காமத்தை மையமாக்குதலும் சொல்முறைச் சோதனைகளும்: சுஜாவின் இரண்டு சிறுகதைகள்
திறனாய்வு என்ன செய்யும்?
வாசித்து முடித்த பனுவலின் நுட்பங்களை, எழுத்தாளரின் வாழ்க்கை குறித்த பார்வையை, உருவாக்கும் பாத்திரத்தின் மீதான முழுமையான இருப்பின் நிலைகளைக் கொண்டாடும் அல்லது போதாமையைச் சுட்டிக்காட்டும். அதன் மூலம் ஏற்கெனவே வாசித்தவர்களுக்கு அவர்கள் வாசித்த பனுவல் உருவாக்கும் மகிழ்ச்சியான கணங்களைக் கண்டு சொல்லும் பணியைச் செய்கிறது. அதற்கு மாறாக அந்தப் பனுவலை வாசிக்காமல் இருப்பவர்களை வாசித்துப் பார்க்கும்படி தூண்டும். இந்தக் கட்டுரை அதையே செய்கிறது.
ஏற்கெனவே வாசித்தவர்களின் கதைகள் என்றாலும், அச்சிதழ்களில் பார்த்த உடனேயே வாசித்துவிட வேண்டும் என்று தோன்றுவதில்லை. இதழ்களில் அச்சிடப்படும் விதம் சில நேரங்கள் உடனடி வாசிப்பைத் தூண்டுவதுண்டு. அச்சிடப்படும் கதையின் சில வரிகளைப் பெரிதாக்கியோ, சாய்வெழுத்தில் தந்தோ அழுத்தமிட்டுக் காட்டும் இதழாசிரியர்கள் அந்தக் கதையை அல்லது கட்டுரையை வாசிக்கதூண்டும் வேலையைச் செய்ய நினைக்கிறார்கள். அதல்லாமல், கதையை எழுதியவர், கதைக்கு வைக்கும் தலைப்புகள் உடனடி வாசிப்பைத் தூண்டுவதும் உண்டு.
சுஜா செல்லப்பன் - ஏற்கெனவே அறிமுகமான எழுத்தாளரின் பெயர். சிங்கப்பூர் பின்னணியில் கதைகளை எழுதுபவர் என்பதை முன்பு வாசித்த அவரது கதைகள் காட்டியுள்ளன. சிலவற்றை அச்சிதழ்களிலும் இணைய இதழ்களிலும் வாசித்ததுண்டு. இதழ்களில் அவரது கதைகள் கண்ணில் படும்போது வாசிக்கவேண்டிய கதைகள் என மனம் நினைத்துக்கொள்ளும். ஆனால் இந்தக் கதைகளின் தலைப்புகள் உடனடி வாசிப்பைத் தூண்டுவதாக இருந்தன. முதல் கதை தமிழ்வெளி/ அக்-டிசம்பர் 24, இதழில் அச்சிடப்பட்டுள்ள நோக்குங்கால். இரண்டாவது கதை காலச்சுவடு/நவம்பர்,24 வந்துள்ள அகலாது அணையாது. இரண்டு கதைகளுக்குமான தலைப்புகள் திருவள்ளுவரின் குறட்பாக்களில் இடம்பெற்ற சொற்றொடர்கள். அச்சொற்றொடர்கள், ரசிக்கத்தக்க படிமக் காட்சிகளைத் தரவல்லன. பல தமிழ்ச் சினிமாக்களில் காட்சிகள் ஆக்கப்பட்ட படிமங்களும் கூட. பாடல்களில் மாற்றி எழுதப்பட்ட வரிகளும் கூட.
கதைகளை வாசித்து முடித்தபின் இரண்டுவிதமான சோதனைகளை அந்தக் கதைகளில் சுஜா செல்லப்பன் நிகழ்த்தியுள்ளார் என்பது புலப்பட்டது. ஒன்று கதைகளின் தலைப்புத் தேர்வும் அதன் அர்த்தத்தை மாற்றிக்கட்டமைத்த புதுமையும்.இன்னொன்று சொல்முறையில் (NARRATIVE) செய்யும் சோதனை. குறட்பாக்களின் வரிகளிலிருந்து தலைப்புகளைத் தேர்வு செய்ததின் மூலம் ஏற்கெனவே கடைப்பிடிக்கப்பட்ட கதையாக்கம் ஒன்றில் மாற்றுச்சோதனை ஒன்றைச் செய்து காட்டியுள்ளார். அதன் விளைவாக அவரது கதையை வாசிக்கும்போது ஒருவித விலகல் நடக்கிறது. வாசிப்பவர்களுக்கு ஏற்படும் விலகல் அல்லது தூரப்படுத்துதல் இரண்டு விதமானவை. ஏற்கெனவே வாசித்த பல பனுவல்களைப் போல இருக்கிறது என்ற மனநிலையைத் தரும் தூரப்படுத்தல் தொடர்ந்து வாசிப்பதைத் தடுத்துவிடும். அதற்கு மாறாக இன்னொரு வகை விலகலை வாசிப்பவர்கள் சந்திப்பார்கள். அந்த விலகல், சிந்திக்கத் தூண்டும் விலகல் அல்லது தூரப்படுத்துதல். வாசித்துக் கொண்டிருக்கும்போது சந்திக்கும் திருப்பம் அல்லது புதிய உத்தி அல்லது தொடர்பற்ற பாத்திர நுழைவு போன்றவற்றால் ஏற்படும் விலகல் இத்தகையது. இது வாசிப்பின் வேகத்தைத் தடைசெய்யும். ஆனால் நிறுத்தி யோசித்துவிட்டுத் தொடரச் செய்யும். இவ்வகையான தூரப்படுத்துதல் திட்டமிட்ட எழுத்தின் நோக்கமாக இருக்கக்கூடியது.
ஹிட்லரின் காலத்தில் ஜெர்மனியில் இருந்த அரங்கவியலாளரும் கவிஞருமான பெர்ட்டோல்ட் பிரெக்ட் தூரப்படுத்துதல் பற்றி விரிவாகப் பேசியுள்ளார் கலைகளில் உருவாக்கப்படும் தூரப்படுத்துதல் என்பது அக்கலைப்படைப்பை நிதானமாகவும் விமரிசனப்பார்வையோடும் அணுகத்தூண்டுவது.அடிப்படையில் நடப்பியல்வாதத்தை மறுதலித்து உருவாக்கப்படும் கலைப்பார்வை அது. சுஜா செல்லப்பனின் இவ்விரு கதைகளிலும் அத்தகைய தூரப்படுத்துதல் நிகழ்த்தப்பட்டுள்ளது.
அகலாது அணையாது
இதுவரை அவளுக்குச் சரியான ப்ரா அமைந்ததே இல்லை. இந்த விஷயம் அவளுக்கு மட்டுமே தெரிந்ததாக இருக்கும்வரை பிரச்சினையாக இல்லை.
அகலாது அணையாது கதையின் தொடக்கம் இது. ‘சரியான ப்ரா அமைந்ததில்லை’ “பிரச்சினையாக இருந்ததில்லை” என்ற இரண்டு சொற்றொடர்களைக் கொண்ட் இந்தத் தொடக்கம் கதையைத் தொடர்ந்து வாசிக்கத்தூண்டும் தொடக்கம்.
அந்தத்தொடக்கம் கதைக்குள் திரும்பத்திரும்ப வெவ்வேறுவிதமாக நிகழ்த்தப்படுகிறது. ஒரு ஒவ்வொரு பெண்ணின் வாழ்க்கையிலும் இந்தக் காலகட்டம் நிகழ்கிறது. பருவம் அடைதல் என்பதாகச் சொல்லப்படும் அந்த மாற்றத்தைச் சடங்காக்கிக் கொண்டாடும் பெயராக பூப்படைதல் இருக்கிறது. பூ ஒன்றின் உருவம், நெகிழ்ச்சி, மலர்ச்சி,தளர்ச்சி என்பதைப் பண்பாகவும் உருவகமாகவும் படிம அடுக்குகளாகவும் நினைவுபடுத்தும் சொல்லாடல் பூப்புனித நீராட்டு. உடல் வாகு, உணவுமுறைக்கேற்ப, குறிப்பிட்ட வயதில் பெண் உடலில் நடக்கும் மாற்றம் அது. முலை அரும்பிப் போதாகிக் காய், கனியாகும் உருவகங்கள் ஆண் -பெண் உறவில் ரசிக்கத்தக்க சொல்லாடலாகவும் ரகசியமாய் உச்சரிக்கப்படும் சொற்களாகவும் இருக்கின்றன. முலையின் தோற்றத்தோடு காதலின் தோற்றமும் காமத்தின் வெளிப்பாடுகளும் இணைக்கப்பட்ட ஒன்று. இந்த இணைப்பையும் திருக்குறளின் ஒரு குறள் காட்சிப்படுத்துகிறது. காலை அரும்பிப் பகலெல்லாம் போதாகி மாலை மலரும் இந்நோய் என்பது அந்தக் குறள்(1227 )
பெண்ணின் உடலில் ஏற்படும் முலையின் வளர்ச்சி, அதன் தோற்றங்கள் மாற்றங்கள் சார்ந்து ஏற்படும் உடல் கிளர்ச்சி, அவளுடைய மனக்கிளர்ச்சிகளோம் தொடர்புடையது. அந்தக் கிளர்ச்சியும் எண்ணங்களும் பிந்திய வாழ்க்கையில் அகலாது அணுகாது தொடரப்போகும் ஒன்று. அதனைப் பேசுவது என்பது பெண்ணுடலைப் பேசுவது; அதன் ரகசியத்தைப் பேசுவது; அதன் வலிமையைப்பேசுவது. அதனைக் கொண்டாடும் பெண்ணின் முழுமையையும், அடைய நினைக்கும் ஆணின் தவிப்பையும் பேசுவது. ஆனால் சுஜாவின் கதை நேரடியாகப் பேசாமல், முலையோடு தொடர்புடைய , ப்ரா என்னும் புதிதாக அணியத்தொடங்கும் ஆடையின் வழியாக இணைநிலைப்படுத்தி காட்டுகிறது. புதிதாகக் கிளர்ந்து எழுந்த முலைகள் மறைக்கப்பட வேண்டிய உறுப்பு என்பதால் அதனை மறைப்பதற்காக வாங்கும் ப்ராக்களும் மறைக்கப்பட வேண்டிய ஆடையாகிவிடுகிறது. ப்ராவை அறிதல் தொடங்கி, அணிந்திருத்தல் வரை ரகசியமான வினைகளாக ஆக்கப்படுகின்றன. அந்த ரகசியமாக்கல், ப்ராவோடு தொடர்புடையது என்பதாக நினைக்கப்பட்டாலும் உண்மையில் அந்த உள்ளாடையால் மறைக்கப்படும் முலைகளோடு தொடர்புடையது.
அவளுக்குச் சரியான ப்ரா அமைந்ததில்லை என்ற ஆரம்பத்தில் தொடங்கும் ஆர்வம் அல்லது ஆவல்,
சிதறிக்கிடக்கும் ப்ராக்கள் எல்லாவற்றிற்கும் மேலே அந்த நீலநிற ப்ரா பொம்மைக்கு மாட்டப்பட்டதைப் போல் முற்றிலும் விரிந்து, அளவும் வடிவமும் காட்டியபடிக் கிடந்தது.
அதற்குக் கொஞ்சமும் கூச்சமே இல்லை.
என்று கதை முடியும்போது நிலைகொண்டு நிற்கவேண்டும். ஆனால் அப்படி நிலைகொண்டு நிற்கவிடாமல் தவிப்பு மனநிலையை உருவாக்குகிறது என்பதுதான் கதையின் வெற்றி. அந்தத் தவிப்பு மனநிலையை உணர விரும்புபவர்கள் கதையை வாசித்துப்பார்க்கவேண்டும். பெண்ணுடலைப் பேசிய கதைகளில் சுஜாவின் இந்தக் கதை ஆழமும் நுட்பமும் கொண்ட சிறந்த சிறுகதை. தமிழில் எழுதப்பெற்ற ஆகச் சிறந்த கதைகளில் ஒன்றாகக் கொண்டாடப்பட வேண்டிய கதை.
****
நோக்குங்கால்
கதையின் தொடக்கத்திற்கும் முடிவுக்கும் ஓர் இணைப்புச் சங்கிலியை உருவாக்குவதின் மூலம் கதைகளுக்கு வடிவச் செம்மை உருவாக்குவதை மரபான பார்வை என்று சொல்ல வேண்டியதில்லை.சுஜா செல்லப்பனின் நோக்குங்கால் அப்படியொரு வடிவச் செம்மையோடுதான் உள்ளது. இதோ அதன் தொடக்கமும் முடிவும்:
பலரும் தற்செயலாய்க் கண்கள் சந்தித்துக்கொள்ளும் அந்தத் தருணமேனும், ஒரு குட்மார்னிங் அல்லது புன்னகை அல்லது தலையசைப்பில் என்னை அங்கீகரித்துவிட, இவர்கள் மட்டும் அந்தச் சந்திப்பிற்கு வழியே இல்லை என்பதுபோல் கண்களை எங்கோ வைத்திருப்பது எப்படி? யாருக்கும் முகம் கொடுப்பதே இல்லை, ஏதோ வேறு உலகத்தில் சஞ்சரிப்பது போல. அவர்கள் உலகில் நான் இல்லை என்பது என்னை ஏனோ தொந்தரவு செய்தது. என்னுலகில் அவர்கள் பூதாகரமாகிப் போனதும் அதன் காரணமாகத்தான்.
இது தொடக்கம்.
ஒரே நேரத்தில் ஒற்றைப் பார்வையென மூவரும் என்னைப் பார்த்தனர். நானும் மூவரையும் ஒன்றாகப் பார்த்தேன். மூவர் நால்வரானோம். இப்போது அங்கு வேறு யாருமே இல்லை, மீன்கொத்தியின் உச்சஸ்தாயிக் குரல் மட்டும் கேட்டுக்கொண்டிருந்தது. மேலெழும் சூரியனை மேகமொன்று வேகமாக நகர்ந்து சென்று மறைத்தது.
இது முடிவு. வடிவச்செம்மையோடு எழுதப்படும் கதைகள் அதன் இயல்பிலேயே வாசிப்பவர்களை உடன் அழைத்துச் செல்லும் இயல்பு கொண்டவை.புனைகதைக்குள் உருவாக்கப்படும் நிகழ்வு வரிசையில் நேர்நிலையை- Linearity- உருவாக்கி நகர்வதன் மூலம் நடப்பியல் பாங்கை உருவாக்கிக்கொள்ளும். அந்நடப்பியலில் கால ஒழுங்குச் சிதைவு இருக்கக்கூடும் என்றாலும், எண்ணவோட்டங்களில் சிதைவு இருக்காது. முன்னும் பின்னுமாக நகரும் தன்மை வழியாக அந்த நேர்நிலை உருவாகும். அப்படி எழுதப்பட்ட கதைக்குள் நடப்பியல் வழியாக உருவாக்கப்படும் அர்த்தத்தளத்தை – நடப்பியலிலிருந்து விலக்கிச் சிந்திக்க வைக்கும் சொல்லாடலை உருவாக்குவது தேர்ந்த எழுத்தின் வெளிப்பாடு. சுஜா செல்லப்பனின் நோக்குங்கால் கதை அதைச் செய்துள்ளது.
யாரொருவரையும்/ ஏதொன்றையும் நோக்கங்கால் அதற்குப்பின்னால் சில நோக்கங்கள் இருக்கும். அதன் வழியாக ஒரு நோக்கு உருவாகும். செய்யுள் உறுப்புகளில் ஒன்றாகச் சொல்லப்படும் நோக்கு என்பதைச் செய்யுளின்/ இலக்கியத்தின் உறுப்பாக வரையறை செய்துள்ளது தொல்காப்பியம். அதனை விளக்க, “மாத்திரை முதலா அடிநிலை காறும் நோக்குதல் காரணம் நோக்கு எனப்படுமே”(செய்யுளியல். 100) அதனை விளக்கும் உரையாசிரியர்கள் ஒரு கவிதைக்குள் இருக்கும் எல்லா உறுப்புகளையும் – மாத்திரை, எழுத்து, சீர், தளை, தொடை, அடி ஆகிய ஆறையும் ஒருங்கிணைப்பு செய்தலே – ஓர்மையோடு பார்த்தலே நோக்கு என்கின்றனர். இந்த ஒருங்கிணைப்பையே அரிஸ்டாடிலின் கவிதையியல் – Unity -என்கிறது. தொல்காப்பியம் பேசுவது கவிதையின் ஓர்மை; அரிஸ்டாடில் பேசுவது நாடகத்தின் ஓர்மை. இந்த நோக்கு ஓர் ஆசையின் விளைவு. ஆசையை ஆங்கிலத்தில் - Desire - என்ற சொல்லால் குறிப்பதுண்டு. அந்தச் சொல்லுக்குத் தமிழில் விருப்பம், விழைவு என்ற இணைச்சொற்களும் இருக்கின்றன. இச்சொற்கள் எல்லாம் காமத்தோடும் காதலோடு உறவுபட்ட சொற்கள்.
சுஜா செல்லப்பனின் கதையில் வரும் பெண்ணுக்கு -நேரடியாகப் பெண் அடையாளம் இல்லை என்றபோதிலும் பெண்ணாகக் கருதி வாசிக்கவே அதிக வாய்ப்புகள் உள்ளது. அந்தப் பெண்ணுக்குத் தன்னை நோக்காமல் ஒதுக்கும் நபர்கள் குறித்து உருவாகும் கேள்விகளே அந்த நோக்கு. அந்த நோக்குக்குப் பின்னால் ஓர் ஆசை இருக்கிறது. அம்மூவரையும் தன்னைக் கவனிக்க வைக்கவேண்டும் என்ற விருப்பம் சார்ந்த ஆசை. அந்த நோக்குக்குப் பின்னால் இருப்பது எதிர்ப்பாலினம் சார்ந்த பார்வைக்கோணம். ஆண் உடலை நோக்கும் பெண் உடல்; பெண் உடலை நோக்கும் ஆண் உடல் என்ற எதிரிணை விழைவுகள்.
கதைக்குள் உருவாக்கப்படும் நிகழ்வு வரிசைகள் அன்றாடம் நடக்கும் காலை நடை அல்லது மெல்லோட்டம் சார்ந்த நிகழ்வுகளே. அதற்காகப் பலரும் வரும் பொதுவெளியில் ஒவ்வொருவரும் எதிரே வருபவரைக் கண்டு கொள்பவர்களாக – நோக்குபவர்களாக இருக்க, இந்த மூவரும் அதிலிருந்து விலகியவர்களாக இருக்கிறார்கள். இந்த விலகலுக்கு என்ன காரணம் இருக்கக் கூடும் என்பதை விவரித்துப் பேசும் கதைக்குள் முடிவாக – ஒரு முடிச்சாகக் காமம் சார்ந்த காட்சிகள் அடுக்கப்பட்டுள்ளன. அந்தக் காட்சிகள் மனிதர்களின் விருப்பம் சார்ந்தனவாக இல்லாமல் நீரில் திரியும் உடும்பு இணைகளின் புணர்ச்சியாக விவரிக்கப்பட்டு, மனிதர்களின் இயல்பு, விலங்குகளின் இயல்புகளோடு இணைநிலைப்படுத்தப்பட்டுள்ளது. அந்த மாற்றம் அல்லது தாவுதல்(Swift) கதைக்குள் உருவாக்கப்பட்டுள்ள முக்கியமான ஒன்று.
சுஜாவின் கதையில் உண்டாக்கப்பட்டுள்ள தாவுதல் மையமற்ற விவரிப்பின் வழியாக நிகழ்த்தப்பட்டுள்ளது. மையமற்று விவரிப்பில் பரப்பி வைக்கப்படும் நிலம், நீர் காற்று, வான், விசும்பு எனப் பரவல் வகைக் கதையாடல் வடிவத்தில் எழுதப்பட்டுள்ள நோக்குங்கால் கதையின் சொல்முறை தமிழில் புதுவகையானது. இயற்கைப்பொருட்கள் ஐந்தின் சேர்க்கையான உலகில் மனிதர்களும் விலங்குகளும் பறவைகளும் தாவரங்களுமென ஒவ்வொன்றின் இயக்கமும் அவரவர் நோக்கில்/ பார்வைக்கோணத்தில் இருக்கின்றன. நமது பார்வைக்கோணத்தைவிட்டு விலகிவிடும் ஒவ்வொன்றையும் நமக்குள் உள்வாங்கிவிட நினைக்கிறது மனித மனம். அம்மனத்தைக் கட்டி வைத்திருப்பதில் காமத்தின் – உடல் இச்சையின் இயக்கம் அலாதியானது. அதை நேரடியாகப் பேசாமல் இன்னொரு இணைநிலை வழியாகவே விவரிக்கிறார். இந்தக் கதையிலும் மையமற்ற விவரிப்பின் வழியாகவே பெண்ணின் உணர்வுகள்/ காமம் கதையின் மையமாகியிருக்கிறது.
******
சோதனையும் புதுமையும்
இரண்டு கதைகளின் நிகழ்வுகளுமே நடப்பியல் தன்மையோடு வரிசையாகச் சொல்லப்பட்டுள்ளன.. ஆனால் வேக வாசிப்பாகச் செல்லவிடாமல் திருப்பங்களோடு நிகழ்த்தப்படுகின்றன. இந்த நிகழ்த்துதல் காரணமாக, வாசிப்பவர்கள் ஒவ்வொரு பாத்திரத்தையும் காட்சித் துணுக்கையும் கதையின் தலைப்போடு அவ்வப்போது உரசிப்பார்த்துக் கொள்ளத் தூண்டப்படுகிறார்கள். தூரப்படுத்துதலும் உரசிப்பார்த்தலும் ஒருங்கிணைந்து, நவீன மனத்தையும் பழைய இலக்கியப்படிமத்தையும் நேர்நிலையாகவும் எதிர்நிலையாகவும் காட்சிப்படுத்திப் புரிந்துகொள்ளத் தயாரிக்கப்படுகிறார்கள்.
இச்சோதனை முயற்சி, தமிழின் முதன்மைச் சிறுகதை எழுத்தாளரான புதுமைப்பித்தன், தொடங்கி இமையம் வரை பலரும் செய்துபார்த்த சோதனை முயற்சிகள் தான். ஆனால் சுஜா செல்லப்பன், அவர்களின் பாதையையே பின்பற்றாமல் மாற்றுமுறை ஒன்றைச் செய்வதன் மூலம் புதிய சோதனையைச் செய்தவராகின்றார். புதுமைப்பித்தனின் சாபவிமோசனம், அகல்யா போன்ற கதைகளையும், மிக அண்மையில் இமையம் எழுதிய தண்டகாரண்யத்தில் சீதை (உயிர்மை, ஜூலை,2024) வாசித்தவர்களுக்குத் தொன்மத்தை மறு ஆக்கம் செய்வதின் தன்மை, நோக்கம் போன்றவற்றைத் திரும்பவும் விளக்க வேண்டியதில்லை. எழுத்தாளர்களின் சமூகவியல் நோக்குக்கேற்பப் பழையனவற்றை - புராண/ இதிகாச/ காப்பியக்காட்சிகளைச் சமகாலத்திற்குரிய விவாதத்தோடு மறு ஆக்கம் செய்வது தமிழ் நவீன இலக்கியவாதிகள் மட்டும் செய்யவில்லை. இந்தியமொழிகளிலும் உலக மொழிகள் பலவற்றிலும் நிகழ்ந்துகொண்டே இருக்கும் புத்தாக்கச் சோதனைகளே.
தொன்மத்தைப் புத்தாக்கம் செய்யும் வரிசையில் சுஜா செல்லப்பனை நிறுத்தினாலும், அந்த மாதிரியை அவர் அப்படியே பின்பற்றவில்லை என்பதைச் சுட்டிக்காட்ட வேண்டியுள்ளது. தொன்மக்கதையையோ, பாத்திரத்தையோ அவர் தனது கதையாக்கத்தில் நிகழ்த்தாமல், அதற்கு மாறாகத் தலைப்புத் தேர்வில் ஒரு கடந்த காலத்தை – உருவகநிலையை நினைவூட்டுகிறார். அதன் வழியாகச் சமகால நிகழ்வுகளின் மீதும் பாத்திரங்களின் மீதும் அந்த அர்த்தங்களை உருவாக்கிப் பொருத்திக்காட்டுகிறார். இதன் மூலம் தானொரு நவீனச் சிறுகதை ஆசிரியர் என்பதை நிறுவிக் கொள்கிறார்.
இதனைக் கொஞ்சம் கூடுதலாக விளக்கம் செய்யலாம் :
தமிழ்வெளியில் வந்துள்ள நோக்குங்கால் என்ற தலைப்புச் சொல், திருக்குறளின் காமத்துப்பாலில் “யானோக்குங்கால் நிலன் நோக்கும் யானோக்காக்கால், தானோக்கி மெல்ல நகும்” (1094 / குறிப்பறிதல் அதிகாரம்) இடம்பெற்றுள்ளது. அக்குறளுக்குள் சொல்பவனாகத் தலைவன் இருக்கிறான்; சொல்லப்படும் காட்சிகளை உருவாக்கும் உடலாகத் தலைவி இருக்கிறாள். அந்தக் குறட்பா உருவாக்கும் காட்சிச் சித்திரமே அற்புதமானது. ஆர்வத்தோடு காதலனைக் காண்பதும், ஆனால், தான் கண்டதை அவன் அறியக்கூடாது என நினைத்து மறைப்பதுமான அந்தச் சித்திரம் அன்றாட வாழ்வில் இப்போதும் காணக்கிடைக்கும் தருணங்கள்.
இன்னொரு தலைப்பான ‘அகலாது அணையாது’ அமைச்சியலில் இடம்பெற்றுள்ள குறளில் உள்ள சொற்றொடர்.“அகலாது அணுகாது தீக்காய்வார் போல இகல்வேந்தர்ச் சேர்ந்தொழுகு வார். (691) அரசனைச் சேர்ந்திருத்தலில் இருக்கவேண்டிய இயல்பொன்றைச் சித்திரித்துக் காட்டும் இந்தக் குறளும் ஒரு உருவகத்தை உண்டாக்கியுள்ளது. குளிர்காலத்தில் நெருப்பின் அருகில் குளிர்காயும்போது நெருங்கிப் போகாமலும் விலகி நிற்காமலும் நின்று நெருப்பின் சூட்டை அனுபவிப்பதுபோல, அரசனிடம் நெருங்காமலும் விலகாமலும் இருக்கவேண்டும் என்பதான காட்சியைத் தருகிறது. குறளின் இருப்பாலும் பேசும் பொருண்மையாலும் நோக்கங்கால் என்பது அகம் சார்ந்தது; அகலாது அணுகாது புறம் சார்ந்தது. ஆனால் சுஜாவின் கதையின் இரண்டும் இடம் மாறி நிறுத்தப்பட்டுள்ளன.
தமிழ் வெளியில் வந்துள்ள நோக்குங்கால், புறவுலக நிகழ்வுகளை – மனிதர்களை நோக்கும்போது என்ன வகையான எண்ணவோட்டங்கள் உருவாகின்றன என்பதை எழுதிக்காட்டியுள்ளது. காலச்சுவடில் வந்துள்ள அகலாது அணுகாது கதை இளம்பருவத்துப் பெண்ணொருத்தியின் உடலியல் மாற்றத்தின் அகவுணர்வுகளை எழுதிக்காட்டியுள்ளது.
கருத்துகள்