ஃபீர்தௌவ்ஸ் ராஜகுமாரன்: சாய்வற்ற நடப்பியல்


நீண்ட இடைவெளிக்குப் பின் ஃபீர்தௌவ்ஸ் ராஜகுமாரனின் இரண்டு புனைகதைகள்அடுத்தடுத்து வாசிக்கக் கிடைத்தன. தமிழ்வெளியில் வந்துள்ள "இரைகள்" வாசித்து முடித்த நிலையில், நடுகல் இணைய இதழில் வந்துள்ள "தலைமுறைகள்" கிடைத்தது. இடையில் வேறு வாசிப்பு இல்லை.

தமிழ்வெளியில் வந்துள்ள இரைகளைக் குறுநாவல் எனச் சுட்டவில்லை. குறுநாவலுக்கெனத் தனித்த வடிவம் உண்டென்பதை உணர்ந்தே இரைகளைக் குறுநாவல் எனச் சுட்டுவதைத் தவிர்த்து நெடுங்கதையெனச் சுட்டியுள்ளனர். குறுநாவல் வடிவத்தைப் பெரிதாகக் கவனப்படுத்தும் இதழியல் இப்போது இல்லை. ஆனால் எண்பதுகளில் மாதந்தோறும் ஒரு குறுநாவலை வாசிக்கும் வாய்ப்பைக் கணையாழி இதழ் வழங்கியது. தி.ஜானகிராமன் நினைவுக்குறுநாவல் போட்டி என்ற பெயரில் நடத்தப்பெற்ற போட்டியில் தேர்வு பெற்ற குறுநாவல்கள் ஒவ்வொன்றும் புதியபுதிய வாசிப்பு அனுபவங்களைத் தந்தனவாக இருந்தன. அந்தக் காலகட்டத்தில் தீவிரமாக எழுதிக் கொண்டிருந்த எழுத்தாளர்களும், புதிதாக எழுதத்தொடங்கியிருந்த எழுத்தாளர்களும் குறுநாவல்களை எழுதினார்கள். கணையாழியின் குறுநாவல் போட்டியில் அறிமுகமான பெயர்களுள் ஒன்று ஃபீர்தௌவ்ஸ் ராஜகுமாரன். குறுநாவலின் பெயர் நினைவில் இல்லை. ஆனால் அந்தக்குறுநாவலில் தான் முதன்முதலில் முஸ்லீம் பெயர்களையும் வாழ்வியலையும் புனைகதைக்குள் வாசித்தேன்.
 
அவரது புனைகதைகள், திடீர் திருப்பங்கள் இல்லாமல் நகரும் தன்மையுடையன. கதைக்குள் உருவாக்கப்படும் கதாபாத்திரங்களுக்குள் உருவாக்கப்படும் முரண்பாடுகள் பெரும்பாலும் வர்க்க முரண்பாடுகளாகவே இருக்கும். போதாமை நிரம்பிய குடும்ப வாழ்க்கையும், செய்தே ஆகவேண்டிய கடமைகள் உருவாக்கும் நெருக்கடிகளுமே அவரது எழுத்தின் அடிப்படைச் சரடு. தமிழ்நாட்டு முஸ்லீம்களுக்குள் இருக்கும் பொருளாதார ஏற்றத் தாழ்வுகளை விரிவாகப் படம்பிடித்துக் காட்டுவதைத் தனது இலக்கிய நோக்கமாகச் செய்யத்தொடங்கியவர். அவரது ஆரம்ப கால எழுத்துகளில் வெளிப்பட்ட அதே இலக்கியப்பார்வையும் நோக்கமும் இப்போதும் நீள்கிறது என்பதை இந்த இரண்டு கதைகளும் உறுதி செய்கின்றன.
 
இரைகள் நெடுங்கதைக்குள், தனது மூத்த மகள் நூர்ஜகானுக்கு உரிய வயதில் நிக்காஹ் முடித்துவிட முடியாத தவிப்பில் இருக்கும் அனிபா - ஆஜாரம்மா தம்பதியினரின் குடும்ப வாழ்க்கையை விவரிப்பதே கதை. அன்றாட வாழ்க்கையை நடத்தச் சின்னதாக உணவுக்கடை நடத்தும் ஆஜாரம்மாவும், தள்ளுவண்டி வியாபாரம் செய்யும் அனிபா ராவுத்தரும், தன்விருப்பம் இல்லாமல், 50 வயதுக்கு மேற்பட்ட தஸ்தகீர் என்ற பணக்காரருக்கு இரண்டாம் தாரமாக நூர்ஜகானைக் கட்டித்தர சம்மதிக்க நேரும் நெருக்கடியையும் மனத்தின் ஏற்புநிலையும். விவரிக்கிறது. இரண்டாம் தாரத்தையும் தாண்டி மூன்றாம் தாரமாக இருந்தாலும் அதனை ஏற்றுக் கொண்டு வாழும்படி வலியுறுத்தும் நிலைக்கு நகர்கிறது. மகளின் விருப்பம், கனவு, ஆசை என எல்லாவற்றையும் நிறைவேற்ற வேண்டும் எனப் பேசிய தம்பதிகள், தங்கள் மகள் நூர்ஜகானைப் பணக்காரர் ஒருவருக்கு இரையாக்கும் நிலையை நோக்கி நகர்கிறார்கள். அதற்கு அவர்களின் உறவினர்களும் சூழலும் காரணங்களாக இருக்கின்றன எனக் காட்டுகிறது.

நடுகல்லில் வந்துள்ள 'தலைமுறைகள்' இசுலாமியக் குடும்பங்களின் அடையாளமாகத் தொடரும் தரவாட்டுப் பெருமைகளைக் குறித்த விமரிசனமாக அமைந்துள்ளது. பெரும்பாலும் சிறுதொழில்கள், சிறுவியாபாரங்கள் காரணமாகச் சொந்த ஊர்களிலிருந்து கோவை போன்ற பெருநகரங்களுக்கு இடம்பெயர்ந்தவர்கள், அவர்களின் அடையாளங்களாக நினைத்துத் தொடரும் தரவாட்டுப் பெயர்களின் மீது அடுத்த தலைமுறைக்கு ஆர்வம் இல்லை எனக் காட்டுவதோடு, அதனை ஏன் முந்திய தலைமுறை இவ்வளவு நாளும் உணராமல் கெட்டியாகப் பிடித்துக் கொண்டு அலைந்தது என்ற கேள்வியும் உள்ளது. இசுலாமியத் தரவாட்டுப் பெருமைகள், இந்துச் சாதியப்பெருமிதங்களோடு நேரடியான உறவுடையன அல்ல என்றாலும், அவையும் கைவிடப்பட வேண்டியன என்பதை வாசிக்கும் ஒருவர் உணர்ந்துகொள்ள முடியும்.

இவ்வகை எழுத்துகள் வாசிப்பவர்களை நிதானமான மனநிலையில் வைத்திருக்கக் கூடியன. கதை மாந்தர்களின் வாழ்வு இப்படி இருப்பதற்கான காரணங்களை வெளியில் தேடாமல் தங்களின் சூழலுக்குள்ளேயே தேடிச் சமாதானத்தை அடைந்து கொள்ளும் இயல்பில் நகர்வார்கள். பொருளாதார உயர்நிலையில் இருக்கும் மனிதர்களின் மனநிலைக்குள் தாங்கள் கூடுதல் உரிமைகளும் சலுகைகளும் பெறத்தக்கவர்கள்; அதனைக் கீழ்நிலையில் உள்ளவர்கள் எதிர்பார்க்கக்கூடாது என்ற ஆதிக்கம் நிலவுகிறது என்பதைக் கூட உரத்த குரலில் சொல்வதில்லை. அதனால் புறநிலையில் - சமூகம் என்ற பெரும்பரப்பில் - நாட்டின் மையநீரோட்டத்தில் உருவாகும் அரசியல் நுழைவுகளைப் பற்றிய கவலைகளை அதற்குள் தேடமுடியாது.
 
இசுலாமியத் தன்னிலை கொண்ட பாத்திரங்களை எழுதியபோதும், சிறுபான்மையினர் என்ற அடையாள அரசியல் தாக்கத்தைப் ஃபீர்தௌவ்ஸின் எழுத்துகளில் வாசிக்க முடிவதில்லை. எவ்விதச் சாய்வும் காட்டாத நடப்பியலை ஆங்கிலத்தில் - Naive Realism - எனச் சுட்டுகிறார்கள். இதனை விமரிசன நடப்பியல் மறுக்கும்; கேள்விக்குட்படுத்தும். அந்த வகையில் அவர் தனது காலத்தின் போக்கோடு இணைந்து பயணிக்காத எழுத்தாளர் என்ற குற்றச்சாட்டைச் சந்திக்க வேண்டியவராகவும் இருக்கிறார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

இந்தியாவும் கனடாவும் உரசிக்கொள்வது ஏன்?

தமிழில் பாரம்பரிய அரங்கும் நவீன அரங்கும்

எல்லாம் விலை குறித்தனவே ; ஆன்மாவும் கூட .