கொரோனாவோடு வாழ்ந்தது -மே மாதம்
கொரொனா ஞாயிறு
பல்கலைக்கழகப் பணியில் இருந்த காலத்துப் பழக்க வழக்கங்கள் ஒவ்வொன்றாக மாறிக் கொண்டிருக்கின்றன என்றாலும், இந்த வாரக்கடைசி வாழ்க்கை(weekend life) ஒன்றும் பெரிதாக மாறிவிடவில்லை.
நேற்று- மார்ச் 22- கொரொனா ஞாயிறு எல்லாவற்றையும் மாற்றிவிட்டது.
இரண்டு நாட்களுக்கு முன்பே ஊரடங்கு – காலை 7 மணி முதல் மாலை 9 மணி வரை வெளியே வரக் கூடாது - என்று அறிவித்துவிட்டதால் எப்போதும் போலில்லாமல் சீக்கிரமே விழிப்பு வந்துவிட்ட து. சனிக்கிழமை மாலையே பால்க்காரர் அதிகாலை 4 மணிக்கு வந்து பால் ஊற்றிவிடுவேன் என்று சொல்லியிருந்தார். அந்த நினைப்பிலேயே உறக்கம் ஒரு மணி நேரத்துக்கு முன்பே போய்விட்டது. 3 மணிக்கு விழிப்பு. காலை நடை இல்லை.மாலையில் வழக்கமாக நடக்கப்போகும் வெட்ட வெளிக்குக் கூடப் போகவில்லை.
**********************
மாலை 5 மணிக்கு வீட்டின் முன்வந்து கைதட்டி ஒலி எழுப்ப வந்தேன்.அவசர விடுமுறைக்குச் சென்னையிலிருந்து வந்திருக்கும் பேரன் ஒலி எழுப்பவும் செய்தான். அந்தக் கைதட்டலோடு இணைந்துகொள்ள இன்னும் சில கைகள் முன்வரவில்லை. நான் குடியிருக்கும் கட்டபொம்மன் நகர் ஏழாவது தெருவில் ஒருவரும் வெளியே வரவே இல்லை. எப்போதும் கேட்கும் நாய்களின் உறுமல் தவிர வேறெந்தச் சத்தமும் இல்லை. ஆனால் மத்தியான வெயிலில் ஒரு இருசக்கர வாகனம் பெருஞ்சத்தம் எழுப்பிக் கொண்டு போனது. நிச்சயம் அவசரமான – கட்டாயமாகப் போகவேண்டிய வேலையாகவே இருக்கும். அரசின் உத்தரவுகளுக்குச் செவிமடுப்பவர்கள் என்றாலும் கைதட்டியும் மணியாட்டியும் ஒலியெழுப்ப வேண்டியதற்குப் பின்னால் இருக்கும் நன்றி தெரிவித்தலை ஒருவரும் உள்வாங்கிக்கொள்ளவில்லை. அணைத்துக் கொள்ளும் உடல்மொழியோடும், ஆணையிடும் ஆர்ப்பரிப்போடும் நமது முதன்மை அமைச்சர் நரேந்திரமோடி உரையாற்றினார் என்றாலும், அவர் பேசியது இந்தி மொழியில். இந்தி பேசும் எந்தத் தலைவரையும் தமிழ் வெகுமக்கள் உளவியல் ஏற்காது என்பதைத் தேசியக் கட்சிகள் எப்போதும் உணரப் போவதில்லை.
பல்கலைக்கழகப் பணியிலிருந்த காலங்களின் சனி, ஞாயிறுகளுக்குச் சில அடையாளங்கள் இருக்கும். பொழுதுபோக்கிற்காகச் சில இடங்களுக்குச் செல்வதும், வாரத்திற்குத் தேவையான பொருட்களை வாங்கி வைப்பதும் தான் அந்த அடையாளங்கள். வாசிப்பது பொழுதுபோக்கு அல்ல. அது பணிக் கடமைகளில் ஒன்று. வார இதழ்களைப் பொழுதுபோக்கு வாசிப்பாகக் கருதிய காலங்கள் உண்டு. ஜூனியர் விகடன், நக்கீரன், தராசு எனப்பலப்பலவாய்ப் புலனாய்வு இதழ்கள் வந்துகொண்டிருந்தபோது வாங்கிப் படித்துவிட்டுத் நாளிதழ்க் கட்டுகளுக்குள் செருகிவிடுவேன். ஆனந்தவிகடன், குமுதம், குங்குமம் வகையான பத்திரிகைகளும் அப்படிச் செருகப்பட்டு மாதக்கடைசியில் எடைக்குப் போடப்பட்ட காலத்தில் பொழுதுபோக்கு வாசிப்புக்குரியனவாக இருந்தன. எடைக்குப் போடப்பட்டாலும் நாளிதழ்களை அப்படி நினைத்ததில்லை.
காலைத் தேநீருக்குப் பின் கைக்கு வரும் நாளிதழ்கள் உலகின் அன்றாடத்தை ஏற்றிவிடும் கருவிகளாகவே இருந்தன. 24x7செய்தி அலைவரிசைத் தொலைக் காட்சிகள் வரிசை கட்டியபின்னும் நாளிதழ்களின் தேவை இருக்கவே செய்கிறது. எப்போதும் கழிப்பறை வாசிப்புக்குரியனவாக இருக்கின்றன நாளிதழ்கள். அதனால் அவற்றை நிறுத்திவிட வேண்டும் என்று தோன்றியதே இல்லை. ஆனால் வார இதழ்களைத் தொடர்ச்சியாக வாங்குவதை நிறுத்திப் பத்து ஆண்டுகள் ஆகின்றன. வார்சாவிற்குப் போவதற்கு முன்னால் நிறுத்தியதைப் பின்னர் தொடரவில்லை. கதைகள் வருவதால் மட்டுமே ஆனந்தவிகடன் வாங்கிக் கொண்டிருக்கிறேன். வாசிக்கவேண்டிய கதை இருக்கிறது என்றால் மட்டுமே வாங்குவேன் என்பதால் கடைக்காரர் ஒரு மேலோட்டமான பார்வைக்குப் பின் திரும்பவும் வாங்கிக் கொள்வார்.
வாரத்திற்கு ஒன்றிரண்டு சினிமா பார்ப்பது இன்னொரு பொழுதுபோக்கு. வெள்ளிக்கிழமை வெளியாகும் புதிய திரைப்படங்களைப் பார்த்து விடுவது எல்லா வாரங்களிலும் நடக்கும். வெளியூர்களுக்குப் போனாலும் திரைப்படம் பார்ப்பதைத் தவிர்ப்பதில்லை. திரைப்படச் சங்கங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட படங்களைப் பார்ப்பதிலிருந்து நகர்ந்து, வெகுமக்களின் ரசனையையும் உளவியலையும் கட்டமைக்கும் வடிவமாக திரைப்படங்கள் இருக்கின்றன என்பதை விளக்கிய ஆய்வுக்கட்டுரைகளை வாசித்த பின்பு, அதேபோலக் கட்டுரைகளை – தமிழ்ப் படங்களை முன்வைத்து எழுதுவதற்காகப் பார்ப்பது அதிகமாகி விட்டது. அப்போது சினிமா பார்ப்பதும் பொழுதுபோக்கு அல்ல என்றாகிவிட்டது.
நீண்ட காலமாக இருக்கும் இன்னொரு பொழுதுபோக்கு ஒளிபரப்பாகும் கிரிக்கெட் நேரலைகளைப் பார்ப்பது. பள்ளிக்காலத்து விருப்ப விளையாட்டுகளில் ஒன்றாகக் கிரிக்கெட் இருந்தது. பள்ளியின் கால்பந்துக் குழுவில் இடம்பிடிப்பதற்காகவே கேரளாவிலிருந்து நான் படித்த திண்டுக்கல் டட்லி பள்ளியில் மூணாறு மாணவர்கள் வந்து சேர்வார்கள். விடுதியில் தங்கியிருந்து படிக்க மாட்டார்கள்; விளையாட்டே கதியாய் மைதானத்தில் கிடப்பார்கள். அவர்களுக்குப் பிறகுதான் மற்றவர்களுக்கு இடம் கிடைக்கும்.கிரிக்கெட் அப்படியில்லை. பள்ளி மைதானம் என்றில்லாமல் அருகே இருந்த ஸ்பென்சர் மைதானத்திலும் குழுக்குழுவாக விளையாடுவார்கள்.
கிளைவ் லாயிட்ஸ், கர்ட்லி அம்புரோஸ்,கர்ட்னி வால்ஸ், விவியன் ரிச்சர்ட்ஸ் என மேற்கிந்தியத் தீவுகள் அணி கொடிகட்டிப் பறந்த காலம். அவர்களுக்கிணையாக ரோஜர் பின்னியும் கபில்தேவும் ஓடத் தொடங்கிய நேரம். காட்டடி ஸ்ரீகாந்த், சுனில் காவஸ்கர், குண்டப்பா விஸ்வநாத் எனப் பெயர்களை உச்சரித்து அவர்களில் ஒருவராக மாறி விடும் ஆசையோடு திரிந்த காலம் அது. கிரிக்கெட்டின் நுட்பங்களைத் தெரிந்து வைத்திருந்ததால் கல்லூரிக்காலத்தில் விளையாடுவதோடு, வானொலி வர்ணனை கேட்டு, தொலைக்காட்சிக் காலத்தில் முதன்மையான பொழுதுபோக்காக மாறிவிட்டது கிரிக்கெட் நேரலைகள். ஊடகப் பயன்பாடும் வெகுமக்கள் உளவியலும் ஒன்றோடொன்று இணைந்தவை என ரேமண்ட் வில்லியம்ஸ் போன்றவர்கள் எழுதிய பின்பு தொலைக்காட்சியைப் பார்ப்பதும் ஆய்வுக்கான தரவாக ஆகிவிட்டன.
*******************
ஞாயிற்றுக்கிழமை காலை உணவு பெரும்பாலும் வெளியில் ஏதாவது ஒரு உணவுக்கடையில்.உழவர் சந்தைக்குப் பக்கத்தில் இருந்த மதுரம் பாலங்கட்டத் தொடங்கியதால் கண்ணுக்குத் தெரியாமல் போய்விட்டது. அப்போது எங்கள் கட்டபொம்மன் நகரில் அதன் கிளை வந்துவிட்ட தால் பெரும்பாலும் காலை உணவு மதுரம் சிற்றுண்டி. ஆனால் மதியம் நிச்சயம் மாமிச உணவு. சனி, ஞாயிறுகளில் ஒருநாள் மீன், இன்னொரு நாள் கோழிக்கறி அல்லது ஆட்டுக்கறி என்பதாக இருந்த து. அதில் பெரிய மாற்றத்தை கொண்டுவந்தது உவரிக்கடல் மீனின் வருகை . உவரிப் பகுதியில் பிடிக்கப்படும் மீன்கள் செவ்வாயும் வெள்ளியும் மாலையிலேயே நேரடி வருகையாக வந்து விடுகின்றன. அதனால் செவ்வாய் மாலை வாங்கும் மீன் புதன் வியாழனில் குழம்பாகிவிடுகிறது. அதனால் ஞாயிற்றுக் கிழமைகள் கோழிக்கறி அல்லது ஆட்டுக்கறி மாமிசம்.
கொரொனா ஞாயிறு இறைச்சிக் கடைகள் இருக்காது என்பதால் சனிக்கிழமை கோழிக்கறி வாங்கப் போனேன். முக்கால் கிலோ கேட்டேன். ஒரு கிலோவாக வாங்கிக்கொள்ளுங்கள் என்றார். இல்லை முக்கால் கிலோ போதும் என்றேன். “ஒரு கிலோ 50 ரூபாய்தான்சார் வாங்கிக்க” என்றார். பெரிய அதிர்ச்சி. போனவாரம் ஒருகிலோ 140 ரூபாய். இப்போது பாதிக்கும் கீழே. கொராொனா பயத்தில் யாரும் வாங்கவில்லையா? என்று கேட்டேன். இல்லை சார். நாளைக்குக் கடை அடைப்பு. அடுத்தடுத்த நாட்கள் எப்படி இருக்கும்னு சொல்ல முடியாது. கைவசம் இருக்கும் கோழிகளைத் தள்ளிவிட்டால் யாராவது சாப்பிடுவாங்க.. இல்லையின்னா எல்லாமே வேஸ்ட் தானே சார் என்றார். நீங்க மட்டும் தான் குறைச்சு விக்கிறீங்களா? என்றேன். இல்லை சார் பெரிய மார்க்கெட்ல 70 ரூ. அங்க சாயந்திரம் வரைக்கும் ஆட்கள் வருவாங்க. இங்கெ அப்படியில்லை சார். மதியத்துக்குப் பிறகு கடையெக் கட்டவேண்டியதிருக்கும் என்றார். 50 ரூபாய் கொடுத்து ஒருகிலோ கோழிக்கறி வாங்கிக் கொண்டேன். கொரொனா கொடுத்த வரம்.
கொரொனா ஞாயிறு என்றாலும் கோழிக்கறி கிடைத்தது. ஆனால் உழவர் சந்தை போகவில்லை. திரையரங்குகள் மூடி ஒருவாரம் ஆகிவிட்டது. கிரிக்கெட்டை ஒளிபரப்பும் விளையாட்டு அலைவரிசைகள் பழைய கதைகளைச் சொல்லிக் கொண்டிருக்கின்றன. கொரொனா எப்போது போகும். வாரக் கடைசிகள் எப்போது திரும்ப வரும்?
60 வயதைத் தாண்டிய மனிதர்களைக் கைவிடப் போகும் கொரொனா யுகத்தில் வாரக்கடைசி பற்றிய நினைப்புகள் கொஞ்சம் அதிகம் தான்.
***********************
பயணமில்லாக் கடுங்கோடை ...
ஒருவாரமாக வீட்டில் அடைந்து கிடக்கிறேன். ஒவ்வொரு நாளும் ஒரு பாதையில் நடக்கும் காலை மாலை நடை வீட்டு மாடியின் செவ்வகத்திற்குள் வட்டமடிக்கின்றன. அரியகுளம் கண்மாயில் குளிக்கச் சென்ற வெள்ளைக் கொக்குகள் திரும்பிப் போகின்றன.. கூந்தங்குளத்திற்கும் வேய்ந்தான் குளத்திற்கும் நயினார்குளத்திற்கும் கோடைக்குளியலுக்கு வரும் ஆப்பிரிக்கக் கருங்கழுத்துக் கழுகுகளும் ருஷ்யாவின் செம்பழுப்பு நாரைகளும் மாலைச் சூரியனை நோக்கிப் பறக்கின்றன. மார்த்தாண்டம் வரை போய்வர நினைத்த அந்தச் சின்னப்பயணமும் தட்டிப் போய்விட்டது.
பிறந்த ஊரில் வாழ்ந்த காலம் குறைவுதான். அது ஒரு மிகச் சிறிய ஓர் மலையடிவாரக் கிராமம். 100 வீடுகள்கூடக் கிடையாது. அதிகபட்சக் கொண்டாட்டம் வைகாசியில் நடக்கும் மாரியம்மன் திருவிழாவும் தைத்திங்களில் நடக்கும் மாடு விரட்டும்தான், இதுவரையான வாழ்நாளில் நான்கில் ஒரு பகுதிகூட அங்கிருந்ததில்லை. படிக்க என்றும் வேலைக்கென்றும் பார்க்கவென்றும் பழகவென்றும் திரியவென்றும் திளைக்கவென்றும் சென்று திரும்பிய வெளிகள்.ஆண்டுக்கணக்கில் தங்கியிருந்த - திண்டுக்கல், மதுரை, பாண்டிச்சேரி, நெல்லை, வார்சா.. அங்கிருந்தபடியே சென்று திரும்பிய வெளிகள் ஒவ்வொன்றும் வந்துபோகின்றன.
பள்ளிக்காலத்துத் திண்டுக்கல் நடந்தே பார்த்த நகரம். பேருந்து நிலையத்திற்குப் பக்கத்திலிருந்த பள்ளியின் விடுதியிலிருந்து மலைக்கோட்டைக்கும் பக்கத்துக் கிராமங்களுக்கும் நடந்தேதான் போவோம். நகரத்தில் இருந்த நான்கு திரையரங்குகளுக்கு மட்டுமல்ல சுற்றியிருக்கும் ஓலைக் கொட்டகைகளுக்கும் நடைதான் பயணவழி. கல்லூரிக்காலத்துப் பயணங்களில் பெரும்பாலானவை நகரப் பேருந்துகள். மதுரை மாநகரம் தூங்கா நகரம். கோரிப்பாளையத்தில் ஏறி எல்லா இடங்களுக்கும் போய்வரலாம். வெள்ளிக்கிழமைகளில் மீனாட்சி அம்மன் கோயிலுக்கு நடை தான் வழி. அப்படியே திண்டுக்கல் ரோட்டில் பழையபுத்தகக் கடைகளைப் பார்த்துக்கொண்டே செண்டரல் அல்லது நியுசினிமா தியேட்டரில் நுழையலாம். டவுன்ஹால் ரோட்டின் தொடக்கத்தில் ரீகல் தியேட்டர். முதல் திருப்பத்தில் ஆசியாவிலேயே பெரிய தங்கம். வைகையாற்றைத் தாண்டினால் சிந்தாமணி.
பயணங்களற்ற நாட்களை நினைத்துப் பார்க்கவே முடியவில்லை. இரண்டாம் ஆட்டம் சினிமாவிற்கு இரண்டு மணிநேரம் முந்தியே கிளம்பிப் பாண்டிச்சேரியின் சந்துபொந்துகளில் சைக்கிள் பயணம் செய்த நாட்கள் இனி இல்லைதான். இரண்டு நாட்கள் சும்மா இருந்தால் கையில் ஒரு புத்தகத்தோடு பேருந்து நிலையத்தில் ஓரத்து இருக்கையில் இடம்பிடித்துக் கொண்டு கிளம்பிய இலக்கற்ற பயணங்கள் இப்போது இல்லாமல் போய்விட்டது. புதுச்சேரியில் இருந்தபோது அச்சிறு மாநிலத்தின் சாலைகள் எல்லாம் அப்படித்தான் அறிமுகமாகின. பாண்டிச்சேரிக் காலத்து வாகனங்கள் மிதிவண்டியும் பேருந்துகளும் தான். கடைசி ஆறுமாதம் மட்டும் வெள்ளைநிற ஸ்கூட்டி வந்துவிட்டது.
நெல்லையில் ஸ்கூட்டி மகளுக்கு என்ற ஆனபோது இரண்டாவது வாகனமாக டிவிஎஸ் எக்ஸெல். நால்வரும் செல்ல இரண்டு வாகனங்கள். பாளையங்கோட்டையின் தெருக்களையும் நெல்லையின் முக்குகளையும் சந்துகளையும் கண்மாய்க் கரைகளையும் தாமிரபரணியின் நகர்வையும் காட்டித்தந்தன ...
2019 கோடை முடிவில் (ஜூன் 30 ). பணி ஓய்வு
பயணங்களற்ற கோடைகள் எப்போதும் இருந்ததில்லை. சிறியதும் பெரியதுமான பயணங்களும் வழித்தடங்களும் விலகிவிலகிப் போகின்றன. ஓய்வுக்குப் பின் என்ன திட்டம் என்பதில் முன்னணியில் இருந்தவை பயணத்திட்டங்களே. இந்தியாவுக்குள்ளும் இந்தியாவிற்கு வெளியேயுமாகச் செய்துவிட நினைத்த பெரும்பாலான பயணங்கள் இனி வாய்க்கப்போவதில்லை. மே இரண்டாவது வாரத்தில் தொடங்கி நாலைந்து மாதங்கள் அமெரிக்காவில் இருக்கலாம் எனத் திட்டமிட்டுப் போட்ட பயணச் சீட்டை விமானக் குழுமம் ரத்து செய்து அனுப்பிவிட்டது. அடுத்த ஓராண்டிற்குள் அதே தொகையில் பயணம் செய்யலாம் என்ற வாய்ப்பை வழங்கி இருக்கிறது என்பது ஆறுதல் தான் என்றாலும் அந்தப் பயணங்கள் வாய்க்குமா என்பது சந்தேகம் தான்.
நான்கு ஆண்டுகளுக்கு முன்னால் அமெரிக்கா போனபோது 70 நாட்கள் மட்டுமே தங்கினேன். மகன் இருக்கும் பாஸ்டன் நகரை மையமாக்கிக் கொண்டு அமெரிக்காவின் வடக்கு பகுதிகள் பலவற்றிற்குச் சென்றுவந்தோம். அதிகமும் செய்தது தரைவழிப் பயணங்களே. பெரியபெரிய வசதிகள் கொண்ட தங்கும் விடுதிகளைத் தவிர்த்துவிட்டுச் சமைத்துச் சாப்பிடும் வசதிகள் கொண்ட விடுதிகளில் தங்கிச் செய்த பயண தூரம் பல ஆயிரம் கிலோ மீட்டர்கள்.
கார்ப்பயணமாகவே கனடாவின் தலைநகர் டொறொண்டோ வரை சென்றதோடு அந்நாட்டின் முக்கிய நகரங்களான ஒட்டாவா, மாண்ட்ரியால்,
க்யூபெக் என எல்லா இடங்களுக்கும் தரைவழிப்பயனம் தான்.
அரிசோனா பள்ளத்தாக்குகளைப் பார்க்கச் சென்ற 5 நாட்கள் பயணத்தில் போகவும் வரவுமான-பாஸ்டன் -ப்யூனிக்ஸ் - 14 மணி நேரப்பயணம் மட்டுமே விமானம். மற்றெல்லா இடங்களுக்கும் மகிழ்வுந்துப் பயணம் தான். கண்ணுக்கெட்டிய தூரம் வரை மனிதர்கள் வாழும் வீடுகளும் நகரங்களும் தட்டுப்படாத அரிசோனாக்காடுகள் . என்னும் உலக அதிசயவெளிதான் எத்தனை மேடுகளையும் பள்ளங்களையும் கொண்டது. உலகக் கொண்டாட்டங்கள் அனைத்தையும் விற்பனைச்சரக்காக்கும் லாஸ் ஆவோஸ் நகரம் அந்த வெப்பப் பூமிக்குள் தான் இருக்கிறது. இவ்விரு பெரும்பயணங்கள் அல்லாமல் பாஸ்டன் நகரத்திற்குள்ளும் அதன் அருகில் இருக்கும் அண்டை மாநிலத்திற்குள்ளும் ஓரிரு நாள் பயணமாகச் சென்ற நாட்கள் திரும்பவராது.
இந்த முறை அமெரிக்காவின் தென்மாநிலங்களிற்குச் செல்வதோடு தென்னமெரிக்க நாடுகள் ஒன்றிரண்டைப் பார்த்துவிட வேண்டும் என்று திட்டமிருந்தது. மெக்ஸிகோவும் பிரேசிலும் நிச்சயம் என்று நினைத்திருந்தேன். அதற்கெல்லாம் வாய்ப்பில்லை. அமெரிக்காவிலிருந்து திரும்பும்போது ஐரோப்பிய நாடுகளில் ஒரு சுற்றுச் சுற்றலாம் என்பதும் இனி இல்லை. 10 ஆண்டுகளுக்குப் பின் வார்சா நகரமும் தொடர்பில் இருக்கும் மாணவிகளும் மாறித்தான் போயிருப்பார்கள். மாற்றங்களைப் பார்ப்பதுதானே ஆனந்தம். ஆனந்தம் எப்போது வரும்.
ஏற்கனவே சென்று வந்த இலங்கைக்குள் இரண்டாவது பயணம் சாத்தியமானது போல மலேசியா, சிங்கப்பூர் வழியாகத் தாய்லாந்து, பிலிப்பைன்ஸ் போகவேண்டும் என்ற திட்டம் நடக்கப்போவது எப்போது?. நியூசிலாந்திற்கும் ஆஸ்திரேலியாவிற்கும் கூட அழைப்பிருக்கிறது. ஆனால் கொரோனா என்னும் மாயவலைக்குள் மாட்டிக் கொண்ட உலகம் அந்நியர்களை இனி அனுமதிப்பதில் ஆர்வம் காட்டாதே என்ற அச்சமும் இருக்கிறது.
அயல்நாட்டுப் பயணங்கள் மட்டுமல்ல. உள்நாட்டுப் பயணங்களே சிக்கலாகிக் கொண்டுதான் இருக்கிறது. எப்போதும் விருப்பமான கேரளத்திற்குள் திரும்பவும் போகவேண்டும். சுற்றுலாப் பயணிகள் வராத ஒரு கிராமத்தில் நாலைந்து நாட்களைக் கழிக்கவேண்டும் என்பது இனி நடக்குமா எனத் தெரியவில்லை. பணிக்காலத்தில் பயணம் செய்த இந்திய நகரங்கள் சிலவற்றிற்குத் திரும்பவும் போகவேண்டும் என்ற திட்டங்களும் இருந்தன. மைசூர், பெங்களூர், டெல்லி, மும்பை, ஹைதிராபாத், விஜயவாடா போன்ற நகரங்களை ரசித்துப் பார்க்கும் வாய்ப்புகள் அப்போது இருந்ததில்லை. கிழக்கு இந்தியாவிற்குள் போனதே இல்லை.மேற்குக் கடற்கரை வழியாகக் காந்திநகர் வரை சென்றுதிரும்பவேண்டும் என்ற திட்டம் அமெரிக்கப் பயணத்தால் தள்ளிப்போனது.
பேரனும் வந்திருக்கிறான். குறுக்குத்துறை தொடங்கி முறப்பநாட்டுப் படித்துறை வரை தாமிரபரணி குளிர்ச்சியாக ஓடிக்கொண்டிருக்கிறது. அழுக்குக் கால்களைக் கடித்துப் பார்க்க மீன்குஞ்சுகளும் வாயைத் திறந்துகொண்டுதான் இருக்கும். அடங்கச் சொல்லும் ஆணைகள் அடுத்தடுத்து வந்துகொண்டே இருக்கின்றன. அடங்கத்தான் வேண்டுமா? என்று கேட்கிறது ஆழ்மனம்
பெரும்பொதிகளோடு கையசைத்துக் கிளம்பும் விமானப் பயணங்கள் மட்டுமல்ல;முதுகுப் பையோடு தொடங்கும் பேருந்துப் பயணங்களும் ரயில் பயணங்களும்கூடக் கானல் நீர் தானா
***********************
தேசியக்கொடி என்னும் பதாகை
சாதாரண நாட்களில் தனிநபர் கொலைகளைப் பிரிவினைவாதத்தோடு இணைத்து, அமைப்பின் குற்றங்களாக முன்வைப்பதை வலதுசாரி தேசியவாதம் ஒரு உத்தியாகச் செய்கிறது. அதில் முன்னோடியாக இருப்பது வலதுசாரிகளின் கனவு நாடான அமெரிக்காதான். நான்கு ஆண்டுகளுக்கு முன்னால் -2016 இல் கோடை விடுமுறையின்போது அமெரிக்காவின் பாஸ்டன் நகரில் இருந்தேன்.மே முதல் வாரத்தில் போய், ஜூலை 21 இல் நாடு திரும்பினேன். அந்த மூன்று மாத காலத்தில் வலதுசாரி தேசிய வாதத்தின் உளவியல் செயல்படும் விதத்தை நேரில் பார்க்கும் வாய்ப்புக் கிடைத்தது.
ஜூலை 17 இல் லூசியானா மாநிலத்தில் பேட்டன் ரூஜ் என்னும் இடத்தில் நடந்த துப்பாக்கி சூட்டில் 6 போலீஸ்காரர்கள் சுடப்பட்டார்கள். 3 பேர் அங்கேயே மரணம். மூன்றுபேர் மருத்துவமனையில் அனுமதி எனச் செய்திகள் வந்தன. அத்தோடு சுட்டவன் பெயர் கேவின் யூஜின் லாங் என்ற முன்னாள் ராணுவவீரன் என்றும். அவனைக் காவல்துறை சுட்டுக்கொன்றது என்றும், அவனோடு இருந்த இருவர் கைது செய்யப்பட்டனர் என்பதும் செய்தியின் தொடர்ச்சி. சுட்டுக் கொல்லப்பட்ட அவன், கறுப்பினப் பிரிவினைவாதக் கருத்துடையவன் என்றும், தன்னடையாளங்களோடு வாழவிரும்பும் குடிமக்கள் இயக்கத்தோடு (sovereign citizen movement)தொடர்பு இருந்தது என்பதையும் காவல்துறையினர் உறுதிசெய்தார்கள் என்பதும் செய்திதான். லாங்குக்கு மட்டுமே அமெரிக்க வெள்ளைக் காவலர்களைச் சுட்டுக் கொல்லும் வெறி இருந்தது என்பதை ஒத்துக்கொண்டதாகவும், அவன் மட்டுமே குற்றவாளி என்றும், தங்களுக்கு அதில் எந்தத் தொடர்புமில்லையென மற்ற இருவரும் தெரிவித்ததாகவும் பதிவுசெய்யப்பட்டுள்ளது என்று செய்திகள் பரவின.
நல்லவைகளும்சரி கெட்டவைகளும்சரி அமெரிக்கர்களால் தேசியக் கொடியோடு இணைக்கப்படுகின்றன. தங்கள் கொண்டாட்டத்தை ஏராளமான கொடிகளைப் பறக்கவிட்டுக் காட்டுகிறார்கள். வருத்தங்களைக் காட்ட தேசியக் கொடியை நீண்டகாலத்திற்கு அரைக்கம்பத்தில் பறக்க விடுகிறார்கள். ஜூன்,17 இல் நடந்த துப்பாக்கிப் படுகொலைக்கு அமெரிக்கா முழுவதும் மூன்றுநாட்கள் கொடிகள் அரைக்கம்பத்தில் பறந்தன. நானிருந்த இந்த மூன்று மாதத்தில் மூன்று துப்பாக்கிச்சூடுகள் கொடிகள் அரைக்கம்பத்தில் பறக்கக் காரணமாக இருந்தன.
ஜூலை 7 இல் டெக்சாஸ் மாநிலம், டல்லாஸ் நகரில் மிகா சேவியர் ஜான்சன், கூட்டமாக இருந்த காவல் அதிகாரிகளைப் பார்த்துச் சுட்டார். 5 பேர் அங்கேயே மரணம்; 9 பேர் காயம். பக்கத்திலிருந்த சாதாரணப் பொதுமக்கள் 2 பேருக்கும் காயம். ஜான்சன், அமெரிக்காவிற்காக ஆப்கானிஸ்தான் போரில் ஈடுபட்ட முன்னால் ராணுவ வீரர். ‘கறுப்பர்கள் மீது வஞ்சகம் காட்டும் வெள்ளைக் காவல் அதிகாரிகளைக் கொல்வேன்’ என்று சத்தமிட்டபடியே சுட்டதாக அறிவிக்கப்பட்டது. கறுப்பினத்தவர்களை அமைதியாக வாழவிடுங்கள் என்பதே அவரின் கோரிக்கை. அந்த நிகழ்வுக்குப் பின்னும் கொடிகள் சில நாட்கள் அரைக்கம்பத்தில் தொங்கின.
இந்தியாவில் தேசியத்தலைவர்களின் மரணம்பெறும் கவனத்தை அமெரிக்காவில் ஒவ்வொரு துப்பாக்கி சூடு நிகழ்வுகளும் பெற்றுவிடுகின்றன. மூன்றாம் பாலினத்தவரின் கொண்டாட்டத்தின்போது கண்ணை மூடிக்கொண்டு ஒருவன் சுட்டுத்தள்ளிய வன்முறையைத் தேசிய துக்கமாகக் கருதிக் கொடிகள் இரண்டுநாட்கள் நடுக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டதையும் நான் இருந்தபோது கவனித்தேன்.
ஜூன், 12 இல் ஓர்லண்டோ மாநிலத்தின் புளோரிடா நகரில் நடந்த அந்தத் துப்பாக்கி சூடு அமெரிக்காவில் பெருந்தாக்கத்தை உண்டாக்கியது. மூன்றாம் பாலினத்தவரின் கொண்டாட்டத்தின்போது கண்ணை மூடிக்கொண்டு ஒமர் மட்டீன் என்ற 29 வயது இளைஞன், சுட்டுத்தள்ளிவிட்டான். சுடப்பட்டவர்களில் பெரும்பாலோர் மூன்றாம் பாலினர். தங்களின் உரிமையை நிலைநிறுத்தும் கொண்டாட்டம் ஒன்றிற்காக – அவர்கள் சந்திப்புக்காக இருக்கும் சிறப்பு இரவு விடுதியில் கூடிக் கொண்டாடிக் கொண்டிருந்தபோது அவன் சுடத் தொடங்கி விட்டான். 53 பேர் அங்கேயே மரணம்; 49 பேருக்குப் பெருங்காயம். சுட்டவன் அமெரிக்காவின் பாதுகாப்புப் படையில் பணியாற்றுபவன். பழைமைவாதமும் வெறுப்பும் கொண்ட அவனை, மூன்றுமணிநேரத்திற்குப் பின் சுட்டுப்பிடித்தது காவல்துறை. 2001, செப்டம்பர்,11 இல் நடந்த இரட்டைக்கோபுரத் தாக்குதலுக்குப் பின்னான பெருந்துயர் நிகழ்வு என இப்படுகொலையை வருணித்தன ஊடகங்கள்.
பிரிவினைவாத அமைப்புகள் பொதுமக்களின் அமைதியான வாழ்க்கைக்குப் பங்கம் விளைவிக்கின்றன எனவும் செய்திகளை முன்வைப்பது ஒவ்வொரு நாட்டு அரசுகளும் செய்யும் ஒன்று. அதன் பின்னே இருக்கும் உளவியல் கவனிக்கவேண்டிய ஒன்று. தேசியவாத உணர்வைக் கட்டமைப்பது அதன் முதன்மை நோக்கம். அதனைப் பெருந்திரளின் மனத்திற்குள் செலுத்தவே தேசியக்கொடியென்னும் அடையாளம் அரைக்கம்பத்தில் பறப்பனவாக மாறுகின்றன.கெட்டவை நடந்துவிட்டது என்று நினைக்கிறபோது பொதுவெளியில் தங்கள் துயரத்தைப் பகிர்ந்துகொள்ளத் தேசியக்கொடியை அரைக்கம்பத்தில் பறக்கவிடும் உரிமையை அமெரிக்க அரசாங்கம் அனுமதிக்கிறது.
இந்தியா போன்ற நாடுகளில் மிகக்குறைவான எண்ணிக்கையில்தான் கொடியேற்றங்களும் இறக்கங்களும் நடக்கின்றன. அரசு அலுவலகங்களில்கூட ஒவ்வொருநாளும் கொடியை ஏற்றி இறக்குவதில்லை. பறக்கவிடுவதுமில்லை. குடியரசுதினமும், சுதந்திர தினமும் முக்கியமான கொடியேற்ற நாட்கள். அவரவர் இல்லங்களிலும் அன்று கொடியேற்றிக் கொள்வது அனுமதிக்கப்படுகிறது. அதேபோல் எல்லா இடங்களிலும் துக்கத்தைத் தெரிவிக்க அரைக் கம்பத்தில் கொடிகளை இறக்கிப் பறக்க விடுவதுமில்லை.
இந்த நடைமுறையை இப்போது வலதுசாரி அமைப்புகள் பின்பற்றுவதில்லை. தேசியக்கொடியைக் கையாளும் உரிமையை அரசிடமிருந்து - அரசு அமைப்புகளிடமிருந்து அவை கையில் எடுத்துக் கொண்டு செயல்படுகின்றன. அதனைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை அரசும் எடுப்பதாகத் தெரியவில்லை. மருத்துவர்களுக்கும் துப்புரவுப்பணியாளர்களுக்கும் நன்றி தெரிவிக்கும் விதமாகக் கையொலி எழுப்பலாம் எனப் பிரதமர் சொன்னதைக் கொண்டாட்டமாக்கிய வலதுசாரி அமைப்புகள், தேசியக் கொடியோடுதான் உலாவந்தார்கள். அதேபோல் சிறுபான்மையினர் மீது நடக்கும் வன்முறையான நடவடிக்கைகளில் இறங்கிவிட்டு அங்கே தேசியக்கொடியைப் பறக்க விடுவதன் மூலம் தப்பித்துக் கொள்ளப்பார்க்கின்றனர். வன்முறையைக் காக்கும் பதாகையாகத் தேசியக்கொடி மாறுவது ஆபத்தின் உச்சம்.
விளக்குப் பூஜைகள்: பொதுப்புத்தியின் சாகசங்கள்
பேரா. தொ.பரமசிவன் எங்கள் துறையின் தலைவராக இருந்த காலத்தில்(1998-2007) அவரையும் என்னையும் அறிந்த நண்பர்கள் “ அவரோடு உங்கள் உறவு எப்படி ? என்று கேட்பார்கள். அவர் துறையின் தலைவர். நான் அவரது தலைமையின் கீழ் செயல்படவேண்டிய ஓர் ஆசிரியர். இந்த உறவுநிலை காப்பாற்றப்பட வேண்டும் என நினைப்பவர் அவர். பல்கலைக்கழக வளாகத்தில் அந்த உறவுநிலையைப் பேணுவதில் விலகல் தேவையில்லை என்று நினைப்பவன் நான். அதனால் எங்களுக்கிடையே எந்தச் சிக்கலும் இல்லை என்று சொல்லியிருக்கிறேன். அதையும் தாண்டிக் கேட்பவர்களிடம் அவர் பேச்சுமரபைப் போற்றுபவர்; நான் எழுத்துமரபுக்காரன். இவ்விரண்டிற்கும் இடையேயுள்ள கொடுக்கல் வாங்கலில் என்னென்ன உறவும் முரணும் உண்டாகுமோ அவையெல்லாம் எங்களுக்கிடையே உண்டு என்று சொல்வேன். புரிந்துகொண்டவர்கள் புன்சிரிப்பைப் பதிலாகத் தருவார்கள். புரியாதவர்கள் எதோ பிரச்சினை இருக்கிறது, ஏதோ சிக்கல் இருக்கிறது. சொல்லத்தயங்குகிறேன் என நினைத்துக்கொள்வார்கள்.
*********************
பேச்சுமரபுக்குத் தமிழ்நாட்டில் எப்போதும் பேராதரவு உண்டு. பேச்சு மரபு என்பது பேச்சு மொழியின் வழியாக வெளிப்படும் இலக்கியங்கள், கலைவடிவங்கள், நம்பிக்கைகள், சடங்குகள், வழிபாடுகள் போன்றனவும் அவற்றின் வழியாக உருவாக்கப்படும் பண்பாட்டு நடவடிக்கைகள் என விரியும். பேச்சு மரபை ஆதாரமாகக் கொண்டு கருத்துகளை உருவாக்கி நிலைநிறுத்தும் ஆய்வாளர்கள், அதனை எழுத்து மரபின் மாற்றாகவும், பல நேரங்களில் எழுத்துமரபுக்கு எதிராகவும் நிறுத்துகிறார்கள். பேச்சுமரபே சரியானது என வாதிடும் அந்த ஆய்வாளர்களும் அறிஞர்களும் கடைப்பிடிக்கும் தர்க்கங்களும் கோட்பாடுகளும் எழுத்துமரபின் கண்டுபிடிப்புகள் என்பது சுவாரசியமான முரண்நிலை.
*************
உலக அளவில் திரள் மக்களைப் பற்றி ஆய்வு செய்த ஆய்வாளர்கள் பொதுப்புத்தி என்றொரு சொல்லை அதிகம் பயன்படுத்துகின்றனர். தனக்கெனத் தனி அடையாளம் கொண்டவர்களாக ஒவ்வொருவரும் இருந்தாலும் வாழும் இடம், சீதோஷ்ணம், நடைமுறை வாழ்க்கைச் சிக்கல்கள் சார்ந்து பொதுக்குணங்கள் உருவாகி விடுவதைத் தவிர்க்க முடியாது என்பதுவும் அவர்கள் வாதம். இப்பொதுப் புத்தி வெளிப்படையாகப் புலப்படாதவை என்றாலும் அதுவே ரசனை, முடிவெடுத்தல், தெரிவு செய்தல், பின்பற்றுதல் போன்ற அகவாழ்க்கை முடிவுகளையும் அவற்றின் தொடர்ச்சியாக அரசியல், பொருளாதாரம், பண்பாடு, சமூக நடைமுறை போன்ற புறவாழ்க்கை அமைவுகளையும் தீர்மானிக்கும் சக்தி கொண்டது என்பதாகவும் ஆய்வுமுடிவுகள் சொல்கின்றன.
புலப்படா நிலையில் எல்லாவற்றையும் தீர்மானிக்கும் பொதுப்புத்தியில் உலக அளவில் இரு பெரும் வேறுபாடுகள் இருப்பதாகச் சொல்லப்படுவதுண்டு. மேற்கத்திய தேசத்து மனிதர்களின் பொதுப்புத்திக்கு எதிரான முரண்பாடுகளோடு கீழ்த்திசை நாடுகளின் மனிதர்களின் பொதுப்புத்தி அமைந்துள்ளது என்பது ஐரோப்பியச் சிந்தனையாளர்களின் வாதம். ஓரியண்டலிசம் எனச் சொல்லப்படும், கீழ்த்திசை நாடுகளின் பொதுப்புத்தி பெரும் மாற்றங்களை எப்போதும் விரும்பாது எனவும், ஏற்கெனவே இருப்பனவற்றின் தொடர்ச்சிகளின் மீது தீராத மோகத்தை வெளிப்படுத்தக் கூடியது எனவும் மானிடவியல் சார்ந்த சிந்தனையாளர்கள் குறிப்பிடுகிறார்கள். உலக அளவில் இருக்கும் பல்வேறு தேசத்து மனிதர்களின் மனநிலையைக் கருத்தில் கொண்டு ஆய்வு செய்தால் பொதுப்புத்தியை இருபெரும் முரணாக மட்டுமே கொள்ளுதல் போதாது என்று சொல்லலாம். ஆப்பிரிக்க நாடுகளின் கருப்பு மனிதர்களின் பொதுப்புத்தி மேற்கத்தியப் பொதுப்புத்திக்குள் அடங்கி நிற்கக் கூடியது அல்ல; இதே தன்மையை லத்தீன் அமெரிக்க தேசத்துப் பொதுப்புத்திக்குள் பார்க்க முடியாது என்றே தோன்றுகிறது.
இந்த வேறுபாடுகளைப் பார்த்து விட்டு தெற்காசிய- குறிப்பாகத் தென்கிழக்காசிய நாடுகளின் பொதுப்புத்தியைக் கணிக்க முயன்றால் அவற்றுக்குள் ஒரு பொதுத் தன்மை இருப்பதை உணரமுடியும் அதனால் தான் சொந்த வாழ்க்கையில் கற்பு, ஒருவனுக்கு ஒருத்தி போன்ற கோட்பாடுகளைப் பின்பற்றுவதாக நம்பும் தென்னாசிய/ தென்கிழக்காசிய மனம், பொதுவெளியில் அவற்றிற்கான அர்த்தத்தை முக்கியமாகக் கருதுவதில்லை. தங்களது பாரங்களைச் சுமக்க தீர்மானிக்கப் பட்ட தலைவர்கள் /குடும்பங்கள் இருக்கும் போது புதிய மனிதர்களைப் பரிசோதனைக்குட்படுத்துவது அனாவசியமானது எனக் கருதுகிறது. நமது பொதுப்புத்தி மாற்றமின்மையை நேசிக்கும் ஒன்று என்பதில் எந்தச் சந்தேகமும் கொள்ள வேண்டியதே இல்லை.
*************
கருத்தியல் உருவாக்கத்தில் பேச்சுமரபுக் கலைவடிவங்கள் பலவும் பலவிதமான தன்மையில் பங்காற்றியுள்ளன. கதாகாலட்சேபம், வில்லடிப்பாட்டு, உடுக்கடிப்பாட்டு, பகல்வேசம் போன்றன பெரும்பாலும் பாட்டு, விரித்துரைத்தல் என்னும் வடிவங்களில் சமய நம்பிக்கைகளையும் கடவுள்களையும் மக்களிடம் தொடர்ச்சியாகப் பரப்புரை செய்துள்ளன. இப்பரப்புரையில் ஈடுபட்டவர்களுக்குக் கோயில் மானியங்களில் பங்குகள் தரப்பட்டுள்ளன. அதே ஆட்டங்கள், கூத்துகள் வழியாகவும் பரப்புரைகள் நடந்துள்ளன. அவற்றின் பரப்புமுறையில் கருத்துகள், செய்திகள் தாண்டி மக்களைக் கிளர்ச்சிப்படுத்தும் கூறுகள் கொண்டனவாக இருந்ததால் கோயில் சார்ந்த வடிவமாக இல்லாமல் தனித்துச் செயல்படும் குழுக்களின் நிகழ்வுகளாக இருந்துள்ளன. காலப்போக்கில் அவற்றின் இடத்தை நாடகங்கள், திரைப்படங்கள் போன்றன பிடித்தன. ஒலிபெருக்கிகளின் பயன்பாடு அறியப்பட்ட நிலையில் தனிமனிதர்களே பேச்சுமரபின் அடியாளமாக மாறினார்கள். அந்த மாற்றம் உள்ளடக்க மாற்றத்தையும் கொண்டுவந்தது. ஒலிபெருக்கியின் வரவோடு அரசியல்பேச்சும் இணைந்துகொண்டது. அரசியல் பேச்சுகளைக் கண்டனம் செய்த சமயப்பேச்சுகள் ஒலிபெருக்கியைப் பயன்படுத்திக்கொண்டு தங்களின் வடிவத்தை மாற்றிக்கொண்டன. தனிப்பேச்சுகள் மூவர் பங்கேற்ற வழக்காடு மன்றங்களாகவும் எழுவர், ஒன்பதின்மர் பங்கேற்கும் பட்டிமன்றங்களாகவும் மாறின. நகர் முற்றங்களும் கிராமத்துத்தெருக்களும் அவை நிகழ்த்தப்படும் இடங்களாக மாறின.
தொலைக்காட்சி ஊடகங்களின் வரவு இவற்றை இடம்பெயரச்செய்தன. பேச்சுக்கச்சேரிகளின் அனைத்து வடிவங்களையும் தொலைக்காட்சி தனதாக்கிக் கொண்டது. தொலைக்காட்சி ஊடகங்களோடு சமூக ஊடகங்கள் போட்டியில் இறங்கியிருக்கின்றன நமது காலத்தில். புதிதாக வரும் ஊடகங்களைச் சில நேரம் எதிர்ப்புக்காட்டிவிட்டுப் பின்னர் அதன் வழியாகவே தன்னை நிலைநிறுத்திக் கொள்வதில் கவனம் செலுத்துவது பழைய வடிவங்களின் இயல்பு. முகநூல் வழியாகத் தொலைக்காட்சியின் நேரலைகள் நடக்கின்றன. அவற்றை வாட்ஸ் அப்கள் இணைத்துக்கொள்கின்றன.
வாட்ஸ் அப்கள் மற்றெல்லா ஊடகங்களைவிட எளிமையான வடிவமாகத் தன்னைக் காட்டியிருக்கிறது. உருவாக்கம், படைப்பாக்கம், தொழில்நுட்பத் திறன் என எதுவும் தேவைப்படாத ஒருவடிவம் வாட்ஸ் அப். அத்தோடு அது தனிநபர் ஊடகமாக இருப்பதைவிடக் குழு ஊடகமாகச் செயல்படுவதில் - செயல்படுத்துவதில் கவனம் கொண்ட வடிவமாக இருக்கிறது. சீர்மிகு அலைபேசிகளை இயக்கத்தெரிந்த அனைவரும் வாட்ஸ் அப் ஊடகத்தைக் கையாளலாம். அவர்களுக்கு ஒருசொல்லையும் எழுதத் தெரிந்திருக்கவேண்டியதில்லை. பேசிப்பதிவுசெய்யவும் தெரிந்திருக்கவும் வேண்டியதில்லை. தன்னைக் குழுக்களில் இணைத்துக்கொள்வதின் மூலம் ஒவ்வொரு நிமிடமும் தகவல்களைப் பெற்றுக்கொண்டும் பரப்பிக் கொண்டும் இருக்கலாம் என்ற வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டதன் மூலம் அனைவரும் அதன் பரப்பிற்குள் வந்துவிட்டார்கள்.
தொடக்க நிலையில் முகநூல் போன்ற சமூக ஊடங்களின் பயன்பாட்டைத் தடுக்க நினைத்த கல்வி நிறுவனங்கள் வாட்ஸ் அப்பின் வரவைக் கட்டுப்படுத்த முடியாமல் ஒதுங்கிக்கொண்டன. முகநூலில் இல்லாதவர்கள் எல்லாம் வாட்ஸ் அப்பில் இருக்கிறார்கள். வகுப்புக்கு வராத மாணவிக்கு அவளது தோழன் வாட்ஸ் அப் நேரலை மூலம் வகுப்பறையைக் காட்டிக்கொண்டிருக்கிறான். சமையல் செய்யும் விதங்களை நாடுவிட்டு நாட்டிற்கும் கண்டம்விட்டுக் கண்டத்திற்கும் தாண்டிவிட்டவர்களுக்குச் சொல்லித்தருகிறார்கள் முன்னோடிகள். பதிவுசெய்து அனுப்புகிறார்கள்.
நம்காலத்தில் பேச்சுமரபின் உச்சம் வாட்ஸ் அப் என்னும் சமூக ஊடகம் தான்.
தொலைக்காட்சியில் செய்தி அலைவரிசைகளின் பக்கமே திரும்பாத குடும்பப்பெண்கள் லதா மேடத்தின் விளக்கவுரையைப் பற்றிப் பேசினார்கள்; ஏற்றுக்கொண்டார்கள். மதுவந்தியின் விரித்தி உரையைப் புரிந்துகொண்டார்கள்; ஏற்றுக் கொண்டார்கள்; விளக்கேற்றினார்கள். கொரோனா என்னும் கொடிய நோயை மறந்து, கொண்டாட்டம் ஒன்றில் பங்கேற்ற மனநிலையில் குலவையிட்டு மகிழ்ந்தார்கள். அதனைத் தங்கள் தலைமையின் சாதனையாக்க நினைத்தவர்கள் வெடிபோட்டுக் கொண்டாடினார்கள். நரகாசுர வதம்போல, கொரோனாசுர வதம் முடிந்துவிட்டது.
பொதுப்புத்தி உருவாக்கம் எப்போதும் எல்லாவற்றையும் ஏற்றுக்கொள்ளும்; பயன்படுத்தும்; ஆனால் ஏற்கெனவே இருக்கும் கருத்தியல் நிலைபாட்டையே தொடரும். அதிலும் கனவான்களின் பொதுப்புத்தி தந்திரங்கள் கொண்டது. தங்கள் நலனில் சிறிய கீறலும் வராத வகையில் எல்லாவற்றையும் பயன்படுத்துவார்கள்.
கருத்துகள்