பிக்பாஸ் - உள்ளுறை நினைவுகளைத் தூண்டுதல்


உள்ளுறையும் நினைவுகள் ( EMOTIONAL MEMORIES) என்றொரு கலைச்சொல்லைப் பிக்பாஸ் நிகழ்ச்சியின் பின்னால் இருக்கும் நிகழ்ச்சித் தயாரிப்பாளர்கள் அறிந்திருப்பார்கள் என்றே நினைக்கிறேன். நேரடியாக அதனைக் கற்றவர்களாக இல்லையென்றாலும், நடிப்புப் பயிற்சிகள் பற்றிய பொது அறிதலில் அந்தச் சொல்லைக் கேள்விப்பட்டிருக்கலாம். அந்தச் சொல்லைக்கேள்விப்படாமலே கூடப் பயன்படுத்தியிருக்கலாம்.
நிகழ்ச்சித் தயாரிப்பாளர்கள் அறிந்திருக்காவிட்டாலும், நடிகர் கமல்ஹாசன் நிச்சயம் அறிந்திருப்பார் என்ற நம்பிக்கை எனக்குண்டு. இந்த நம்பிக்கையில் நேற்றைய அவரது உரையில்- உரையாடலில் அந்தக் கலைச்சொல்லையும், அதனை உருவாக்கிப் பயன்படுத்திய ஸ்டானிஸ்லாவ்ஸ்கியையும் குறிப்பிடுவார் என்றும் எதிர்பார்த்தேன். ஆனால் அது நடக்கவில்லை.

இந்தப் பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஸ்டானிஸ்லாவ்ஸ்கியின் உள்ளுறையும் நினைவுகளைக் கடந்த வார நிகழ்ச்சியில் பயன்படுத்தினார்கள். அந்தப் பயன்பாடு பங்கேற்பாளர்களிடமும் பார்வையாளர்களிடமும் நல்ல தாக்கத்தையும் வரவேற்பையும் பெற்றுத் தந்தது. அதன் மூலம் இந்தப் பருவத்தின் பங்கேற்பாளர்களில் சிலருக்கு இந்த வாரம் மறக்கமுடியாத வாரமாக மாறியிருக்கும். அந்தப் பயிற்சியை மேற்கொண்ட விசித்ரா, தினேஷ், விஷ்ணு, மாயா கிருஷ்ணன், மணிச்சந்திரா, பிராவோ, பூர்ணிமா ஆகியோர் மீது கூடுதல் கவனம் விழுந்திருக்கும்.

நிகழ்ச்சியை விவரித்து நட த்தும் கமல்ஹாசனிடம் அவர்களுக்குப் பாராட்டு கிடைத்தது. குறிப்பாக 20 ஆண்டுகளுக்கு முன் தான் சந்தித்த பாலியல் துன்புறுத்தலை முன்னிட்டுச் சினிமாவிலிருந்து விலகியிருந்ததாகச் சொன்ன விசித்ராவின் ஆழ்நிலை நினைவுக்காகவும், மனதிலும் உடலிலும் பதிந்த வடுக்களை விவரித்த பிராவோவின் விவரணைக்காகவும் கமல்ஹாசன் வெகுவாகப் பாராட்டினார். இதுபோன்ற நினைவுகளைச் சொல்வதற்கான தைரியம் உருவானதைச் சுட்டிக்காட்டவும் செய்தார். அவரிடம் பாராட்டுப் பெற்ற பிராவோவுக்கு அதிகப்படியான வாக்குகள் கிடைக்கவில்லை என்பது தனியாக விவாதிக்க வேண்டிய ஒன்று. 

 எமோசனல் மெமரி என ஆங்கிலத்தில் குறிப்பிடப்படும் ஆழ்நிலை நினைவுகளை மேலே கொண்டுவரும் பயிற்சிக்குப் பிக்பாஸ் நிகழ்ச்சியாளர்கள் சொன்ன பெயர், “உங்கள் வாழ்க்கையின் பூகம்ப நிகழ்வு” என்பது. தனது வாழ்க்கையில் நடந்த பூகம்ப நிகழ்வைச் சொல்லும் – ஆழ்நிலை நினைவைச் சொல்லத் தொடங்கிய முதல் போட்டியாளர் விசித்ரா. திரைத்துறை வாழ்க்கையில் ஒரு நடிகைக்கு நடப்பதற்குச் சாத்தியமான ஒரு நிகழ்வைக் கச்சிதமாக வடிவமைத்து, விவரிக்கும்போது அதுவரை அவர் வெளிப்படுத்திய உடல்மொழியையும் குரலையும் மாற்றிப் பேசியதின் மூலம் அவர் சொன்ன நிகழ்வின் காலத்துக்குப் பிக்பாஸ் நிகழ்ச்சியின் பங்கேற்பாளர்களை அழைத்துச்சென்றார். அவரோடு சேர்ந்து பிக்பாஸ் நிகழ்ச்சியைத் தொலைக்காட்சியில் பார்த்துக்கொண்டிருந்த பார்வையாளர்களும் ஒன்றி நின்றிருக்கத் தூண்டியிருக்கும். பெரும்பாலும் பாத்திரங்களின் துயரநிகழ்வுகளை மேடையிலோ, காமிரா முன்போ கொண்டுவர முடியாமல் தவிக்கும் நடிப்புக்கலைஞர்களிடம் அந்தத் துயரக்காட்சியை ஒத்த நிகழ்வொன்றை நினைவூட்டி, நடிக்க வேண்டிய பாத்திரத்தோடு ஒன்றச் செய்வது இயக்குநர்கள் செய்யும் உத்தி.

அந்த உத்தியின் சாயலில் பூகம்ப நிகழ்வாகப் பிக்பாஸில் பயிற்சி செய்தார்கள். தான் தரப்போகும் போட்டிகளைச் சொல்லிவிட்டு அந்தப் போட்டிகளில் வெற்றி பெறவில்லை என்றால், கொத்தாக - கூட்டமாகப் போட்டியாளர்கள் வெளியேற்றப்படுவார்கள் என்ற அதிர்ச்சியைப் போட்டியின் முடிவாக அறிவித்துக் கூடுதல் கவனத்தைக் கொண்டுவரும்படி தூண்டப்பட்டது. போட்டியாளர்கள் ஒவ்வொருவரும் வெளியேறும் பட்டியலில் இடம்பெறக்கூடாது என்ற நோக்கத்தில் ஆர்வத்துடன் பங்கேற்றார்கள். எளிதான பூகம்பப்போட்டிகளை வெளியிலிருந்து அளித்த பிக்பாஸ், அவரவர் வாழ்க்கையில் நடந்த பூகம்ப நினைவுகளை வெளியில் சொல்லலாம் என்ற வாய்ப்பை உருவாக்கித் தந்தார். அதனைத் தொடங்கி வைத்த விசித்ரா விவரித்த துயர நினைவைப் போலவே ஒவ்வொருவரும் அவரவருக்கு நேர்ந்த துயர நிகழ்வுகளை மேலே கொண்டு வந்து வழங்கிப் பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் புதுப் பரிமாணத்தை உண்டாக்கினார்கள். அதிலும் மாயாவும் பூர்ணிமாவும் மட்டும் வழக்கம்போலத் தங்களைச் சாகசக்காரர்களாக முன்வைக்க நினைத்து விலகி நின்றார்கள்.

*****

நடிகர்களிடமிருந்து நடிப்பைக் கொண்டு வருவதற்கான பயிற்சிகளை உருவாக்கி, கோட்பாட்டைத் தந்த முதன்மையான ஆளுமைகளுள் தலைமை ஆசிரியர் ரஷ்ய நாட்டின் ஸ்டானிஸ்லாவ்ஸ்கி. அவரது நடிப்புப்பயிற்சிகளைக் குறிக்கும் கலைச்சொல் முறையியல் நடிப்பு ( METHOD ACTING ) என அழைக்கப்படும். அவரது நூல்கள், நடப்பியல் வகை நடிகர்களுக்கான பயிற்சிப்புத்தகம். அம்முறையியலில் குறிப்பிட்ட வகையான நடிப்பு வரவில்லை என்றால், அதனைக் கொண்டுவருவதற்குப் பயன்படும் அந்த உத்திக்கு ஸ்டானிஸ்லாவ்ஸ்கி சொன்ன கலைச்சொல் தான் ஆழ்நிலை நினைவுத் தூண்டல். அவர் காலத்தில் நாடக நடிகர்களுக்காகவே அந்தப் பயிற்சியை வடிவமைத்துத் தந்தார். நாடகத்தில் இருக்கும் நிகழ்வுகளை ஒத்த நிகழ்ச்சிகள் நடிகர்களின் வாழ்க்கையில் நடந்திருக்கிறதா எனத் தேடிக் கண்டுபிடித்து, ஆழ்நிலையில் இருக்கும் - அந்த நினைவுகளை- மேல் நிலைக்குக் கொண்டுவந்து காட்சியோடு பொருந்தச் செய்யும் உத்தி அது. அந்த உத்தியில் நன்மையும் உண்டு; சிக்கலும் உண்டு. ஆனால் நல்லதொரு பயிற்சி அது.


********

நடிகர்களுக்கான நடிப்புப் பயிற்சியில் இன்றும் முதன்மை ஆசிரியராக இருப்பவர் ரஷ்யநாட்டு அரங்கியலாளர் ஸ்டானிஸ்லாவ்ஸ்கி (STANISLAVSKY). தாள லயம் அல்லது ஒலியின் படிநிலைகள் வழியாகவே பயிற்சிகளை மேற்கொண்ட பாரம்பரிய நடிகர்களைத் தவிர்த்து விட்டு மனிதர்களின் அறிவுசார் சாத்தியங்களை முதன்மைப்படுத்திய நவீனத்துவத் தன்மையோடு நடிப்பதற்கான பயிற்சிகளை முழுமையாகப் பேசியவர்  ஸ்டானிஸ் லாவ்ஸ்கி தான். நவீன ரஷ்ய அரங்கியலின் முதன்மையானவரும் முன்னோடியுமான கான்ஸ்டண்டின் ஸ்டானிஸ்லாவ்ஸ்கி (1863-1938) உருவாக்கிய நடிப்புப் பயிற்சிகள் இன்றளவும் உலக நாடகப் பள்ளிகளில் படிக்கப்படுகின்றன. நடிப்பு முறைமைகள் என்றாலே உலகம் முழுமையும் ஸ்டானிஸ்லாவ்ஸ்கியின் நடிப்பு முறைமைகள் (System of Acting) என்றே புரிந்து கொள்ளப்படும். நாடகக்காரர்கள் மட்டுமல்லாமல் திரைப்படக்காரர்களும் அவரது நடிப்பு முறைகளையே அடிப்படைப் பயிற்சியாகக் கொள்கின்றனர். ஸ்டானிஸ்லாவ்ஸ்கியின் முறைமைகள் நடப்பியலோடு நெருங்கிய தொடர்புடையன. அந்த அடிப்படையின் மேல் தான் பின்னர் வந்த பிரக்டின் விலகி நிற்கும் நடிப்பு, அர்த்தோவின் அபத்த நடிப்பு போன்றனவும் உருவாகின.

1981 இல் மதுரைப்பல்கலைக்கழகத்தமிழ்த்துறையில் பட்டமேற்படிப்பு மாணவனாகச் சேர்ந்தேன். அங்கே பணியாற்றிய மு.ராமசுவாமி நிஜநாடக இயக்கம் என்னும் நவீன நாடகக்குழுவை நடத்தி வந்தார். அக்குழுவோடு எனது நண்பர் த.பரசுராமன் இணைந்து செயல்பட்டு வந்தார். அவர் வழியாக நானும் அக்குழுவில் இணைந்து நடிகனாகவும் பின்னரங்க வேலையிலும் ஈடுபட்டேன். அந்த அனுபவத்தில் புதுவைப்பல்கலைக்கழக நாடகத்துறையில் விரிவுரையாளர் பணி கிடைத்தது. அப்பணியில் 1989 ஜூலை முதல் தேதியில் இணைந்து 1997 பிப்ரவரி வரை பணியாற்றினேன். இந்தப் 17 ஆண்டுக்காலத்தை எனது நாடக விருப்பக்காலம் எனச் சொல்லலாம். அப்போது தமிழ்நாடகங்கள், இந்திய நாடகங்கள், உலக நாடகங்கள் என வாசித்தேன். நாடகப்பனுவல்களாகவும், அரங்கியல் முறைகளாகவும் கோட்பாடுகளாகவும் அவற்றைப் புரிந்துகொண்டேன். நாடக விருப்பம் ஏற்பட்ட முதல் ஆண்டிலேயே எனக்கு ஸ்டானிஸ்லாவ்ஸ்கி அறிமுகம். அந்தப் பெயரையும் அவரது முறையியலையும் கற்பித்தவர் பேரா.சே.ராமானுஜன். அதனால் தான் சொல்கிறேன் பிக்பாஸ் நிகழ்ச்சியின் இந்தப் பகுதி ஸ்டானிஸ்லாவ்ஸ்கியின் உள்ளுறை நினைவுகளைத் தூண்டுவது என்று.. 


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ராகுல் காந்தி என்னும் நிகழ்த்துக்கலைஞர்

நவீனத்துவமும் பாரதியும்

தமிழில் நடப்பியல் இலக்கியப் போக்குகள்