கதைசொல்லி என்னும் கதாபாத்திரம்
அகழ் இணைய இதழில் (நவம்பர்,8/2024) பதிவேற்றம் பெற்றுள்ள சுரேஷ்குமார இந்திரஜித்தின் பூக்கள் கதையை வாசித்தவுடன், அவரது சொல்முறை குறித்தும் புனைவாக்கம் குறித்தும் எனக்குள் உருவாகியிருந்த கருத்து மேலும் உறுதியானது. இந்தக் கதையும் ஆண் – பெண் உறவில் ஏற்படும் பிறழ்வுகளை மையப்படுத்திய இன்னொரு கதையாகவே இருக்கிறது. இவ்வகைச் சிக்கல்களை விவாதிக்கும் கதைகளை அதிகமாக எழுதுவதே அவரது புனைவுலகமாக இருக்கிறது.
மரபான வாழ்வியலுக்குள்ளேயே மீறலை மேற்கொள்ளும் பெண்களை அவரது கதைகளில் அதிகம் வாசிக்க முடியும். பாலியல் தேவைகளின் போதாமை அல்லது புதிய விருப்பம் என்பதில் ஆண்களுக்கு இணையாகவும் சில வேளைகளில் கூடுதலாகவும் பெண்களுக்கு ஈடுபாடு இருப்பதாக அவரது புனைவுலகம் இருக்கிறது. பொதுச்சமூகத்தில் இருப்பதாக நம்பும் தயக்கமும் தடைகளும் ஒருவிதக் கற்பிதம் மட்டுமே என்பதாகவும் அவரது கதைகளில் வழி உணரமுடியும். பெண்களின் உளவியலை விவாதப்படுத்த நினைத்து உரையாடல்களை முன்வைத்துவிட்டு, அதனை விரைவாக முடித்துக்கொள்ளும் தன்மையையும் கதைக்குள் நிகழ்த்துகிறார். அகழில் வந்துள்ள பூக்கள் கதையை வாசித்தாலே இது புரியவரும். இந்தக் கூற்றுகளையெல்லாம் அவரது கதைகளைக் கொண்டு விவாதிக்கும்போது சுரேஷ்குமாரின் புனைவுலகப் பரப்பும் எழுத்துமுறையும் அறியப்படலாம்.
*************நீண்டகாலமாக - 40 ஆண்டுகளுக்கும் மேலாகப் புனைகதைகள் எழுதிவரும் சுரேஷ்குமார இந்திரஜித்தின் சிறுகதைகளின் வாசகன் நான். அவரது சிறுகதைத் தொகுதிகளில் அலைந்து திரியும் கிழவன் தொகுதியை மட்டும் முழுமையாக - வரிசையாக வாசித்திருக்கிறேன். அந்தத் தொகுதி உண்டாக்கிய வாசிப்புத் தடையினால் தொகுதியாக வாசிக்கக் கூடாத எழுத்தாளர் என்ற எண்ணம் எனக்குள் உருவாகிவிட்டது. அதனால் அவ்வப்போது அவரது சிறுகதைகளை வாசித்தே வந்துள்ளேன்.
சிறுகதைகளைப் பத்திரிகைகளில் வரும்போது வாசித்திருக்கிறேன். வாசிக்கும்போதும்சரி, மதுரையில் வசிக்கும் எழுத்தாளர். ஆனால் கதைகளில் மதுரையின் அடையாளமான வட்டார மொழியோ, இடங்கள் சார்ந்த குறிப்புகளையோ உருவாக்க வேண்டும் என்று நினைப்பவர் இல்லை. மாறாகக் கதைக்குள் வெளிகள் சார்ந்து உருவாக்கப்படும் அடையாளங்கள் சார்ந்து தமிழ்நாட்டின் நகரங்கள்/ கிராமப்புறங்கள், சுற்றுலாத்தலங்கள் போன்றவற்றை உருவாக்கிக் கொண்டு அந்த இடங்களில் பாத்திரங்களை உருவாக்கி உலவவிடுவது அவரது முதன்மையான புனைவு அடையாளமாக இருக்கிறது.
**********
அவரது கதைசொல்லல், வெளிப்பார்வைக்குப் படர்க்கையில் சொல்வது போலத் தோன்றுகிறது. ஆனால் பெரும்பாலும் முன்னிலைக் கதைசொல்லியாகவே இருக்கிறார். முன்னிலைப் பாத்திரங்களுக்குக் குறிப்பான பெயர்களை அல்லது சுட்டுப்பெயர்களான அவன், அவள், அவர் போன்ற- சுட்டுப்பெயர்களைச் சூட்டுகிறார். அப்பாத்திரங்களுக்கான இடம் மற்றும் காலப்பின்னணியை உருவாக்குகிறார். அத்துடன் அவர்கள் இடம்பெறும் நிகழ்வுகளையும் அவர்களுக்கிடையே உள்ள உறவுகளையும் முரண்களையும் பார்வையாளர்களுக்கு அறியத் தருகிறார். அப்படி அறியத்தரும்போது பாத்திரங்களின் செயல்பாடுகள், உரையாடல்கள், மனவோட்டங்கள் சார்ந்து வாசகர்களே ஊகித்துக் கொள்வதற்கு அவரது சொல்முறை அனுமதிப்பதில்லை. அதற்குப் பதிலாகக் கதைசொல்லியாகிய பாத்திரத்தின் கோணத்திலிருந்தே எல்லாப் பாத்திரத்தையும் வாசிப்பவர்கள் அறிந்துகொள்ள வேண்டும் என நினைத்துக் கதையைச் சொல்கிறார். இதற்காகக் கதைசொல்லியாகக் கதைக்குள் இருக்கும் பாத்திரம் ஒவ்வொரு பாத்திரத்தின் இயல்புகளையும் எண்ணவோட்டங்களையும் விளக்கிச் சொல்லிக் கொண்டே இருக்கிறது. அதனால் ஒரு கதையை வாசித்து முடித்தவுடன், கதைக்குள் உருவாக்கப்பட்ட பாத்திரங்களைப் பற்றிய சித்திரங்களை வாசகர்கள் உருவாக்கிக் கொள்வதற்குப் பதிலாக, கதைசொல்லியைப் பற்றிய சித்திரங்களையே உள்வாங்குகிறார்கள்.
முன்னிலையில் பாத்திரங்களை நிறுத்திக் கதைசொல்லும் எழுத்தாளர்களும், படர்க்கையில் பாத்திரங்களை விலக்கிவைத்துக் கதைசொல்வதாகக் காட்டும் எழுத்தாளர்களும் பாத்திரங்களையே வாசிக்கத்தருகிறார்கள் என்பது பொதுவான நம்பிக்கை. சுரேஷ்குமார இந்திரஜித்தின் புனைகதைகளை வாசித்துக்கொண்டிருக்கும்போதும்சரி, வாசித்து முடித்தபின்பும்சரி, அவர் யாரை வாசகர்கள் முன் நிறுத்திக் காட்டுகின்றார் என்ற கேள்வி எழுவதும், அதன் தொடர்ச்சியில் , இவ்வகைக் கதைசொல்லல் வழியாகத் தன்னையே எல்லாக் கதைகளிலும் கதாசிரியர் எழுதிக் காட்டுகிறார் என்ற எண்ணம் தோன்றுவதைத் தவிர்க்க முடியாது. அந்தக் கருத்தென்பது, அவர் உருவாக்கும் புனைவுப்பாத்திரங்களை மையமிட்ட கருத்தல்ல; அந்தப் பாத்திரங்களை உருவாக்கும் கதைசொல்லியின் தன்னிலையை மையமிட்ட கருத்தே ஆகும்.
**********
பூக்கள் : சுரேஷ்குமார இந்திரஜித்
ரவியும் அவன் அம்மாவும் அண்ணாமலை நகர் 2வது குறுக்குத் தெருவில் ஒரு வீட்டில் வாடகைக்கு வசிக்கிறார்கள். எதிரே இருந்த இரண்டு வீடுகளும் ஒரே அமைப்பில் கட்டப்பட்டிருந்தன. அந்த இரண்டு வீடுகளிலும் ரயில்வே துறையில் வேலை பார்க்கும் இருவரின் குடும்பங்கள் இருக்கின்றன. இருவரும் இளைஞர்கள். அவர்கள் இருவரும் சகோதரர்களாக இருப்பார்கள் என்று ரவி நினைத்தான். பின்னர்தான் தெரிந்தது இருவரும் நண்பர்கள் என்று. இருவருக்கும் திருமணமாகி மனைவியுடன் இருந்தார்கள். இளந்தம்பதிகள். வெளியே கோயிலுக்குச் செல்லும்போதும் சினிமாவிற்குச் செல்லும்போதும் இரண்டு இளம் தம்பதியரும் சேர்ந்தே செல்வார்கள்.
அந்த இருவரின் மனைவிகளில் ஒருத்தி அழகாக இருப்பாள். இன்னொருத்தி சுமாராக இருப்பாள். அழகாக இருப்பவளின் பெயர் கனகா. அவளின் கணவன் பெயர் ரவீந்தர். சுமாராக இருப்பவளின் பெயர் நந்திதா. அவளின் கணவன் பெயர் அமுதன்.
ரவி தமிழ் முதுகலை முடித்தவன். முனைவர் பட்டத்திற்கு ‘சிலப்பதிகாரத்தில் இசை’ என்ற தலைப்பை எடுத்திருந்தான். அவனுடைய வழிகாட்டி வின்சென்ட் ஆசீர்வாதம் இந்தத் தலைப்பை ரவியிடம் எடுக்கச் சொல்லியிருந்தார்.
வின்சென்ட் ஆசீர்வாதம் வீடு இருக்கும் தெருவில் நுழையும்போது மிருதங்கம் ஒலிப்பது ரவிக்குக் கேட்டது. வின்சென்ட் ஆசீர்வாதம் மிருதங்கம் வாசிப்பார். மிருதங்கத்தின் மேல் தனக்கு ஈர்ப்பு ஏற்பட்ட கதையை அவர் ரவிக்குச் சொல்லியுள்ளார்.
“அபூர்வ ராகங்கள் சினிமா பாலச்சந்தர் டைரக்ஷன். அதிலே பாடகியா ஶ்ரீவித்யா வருவார். அவரு உடலமைப்பு வடிவாக இருக்கும்னு சொல்ல முடியாது. ஆனா முகம் அவ்வளவு அழகு. அகலமான, பெரிய, விரிந்த கண்கள். அந்தக் கண்களைச் சந்தித்தவன் மயக்கமடைந்தால் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை. அந்தப் படத்துலே கமல்ஹாசன் மிருதங்கம் வாசிப்பார். மிருதங்கத்தின் ஒலி ரெண்டு பேருக்கும் இடையிலே சஞ்சரிக்கும். எனக்கு மிருதங்க ஒலி பிடிச்சுப் போச்சு. காரமடை கதிர்வேலுப்பிள்ளை கிட்டே மிருதங்கம் வாசிக்கக் கத்துக்கிட்டேன். கச்சேரியிலே வாசிக்கற அளவுக்கு இல்லை. என் ஆத்ம திருப்திக்காக அப்பப்ப மிருதங்கம் வாசிப்பேன்.”
வின்சென்ட் ஆசீர்வாதம் வீட்டு வாசலில் நின்ற ரவி அழைப்பு மணியை அழுத்தினான். கதவு திறந்தது. வின்சென்ட் ஆசீர்வாதத்தின் மகள் ஜெனிபர் நின்றிருந்தாள்.
“அப்பா மிருதங்கம் வாசிக்கறார்.”
“சத்தம் கேக்குது” என்றான் ரவி.
“உக்காருங்க சொல்றேன்” என்றாள் ஜெனிபர்.
ரவி சோபாவில் உட்கார்ந்தான். ஜெனிபருக்குப் பின்புறம் தட்டையாக இல்லாமல் எடுப்பாக, அளவாக இருக்கும். முன்புறமும் அளவாக எடுப்பாக இருக்கும். கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கிறாள்.
சற்று நேரத்தில் மிருதங்கம் வாசிப்பதை நிறுத்திவிட்டு வின்சென்ட் ஆசீர்வாதம் வந்தார். பெரிய உருவமாக இருந்தார்.
“சிலப்பதிகாரம் படிச்சியா” என்றார்.
“அரங்கேற்றுக் காதை தவிர பிற இடங்கள்லே இசை பத்திய குறிப்புகள் இருப்பதா தெரியலையே.”
“அடியார்க்கு நல்லார் உரையிலே நிறைய விவரங்களும் ஆராய்ச்சிகளும் இருக்கு. நீ அதையும் தேடிப் படிக்கணும். நான் அதைத் தேடி எடுத்துத் தாறேன். நீயும் லைப்ரேரியிலே இருக்கான்னு பாரு. காபி சாப்பிடறியா.”
ரவி “சரி” என்றான். அவர் காபி கொண்டுவரச் சொல்லிக் கத்தினார். சற்று நேரத்தில் காபி வந்தது. சோபாவின் முன்னால் இருந்த டீப்பாயில் காபியை ஜெனிபர் வைத்துவிட்டுச் சென்றாள்.
அரங்கேற்றுக் காதையில், நடன முறைகள், இசை, வாத்தியக் கருவிகள் இடம்பெற்றது குறித்து வின்சென்ட் ஆசீர்வாதம் கைகளை ஆட்டிஆட்டிப் பேசினார். ரவிக்கு எதுவும் புரியவில்லை. வேறு தலைப்பு எடுத்திருக்கலாம் என்று தோன்றியது. அடியார்க்கு நல்லார் உரையை எங்கு தேடுவது என்று நினைத்தான்.
2
ரவி தன் அறையில் படுத்திருந்தான். ஜன்னல் வழியாகப் பார்த்தபோது எதிர் வீட்டில் குடியிருக்கும் ரவீந்தரின் மனைவி கனகாவும் அமுதனின் மனைவி நந்திதாவும் தங்கள் வீட்டு வாசலில் நின்று பேசிக்கொண்டிருந்தார்கள். அவன் ஜன்னல் கதவுகளை அடைத்து ஒரு கதவை லேசாகத் திறந்து, அந்த இடுக்கின் வழியே கனகாவைப் பார்த்தான். கனகாவை அவனுக்குப் பிடித்திருந்தது.
கனகாவும் நந்திதாவும் வாசலில் நின்று பேசிக்கொண்டிருப்பதைப் பார்க்கும்போது, ஜன்னல் கதவுகளை அடைத்து லேசாகத் திறந்து, அந்த இடுக்கின் வழியே கனகாவைப் பார்ப்பதை வழக்கமாகக் கொண்டான்.
அமுதனுக்குத்தான் கனகா மனைவியாகியிருக்க வேண்டும். தோற்றப் பொருத்தம் இருக்கிறது. ஆனால், ரவீந்தருக்கு மனைவியாக இருக்கிறாள். இப்படித்தான் வாழ்க்கையில் ஒருவருக்குப் பொருத்தமான மனைவி இன்னொருவருக்கும் அந்த இன்னொருவருக்குப் பொருத்தமான மனைவி வேறொருவருக்கும் அமைந்துவிடுகிறது.
கனகாவும் நந்திதாவும் அவரவர் வீட்டிற்குள் சென்றுவிட்டார்கள். அடியார்க்கு நல்லார் உரையை எங்கு தேடுவது என்று யோசித்துக்கொண்டே ரவி உட்கார்ந்திருந்தான்.
ரவியின் அம்மா பெண்கள் உயர்நிலைப் பள்ளியில் ஆசிரியையாக இருக்கிறார். முனைவர் பட்டம் பெற அவனுக்கு ஆவல் இருந்தது. போட்டித் தேர்வுகளுக்கும் படித்துக்கொண்டிருந்தான்.
ரவியின் அம்மாவிற்கு வேறு உயர்நிலைப் பள்ளிக்கு மாறுதல் வந்தது. இந்த இடத்திலிருந்து அந்த உயர்நிலைப் பள்ளிக்குச் செல்வது தூரமானது என்பதால் பல சிரமங்களை அவனின் அம்மா எதிர்கொள்ள வேண்டியிருந்தது. அந்த உயர்நிலைப் பள்ளி நகரத்தின் விஸ்தீரணப் பகுதியில் இருந்தது. அந்தப் பள்ளியில் பணிக்குச் சேர்ந்தபின் அந்தப் பகுதியில் வீடு பார்த்து, இந்த வீட்டைக் காலிசெய்து அந்தப் புதுவீட்டிற்குச் சென்றபின் கனகாவை ரவியால் பார்க்க முடியாமல் ஆகிவிட்டது.
3
வின்சென்ட் ஆசீர்வாதத்தின் வீட்டில் ரவி உட்கார்ந்திருந்தான்.
“அடியார்க்கு நல்லார் உரை கிடைக்கவில்லை. நீங்கள் தேடிப் பார்த்தீர்களா” என்றான் ரவி.
“என்னிடமும் இல்லை என்றுதான் நினைக்கிறேன். தேடிப் பார்த்தேன். அகப்படவில்லை” என்றார் வின்சென்ட் ஆசீர்வாதம்.
“தலைப்பை மாற்றிவிடுவோம் சார்.”
“மாத்தலாம். வேற என்ன தலைப்பு வைக்கறது. யோசிப்போம்.”
அந்த நேரத்தில் உள்ளறையிலிருந்து ஒரு நடுத்தர வயதுப் பெண் நைட்டியில் தோன்றினாள். ரவிக்கு அவள் பக்கவாதத்தில் பாதிக்கப்பட்டவள் போல் தோன்றினாள்.
“மரியாள்” என்று கத்தினார் வின்சென்ட் ஆசீர்வாதம்.
பணிப்பெண் எங்கிருந்தோ அவசரமாக ஓடிவந்து அந்த நடுத்தர வயதுப் பெண்ணை உள்ளே கூட்டிச் சென்றாள். “ஜெனிபர் எங்கே போனாள்” என்றார் வின்சென்ட் ஆசீர்வாதம். “தோட்டத்துலே இருக்கா” என்றாள் அந்தப் பணிப்பெண்.
“ஒரு நாளைக்கு எத்தனை காபி குடிப்பீங்க” என்றான் ரவி.
“பத்து காபி வரைக்கும் குடிப்பேன்” என்றார் வின்சென்ட் ஆசீர்வாதம்.
அவன் அந்த நடுத்தர வயதுப் பெண்ணைப்பற்றி யோசித்துக்கொண்டிருந்தான்.
“என் மனைவிக்கு வாதம் வந்து முடியாமக் கிடக்கு” என்று வின்சென்ட் ஆசீர்வாதம் சொன்னார்.
ஜெனிபர் காபி கொண்டுவந்து வைத்தாள். அவன் வழக்கம்போல் அவளின் சில பாகங்களைப் பார்த்தான்.
காபி குடித்துவிட்டு வெளியே வந்தான். கால் போன போக்கில் நடந்தான். முனைவர் பட்டம் வாங்கியே ஆகவேண்டும் என்று நினைத்தான். அவன் வசிக்கும் இடத்திலிருந்து பஸ்ஸில் வந்து இறங்கி நடந்து வின்சென்ட் ஆசீர்வாதம் வீட்டிற்கு வந்திருந்தான்.
பஸ் ஸ்டாப்பை நோக்கி நடந்தான். வழியில் ஒரு சினிமா தியேட்டர் இருந்தது. சினிமா பார்த்துவிட்டுச் செல்லலாம் என்று நினைத்தான். கவுண்ட்டருக்குச் சென்று டிக்கெட் வாங்கி தியேட்டருக்குள் நுழைந்தான். நந்திதாவின் கணவன் அமுதனும் ரவீந்தரின் மனைவி கனகாவும் பக்கத்துப் பக்கத்து சீட்களில் உட்கார்ந்திருப்பதைப் பார்த்தான். தோற்றப் பொருத்தம் நன்றாக உள்ளது என்று நினைத்தான்.
அவன் முன்பு வசித்த தெருவில் இருக்கும் நண்பன் வாசுதேவனுக்கு போன் பண்ணி நந்திதா, அமுதன், கனகா, ரவீந்தர் குடும்பங்கள் பற்றி விசாரித்தான். வாசுதேவன் சொன்னான்.
“ரெண்டு குடும்பத்துக்கும் ஏதோ பிரச்சினை, சண்டை. வீட்டைக் காலி பண்ணிட்டுப் போயிட்டாங்க. ரவீந்தருக்கும் கனகாவுக்கும் விவாகரத்து ஆயிருச்சு. அமுதன்தான் கனகாவை மெயின்ட்டைன் பண்றாரு. இப்படியே இருந்துருவாங்க போல இருக்கு.”
வாழ்வில் இப்படித்தான் எதிர்பாராத மாற்றங்கள் ஏற்படுகிறது என்று தத்துவார்த்தமாக யோசித்துக்கொண்டிருந்தான். அப்போது அவனுக்கு போன் அழைப்பு வந்தது. வின்சென்ட் ஆசீர்வாதம் அழைக்கிறார். எடுத்துப் பேசினான். ‘சங்க இலக்கியத்தில் பூக்கள்’ என்ற தலைப்பை அவனுடைய முனைவர் பட்ட ஆய்விற்குத் தேர்வு செய்திருப்பதாகச் சொன்னார். ரவியும் இந்தத் தலைப்பை மகிழ்ச்சியாக ஏற்றுக்கொண்டான்.
தியேட்டரில் விளக்குகள் அணைந்தன. திரைப்படம் துவங்கியது.
------------------------------------------------------------
நன்றி
https://akazhonline.com/?p=8862 /நவம்பர்,8/2024
நன்றி
https://akazhonline.com/?p=8862 /நவம்பர்,8/2024
முன்பு எழுதிய கட்டுரைகளின் இணைப்புகள்
https://ramasamywritings.blogspot.com/2023/09/blog-post_12.html
https://ramasamywritings.blogspot.com/2022/03/blog-post_25.html
கருத்துகள்