்ணைப் பின் தொடர்ந்தேன்.
நீலவர்ண சுடிதார் அவள் உடலுக்கு
ஏற்றதாக அமையப்பெற்றிருந்தது.
மிக உயர்ரக மிதியடி அணிந்திருந்தாள்.
அவளின் நடை ஒரு நாட்டியத்திற்கு
ஒப்பானதாக இருந்தது!
சாலையில் செல்வோர் அவரவர்
பாடுகளோடு சென்றார்கள்!
அவளின் எதிர்க்கே கோமாதா ஒன்று
சாலையில் வந்து கொண்டிருந்தது!
எனக்கோ சாலையில் வரும் அது
உலகத்தின் அழகையெல்லாம் ஒருசேர
பெற்றிருக்கும் அவளை முட்டி விட்டால்?
குடல் சரிந்து சாலை ஏக களேபாரமாகிடும்!
நான் நடையை விரைவு படுத்தினேன்.
நான் நல்ல மாடுபிடிக்காரனுமல்ல தான்.
கோமாதா அசைபோட்டபடி திடீரென நின்று
வாலை உயர்த்தி சிறுநீரை வெளியேற்றிற்று!
உலகத்தின் அழகெல்லாம் ஒருங்கே பெற்றவள்
வேகமாய் மாட்டைக் கடந்து
மாஸ்க்கை இறக்கிவிட்டு தன் உள்ளங் கைகளால்
சிறுநீரைப் பிடித்துக் குடித்தாள்! தலைக்கும் தீர்த்தம்
போல போட்டுக் கொண்டாள்!
பிறகு எனக்கு யாரோ தண்ணீரை முகத்திலடித்து
எழுப்பினார்கள்! யாரெனப் பார்த்தேன்!
உலகத்தின் அழகெல்லாம் ஒருங்கே பெற்றவள்!
கரோனா என்னும் உரிப்பொருளைக் கவிதையாக்காமல் அதன் நிமித்தங்களைத் தன்னிலைக்கு வெளியே வைத்து மற்றமைகளின் அனுபவமாகவோ, எண்ணங்களாகவோ எழுதுவதன் மூலம் இக்கவிதைகளுக்கு ஓர் புறநிலை நடப்பின் (Objective reality)சாயல்களை உருவாக்கியிருக்கிறார். குறிப்பாக நகை என்னும் மெய்ப்பாட்டின் உட்கிளைகளான எள்ளல், பேதமை, மடமை போன்ற உணர்வுகளை உருவாக்கும் விதமான காட்சிகளை முன்வைக்கின்றன அவரது கவிதைகள். விவரித்துப் பொருள் சொல்லத் தேவையில்லாத அவரது கவிதைகளை இடையீடின்றி ஒவ்வொருவரும் வாசித்துப் பார்க்கலாம்.
அவரின் மரணம்
செய்திச் சேனலில் உங்களின்
மரணத்தைப் பற்றி தகவல் சொன்னார்கள்!
திடுக்கிட்டு அம்மாவை அழைத்து
அவர் போய்ச் சேர்ந்து விட்டாரம்மா! என்றேன்.
அவர் யாரென அம்மாவுக்கு தெரியவில்லை.
எனக்கும் தெரியவில்லை!
திடுக்கிடலில் நான் எல்லாவற்றையும்
மறந்திருந்தேன்!
சரி நீங்கள் யாரோவாகவேனும் இருங்கள்!
மருத்துவமனையில் நீங்கள்
மிகவும் துன்பப்பட்டிருக்கலாம்.
மூச்சு வாங்க சிரமப்பட்டிருக்கலாம்.
மருத்துவர் உங்களுக்கு சுவாசக்கருவி
பொருத்தியிருந்திருக்கலாம்!
அவ்வப்போது கபசுர குடிநீர் அருந்தி
இரண்டு முட்டைகளும், கீரை சூப்பும்
குடித்திருக்கலாம்! சிலசமயம் இருமியிருக்கலாம்.
வயிற்றுப்போக்கும் இருந்திருக்கலாம்.
நீங்கள் மிகவும் பயந்து கடவுளரைப்
பார்ப்பது போன்று மருத்துவரை நோக்கி
மனதில் இறைஞ்சியிருக்கலாம்.
இந்தமுறை எப்படியேனும் பிழைத்து
வீடு சென்று விட்டால் உங்களது தீய
பழக்கவழக்கங்களை விட்டு விட்டு
புதுமனிதனாக வாழவேண்டுமென
சபதம் கூட எடுத்திருக்கலாம்.
படுக்கையில் மரண பயத்துடன்
படுத்திருக்கையில் தான் வாழ வேண்டுமென
ஆசையும் வருவதாய் எண்ணி அழுதிருக்கலாம்!
உங்களையறியாமல் நீங்கள் இறந்திருக்கிறீர்கள்.
அவ்வளவு தான்!
அதிசய விலங்கு
நெட் ஃப்ளிக்ஸில் புதிய திரைப்படங்கள்
வெளியாகத் துவங்கி விட்டன!
பேருந்துகளில் ஜன்னலோர சிறுமிகள்
கையசைத்துப் போகிறார்கள்!
கோவில்களிலிருந்து பக்தர்கள்
திருநீரு பூசிய நெற்றியுடன்
புன்னகைத்தபடி வெளிவருகிறார்கள்!
பெளர்ணமி பூஜையில் எல்லா
ராசிக்காரர்களுக்காகவும் யாகம்
நடத்துகிறார் பூசாரி!
கபசுரகுடிநீரென்று குடிவிரும்பிகள்
பாரில் அமர்ந்து குடித்து மகிழ்கிறார்கள்.
நான் மட்டும் புதிதாய் இப்போது தான்
வாங்கிய மாஸ்க், கையுறை, கண்ணாடி அணிந்து
ஸ்கூட்டரில் கிளம்பிச் சென்றேன்.
அதிசய விலங்கு செல்வதாய் ஆச்சரியமாய்
எல்லோரும் பார்த்து கையசைக்கிறார்கள்!
கோமாளியை பார்த்தது போன்று
சில பெண்கள் சிரித்தும் சென்றார்கள்!
பாதாள உலகம்
பாதாள உலகத்தை பேருந்து ஓட்டம்
துவங்கியதால் ஒருமுறை
பார்த்து வர பிரயாணித்தேன்.
எல்லையிலேயே பேருந்தை நிறுத்தி
’இறங்கிக் கொள்ளுங்கள்! உள்ளே
பேருந்து போகாது!’ என்றார் நடத்துனர்.
என்னோடு சேர்த்து பதினாறு பேரும்
இறங்கிக் கொண்டோம்!
பாதாளலோகம்
இருள் நிரம்பியது என்றென்றைக்குமே!
சுங்கச்சாவடி சோதனைக்குப் பிறகு
பாதாள லோகத்தினுள் சென்றோம் நாங்கள்.
முகப்பிலேயே நிலத்தினை குடைந்து
குழிகளாக்கி வைத்திருந்தார்கள்.
பாதாள உலகத்தினர்
சங்க காலத்தில் பாத்ரூம்
வசதியுடன் வாழ்ந்தார்கள் என்பதை
நிருபணம் செய்யும் ஆதாரங்களாம் குழிகள்!
பதினைந்து நபர்களும் பத்திரமாய்
பார்த்துக் கால்வைத்து இறங்க ஒருவன்
மட்டும் பழங்கால எலும்புக்கூடொன்றின்
மீது தவறி விழுந்தான்!
அவன் பிறகு எழவேயில்லை.
நான் என் தந்தையாரைத் தேடிப் பயணித்தேன்.
தந்தையாரை வீடியோ காலில் அழைத்தேன்.
அது அணைத்து வைக்கப்பட்டிருந்தது.
சற்று தூரத்தே ஒரு எலும்பு மனிதன் தன்
கைப்பேசி வெளிச்சத்தில் தன் முகத்திற்கு
அவசரமாய் மாஸ்க் அணிந்து கொண்டு
எங்களை எதிர்கொள்ள தயாரானான்.
கடவுள்
என் கடவுளைப் பார்த்து வர
சூடம் ஊதுபத்தி தீப்பெட்டியோடு
சென்றிருந்தேன்!
யாரோ என் கடவுளுக்கு
முகக்கவசத்தை அணிவித்து
போயிருக்கிறார்கள்!
மூச்சு வாங்க சிரம்மாய் இருப்பதாய்
என் கடவுள் குரல் கேட்டது சுவரெங்கிலும்!
’இதோ’ வென முயற்சித்தேன்.
உருவாஞ் சுருக்கிட்டிருந்தால் எளிதாக
பணியை முடித்திருப்பேன்.
ஏகப்பட்ட முடிச்சுகளோடு இருந்ததால்
முடிச்சவிழ்க்க முடியாமல் திணறினேன்.
‘என் கையில் வீணே இருக்கும் கத்தியை
எடுத்தேனும் முயற்சியேன்’ அசரீரி தான்.
கடவுளின் கையிலிருந்த கத்தியை உருவி
மாஸ்க் முடிச்சை அவிழ்த்தேன்!
புஸ்ஸென்று புகை மண்டலமாயிற்று
அந்த இடம்!
எல்லாம் சரியாகி கண்திறந்த போது
கையில் கத்தி பிடித்தபடி நான்
அவர் மேடையில் அமர்ந்திருந்தேன்.
கடவுள் இடத்தை காலி செய்திருந்தார்.
வியாபாரி
நீ ஏன் நாட்டு நாய்க்குட்டிகளை
ராஜபாளையம் சென்று வாங்கி வந்து
வீணாய்க்கிடக்கும் உன்
கோழிப்பண்ணைக்குள் விட்டு
வளர்க்கக் கூடாது? மக்கள்
பண்ணைக்கு தேடி வந்து
வாங்கிச் செல்வார்கள்! நாய் ஒன்றுக்கு
நூறிலிருந்து இருநூறுவரை லாபம்
வைத்து விற்றால் உனக்கு சந்தோசம்
தானே! என்றான் நண்பன்.
அல்லது தஞ்சாவூர் சென்று
ஒரு லோடு பொம்மைகளை
ஏற்றி வந்து உன் கோழிப்பண்ணைக்குள்
இருப்பு வைத்து ஊர் ஊராய்
ஆட்டோவில் போட்டுச் சென்று
பதிவு செய்யப்பட்ட சின்னக் கொடை
ரேடியோவில் விளம்பரம் செய்து
வியாபாரியாக ஏன் மாறக்கூடாது?
‘அண்ணே வாங்க! அக்கா வாங்க!
உங்க கொழந்தைகள் இந்த கொரனா
காலத்தில் மகிழ்ச்சியாக வீட்டில்
விளையாட தஞ்சை பொம்மைகள்!
கொறஞ்ச வெலையில விற்பனை செய்யுறோம்!
வாங்க! வாங்கக்கா!’ நாலு பொம்மைகள்
வெறும் நூறே ரூவா தான்!’
‘ஈபாஸ் எடுத்தாவது
பெங்களூர் கூட்டிச் சென்று
உன் ஒரு விரையை விற்று
காசாக்கி வந்து தொழிலை துவங்கி
விடுகிறேன்’ என்றேன்.
கொரனா காலமோ
வேறு என்ன காலமாகவோ
இருந்தாலும் அறிவுரைகளுக்கு
பஞ்சமே இருக்காது தான் போல!
சமகாலப் பொருளியல் வாழ்க்கையும் உளவியல் சிக்கல்களும் உருவாக்கும் நெருக்கடிகள் வெவ்வேறு விதமான வாழ்க்கைச் சூழலில் வெவ்வேறு விதமான தவிப்புகளை உருவாக்கக் கூடியன. குடும்ப அமைப்பு தொடங்கி, வாழிடம், பணியிட நெருக்கடிகள் போன்றன உச்சரிக்கப்படும் சொற்களை – எழுதப்படும் பனுவல்களை ஒவ்வொருவிதமாக அர்த்தப்படுத்த த்தூண்டுவன. ஆனால் கரோனா என்னும் உலகு தழுவிய சொல் ஒவ்வொரு மொழியிலும் ஒரே அர்த்தப்பாட்டைக் கொண்டதாகவே இருக்கிறது. உண்மையில் கரோனா என்னும் இந்தச் சொல் உலகமயத்தின் கண்டெடுப்பு. அதனை உரிப்பொருளாக்கி எழுதப்படும் பனுவல்கள் எந்த மொழியில் இருந்தாலும் எழுதப்பட்டாலும் அவை உலக இலக்கியத்தின் பகுதியாக மாறிக்கொள்ளும் தகுதியை எளிதாக ஆக்கியிருக்கிறது. கரோனாவும் கரோனாவின் நிமித்தங்களும் உலக இலக்கியத்தின் பகுதியாக மாறும் வாய்ப்பில் இந்தக் கவிதைகளும் – வா.மு.கோமுவும் மனுஷ்யபுத்திரனும் – உலகக் கவிதையின் பகுதியாக மாறிக்கொள்கிறார்கள்
=====================================================
நன்றி: நடுகல் / 9/ அக்டோபர் 2020
‘பாய் பெஸ்டி’களின் கதை
உருளும் நிகழ்வுகளால் அல்லது சுழலும் சொற்களால் அலைகிறது நமது காலம். சுழலும் சொற்களை அல்லது உருளும் நிகழ்வுகளை உற்பத்தி செய்வதில் அனைத்து வகையான ஊடகங்களும் போட்டியில் இருக்கின்றன. எப்போதும் பெரும் நிகழ்வுகளைத் திறப்புச் செய்திகளாக (Breaking News) உருட்டிவிடும் தொலைக்காட்சி ஊடகங்களுக்குப் போட்டியாக சிறு நிகழ்வுகளை உண்டாக்கி உருட்டி விடும் வேலையைச் சமூக ஊடகங்கள் செய்கின்றன. ஒருவிதத்தில் பெரும்போக்குக் கதையாடல்(Grand Narration)களுக்குப் போட்டியாகச் சிறுபோக்குக் கதையாடல்(Little Narration)களை உற்பத்தி செய்யும் இப்பாவனைகள் பின் நவீனத்துவ விளையாட்டுகளில் ஒன்று. இவ்வகை விளையாட்டுகள் இருவேறு இணைகோடுகளில் பயணிப்பவை அல்ல. இரண்டும் கொண்டும் கொடுத்தும் அழிந்தும் அழித்தும் நகர்பவை.
பின் நவீனத்துவ காலத்தை – அதனோடு இணைந்து பயணிக்கும் மனித உயிரிகளின் மனநிலையை- விளக்கியவர்கள் இவ்வகை விளையாட்டுகளைப் பாவனை விளையாட்டுகள் என்கிறார்கள். பாவனை விளையாட்டுகளுக்கான கருவிகளாக இருப்பவை சொற்கள் மற்றும் பிம்பங்கள். சொற்களும் பிம்பங்களும் நேரடியாகத் தரும் அர்த்தங்களைத் தாண்டிக் குறியீட்டு அர்த்தங்கள் வழியாக விதம் விதமான அலைவுகளை உருவாக்கிக் களிப்பூட்டலாம் அல்லது குற்றவுணர்வுக்குள்ளாக்கலாம். ஓடிப்பிடித்து விளையாடும் களிப்புக்கும், கள்ளன் -போலீஸ் விளையாட்டின் ரகசியங்களுக்கும் இருக்கிற வேறுபாடுகள் போல விதம்விதமான மனச் சாய்வுகளை - சிக்கல்களை -சிதைவுகளை- கொந்தளிப்புகளை- நிதானங்களை அவை உருவாக்கித் தரக்கூடும்.
சொற்களும் பிம்பங்களும் அவை வெளிப்படும் ஊடகங்களுக்கேற்பச் செய்தி, விவாதம், கலைப் பொருள், இலக்கியம் எனப் பெயர் தாங்கி வெளிப்படுகின்றன. ஒரு ஊடகத்தின் வெளிப்பாட்டு வடிவத்தை இன்னொரு ஊடகம் தனதாக்கி, அதன் முதன்மை அடையாளத்தை அழித்து இன்னொன்றாக்கி விளையாடும் விளையாட்டும் நமது காலத்தின் – பின் நவீனத்துவ – விளையாட்டுகளே. ஆணும் பெண்ணும் தனித்திருத்தலையும் பரிமாறிக்கொள்ளுதலையும் குறிப்பிடுவதற்கு வெளிப்படையான அல்லது மரபான சமூகம் பயன்படுத்திவந்த சொற்களின் போதாமையின் காரணமாக உருவான ஒரு சொல் நல்லான்/ள்(Bestie). அந்த சொல்லின் பயன்பாடு புதிது என்பதாலேயே அந்த உறவே புதிது எனக் கொள்ளவேண்டியதில்லை. இவ்வகை உறவுகளை அங்கீகரித்து வெளிப்படையாகப் பேசும் சமூகமாக – காலகட்டமாக இப்போதைய சமூகம் மாறியிருக்கிறது என்பதானாலே அந்தச் சொல்லும் அதன் நேரடி அர்த்தமும், குறியீட்டு அர்த்தமும் விவாதப்பொருளாக மாறியிருக்கின்றன.
இந்தப் பின்னணியில் தான் மனுஷ்யபுத்திரன் எழுதிய’பாய் பெஸ்டி’களின் கதை என்ற நீண்ட கவிதை, கவனிக்கத்தக்க ஒன்றாக – உருளும் செய்தியாகவும் பிம்பங்களாகவும் அலையத் தொடங்கியது. அதனை வெளிப்படையாக ஏற்று விவாதிக்கும் மனநிலை கொண்டவர்களாலும் மறுத்து நிராகரிக்கும் மரபுப் பார்வையாளர்களாலும் பந்தாக மாறியிருக்கிறது. ஒரே பந்தாக அல்ல. ஆடப்படும் விளையாட்டுகளின் பந்தாக. கால்பந்தாட்ட மைதானத்து உதைபந்து போலவும், கைப்பந்து விளையாட்டுக்கார்களிடம் அடிவாங்கும் பந்தாகவும், கூடைக்குள் திணிக்கப்படும் பந்தாகவும் பாவிக்கப்பட்டு அலைந்து கொண்டிருக்கிறது.
‘பாய்பெஸ்டி’யை உருவாக்கி உருட்டிவிட்ட மனுஷ்யபுத்திரன் தான் கவிஞர் என்பதால், அதைக் கவிதை எனப் பெயரிட்டுத் தள்ளிவிட்டார். அதனைப் பலரும் ஏற்று விளையாண்டு கொண்டிருக்கிறார்கள். கவிதையின் இயல்பியல், கவிதையின் வேதியியல் தெரிந்ததாக நம்பும் சிலரோ அதை நிராகரிக்கப் பார்க்கிறார்கள். ஆனால் கவிதையைக் கவிதையெனச் சொல்ல ஒரு இயல் இருக்கிறது. அதன் விதிகளைப் பொருத்திப் பார்த்துக் கவிதை இல்லையென மறுத்திருக்கலாம். அப்படியொரு முயற்சியைக் கைவிட்டுவிட்டு உருட்டியவரின் ஆட்டத்திறன், உடல் திறன் போன்றவற்றை முன்வைத்து விவாதிக்கிறார்கள்.
கவிதையை கவிதையென அடையாளம் காட்டும் கவிதையியல் முதன்மையாகச் சொல்வோர் – கேட்போரிடையே நிகழும் உரையாடலாக அல்லது நிகழ்வாகக் கவிதையை வரையறை செய்கிறது. சொல்வோர், கேட்போர், நிகழ்வு இம்மூன்றும் உருவாக்கப்படும் நிலையில் கவிதை முழுமை அடைவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. உலக அளவில் கவிதைக்கான விமரிசனங்கள் இதனையே வலியுத்துகின்றன. தமிழின் தொடக்கக் கவிதையியலான தொல்காப்பிய இலக்கியவியல் விரிவாகப் பலவற்றைப் பேசினாலும் சாரமாக வலியுறுத்துவது
2. பாடலுக்கான நிலவியல் அடையாளங்களைத் தரும் முதல் மற்றும் கருப்பொருள்
3. இவ்விரண்டையும் ஏற்று வினையாற்றும் மாந்தர்கள்
என்ற மூன்றையும் தான். மனுஷ்ய புத்திரனின் பாய்பெஸ்டி இவற்றை உருவாக்கித் தந்திருக்கிறதா? என்று வாசித்துப் பார்த்தால், அதற்குள் ஒரு கவிதை சொல்லி உருவாக்கப்பட்டிருப்பதை உணரமுடிகிறது. ஆனால் கேட்போர் எவரும் கவிதைக்குள் இல்லை.அந்த இடத்தில் யாரும் அமர்ந்துகொள்ளலாம்.
தமிழ்க் கவிதை மரபு, கவிதைக்குள்ளேயே சொல்வோரும் கேட்போரும் உருவாக்கப்பட்டு நிகழ்வு அல்லது சம்பவங்களும் தரப்படும் கவிதைகளை அகக்கவிதையாக அடையாளப்படுத்தியிருக்கிறது. பெயர் சொல்லக்கூடாது–பெயர் அறியும் விதமாக இருக்கக் கூடாது (சுட்டி ஒருவர் பெயர்கொளப்பெறாஅர்) என்ற விதியை மட்டும் வைத்துக் கொண்டு அகம், புறம் எனப் பிரித்த பிரிப்பைத் தாண்டி அதற்கு மாறாகச் சொல்பவர் மட்டும் உருவாக்கப்பட்ட கவிதைகள் பெரும்பாலும் புறக்கவிதைகளாக அடையாளப்பட்டிருக்கிறது. அகக்கவிதை வடிவமைப்பிலேயே பக்திக்கவிதைகளும் உருவாகியிருக்கின்றன. சொல்பவள்/ன் பக்த நிலையிலும் இறை கேட்குமிடத்திலும் நிறுத்தப்பட்டிருக்கிறது. அகம் அல்லது பக்திக் கவிதையின் இன்னொரு வடிவமே நவீனத்துவக் கவிதைகளில் உள்முகவடிவம் கொள்பவை. புறக்கவிதையின் தொடர்ச்சியை அறக்கவிதைகள் கைக்கொண்டுள்ளன. ஒருவரிடம் பேசும் அறங்கள் அல்லது புறவுலக வாழ்வாகவும், பலருக்கும் சொல்லும் ஆலோசனைகளாகவும் புறயதார்த்தம் பேசப்படுகின்றன. தனிப்பாடல்கள் வழியாகப் புதுக்கவிதையில் வானம்பாடிகள் வெளிச்சங்களாக வெளிப்பட்டனர்.
தமிழின் முதன்மையான பனுவல்களுள் ஒன்றான திருக்குறளின் மூன்று பால்களும் மூன்றுவிதமான கவிதைச் சொல்லாடலைக் கொண்டிருக்கின்றன. அறத்துப்பாலின் சொல்லி (Narrator) தன்னை வாழ்க்கையின் விதிகள் அனைத்தையும் அறிந்த ஒருவரின் தன்னிலையில் நிறுத்திக்கொண்டு அறங்களை வலியுறுத்துகின்றார். ஆனால் பொருட்பாலில் இடம் பெறும் சொல்லியோ தெரிந்த உண்மைகளை உறுதியாகவும், சில நேரங்களில் ஐயங்களாகவும், கூடுதல் வரையறைகளைத் தந்தால் நல்லது எனத் தோன்றும்போது விளக்கங்களையும் தருகிறார். மூன்றாவது பாலான காமத்துப் பாலில் மூன்று நிலைகளும் இருக்கின்றன. சொல்லியும் கேட்போரும் உள்ளேயே வெளிப்படும் குறள்களும் காமத்துப்பாலில் உண்டு. சொல்பவர் மட்டும் வெளிப்படும் குறள்கள் மட்டும் சில அதிகாரங்களில் இருக்கின்றன. சில அதிகாரங்களில் கேட்போர் மட்டுமே வெளிப்படுவதையும் காண்கிறோம். முழுமையும் அக/பக்திக்கவிதை வடிவத்தில் சொல்வோரையும் கேட்போரையும் உள்ளேயே வைத்துக் கவிதைச் சம்பவத்தை நிகழ்த்துகிறது. இவை ஒவ்வொன்றையும் எடுத்துக்காட்டுகளோடு விளக்கவேண்டும். அதை வேறொரு நேரத்தில் செய்யலாம். இப்போது மனுஷ்ய புத்திரனின் ‘பாய் பெஸ்டி’ யை வாசிக்கலாம்.
’பாய் பெஸ்டி’களின் கதை
பாய் பெஸ்டி என்பவன்
கனவுகளால் ஆனவனல்ல
கண்ணீரால் ஆனவன்
ஒரு பாய் பெஸ்டி
பாதி மிருகமாகவும்
பாதி மனிதனாகவும்
வாழ்பவனல்ல;
அவன் வாழ்வது
பாதிக் கணவனாக
பாதிக் காதலனாக
ஒரு பாய் பெஸ்டி
ஒரு பெண் உடுக்கை இழக்கும்
ஒரு கணத்திற்காக
இடுக்கண் களைய
அவள் அருகிலேயே காத்திருக்கிறான்
ஒரு நிழலாக
அதுகூட அல்ல
ஒரு நிழலின் நிழலாக
ஒரு பாய் பெஸ்டிக்கு
ஒரு பெண்ணின் கணவனின் முன்
எவ்வளவு அன்னியனாக நடந்துகொள்ள வேண்டும்
என்று தெரியும்
அதே சமயம் அவன் நண்பனாகவும்
ஒரு பாய் பெஸ்டிக்கு
ஒரு பெண்ணின் காதலன் முன்
எவ்வளவு கண்ணியமாக நடந்துகொள்ள வேண்டும்
என்று தெரியும்
தான் ஒரு அண்டைவீட்டான்
அல்லது வழிப்போக்கன் என்பதை
ஒவ்வொரு கணமும் நிரூபித்துக்கொண்டே
ஒரு பெண் கண்ணீர் சிந்தும்போது
தன்னை ஒரு கைக்குட்டையாக
பயன்படுத்துகிறாள் என
ஒரு பாய் பெஸ்டிக்கு தோன்றாமலில்லை
கைக்குட்டையாகவாவது
இருக்கிறோமே என நினைத்ததும்
அவன் மனம் சமாதானமடைந்து விடுகிறது
ஒரு பாய் பெஸ்டி
ஒரு பெண்ணின் நலக்குறைவை சரி செய்வதில்
ஒரு மருத்துவரைவிடவும் கவனமாகச் செயல்படுகிறான்
ஒரு பெண் துயரமடையும்போது
ஒருவனை அவனது தாய் தேற்றுவதுபோல
அவளைத் தேற்றுகிறான்
ஒரு பாய் பெஸ்டி
ஒரு பெண்ணின் சிறிய கஷ்டங்களை பெரிதாக்கிக்கொண்டு
தன் தோளில் சுமக்கிறான்
அவள் ஒரு கிளாஸ் தண்ணீர் கேட்டால்
அதற்காக ஒரு நீருற்றைத் தேடிச் செல்கிறான்
ஒரு பாய் பெஸ்டி எப்போதும்
உணவகங்களில் பில்களை செலுத்துவதில்
ஆர்வமுடையவனாக இருக்கிறான்
ஒரு பெண்ணிற்கு பரிசு வங்குவதற்காக
நீண்ட நேரம் செலவிடுகிறான்
ஒரு பெண் படியில் காலிடறும்போது
அது இந்த உலகின் அநீதிகளில் ஒன்றாக
அவனுக்குத் தோன்றிவிடுகிறது
ஒரு பாய் பெஸ்டியை
ஒரு பெண் பிரியத்தோடு அணைத்துகொள்கிறாள்
ஆதரவாக அவன் தோளில் சாய்ந்துகொள்கிறாள்
ஒரு பாய் பெஸ்டி
தான் எப்போதாவது அப்படி
அணைத்துக்கொள்ளவோ
சாய்ந்துகொள்ளவோ முடியுமா என
குழப்பமடைகிறான்
ஒரு பாய் பெஸ்டி என்பவன்
சங்கிலியால் கட்டப்பட்ட
ஒரு நாய்போல சிலசயம் தன்னை உணர்கிறான்
அன்பைக் காட்டவும்
அன்பைப் பெறவும்
சங்கிலியின் நீளம் எவ்வளவோ
அவ்வளவே அனுமதி என்பது
அவனை மனமுடையச் செய்கிறது
ஒரு பாஸ் பெஸ்டி
எப்போதும் தன்னை பயன்படுத்திக்கொள்ளக்கூடிய
ஒரு ஆயத்த நிலையில் வைத்திருக்கிறான்
ஒரு போர்வீரனைப்போல உத்தரவிற்குக் காத்திருக்கிறான்
அவன் அன்பின் புரவிகள்
எப்போதும் பாய்ந்து செல்லக் காத்திருக்கின்றன
ஒரு பாய் பெஸ்டி எப்போதும் காத்திருக்கிறான்
ஒரு பெண் அவள் காதலனால் துரோகமிழைக்கப்படுவதற்காக
அவள் கணவனால் அவள் சந்தேகிக்கப்படுவதற்காக
அவள் நண்பனால் அவள் காயப்படுவதற்காக;
அப்போதுதான் அவன் அங்கு அவதரிக்க இயலும்
அப்போதுதான் அவனுக்கு ஒரு சிறிய கதவு திறக்கிறது
அப்போதுதான் அவனுக்கு அவனது வசனங்களுக்கான
அவகாசம் கிட்டுகிறது
ஒரு பாய் பெஸ்டி
எப்போதாவது ஒரு பெண்ணிடம்
அந்த அற்புதம் நிகழ்ந்துவிடும் என
ரகசியமாக கனவு காண்கிறான்
அது ஒருபோதும் நிகழ்வதில்லை
அது வேறு யாருக்கோ கண்முன்னால் நிகழும்போது
அவன் இன்னும் பொறுமை தேவை
என்று தன்னைத்தானே உறுதிப்படுத்திக்கொள்கிறான்
இரண்டு நாள் பேசாமல் இருந்துவிட்டு
மூன்றாவது நாள் பெருந்தன்மையின்
முகமூடியை அணிந்துகொண்டு
அவனே அலைபேசியில் அழைக்கிறான்
தன் தற்கொலை முடிவுகளை
ஒருபோதும் நிறைவேற்ற முடியாத
ஒரு கோழையாக இருக்கிறான்
ஒரு பெண் தன்னோடு ஒருபோதும்
இல்லாதபோதும்
அவள் ஏன் எப்போதும்
தன்னுடன் இருக்கிறாள் என்பதை
ஒரு பாய்பெஸ்டியினால்
ஒருபோதும் புரிந்துகொள்ள முடிவதில்லை
ஒரு காதலனின் பொறுப்பற்றத்தனங்களோ
ஒரு கணவனின் அதிகாரங்களோ
ஒருபோதும் ஒரு பாய்பெஸ்டியிடம் இருப்பதில்லை
அவன் ஒரே நேரத்தில்
ஒரு பெண்ணின் தந்தையாகவும்
குழந்தையாகவும் தன்னை மாற்றிக்கொள்கிறான்
ஒரு பாய் பெஸ்டி எப்போதாவது
ஒரு பெண்ணிடம் தன் காதலைச் சொல்ல விழைகிறான்
அவள் முதலில் அதிர்ச்சியடைவதுபோல
முகத்தை வைத்துக்கொள்கிறாள்
அது எதிர்பாராத ஒன்று என்பதுபோன்ற
ஒரு சித்திரத்தை உருவாக்குகிறாள்
பாய் பெஸ்டி குற்ற உணர்வால் நடுங்கத் தொடங்குகிறான்
நூறு முறை மன்னிப்புக் கோருகிறான்
அது ஒரு மிகப்பெரிய நகைச்சுவை காட்சியாகிவிடுகிறது
அந்த நகைச்சுவைக்கு
அவளோடு சேர்ந்து
அவனும் சிரிக்கத் தொடங்கிவிடுகிறான்
ஒரு பாய் பெஸ்டி
ஒரு பெண்ணின் காதல் கதைகளை
அவ்வளவு பொறுமையுடன் கேட்கிறான்
கல்லாய் சமைந்த ஒரு கடவுள்கூட
அத்தனை பொறுமையாய் கேட்கமாட்டார்
யாரும் பிறக்கும்போதே
பாய் பெஸ்டியாக பிறப்பதில்லை
விதி எங்கோ தடம் மாற்றிவிடுகிறது
பசித்த மனிதர்களின் கையில்
ஒரு மலரைக்கொடுத்து அனுப்பி வைக்கிறது
======8.2.2020 /காலை 11.27 ====================================
435 சொற்களைக் கொண்ட இக்கவிதையில் இரண்டு பாத்திரங்களை உருவாக்கியிருக்கிறார் மனுஷ்யபுத்திரன். ஒருவர் ஆண். அவனுக்கு ஒரே பெயர்தான்; நல்லான்( பெஸ்டி) ஆனால் இன்னொரு பாத்திரம் பெண். அவள் இன்னொருவனின் காதலியாக இருக்கலாம். அல்லது மனைவியாக இருக்கலாம். இவ்விரண்டுமே – நல்லானும், காதலி/ மனைவி என்ற இரண்டுமே வகைமாதிரிப்பாத்திரங்கள். ஆனால் கேட்பவரை உருவாக்கவில்லை. கேட்கும் இடத்தில் இருப்பவர் யாராகவும் இருக்கலாம். வாசிக்கும் ஒருவர் தன்னைப் பெஸ்டியாக நினைத்துக் கொள்ளும் நிலையில் நிகழ்வில் பங்கேற்கும் பாத்திரமாக மாறிக்கொள்வார்.நிகழ்வுகளைக் கேள்விப்பட்டவராக இருந்து, அப்படியொரு வாய்ப்பு கிடைக்காதவர்கள் நடந்ததை வேடிக்கை பார்க்கும் -விளையாட்டைக் கண்டுகளிக்கும் நபராக மாறிக் கொள்ளலாம். இவையெதுவுமே அறியாத - தெரியாத நபர்கள் இப்படியெல்லாமா? நடக்குது இந்த உலகத்தில்? எனப் புழுக்கம் கொள்ளும் மனிதராக விலகி நிற்கலாம். இதற்கான வாய்ப்புகளை ஒரு நிலையில் இல்லாமல் பல நிலையில் அடுக்கிப் போகிறார் மனுஷ்ய புத்திரன் கேட்போரை உருவாக்காத இந்தக் கவிதைக்குள் சொல்லியாக ஆசிரியரையே கொண்டிருக்கிறது. அந்த ஆசிரியர்- மனுஷ்யபுத்திரன் என்னும் கவி. அவர், பெண்ணின் மனதோடு -உடலோடு உறவாடும் பெஸ்டியின் பல்வேறு பரிமாணங்களை அறிந்தவர் மட்டுமே. பெஸ்டிக்கு பலவரையறைகளை அடுக்கும் இந்தக் கவிதை பெஸ்டியின் பாத்திரம் சமகால வாழ்வில் ஒற்றைத் தன்மை கொண்டதல்ல; பல அடுக்குகளைக் கொண்டது என்கிறது.
இப்படி அடுக்கும் முறைமை -சொல்முறைக்குத் தமிழில் முன்மாதிரி இருக்கிறது. திருக்குறளின் ஒவ்வொரு அதிகாரமும் இப்படி அடுக்கப்பட்டவைதான். திருக்குறளின் பொருட்பாலில் ஒவ்வொரு அதிகாரத்திலும் ஏதாவதொன்றை விளக்கும் – ஒவ்வொரு குறளிலும் விளக்கி விளக்கிப் புரியவைக்கும் முறையைக் கொண்டுள்ளது. அமைச்சு என்பது என்ன? என்ற கேள்விக்குப் பத்துப் பதில்கள் சொல்வதுபோல.. நல்குரவு என்பதைப் பத்துக் குறள்களில் வரையறுத்துவிட நினைப்பதுபோல மனுஷ்யபுத்திரன், நிகழ்கால உறவு நிலை ஒன்றை – இதுவரை வெளிப்படையாகப் பேசப்படாத உறவுமுறையாக இருந்த ஒன்றை இனிப் பேசலாம் என்று நினைத்து விளக்கி அடுக்குகியுள்ளார். அவர் அந்த உறவின் எல்லா வரையறைகளையும் – உறவு நிலைகளையும் மனப்பாங்கையும் சொல்லி முடித்துவிட்டார் என்பதற்கில்லை. இன்னொருவருக்கு இன்னும் சில வரையறைகள்/ உறவுநிலைகள்/ மனப்பாங்குகள் தோன்றலாம். அவர்கள் அவற்றை எழுதலாம். அதற்கான திறப்பைச் செய்த வகையில் மனுஷ்யபுத்திரன் இந்தப்பனுவல் ஒரு முன்னோடி.
கறரான இலக்கியப்பார்வைகள் கொண்டவராக நினைப்பவர்கள், திருக்குறளையே இலக்கியமாக ஏற்பதில்லை. சிலர் காமத்துப்பாலில் இலக்கியத் தன்மை இருக்கிறது என்று ஏற்றுக்கொண்டு, அறத்துப் பாலிலும் பொருட்பாலிலும் இலக்கியத்தின் கூறுகள் என்ன இருக்கிறது? என்று கேட்பார்கள். நெருக்கிப் பிடித்தால், அவ்விரண்டிலும் அறத்துப்பாலில் ஒரு தெளிவும் தீர்க்கமும் இருக்கிறது, ஆனால் பொருட்பாலில் அப்படியொன்றும் இல்லை என்பார்கள். அதே நிலையில் தான் பொருட்பாலின் சொல் முறைமையைக் கொண்டிருக்கும் மனுஷ்யபுத்திரனின் ‘பாய் பெஸ்டி’களின் கதை கவிதையாகாது; இலக்கியமாகாது என வாதிடக் கூடும்.அதைச் செய்யாமல் முரட்டுத்தனமான ஒதுக்கலும் கேலியும் திறனாய்வுச் சொல்லாடல் ஆகாது.
பிப்ரவரி, 2020
அரசியல் கவிதையின் அடையாளம்
எழுதப்பெற்ற காலத்தின் மனச்சாட்சியாக இருக்கும்போது ஓர் அரசியல் கவிதை தீவிரத் தன்மையுடைய கவிதையாக மாறிப்போகும். மனச்சாட்சியோடு உரையாடும் ஒரு கவி, இன்னொரு தன்னோடு உரையாடுவதாக நினைத்துக்கொண்டு சமூகத்தின் திரள் மனங்களோடு பேசுகிறார். அதற்குத்தேவையான -கூடுதல் சாத்தியங்களைக் கொண்ட சொற்களைத் தேர்வுசெய்ய நினைக்கிறார். தேர்வுசெய்த சொற்கள் மொழியின் ஆகக்கூரான சொல்லாயுதங்களாக இருக்கவேண்டும் என நினைத்த கவிகள் உண்டு. அதற்காகக் காத்திருக்கும் கவிகளும் இருந்தார்கள்; இருக்கிறார்கள். அதேநேரத்தில் அப்படியெல்லாம் காத்துக்கொண்டிருக்காமல், தனது மனதிற்குள் இருக்கும் கொதிப்புநிலையை மேலெழுப்பிச் சொற்களைச் சிதறவிடும் கவிகளும் உண்டு. அச்சொற்கள் கூரான ஆயுதங்களாக இருக்கலாம்.. ஆனால் அவற்றைக் கவி அடுக்குக் கட்டுவதின் மூலம் தனித்தனிச் சொற்களுக்கும் தைக்கும் ஆயுதங்களின் வலிமையையும் கூர்மையையும் தீட்டிவிடுவது நடந்துவிடுகிறது. அப்படித்தீட்டும் கவியே அந்தந்தக் காலத்தின் கவியாக - அரசியல் கவியாகக் காலத்தால் கணிக்கப்படுகிறார்கள். தமிழில் பாரதியை அப்படித்தான் கணித்து ஏற்றிருக்கிறோம்.
ஓர் அரசியல் கவிதைக்கான முதன்மை அடையாளமாக இருப்பது எழுதப்பெற்ற காலம் பெருநிகழ்வொன்றின் காலம் என்பதைச் சுட்டிக்காட்டுவதில் உருக்கொள்கிறது. உருக்கொண்ட பெரும் நிகழ்வின் நேர்மறை விளைவுகளும் எதிர்மறைத் தாக்கங்களும் விசாரணைக்குரியனவாக இருப்பதால் நிராகரிப்புகளும், நிராகரிப்பை மறுதலித்த ஆவேசங்களும், செய்வதற்கெதுவுமில்லை என்ற கையறு நிலைகளும் துயரத்தின் படிநிலைகளும் கவிதையின் வெளிப்பாட்டுணர்வைத் தீர்மானித்து வாசிப்பவர்களைத் தன்வசப்படுத்திக் கொள்கின்றன திரும்பத் திரும்ப வாசிக்கும்போது, பெரும் கணங்களும் சுழிப்புகளும் கொந்தளிப்பும் அடியோட்டத்தில் நகர, மேல்தளத்தில் தாமிரபரணிபோல அமைதி நிலவும்.
நீங்கள் தென் தமிழ்நாட்டின் அடையாளமான தாமிரபரணியைப் பாபநாசத்திலோ அம்பாசமுத்திரத்திலோ அதன் கரையில் நின்று பார்த்தால் அதன் சுளிப்பும் நகர்வும் தெரியும். அங்கே ஆபத்துகள் இருப்பதாக நினைத்து இறங்கிக் குளிக்க மனம் விரும்பாது. கரையோரங்களில் கட்டப்பட்ட படித்துறைகளில் அமர்ந்து குளித்துக் கரையேறிவிட்டு வந்துவிடுவோம். ஆனால் திருநெல்வேலியையும் பாளையங்கோட்டையும் இணைக்கும் பாலங்களின் அடியில் ஓடுவதும் நகர்வதும் தெரியாமல் அசையும் தாமிரபரணி சுழிப்பும் ஆழமும் கொண்டது. அங்கே இறங்கி நீந்திக் குளிக்கலாம் என மனம் நினைக்கும். ஆனால் அங்கே நதியின் சுழிப்பும் ஆழமும் அதிகம். அவை வெளியே தெரியாது அதுபோல நேற்றிருந்து கவி மனுஷ்யபுத்திரனின் கவிதைகள் கொதிப்பு மனநிலையில் நகர்ந்துகொண்டே இருக்கின்றன.
பாப்ரி மஜ்ஜித் தீர்ப்பு வரப்போகிறது என்ற முன்னறிவிப்பைத் தொடர்ந்தும் தீர்ப்பு வாசிக்கப்பட்ட பின்பும் கவி .மனுஷ்யபுத்திரன் எழுதிய ஒவ்வொரு கவிதையும் அரசியல் கவிதையின் ஆகக் கூடிய அடையாளங்களைத் தனதாக்கிக் கொண்டே இருந்தன. அவற்றுள் இவை உச்சமான வெளிப்பாடுகள்.
==========================================
அமைதி தினம் -1
தீர்ப்பு எப்படி வந்தாலும்
அமைதி காக்கவேண்டும் என்று
சுற்றறிக்கை சொல்கிறது
நான் தலை குனிந்து
மெளனமாக உட்கார்ந்திருக்கிறேன்
நாளை வீட்டைவிட்டு
வெளியே போகாதீர்கள் என்கிறார்கள்
நான் தலைகுனிந்து
மெளனமாக உட்கார்ந்திருக்கிறேன்
தாடியை மழித்துவிடுவது
நல்லது என்கிறார்கள்
நான் தலைகுனிந்து
மெளனமாக உட்கார்ந்திருக்கிறேன்
எது நடந்தாலும்
அதைப்பற்றி எதுவும் எழுதாதே
என்கிறார்கள்
நான் தலைகுனிந்து
மெளனமாக உட்கார்ந்திருக்கிறேன்
நாளை பயணங்கள் மேற்கொள்ளாதீர்கள் என்கிறார்கள்
நான் தலைகுனிந்து
மெளனமாக உட்கார்ந்திருக்கிறேன்
அப்படியெனில்
இது எனது
நாடு இல்லையா?
------------------------------ 8.11.2019/இரவு 11.27
அமைதி தினம்-4
ஒருவர் மெளமாக இருக்கிறார் எனில்
உடனடியாக அவரை
கோழை என்றழைக்காதீர்கள் தோழர்
அவர் குரல்வளை
நெறிக்கப்பட்டிருக்கிறதா என
சற்று குனிந்து பாருங்கள்
யாருக்கு என்ன திட்டமிருக்கிறது என
அது நிகழும் வரை
யாருக்கும் தெரியாது
தூங்குபவர்களும்
தூங்குவதுபோல நடிப்பவர்களும்
வேறு வேறு கனவுகள் காண்கிறார்கள்
நீதியின் கானல் நதிகளின் பின்னால்
எவ்வளவு தூரம் சென்றும்
ஒரு போதும் அதை நெருங்க முடிவதில்லை
அறிவிக்கப்பட்ட ஊரடங்குகளைக் காட்டிலும்
அறிவிக்கப்படாத ஊரடங்குகள் வலிமையானவை
அச்சமும் சந்தேகமும்
தலையை விரித்துப்போட்டுக்கொண்டு
தேசமெங்கும் அமர்ந்திருக்கிறது
மெளனம் என்பது நல்லிணக்கம்
மெளனம் என்பது பாதுகாப்பு
மெளனம் என்பது தேச பக்தி
நிபந்தனையற்ற மெளனம்
ஒரு நிரந்தரப் பழக்கமாக
கேள்விகளற்ற மெளனம்
நிரந்தர உத்தரவாக மாறிவிடுவதற்கு
அதிக நேரமாவதில்லை
மெளனமான காலங்களில்
எதைப்பற்றியாவது குரல்கள் ஒலிக்குமா
ஆம் ஒலிக்கும்
மெளனத்தைப்பற்றி
----------------------------------------------- 9.11.2019/காலை 9.12
எது நம்பிக்கையோ
அதுவே நீதியெனில்
எது நம்பிக்கையோ
அதுவே வெல்ல வேண்டும் எனில்
எது நம்பிக்கையோ
அது ஆவணங்களை செல்லாததாக்கும் எனில்
எது நம்பிக்கையோ
அதற்கு சாட்சியங்கள் தேவை இல்லை எனில்
எது நம்பிக்கையோ
அதற்கு எல்லோரும் வழிவிட வேண்டும் எனில்
அந்த நம்பிக்கைகள் நீடுழி வாழட்டும்
அந்த நம்பிக்கைகள் மொத்த உலகிற்கும்
உரிமை கோரட்டும்
நம்பிக்கையின் பெயரால்
எல்லா வரைபடங்களும்
திருத்தி எழுதப்படட்டும்
யாருடைய நம்பிக்கைகள் வெல்கின்றனவோ
அவர்களே இருக்கத் தகுதியானவர்கள்
தோற்கிற நம்பிக்கைகளுக்காக
நகரத்தின் மையத்தில் பிரமாண்டமாக எழுகிறது
வெல்கிற நம்பிக்கைகளின் பலிபீடம்
அரசர்கள் தெய்வங்களாகிறார்கள்
நீதியரசர்கள் தெய்வங்களாகிறார்கள்
தெய்வ நீதிக்கு தலை வணங்குகிறோம்
இந்த சமமற்ற சமாதானங்களுக்கு
தலை வணங்ககுகிறோம்
முக்கியமாக
பலிபீடங்களுக்கு
தலை வணங்குகிறோம்
தலை இருப்பதற்கு
தலை வணங்குதல் மிகவும் முக்கியம்
--------------------------------------- 9.11.2019/பகல் 12.15
நான் ஏன் ஒரு இஸ்லாமியனாக இருக்கிறேன் என்றால்
நான் ஏன் ஒரு இஸ்லாமியனாக இருக்கிறேன் என்றால்
நான் எப்போதும்
ஒரு வேட்டையாடப்படும் மிருகமாக இருக்கிறேன்
நான் ஏன் ஒரு இஸ்லாமியனாக இருக்கிறேன் என்றால்
நீதி என்ற ஒன்று இருக்கிறது என
இவ்வளவுக்கும் பிறகு நம்பிக்கொண்டிருக்கிறேன்
நான் ஏன் ஒரு இஸ்லாமியனாக இருக்கிறேன் என்றால்
இணக்கமாக வாழும் பொறுப்பு
எனக்குத்தான் முழுமையாக தரப்பட்டிருக்கிறது
நான் ஏன் ஒரு இஸ்லாமியனாக இருக்கிறேன் என்றால்
எப்போதும் ஒரு அன்னியனின்
கடவுச் சீட்டுடன் நின்றுகொண்டிருக்கிறேன்
நான் ஏன் ஒரு இஸ்லாமியனாக இருக்கிறேன் என்றால்
எப்போதும் நிபந்தனையற்று
விட்டுக்கொடுப்பவனாக இருந்திருக்கிறேன்
நான் ஏன் ஒரு இஸ்லாமியனாக இருக்கிறேன் என்றால்
நான் பேச வேண்டிய நேரத்தில் எல்லாம்
மெளனமாக இருக்க
நிர்பந்திக்கப்பட்டிருக்கிறேன்
நான் ஏன் ஒரு இஸ்லாமியனாக இருக்கிறேன் என்றால்
என் தேசபக்தியை நிரூபிக்க
எப்போதும் என் நெஞ்சைப்பிளந்து
காட்டி வந்திருக்கிறேன
நான் ஏன் ஒரு இஸ்லாமியனாக இருக்கிறேன் என்றால்
பயங்கரவாதிகளைத் தேடுபவர்களால்
முதலில் ஆடை கழற்றிப்பார்க்கப்படுபவனாக இருந்திருக்கிறேன்
நான் ஏன் ஒரு இஸ்லாமியனாக இருக்கிறேன் எனறால்
வேறு யாராகவும் இருக்க
நான் முற்றிலுமாக மறுக்கப்பட்டிருக்கிறேன்
ஆயினும் நான் ஒரு இஸ்லாமியனாகவே
இருக்க விரும்புகிறேன்
என் நெஞ்சில் நீங்கள்
கடைசியாகப் பாய்ச்சப்போகும்
ஈட்டியின் கூர்மையை
நான் காண விரும்புகிறேன்
நான் ஏன் ஒரு இஸ்லாமியனாக இருக்கிறேன் என்றால்
நீங்கள் அதை ஒவ்வொரு கணமும்
நினைவூட்டிக்கொண்டே இருக்கிறீர்கள்
உங்களை முகம் சுழிக்க வைக்கும்
அத்தரை உடலெங்கும் பூசிக்கொண்டு
ஒரு இஸ்லாமிய கதகதப்போடு
உங்களை அணைத்து
முகமன்கூற விரும்புகிறேன்
ஒரு போதும் நாங்கள் சண்டையிட வரவில்லை
இஸ்லாமியர்கள் அமைதியை விரும்புகிறோம்
பிரார்த்தனையின் அமைதியை
கபர்ஸ்தான்களின் அமைதியை
ஒரு தரப்பான நீதியின் அமைதியை
ஒரு இஸ்லாமியனாக வாழ்வது
மிகவும் கடினமானது நண்பர்களே
அவன் எப்போதும் உலகத்தின் சமாதானத்திற்காக வாழவேண்டும்
பிறகு தன்னைத்தானே
சமாதானப்படுத்திக்கொண்டு வாழ வேண்டும்
மேலும் ஒரு இஸ்லாமியனாக இருப்பது
தனியனாக இருப்பதல்ல
அது
ஒரு கூட்டு மனம்
ஒரு கூட்டுக் காயம்
ஒரு கூட்டுத்தண்டனை
ஒரு கூட்டுத் தனிமை
அதை இன்றுதான் அறிந்து கொண்டேன்
-------------------------------------
9.11.2019/பிற்பகல் 3.24
வரலாற்றைக் கவிதையாக்கி வாசித்தல்
பசித்த பூனைகளின் மென்மையையும், வன்மத்தின் பசித்த ஓநாய்களையும் பற்றிப் பேச நினைத்த அந்தக் கவிதை ஓரிடத்தில்,
வரலாறு எப்போதும்
மாமிசங்களால் மட்டுமே
எழுதப்படுகிறது
என்ற வரிகளை எழுதிவைத்திருக்கிறது. இந்தமாத உயிர்மையில் அச்சாகியுள்ள மனுஷ்யபுத்திரனின் நீண்ட கவிதையை நாலைந்து தடவை வாசித்து முடித்தவுடன் மெல்லமெல்ல நினைவு பின்னோக்கிப் போனது. கவிதைக்குள் தெறிக்கும் ஆவேசத் தொனியைத் தனித்து நிதானமாக விரியும் காட்சிகள் ஒரே வாசிப்பாக முடித்துவிடாமல் நிறுத்திநிறுத்திக் காட்சிப்படிமங்களாக நகர்ந்தன. பின்னோக்கியும் முன்னோக்கியும் நகரும் அந்தக் காட்சிகள் இந்தியப் பரப்புக்குள் நாறத் தொடங்கியிருக்கும் மாமிச வாடையையும் ரணக் கிளர்ச்சியையும் திட்டுதிட்டாய்ப் பரப்பிக்காட்டியபடி உலகவரலாற்றையும் உள்ளூர் வரலாற்றையும் கலைத்துப் போட்டுக் கேள்விகளையும் இயலாமையும் கலந்து முன் வைத்து முடிந்துபோகாமல் இறுதியுத்தம் இனிமேல்தான் என்று முடிகிறது.
இந்தக் கவிதைக்குள் இருக்கும் தொனிமாற்றங்களும் படிமக்காட்சிகளும் சாமுவேல் பெக்கெட் (Samuel beckett) டின் கிராப்பின் கடைசி ஒலிநாடா நாடகத்தையும் திரும்ப வாசிக்கத் தூண்டியது. ஒற்றைக் கதாபாத்திரத்தின் குரலாக விரியும் கிராப்ஸ் லாஸ்ட் டேப் ( Krapp's last tape)நாடகம், ஒருவன் தனது வாழ்க்கையையும் இந்த உலகத்தின் இருப்பையும் கறுப்பு வெள்ளையாகப் பார்த்துப் பயங்கொள்ளும் சொற்களால் நகரும் நாடகம். கறுப்பு - வெள்ளை என்பது அவனது தன்னிலைக்குள்ளும் இருக்கிறது; அவனது புறநிலை வாழ்க்கையைக் கட்டமைக்கும் சமூகமாகவும் இருக்கிறது.
கவி மனுஷ்யபுத்திரனுக்குள் எழும் தன்னிலையை யொத்த தன்னிலையோடு பொருந்திப் போகின்றவன் அந்தக் கிராப். இரண்டு உலகப் போர்களுக்கிடையில் சிக்கிய ஐரோப்பிய வாழ்க்கை தந்த நெருக்கடியைப் பதிவு செய்து வைத்துத் தானே கேட்கிறான். தனது குரலைத் தானே கேட்பதாக அமைந்த அந்த தனிமொழி நாடகம் ஒருவிதத்தில் கவிதைதான். அச்சமும் இயலாமையும் புறச்சூழல் மீதான வெறுப்பும் கலந்த அந்த நினைவோட்டத்தின் குரலை மனுஷ்யபுத்திரனின் இந்தக் கவிதையில் கச்சிதமாக வாசிக்க முடிந்தது.
பெக்கெட்டின் அந்த நாடகத்தை எனக்குக் கொடுத்து வாசித்துவிட்டு இந்தியச் சூழலோடு பொருத்தி ஒரு நாடகத்தை எழுதித்தரவேண்டுமென அந்த மாணவன் கொடுத்துவிட்டுப் போனான். 1959 இல் மேடையேற்றப்பட்ட சாமுவேல் பெக்கெட்டின் நாடகத்தின் எந்த வரியையும் நான் எடுத்துக்கொள்ளவில்லை. இந்தியச் சுதந்திரப்போரின் காட்சிகள் நினைவில் வரும்படியான வரிகளால் 10 பக்கத்தில் அச்சிடத்தக்க நாடகத்தை ஒரே இரவில் எழுதிமுடித்தேன். ஒரு நூற்றாண்டுக்கிழவனின் நினைவுக்குறிப்புகள் என்ற பெயரில் நான் எழுதிய அந்த நாடகம் எனது முதல் புத்தகமான நாடகங்கள் விவாதங்களில் இருக்கிறது. அந்நாடகம்,
இன்னும் இருக்கிறேன்
நேற்று இருக்கிறேன்
இன்று இருக்கிறேன்
இன்னும் இருக்கிறேன்
என்று தொடங்கி அதே நான்கு வரியோடு முடியும். அந்த நாடகத்தை இயக்கிய சிபு எஸ். கொட்டாரம் 45 நிமிடங்கள் நிகழும் மேடைநிகழ்வாக்கினார். 1992 இல் பாண்டிச்சேரியில் மேடையேறிய அந்த நாடகத்தைத் தமிழில் வேறு யாரும் மேடையேற்றவில்லை. ஆனால் மலையாளத்தில் சில தடவை மேடையேற்றம் கண்டது. சிபு எஸ்.கொட்டாரம் ஒற்றை மனிதனின் குரலைக் காட்சிப்படுத்துவதற்காகப் பெயரிலியாக 6 நடிகர்களைப் பயன்படுத்தினார். அபத்த நாடகத்தின் கலவையாக்கி வரலாற்றை வாசிக்க முடியும் என்பதைக் கவனமாக நிகழ்த்திய மேடைநிகழ்வு இப்போது என் மனத் திரையில் ஓடிக்கொண்டிருக்கிறது.
சிபு எஸ். கொட்டாரம் போன்ற ஓர் அரங்கக் கலைஞனால் மனுஷ்யபுத்திரனின் இந்தக் கவிதையை - மாமிசத்தின் கதை - நம் காலத்தின் அபத்தக் காட்சிகளாக விரிக்க முடியும். சென்னையில் அத்தகைய நாடகக் கலைஞர்கள் - நடிகர்களும் இயக்குநர்களும் -இருக்கவே செய்கிறார்கள். யாராவது ஒருவர் முயன்று பார்க்கலாம்.
நாடகத்தின் முதல் காட்சிக்குப் பின் இரண்டாவது காட்சி தடை செய்யப்படலாம் அல்லது நாடகக்கலைஞர்கள் மேடையிலேயே தாக்கவும் படலாம். அந்த எச்சரிக்கையோடுதான் அந்த முயற்சியைத் தொடங்க வேண்டும். என்றாலும் நாம் இருக்கிறோம் என்பதைச் சொல்லித்தானே ஆகவேண்டும். ஜூலை 2017
வாசிப்பின் மீதான குறிப்புகள்
வாசிப்பைக் காற்றில் கரைத்துவிடுவதற்குப் பதிலாக முகநூலில் பதிவுசெய்யலாம். முகநூலில் ஒருமாதத்திற்குப் பின் தேடுவது சிரமம். அதனால் இங்கேயும் போட்டுவைக்கிறேன்
மனுஷ்யபுத்திரனின் கிளிக்காவியம்:
====================================
புனைகதை வாசிப்பிலிருந்து கவிதை வாசிப்பு வேறுபட்டது
நீண்ட கவிதை வரலாறு கொண்ட தமிழ்க் கவிதைகளை வாசிக்கும்போது அதற்கான முன்மாதிரிகளைத் தேடுவதில்லை. என்னளவில் தமிழ்க்கவிதை தனித்தனிப்போக்கைக் கொண்டவை. வெவ்வேறு காலகட்டத்தில் தோன்றிய கவிதைகள் வடிவத்திலும், முன்வைப்புகளிலும் தொடர்பற்றவைகளாக இருக்கின்றன. மரபுக்கவிதைகளில் ஒவ்வொரு வகையினமும் சில நூறாண்டுகளைத் தனக்கானதாகக் கொண்டிருந்தன, ஆனால் வடிவமாற்றத்தோடு அறிமுகமாகிப் புதுக்கவிதைகளென அழைக்கப்பட்ட நவீனக்கவிதைகள் அவ்வளவு நீண்ட காலத்தை எடுத்துக்கொள்ளவில்லை. அதிக அளவாகப் பத்தாண்டுகள்கூட ஒருவகை முன்வைப்புக்கில்லை. திட்டமிட்ட இயக்கமாகச் செயல்பட முனைந்த வானம்பாடிகளின் வாழ்நாளும்கூடப் பத்தாண்டுகள் இல்லை. எழுத்துப்பாணிக் கவிதைகளுக்கும் அதுதான் நிலை. நவீனக் கவிதைகளின் முன்மொழிவுகள் எப்போதும் தற்செயல் தன்மை அல்லது தற்காலிகத் தன்மைகளோடு நகர்ந்துவந்துள்ளன.
ஒரு புனைகதையை வாசித்தவுடன் அந்தப் புனைகதைக்கு ஒரு முன்மாதிரியை நினைத்துக்கொள்வேன். அந்த முன்மாதிரி எழுப்பிய முன்மொழிவை இந்தப் புனைகதைத் தாண்ட நினைக்கிறதா? நீட்டிக்க விரும்புகிறதா? முன்மாதிரியை உருவாக்கும் நோக்கம்கொண்டதா? என்று யோசிப்பேன். அப்படியொரு யோசனையை மனுஷ்யபுத்திரனின் கிளிக்காவியம் எனக்குள் உருவாக்கியது. ஆனந்த விகடனில் 14 பக்கங்களில் விரவிக்கிடக்கும் கிளிக்காவியத்தின் இரண்டு பக்கங்களை வாசித்தவுடன் அதற்கொரு முன்மாதிரி தமிழில் இருப்பதாகத் தோன்றியது. நினைவுக்கு வந்த அந்தக் கவிதை ந.பிச்சமூர்த்தியின் கிளிக்கூண்டு பெயராக மட்டுமல்லாமல் சொல்முறையும்கூட நினைவில் வரக்காரணம். தேடிப் பக்கத்தில் வைத்துக்கொண்டு இரண்டையும் வாசித்தேன்.
கிளிக்காவியத்திற்கும் கிளிக்கூண்டிற்குமிடையே அடிப்படையான வேறுபாடொன்று உண்டு. மனுஷ்யபுத்திரனின் கவிதை கிளிகளை மனிதனின் புறத்தே நிறுத்துகிறது. ந.பிச்சமூர்த்தியின் கிளிக்கூண்டு, கிளியை மனிதனின் அகத்தே அலையும் ஒன்றாக நிறுத்தியுள்ளது. கிளியின் இடம் இரண்டு கவிதைகளிலும் வேறுவேறு என்றாலும் கவிதைச்செயலை நகர்த்த உதவும் சொற்கள் வழி உருவாகும் தொனியும் மெய்ப்பாடுகளும் ஒத்தனவாக இருக்கின்றன.
கிளியாக அலையும் ஆன்மாவைக் கூண்டாகிய உடலில் சுமந்தலையும் மனிதனின் விடுதலையை ஆன்மீகத் தேடலின் பரிமாணங்களோடு முன்வைக்கும் ந.பிச்சமூர்த்தியின் தொனியைப் பற்றிக்கொண்ட மனுஷ்யபுத்திரன், தனது கவிதைகளின் இயக்கநிலைக்கேற்ப வேறு தளத்திற்கு நகர்த்திவிடுவதைச் சரியாகச் செய்துள்ளார். வளர்ப்புக்கிளிகள் கிளிகளாகவும் இருக்கின்றன; மனிதச் சாயல்களோடும் இருக்கின்றன. நடப்புச் சூழலோடும், வாழ்க்கையின் சிக்கலான கேள்விகளோடும் கிளிகள் அடைபட்டுக்கிடக்கின்றன கூண்டுக்குள்.
மனிதர்கள் ஏன் பறவைகளையோ, நாய், பூனை போன்ற பிராணிகளையோ வளர்க்கவேண்டும்? அவர்களின் இரக்கத்தைக் காட்ட வேறுமார்க்கங்கள் இல்லையா? அப்படி வளர்ப்பதென்பது வளர்க்கமுடியாத மனிதர்களைக் குற்றவுணர்வுக்குள் தள்ளும் நோக்கம் கொண்டதா? அல்லது தனக்குக் கிடைக்காத பற்றுக்கோடொன்றைத் தேடும் மனநிலையா? இப்படியான கேள்விகளை எழுப்பிக்கொண்டிருக்கும் கவிதைக்குள் அடைகாக்கப்படும் மூன்று கிளிகளின் ஆறு இறகுகளின் வழி தொடர்கிறது இன்னொருவகையான ஆன்மத்தேடல்.
தன்னையே இரண்டாகப் பாவிக்கும் கவிதைச்செயலின் தொடர்ச்சியாக இல்லாமல், தனக்கும் இயற்கைக்கும், தனக்கும் பிற உயிரினங்களுக்குமிடையேயான பாவனைகளை படிமத்தொடர்ச்சியாகவும் கதைநிகழ்வாகவும் ஆக்கியிருக்கும் மனுஷ்யபுத்திரனின் கிளிக்காவியம் தரும் அனுபவம் புத்தம் புதியதல்ல. தமிழின் நீள்கவிதைகளின் தொடர்ச்சியில் கிடைக்கும் புதுவகை முன்மொழிபு.
அகத்திலிருந்து புறம்நோக்கிய நகர்வு
ஔவையும் கபிலனும் செவ்வியல் கவிதைகள் எழுதியவர்களுள் முக்கியமானவர்கள். அவர்கள் தொடங்கிவைத்த தமிழ்க்கவிதை மரபை இன்றும் தொடர்வது யாரெனத்தேடியது மனம்.
செவ்வியல் மரபாக நாம் நினைத்துக்கொள்ளும் - கட்டமைத்துக்கொள்ளும் - தொடக்கத்தின் முதன்மை ஆளுமைகளாக யாரையெல்லாம் சொல்லலாம் என்ற தேடலைச் செய்தது மனம். முதல் பெயராக வந்தவள் கவி
ஔவை. அவளைத்தொடர்ந்து நின்றவன் கவி கபிலன். வெள்ளிவீதி, அள்ளூர் நன்முல்லை, காக்கைபாடினி நச்செள்ளை, மாறோக்கத்து நப்பசலை, பொன்முடி போன்ற பெண்கவிகளும்,அரிசில்கிழான், அம்மூவன்,உலோச்சன், பரணன், கடியலூர் உருத்திரங்கண்ணன், பெருங்குன்றூர் பெருங்கௌசிகன், மாங்குடி மருதன், மாமூலன், நப்பூதன்,நல்லந்துவன் போன்ற ஆண்கவிகளும் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் எழுதியவர்களாக இருக்கின்றனர். என்றாலும் ஔவைக்கும் கபிலனுக்கும் தனித்துவமான அடையாளங்களைச் சொல்லக்கூடிய அளவுக்குக் கவிதைகள் கிடைக்கின்றன. தொகைநூல்கள் ஒவ்வொன்றிலும் இவ்விருவரது பங்களிப்பு இருக்கின்றன.
அகத்திலும் புறத்திலும் அதிகமான எண்ணிக்கை, மனத்தின் அலைவுகளை மட்டுமல்லாமல், உடலின் அலைவுகளையும் எழுதிக்காட்டிய கவி ஆளுமைகள். காலத்தைப் பதிவுசெய்தல், ஆதரவை உறுதியாகக் காட்டுதல் புறக்கவிதைகளின் முதன்மை அடையாளமான. நேரடிக்கூற்று, அங்கதம், எச்சரிக்கைத் தொனி என்பன ஔவை, கபிலன் -இருவரின் புறக்கவிதைகளுக்குள்ளும் ஓடும் நுட்பக் கூறுகள். ஔவையின் புறக்கவிதைகளுக்கு அதியமானை ஆதரிக்கும் அரசியல் நிலைபாடு காரணமென்றால், கபிலனுக்குப் பாரியைக் காப்பாற்ற நினைத்த அரசியல் சார்பு காரணம். இப்படியான இணைத்தன்மைகள் கொண்ட இருவரும் அகக்கவிதை எழுதியதிலும் இணைத்தன்மைகொண்டவர்களாகவே இருக்கின்றனர்.
புறக்கவிதைகளின் எந்தத் தன்மைகளும் வெளிப்படாதவை அவர்களின் அகக்கவிதைகள். அகக்கவிதைகளின் அழகியல்கூறுகள் ஒவ்வொன்றையும் புணர்ச்சிக்கான தவிப்பு, ஏக்கம், புணர்ச்சிக்குப் பின்னான களிப்புநிலை என இன்பத்தையும், பிரிவின் துயரங்களை அதன் பலதள நிறவேறுபாடுகளோடும் படிமத்தளங்களோடும் தனிக்கவிதைகளாக எழுதித்தந்தவர்கள். அதிலும் கபிலனது குறிஞ்சிப்பாட்டோ , மலையையும் அதன் வனப்பையும் பின்னணியாகக் கொண்டு எழுதப்பெற்ற ஆகச்சிறந்த நிலவியல் கவிதை. அந்த வகையில், கபிலனைப் போல் இன்னொரு கவியை - இணையாகப் பேசத்தக்க கவியைச் செவ்வியல் பரப்பில் சொல்லமுடியவில்லை.
செவ்வியல் நிலையிலிருந்து மாறியபின்னர் தமிழின் அகம், புறமென்னும் இருநிலையையும் ஒன்றிணைக்க முடியுமெனக்காட்டியவன் கவி இளங்கோ. உரையிடையிட்ட பாட்டுடைச் செய்யுளான சிலப்பதிகாரம் தமிழ்க்கவிதை மரபை நாடகத்தன்மைக்குள் நகர்த்தியதின் முதன்மை வெளிப்பாடு. வள்ளுவன் அறம், பொருள் என புறநிலைகளின் மீதான வரையறைகளை விளக்கிய அளவுக்கு, அகநிலையின் தளங்களையும் எழுதியவனாக இல்லை என்பதாகத் தோன்றியது. அகக்கேள்விகளின் தளங்களை காமமென்ற ஒற்றைத் தளத்துக்குள் சுருக்கி நிறுத்திய முன்னோடியாகவே வள்ளுவனைப் படிக்கமுடிகிறது. அப்படிச் சுருக்காமல் ஒன்றிரண்டு தளங்களுக்கு விரித்தவள் ஆண்டாள். ஆனால் அவள் புறநிலையைக் கண்டுசொன்னவள் இல்லை. அவளைக் கடந்தால், பாரதியின் அடையாளம் முழுமையாகப் பொருந்தத்தக்கது. அவனைத்தாண்டிய தமிழ்க்கவிதை வரலாற்றில், அவரவர் காலத்து புறநிகழ்வுகளையும் அகக்கேள்விகளையும் எழுதிப்பார்த்தவர்களின் அடையாளங்களை நினைத்துநினைத்துக் கடந்துவந்துநின்றது கவி மனுஷ்யபுத்திரனிடம்.
அகவுணர்வை மனதின் கேள்விகள் என்னும் இருத்தலிய நகர்வுகளாக்கி ஏராளமான கவிதைகளை - பலநூறு கவிதைகளைத் தந்த கவி மனுஷ்யபுத்திரன், மிக அண்மையில் புறநிலையை விசாரிப்பவராக மாறிவருகிறார். குறிப்பாகத் தன்னையொரு அரசியல் இயக்கத்தின் பகுதியாக அறிவித்துக்கொண்டபின் அவர் எழுதும் கவிதைகள் நிகழ்கால அரசியலை விசாரிக்கும் கவிதைகளாக மாறிவருகின்றன. அந்த விசாரணை முழுமையாக அவரது கட்சி ஆதரவு நிலைபாட்டிற்கு ஒத்துப்போகும் நோக்கத்தில் வெளிப்படவேண்டுமென நினைக்காமல் தவிர்த்துக்கொண்டே இருக்கிறார். அதனைக் கவனமாகத் தவிர்க்கும் தன்மை கொண்டவையாகக் கவிதையின் தொனியை மாற்றிவிடுவதின் வழியாகப் பெருந்திரளின் மனச்சாட்சியாகவும், அத்திரளின் மனச்சாட்சியைத் தூண்டும் கவியின் குரலாகவும் மாறிமாறிப் பேசுகிறார். தொடர்ச்சியாக நம்காலத்தின் பலதரப்பட்ட நிகழ்வுகளின் மீது, அதிகாரத்தின் முன்வைப்புகள் மீதும், அவற்றின் பின்னியங்கும் ரகசியச் சதிகளின்மீதும் ஒருவகையான திறப்புகளைச் செய்கின்றன அவரது கவிதைகள். ஒவ்வொரு மாதமும் உயிர்மை இதழில் அச்சிடப்படும் கவிதைகளில் அத்தகைய அரசியல் விமரிசன, விவாதக் கவிதைகளே அதிகம் இருக்கின்றன. நாள் தவறாமல் முன்னிரவு தொடங்கி நள்ளிரவுக்கும் பின்னால் முகநூலில் எழுதிப்போடும் கவிதைகள் முழுமையாக அந்தப் பக்கம் நகர்ந்துவிடுவதில்லை. அவை அவர் வாழும் சென்னைப் பெருநகரம் தரும் நெருக்கடிகளை,ஆசுவாசத்தை, குதூகலத்தை, அச்சுறுத்தலையெல்லாம் சொல்லப்பார்க்கின்றன. இந்த வேறுபாடும் தன்னுணர்வுடன் நிகழ்கிறது என்று சொல்லமுடியவில்லை.
அகத்தைக் காதல் அல்லது காமமென்னும் தளத்திலிருந்து விரித்து தன்னிலை தன்னோடும் தனக்குச் செவிமடுக்கும் இன்னொரு பாத்திரத்தோடும் உறவாடும் கவிதை வடிவமெனப் புரிந்துகொள்ளவேண்டும். அதேபோல் புறத்தைத் தனது மேதைமையை -அறிவை- வாழ்க்கைக் கோட்பாட்டை உணர்ந்த ஒருவன் பலரோடும் கூட்டத்தோடும் பேசும் கவிதை வடிவம் என்று புரிந்துகொள்ளவேண்டும். அப்படிப்பட்ட புரிதலே தமிழ்ச்செவ்வியல் கவிதைமரபு இன்றளவும் நீள்கிறது என்பதைப் புரிந்துகொள்ளும் நிலையாகும். அந்த நிலையிலிருந்து பார்க்கும்போது, ஒருநேரத்தில் அகத்தையும் புறத்தையும் எழுதிக்காட்டும் கவி மனுஷ்யபுத்திரனை நம் காலத்தின் ஔவையாக, கபிலனாக வாசிக்க முடிகிறது.
இந்த மாத உயிர்மையில் 6 கவிதைகள் வந்துள்ளன. 1.நிற்காதே 2.நக்சலைட், 3.நீங்கள் எப்போது ஒரு ஃபிட்ஜிட் ஸ்பின்னராக மாறினீர்கள், 4.பிரபலமான குசு 5. மஞ்சள் நாட்டவருக்கு ஒரு தேசபக்தனின் திறந்த மடல் 6. மன்னரின் பெயர்கொண்ட மலர். இந்த ஆறில் நான்கு வெளிப்படையான புறநிலைக் கவிதைகள். ” நிற்காதே” முழுமையான அகநிலைவெளிப்பாடு. இந்த ஆறில் அகமாகவும் புறமாகவும் மாறிமாறி நகரும் அந்தக் கவிதையை - நீங்கள் எப்போது ஒரு ஃபிட்ஜிட் ஸ்பின்னராக மாறினீர்கள் - என்ற கவிதையை எழுதிய மனநிலையைப் பிடிப்பதற்கு ஒருவர் படும் அவஸ்தை, முற்றிலும் தனித்துவமான ஒன்று.
நிற்காதே
நடந்துகொண்டே இருந்தால்
துக்கத்தின் சுமை
குறைந்துவிடும் என்கிறார்கள்.
நான் என் சக்கரநாற்காலியில்
நகர்ந்துகொண்டே இருக்கிறேன்
என் துக்கம் கொஞ்சம் கொஞ்சமாக
எடையற்றதாகிக் கொண்டிருக்கிறது
நடப்பதோ
நகர்வதோ
நமக்கிருப்பது
அவ்வளவு சின்ன வட்டங்கள்
அவ்வளவு சின்ன சதுரங்கள்
இந்த இரவின் காலடியில்
சற்றே ஓய்ந்தமர்கையில்
துக்கத்தின் உறுமல்
எங்கோ அருகாமையில்
கேட்கத்துவங்குகிறது.
நிற்காதே.
நடந்துகொண்டே இரு.
நகர்ந்துகொண்டே இரு.
============================== நவம்பர், 2017
கருத்துகள்