எம்.கோபாலகிருஷ்ணன்: இயற்பண்பியல் எழுத்தின் வலிமை

ஒடக்காடு பெரியப்பா வீட்டில் ஓர் இரவு- இப்படியொரு தலைப்பில் ஒரு சிறுகதையை இம்மாத (டிசம்பர்/24) அந்திமழை வெளியிட்டுள்ளது. எழுதியவர் எம்.கோபாலகிருஷ்ணன் இந்தக் கதையை வாசித்து முடித்தவுடன் கடந்த மாதம் -நவம்பர் - காலச்சுவடுவில் வந்திருந்த அவரது கதையை வாசிக்கவில்லை என்பது நினைவுக்கு வந்தது. அந்தக் கதையின் தலைப்பு: சுழல் . அந்தக் கதையையும் வாசிக்கவேண்டும் என்று தோன்றியது. அப்படித் தோன்றியதற்கு ஒரு காரணம் இருந்தது. இரண்டுமே எனது மாணவப்பருவத்தைக் காலப்பின்னணியாகக் கொண்டிருந்தன என்பது. அத்தோடு இயற்பண்புவாத எழுத்து நுட்பத்தைக் கைவிடாதவர் எம்.கோபாலகிருஷ்ணன் என்பதும் இன்னொரு காரணம்.