கிஷ்கிந்தா காண்டம்- குற்றவியலும் உளவியலும்
உளவியல் சிக்கல்களுக்கும் குற்றநடவடிக்கைகளுக்கும் இடையே தவிக்கும் மனிதர்களின் ஆட்டத்தைத் திரைக்கதையாக்கிக் காட்சிப்படுத்தியிருக்கிறது கிஷ்கிந்தா காண்டம். ஒவ்வொரு சினிமாவையும் பார்வையாளர்களின் நம்பகத்தன்மையைப் பெரும்விதமாகத் தயாரிக்க வேண்டுமென நினைக்கிறார்கள் மலையாளச் சினிமா இயக்குநர்கள். இதற்காக அவர்கள் பின்பற்றுவது கலையின் அடிப்படைகளைத் தவறவிடக்கூடாது என்று நினைக்கிறார்கள். காலம், இடம், பாத்திரங்களிடையே இருக்கவேண்டிய ஓர்மைத்தன்மையில் பிசகு ஏற்படாமல் பார்த்துக்கொள்கிறார்கள்.
திட்டவட்டமான கால எல்லைக்குள் நடக்கும் நேர்நிலைக் காட்சிகளோடு நினைக்கப்படும் காலத்தில் நிகழ்வதைப் பின்னோக்கு நிகழ்வுகளாகப் பொருத்துகிறார்கள். அதேபோல் குறிப்பான வெளியில், இடப்பரப்பிற்குள் வைத்துக் கதாபாத்திரங்களுக்கு இடையே இருக்கும் முரண்பாடுகளைக் காரணகாரியங்களோடு அணுகி விவாதிப்பதைச் சரியாகச் செய்கின்றார்கள்.
இந்த விவாதங்களுக்கு அறிவியல் பூர்வமான கருத்துநிலைகளின் பின்னணியைத் தவிர்ப்பதில்லை. அதனால் படத்தில் தர்க்கச் சிக்கல்கள் எழுவதில்லை. இந்தப் பின்னணிகள் பெரும்பாலும் இந்திய மெய்யியல் தொடங்கிச் சமகாலச் சமூகவியல், உளவியல் காரணிகளாக இருக்கின்றன. இல்லையென்றால் வரலாறு, தொன்மை போன்ற அறியப்பட்ட நிகழ்வுகளின் தர்க்கங்களைத் தனதாக்கிக் கொள்கின்றன. இந்தக் கவனத்தைத் தமிழ்ப்பட இயக்குநர்கள் முதன்மையானதாகவும், தவறவிடக்கூடாத அடிப்படைகள் எனவும் நினைப்பதில்லை.
சில நாட்களுக்கு முன்னால் -ஹாட்ஸ்டார் இணையச்செயலியில் வெளியாகி நல்ல விமரிசனப் பார்வைகளைப்பெற்றுவரும் கிஷ்கிந்தா காண்டம் நல்ல சினிமாவின் அனைத்து அடையாளங்களோடும் இருக்கிறது. இந்தப் படத்தின் கதையைப் பாகுல் ரமேஷ் எழுதியிருக்கிறார். அதனை இயக்கியிருப்பவர் திஞ்சித் அய்யநாதன் இயக்கியிருக்கிறார்.
இந்திய இதிகாசத்தின் காண்டங்களில் ஒன்றான கிஷ்கிந்தா காண்டம், நிலப்பரப்பின் அடிப்படையில் குரங்கின இனக்குழுவின் வெளி. வாலி -சுக்ரீவன் என்ற குரங்கினச் சகோதரர்களின் முரண்பாட்டில் ராமன் நுழைந்து தனது விருப்பத்திற்காக - சீதையைக் கண்டுபிடிக்கும் நோக்கத்தில் வாலியைக் கொன்று, சுக்ரீவன்/ அநுமன் உதவியைப் பெற்றுச் சீதையிருக்கும் இலங்கைக்குச் சென்று சீதையை மீட்டுக்கொண்டு வரும் நிகழ்வுகளின் கதைக்களம்.
இப்போது வந்துள்ள மலையாள சினிமா-கிஷ்கிந்தா காண்டம், நேரடியாக ராமாயணப்பாத்திரங்களை நினைவூட்டவில்லை. ஆனால் குற்ற மனம் சார்ந்து ராமாயணப்பாத்திரங்களின் சாயலோடு உள்ள பாத்திரங்களைக் கொண்டது. அத்தோடு மற்ற விலங்குகளைவிடவும் கூடுதலான எண்ணிக்கையில் குரங்குகள் திரியும் அடர்த்தியான வனப்பகுதிதான் கதையின் களம். காட்டிற்குள் வரும் மனிதர்களின் பொருட்களைத் தூக்கிச் செல்லும் குரங்குகளின் ஒன்று துப்பாக்கி ஒன்றைத் தூக்கிக் கொண்டு போய் வைத்திருக்கும் புகைப்படம் ஒன்று படத்தின் முக்கியமான திருப்பத்தின் காரணமாக இருக்கிறது என்ற அளவில் படத்தின் பெயரோடு நேரடித் தொடர்பு கொண்டுள்ளது.
அப்பா,மகன், மகனின் இரண்டாவது தாரமாக வரும் மருமகள் என்ற மூன்று பாத்திரங்களும் படத்தின் மையப்பாத்திரங்கள் என்றாலும் அப்புப்பிள்ளையே முதன்மைப்பாத்திரம். மறதியெனும் வியாதியோடு வாழும் - அதனை மறைக்க நினைக்கும் அப்புப்பிள்ளையின் இருப்பு இயல்பானதா? மறைக்க நினைக்கும் முயற்சியா? என்ற ஒருவரிச் சொல்லாடலின் மேல் திரைக்கதை நிகழ்வுகள் உருவாக்கப்பட்டுள்ளன. அப்புப்பிள்ளையின் மறதிக்குள்ளும் நினைவுக்குள்ளும் இருக்கும் மகன் அஜய்சந்திரனின் முதல் திருமண வாழ்க்கையும், அதில் ஏற்பட்ட ஒரு கொலையும் ஒரு தற்கொலையும் என ரகசிய முடிச்சுகள் இருக்கின்றன. அதனைச் சொல்லாமலேயே இரண்டாவது மனைவியோடு புதிய வாழ்க்கையைத் தொடர்ந்துவிட முடியுமென நம்பியவனுக்குத் திருமண நாளன்று வரும் ஒரு தொலைபேசி அழைப்பின் மூலம் சிக்கல் தொடங்குகிறது.
காவல் நிலையத்திலிருந்து வரும் அந்தத் தொலைபேசி அழைப்பு, முன்னாள் ராணுவ அதிகாரியான அப்புப்பிள்ளையின் துப்பாக்கியைக் குறிப்பிட்ட நேரத்தில் சரண்டர் செய்யாததின் காரணங்களைத் தேடுவதில் விரிகிறது. சரண்டர் செய்யப்படாத துப்பாக்கிக்குப் பின்னால் இருக்கும் குற்றச் செயல்களின் உளவியல் காரணங்களைப் புது மனைவியான அபர்ணா அறிவதும் புரிந்துகொள்வதும் ஏற்றுக்கொள்வதுமான நிகழ்வுகளே அடுக்கிச் செல்லும் கதைப்பின்னல். துப்பாக்கியை வைத்து உருவாக்கும் ரகசியங்களின் முடிச்சுகளை ஒவ்வொன்றாக அவிழ்க்கிறது. அவரது மறதியால் அந்தக் குடும்பத்திற்கு ஏற்பட இருந்த அழிக்க முடியாத வடுக்கள் இல்லாமல் ஆக்கப்படுகின்றன. அந்த மறதி திட்டமிட்ட மறைப்பு முயற்சிபோலத் தோன்றினாலும் தேவையான மறதியாக இருக்கிறது என்பதின் மூலம் ஒரு நல்முடிவைச் சினிமாவுக்கு உருவாக்கித் தருகிறது.
இந்த முடிவுக்காகவும் முடிச்சுகளை அவிழப்பதற்காகவும், காவல்துறை, முன்னாள் ராணுவ அதிகாரி, காட்டிலாக ஆட்கள், அப்பாவின் நண்பர் என உருவாக்கப்படும் பின்னணிக்குள் காட்டில் மறைந்து இயக்கம் கட்டும்-ஆயுதப்போராட்டத்தில் நம்பிக்கையுள்ள நக்சலைட் நடவடிக்கைகள் என ஒவ்வொன்றும் ஒவ்வொரு தளமாக விரிகின்றன. இந்த அடுக்குகள் தான் ஒரு சினிமாவைக் கலையின் நெருக்கத்திற்கு நகர்த்தக்கூடியன;அதே நேரத்தில் வணிக சினிமாவின் வெகுமக்கள் ஈர்ப்பை உருவாக்கவும் கூடியன.
கதைக்கும் திரைக்கதைக்கும் பாத்திரங்களுக்கேற்ற நடிப்புக்கலைஞர்களின் தேர்வுக்கும் தரும் முக்கியத்துவத்தின் வழியாக நல்ல சினிமாவை உருவாக்கித் தரும் மலையாள இயக்குநர்கள், வெகுமக்களின் ரசனைக்காக எனச் சொல்லி மைய நிகழ்வோடு பொருந்தாத பாடல்காட்சிகளையும், சண்டைக்காட்சிகளை நகைச்சுவை நடிகர்களின் இணைநிலைக்காட்சிகளையும் சேர்ப்பதில்லை. அப்படிச் சேர்க்காமலேயே ஒரு சண்டைக்காட்சி உருவாக்கும் கொதிநிலைத்தன்மை கொண்ட காட்சிகள் இருக்கும்படி நிகழ்வுகள் அமைக்கப்பட்டுள்ளன.
சின்னச்சின்ன வசனங்களாலும் நடிகர்களின் உடல் மொழியாலும் பார்வையாளர்களிடம் சிரிப்பை உண்டாக்கும் நிகழ்ச்சிகளையும் உருவாக்கித் தருகிறார் இயக்குநர். அதையெல்லாம் தாண்டி காட்சிகளுக்கென இசைக்கப்படும் ஒலிக்கோர்வைகள் உறுத்தாமல் இழையோடும்போது அந்த இசையோடு பயணிக்கவும் முடிகிறது. நல்ல சினிமாவை எதிர்பார்க்கும் பார்வையாளர்களின் எதிர்பார்ப்பு இவ்வளவு தானே? இது ஏன் தமிழ்ச் சினிமாவில் இயங்கும் இயக்குநர்களுக்குப் புரிபடாமல் இருக்கின்றது?
கருத்துகள்