ஒரு சினிமா இரண்டு சிறுகதைகள் ஒரு விருது

 வாசிப்பதும் பார்ப்பதும் எழுதுவதுமான வேலைகளை முகநூலில் மட்டும் நம்பி வைக்க முடியவில்லை, அதனால் அவ்வப்போது தொகுத்து இங்கே தரவேண்டியுள்ளது. அப்படி  எழுதியன இவை: 

சீனு ராமசாமி -விலகிச்செல்லும் இயக்குநர்



தேனி, மதுரை எனப் பிரிக்கப்படாத மதுரை மாவட்ட ஊர்களின் பெயர்களைக் குறிப்பிட்டுத் தனது சினிமாவுக்கான கதை நிகழ்வுகளை உருவாக்கித் தரும் சீனு.ராமசாமியின் இயக்கத்தில் உருவான படங்களின் வரிசையில் கோழிப்பண்ணை செல்லத் துரையும் ஒன்று எனச் சொல்ல முடியவில்லை.

எளிய மனிதர்கள் உலவும் சிறுகிராமங்களின் மனிதர்களிடையே இருக்கும் வறுமையான வாழ்க்கைக்குள்ளும் அன்பு, பாசம், காதல், நேர்மை போன்றன இன்னும் மறையாமல் தொடர்கின்றன என்பதை நம்பகத்தன்மையோடு சொன்ன தென்மேற்குப் பருவக்காற்று, தர்மதுரை வரிசையில் பார்வையாளர்களைக் கவர்ந்திருக்க வேண்டிய படம் பலவிதங்களிலும் போதாமையோடு வந்துள்ளது.
பெற்றோரால் கைவிடப்பட்ட பிள்ளைகளின் வாழ்க்கைப்பாதையில் ஏற்படக்கூடிய மேடுபள்ளங்கள் என்ற ஒருவரிக்கதையைக் கிராமத்துப் பின்னணியில் சினிமாவாக்கத் தேவையான திருப்பங்களும் முடிச்சுகளும் படத்தில் உருவாக்கப்பட்டுள்ளன. ஆனால் அவற்றைத் தனித்தனியாக முழுமையாக்கி இணைப்பதில் படம் தொய்வைச் சந்தித்துள்ளது. திரைக்கதை, அக்கதையின் நிகழ்வுகளுக்கான இடப்பின்னணி, பாத்திரங்களைச் சீரான வளர்ச்சி கொண்ட பாத்திரங்களாக உருவாக்காமல் தாவித் தாவிச் செல்லும் வளர்நிலை மாற்றங்களோடு உருவாக்கியுள்ள தன்மை எனப் பலவற்றில் இயக்குநர் கவனம் செலுத்தியதாகத் தெரியவில்லை. அத்தோடு பாத்திரங்களை ஏற்று நடிக்கத்தக்க நடிக, நடிகையர்களையும் தேர்வு செய்யவில்லை.
பெரும்பாலும் புதுமுகங்களைத் தேர்வுசெய்த இயக்குநர் அறிமுகமான நடிகர் ஒருவராவது இருக்க வேண்டும் என்பதற்காக யோகிபாபுவை நடிக்க வைத்தது போலத் தெரிகிறது. திரைக்கதைக்குள் வலுவான பாத்திரம் ஒன்றினால் இணைக்கப்படாமல் தனியாக இருக்கிறார். கோழிப்பண்ணையோடு அறிமுகமாகும் அந்தப் பாத்திரம் கோழிக்கடை முதலாளியாக மாற்றம் செய்யப்பட்ட காரணம் வலுவானதாக இல்லை. அந்த மாற்றம், படம் தலைப்பிலிருந்து விலகிப்போனதான நிலையை உருவாக்கியிருக்கிறது.
யோகிபாபுவும் குட்டிப்புலி தினேஷும் பொதுவான செய்திகளைச் சொல்ல உருவாக்கப்பட்ட பாத்திரங்களாக வந்து, படத்தின் மையத்தோடு தொடர்பில்லாத செய்திகளையும் அரசியல் சொல்லாடல்களையும் உதிரியாகச் சொல்லிக் கொண்டே இருக்கிறார்கள். அவர்களோடு படத்தின் முதன்மைப்பாத்திரங்களான- அண்ணன் செல்லத்துரைக்கும் தங்கை ஜெயாவுக்குமான உறவுகள் நெருக்கமாக உருவாக்கப்படவில்லை. அதேபோல் செல்லத்துரையைக் காதலிக்க நினைத்துப் பின் தொடரும் செல்வியோடும் உறவுநிலையை உருவாக்குவதில் போதாமையே இருக்கிறது. காதலிக்க நினைப்பதற்கான ஈர்ப்பில் உருவாக வேண்டிய உறவும் நெருக்கமும் வலுவாக உருவாக்கப்படவில்லை. கல்லூரியின் நூலகராக வரும் பவா.செல்லத்துரையைப் பாத்திரமாக ஆக்காமல், எழுத்தாளர் /கதைசொல்லி பவா செல்லத்துரையாகவே நினைக்கும்படி உருவாக்கியிருக்கிறார்கள்.
சீனு.ராமசாமியின் முந்தைய படங்களான தென்மேற்குப் பருவக்காற்று, தர்மதுரை, நீர்ப்பறவை போன்ற படங்களின் இசைக்கோர்வையும் , பாடல்களும் அந்தப் படங்களைத் தாங்கிக் கொண்டன. ஆனால் இதில் அவையும் உதவவில்லை. கிராமத்துப் பின்னணி என்றாலும் காமிராவின் சட்டகத்துக்குள் நிறைவான காட்சிகளும் வண்ணங்களுமாகச் சேர்ந்து இசைக்கோர்வையோடு பிணைக்கப்படும்போதே உணர்வுகள் உருவாகும். அந்த உணர்வுகளின் வழியாகப் பார்வையாளர்கள் பிணைக்கப்படாத நிலையில் திரையின் காட்சிகள் ஈர்ப்பை ஏற்படுத்தாமல் விலகிவிடும்.
சீனு.ராமசாமியின் இயக்கத்தில், உதயநிதி - தமன்னா நடித்த கண்ணே கலைமானே படத்திலேயே இத்தகைய விலகல் நேர்ந்திருந்தது. கோழிப்பண்ணை செல்லத்துரையில் அந்த விலகல் அதிகமாகிவிட்டது.

ஷோபா சக்தி - விருதுக்கப்பால் முக்கியம்

தன்னறம் விருதுபெற்றதற்காக எழுத்தாளர் ஷோபா சக்திக்கு வாழ்த்துச் சொல்லவில்லை. அவர் சர்வதேச விருதுபெற வேண்டிய தமிழ் எழுத்தாளர். உலகக் கவிதைத் தொகுப்புக்கு ஒரு கவிதையை மட்டும் பரிந்துரை செய்ய முடியாமல் தவித்ததை முன்பு சொல்லியிருக்கிறேன்(பின்னூட்டத்தில் அந்தக்கட்டுரை உள்ளது) . அதேபோலத் தமிழிலிருந்து சர்வதேச விருதொன்றுக்கு ஒரு பெயரை மட்டும் சொல்ல வேண்டும் என்று கேட்டாலும் தவிப்பே ஏற்படும். கவிதை, நாடகம், புனைவெழுத்து, திறனாய்வு என இலக்கியத்தின் துறைகள் ஒவ்வொன்றிலும் ஒன்றுக்கு மேற்பட்ட பெயர்கள் வந்து நிற்கும் தன்மையுடையது சமகாலத்தமிழ் இலக்கியம்.

வேறுவழியே இல்லாமல் ஒரு பெயர்தான் சொல்லவேண்டுமென்றால் நான் சொல்லும் பெயர் ஷோபா சக்திதான். சிறுகதைகள் உருவாக்கும் பிரமிப்புகள் அளவுக்கு அவரது நாவல்களின் வெளிப்பாட்டுத்தன்மை இருந்ததில்லை. அதனால் அவரது எல்லா நாவல்களையும் வாசித்தே ஆகவேண்டும் என்று நினைத்ததில்லை. ஆனால் அவரது சிறுகதைகளை அப்படித் தாண்டுவதில்லை. புனைவுகளைச் சொல்வதற்காக அவர் தெரிவுசெய்யும் சொல்முறைகளும், புனைவுவெளிகளாக நிலத்தையும் புலத்தையும் தொடர்புபடுத்தும் விதமும், இருவேறு காலப்பின்னணியில் வாழ நேரும்போது பாத்திரங்கள் அடையும் முரண்பட்ட வாழ்க்கையைத் தாண்ட முடியாமல் தவிக்கும் தவிப்புகளும் என அவரது சிறுகதைகளை வாசித்திருக்கிறேன். . சிறுகதைகளை வாசித்துக் குறிப்புகள் வைத்துள்ளேன். அவ்வப்போது சில கதைகளைக் குறித்து எழுதவும் செய்துள்ளேன். விரைவில் அவரது முழுத்தொகுப்பைக் கறுப்புப்பிரதிகள் வெளியிடும் என்று எதிர்பார்க்கிறேன். அல்லது தேர்வுசெய்யப்பட்ட சிறுகதைகளையாவது வெளியிட வேண்டும்.எளிமையே சிறந்தது ஆகிவிடாது.


நோயல் நடேசன்: வரலாறும் தொன்மையும்
ஒரு வரலாற்று ஆய்வாளன் எத்தகைய சான்றுகளைப் பயன்படுத்தி வரலாற்றை எழுத முற்படுகின்றானோ , அதற்கேற்பவே அவனது வரலாறு பற்றிய புரிதல் இருக்கும் . இந்திய தேசத்திற்கான ‘ஒற்றைவரலாறு’ எழுதப்படுவதற்குத் தேவையான வரலாற்று ஆதாரங்கள் முறையாகத் தொகுத்து வைக்கப் படவில்லை என்று குற்றம் சாட்டுபவர்கள் ஓர் உண்மையைப் புரிந்து கொள்ள வேண்டும். அதன் ஒற்றை வரலாற்றுக்குப் பதிலாக ‘பன்மை வரலாறுகள்’ எழுதப்படுவதற்குத் தேவையான வரலாற்றுச் சான்றுகள், தேடுகிறவர்களுக்குத் தொடர்ந்து கிடைத்துக் கொண்டே இருக்கின்றன. இந்தியாவும் சரி, தமிழகமும் சரி பன்மை வரலாறு கொண்ட நிலப்பரப்புகள் என்பதால் இங்கே வரலாற்றைப் பற்றிய பார்வைகளும் கூடத் தொடர்ந்து மாறிக்கொண்டே இருக்கின்றன.
ஆங்கிலேயர்களின் ஆதிக்கம் இருந்த காலனிய காலகட்டத்தில் இந்தியர்களால் எழுதப் பட்ட வரலாற்று நூல்களில் ஆங்கிலேயர்களிடம் இந்திய வரலாற்றை விளக்கிக் காட்டும் தொனி இருந்தது. இந்தியர்களின் ‘தொன்மை’ காலத்தால் மிக முந்தியது -ஐரோப்பியர்களுக்கும் முந்தியது எனக் காட்டும் நோக்கங்கள் வெளிப்பட்டன. இந்த நோக்கம், 1947- இல் சுதந்திரம் கிடைத்த பின்பு வேறுவிதமாக மாற்றம் அடைந்தது. பல்வேறு சிற்றரசுகளின் தொகுதியால் உருவாக்கப்பட்ட இந்தியாவை ஒற்றை நாடு எனக் காட்டும் நோக்கத்தில் வரலாற்று நூல்கள் எழுதப்பட்டன. சாராம்சமான பொது அடையாளம் கொண்ட நாடாக இந்தியாவைக் காட்டும்- தேசியத்தைக் கட்டமைக்கும் பார்வையை ஏ.எல். பாஷ்யம், ஆர்.சி. பண்டார்கர், கே.வி.அய்யங்கார், பி.என்.பானர்ஜி போன்றோரின் வரலாற்று நூல்களில் காணலாம்.
இதன் தொடர்ச்சியில் இந்தக் கட்டுரையை வாசித்துப் பாருங்கள்.

அம்பை: இன்னொரு பயணக்கதை
எழுத்தாளர் அம்பையின் சிறுகதைகளில் பயணங்கள் குறித்த கதைகளின் எண்ணிக்கை கணிசமாக உண்டு. பயணம் 1, 2, 3 என்று தலைப்பிட்டே பல கதைகளை எழுதியுள்ளார். பயணிக்க உதவும் வாகனங்களைப் பற்றியும் பயணத்தால் கிடைக்கும் விரிவான எண்ணங்கள் பற்றியும் தனியாகக் கட்டுரை எழுத வேண்டும்
தனியாகப் பயணிக்கத் தடையிருக்கும் சூழலில் தனியாகவும், தோழிகளோடும், நண்பர்களோடு தனித்துவமான பயணங்களை மேற்கொள்ளும் பெண்களைப் பல கதைகளில் எழுதியிருப்பவர் அம்பை. இந்தப் பயணங்களும் பலவிதமானவை. கிராமங்களில் செய்த பயணங்கள், நகரங்களில், பெருநகரங்களில் செய்த பயணங்களைத் தாண்டிப் பலநாடுகளில் செய்த பயணங்கள் பற்றியும் கதைகளை எழுதியிருக்கிறார். இந்தமாத உயிர்மையில் வந்துள்ள 'புத்தரின் பாதங்கள்' என்ற கதையும் பயணத்தோடு தொடர்புடைய கதைதான்.
கதையின் தொடக்கம், முதல் பயணங்களில் விருப்பம் கொண்டவர்களின் குழுவைப் பற்றிச் சொல்லிச் செல்லும்போது கட்டுரைத் தொனி தூக்கலாக இருந்தாலும், விடுதலை அடைந்த இந்தியாவையும் பாகிஸ்தானையும் பிரித்துக் கோடுபோட்ட நிகழ்வை நினைவுபடுத்தும்போது கதைத்தன்மை கூடுதலாகிப் பிரிவினையால் நிகழ்ந்த துயரங்களும் நினைவூட்டப் படுகிறது.
புத்தரின் இரண்டு பாதங்களில் இந்தியாவில் ஒன்றும் பாகிஸ்தானுக்கு ஒன்றும் எனப் பிரிக்கப்பட்டது எனச் சொல்லிவிட்டு "வயிற்றுக்கடுப்புடன் கழிவறைக்கு ஓடியபடி இருந்த ஒருவர் போட்ட எல்லைக்கோடு அது என எழுதியபோது தேசப்பிரிவினை குறித்த சில சினிமாக்களின் காட்சிகள் நினைவில் வந்தன. எழுத்து கடந்த காலத்தின் மீது விமரிசனங்களை எழுப்பும்போது நல்ல எழுத்தாக மாறிவிடும். அம்பையின் இந்தக் கதை - புத்தரின் பாதங்கள் - வாசிக்கவேண்டிய கதையாக இருக்கிறது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நாயக்கர் கால இலக்கியங்கள் சமுதாய வரலாற்றுச் சான்றுகளாகக் கொள்வதற்கான முன் தேவைகள்

சிவகாமியின் பழையன கழிதலும்… : தலைமுறை இடைவெளியின் இன்னொரு பரிமாணம்

சி சு.செல்லப்பாவைச் சந்தித்த வேளைகள்