தலைப்புப் பொருத்தம் தேடி ஒரு வாசிப்பு


விடுமுறைதினத்தில் ஓர் அனார்க்கிஸ்ட் கதையை முன்வைத்து 

சில பனுவல்களின் தலைப்பு உருவாக்கும் ஆர்வம் காரணமாக வாசிப்பு ஆரம்பமாகும். அப்படி ஆரம்பிக்கும் ஆர்வம், தலைப்புக்கான பொருத்தம் அல்லது தொடர்பு எங்கே இருக்கிறது தேடிக்கொண்டே வாசிக்கத் தொடங்கும். ஒற்றைச் சொல்லாக - பெயராகவோ, பெயர்ச்சொல்லாகவோ - இருக்கும் தலைப்புகள் அப்படியொரு ஆர்வத்தைத் தூண்டுவதில்லை. உருவகமாகவோ, குறியீடாகவோ, படிமமாகவோ அமையும் தலைப்புகள் கவிதைக்கான தலைப்புகளாக இருந்து வாசிப்பின்பத்தைக் கூட்டும். கதைகளிலும் கூட சில தலைப்புகள் ஆரம்பத்தில் நேர்ப்பொருளிலிருந்து விலகிச் சூழலில் வேறுவிதமான அர்த்தங்களுக்குள் வாசிப்பவரை நகர்த்திக் கொண்டு போவதுண்டு. 

இவற்றிலிருந்து மாறுபட்டவை தொடர் தலைப்புகள். ஆதவன் தனது கதையொன்றுக்குப் ‘புதுமைப்பித்தனின் துரோகம்’ என்றொரு தலைப்பை வைத்த தின் மூலம் வாசிப்பவரைத் தன் கதையின் பக்கம் நெருங்கிவரச்செய்தார். என்ன துரோகம் என்று அறியும்பொருட்டு அந்தக் கதையை வாசித்துத்தான் ஆகவேண்டும். திலிப்குமாரின் ஒரு கதையின் தலைப்பு ‘ஐந்து ரூபாயும் அழுக்குச்சட்டைக்காரும்’. அந்த அழுக்குச் சட்டைக்காரர் யார் எனத்தேடும் வாசிப்பு ஜி.நாகராஜன் என்னும் எழுத்தாளர் என்று விடையைக் கண்டறிவதோடு, அவரின் உரையாடல் மேதமையையும் கடைசிக்கால துயரத்தையும் வாசித்துத் துயரம் கொள்வது தவிர்க்க முடியாதது. நீளமான கதைத்தலைப்புகள் மூலம் கதையின் கருத்துநிலையைச் சுட்டிக்காட்டிவிடும் விதமாகத் தலைப்பு வைப்பதில் ஜெயகாந்தன் தேர்ச்சி மிக்கவர். புதிதாக எழுதவருபவர்களும் அப்படியான தலைப்புகளை வைக்கிறார்கள். யாவரும்.காம் இணைய இதழில் பாலசுப்பிரமணியன் பொன்ராஜ் எழுதியுள்ள விடுமுறை தினத்தில் ஓர் அனார்க்கிஸ்ட் என்ற கதைத் தலைப்பே வாசிக்கும் ஆர்வத்தை உண்டாக்கியது 

அனார்க்கிஸ்ட் என்ற ஆங்கிலச்சொல்லால் சுட்டப்படும் அந்தப் பாத்திரத்தின் இருப்பு நிலையை வாசித்துவிடும் ஆர்வத்தோடு படிக்கத் தொடங்கியபோது கதையின் நீளமான அந்த முதல் தொடரில் இரண்டு பெயர்களும், தொடரும் சிறுசிறு சொற்றொடர்களைக் கொண்ட முதல் கதைசொல்லியும் அறிமுகம் செய்யப்பட்டிருந்தனர். 

“பெண்கள் கல்லூரியொன்றில் உதவிப்பேராசிரியராகப் பணியாற்றும், கிரிக்கெட்டைக் குறித்து முனைவர் பட்ட ஆய்விலும் ஈடுபட்டுள்ளவரான, மாதத்தில் இரண்டாம் சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளை அவருடைய காதலி வைஷ்ணவியோடு செலவிடும் பரத்குமார், இன்னும் கண் விழித்திருக்கவில்லை. நான் எழுந்து ஏறக்குறைய ஒரு மணிநேரத்திற்கும் மேலாக இருந்திருக்கும். தேநீர் மட்டுமே அருந்தியிருந்தேன். இரவு முழுக்க மழை விடாமல் பெய்ததாலும், நானும் அவரும் குடித்திருந்த விஸ்கி, தாகத்தைத் தூண்டிவிட்டதாலும் நான் சரியாகத் தூங்கியிருக்கவில்லை. ” 

அனார்க்கிஸம் என்பது ஒருவரின் மனநிலை என்பதால், அந்த மனநிலை கொண்ட பாத்திரம் இந்த மூன்றுபேரில், யாராக இருக்கும் என்ற தேடலில் கிடைக்கும் தகவல்களைப் பொருத்திப் பார்த்து அடையாளப்படுத்த முயல்வதைத் தவறான வாசிப்பு என்று சொல்ல முடியாது. 

படர்க்கை நிலையில் நின்று கதைசொல்லும் ஆசிரியர் பாத்திரங்களைப் பற்றித் தரும் அடைமொழிக்குறிப்போ, வெளியைப் பற்றிய சித்திரமோ, நடத்தும் உரையாடலோ, பாத்திரங்களின் மனவோட்டத்தைத் தலைப்போடு பொருத்திவிட முடியுமா? என்ற தவிப்போடுதான் வாசிக்கும் ஒருவரது வாசிப்பு தவிப்பும் தேடலும் கொண்ட வாசிப்பு. அந்தத் தவிப்பை நீட்டிக்கும் விதமாக அமையும் பாத்திரங்களை அறிமுகப்படுத்தாமல், கதைவெளி குறித்த விவரிப்புக்களைக் காட்சி இன்பங்கருதி அடுக்கிக் கொண்டே இருக்கும் பல கதைகளை வாசிக்காமல் நான் கைவிட்டிருக்கிறேன். பலரும் அப்படிக் கைவிடவே செய்வார்கள். அதேபோல் கதைத் தொடக்கத்தில் இருக்கும் குழப்பமான சொற்றொடர்களும் எனது வாசிப்பைத் தடுக்கும் காரணிகளாக இருக்கின்றன. 

நீண்ட குழப்பமான சொற்றொடர் அமைப்புகளைக் கொண்டு தொடங்கும் விடுமுறை தினத்தில் ஓர் அனார்க்கிஸ்ட் கதையை வாசிப்பதா? வேண்டாமா? என்று முதல் இரண்டு வாசிப்புக்குப் பின் மூன்றாவதாகவும் ஒரு முறை அந்த முதல் பத்தியை வாசித்துவிட்டுத் தொடரலாம் என்று முடிவு செய்யக் காரணம் அந்தப் பத்தியில் அறிமுகமான மூவரில் யார் அனார்க்கிஸ்ட்டாக இருக்கலாம் என்ற குறுகுறுப்புதான். 

கதைசொல்லப்போகும் ‘நான் ’ அனார்க்கிஸ்ட்டாக இருக்க வாய்ப்பில்லை என்று முதலில் தோன்றியது. அவன் தான் ஓர் அனார்க்கிஸ்டுடன் விடுமுறை தினத்தில் இருந்த அனுபவங்களைச் சொல்லப்போகிறான் என்பதால் பரத்குமாரோ, அவனது காதலியான வைஷ்ணவியோ அனார்க்கிஸ்டாக இருக்க வாய்ப்புண்டு என்ற ரகசிய முடிச்சை உருவாக்கிக் கொண்டேன். அதிலும் ஒரு சிக்கல்,‘இரண்டாவது சனி, ஞாயிற்றுக் கிழமைகளில்’ மட்டும் வந்து பரத்குமாரோடு காதல் செய்துவிட்டுப் போகும் வைஷ்ணவியைக் கதை சொல்லிக் கவனித்திருக்க வாய்ப்பில்லையே என்பதால், அவளும் அனார்க்கிஸ்ட்டாக இருக்கச் சாத்தியங்கள் குறைவு என்று முடிவானது. அப்படியானால், ‘கல்லூரி உதவிப்பேராசிரியரும் கிரிக்கெட்டைப் பற்றிய ஆய்வாளருமான பரத்குமாரே’ தலைப்புக்கான பாத்திரமாக இருப்பார் என்ற நினைப்பில் கதை வாசிப்பு தொடர்ந்தது. அப்படித் தொடர்ந்தபோது இன்னொரு தடங்கல். தொடர்ந்த விவரிப்புகளில் பரத்குமார் கொஞ்சம் கொஞ்சமாக விலகிப் போக, சோம்பல் நிரம்பிய விடுமுறை தினக்காட்சிகள் அந்த நானின் மீதே கவனத்தைக் குவித்தன. சாம்பல் நிற வானம், சாம்பல் வண்ணம் கலந்த தெருக்காட்சி, தேநீர்க் கடையில் அரைக்கால் டவுசர்களுடன் தொளதொளப்பான டீ-சர்ட் அணிந்து நண்பர்களோடு நின்று கலகலப்பாகப் பேசிக்கொண்டிருக்கும் பெண்களும் என வரும் விவரிப்புகள் கதைசொல்லியை மையமாக்கிக் கொண்டே இருந்தன. 

கதைசொல்லியாக நான், அந்த வீடாகிய அறையில் பரத்குமாருடன் அறைவாசியாக இணைந்தது, வீட்டில் இருக்கும் பொருட்கள் அனைத்துக்கும் பரத்குமாரே உடமையாளன், தன்னுடைய பங்களிப்பு வாடகையில் பாதியும் அன்றாட நுகர்பொருட்களில் பங்களிப்பும் என்ற விவரங்களோடு, இரண்டாவது சனிக்கிழமைகளில் தான் ஊருக்குப் போய்விடும் நிலையில் வைஷ்ணவி அங்கு வந்து தங்கிக் காதல் செய்துவிட்டுப் போவது என்ற தகவல்கள் வழி மூவரில் ஒருவரும் அனார்க்கிஸ்ட்டாக அறிமுகம் ஆகவே இல்லை. இயல்பானவர்களாகவே, அவரவர் வேலையை அவரவர் தீர்மானித்துக்கொண்டு தொடரும் சாதாரணமானவர்களாகவே இருக்கின்றனர். மது அருந்தியபின் பரத்குமார் சொல்லும் “ஆல்கஹால் நுகர்வு நீரிழப்பையும், வைட்டமின் பி குறைபாட்டையும் உருவாக்கும்” என்ற கூற்றும்கூடப் பெரிய ஒழுங்கு குழைப்பான தொனியில் இருக்கவில்லை. மூன்றில் ஒரு பங்குக் கதையை வாசித்த பிறகும் அனார்க்கிஸ்ட்டைக் கண்டடைய முடியாத வாசிப்பு கதையைச் சலிப்பூட்டும் கதை என முடிவுசெய்துவிடக்கூடும். அப்படியொரு மன நிலை தோன்றும்போதுதான் ஒரு திருப்பமாக மற்றொரு பாத்திரத்தை அறிமுகம் செய்யும் முடிவை எடுக்கிறார் கதாசிரியர். 

“ஒன்னு செய்யலாம், என்னோட கூட வேல செஞ்ச ஒருத்தன் இருக்கான். ரொம்ப இண்ட்ரஸ்டிங்கான கேரக்டர். அவர் வீடு ஜே பி நகர்ல இருக்கு. ஒருவேளை அவன் போன் எடுத்தா மத்தியானம் சாப்பாட்டுக்குக் கூட வர சொல்லலாம். சமைக்கற வேலை மிச்சம்”. 
அந்த முயற்சியில் முதலில் கிடைப்பவை தோல்வி என்றாலும், மதிய உணவுக்குப் பதிலாக இரவு உணவுக்கு அழைக்கும்போது, கதையை வாசிக்கும் வாசகனுக்கு அனார்க்கிஸ்ட் ஒருவரைச் சந்திக்கப் போகும் ஆவல் உருவாகிறது. பரத்குமாரின் சொந்தக்கார் இல்லாத நிலையில் வாடகைக்காரில் நண்பரின் ஜே.பி. நகர் வீட்டு வாசலில் இறங்கியவர்களை அழைத்துப் போக வந்த நண்பரின் மனைவி அவளது நாயினை அறிமுகப்படுத்தி, 

எந்த நாயும் உடனே ஒருவரைக் கடித்து விடாது. நாய் குரைப்பதே வந்திருப்பவரோடு அது செய்து கொள்ளும் ஒரு தொடர்பு. நாம்தான் அதற்குச் சொல்ல வேண்டும் வந்திருப்பவர் நண்பரா எதிரியா என்று. தவிர நாய் குரைப்பதே பயமுறுத்துவதற்காக அல்ல. அது அதனுடைய மொழி. 
என்று பேசும் முதல் பேச்சும், இடுப்பில் ஒரு துண்டோடு வந்து வரவேற்றுக் கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்த அவரது நண்பரின் முதல் காட்சியும் இருவரில் யார் அனார்க்கிஸ்டாக இருப்பார்கள் என்ற ஆர்வத்தைத் தூண்டிவிடுகிறது. 
அறிமுகம் செய்யப்பட்ட முதல் நிகழ்விலிருந்து பிரசாந்த்தும் அவளது மனைவி வசுதாவும் இயல்புநிலைக்கு மாறானவர்கள் என்பதை வெளிப்படுத்திக் கொண்டே இருக்கிறார்கள். இவரது வெளிப்பாடு அவரது கல்லூரி வாழ்க்கை சார்ந்தும் வாசிப்பு சார்ந்தும் சாதாரண மனிதர்களின் நேர்கோட்டுப் பயணத்திலிருந்து விலகியதாக இருக்கிறது என்றால், வசுதா அவளது விலங்கு மருத்துவம் சார்ந்து காட்டும் அதீத ஈடுபாடும் அக்கறையும் இயல்பிலிருந்து விலகியவள் என்பதாக இருக்கிறது. கதைசொல்லி அந்த இருவரையுமே இயல்பிலிருந்து விலகிய – அனார்க்கிஸ்ட் பாத்திரத்திற்குப் போட்டியிடுபவர்கள் போலவே வாசிப்பவர்கள் முன்னால் நிறுத்துகிறான். 
நாங்கள் சோபாவில் அமர்ந்தோம். அவர்களுடைய நாயோடு கைகுலுக்கச் சொன்னாள் வசுதா. நான் தயங்கினேன். அவள் விடாமல் நாயைப் பற்றிப் பாடமெடுத்தாள். 
”இவன் பெயர் டைசன். இவனும் வீட்டிற்கு வந்திருப்பவர்களோடு அறிமுகம் செய்து கொள்ள விரும்புவான்”. எதிர் வரிசையிலிருந்த சோபாவின் நடுப்பகுதியில் அவள் உட்கார்ந்திருந்த விதமும், நாடகீயமான உடல்மொழியும், ஆங்கிலமும் நாயை மட்டுமல்ல, புலியைக் கூட வீட்டிலே வளர்க்கக் கூடியவளைப் போன்றிருந்தாள். மேலும் சில முறைகள் நாயோடு கைகுலுக்க வலியுறுத்தினாள். 
இது வசுதாவைப் பற்றித் தரும் சித்திரம். அவளின் சொற்களின் வழியாக அவளது கணவனைப் பற்றித் தரும் சித்திரம் 
“ஹி வில் நாட் கோ எனிவேர் அதர்வைஸ். ஹி ஹாஸ் நாட் சீன் த சன்லைட் ஃபார் மெனி மன்தஸ்”. அவள் முகத்தில் பரவிய சலிப்பைக் கவனித்தேன். 
அன்று மாலை முழுவதும் இருந்த நேரத்தில் அவர்களின் வருகையைக் கொண்டாட்ட மனநிலையோடு எதிர்கொண்ட பிரசாந்தின் செயல்பாடுகள் – மதுப்புட்டிகளை வாங்கி வந்த து; குடிக்கும்போது தேவையான பழங்கள், ஆம்லேட் போட்ட து என எதிலும் இயல்புக்கு மீறிய செயல்களைப் பார்க்கவில்லை. அவற்றையெல்லாம் அனுமதித்து விட்டு ஒதுங்கிக் கொண்ட அவனது மனைவியின் செயல்பாடுகள் கூட ஒதுங்கிக்கொள்ளும் இயல்பான ஒரு பெண்ணின் செயல்பாடாகவே இருக்கிறது. அவளது வேண்டுகோளை ஏற்றுக் கதவைச் சாத்திவிட்டு, “ஆடைகள் அணியாமல் இருப்பதற்கே எனக்குப் பிடிக்கும் ” எனச் சொல்லிவிட்டு வெற்று உடம்புடன் பேசத்தொடங்கும்போது அனார்க்கிஸ்டின் அறிவுப்பரப்பும் செயல்பாடுகளும் கதைக்குள் விரியத்தொடங்குகின்றன. அவனது வாசிப்பின் அகலமும் அமைப்புகளைப் பற்றிய பார்வையும் கண்டு பிரமித்துப் போகிறான் கதைசொல்லி: 
“மனிதனுக்கு கொஞ்சமே போதுமானது. எதுவுமே குறைவான அளவில் கிடைத்தாலே போதும். நாம் நம்மை ஏதோ தெய்வ நிலைக்கு கற்பனை செய்து வைத்திருக்கிறோம். இந்த பூமியைக் காத்து வேறு காலத்தில் பாதுகாப்பாக மற்றொருவரின் கைகளுக்கு மாற்றித் தரும் பொறுப்பு நமக்கு இருப்பதாக நம்புகிறோம். அந்த வேறொருவரின் கைகள் கடவுளின் கைகள்தான். ” 
என்பதில் தொடங்கி, 
நமது அடிமைத்தனங்களிலேயே மோசமானது மதுவோ, புகைப்பழக்கமோ, சூதாட்டமோ, விபச்சாரமோ அல்ல அரசிடம் அடிமையாக இருப்பதுதான். என்னிடம் பாருங்கள் ஓட்டுநர் உரிமம் கூட இல்லை. எனது பெயரில் குடும்ப அட்டை, வண்டி, வாக்காளர் அடையாள அட்டை என எதுவுமே இல்லை. எனது காருக்கு எண் பலகையும் இல்லை. போலீஸ்காரர்கள் பிடித்தால் நான் ஏதாவது காரணம் சொல்லித் தப்பிப்பேன். முடியாத பட்சத்தில் எனது மனைவி காசைக் கொடுத்து சமாளிப்பாள். அரசும் மக்களும் பணத்தை நேசிக்கக் கற்பிக்கப்பட்டிருக்கிறார்கள். பணத்தை ஒழித்தவிட்டால் என்னவாகுமென்ற கற்பனை யாருக்கும் எழவில்லை. அதை முயன்று பார்க்கும் ஒரு அமைப்பும் நம்மிடமில்லை. பொருட்களுக்கு பரிவர்த்தனை மதிப்பும், பயன் மதிப்பும் இருக்கிறது. கூடவே அதன்மீது மனிதர்கள் வைத்திருக்கும் உணர்ச்சி மதிப்பும். இந்த மூன்று மதிப்பையும் நீக்கிவிட்டால் நாம் பொருட்களிடமிருந்து விடுதலை பெற்று விடுவோம். அப்படித்தான் ஒருகாலத்தில் இருந்தோம். மீண்டும் அந்த நிலைக்குத் திரும்ப அஞ்சுகிறோம் 
எனத் தனது செயல்பாடுகளை முன்வைத்துப் பேசி 
பாம்புக்கடிக்கு மனிதர்கள் இறந்து போவதைக் குறைத்தோம். ஆனால் இன்று அன்றாடம் சாலை விபத்துக்களில் அதைவிட மோசமாக நாம் மரணிக்கிறோம். எனது முப்பாட்டனார், நான்கு சக்கரங்கள் உள்ள ஒரு வாகனம் மோதி வருடத்திற்கு பல்லாயிரம் பேர் இறப்பார்கள் என்று கற்பனையில் கூட யோசித்திருக்க மாட்டார். நமது முன்னேற்றக் கற்பனை காலத்திற்கே ஒரு நோக்கத்தைக் கற்பித்திருக்கிறது. நமக்கு சேவை செய்யாத எதுவுமே நீடித்திருக்கப் போவதில்லை. மனிதர்களுக்காகவே அனைத்தும் படைக்கப்பட்டன எனச் சொல்லும் மதங்களும், கடவுள் நிலையை அடையவே மனிதன் படைக்கப்பட்டான் எனச் சொல்லும் மதங்களும் உண்டு. கடவுளுக்கு ஒரே வழிதான் உண்டு. அது மனிதர்களைக் காப்பாற்றுவது. மனிதர்களைக் காப்பாற்றுவதின் மூலமாகத்தான் கடவுள் தன்னையே காத்துக்கொள்ள முடியும். கடவுள் மனிதனின் மெய்க்காப்பாளன், அரசு மனிதனின் வாயிற்காப்பாளன். ஆனால் உண்மையில் மனிதன் அரசின், கடவுளின் அடிமை. எல்லா ஜனநாயக அரசுகளும் மனிதனை எஜமான ஸ்தானத்தில் வைத்திருப்பதாக நடிக்கின்றன. உண்மையில் இதுவரையிலும் ஜனநாயகம் என்பதை நாம் கற்றிருக்கவேயில்லை. இவையெல்லாமே மனிதர்களின் தற்காலிக அரசியல் நிலைமைகளே. வரலாற்றை அழிப்பதற்கு ஒன்றுக்கொன்று போட்டி போடும் நிறுவனங்களின் முனைப்பே மனிதர்களின் அரசியல் நிலை 

என்று முடிக்கும்போது அனார்க்கிஸ்ட் அறிமுகம் உறுதியாகிவிடுகிறது. பிரசாந்தின் அறிவுப்பரப்பையும் சிந்தனைகளையும் இலக்கியம் பற்றிய பார்வைகளையும் வாசகர்களுக்கு அப்படியே தரும் கதைசொல்லி, இரவு உணவுக்காக அந்த வீட்டுக்குப் போன அவர்கள் வெளியில் ஓட்டலில் போய்த்தான் சாப்பிட வேண்டியிருந்ததையும் சொல்லிவிடுகிறார். தங்களுக்கு இரவு உணவு தயாரிக்க முடியாது எனச் சொல்லிவிட்ட வசுதாவிடம் விடைபெறும் காட்சியைக் கதையின் கடைசியில் வைக்கிறார் கதாசிரியர். 
வசுதாவின் கால்களை ஒட்டி டைசன் நின்றிருந்தது. பிரசாந்த் குளிர்பதனப் பெட்டியைத் திறந்து குளிர்ந்த நீர் பாட்டிலைத் தேடினார். 
”டிட் யு நாட் ஃபில் த பாட்டில்ஸ்?”, வசுதாவைப் பார்த்துக் கேட்டார். 
அவள் அமைதியாக நின்றாள். டைசன் என்னை மட்டுமே பார்ப்பதைப் போலிருந்தது. பரத்குமார் பிரசாந்தை ஒருமுறை அணைத்து கை குலுக்கினார்.  
”நீங்களும் கை குலுக்கலாமே”, வசுதா என்னைப் பார்த்து சொன்னாள். 
நான் டைசனை நெருங்கினேன். 
”இல்லையில்லை இந்த முறை எனது கணவருக்கு”. 
இந்த வழியனுப்புதல் திரும்பவும் அனார்க்கிஸ்ட் இட த்திற்குக் கணவனோடு மனைவியும் போட்டியிடக்கூடியவள் என்று கதை சொல்லி நினைத்திருக்க க்கூடும். ஆனால் அவன் சொல்லவில்லை. அதற்குப் பதிலாக அவர்கள் இருவரின் குடும்பமும் வசதியான – பெரும்பணக்கார குடும்பம் என்ற தகவலையும் எல்லாரும் செய்துகொள்வது போலவே மாமனார் வீட்டிலிருந்து சீரெல்லாம் பெற்றுக்கொண்டு சுகபோக வாழ்பவர்கள் என்ற குறிப்பையும் தருகிறான் கதைசொல்லி. அந்தக் குறிப்பு கதைசொல்லியாகிய நானிடம், பிரசாந்தின் நண்பர் பரத்குமாரும் வீடு திரும்பும்போது சொன்னதாக இடம்பெறுகிறது. 
அறைக்குத் திரும்பும்போது பரத்குமார் என்னிடம் சொன்னார், ஓசூருக்குப் பக்கத்திலிருக்கும் தளியில் பிரசாந்திற்கும், வசுதாவிற்கும் சொந்தமான ஒரு பண்ணை வீடு இருப்பதாக. அவர்களுடைய கல்யாணத்திற்கு அன்பளிப்பாக அவனுடய மாமனார் ஜே.பி. நகர் வில்லாவையும், அவனுடைய அப்பா தளியில் இருக்கும் பண்ணை வீட்டையும் அளித்திருந்தனர். 
இந்தக் குறிப்புக்குப் பின் அனார்க்கிஸம் -அமைப்புகளுக்குக் கட்டுப்படாத தன்மை என்பது பிரசாந்த் – வசுதா இருவரின் வாழ்க்கையின் சாரமாக இருக்கிறதா? அல்லது அவ்வப்போது தோன்றி மறையும் தன் முனைப்பு வெளிப்பாடாகவும் பேச்சாகவும் மட்டும் இருக்கிறதா? என்ற எண்ணம் கதைசொல்லிக்குத் தோன்றியிருக்க வேண்டும். ஆனால் அதை அவன் நேரடியாகச் சொல்லாமல் 
மீண்டும் வாடகைக் காரில் அறைக்குத் திரும்பினோம். பதாகைகள் நீக்கப்பட்ட விளம்பரப் பலகைகளை இம்முறையும் வேடிக்கைப் பார்த்தேன் (இடையிடையே பரத்குமார் பேசுவதையும் கேட்டேன்). இரும்புக் கிராதிகளின் இடைவெளிகளில் துண்டு துண்டாகத் தெரிந்த இரவை கவனித்தேன். கருஞ்சாம்பல் நிறம் கலைந்திருந்தது. மழையும் இல்லை. 
என அன்று காலையில் இருந்த மனநிலைக்குத் திரும்பியிருந்த நிலையைக் காட்டுவதின் மூலம் முன்வைக்கிறார். இயல்பான வாழ்தல் முறைகளிலிருந்து விலகிய அனார்க்கிஸ்ட் பாத்திரம் ஒன்றை அறிமுகம் செய்யும் நோக்கத்தைக் கொண்ட கதையின் முன்பகுதியில் இடம்பெறும் மூன்று பாத்திரங்களையும் இவ்வளவு விரிவாகத் தருவதற்கான நியாயங்களைக் கதையின் அமைப்பிற்குள் காண முடியவில்லை. 

இந்தக் கதையை வாசித்து முடித்தபின்பு ஆரம்பத்தில் நான் குறிப்பிட்ட திலீப்குமாரின் ‘ஐந்து ரூபாயும் அழுக்குச்சட்டைக்காரரும்’ கதையைத் திரும்பவும் நினைத்துக்கொண்டேன். முழுமையான அனார்க்கிஸ்டை அறிமுகம் செய்யும் கதை. அனார்க்கிஸத்தைத் தன் வாழ்க்கையின் சாராம்சமாகவும் அன்றாட நடப்பாகவும் கொண்டிருந்து மறைந்துபோன எழுத்தாளர் ஜி.நாகராஜனைப் பாத்திரமாக்கிய அந்தக் கதை அனைவரும் வாசிக்க வேண்டிய கதையும் கூட. 

கதைக்கான இணைப்பு:http://www.yaavarum.com/archives/5484

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ராகுல் காந்தி என்னும் நிகழ்த்துக்கலைஞர்

நவீனத்துவமும் பாரதியும்

தணிக்கைத்துறை அரசியல்