ஜெயமோகன் உரை- சில குறிப்புகள்

 

May be an image of 1 person and smiling
கோவை புத்தகத்திருவிழாவில் ஜெயமோகன் வழங்கிய ஒருமணி நேர உரையைச் சுருதி தொலைக்காட்சியின் வழியாகக் கேட்கும் வாய்ப்புக் கிடைத்தது. ‘ என்றும் இனிக்கும்’ போன்ற அடைமொழியோடெல்லாம் அவர் தலைப்புகள் தருவதில்லை. ஆனால் புத்தகத்திருவிழா போன்ற பெருந்திரளுக்குப் பேசவேண்டும் என்று நினைக்கும்போது ‘மானே! தேனே!!’ என்றெல்லாம் போட்டுத்தான் பேசவேண்டிய நெருக்கடியிலிருந்து தப்பிக்க முடியாது.

செவ்வியல் கவிதைகளில் வெளிப்படுவது காதலா? காமமா? என்ற விவாதம் எதிரும்புதிருமாக விவாதிக்க வேண்டிய ஒன்றல்ல. காதல் மனம் சார்ந்தது- காமம் உடல் சார்ந்தது என்ற எதிர்வில் நிறுத்திப் பார்க்க வேண்டிய ஒன்றும் அல்ல. காதல், காமம் என்ற இரண்டில் எது முன்னுணர்வு என்று தீர்மானிக்க முடியாது என்ற நினைக்கிறேன். இரண்டாலும் ஆனதே மனிதர்களின் தன்னிலை. குறுந்தொகை, நற்றிணை, அகநானூறு ஆகியவற்றில் இருப்பதை விடவும் கூடுதலான காதல் நாடகங்களைத் தரும் கலித்தொகைப் பாடல்களைக் காம வெளிப்பாடாகப் புரிந்துகொள்வது எப்படி என்று தெரியவில்லை.
**********
ஜெயமோகனின் இந்தப் பேச்சு தமிழ்ச் செவ்வியல் கவிதைகளின் தொன்மையை- பழைமையை மறுக்கும் நோக்கத்தில் இருப்பதாக எனக்குத் தோன்றவில்லை. சொல்லப்போனால் அதன் பழைமையைத் தமிழ்ப் பேராசிரியர்கள் கொண்டுபோகும் பழைமையை விடவும் கூடுதலான பழைமைக்குள் வைப்பது போலத் தான் பேச்சைத் தொடங்கி எழுத்துக் கண்டுபிடிக்கப்படாத காலத்திற்குள் செவ்வியல் கவிதைகளில் காணப்படும் படிமங்கள் குறியீடுகள், மரபுகள் போன்றன இருப்பதாகச் சொல்லிச் செல்கிறார். அப்படிச் சொல்வதின் ஊடாக இந்தக் குறியீடுகளும் படிமங்களும் மரபும் தமிழ்ச் செவ்வியல் இலக்கியத்திற்கு மட்டும் உரியதல்ல என்பதையும் பதியவைக்கிறார். அதன் வழியாகச் சங்கச் செவ்வியல் கவிதையியலுக்கு ஒருவிதமான இந்தியத்தனம் இருக்கிறது என்பதை நெருங்குகிறார். வேதமரபிலும் தமிழ்ச் செவ்வியல் மரபிலும் காணப்படும் ஒற்றுமைக்கூறுகளைப் பேசுவதன் மூலம், தமிழ்ச் செவ்வியல் மரபு தனித்துவமான மரபு என்ற நம்பிக்கையை ஆட்டம் காணவைக்க முயன்றுள்ளார். அந்த முயற்சியில் ஈடுபடும் பலரும் செவ்வியல் கவிதைகளில் புறக்கவிதைகளைக் கவனத்தில் எடுத்துக்கொள்வதில்லை. அகக்கவிதையில் வெளிப்படும் காதல் மனநிலையை மட்டும் எடுத்துக்கொண்டு அதன் தொடர்ச்சியாக ஆழ்வார்களின் பாடல்களில் காணப்படும் கடவுள் மீதான காதலை - தன்னிலை அழிப்பை முன்வைக்கும் ஈடேற்றத்தோடு பொருத்திப் பேசுவார்கள். ஜெயமோகனும் செவ்வியல் காலத் தமிழ்ப் பண்பாட்டுக் குறியீடுகளையும் வாழ்வியலையும் விரிவாகத்தரும் புறநானூறு, பத்துப்பாட்டு போன்றவற்றை எடுத்துக்கொள்ளவே இல்லை. ஜெயமோகனின் இந்த உரைக்குள் இருக்கும் ஊடாட்டம் இதற்கு முன்பும் பலராலும் மேற்கொள்ளப்பட்ட ஒன்றுதான்.
*******
தமிழ் இலக்கிய வரலாற்றில் உருவான முதன்மையான இலக்கியங்களும் இலக்கியப் போக்குகளும் சமயக் கருத்தாக்கங்களை பேசுபொருளாக- உரிப்பொருளாகக் கொண்டவை அல்ல. அந்தக் காலகட்டத்தில் இருந்த கடவுள் மீதான பார்வை, இயற்கை-மனிதன் – இயக்கும் சக்தியொன்றின் புதிரான இடம் பற்றிப்பேசும் ஆன்மீகம் மற்றும் தத்துவப்போக்குகள் குறித்து விவாதப்படுத்தியுள்ளன. என்றாலும் குறிப்பான ஒரு மதத்தின் ஆதரவு நிலையைக் கொண்டனவாக இருந்ததில்லை. குறிப்பாகத் தொல் இலக்கியங்களான சங்கச் செவ்வியல் கவிதைகளில் எந்தவிதமான அமைப்புச் சமயங்களின் அடையாளங்களும் இல்லை. திருக்குறள், சிலப்பதிகாரம், மணிமேகலை போன்ற உயர்தனிப் பனுவல்கள், தமிழ் இலக்கியத்தைச் சமய ஆதரவிலிருந்து விலக்கி வைத்துள்ளன. அதேபோல் பின்னர் தோன்றிய சித்தர் பாடல்களும், தனிப் பாடல்களும் இலக்கியம் என்ற எல்லைக்குள் அதனதன் சமகால மனிதர்களையும் அமைப்புகளையும் நோக்கிப்பேசியுள்ளன. இதனை உள்வாங்கி வளர்ந்த நவீனத்துவ இலக்கியப் போக்குக்கும் ஒரு மரபுத்தொடர்ச்சி இருக்கிறது. இதற்கு மாறாகப் பக்தி இயக்கக் காலத்தில் உருவான பாசுரங்களும் பதிகங்களும் முழுமையாகத் தமிழ்க்கவிதை மரபைத் திருமாலோடும் சிவனோடும் இணைத்துப் பேசியுள்ளன. சிற்றிலக்கிய வடிவங்களில் பலவும் அதே பாதையைத் தொடர்ந்துள்ளன. இதனைத் தமிழில் சாத்தியப்படுத்திய இலக்கியவியல் நூல் தண்டியலங்காரம். இந்நூல் காவ்யதர்சம் என்னும் சம்ஸ்க்ருத காவ்ய இலக்கியவியல் நூலிலிருந்து உருவாக்கப்பட்ட நூல். இந்நூலே இலக்கியத்தின் பயன் அறம் பொருள் இன்பம் வீடு என்ற நான்கு உறுதிப்பொருளை முன்வைத்த நூல் என்பதும் குறிப்பிடப்பட வேண்டிய ஒன்று.
***********
தொல்காப்பிய மரபைப் பின்பற்றும் - முழுமையாகத் தொடரும் நவீனத்துவ இலக்கிய மரபு தமிழில் இல்லை. சமயத்தின் இடத்தைப் பாலியல் மற்றும் உளவியல் கருத்தாக்கங்கள் சார்ந்த குற்றமனம், அறத்தின் வழி இயங்க நினைக்கும் தனிமனிதவாதப் போக்கு கொண்ட ஐரோப்பிய நவீனத்துவத்தின் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டது. இதுவே தமிழின் முதன்மைத் தமிழ்ச் சிற்றிதழ் இலக்கியவாதிகளால் முன்னெடுக்கப்பட்டது . க. நா.சு. வெ.சாமிநாதன் போன்றவர்கள் செவ்வியல் இலக்கியங்களைப் பலநேரம் புறக்கணித்துள்ளனர். சில நேரங்களில் ஆங்கிலம் வழியாக வாசிக்கக் கிடைத்த குறுந்தொகை, கலித்தொகை போன்றனவற்றை மட்டும் மையப்படுத்திப் பக்தி இலக்கியங்களோடு தொடர்புபடுத்திப் பேசியுள்ளனர். ஜெயமோகன் அப்படிச் செய்வதில்லை. அவருக்குச் சங்க இலக்கிய வாசிப்பு இருக்கிறது. அதனை இந்தியக் கவிதையியல் என்ற ஒற்றைப் பரிமாண இலக்கியவியலுக்குள் நிறுத்திப் பார்க்கும் ஆர்வமும் இருக்கிறது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ராகுல் காந்தி என்னும் நிகழ்த்துக்கலைஞர்

தணிக்கைத்துறை அரசியல்

நவீனத்துவமும் பாரதியும்