இலங்கை: நடந்த தேர்தலும் நடக்கப்போகும் தேர்தலும்


2024, செப்டம்பர் 21 - இலங்கையின் ஜனாதிபதியைத் தேர்ந்தெடுக்கும் தேர்தல் நடந்தது. அத்தேர்தலில் தேசிய மக்கள் முன்னணியில் தலைவர் அனுரகுமார திசநாயக வெற்றி பெற்று இலங்கையின் ஜனாதிபதியாகப் பதவியேற்றார். அது இலங்கையின் வரலாற்றில் பெரும்பாய்ச்சல். வாக்களிப்பின் வழியாக நடந்த புரட்சி என வருணிக்கப்பட்ட ஒன்று.

2024 நவம்பர் 14 இல் இலங்கை நாடாளுமன்றத்தின் 225 இருக்கைகளுக்கான உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கும் தேர்தல் நடைபெற உள்ளது. அனுர ஜனாதிபதி ஆனவுடன் நாடாளுமன்றத்தைக் கலைத்துவிட்டு உடனடியாகத் தேர்தல் நடத்தியே ஆகவேண்டும் என்ற கட்டாயம் இல்லை.

இலங்கையின் அரசியல் அமைப்பின்படி ஜனாதிபதிக்கு நிறைவேற்று அதிகாரம் உண்டு. ஆனால் அவரது விருப்பப்படி ஆட்சியை நடத்தவும் அவரால் உருவாக்கப்பட்ட அமைச்சரவை முன்வைக்கும் திட்டங்களைச் செயல்படுத்தவும் ஜனாதிபதிக்கு உள்ள நிறைவேற்று அதிகாரம் போதாது. அதற்கு நாடாளுமன்ற உறுப்பினர்களில் பெரும்பான்மை எண்ணிக்கையின் ஒப்புதல் வேண்டும்.

அநுர ஜனாதிபதி ஆனபோது அவரைத் தலைவராகக் கொண்ட தேசியமக்கள் முன்னணிக்கட்சிக்கு 3 உறுப்பினர்கள் தான் இருந்தார்கள். ஆட்சி அதிகாரத்தைச் சரியாகச் செய்ய வேண்டுமென்றால் தேசிய மக்கள் முன்னணிக்கு குறைந்தது 113 உறுப்பினர்கள் இருக்கவேண்டும். அந்த எண்ணிக்கை இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையில் பாதி. நிர்வாகத்தைத் தடையின்றி நடத்தப் பாதி எண்ணிக்கை உறுப்பினர்களின் ஆதரவு போதும். ஆனால் அரசியல் அமைப்பு ரீதியாக மாற்றங்கள் செய்யவேண்டுமென்றால் மூன்றில் இரண்டு பங்கு ஆதரவு வேண்டும்.

அடுத்த வாரம் நடக்கப்போகும் தேர்தலில் தேசிய மக்கள் முன்னணி மூன்றில் இரண்டு பங்கு எண்ணிக்கையில் நாடாளுமன்ற இருக்கைகளைப் பெற்று ஜனாதிபதிக்கு உண்மையான நிறைவேற்று அதிகாரத்தை வழங்குமா?

நிர்வாகத்தை நடத்துவதற்குப் போதுமான பாதி எண்ணிகையான 113 என்பதைக் கைப்பற்றி பெரிய அளவு சிக்கல் இல்லாத ஆட்சியைத் தருமா?

இல்லையென்றால் சரிபாதிக்கும் குறைவான எண்ணிக்கையில் உறுப்பினர்களைப் பெற்று தடுமாற்றத்தோடு ஆட்சியைத் தொடருமா?

நவம்பர் 15 க்குப் பின்னர் வரப்போகும் தேர்தல் முடிவுகளே உறுதி செய்யும். நடக்கப்போகும் தேர்தலில் இந்த மூன்று முடிவுகளுக்குமே வாய்ப்புகள் உண்டு என்பதற்கான காரணங்களை மறுக்கமுடியாது.

நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலில் அநுர குமார முதல் சுற்றிலேயே ஜனாதிபதி ஆவதற்குத் தேவையான வாக்குகளைப் பெற்றவரில்லை. அந்நாட்டின் தேர்தல் நடைமுறைப்படி 50 சதத்துக்கும் கூடுதல் வாக்குகள் பெற்றவரே ஜனாதிபதி ஆகமுடியும். முதல் விருப்ப வாக்குகள் வழியாகவே பாதிக்கும் கூடுதலாக வாக்குகள் பெற்றுவிட்டால் சிக்கல் எதுவும் இல்லை. அப்படிக் கிடைக்கவில்லையென்றால், இரண்டாவது விருப்ப வாக்குகள் எண்ணப்படும். முதல் விருப்ப வாக்குகளை எண்ணியபோது அநுர பெற்றது 43-க்கும் குறைவானது. இரண்டாவது விருப்ப வாக்குகளின் எண்ணிக்கைக்குப் பின்பே அவர் பதவி ஏற்கத்தேவையான 50 சதத்தைக் கடந்தது. அதன்படி ஜனாதிபதி ஆகியுள்ளார்.

தொடரும் அலை


நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலின் போதே அநுர அலை வீசிகின்றது என இலங்கையின் ஊடகங்கள் எழுதின. எனது பயணத்தின் போது அதனை நேரில் பார்க்கும் வாய்ப்பும் கிடைத்தது. கடந்த ஏப்ரல், மே மாதங்களில் இலங்கையின் பலவேறு கல்வி நிலையங்களிலும் தமிழ் அமைப்புகளிலும் உரையாற்றுவதற்காகச் சென்றிருந்தேன். எனது 20 நாட்கள் பயணத்தின் போது நகரங்களிலும் கிராமங்களிலும் பயணம் செய்தேன். பலதரப்பு மனிதர்களோடு உரையாடும் வாய்ப்பும் கிட்டியது. இது எனது மூன்றாவது பயணம். இதற்கு முன்பும் 2016-லும், 2019 -லும் இலங்கைக்குள் நீண்ட பயணங்கள் செய்துள்ளேன்.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு - 2022 இல் தலைநகர் கொழும்புவில் நடந்து அரகல (கிளர்ச்சி)வின் பின்னணியில் தேசிய மக்கள் முன்னணியும் அதன் தலைவர் அநுர குமாரவும் திட்டமிட்டு வேலை செய்தார்கள். அதிகாரத்திலிருந்து நாட்டைக் கொள்ளையடித்துச் சொத்துச் சேர்த்த ராஜபக்சே குடும்பத்தின் மீது பெரும் எதிர்ப்பு அலையை உருவாக்கினார்கள். அதன் பலனை இந்தத் தேர்தலில் அநுர பெறுவார் என்றே எனது பயணத்தின் போது பலரும் சொன்னார்கள். அதன்படியே அந்த அலையின் பலன் அவருக்குக் கிடைத்தது. அந்த அலையின் வெப்பத்தை அப்படியே இப்போதும் தக்கவைத்துக் கொண்டுள்ளது தேசியமக்கள் முன்னணியும் அதன் தலைவர் அநுரவும்.

அநுர ஜனாதிபதி ஆன பிறகு அவரது கட்சி மீதும் மக்களுக்குப் பெரிய நம்பிக்கை ஏற்பட்டிருக்கிறது. ஊழலற்ற நிர்வாகமும் வளர்ச்சி நோக்கிய நல்லாட்சியும் தருவார் என்ற எண்ணமும் ஏற்பட்டிருக்கிறது. இரண்டு மாதங்களில் அவர் செய்துள்ள பதவியளிப்புகளும், ஊழலுக்கு எதிராக எடுத்துள்ள நடவடிக்கைகளும் கவனிக்கத்தக்கனவாக உள்ளன. அதனால் ஜனாதிபதி தேர்தலில் அவருக்கு வாக்களிக்காதவர்களும் இப்போது தேசிய மக்கள் முன்னணிக்கு வாக்களிக்கப்போகிறார்கள் என இலங்கையின் ஊடகங்கள் சொல்கின்றன.

ஐந்தாண்டுகளுக்கு முன் ஜனாதிபதி தேர்தலில் 3 சதவீத வாக்குகளைப் பெற்ற அநுர, இப்போது நடந்த தேர்தலில் 43 சதவீத மக்களின் நம்பிக்கையைப் பெற்ற தனிப்பெரும் தலைவராக மாறினார். அதற்குப் பின்னால் அவரும் அவரது கட்சியும் செய்த எதிர்ப்பரசியலும், நாட்டுக்குத் தேவையான நேர்மறை நிர்வாகம் பற்றிய கருத்துகளும் இருந்தன. அத்தோடு நீண்டகாலமாக இலங்கையில் அதிகாரம் செலுத்திவந்த ராஜபக்சே, பிரேமதாச, விக்ரமசிங்கே போன்றவர்களின் அதிகார ஆசையால் இலங்கையின் பொருளாதாரமும் அமைதியும் சீரழிந்துவிட்டன. முந்திய காலகட்ட நிலைமைகளை மாற்றிக் காட்ட புதியவர் ஒருவரின் வருகையும் புதிய அரசியலும் அவசியம் என்ற மனநிலை உருவாக்கப்பட்டுள்ளது.

இவையெல்லாம் சேர்ந்தே ஜனாதிபதி தேர்தலில் அலையாக மாறி, அநுரவை ஜனாதிபதி ஆக்கியது. அந்த அலை, கடந்த இரண்டு மாதங்களில் கூடியுள்ளதே தவிரக் குறையவில்லை என்பதையே இப்போது இலங்கையின் தேர்தல் களத்தைப் பற்றிய செய்திகள் காட்டுகின்றன. நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலில் அநுரவுக்கு வாக்களித்தவர்கள் மட்டுமே திரும்பவும் வாக்களிப்பார்கள் என்றால், தேசிய மக்கள் முன்னணிக்கு 113 என்ற எண்ணிக்கைகூட கிடைக்காது. அதையும் தாண்டி இலங்கையின் வேறு சில காரணிகளும் நாடாளுமன்றத் தேர்தலில் உருவான அலைக்கு எதிராக நிற்கவும் வாய்ப்புண்டு

******

அலைக்கு எதிரான தடைகள்

தமிழ் நாட்டு மக்களுக்கு இலங்கை அரசியல் என்பது எப்போதும் தனி ஈழத்துக்காக நடந்த போராட்டம் மற்றும் விடுதலைப்புலிகள் நடத்திய உள்நாட்டு யுத்தம் வழியாகக் கிடைத்த அறிவுதான். ஆனால் இந்தியாவின் ஒன்றிய அரசுக்கு அண்டை நாடு ஒன்றை நட்பு நாடாகவும், தனது கட்டுப்பாட்டில் இருக்கும் சிறிய நாட்டின் அரசோடு கொள்ளும் உறவாகவும் இருக்கிறது. அத்தோடு இலங்கை இந்தியப் பெருங்கடலில் இருக்கும் ஒரு தீவு. நான்கு புறமும் இருக்கும் கடலையும், அதன் துறைமுகங்களையும், உலக நாடுகள் பயன்படுத்த விரும்புகின்றன. அதனால் இலங்கையின் அரசியல் என்பது உலகின் பூகோள அரசியலில் முக்கியமான ஒன்று.

இலங்கைக்குப் பக்கத்தில் இருக்கும் பெரிய நாடான இந்தியாவும், தூரத்திலிருந்தே இலங்கையின் அதிகார சக்திகளை இயக்கும் அமெரிக்கா, சீனா போன்ற நாடுகளும் கவனிக்கின்றன. ஆட்சியில் இருப்பவர்களைக் கட்டுப்படுத்த விரும்புகின்றன. அதனால் உதவிகளும் செய்கின்றன; குழப்பங்களும் உண்டாக்குகின்றன. அதனால் தான் அந்தச் சின்னஞ்சிறிய நாட்டில் நீண்டகாலமாக உள் நாட்டுப் போர் முடிவுறாத போராக நீண்டு கொண்டே இருந்தது. விடுதலைப்புலிகள் தலைமையில் நடந்த தமிழ் ஈழத்திற்கான போரில் சில லட்சம் மனிதர்கள் ராணுவத்தின் பயங்கரவாதச் செயல்களால் கொல்லப்பட்டார்கள். அதற்கிணையாகவே தென்னிலங்கையில் ஜே.வி.பி.யின் ஆயுதக்கிளர்ச்சியிலும் மக்கள் கொல்லப்பட்டார்கள் என்பது அந்நாட்டின் கடந்த கால வரலாறு.

இதனைத் தாண்டி அந்நாடு விடுதலை அடைந்த காலம் தொட்டே பெரும்பான்மை X சிறுபான்மை என்ற அரசியல் பேச்சுகளால் நிரம்பிய தேர்தல்களையே சந்தித்து வந்துள்ளது. இலங்கையின் பெரும்பான்மைவாதம் என்பது, பௌத்த சிங்கள அடிப்படைவாதமாக இருக்கின்றது. அதனைக் கண்டு அச்சத்தோடு வாழும் தமிழ்ச் சிறுபான்மையும் ஒற்றை அடையாளத்தோடு இல்லை. இலங்கையின் பூர்வீகத்தமிழர்கள், மலையகத்தமிழர்கள், தமிழ்பேசும் முஸ்லீம்கள் என முப்பிரிவாக நிற்கின்றார்கள். இம்மூன்று பிரிவினருக்கும் சிங்களப்பேரினவாதம் அச்சமூட்டும் ஒன்றுதான்.

இந்தச் சிக்கல்களையெல்லாம் தீர்க்கும் முயற்சிகள் அவ்வப்போது நடந்தன. 1948 இல் இலங்கை சுதந்திரம் அடைந்தது முதல் ஆட்சியிலிருந்த இலங்கை ஐக்கிய தேசியக்கட்சியும் (UNP) சிறீலங்கா தேசியக்கட்சியும்(SLP) அவற்றின் தலைவர்களும் இந்தச் சிக்கல்களுக்கான தீர்வுகளைத் தங்களின் ஆட்சி அதிகாரத்தைத் தக்கவைக்கும் நோக்கத்திலேயே அணுகினார்கள் என்பதால் நல்லதொரு தீர்வுகள் கிடைக்காமலேயே தொடர்ந்தன. சிங்களப் பெரும்பான்மையின் வாக்குகளே வெற்றிக்கான ஆதாரம் என்ற நிலையில் இலங்கையின் தேசிய கட்சிகள் ஒவ்வொன்றும் சிங்களப் பேரினவாதத்தைத் தள்ளிவைத்துப் பார்க்கும் வாய்ப்புகள் கொண்டனவாக இல்லை.

அதே நேரம் மொழி அடிப்படையில் சிறுபான்மை இனத்தவர்களான தமிழர்களின் ஆதரவைப் பெறுவதின் வாயிலாகவே ஜனாதிபதி தேர்தலில் பெரும்பான்மை கிடைக்கும் என்பதையும் உணர்ந்தே இருந்தார்கள். ஒவ்வொருமுறையும் ஜனாதிபதி தேர்தலில் தமிழர்களின் பெரும்பான்மை வாக்குகளைப் பெற்றுவிடும் தந்திரத்தைக் கையாண்டு ஆதரவு பெற்று அதிபரானவர்கள், பின்னர் தமிழர்களுக்கு அநீதி இழைத்த வரலாறுதான் ஈழத்தமிழர்களின் துயரமான வரலாறு. அந்த அளவுக்கு இல்லையென்றாலும் மலையகத்தமிழர்களும், தமிழ் பேசும் முஸ்லீம்களும் பெரும்பான்மை மக்களின் வாக்குகளைப் பெற்ற கட்சிகளின் அதிகாரத்துக்குக் கட்டுப்பட்டே இருந்து வந்தனர். அந்த அச்சத்தோடு தான் எல்லாத் தேர்தல்களையும் எதிர்கொண்டார்கள். இவையெல்லாம் இலங்கையின் தேர்தல் அரசியலில் இருக்கும் பெரும் தடைகள். இதையெல்லாம் தாண்டியே அநுரவின் தேசிய முன்னணி தனக்குத் தேவையான இருக்கைகளைப் பெற்றாக வேண்டும்.

புதிய நம்பிக்கைகள்


ஜனாதிபதி தேர்தலில் அநுரகுமார வெற்றி பெற்ற பின் புதிய நம்பிக்கைகள் தோன்றியுள்ளன. இனியொரு யுத்தம், உள்நாட்டுக் கிளர்ச்சி நடக்கும் வாய்ப்புகள் இல்லை என்று நம்புகிறார்கள். ஏனென்றால் உலக அரசியலின் பின்னணியில் இலங்கையின் அரசியல் பேசப்படுகிறது. அனுரகுமார திசநாயகே இதுவரையில் இலங்கை பார்க்காத அரசு ஒன்றைத் தருவார் என்று மக்கள் நினைக்கிறார்கள். அதற்கான காரணம் அவரது மக்கள் விடுதலை முன்னணியின் இடதுசாரிச் சார்புநிலை. அதே நேரம் அவரது கட்சியின் முன் அடையாளம் ஜே.வி.பி. என அழைக்கப்பட்ட ஆயுதம் தாங்கிய அமைப்பு என்ற அச்சமும் ஜனாதிபதி தேர்தல் வரை இருந்தது.

ஒன்றுபட்ட இலங்கையே தனது விருப்பம் என்று பேசிவந்தது ஜே.வி.பி. அதனால் தமிழர்களின் தேசிய இனப்பிரச்சினைக்கு – தமிழர்களின் உரிமைகளுக்கு இலங்கை அரசு செவிசாய்க்காது என்பது ஓரளவு உண்மைதான். ஆனால் தமிழர்களின் அச்சத்தைக் கடந்த இரண்டு மாதங்களில் மாற்றும்விதமாகப் பேசுகிறார். ஒன்றுபட்ட இலங்கைக்குள் சிங்களர், ஈழத்தமிழர், தமிழ் பேசும் முஸ்லீம்கள், மலையகத்தமிழர் என்ற வேறுபாடு இல்லாமல், அனைவரும் இலங்கையர் என்ற பார்வையில் சமநீதிக்காகத் தனது தலைமையிலான அரசு முன் நிற்கும் எனக் கூறிவருகிறார்.

முழுவதும் இடதுசாரிச் சார்போடு சீன ஆதரவை எடுத்து இந்தியாவைத் தள்ளிவைக்கும் போக்கைக் காட்டவில்லை. அதேபோல் நாட்டின் அடிப்படைத் தேவைகளுக்காக உதவிய உலகவங்கியின் உதவிகளை மறுக்கப்போவதில்லை என்ற நிலைபாட்டையும் காட்டியுள்ளார். இதுவொரு இணக்க அரசியல் நிலைப்பாடு. தொடர்ந்து கடந்த கால அரசுகள் செய்த தேவையற்ற செலவுகளைக் குறைத்து, மக்களின் அடிப்படைகளை நோக்கிப் பொருளாதாரம் நகரும் என்பதைக் கோடி காட்டி வருகிறார். இலங்கையின் பெரும்பான்மை மக்களின் பயிர் விவசாயம், தோட்டப் பயிர் விவசாயம், மீன்வளம், சுற்றுலாப் பொருளாதாரம் ஆகியனவற்றில் கவனம் செலுத்தி வளர்ச்சியைப் பெருக்குவோம் என்கிறார்.

இதனை நாட்டின் பெரும்பாலான பகுதி மக்கள் ஏற்கத் தயாராகிவிட்டனர் என்பதை வரப்போகும் தேர்தல் முடிவுகளைக் கொண்டே உறுதி செய்யமுடியும். அதே நேரம் அந்தக் கட்சியின் வெற்றி உறுதி என்பதை எதிர்க்கட்சிகளின் நிலையைக் கொண்டும் உணரமுடிகின்றது. தேசிய மக்கள் முன்னணிக்கெதிராக அரசியல் செய்யும் எதிர்க்கட்சிகள், இந்தத் தேர்தலில் தோல்வியின் அச்சத்தில் இருக்கின்றன என்பதைத் தேர்தல் அறிவிப்புக்குப் பின் நிகழ்ந்த சம்பவங்கள் காட்டுகின்றன. நீண்டகாலமாக நாடாளுமன்ற உறுப்பினர்களாக இருந்த பலரும் தேர்தலில் போட்டியிடாமல் ஒதுங்கிக் கொண்டனர். செல்வாக்குப் பெற்ற அரசியல் குடும்பங்களும்- குறிப்பாக ராஜபக்சே குடும்பம்- பின்னின்று இயக்கும் அரசியல் நடைமுறையைப் பின்பற்றி ஒதுங்குவதைக் காணமுடிகின்றது. முஸ்லீம்கள் பிரதிநிதிகளாக இருந்த நாடாளுமன்ற உறுப்பினர்களும் கட்சிகளும் கூடத் தேர்தல் வெற்றி உறுதியில்லை என்பதால் ஒதுங்கிவிட்டதைச் செய்திகளில் வாசிக்க முடிகிறது.

தமிழ்த்தரப்பின் பின்னடைவுகள்



மற்ற பகுதிகளில் காணப்படும் தெளிவான அரசியல் களம் தமிழ்ப்பகுதியில் இல்லை. வடக்கு இலங்கையின் அரசியல்வாதிகளிடம் தெளிவான முடிவுகள் எதுவும் இல்லை என்பது வெளிப்பட்டு வருகின்றது. இதுவரை இருந்த தமிழர் தேசியக் கூட்டமைப்பு, தமிழரசு கட்சி போன்றனவற்றின் மீது மக்கள் நம்பிக்கை இழந்துவிட்டனர். அதனால் புதியபுதிய குழுக்களும் அமைப்புகளும் சுயேட்சைக்குழுக்களாகத் தேர்தல் களத்தில் நிற்கின்றன. அவையெல்லாம் அரசியல் அரசியலின் வெளிப்பாடு எனத் தமிழ்ப்பகுதி அரசியல் விமரிசகர்கள் வருத்தத்தோடு எழுதி வருகின்றனர். தமிழ்ப்பகுதியில் இருக்கக்கூடிய குறைவான இருக்கைகளுக்கு ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் போட்டியாளர்களாக நிற்கின்றனர்.

எல்லாவற்றின் மீதும் சந்தேகத்தை எழுப்பிப் பல்வேறு அணிகளாகப் பிளவுபட்டு நிற்கின்றார்கள் தமிழர்கள். நீண்டகாலமாகத் தமிழ்தேசிய அரசியலைப் பேசியும், தனியாகத் தனியீழத்தை அடைந்துவிட முடியும் என்று நம்பியும் போராடியவர்களால் தங்களின் நம்பிக்கை பொய்த்துப் போய்விட்டது என்பதின் வெளிப்பாடு இது. தமிழர்களாகத் திரண்டு ஓரணியில் நின்று தமிழ்ப்பகுதி இருக்கைகளைப் பெறும் தமிழ் அரசியல் உருவாகவில்லை. முள்ளிவாய்க்கால் பேரழிவுக்குப் பின் தமிழர்களுக்குக் காத்திரமான வழியைக் காட்டும் தேர்தல் அரசியல் ஒன்று உருவாகாமல் போனது என்பதை இந்தக் காட்சிகள் காட்டுகின்றன.

வீரமிக்க போராட்டங்களில் ஈடுபட்டவர்கள், அறிவுசார்ந்த தீர்மானங்களை எடுக்க முடியாமல் தவிப்பதை இந்தத்தேர்தல் முடிவுகள் காட்டக்கூடும். அதற்குப் பின்னராவது மக்களாட்சி முறையில் இணக்க அரசியல் செய்வது பற்றிச் சிந்திக்கக்கூடும். ஒன்றுபட்ட இலங்கைக்குள் தமிழர்களின் இருப்பை – அடிப்படை உரிமைகளோடு கூடிய வாழ்க்கையை உறுதிசெய்யும் அரசியலை முன்னெடுக்கப் புதிய தலைமைகள் உருவாகக்கூடும்.


ஜூனியர் விகடனின் இணைய இதழில் வந்த கட்டுரை





கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மனு : சில சொல்லாடல்கள்

சந்திக்கும் கணங்களின் அதிர்ச்சிகள் : புலப்பெயர்வு எழுத்துகளின் ஒரு நகர்வு

ராஜ்கௌதமனின் தலித்தியப்பங்களிப்புகள்