உடல் மறுப்பு என்னும் பெரும்போக்கு

தமிழின் சித்தர் மரபுக்குள் இருக்கும் பனுவல்களை வாசித்து முடிக்கும்போது சில அடிப்படையான புரிதல்கள் நமக்குக் கிடைக்கலாம். அவர்கள் தொடர்ந்து மனித உடலின் மீதான சந்தேகங்களை எழுப்பியவர்கள். இந்த உடல் எப்படி உருவானது என்ற கேள்வியில் தொடங்கி, எப்படி இயங்குகிறது? இயங்குதலின் விருப்பங்கள் என்ன? இயங்குதலின் மூலம் அவை உருவாக்கும் விளைவுகள் என்ன? என்று தொடர்கேள்விகளை எழுப்புகின்றார்கள்.தனியொரு உடலைக் குறித்த கேள்விகளாகத் தோன்று இந்த ஐயங்கள், மனித உடல்களுக்கிடையே இருக்கும் உறவுகளையும் விளங்கிக் கொள்ள முயல்கின்றன. ஆணுடலாக இருக்கும் ஒன்று பெண்ணுடலோடு கொள்ளும் உறவைக்குறித்தும் அதனால் உருவாகும் சந்ததிகள் குறித்தும் , அதனால் உண்டாகும் குடும்ப அமைப்பு குறித்தும், அதை நீட்டிக்கத் தேவையான சொத்துடைமை குறித்தும் சித்தர்களுக்குத் தொடர்ந்து ஐயங்கள் இருக்கின்றன. அந்த ஐயங்களுக்குத் தீர்மானமான விடைகள் அவர்களிடம் இல்லை. விடை தெரியாத நிலையில் அவற்றை மறுக்கின்ற – நிராகரிக்கின்ற – பொய்யெனச் சொல்லித் தப்பிக்க நினைக்கின்ற மனநிலைகள் வெளிப்படுகின்றன. மனித உடலை மறுப்பதின் நீட்சியாகக் குடும்ப அமைப்பை மட்டுமல்லாமல், சமூக நிறுவனங்களையும் நிராகரிக்கின்ற – அதனை ஏற்றுப் பக்குவப்படுத்திக் கொள்ளத் தயாரில்லாத எதிர்மனநிலையில் இருந்திருக்கிறார்கள். இந்தப் போக்கு எப்போது தொடங்கியிருக்கும் என்று சொல்ல முடியாது. தொகைநூல்களில் – புறப்பாடல்களில் – காஞ்சித்திணைப்பாடல்களைப் பாடிய ஒன்றிரண்டு கவிகளின் பாடல்களில் இந்தத் தொனியை வாசிக்கலாம். ஆனால் முழுமையான உடல் மறுப்பு என்று சொல்லமுடியாது. அதன் பின்னணிகள் வேறு; சித்தர் மரபின் தொனி வேறு.

உடலைக் கப்பலாக உருவகித்துப் பாடும் இந்தப் பாட்டை வாசித்துப் பாருங்கள்:


காயக்கப்பல்


ஏலேலோ ஏகரதம் சர்வரதம்
பிரமரதம் ஏலேலோ ஏலலிலோ.


பஞ்சபூதப் பலகைக் கப்பலாய்ச் சேர்த்து
பாங்கான ஓங்குமரப் பாய்மரம் கட்டி
நெஞ்சு மனம்புத்தி ஆங்காரஞ்சித்தம்
மானாபிமானங் கயிறாகச் சேர்த்து
ஐந்தெழுத்தைக் கட்டி சாக்காகயேற்றி
ஐம்புலன் தன்னிலே சுக்கானிருத்தி
நெஞ்சு கடாட்சத்தால் சீனிப்பாய் தூக்கி
சிவனுடைய திருப்பொருளை சிந்தையில் நினைந்து
தஞ்சலான வெள்ளத்தில் தானே அகண்டரதம் போகுதடா - ஏலேலோ ஏலேலோ.



களவையுங் கேள்வையுந் தள்ளுடா தள்ளு-
கருணைக்கடலிலே தள்ளுடா கப்பல்
நிற்குணந்தன்னிலே தள்ளுடா தள்ளு-
நிறைந்த பரிபூரணத்தால் தள்ளுடா கப்பல்
மூக்கணைமுன்றையுந் தள்ளுடா தள்ளு-
முப்பாழுக்கப்பாலே தள்ளுடா கப்பல்
திக்குதிசையெங்கும் தள்ளுடா தள்ளு
திருமந்திரஞ் சொல்லி தள்ளுடா கப்பல்
பக்கமுடன் கீழ்மேலும் தள்ளுடா தள்ளு-
பரவெளிக்கப்பாலே போகுதடா கப்பல் ஏலேலோ (ஏலேலோ)


தந்தை தாய் சுற்றமும் சகலமுமறந்து-
தாரம் சகோதரம் தானதும் மறந்து-
பந்தமும் நேசமும் பாசமும் மறந்து
பதினாலு லோகமும் தனையும் மறந்து-
இந்திரியர்கள் இரட்சித்த கப்பலிலேறி-
ஏகாந்தமான தொரு கடலிலே தள்ளி
அந்திரமான வெளி அருளானந்த வெள்ளத்தில்-
அழுந்து தையோ கப்பல் ஏலேலோ ஏலேலோ.



கப்பலின் பயன் கடலுக்குள் இருக்கும்போதே உணரப்படும். அதைப்போலக் காயத்தின் – மனித உடலின் பயன் அது இயங்கும்போது – உயிருடன் இருக்கும்போதே உணரப்படும். தரையில் நிற்கும் கப்பல் மரப்பலகைகளால் ஆனது. அதன் பயணத்திற்குப் பாய்மரம், எடை நிரம்பிய சாக்குகள், சுக்கான், சீனிப்பாய் முதலான உறுப்புகளின் இணைவு தேவை. இணைவு உறுதியான பின் கப்பலைக் கடலுக்குள் தள்ளிவிட்டால் பயணம் தொடங்கிவிடும். அதைப்போல மனித உடலின் இயக்கத்திற்கும் பல உறுப்புகளும் ஒன்றிணைந்து இயங்கவேண்டும். அந்த ஒன்றிப்பின் விளைவாக உடலுக்குள் உயிர் உருவாகிறது. அந்த உருவாக்கத்திற்குக் காரணமான இறையே உயிரும் உந்துதலும். அது நடக்கவில்லையென்றால் இந்தக் காயம் ஒன்றுமற்ற மாயம். ஆனால் அந்த மாய உடலை வைத்துக்கொண்டு பாசம்,உறவு, நேசமென மனிதர்கள் திளைக்கிறார்கள். அவற்றையெல்லாம் மறந்து கடலில் பயணிக்கும் கப்பல் போல மனித உடலும் பயணிக்க வேண்டும்.

இந்தப் பாடல் சித்தர் பாடல்கள் என்னும் பெருந்தொகுப்பில் இடம் பெற்றாலும் காலத்தில் பிந்தியதாகவே இருக்கவேண்டும். அதன் மொழிநடை, சொற்களின் சேர்க்கை, பாடலின் இசைப்புத்தொனி போன்றன 18 ஆம் நூற்றாண்டின் கடைசிக்கட்டத்தில் எழுதப்பெற்ற இலக்கியப்பனுவல்கள் தன்மையிலேயே இருக்கிறது. இதில் வெளிப்படும் இலக்கியவியல் தன்மைகளோடு பள்ளு, குறவஞ்சி, கீர்த்தனைப் பாடல்களின் தன்மைகளும் ஒத்துப்போகின்றன. இதிலிருந்து கூடுதல் நெகிழ்ச்சியோடு வேதநாயகம் சாஸ்திரியின் சமரச சன்மார்க்கக் கீர்த்தனைகள், குணங்குடி மஸ்தான் சாகிபு பாடல்கள் போன்றன எழுதப்பட்டுள்ளன. பாரதியின் சிந்துப்பாடல்கள் இவற்றின் அடுத்த கட்டம்.  



*******

பின் குறிப்பு:


செய்யுள் எனச்சுட்டும் சொல் இக்காலத்தில் சுட்டப்பட்டும் இலக்கியம் என்ற சொல்லின் முன் சொல்லே என்பதைத் தொல்காப்பியச் செய்யுளியல் வழி அறியலாம். இலக்கியவியலையே அவர் செய்யுளியல் எனச் சுட்டுகின்றார். தமிழின் செய்யுளியல் வரலாறு என்பது தொகைநூல்களால் ஆனது. தொகுக்கப்பட்டதற்குப் பொதுவான அடிப்படைகள் எதுவும் இல்லை. ஒரு பனுவலின் அடிகளின் எண்ணிக்கையிலோ, உரிப்பொருள் அடிப்படையிலோ, பொருண்மை அடிப்படையிலோ தொகைகள் உருவாக்கப்பட்டுத் தமிழ் இலக்கிய வரலாறு உருவாக்கப்பட்டுள்ளது. பாட்டும் தொகையுமாகத் தொகைப்பட்ட மேல்கணக்கு நூல்கள் 18 என்ற எண்ணிக்கை போலவே, அறநூல்களின் எண்ணிக்கையும் 18 எனச் சொல்லப்பட்டுள்ளது.

இந்தப் பதினெட்டின் நீட்சியே சித்தர் மரபுப்பனுவல்களைத் தொகுக்கும்போதும் தோன்றியிருக்கும் என்பது ஒரு ஐயம். ஆனால் என்னிடம் உள்ள தொகுப்பில் 18 என்ற எண் இரட்டித்து 36 என்ற எண்ணிக்கையில் சித்தர்கள் இருந்ததாக வரிசைப்படுத்தப்பட்டுள்ளது 35 சித்தர்களுக்கும் பெயர் இருக்கக் காயக்கப்பல் என்ற பாடலின் ஆசிரியர் யாரென்று தெரியவில்லை. இந்த ஒரு பாடல் மட்டும் தனியாகக் கடைசியில் உள்ளது. சிலர் அதை எழுதியவர் திருவள்ளுவ நாயனார் குறிப்பிட்டுள்ளனர். அந்தத் திருவள்ளுவ நாயனார் எந்தக் காலத்தில் இருந்தார் என்பது பற்றி உறுதியில்லை. ஔவை, கபிலர், திருவள்ளுவர் முதலான பெயர்கள் அவ்வப்போது இலக்கியவரலாற்றில் வந்துபோகும் பெயர்கள்.
****************
என்னிடம் உள்ள பெருந்தொகை நூல்களில் ஒன்று, பெரிய ஞானக்கோவை என வழங்கும் சித்தர் பாடல்கள். பிரேமா பிரசுரத்திற்காக அரு.ராமநாதன் பதிப்பாசிரியராக இருந்து பதிப்பித்த தொகை நூல். அவருடன் வித்வான் நா. தேவநாதனும் பிழைதிருத்தம் செய்து பதிப்பித்ததாகக் குறிப்பு உள்ளது. ரூ. 100 விலையில் நான் வாங்கிய இந்நூல், 2002 இல் அச்சிட்ட 11 வது பதிப்பு. முதற்பதிப்பு நான் பிறந்த 1959 ஆம் ஆண்டு வந்துள்ளது. அப்போது அதின் பதிப்பாசிரியராக யார் இருந்தார்கள் என்ற குறிப்பு எதுவும் இல்லை

தொடர்ந்து சித்தர் பாடல்களை வாசிக்கலாம்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நாயக்கர் கால இலக்கியங்கள் சமுதாய வரலாற்றுச் சான்றுகளாகக் கொள்வதற்கான முன் தேவைகள்

சிவகாமியின் பழையன கழிதலும்… : தலைமுறை இடைவெளியின் இன்னொரு பரிமாணம்

சி சு.செல்லப்பாவைச் சந்தித்த வேளைகள்