பேச்சு உரிமையின் எல்லைகள்

 அவதூறான பேச்சுகளுக்காக அவர் மீது வழக்குகள் பதியப்பட்டன. தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார் கஸ்தூரி. முன்னாள் நடிகையான கஸ்தூரி தன்னைப் பிராமண சங்கச் செயல்பாட்டாளராக அறிவித்துக் கொள்ளும் நோக்கத்தோடு பேசிய பேச்சுகள் பொதுவெளியில் பதற்றத்தை உருவாக்கக்கூடிய பேச்சுகள் என்ற அடிப்படையில் தான் வழக்குகள் பதியப்பட்டன. அந்த நேரத்தில் அவரது பேச்சுகளைக் கண்டிக்காத பலரும் இப்போது 'பேச்சுரிமை'யின் அடிப்படையில் அரசைக் கண்டிக்கிறார்கள்.

உரிமைகளையும் கடமைகளையும் பேசுவதும் விவாதிப்பதும் மக்களாட்சி முறையில் முக்கியமானது. தொடர்ந்து விவாதிக்கவேண்டும் என்பதில் மாற்றுக் கருத்துகள் இல்லை. ஆனால் விவாதங்கள் அரசு அமைப்புகளை மட்டும் குற்றம் சுமத்தும் நோக்கத்தில் இருக்கக்கூடாது. தனிமனிதர்களின் பொறுப்பையும் சுட்டிக்காட்ட வேண்டும். அரசு என்ற பேரமைப்புக்கும் அதன் அலகுகளான நிறுவனங்களுக்கும் பின்பற்ற வேண்டிய கடமைகள் வரையறை செய்யப்பட்டு விதிகளாகத் தொகுத்து வைக்கப்பட்டுள்ளன. அவற்றை மீறாமல் பின்பற்றவேண்டியது அந்த அமைப்புகளின் பொறுப்பு. மீறப்படும் நிலையில் அதனைக் குறித்துப் புகாரளித்துச் சரிசெய்வதற்கான கண்காணிப்புக் குழுக்களையும் மக்களாட்சி முறை உருவாக்கித் தந்துள்ளது. அதையும் தாண்டி அமைப்புகளில் தவறுகள் நடக்கின்றன. அந்நிலையில் கண்காணிப்புக்காகவும் தண்டனை வழங்குவதற்காகவும் இருக்கும் காவல்துறை, நீதித்துறை போன்றவற்றில் முறையிட முடியும். அவற்றின் வழிகாட்டலில் அமைப்புகளின் கடமைகள் நேர் செய்யப்படும்.
தனிமனிதர்களுக்கு வழங்கப்பட்டுள்ள உரிமைகள் பற்றியே விதிகள் உள்ளன. அவர்களின் கடமைகளைப் பற்றிக் கறாரான விதிகள் எதுவும் இல்லை. அதிலும் குறிப்பாகப் பொதுவெளியில் தனிமனிதர்கள் பின்பற்றவேண்டிய நடத்தைகள் குறித்து மக்களாட்சி முறையில் வரையறைகள் இல்லை. அதே நேரம் இந்த வரையறைகளை நேரடியாகச் சொல்லாமல் குடிமைச் சட்டங்கள் வழியாக விரிவாகப் பேசப்பட்டுள்ளது. ஆனால் அவை ஒவ்வொரு தனிமனிதர்களுக்கும் கற்பிக்கப்படுவதில்லை. பட்டுத்தெரிந்துகொள்ளட்டும் என்பதுபோலச் சட்டத்தை மீறினால் கிடைக்கும் தண்டனைகள் வழியாகவே தனிமனிதர்கள் வழிநடத்தப்படுகிறார்கள்.
இதற்கு மாறாக ஒவ்வொரு தனிமனிதர்களும் அவரவர் சமயஞ்சார்ந்த நம்பிக்கைகள், பழக்கவழக்கங்கள் வழியாக வழிநடத்தப்படுவது தொடர்கின்றது. அவற்றைப் பின்பற்றவேண்டிய தேவையைச் சமயப்பரப்புரைகள் பேசுகின்றன. அந்தப் பேச்சுகள் கறாரானவை அல்ல; நீக்குப்போக்கானவை. மக்களாட்சி முறை உருவாக்க நினைக்கும் சமத்துவ மனநிலையை ஏற்காதவை. ஏற்கெனவே இங்கிருக்கும் சாதி, வர்க்கம், அதிகாரம் போன்றவற்றை ஏற்றுச் சாதகமாகவும் பாதகமாகவும் நடந்துகொள்ள அனுமதிப்பவை. அப்படியான அனுமதிகளோடு தனிமனிதர்களின் பேச்சுரிமையை அணுகிப் பேசுபவர்கள் மக்களாட்சியின் சொல்லாடலை ஏற்காமல் பேசுகிறார்கள் என்றே சொல்ல வேண்டும்.
கஸ்தூரியின் அவதூறுப்பேச்சுக்காக வழக்குகள் பதியப்பட்டு, தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்ட்டுத் தனிப்படையின் வழியாக இன்னொரு மாநிலத்தில் - ஐதராபாத்தில் கைது செய்யப்பட்டுள்ளதற்காக அரசையும் அரசின் அமைப்புகளையும் கண்டிக்கிறீர்கள். அப்படிக் கண்டிக்கும்போது கஸ்தூரியின் அவதூறான பேச்சின்போது நீங்கள் அவரைக் கண்டிக்கவில்லை. வாய்மூடி இருந்தீர்கள் என்பதை மறந்துவிடக்கூடாது.
பொறுப்பு என்பது அமைப்புகளுக்கு மட்டும் உரியதல்ல; தனிமனிதர்களுக்கும் உண்டு. பொறுப்பான தனிமனிதர்களால் உருவாவதே நல்ல சமூகம்.
**********
எனது சுதந்திரம்
அரசாலோ தனிநபராலோ
பறிக்கப்படுமெனில்
அது என் சுதந்திரம் இல்லை
அவர்களின் சுதந்திரம்தான்
உனக்கொரு அறை
உனக்கொரு கட்டிலுண்டு
உனக்கொரு மேஜை உண்டு
உனக்குள்ள ஒரே உரிமை
சிந்திப்பது மட்டும்தான்
மாற்றானைத் தூண்டுமுன்னெழுத்து
எப்படிச் சமூகம் அனுமதிக்கும்
மலைகளைப் பார்
மரங்களைப் பார்
பூச்செடிகளைப் பார்
இடையறாது ஓடும்
ஜீவ நதிகளைப் பார்
பரந்த கடலைப் பார்
இதமூட்டும்
கடற்கரையைப் பார்
எவ்வளவு இல்லை நீ பார்க்க
ஏன் அக்கசடர்களைக் குறித்து
வருந்துகிறாய்
குமுறுகிறாய்
எழுத்துக் கூட்டங்களைச் சேர்க்கிறாய்
உன் வேலை
உன் உணவு
உன் வேலைக்குப் போய்வரச் சுதந்திரம்
இவற்றுக்கு மேல்
வேறென்ன வேண்டும்
சாப்பிடு தூங்கு மலங்கழி
வேலைக்குப் போ
உன் மீது ஆசை இருந்தால்
குறுக்கிடாதே.
===========ஆத்மநாம்/ சுதந்திரம் பக். 50-51

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தி.சு.நடராசனின் திறனாய்வுப் பார்வைகள் :தமிழ் அழகியல், தமிழகத்தில் வைதீக சமயம்

உடல் மறுப்பு என்னும் பெரும்போக்கு

கற்றல் - கற்பித்தல்: மாணவ ஆசிரிய உறவுகள்