விசாரணைக்குள்ளாகும் குடும்ப அமைப்பு : கார்த்திக் பாலசுப்ரமணியனின் இரண்டு கதைகள்


தொடர்ச்சியாக மாறிக்கொண்டிருப்பது இந்தியக் குடும்ப அமைப்பு. மாற்றத்தை உள்ளடக்கிய நகர்வுகள் குறித்து நேர்மறையான நிலைப்பாட்டையோ, எதிர்நிலையான எண்ணங்களையோ முன்வைக்காமல் விவாதத்தை உருவாக்கும்போது ஒரு புனைகதை நவீனத்தை உள்வாங்கிய கதையாக மாறிவிடும். குடும்ப அமைப்பு என்று மட்டுமாக இல்லை. இந்திய வாழ்க்கையில் விவாதிக்க வேண்டிய நம்பிக்கைகள், சடங்குகள், அமைப்புகள், முரண்கள் என மரபான சொல்லாடல்கள் பல உள்ளன. அவற்றின் மீது நவீனத்தை உள்வாங்கிய புதிய எழுத்தாளர்கள் கவனம் செலுத்திக் கொண்டிருக்கிறார்கள் என்பதை அண்மைக்கதை பல உணர்த்துகின்றன.
மரபான அமைப்புகளின் மீதான விவாதத்தை வெவ்வேறு விவாதத்தளத்திலும், வெவ்வேறு சொல்முறையிலும் எழுதிக்காட்டுவதின் மூலம் மட்டுமே தங்களின் தனி அடையாளங்களை உருவாக்க முடியும் என நம்பும் புதிய எழுத்தாளர்களை அடையாளங்கொண்டு முன்வைப்பது தீவிர வாசிப்பின் பணி. எவ்வாறு முன்வைக்கிறார்கள் என விவரிப்பது திறனாய்வின் பணி.தனி அடையாளத்தோடு எழுதுபவர்களின் கதைகள் கண்ணில் பட்டால் வாசிக்கத் தவறுவதில்லை.முன்வைக்கவும் விரும்புவதுண்டு.

கார்த்திக் பாலசுப்ரமணியன் தனது சிறுகதைகளின் உரிப்பொருள்கள் – சொல்லாடல்கள்- பெரும்பாலும் இந்தியக் குடும்பங்கள் சந்திக்கும் நெருக்கடியாகவே இருக்கின்றன.ஆனால், பாத்திரத்தெரிவு, இயங்கும் சூழல், சந்திக்கும் நெருக்கடி, சொல்லும் முறை, வைக்கும் தலைப்பு போன்றவற்றால் ஒரு நவீனத்துவ கதையை வாசிக்கத்தருகிறார். மேன்மையான அமைப்பாக முன்வைக்கப்படும் இந்தியக் குடும்ப அமைப்பு முறைக்குள் தனிநபர்களாக ஆணும் பெண்ணும் எவ்வாறு தங்கள் சுயத்தை இழந்துவிடும் நெருக்கடியை எதிர்கொள்கிறார்கள் என்பதை அவரது கதைகளில் முன்பே எழுதிக்காட்டியிருக்கிறார். அதனை ஒரு புகாராகவோ, குறையாகவோ முன்வைக்காமல், சார்ந்து வாழ்தலில் தனிநபர்களுக்கு ஏற்படும் இழப்பை முன்வைத்த கதைகள் அவை. இப்போது வாசிக்கத் தந்துள்ள இரண்டு கதைகளிலும் அதையே வேறுவிதமாக விவாதப்படுத்தியிருக்கிறார்.

அடுத்தடுத்துப் படிக்கக்கிடைத்த இவ்விரு கதைகளையும் இணைய இதழ்கள் பதிவேற்றம் செய்துள்ளன. அகழ் இணைய இதழில் பதிவேற்றம் பெற்றுள்ள கதையின் தலைப்பு: பிம்பம். இன்னொரு இணைய இதழான தமிழினியில் வந்துள்ள கதையின் தலைப்பு நிலை.பிம்பத்தில் விசாரணைக் குள்ளாகியிருப்பது தனிக்குடும்பத்து உறுப்பினர்களின் மனநிலை. நிலையில் கூட்டுக்குடும்ப உறுப்பினர்களின் மனநிலையும் தவிப்புகளும் விசாரிக்கப்பட்டுள்ளன.

ஒரு சிறுகதையின் வடிவத்தில் நுட்பங்கள் வேண்டும் என நினைக்கும் எழுத்தாளர்கள் வாசக இடைவெளியை உருவாக்க வேண்டும் என நினைக்கிறார்கள். நினைத்துச் செய்கிறார்கள் என்று சொல்வதைவிட, அவர்கள் தங்களின் முன்னோடிகளாக – முன்மாதிரிகளாக ஏற்றுக் கொண்டவர்களின் கதைகளிலிருந்து கற்றுக்கொண்டு அவ்வுத்தியைப் பின்பற்றுகிறார்கள் என்று சொல்லலாம்.வாசக இடைவெளியைப் பலவிதமாக உருவாக்கலாம். எளிமையாக உருவாக்கப்படும் ஓர் உத்தியாக நேர்கோட்டுக் கதைசொல்லலைத் தவிர்ப்பது இருக்கிறது. காலத்தை அடிப்படையாகக் கொண்ட நேர்கோட்டுக் கதைசொல்லல் தவிர்க்கப்படும்போது வாசக இடைவெளி உருவாக்கம் நிகழ்வும். நேர்கோட்டுக் கதைசொல்லல் தவிர்ப்பு வழியாக இருவகை உத்திகள் உருவாகின்றன. பின்னோக்கிச் சென்று கடந்த காலத்தோடு வாசகர்களை இணைப்பது பின்னோக்கு உத்தி. அதேபோல் கதையின் போக்கிற்கு முக்கியத்துவம் இல்லாத காலத்தைத் தாண்டி முன் வைக்கவேண்டிய நிகழ்வை மட்டும் வாசிக்கத் தருவது முன்னோக்கி உத்தி.

காலத்தை அடிப்படையாகக்கொண்ட பின்னோக்கும் முன்னோக்கும் பல நேரங்களில் நினைவோட்டங்களாக மாறிப் பாத்திரங்களின் மனப்பதிவுகளை விவரிப்பனவாகவும் மாறிவிடும். அப்போது கதைக்குள் மனப்பதிவுக்கூறுகள் உருவாகி, நடப்பு மனநிலையிலிருந்து விலகி, மாயநடப்பு நிலைக்கு நகரும் வாய்ப்பு ஏற்படும். இவ்வகை உத்திகளே ஒரு கதைக்குள் நேரடிக்காலம், நேரடி வெளி என்பதனைத் தாண்டி நினைக்கப்படும் காலம், நினைக்கப்படும் வெளிகளை உருவாக்கித்தர உதவுகின்றன. இவ்வகை உருவாக்கத்தில் நடக்கும் நிகழ்வுகள் அதிபுனைவுத் தன்மையை அடையும்போது நடப்பியல் வெளிப்பாட்டுமுறை காணாமல் போய்விடும். தமிழ் நவீனச் சிறுகதைகளில் இவ்வகை உத்திகள் தவிர்க்க முடியாத உத்திகளாக மாறி வருகின்றன.

கார்த்திக் பாலசுப்ரமணியனின் கதைகள் பெரும்பாலும் பின்னோக்கியும் முன்னோக்கியும் நகரும் சொல்முறை அமைப்பையே கொண்டுள்ளன. அதனால் நடப்பியல் வெளிப்பாட்டோடு கூடிய கதைகளாகவே இருக்கின்றன.நடப்பியல் நிலையைத் தாண்டிய நிகழ்வொன்றைப் பேசும் பிம்பம் கதையின் சொல்முறை முன்னும் பின்னுமாக நகரும் சொல்முறை. தனது வீட்டில் வாடகைக்குக் குடியிருந்த இளைஞர் ஒருவரின் தற்கொலை நிகழ்வு அவரது விசாரிப்பு வழியாகக் கதையாக விரிந்துள்ளது. அந்த விவரிப்பில் பின்னோக்கிப் போகும் நிகழ்வில் கணவன் என்ற நிலையின் இருப்பு என்ன? என்ற கேள்வி விசாரணைக்குரிய ஒன்றாக முன்வைக்கப்படுகிறது.

குடும்ப அமைப்பின் இருப்பு ஆண் முதன்மை வழியாக வெளிப்படுவதாக நினைக்கிறது இந்தியச் சமூகம். ஆண் தனது இருப்பைத் தனது உடல் வலிமை வழியாக உணர்கிறான்; உணர்த்துகிறான். உடல் வலிமை என்பது பெண் உடல் மீது செலுத்தும் பாலியல் அதிகாரம் மட்டுமல்ல;குடும்பத்திற்குத் தேவையான பொருளியல் ஆதாரத்தைக் கொண்டுவந்து சேர்க்கும் கடமையாகவும் இருக்கிறது. இது முழுவதும் உண்மையில்லை என்ற போதிலும் ஆணுக்குரியதாகக் கட்டமைக்கப்பட்டுள்ளது என்பதும் இந்தியச் சமூகத்தின் புரிதல். அந்தக் கடமையை நிறைவேற்றும் தகுதி ஆண்களுக்குத் தொடர்ந்து இருக்கவேண்டும். அது அவனுக்கு இல்லை என்றாகிறபோது அவனது இருப்பு கேள்விக்குரியதாக ஆகிவிடும்.

ஒரு ஆணாயினும் பெண்ணாயினும் அவர்களது இருப்பு உடலின் இருப்பாகவே பார்க்கப்படும் இந்தியச் சிந்தனை மரபைக் கேள்விக்குள்ளாக்கியிருக்கிறது நவீன வாழ்க்கை. உடலுக்கு இணையாக மனதும் முக்கியம் என்பது நவீனத்துவ சிந்தனை முன்வைக்கும் கருத்தியல். ஒரு பெண்ணின் மனம் விரும்பாத நிலையில் அவளை உடலுறவுக்கு வலியுறுத்துவது -கணவனே ஆனாலும் குற்றம் எனச் சொல்லாடல்கள் உருவாகியிருக்கின்றன. தனது உடல் செய்யவேண்டிய கடமையை – குடும்பத்திற்குத் தேவையான பொருளைத் தேடித்தரவேண்டிய நிலையை இழந்த நிலையில் தனது இல்லாமல் ஆகிவிட்டதாக நினைக்கிறது அவன் மனது.

தன் முன்னால் இருக்கும் பொருள்களைப் பிம்பமாக திருப்பிக் காட்டும் கண்ணாடிகள் அவனின் இருப்பை மனமாக மட்டுமே காட்டுகின்றன. துக்கம் விசாரிக்க வந்த வீட்டுரிமையாளர் முதலில் கவனித்த ஒன்று அவரது அம்மா சொல்லி வீட்டின் ஹாலையும் சமையல்கட்டையும் பிரிக்கும் மதிலில் வைக்கப்பெற்ற பாதரசம் பூசப்பட்ட பழைய கண்ணாடி இல்லை என்பதை. அது எங்கே என்று கேட்பதற்கு முன்பே கண்ணாடி உருவாக்கிய பிம்பமே தற்கொலை செய்துகொண்ட அருணின் மனச்சிக்கலின் ஆரம்பம் என்பது கதைக்குள் உணர்த்தப்படுகிறது. தன்னைச் சார்ந்து வாழும் மனைவிக்கான -குடும்ப நிர்வாகத்திற்கான வருமானமாக இருந்த வேலை இழப்பு அவனது பிம்பத்தை நிலைகுலையச்செய்கிறது.தனக்குப் பதிலாகக் குடும்பத்தின் தேவைகளுக்கான பணம் சம்பாதிக்கும் பொறுப்பை மனைவி எடுத்துக் கொண்ட நிலையில், எல்லாக் கண்ணாடிகளும் அவனது உடலின் இருப்பை மறுதலிக்கின்றன என நினைக்கிறான். உடலின் இருப்பு இல்லாமல் போன நிலையில் மனதையும் இல்லாமல் ஆக்கும் தற்கொலை முடிவைத் தேடுகிறான். இருவரையும் இணைத்துக் கணவன் – மனைவி ஆக்கிய நாளின் அடையாளமான திருமணப் புடவையின் உதவியோடு தற்கொலை செய்துகொள்கிறான்.

ஆண் முதன்மைக் குடும்ப அமைப்பில் ஆணின் அதிகாரமிழப்பு ஏற்படுத்தும் வீழ்ச்சியை நுட்பமாக விசாரணை செய்துள்ள ‘பிம்பம்’ கதை அண்மையில் வாசித்த சிறுகதைகளில் கவனித்துப் பேசப்பட வேண்டிய கதை எனச் சொல்லத் தோன்றுகிறது. பிம்பம் கதை அகநிலை சார்ந்த – உளவியல் ரீதியான விவாதங்களை வைத்துள்ள கதையாக இருப்பதற்கு மாற்றாக, நிலை கதை, புறநிலை சார்ந்த விவாதங்களை முன்வைத்துள்ளது. குடும்பத்தில் கணவன் – மனைவி என்ற அந்தரங்க உறவு மேற்கொள்ளும் பாத்திரங்களைத் தாண்டி மாமனார், மாமியார் என்ற அடுத்த கட்ட உறவுகளின் இடம் பற்றிய கேள்வியை எழுப்பும் கதை நிலை. தங்கள் அனுபவங்களின் வழியாகப் புரிதல் உண்டாக்குவதாக நினைத்துக்கொண்டு, குடும்ப அமைப்பில் மற்றவர்கள்-பெற்றோர்களும் உறவினர்களும் செலுத்தும் ஆதிக்கத்தைக் குறித்த கதையாக வாசிக்கும்படி இந்தக் கதையின் அமைப்பை உருவாக்கியுள்ளார்.

கதையில் இடம் பெற்றுள்ள நிகழ்வுகள் இரண்டு. இரண்டிலும் இடம்பெறும் பாத்திரங்களில் தொடர்ச்சி இல்லை. அடுத்தவாரம் மணமகளாகப் போகும் பெண்ணொருத்தியோடு, அவளது நெருங்கிய தோழியின் சந்திப்பும், அவர்களுக்குள் கேலியும் கிண்டலுமாக நடக்கும் உரையாடல்களும் முதல் சித்திரிப்பு. இரண்டாவது பகுதி அவள் திருமணமாகிப் போக இருக்கும் குடும்பத்து மாமனார் – மாமியார் ஆகிய இருவரின் எண்ணவோட்டங்களை வெளிப்படுத்தும் காட்சிச் சித்திரம். இவ்விரு சித்திரிப்புக்குள்ளும் இடம்பெறும் சொல்லாட்சியான நிலை என்பதே கதைக்கான தலைப்பு. முதல் சித்திரிப்பில், வரப்போகும் மருமகனின் உயரத்திற்கேற்ப வீட்டு வாசலின் நிலை உயர்த்தப்படுமா? என்பது ஒரு கேள்வியாக இடம்பெறுகிறது. அதெல்லாம் சாத்தியம் இல்லை என்பதும் உடனடிக் குறிப்பாக உணர்த்தப்படுகிறது. இரண்டாவது சித்திரிப்பில் மணமகனின் பெற்றோரின் நிலைப்பாட்டைக் குறிக்கும் சொல்லாக நிற்கிறது நிலை. மனித உறவுகளைத் தாண்டி, பணத்தை முதன்மையாக நினைக்கும் குடும்பம் என்பதை அறியத்தரும் ஒரு விரிவான காட்சி. ஒரு சொத்தில் எந்தவிதப் பாத்தியதையும் இல்லாத போதும், பட்டா எண்ணைக் குறிப்பிடுவதில் ஏற்பட்ட பழைய தவறொன்றைக் காரணமாக்கி அந்தச் சொத்தைக் குறைவான விலைக்குத் தனதாக்க நினைக்கும் கணவன் -மனைவி ஆகியோரின் மனப்பாங்கு அந்தச் சித்திரிப்பில் துல்லியமாக விவரிக்கப்பட்டுள்ளது.

குலதெய்வம் கோவிலுக்குப் பத்திரிகை வைத்துவிட்டு வந்த பிறகு மாப்பிள்ளை வீட்டார்களுக்குப் பத்திரிகை வைப்பது அங்கே வழக்கம். யார் யாருக்கெல்லாம் அவர்கள் தரப்பில் பத்திரிகை வைக்கப்பட வேண்டும் என்று விசாரிக்கவே அப்பா அவர்கள் வீட்டுக்குச் சென்றிருந்தார். அங்கே போகும்போதுகூடத் தீபாவளிப் பலகாரம், வீட்டுத் தோட்டத்தில் காய்த்த மாம்பழங்கள் என்று பார்த்துப் பார்த்து எடுத்துப் போனார். அவர் அம்மாம்பழங்களைத் தடவித் தடவிச் சொத்தை எதுவும் இருந்துவிடக்கூடாது என்று கவனமாக எடுத்து வைத்துக்கொண்டிருந்த காட்சி அவள் கண் முன்னே ஓடியது. அவரேதான் இப்போது பகை வீட்டிலிருந்து திரும்பியவரைப் போலக் கத்திக்கொண்டிருக்கிறார். கொஞ்சம் கொஞ்சமாக அவ்வுரையாடலின் வழி அங்கே நடந்ததை அவர்களால் யூகிக்க முடிந்தது.

அது எங்கே சென்று முடியப் போகிறது என்பது அவர்களுக்கு விளங்கிவிட்டது. அவள் கண்கள் ரத்தச் சிவப்பில் குளமாயின. நடுங்கிக்கொண்டிருந்த அவள் கையை எடுத்து, வாணி தன் கைகளுக்குள் பொத்தியபடி இறுகப் பற்றிக்கொண்டாள்.

அடுத்தவாரம் சாந்தி முகூர்த்தத்தில் இருப்பதாகத் தனது நினைவுகளைத் தயார்படுத்திக் கொண்ட ஒரு இளம்பெண்ணின் திருமணம் நடக்குமா? என்ற ஐயத்தை உண்டாக்கும் காட்சியாக அந்த மாற்றம். திருமணம் நடந்ததா? நின்றதா? என்பதற்குள் கதை போகவில்லை. நிலை என்ற தலைப்பில் அமைந்துள்ள கதை, அதற்குள் நுழைய வேண்டும் என்ற தேவையும் இல்லை. வீட்டு வாசலின் ‘நிலை’யாகவும், பெண்ணைப் பெற்றவர் எடுக்கப்போகும் ‘நிலைப்பாடு’ ஆகவும் அச்சொல் மாறிக் கதையின் விவாதத்தை வாசகர்களை நிரப்பிக்கொள்ளத்தூண்டியுள்ளது.

இந்தக் கதையில் இடம்பெற்றுள்ள ஒரு குறிப்பைப் பாராட்டாகவும் இன்னொரு குறிப்பைக் குறைபாடாகவும் சுட்டிக்காட்டத்தோன்றுகிறது. முதலில் குறைபாடான அந்தக் குறிப்பைச் சொல்லிவிட்டுப் பாராட்டைக் கடைசியில் சுட்டலாம்.

கதையின் தலைப்பு சார்ந்தும் சொல்முறை சார்ந்தும் கவனமாக இருக்கும் கார்த்திக் பாலசுப்ரமணியன், நிலை கதையை நிகழ்காலத்துக் கதையாக முன்வைக்காமல் , கடந்த காலத்தில் வைத்திருப்பதின் காரணம் புரியவில்லை. புது மணப்பெண்ணுக்கும் அவளது தோழிக்கும் இடையே நடக்கும் உரையாடலில்,

“அது சரி, உனக்கு தளபதி பாக்க முடியலன்னு வருத்தம். அங்க உங்காளு முதல் நாளே குணாவுக்கு சாந்தி தியேட்டர் வரிசைல நின்றுருக்காரு தெரியுமா? அவரு எங்க செட்டாக்கும்.”

என்ற குறிப்பு உள்ளது. இந்தக் குறிப்பு வரப்போகும் கணவனும் அவளும் எதிரெதிர் விருப்பங்கள் – ரசிப்புத்தன்மை கொண்டவர்கள் என்பதற்காக எழுதப்பெற்ற குறிப்பு என்றால், நிகழ்காலத்து ரஜினிகாந்த் படம் ஒன்றையும் கமல்ஹாசன் படம் ஒன்றையும் சுட்டியிருக்கலாம். 22 ஆண்டுகளுக்கு முன்பு (1991) ஒரே நேரத்தில் வந்த படங்களின் பெயரைச் சுட்டியிருக்கவேண்டியதில்லை. அப்படிச் சுட்டியதின் மூலம் கதை நிகழ்வு கடந்த காலத்து நிகழ்வு என்பதாக மாறியிருக்கிறது. இது தவிர்க்கப்பட்டிருக்க வேண்டிய குறிப்பு. பாராட்டாகச் சொல்ல நினைத்த குறிப்பு இது:

“எதிரேயிருந்த ஷோகேஸில் சீசா போல ஆடியபடியே மாறி மாறித் தண்ணீர் குடித்துக்கொண்டிருந்த சிவப்புக் கொக்குப் பொம்மைகளையே வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தார். ஒரு சமயத்தில் அவ்விரண்டில் ஒன்றுதான் தண்ணீர் குடிக்க முடிந்தது. அதுதான் அவற்றின் விதி.

பட்டா எண் தொடர்பாக, மாறிமாறி விட்டுக்கொடுக்காமல் பேச்சைத் தொடரும் இருவரும் ஒரு புள்ளியில் சந்தித்துக் கொள்ளும் வாய்ப்பு இல்லை என்பதை உணர்த்தும் குறிப்பாக இருக்கும் இந்தக் காட்சி, அதற்கு மட்டும் பொருந்தக் கூடிய குறிப்புப்பொருள் அல்ல. தனது மகளின் எதிர்காலம் குறித்த கவலை சார்ந்த குறிப்புப்பொருளும் கூட. அதனையும் அவரது குரல் இவ்வாறு வெளிப்படுத்துகிறது:

“மூணு பவுனு பெரிசில்ல. கடனை உடனை வாங்கியாவது போட்டுக் கொடுத்து அனுப்பிடுவேன். இன்னிக்கு இதுக்கு இவ்ளோ கணக்குப் பாக்கிறவன் வீட்டுக்கு எப்படி என் பொண்ணை அனுப்புறது? நாளைக்கு அவ திங்கிற அரிசியையும் ஒவ்வொன்னா எண்ணிப் பாத்தானுங்கன்னா!” என்று சொல்லி முடிக்கும்போது அவர் குரல் உடைந்திருந்தது.

தனது கதைக்குத் தலைப்பிடுவதில் மிகுந்த கவனம் எடுத்துக்கொள்ளும் கார்த்திக் பாலசுப்ரமணியன், அத்தலைப்பிற்கு நேரடிப் பொருண்மையையும், குறிப்பான பொருண்மைகளும் இருக்கவேண்டும் என்று நினைப்பது பாராட்டப்பட வேண்டிய ஒன்று.

====================================== கார்த்திக் பாலசுப்பிரமணியன் - தனது நட்சத்திரவாசிகள் நாவலுக்காகச் சாகித்திய அகாதெமியின் யுவபுரஸ்கார் விருதுபெற்றவர்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ராகுல் காந்தி என்னும் நிகழ்த்துக்கலைஞர்

நவீனத்துவமும் பாரதியும்

தமிழில் நடப்பியல் இலக்கியப் போக்குகள்