விடுப்புக்கொள்கை (VACATION POLICY ) மறுபரிசீலனைகள்

அவ்வப்போது அறிவிப்புகள்

மழைக்காக  அவசர அறிவிப்பைச் செய்யும் உரிமையைக் கல்வி நிறுவனங்களின் - பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு வழங்கி அறிவிப்புச் செய்கிறார்கள் மாவட்ட ஆட்சித்தலைவர்கள். இந்த முடிவு வரவேற்கத்தக்க முடிவு. அவசரகாலத்திற்கென அளிக்கப்பட்ட விடுப்புகள் திரும்பவும் மாற்றுப்பணிகள் மூலம் நிரப்பப்பட வேண்டியன என்பதால் அந்தந்த நிறுவனத்தலைவர்களே விடுப்பு அறிவிப்பது தேவையான ஒன்று.
தமிழ்நாட்டிற்கு மழையைக் கொண்டு வருவன வடகிழக்குப் பருவக்காற்றும் தென்மேற்குப் பருவக்காற்றும். முதலாவது வட மாவட்டங்களுக்கு -குறிப்பாகக் கடலோர மாவட்டங்களுக்குப் பெருமழையையும் சிலவகையான அழிவுகளையும் தந்துகொண்டே இருக்கிறது. இரண்டாவதான தென்மேற்குப் பருவக்காற்று தமிழ்நாட்டுக்குள் வரும்போது சாரலாகவும், தென்மாவட்டங்களான குமரி, நெல்லை, தூத்துக்குடி, தேனி, விருதுநகர் போன்றவற்றுக்குப் பெருமழையையும் தருகின்றது. அப்போதெல்லாம் நமது அரசுகள் தற்காலிக அறிவிப்புகளைச் செய்தன; செய்கின்றன. இனி அது தேவைப்படாது என நினைக்கிறேன். இந்த நேரத்தில் நமது விடுப்புக்கொள்கையை அரசு மறுபரிசீலனை செய்யலாம் என்று சொல்லத்தோன்றுகிறது.
  • வட தமிழ்நாட்டில் பெரும்பாலான மாவட்டங்களில் ஆங்காங்கே மிதமான மழை இருக்கும். கனமழை காரணமாக சென்னை, திருவள்ளூர் மாவட்ட கல்லூரி, பள்ளிகளுக்கு விடுமுறை. செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டதில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை
  • · அக்டோபர் கடைசிவாரம் தொடங்கி டிசம்பர் 10 வரை வட தமிழ்நாட்டில் பெருமழைக்காலம். 3 முதல் 5 தடவை காற்று அழுத்தத்தாழ்வு மண்டலம் உருவாகும். சில நேரங்களில் புயல் காற்றும் வீசும். தனியார் வானிலை ஆர்வலர் அறிவிப்பு.
  • · மழைக்காலத்தை எதிர்கொள்ள அரசுத்துறைகளும் மாநகராட்சி ஊழியர்களும் தயார்நிலையில் உள்ளனர். முதல்வர் அறிவிப்பு
ஒவ்வொரு ஆண்டும் வடகிழக்குப் பருவமழை பெய்யும் அக்டோபர் தொடங்கி டிசம்பர் வரை இந்தத் தலைப்பில் செய்திகள் ஊடகங்களில் இடம்பெறுவதைக் கேட்கிறோம்; பார்க்கிறோம்.

· குற்றாலத்தில் சாரல் தலை காட்டத்தில் தொடங்கியிருக்கிறது. கேரளக்கடற்கரையில் பெய்யும் மழை ஜூன் கடைசி வாரத்தில் தென்காசி மாவட்டத்தில் பெருமழையாக மாறும். வானிலை நிலைய இயக்குநர் அறிவிப்பு

· நெல்லை மாவட்ட அணைகள் நிரம்புகின்றன. தாமிரபரணிக்கரையோரத்தில் குடியிருப்பவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்லப்படுகின்றார்கள். மாவட்ட ஆட்சித்தலைவர் அறிவிப்பு

· தென்மாவட்டக்கல்லூரிகள், பள்ளிகளுக்கு விடுமுறை. கன்யாகுமரியிலிருந்து 250 கிமீ தூரத்தில் சூறாவளி

· கோடை வெயிலின் தாக்கம் இன்னும் இருப்பதால் ஜூன் ஒன்றாம் தேதிக்குப் பதிலாக மேலும் ஒருவாரம் கோடை விடுமுறை நீட்டிக்கப்படுகிறது எனப் பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு.

இந்தத்தலைப்பில் செய்திகள் தென்மேற்குப் பருவக்காற்றுக்காலமான ஜூலை தொடங்கி செப்டம்பர் வரை செய்தித்தாள்களிலும் தொலைக்காட்சிகளிலும் இடம்பெறக்கூடியன.

இத்தகைய அறிவிப்புகள் மட்டுமல்லாமல்,

  • · தீபாவளிக்கு முன்னதாக ஒருநாள் விடுமுறை. சொந்த ஊர்களுக்குப் போகும் பயணிகளுக்காக அரசு அறிவிப்பு. இந்த விடுப்புக்கு மாற்றாக ஒருநாள் கூடுதலாக அரசு ஊழியர்கள் பணியாற்றவேண்டும்.
  • · பொங்கல் விடுமுறைக்குப் பின்னால் வரும் வெள்ளிக்கிழமையும் விடுமுறையாக அறிவித்துள்ளார் முதல்வர். தமிழர் திருநாளாம் பொங்கலைக் கொண்டாடச் சொந்த ஊர்களுக்குப் போனவர்கள் மகிழ்ச்சி.

இத்தகைய அறிவிப்புகளும் ஒவ்வோராண்டும் செய்யப்படும் அறிவிப்புகளே. அரசின் விடுமுறை அறிவிப்புகள் என்பன அரசு மற்றும் பொதுத்துறை ஊழியர்களுக்கும் கல்வி நிறுவனங்களுக்கும் பொருந்தக்கூடியன. அரசுத்துறைகளிலும் அத்தியாவசியத் தேவைப் பணியில் இருக்கும் சேவைப்பணியாளர்களுக்கு இந்த அறிவிப்புகள் பொருந்தாது.

காலமுறையில் சம்பளம் பெறும் அரசு, பொது, தனியார் துறைகள் என ஒவ்வொன்றுக்கும் பணிக்காலம், விடுப்பு நாட்கள் என விதிகளும் நடைமுறைகளும் இருக்கும்போது அரசுகள் ஏன் இப்படி அவ்வப்போது அறிவிப்புகள் செய்யவேண்டும்.இந்தக் கேள்வியைப் பலரும் கேட்டுக் கொள்வதில்லை

பணிக்காலமும் விடுப்புநாட்களும்

கல்வித்துறை உள்ளிட்ட அரசுத்துறைப் பணியாளர்களுக்கு வாரத்தில் ஐந்து நாட்கள் வேலைநாட்கள்; இரண்டு நாட்கள் விடுமுறை. இவை தவிர ஒவ்வோராண்டும் அரசு அறிவிக்கும் பொது விடுமுறைகளும் உண்டு; சமயப் பண்டிகை நாட்களுக்கான விடுமுறைகளும் உள்ளன. அத்தோடு ஒவ்வோர் மாவட்டத்திற்கும் அனுமதிக்கப்பட்ட உள்ளூர் விடுமுறைகளையும் சேர்த்துக்கொள்ள வேண்டும். இவ்விடுமுறை நாட்களைத் தவிர மற்ற எல்லா நாட்களும் வேலை நாட்களே.

இப்பொதுத்தன்மையிலிருந்து கல்வித்துறையின் விடுப்புகள் மாறுபட்டவை.அதன் அலுவலகப் பணியாளர்கள் பொது விடுமுறையோடு ஒத்துப்போக வேண்டியவர்கள். ஆனால் ஆசிரியர்களும் மாணவர்களும் அப்படி அல்ல. அவர்களுக்குக் கூடுதல் விடுமுறை நாட்கள் உள்ளன. ஆசிரியர்களை விடவும் மாணவர்களுக்கு இன்னும் அதிகம். இந்த வேறுபாடுகளுக்குப் பின்னால் கற்றல்,கற்பித்தல், பயிற்சிகள், தேர்வுகள், தாள்கள் திருத்தம், முடிவுகள் அறிவிப்பு போன்ற காரணங்கள் உள்ளன.

அரசு அறிவிக்கும் விடுமுறை நாட்கள் தவிர எல்லாப் பணியாளர்களுக்கும் வேறுவிதமான விடுப்பு அனுமதிகளும் உள்ளன. அவை தனிநபர்களின் பணி உரிமைகள். தனிநபர்களுக்கான சாதாரண விடுப்பு, வரையறை விடுப்பு, ஈட்டிய விடுப்பு, மருத்துவ விடுப்பு, பணிமேல் விடுப்பு, மாற்று விடுப்பு போன்றன அவை. இவற்றோடு எல்லாக் கல்வி நிறுவனங்களுக்கு நீண்ட விடுமுறைக் காலமும் உண்டு. அதிலும் ஆசிரியர்களுக்கும் மாணாக்கர்களுக்கும் வேறுபாடுகள் உள்ளன.

கல்வி நிறுவனங்களில் தேர்வுகளுக்குப் பின்னால் மாணவர்களுக்கு நீண்ட விடுமுறைகள் அளிப்பது வழக்கமாக உள்ளது. முன்பெல்லாம் காலாண்டு, அரையாண்டு, முழு ஆண்டுத் தேர்வுகள் இருந்தபோது ஒவ்வொரு தேர்வுக்குப் பின்னும் ஒரு வாரம் முதல் ஒரு மாதம் வரை விடுமுறை உண்டு. காலாண்டுத் தேர்வுகளையொட்டி ஆயுதபூஜை, விஜய தசமி, சரஸ்வதி பூஜை ஆகியன வரும். எனவே அதனை பூஜை விடுமுறை நாட்கள் என்றார்கள்,

டிசம்பரில் அரையாண்டுக்குப் பின்னால் கிறிஸ்துமஸ் வருவதால் கிறிஸ்துமஸ் விடுப்பு என்பது ஜனவரி ஒன்று வரை நீட்டிக்கப்பட்டு புத்தாண்டு வரை இருக்கும். கல்வி ஆண்டிறுதித் தேர்வுக்குப் பின் பொதுவிடுமுறைக்காலம். அது பெரும்பாலும் கோடை மாதமான மே முழுவதும் ஒருமாதம். இப்போது பருவமுறைகள் பின்பற்றப்படுவதால், விடுமுறைகளும் பருவ விடுமுறைகள் என அழைக்கப்படுகின்றன.

விடுமுறைகளின் பின்னணிகள்


கவனித்துப் பார்த்தால் விடுமுறை என்பது காலமுறை சம்பளதாரர்களுக்கு உரிய ஒன்றாக இருப்பது புலப்படும். இந்தியாவிற்குள் ஐரோப்பியர்கள் வந்த பின் அறிமுகமாகமான கருத்தாக்கமே விடுமுறை. அந்தச் சொல்லின் பழைமை மூன்று நூற்றாண்டுக்குரியதாகவே இருக்கும். விடு என்ற வேர்ச்சொல்லிலிருந்து உருவாகும், விடை, விடுப்பு, விடுவித்தல், விடுவிப்பு போன்ற பெயர்ச்சொற்கள் பழைய சொற்கள், ஆனால் விடுமுறை என்ற பெயர்ச்சொல் புதியது.

விடுமுறையோடு கூடிய கூலியை நடைமுறைப்படுத்தியவர்கள் ஐரோப்பியர்கள். அவர்கள் உருவாக்கிய சேவைப்பணிகள், வணிகம், தொழிற்சாலைகள், தோட்டத்தொழில்கள் என எல்லாவற்றிலும் காலமுறைச் சம்பளம், விடுமுறை நாட்கள் என்ற அமைப்பையும் அவர்களே அறிமுகப்படுத்தியுள்ளார்கள் . அந்த அமைப்புக்குள் வேலை செய்தவர்களின் தொடர்ச்சியே இப்போது எல்லாத்துறைகளிலும் தொடர்கின்றன. அமைப்புசாராத பணியாளர்களாக இருக்கும் அன்றாடக்கூலித் தொழில்களில் விடுமுறை என்பது இல்லை. அதேபோல் வேளாண்மை, நெசவு, தச்சு என இன்றளவும் குடும்ப அளவில் நடக்கும் தொழில்களிலும் விடுமுறை என்ற கருத்தாக்கம் இல்லை.

ஐரோப்பாவில் தொழிற்புரட்சியோடு சேர்ந்து விடுமுறை உருவாகியுள்ளது. எட்டு மணி நேர வேலைக்காகப் போராடிய தொழிலாளர் இயக்கங்களே விடுமுறைக் கோரிக்கைகளையும் முன்வைத்துப் பெற்றிருக்கின்றன. அப்படிப் பெறப்பட்ட விடுமுறையில் ஓய்வு என்பதோடு கடவுளை வணங்கும் பக்திக்கும் இடமளிக்கப்பட்டுள்ளது. தொழிலாளர்களுக்கு மட்டுமல்லாமல் முதலாளிகள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினருக்கும் கடவுளிடம் சென்று முறையிடுவதற்கு ஒரு நாள் இருந்த நிலையில் அந்த நாளை விடுமுறை நாளாக அளித்துக் கொண்டார்கள்.

வாரத்தின் ஏழாம் நாள் ஞாயிறு. அந்த நாள் ஓய்வு நாள் என்பது கிறித்தவச் சமய நம்பிக்கையோடு தொடர்புடையது. அதேபோல் கோடை வெயிலில் உழைப்பது இயலாத ஒன்று. எனவே ஓய்வுக்கென நீண்ட நாட்கள் அவர்களுக்குத் தேவையிருந்தது. அப்படி உருவானதே கோடை விடுமுறை என்னும் ஓய்வுக்காலம். ஐரோப்பாவின் கோடைகாலம் என்பது ஜூன் முதல் ஆகஸ்டு. ஆனால் இந்தியாவின் கடுங்கோடை மே-ஜூன். தமிழ்நாட்டின் கோடை காலம் பங்குனி -வைகாசி. அக்கினிநட்சத்திரக் காலம் என்பது சித்திரை கடைசி வாரமும் வைகாசியின் தொடக்க வாரமும், முன்னேழு பின்னேழு அக்கினி என்பது தமிழில் உள்ள மரபுத்தொடர்.

ஐரோப்பியர்களின் விடுமுறைக் கருத்தாக்கத்தின் பின்னால் ஓய்வு என்ற மனநிலையும் பக்தியும் கொண்டாட்டமும் இருந்துள்ளன. அதை உள்வாங்கிக் கொண்டே இந்தியாவின் /தமிழ்நாட்டின் அரசுகள் விடுமுறை நாட்களை உருவாக்கியுள்ளன. இந்தியாவை விட்டுச் சென்ற ஆங்கிலேயர்களின் நடைமுறைகள் பலவும் தொடர்வது போல விடுமுறைக் கருத்தாக்கமும் தொடர்கின்றது. அந்தத் தொடர்ச்சியில் புதிதாக உருவாகிவரும் வானிலையின் காரணங்கள் குறுக்கிடுகின்றன. அதனால் மழைக்காகவும் வெயிலுக்காகவும் நமது விடுமுறை நாட்களும் மாற்றப்படுகின்றன. புதிதாக அறிவிப்புகள் செய்யப்படுகின்றன.

ஐரோப்பிய நாடுகள் பெரும்பாலும் கடும்பனிப்பொழிவைச் சந்திக்கும் நாடுகள். அதனால் கல்வி நிலையங்களில் பனிக்காலமும் கோடைகாலமும் நீண்ட விடுமுறைக்குரிய காலங்களாக இருக்கின்றன. அந்த விடுமுறைக்கு முன்புதான் பருவத்தேர்வுகள் நடக்கின்றன. இது எனது நேரடி அனுபவம். இரண்டு ஆண்டுகள் வார்சா பல்கலைக்கழகத்தில் வருகைதரு பேராசிரியராகத் தமிழ் கற்பித்தேன். போலந்து, கத்தோலிக்க சமயத்தை ஏற்றுக்கொண்ட நாடு. அதனால் ஈஸ்டர் கொண்டாட்டங்களை ஒட்டியும் கிறிஸ்துமஸையொட்டியும் நீண்ட பண்டிகைக்கால விடுமுறைகள் உண்டு. இம்முறை பெரும்பாலான ஐரோப்பிய நாடுகள் பின்பற்றும் நடைமுறையே.

அமெரிக்காவிலும் கனடாவிலும் கூட இந்நடைமுறைகள் இருக்கின்றன. அதே நேரம் சில மாற்றங்களும் உண்டு. அங்கு ஓய்வுக்கும் சுற்றுலாவுக்கும் முக்கியத்துவம் உண்டு. அதனால் ஒவ்வொரு மாதமும் ஏதாவதொரு வாரஇறுதி விடுமுறையோடு இன்னும் ஒன்றிரண்டு நாட்கள் கூடுதல் விடுப்பு வழங்குகிறார்கள். அதற்கு விடுதலை நாள், தேசிய நாள், தொழிலாளர் நாள் போன்றனவற்றைக் காரணமாக்கி நீண்டவார விடுமுறை அளிக்கிறார்கள். அந்நாட்களில் அமெரிக்கர்களும் கனடியர்களும் சிறு,குறு சுற்றுலாக்களை மேற்கொள்கிறார்கள். ஆண்டிறுதிப் பெரும் விடுமுறை நாட்களை அனுமதிக்கவும் செய்கிறார்கள். அங்கிருக்கும் எல்லாத் தொழில்களுக்கும் நீண்ட விடுமுறைகள் அளிக்கப்படுகின்றன. அவ்விடுமுறைகளில் நீண்ட சுற்றுலாக்களாக நாடுவிட்டு நாடுகளுக்குச் செல்கிறார்கள்.

*******

மறுபரிசீலனைக்கான மாற்றுத்திட்டம்


இந்தப்புரிதலின் அடிப்படையில் மாநிலத்தின் மாறிய சூழலை ஏற்றுக் கொண்டு நமது அரசு புதிய விடுப்புக்கொள்கையை- VACATION POLICY- உருவாக்கும் திட்டத்தைப் பற்றிச் சிந்திக்கலாம். அத்திட்டத்தில் நமது மாநிலத்தின் பல்சமய மக்களின் பண்டிகைகள்/ கொண்டாட்டங்கள் குறித்த அக்கறையோடு மாநிலத்தின் தட்பவெப்ப நிலை மாற்றத்தையும் கவனத்தில் கொள்ளலாம். தேவைப்பட்டால் அத்திட்ட வரைவை உருவாக்க ஓர் ஆலோசனைக்குழுவை உருவாக்கவும் செய்யலாம். இந்த நடைமுறையையே உலக நாடுகள் பலவும் கடைப்பிடிக்கின்றன.

ஐரோப்பியக் காலனிய விடுப்புக்கொள்கையைக் கைவிட்டுவிட்டுத் தமிழ்நாட்டுக்குரிய விடுப்புக்கொள்கையைத் தமிழ்நாட்டரசு முன்வைக்க வேண்டும். அதனை ஒன்றிய அரசும் பிற மாநிலங்களும் பின்பற்றக் கூடும் என எதிர்பார்ப்பது தவறில்லை

தமிழ்நாட்டின் உயர்கல்வி நிறுவனங்களான கல்லூரிகள் ஏற்கெனவே இரட்டைப் பெருவிடுமுறையைப் பின்பற்றத்தொடங்கி ஏழெட்டு ஆண்டுகள் ஆகிவிட்டன. பருவமுறைத் தேர்வுகள் காரணமாக ஒற்றைப் பருவத்தேர்வுகள் முடிந்தவுடன் ஒரு மாதம் விடுப்பு அளிக்கப்படுகிறது. இரட்டைப் பருவத் தேர்வுகளுக்குப் பின்னர் ஒருமாதம் விடுப்பு என்ற நடைமுறை ஏற்கப்பட்டுவிட்டது.அதனைப் பள்ளிகளுக்கும் பல்கலைக்கழகங்களுக்கும் ஏற்றுச் சட்டசபையில் அறிவிப்புச் செய்து விடலாம். இந்த நீண்ட விடுப்புக்களை மழைக்காலத்தோடு இணைத்து வழங்கினால் ஒவ்வொருநாள் மழைக்கும் புயலுக்கும் காற்றுக்குமெனத் தனித்தனியாக அறிவிப்புச் செய்ய வேண்டியதில்லை. அத்தோடு ஒவ்வொரு பருவத்திலும் இடைப்பருவ விடுப்பாக ஒருவார காலம் கிடைக்கும் விதமாகத் தொடர் பண்டிகைகளை அடையாளங்கண்டு அந்த நேரத்தில் விடுப்பு அளிக்கலாம். இவையெல்லாம் கல்வி நிறுவனங்களுக்கான விடுப்புக்கொள்கைகள்.

இதற்குப் பிறகு பொது விடுமுறைகள் பற்றிய கொள்கையை உருவாக்கவேண்டும். அதற்கு முதலில் இப்போது பின்பற்றப்படும் பண்டிகைகளுக்குப் பொதுவிடுமுறை என்ற நடைமுறையைக் கைவிடவேண்டும். அதன் மூலம் நமது அரசு மதச்சார்பற்ற அரசு என்ற நிலைபாட்டை உறுதி செய்வதோடு கூடுதல் வேலை நாட்களையும் உருவாக்க முடியும்.

இப்போது இந்து, இசுலாமியம், கிறித்தவம், பௌத்தம், சமணம் என ஐந்து சமயங்களின் பண்டிகைகளுக்கு விடுமுறைகள் உள்ளன. ஆனால் ஒரு சமயத்தவரின் பண்டிகையை இன்னொருவர் கொண்டாடுவதில்லை என்பதுதான் நடைமுறை உண்மை. ஆகவே அவரவர் சமயப் பண்டிகைகளுக்கு விடுமுறை என்ற நடைமுறையைப் பின்பற்றும் விதமாக விடுப்புக் கொள்கை உருவாக்கப்பட வேண்டும்.

சமயம் சாராத கொண்டாட்டங்களான விடுதலை நாள், குடியரசு நாள், தொழிலாளர் நாள் போன்றவற்றோடு விடுமுறை அளிக்கவேண்டிய தலைவர்களின் நினைவு நாட்களைப் பொதுவிடுமுறை நாட்களாகப் பட்டியலிட்டுக் கொள்ளலாம். அதன் பின் சமயம் சார்ந்த பண்டிகைகளுக்கு அந்தந்தச் சமயத்தவர்களுக்கு விடுப்பு எடுத்துக்கொள்ளும் விதமாக வரையறை விடுப்பு நாட்களை அளிக்கலாம். இப்போது வரையறை விடுப்பு நாட்களின் எண்ணிக்கை மூன்றாக உள்ளன. அதனை அதிகப்படுத்திக் கொள்ளலாம். அதன் போதாமையை ஒருவர் உணர்ந்தால் அவருக்குரிய சம்பளத்தோடு கூடிய ஈட்டிய விடுப்பை அனுமதிக்கலாம்.

இத்தகைய விடுப்புக்கொள்கையை உருவாக்கி நடைமுறைப்படுத்துவதற்கு முன்னால் வரைவுக்குழு ஒன்றை உருவாக்கி நடைமுறைப்படுத்தலாம். இது தமிழ்நாட்டுக்கு உடனடித் தேவை.

நன்றி விகடன்.காம்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கிஷ்கிந்தா காண்டம்- குற்றவியலும் உளவியலும்

உடல் மறுப்பு என்னும் பெரும்போக்கு

தி.சு.நடராசனின் திறனாய்வுப் பார்வைகள் :தமிழ் அழகியல், தமிழகத்தில் வைதீக சமயம்