கூழாங்கல் : மொத்தமும் குறியீடுகளாய்…

சில வெளிநாட்டுப் படவிழாக்களில் கலந்து கொண்டபோதும், விருதுகள் வாங்கியதாகத் தகவல் வந்தபோதும் பார்க்கவேண்டிய படம் என நினைத்துக் கொண்டது மனம். நண்பர் ஒருவர் அந்தப் படம் முழுவதும் மதுரைக்குப் பக்கமாக இருக்கும் கிராமப்புறப் பகுதியில் எடுக்கப்பட்டது என்ற தகவலையும் சொல்லியிருந்தார். அதனைத் தாண்டி, ஆஸ்கார் விருதுப் போட்டியில் பங்கேற்கக் கடந்த ஆண்டில்(2022) இந்தியாவிலிருந்து அனுப்பப்பட்டது என்றபோது ஆர்வமும் கூடியது. ஆனாலும் பார்க்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை. இப்போது சோனி லைவ் வழியாக அந்த வாய்ப்புக் கிடைத்தது. கிடைத்த வாய்ப்பை உடனே நிறைவேற்றவில்லை. உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் முடிந்தபிறகு பார்த்துக்கொள்ளலாம் என்று தள்ளிவைத்திருந்து பார்த்து விட்டேன்
*****

“உனக்கு என்னையெ ரொம்பப் பிடிக்குமா? ஒங்க ஆத்தாளெ ரொம்பப் பிடிக்குமா?” - பள்ளிக்கூடத்தில் பாடம் படித்துக் கொண்டிருக்கும் பையனை வகுப்பைவிட்டு வெளியே இழுத்து வந்து சாலையில் நிறுத்திக் கேட்கும் அப்பனின் (கணபதி) ஆவேசமான கேள்விக்கு அப்போதைக்கு எந்த பதிலையும் சொல்லவில்லை அந்தச் சிறுவன்.  75 நிமிடம் ஓடும் படத்தில் படம் முடியும்போது அப்பனின் கேள்விக்கு மகன் பதில் தருகிறான். வாய்ச்சொல்லாக இல்லாமல் பாறையில் கூழாங்கல்லால் எழுதப்பட்ட கல்வெட்டாகக் காட்சி தருகிறது அவனது பதில். சாந்தி, லெட்சுமி, வேல், கணபதி என நான்கு பெயர்களை வரிசையாக எழுதிக் காட்டுகிறான். முதலிடம் சாந்திக்கு. சாந்தி அவனது அம்மா, இரண்டாமிடம் அவனது தங்கை லெட்சுமி. மூன்றாமிடம் தனது பெயர் வேல்; அப்பனுக்கும் அந்தக் குடும்பத்தில் இடம் இருக்கிறது. ஆனால் நான்காவதாக – கடைசி இடம்.

ஆண்களை மையமாகக் கொண்டு இயங்கும் இந்தியக் குடும்பங்களுக்குள் பெண்களும் குடும்ப வாரிசுகளும் அனுபவிக்கும் வலியையும் சகிப்பின் உச்சநிலையையும் சொல்ல நினைத்துள்ள கூழாங்கல் சினிமா, ‘இந்திய ஆண்’ ஒருவனின் ஒருநாள் செயல்பாடுகளைக் காட்சிகளாக்கியிருக்கிறது. ‘ஆம்பளை நான், கொஞ்சம் சாராயம் உள்ளே போய்விட்டால் என்னைத் தட்டிக்கேட்க ஒருவராலும்முடியாது; எந்தச் சட்டதிட்டங்களுக்கும் கட்டுப்பட மாட்டேன்’ என்று உருவாகியிருக்கும் கிராமத்து மனிதர்களின் தன்னிலையைச் சொற்களின் வழியாக இல்லாமல் காட்சிகளின் வழியாகவே புரிய வைத்துள்ளார் படத்தின் இயக்குநர். 

மனைவி தன்னை விட்டுவிட்டு ஏன் பிறந்த வீட்டிற்குப் போய் விடுகிறாள்? என்பதைப் பற்றிய காரணங்களுக்குள் எல்லாம் நுழைய விரும்பாது, தொடர்ந்து அவளை அடித்துவிரட்டிக் கொண்டிருக்கும் அப்பனைச் சகித்துக் கொள்ளும் சிறுவனின் மன உறுதியைப் படம் முன் வைக்கிறது. ‘அடித்தாலும் அவமதித்தாலும் என்னோடு இருக்க வேண்டும்’ என நினைக்கும் இந்திய ஆண்களின் ஆணவ அடையாளமாக அந்தக் ‘கணபதி’ பாத்திரம் உருவாக்கப்பட்டுள்ளது. இத்தகைய மனிதர்களைச் சகித்துக்கொண்டு அந்தக் குடும்பத்துக்குள் பாசத்தையும் ஈரத்தையும் தக்கவைக்கும் பாத்திரமாக மகன் ‘வேல்’ பாத்திரம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இருவரும் சேர்ந்து சென்று திரும்பும் ஒருநாள் பயணம் தான் கூழாங்கல்லின் காட்சித் தொகுப்புகள். பயணத்தின் போது சிறுவன் காட்டும் பிடிவாதங்களும் சகிப்புத்தன்மையும் திமிர்த்தனம் நிரம்பிய அப்பனின் மனவோட்டத்தில் சிறியதான மாற்றத்தையும், குற்றவுணர்வையும்  ஏற்படுத்தியது என்பதைக் குறிப்பால் உணர்த்துவது இயக்குநரின் நோக்கமாக இருக்கிறது. அதற்கேற்பவே காட்சிகளை உருவாக்கி நகர்த்தியுள்ளார்.

ஆணவ அப்பன் X அரவணைத்து மாற்ற நினைக்கும் மகன் என்ற இரட்டைக்குள் உருவாக்கப்பட்டுள்ள ஒருநாள் பயணத்தின் காட்சிகள் ஒவ்வொன்றுக்கும் தொடர்புகள் இருப்பதாகத் தோன்றாது. ஒரு கிராமத்துப் பள்ளிக்கூடம், சீட்டு விளையாடும் ஒதுக்குப்புறச் சாவடி, சாராயமும் விற்கும் பேருந்து நிறுத்தப் பெட்டிக்கடை, உள்புறச் சாலையில் கிராமத்து மனிதர்களைச் சுமந்து செல்லும் சிற்றுந்து, புதர்கள் மண்டிய ஒற்றையடிப்பாதை, எலி பிடித்துச் சுட்டுத்தின்னும் சிறிய குடும்பம், தனது வகுப்பில் படிக்கும் மாணவனைத் தனது டிவிஎஸ் 50 இல் ஏற்றிக் கொண்டு போகும் புதுமணப்பெண்ணான பள்ளி ஆசிரியை என ஒவ்வொன்றுக்கும் கதை ரீதியான தொடர்புகள் இல்லை. ஆனால் அக்காட்சிகளில் அவர்களின் பங்கேற்பும் மனநிலை வெளிப்பாடும் படத்திற்குத் தேவையான தொடர்புள்ள காட்சிகள்.

ஒவ்வொரு நிகழ்விலும் அப்பனின் பங்கேற்பும், மகனின் இருப்பும் எப்படி இருக்கிறது என்பதைக் காட்டுவதின் மூலம் அவ்விரு பாத்திரங்களையும் அதற்குள் நடக்கும் மனவோட்டங்களையும் இயக்குநர் பார்வையாளர்களுக்குக் கடத்த நினைத்துள்ளார். மனைவியின் ஊருக்குப் போனபோது வெளிப்பட்ட தெனாவட்டும் திமிரும், அவளைப் பார்க்காமலேயே திரும்பி வரும்போது குறைந்திருக்கிறது என்பதை அவனது நடையிலும் எரிச்சலிலும் காட்டுகிறான். தன்னிடம் தரப்பட்ட பணத்தாள்களைக் கிழித்துப் போடும் மகனின் அதிர்ச்சி வைத்தியம் ஆத்திரமூட்டினாலும், அடித்தும் மிதித்தும் ஆத்திரத்தைக் காட்டிவிட்டு, தன்னோடு நடக்கத் தொடங்கும் மகனோடு சேர்ந்து தளர்வான நடையில் பயணத்தைத் தொடர்கிறான். போகும் பயணத்தில் சிற்றுந்துக்குள் செய்யும் தகராறும் அடாவடித்தனமும் திரும்ப வரும்போது தொடர்ந்திருந்தால், தன் பையனை இருசக்கர வாகனத்தில் ஏற்றிச் செல்ல அனுமதித்திருக்க மாட்டான்.

மொத்தப்படத்திலும் கணபதியின் மனைவியும் வேலின் அம்மாவுமான சாந்தி பாத்திரத்தை மையப்படுத்தியே காட்சிகள் உருவாக்கப்பட்டுள்ள போதிலும், அந்தப் பாத்திரத்தைத் தோன்றாப் பாத்திரமாக உருவாக்கியுள்ளதைக் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும். அப்பா –மகன் என்ற இரட்டைக் குணத்தைக் காட்டுவதுதான் முதன்மையானது என்ற நிலையில், அம்மா பாத்திரத்தைப் படத்தில் தோன்றும் பாத்திரமாகக் காட்டவில்லை. அவளின் அம்மாவோடும், சகோதரனோடும், ஊராரோடும் அவளது புருசன் போடும் சண்டையின் போதும் அவள் அங்கு இருப்பதாகக் காட்டாமல் எங்கோ போய்விட்டதாக வசனத்தை வைத்து நகர்த்தியிருக்கிறார். அப்பனும் மகனும் வீடு திரும்பிய பின் அவள் சமைத்த சோறு இருக்கிறது; மகள் லெட்சுமி இருக்கிறாள்; ஆனால் அவள் அங்கு இல்லை. திரும்பவும் குடும்பம் வழமைபோல நகரப்போகிறது என்பதைக் குறியீடாக்கும் விதமாக அவன் கொண்டு வந்த கூழாங்கல் சேமிப்பில் இன்னொரு கல் சேர்கிறது.தங்கைக்காக ஒரு ரப்பர் பொம்மையைப் பள்ளிக்கூடப்  பையில் வைத்துப் பூட்டுகின்றான் மகன். அத்தோடு படம் முடிகிறது.

படத்தின் பாத்திரங்களை ஏற்று நடித்துள்ள எவரும் நடிப்பு என்பதைத் தொழிலாகக் கொண்டவர்களாக இல்லை என்பதும், அவர்களிடம் காட்சிக்குத் தேவையான நிலையைப் பதிவுசெய்து பயன்படுத்தியுள்ளார்கள் என்பதும் புலப்படுகிறது.அந்தப் பகுதியில் இருந்தவர்களை அவரவர் இயல்பான செயல்பாடுகளில் செயல்படவிட்டுக் காமிராவில் பதிவு செய்திருப்பார்கள் என்பதாகப்படுகிறது. இவ்வகையான படமாக்கலில் பொருத்தமில்லாத வெளிப்பாடுகள் இடம்பெற்றுவிடும் ஆபத்து இருப்பதைப் புரிந்துகொண்ட இயக்குநரும் ஒளிப்பதிவாளரும் அதிகமும் அண்மைக் காட்சிகளைப் பயன்படுத்தாமல் தூரக் காட்சிகளாகவே அமைத்துள்ளனர். பாத்திரத்தின் இயல்பை விளக்கி நடிக்கச் செய்த பாத்திரங்களாக இருப்பவை கணபதியும் வேலும் தான். இவ்விரு பாத்திரங்களையும் ஏற்றுள்ள இருவரில் சிறுவனின் -செல்லப்பாண்டியனின் நடிப்பு, பாத்திரத்தோடு பொருந்தி நிற்கிறது. கறுத்தடையானின் உடல் மொழி பாத்திரத்திற்கு ஏற்றதாக இருந்த போதிலும் மனவோட்டங்களைக் கொண்டுவரும் முகமாக வெளிப்படவில்லை. அந்தக் குறையை இசைத்துணுக்குகள் வழியாக நிரப்பியிருக்கலாம். ஆனால் அத்தகைய முயற்சிகளில் இறங்கவில்லை.

எந்தக் காட்சியிலும் செயற்கை விளக்குகள் பயன்படுத்தும் தேவையில்லை. முழுவதும் பகல் காட்சிகள் என்பதாலும் நிகழ்வுகள் நடக்கும் இடங்கள் பெரும்பாலும் திறந்தவெளிகள் என்பதாலும் இயற்கை வெளிச்சத்திலேயே படமாக்கப்பட்டுள்ளது. கடைசியில் இடம்பெறும் வீட்டின் உள்புறக் காட்சிகளும் கூட இயற்கை வெளிச்சத்தின் நிழல்களோடு இருப்பது போதுமானவையாக இருக்கின்றன. சில காட்சிகளின் நீளமும் மௌனமும் பார்வையாளர்களுக்கு அலுப்பூட்டக்கூடியனவாக நீண்டுள்ளன. தேவையில்லாத நீளமும் மௌனமான நகர்வுகளும் கலைப்படைத்தின் அடையாளங்கள் என்பதான எண்ணத்தை உருவாக்கிப் பார்வையாளர்களை விலக்கிவிடும் வேலையைச் செய்து விடும். எல்லாவற்றையும் குறியீடுகள் வழியாகவே சொல்ல வேண்டும் என நினைப்பதும் அதையே செய்யும். இசைக்கோலங்கள் வழியாகப் படத்தோடு ஒன்றிப்பை உண்டாக்க முடியு
மா எனத் தெரியவில்லை.

இந்தியக்கிராமங்களின் வறுமை என்பதைக்கூட படக்குழு ஏற்றுக் கொண்டதாகத் தோன்றுகிறது.  அமைதியையும் வெக்கையையும் காட்டி, அதற்குள் மனிதர்கள் சகிப்புத்தன்மையோடும் மனநிறைவோடும் வாழ்கிறார்கள் என்பதாகக் காட்டும் இந்தியத்தனம் படத்தின் பேசுபொருளாக இருக்கிறது என்ற விமரிசனத்தைக் கூழாங்கல் படத்துக்கும் சொல்லலாம். ஆனால் அதையும் தாண்டி, ஆணாதிக்கமும் அடங்காத மனப்போக்கும் கொண்ட இந்தியக் கிராமத்து மனிதர்களின் வகைமாதிரிப் பாத்திரம் ஒன்றின் குணவியல்பை முன்வைத்து எடுக்கப்பட்டுள்ள கூழாங்கல் நல்லதொரு சோதனைப் படம் என்பதை மறுக்கவேண்டியதில்லை. அதன் இயக்குநர் பி.எஸ்.வினோத் ராஜ் பாராட்டுக்குரியவர். அவரோடு, இந்தப் படத்தைத் தயாரித்து படவிழாக்களுக்கு அனுப்பி அவரை அங்கீகரித்த நயன்தாரவும் விக்னேஷ் சிவனும் கூடுதல் பாராட்டுக்குரியவர்கள் .

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நாயக்கர் கால இலக்கியங்கள் சமுதாய வரலாற்றுச் சான்றுகளாகக் கொள்வதற்கான முன் தேவைகள்

நாயக்கர் காலம். இயல்.2.பொருளாதார நிலைகளும் உறவுகளும்

மேல்நோக்கியும் கீழ்நோக்கியும்