விழிப்புணர்வு நோக்கி இரு படங்கள்

 தான் சொல்ல நினைக்கும் கருத்துத்தான் முதன்மையானது;சொல்லும் முறை இரண்டாம்பட்சம் தான் என நினைப்பது உங்களைப் பார்வையாளர்களிடம் கொண்டுபோய்ச் சேர்க்காது. விழிப்புணர்வு அல்லது செய்தி சொல்லுதல், இயங்கத்தூண்டுதல் என்பன முன்வரும்போது கலையியல் தன்மைக்கும் அதே அளவு முக்கியத்துவம் தரவேண்டும். கலையியல் என்பது வாசிப்பவரை- பார்வையாளரைத் தன்னுள் இணைக்கும் உத்தி என்பதைப் புரிந்துகொண்டால் போதும். நேற்று நவம்பர் 25 அன்று இரண்டு படங்களும் இதில் கவனம் செலுத்தாத படங்களே..

  

என்ர மகன் எழிலன் - ஒரு குறும்படம்5
--------------------------------------------------
ஒரு சினிமாவைப் பற்றி எழுதும்போது இன்னொரு சினிமாவைப் பார்க்கும்படி சொல்லி, யாராவது ஒரு படத்தைக் குறிப்பிடுகிறார்கள். சில நேரங்களில் குறும்படங்களின் இணைப்பை அனுப்பி வைக்கிறார்கள். முந்தா நாள் கூழாங்கல் குறித்த பதிவைப் படித்துவிட்டு ஒருவர் அனுப்பிய குறும்பட படத்தின் தலைப்பு: என்ர மகன் எழிலன்.
ஈழப்போரில் காணாமல் போனவர்கள் - காணாமல் ஆக்கப்பட்டவர்கள் சில ஆயிரத்துக்கும் மேல் என்கின்றனர். இந்தப் படம் அப்படிக் காணாமல் போன மகன் ஒருவனைத்தேடி அலையும் தந்தை, பைத்தியமாகிப் போன துயரத்தைச் சொல்ல முயன்றுள்ளது. சொல்ல நினைத்ததைச் சொல்லிவிட வேண்டும் என்பதில் இருக்கும் தீவிரம், எப்படிச் சொன்னால் பார்வையாளர்களிம் மனதோடு பேசும் என்பதில் இல்லையோ என்ற எண்ணத்தைத் தூண்டியது.


சத்தியசோதனை: காவல்துறை மீதான விசாரணை

--------------------------------------------------------------------
எந்தவொரு அமைப்பின் மீதும் தமிழ்ச்சினிமாவின் - இயக்குநர்களின் பார்வை என்பது மையப்பாத்திரத்தை ஏற்கும் நடிகர்களின் அடையாளம் சார்ந்த ஒன்றாகவே அமைகிறது. ஏனென்றால் இங்கே நடிகர்களுக்காகவே திரைக்கதைகள் உருவாக்கப்படுகின்றன.
குற்றம், நீதி, சட்டம் சார்ந்த அமைப்புகளைத் திரைக்கதையாக்கிக் காட்சிப்படுத்தும் சினிமாக்களும் விலக்கானவை அல்ல.
நாயக நடிகர்கள் காவல்துறை அதிகாரிகளாகவோ, சாதாரணக் காவலர்களாகவோ பாத்திரமேற்கும்போது அந்தப் படங்களின் முடிவு காவல் துறை மக்களின் நண்பன் என்ற கருத்தைத் திணித்துவிட்டுப் படம் முடியும். நாயக நடிகருக்குக் கிடைக்கும் பிம்ப உருவாக்கம், நடிகர் ஏற்ற பாத்திரத்தின் வழியாகக் காவல்துறைக்குப் போய்ச்சேரும். எதிர்நிலையில் வில்லத்தன நடிகர்கள் காவல்துறை சார்ந்த பாத்திரங்களை ஏற்றால், களையெடுக்கப்பட வேண்டிய பெருச்சாளிகளாகக் காட்டிப் படம் முடியும். இருவகைப் படங்களுமே துறையின் தேவையையும் இருப்பையும் கேள்விக்குள்ளாக்குவதற்குத் தனிநபர்களைக் குறித்த - அதிகாரிகளைக் குறித்த பார்வையைப் பார்வையாளர்களுக்குக் கொடுத்துவிட்டு ஒதுங்கிவிடும். தனிநபர்களின் உரிமை, இருப்பு போன்றவற்றைப் பாதுகாக்கவேண்டிய குடிமை அமைப்பாகவும் பொது நடைமுறைகளைக் குலைப்பவர்களைக் கண்டுபிடித்துத் தண்டிக்கவேண்டிய குற்றவியல் நடைமுறைகளைத் தடுக்க வேண்டிய அமைப்பாகவும் இல்லாத காவல் துறையின் உள்ளார்ந்த செயல்பாடுகளின் மீதான விமரிசனம் நமது சினிமா இயக்குநர்களின் அக்கறையாக இருந்ததில்லை. இந்தப்பொதுப்போக்கிலிருந்து விலகிய படமாக வந்துள்ளது சத்தியசோதனை.
மக்களுக்காக - மக்களின் பாதுகாப்புக்காகவும் இருக்கவேண்டிய காவல் நிலையத்தை, தங்களின் வருமானத்திற்கான ஒன்றாக நிர்வகிக்கும் காவல்துறைப் பணியாளர்கள் மீது கூர்மையான விமரிசனத்தை வைத்துள்ளது சத்தியசோதனை.
ஒரு கிராமத்துக் காவல் நிலையத்தை வகைமாதிரியாக்கி, தமிழ்நாட்டு/ இந்தியக் காவல்துறை விமரிசனப்படுத்த எள்ளலும் அங்கதமும் சரியான சொல்முறை என உணர்ந்து அதற்கேற்ப மையப்பாத்திரத்தை ஏற்க பிரேம்ஜியைத் தேர்வு செய்துள்ளார் இயக்குநர் சுரேஷ் சங்கையா.படத்தின் காட்சிகளிலும் நிகழ்ச்சிகளிலும் எல்லாவகையான ஓர்மைகளும் இல்லை; காலப்பிழைகள் உள்ளன. காட்சிகளை உள்வாங்கும் காமிராவின் இடத்திலும் நகர்வு முறையிலும், காட்சிகளை நிரல்படுத்துவதும் போதிய அனுபவமும் பயிற்சியும் படக்குழுவினருக்கு இல்லை என்பதைக் காணமுடிகிறது. இக்குறைகள் பார்வையாளர்களுக்குப் படத்தைக் கொண்டுபோவதில் தடைகளாக அமையக்கூடியன.
தென் தமிழ்நாட்டில் அருப்புக்கோட்டைக்கருகில் உள்ள காவல் நிலையம் என்று சித்திரித்துள்ளதால், கிராமத்துக் காவல் நிலையங்கள்தான் இப்படி என்று எடுத்துக்கொள்ளவேண்டியதில்லை. நகரத்துக் காவல் நிலையங்களில் வேறுவகையான குற்றச்செயல்களும் கண்டுகொள்ளாமல், தங்களைக் காத்துக்கொள்ளும் நடைமுறைகளும் இருக்கவே செய்கின்றன. அதனை மையப்படுத்தினால் நடைமுறையில் இருக்கும் அரசியலையும் அரசியல்வாதிகளையும் நோக்கி நகரவேண்டியதாக இருக்கும். அதனை எண்ணிக் கிராமத்துக் காவல் நிலையம் என்று தெரிவு செய்தார்களோ என்னவோ. அதையெல்லாம் தாண்டிக் காவல் துறையின் இருப்பையும் செயல்பாடுகளையும் கேள்விக்குள்ளாக்க வேண்டும் என்ற எண்ணம் படக்குழுவினருக்கு இருந்துள்ளது என்பதற்காகப் பாராட்டலாம்; படத்தைப் பார்க்கலாம்.
May be an image of 4 people
All reactions:
Karunakaran Sivarasa, Nanrhiny V. R Nanthiny and 7 others

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ராகுல் காந்தி என்னும் நிகழ்த்துக்கலைஞர்

நவீனத்துவமும் பாரதியும்

தமிழில் நடப்பியல் இலக்கியப் போக்குகள்