குட்நைட் - திட்டமிட்ட படப்பிடிப்பின் வெளிப்பாடு

முழுமையான ஆற்றுகைப் பனுவலைக் கொண்டு நாடக ஒத்திகைக்குப் போவதுபோல முழுமையான படப்பிடிப்பு பனுவலை - புரடக்சன் ஸ்கிரிப்ட்டோடு படப்பிடிப்பைத் தொடங்கினால் சினிமாவின் செலவு கோடிகளில் இருக்க வாய்ப்பில்லை. தனது திரைக்கதையின் மீது நம்பிக்கை கொண்ட இயக்குநர் அப்படித்தான் செயல்படுவார். அப்படிச் செயல்பட்டு உருவாக்கப்பட்ட சினிமாவாக குட்நைட் வந்திருக்கிறது.

திரைக்கதையை முழுமையாகத் திட்டமிட்டு எழுதி முடித்தபின் இயக்குநர் தனது குறிப்புகளை எழுதிக்கொள்வதுண்டு. அக்குறிப்பில் பாத்திர அறிமுகம், சந்திப்புகள், அதன் வழி உருவாகும் முரண்பாடுகள் அல்லது இயைபு நிலைகள் போன்றனவற்றைத் திட்டமிட்டுக்கொண்டு உணர்வு உருவாக்கத்தைத் திட்டமிடுவதுண்டு. எவ்வகையான உணர்வுகள் உருவாக்க வேண்டும்; அவற்றின் நடப்பியல் அளவு தேவை, எந்தெந்த இடங்களில் மிகை உணர்ச்சியைக் கொண்டுவரலாம்; நடப்பியல் இல்லையென்றாலும் அபத்தமான காட்சிகள் வழியாக நகைச்சுவையை எப்படி உருவாக்கலாம் என்பன போன்றவற்றை உள்வாங்கி முழுமையான படப்பிடிப்பு பனுவல் உருவாக்கப்படும். அதன் பிறகே பாத்திரங்களை ஏற்று நடிக்கக்கூடிய நடிக, நடிகையர் தேர்வும் நடந்திருக்கும். அவர்களுக்கு முறைப்படியான நடிப்புப் பயிற்சி அல்லது ஒத்திகையும் நடத்தியிருப்பார்கள் என்றே தோன்றுகிறது. ஒருவரும் நடிக்கத் தெரியாதவர்களாக வெளிப்படவில்லை.
மையப்பாத்திரங்களான மோகன் - அனு ஆகியவர்கள் மட்டுமல்லாமல் மோகனின் மாமா, அக்கா, அம்மா, தங்கை எனக் குடும்ப உறுப்பினர்கள் பாத்திரங்களும், அனுவுக்கு வீடு வாடகைக்குத் தந்து தனது மகளைப் போலப் பார்த்துக்கொள்ளும் தாத்தா, பாட்டி பாத்திரங்களும் முழுமைப்பாத்திரங்களாக உருவாக்கப்பட்டிருக்கின்றன. இக்குடும்பத்தோடு தொடர்பில்லாது மோகன் - அனு ஆகியோரின் அலுவலகப்பாத்திரங்கள் கூடத் தேவைக்கதிகமாக இடம் பெறவில்லை. நாய்க்குட்டியை கதைநிகழ்வின் பகுதியாகவும், மனநிலை ஏற்பாகவும் ஆக்கியிருப்பது குறிப்பிட வேண்டிய ஒன்று. கச்சிதமான - கட்டுக்கோப்பான கதை,திரைக்கதை, பாத்திர உருவாக்கம் ஏற்ற நடித்த நடிகர்கள் என எல்லாவற்றிலும் முழுமைகொண்ட ஒரு படமாகக் குட்நைட் வந்துள்ளது. இயக்குநரின் திட்டமிடல் பளிச்சென்று வெளிப்பட்டுள்ளது.
குறட்டைச் சத்தம் ஒரு பிரச்சினையா? என்று கேட்கலாம். குடும்ப அமைப்பைக் குதறி அதன் உறுப்பினர்களின் வாழ்வைச் சூறையாடும் பல்வேறு பிரச்சினைகளின் குறியீடாகக் குறட்டையை எடுத்துக்கொண்டால் மொத்தமும் புரியவரலாம். குடும்ப அமைப்புக்குள் ஆணுக்கும் பெண்ணுக்கும் எங்கே முரண்பாடுகள் தோன்றும்; அதில் விட்டுக் கொடுப்பது எப்படி இருக்கவேண்டும்; அவ்வுறவுக்குள் காதலின் இடம் எத்தகையது; காமத்தின் பங்கு எவ்வாறு இருக்கும் போன்ற பலவற்றையும் அலுப்புத்தட்டாமல் சொல்லியிருக்கிறது படம். முழுமையும் காட்சிப்படுத்தலாக இல்லாமல் வசனங்கள் சார்ந்த நாடகீயத்தோடு எடுக்கப்பட்டுள்ள படம் குட்நைட்.
பொழுதுபோக்கு சினிமாவுக்குள் சமகாலக் குடும்பச் சூழலை - சாதி, உறவினர், பொருளாதார அந்தஸ்து போன்ற பெருங்கதையாடல் எல்லைக்கு விரிக்காமல் - அதனதன் போக்கில் அளவாகக் காட்சிப்படுத்தி நகர்த்திய நிலையில் நல்லதொரு படம்.
May be an image of 6 people and people smiling
Like
Comment
Share

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ராகுல் காந்தி என்னும் நிகழ்த்துக்கலைஞர்

நவீனத்துவமும் பாரதியும்

தமிழில் நடப்பியல் இலக்கியப் போக்குகள்